ஏன் இந்த வாழ்க்கைச் செலவு நெருக்கடி?
பெல்கிரேடிலிருந்து போனஸ் அயர்ஸ் வரையாக, லாகோஸிலிருந்து லிமா வரையாக, மனிலாவிலிருந்து மெக்ஸிக்கோ நகரம் வரையாக, வாஷிங்டன் டி.சி.யிலிருந்து வெல்லிங்டன் வரையாகவும் அரசாங்கங்கள் பணவீக்கத்தை எதிர்த்துப் போரடுகின்றன.
சில சமயங்களில் அரசாங்கங்கள்தாமே மிக மோசமான பொருளாதார இக்கட்டில் இருக்கின்றன. அறிக்கை ஒன்று, “ஐக்கியமாகாணங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் இதற்கு முந்தைய [அதன்] முழு சரித்திரத்திலுமே இருந்திராத அளவு அதிகமான கடனில் இருக்கிறது” என்று சொல்கிறது. நீண்ட நாட்களாக எதிர் நோக்கப்பட்டிருந்த ஊதிய உயர்வை ஓர் ஆப்பிரிக்க அரசாங்கம் அண்மையில் ரத்து செய்யவேண்டியதாயிற்று. புதிய ஊதிய மசோதாப்படி, பணம் வழங்க கஜானாவில் போதிய அளவு பணமிருக்கவில்லை. அதேவிதமாகவே, ஒரு பெரிய லத்தீன் அமெரிக்க தேசத்தில், 1988-ன் முடிவுக்குள் அரசாங்கம் பத்து இலட்சத்துக்கும் அதிகமான தன் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாது என்று பயப்படும் அளவுக்கு பணவீக்க விகிதம் இருந்தது.
ஐந்தாண்டு திட்டங்கள், பணமதிப்பிறக்கம், ஊதியத்தை நிலவரப்படுத்துவது, விலைவாசி கட்டுப்படுத்துவது இன்னும் மற்ற பொருளாதார பரிகாரங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் பிரச்னைகள் சிக்கலானதாயும் பரிகாரங்கள் நழுவிச் செல்வதாயும் உள்ளன. இதில் உட்படும் இன்னல்களை விளக்க, விழித்தெழு! இங்கே, வாழ்க்கைச் செலவின் நெருக்கடியின் சில அடிப்படைக் காரணங்களைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது.
வலுவற்ற சர்வதேசீய பொருளாதார அமைப்பு
உலகளாவிய பிணைப்பு. சர்வதேசீய பொருளியலர் ஒருவர் விளக்கியவிதமாகவே: “உலகம் ஒன்றே. நமது பொருளாதாரம் அனைத்துலகையும் பாதிக்கிறது. . . . ஓர் அனைத்துலகப் பொருளாதாரத்தில் பரிகாரம் ஒருசார்புடையதாக இருக்கமுடியும் என்ற கருத்து முட்டாள்தனமானது.” உதாரணமாக, மேற்கத்திய தேசங்களில் விலைமந்தம் ஏற்படுகையில், ஏழ்மையிலுள்ள தேசங்களுக்கு அது விரைவில் கடத்தப்படுகிறது. இவர்களுடைய பொருட்களுக்கு இனிமேலும் தேவையில்லை என்பதை இவர்கள் உணரும்போது அவ்விதமாக ஏற்படுகிறது. அதேவிதமாகவே ஐக்கிய மாகாணங்களில் வட்டி வீதம் அதிகரிக்கையில், லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க தேசங்கள் தங்கள் கடன் பணத்தின் மீது சுமத்தப்படும் வட்டித் தொகயை செலுத்துவதில் அதிகப் பிரச்னையைக் கொண்டிருக்கின்றன. பொதுவாகப் பேசுகையில், ஏழ்மையிலிருக்கும் தேசங்கள், அனைத்தையும் உள்ளிட்டப் பொருளாதாரச் சூழலின் மீது வெகு குறைந்த செல்வாக்கையே செலுத்தமுடிகின்றதாயும், ஆனால் பாதகமான பொருளாதாரக் காற்றுகளால் அதிகமாகப் பாதிக்கப்படும் நிலையிலும் இருக்கின்றன.
பங்குமாற்று வாணிகக் களத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கம் உலகப் பொருளாதாரத்தின் நிலையற்றத்தன்மையையும் அதன் பிணைப்பையும் காண்பிக்கிறது. ஆதாயத்தை நாடி முதலீடு செய்தவர்கள், பொருளாதார எதிர்பார்ப்புகள் குறித்து அத்தனை அமைதியிழந்துவிட்டதன் காரணமாக, 1987 ஆகஸ்ட் மாதத்துக்கான ஐ.மா.வின் சோர்வூட்டும் வியாபார எண் இலக்கமும், கஜானா அதிகாரி ஒருவரின் வகைத்தொகையற்ற ஒரு பேச்சும், 1987 அக்டோபரில் உலக சந்தையில் ஒரு திடீர் வீழ்ச்சியைத் துவக்கி வைக்க போதுமானதாக இருந்ததாகச் சொல்லப்பட்டது.
ஐக்கிய மாகாணங்களின் கடுமையான கடன்பிரச்னையும், பொருளாதாரப் பிரச்னையை ஒருநிலைப்படுத்த முக்கிய பொருளாதார வல்லரசுகளின் இயலாமை அல்லது மனமில்லாமையும் சேர்ந்து மீண்டும் உடனடியாக நம்பிக்கை ஏற்படுத்துவதை சாத்தியமற்றதாக்கிவிடுகிறது. இந்நிலையைக் குறிப்பிட்டு பொருளியலர் ஸ்டீபன் மாரிஸ் எச்சரித்ததாவது: “நாம் ஒரு குளறுபடியில் இருக்கிறோம். இதிலிருந்து எளிதில் வெளியேற வழியில்லை.”
விலைகளின் ஏற்ற இறக்கம். சமீப ஆண்டுகளில் எண்ணெய், உலோகங்கள் இன்னும் மற்ற அடிப்படப் பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க வகையில் ஏறிவிட்டிருக்கிறது. 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் விலைகளின் திடீர் உயர்வு உலகம் முழுவதிலும் பணவீக்கத்துக்குக் காரணமாயிருந்து உலகப் பொருளாதார விலைமந்தத்தைத் தூண்டிவிட்டது. எண்ணெய் உற்பத்தி செய்யாத பின்தங்கிய தேசங்களே குறிப்பாக இதில் பாதிக்கப்பட்டன.
1980-களில் பெரும்பாலான பொருட்களின் விலையில் ஓர் இறக்கம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட பொருட்களையே முக்கியமாக ஏற்றுமதி செய்யும் ஏழ்மையிலுள்ள தேசங்களின் பொருளாதாரத்தை இது வெகுவாக இன்னலுக்குள்ளாக்கியது. எண்ணெய் ஏற்றுமதியில் வெகுவாக சார்ந்திருக்கும் மெக்ஸிக்கோ, நைஜீரியா, போன்ற தேசங்களும் எண்ணெய் விலைச்சரிவால் வாழ்க்கைத் தரத்தில் மோசமான சரிவை அனுபவித்தன. இப்படிப்பட்ட விலைகளின் ஏற்ற இறக்கம் மிக பலமான பொருளாதார திட்டத்தையும்கூட அமிழ்த்திவிடக்கூடும்.
குறுகிய நோக்குடைய அரசாங்கச் செலவுகள்
இராணுவச் செலவு. உலகம் முழுவதிலும், 1987-ம் ஆண்டுக்கான மொத்த இராணுவச் செலவு 16,000 கோடி ரூபாய் என்பதாக மதிப்பிடப்பட்டது. இது நிமிடத்துக்கு 288 இலட்சம் ரூபாய்க்குச் சமமாக இருக்கிறது! பணக்கார தேசங்கள் மாத்திரமே ஆயுதங்களில் பணத்தை வீணில் செலவு செய்வதில்லை; உலகிலுள்ள மிக ஏழ்மையான சில தேசங்கள், இராணுவச் செலவுகளை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டிருக்கின்றன.
வளர்ச்சியடையாத தேசங்களின் இராணுவச் செலவினால் ஏற்படும் சமுதாய மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளை விளக்குபவராய் பொருளியலர் ஜான் K. கால்ப்ரேய்த் குறிப்பிட்டதாவது: “இந்த ஆயுதங்களுக்காகப் பணம் செலுத்துகிறவர்கள் ஏழைகளிலும் மிக ஏழ்மையிலிருப்பவர்கள். அவை வாழ்க்கைச் செலவை மேம்படுத்துவதற்காக ஒதுக்கிவைக்கப்பட்ட இராணுவஞ்சாரா முதலீடுகளின் இழப்பில், உணவு பொருட்களின் இழப்பில் வாங்கப்படுகின்றன.”
“வெள்ளை-யானைத்” திட்டங்கள். (தாங்கமுடியாத பெருஞ்செலவு பிடிக்கும் உடைமைத் திட்டங்கள்) சயாம் நாட்டரசன், தனக்குப் பிடிக்காத அரசவையினருக்கு ஒரு வெள்ளையானையைக் கொடுப்பது வழக்கமாம். அந்த மிருகம் பரிசுத்தமானதாகக் கருதப்பட்டதால், அதை வேலை செய்ய வைக்க முடியாது. இவ்விதமாக அதைப் பேணிக் காப்பது அதைப் பரிசாகப் பெற்ற துரதிர்ஷ்டசாலிக்குப் பொருளாதார சேதத்தைக் கொண்டுவரும். சமீப ஆண்டுகளில் மேற்கத்திய தேசங்கள் சயாம் நாட்டரசனைப் போலவே நடந்துகொண்டிருக்கின்றன. அவைகளுடைய உதவி திட்டங்களில், அதைப் பெற்றுக்கொள்ளும் தேசங்களால் பராமரிக்க இயலாத அபாரமான தொழில்நுட்பத் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்திருக்கின்றன.
இந்தப் பெருஞ்செலவு பிடிக்கிற, நடைமுறைக்குப் பயனற்ற “வெள்ளை யானைகள்”, ஏழ்மையிலுள்ள தேசங்களின் பொருளாதாரச் சூழலில் தாறுமாறாக தோற்றமளிக்கின்றன: மிக அபூர்வமாக மாத்திரமே இயங்கும் ஆடம்பரமான விமான நிலையங்கள், மாவு இல்லாததன் காரணமாக ரொட்டியை உற்பத்தி செய்யமுடியாத பிரமாண்டமான ரொட்டி உற்பத்தி கடை, பராமரிப்பு குறைவினால் சதா பழுதாகிவிடும் மாபெரும் சிமென்ட் தொழிற்சாலை.
சில சமயங்களில், வளர்ச்சியடையாத தேசங்களின் அரசாங்கங்கள், நீர்-மின் திட்டங்கள், அணுசக்தி தொழிற்சாலைகள் அல்லது புதிய தலைநகரங்கள் போன்ற வீண் அழிவு செய்கிற திட்டங்களில் ஊதாரித்தனமாகச் செலவு செய்வதன் காரணமாக மிக அதிகமான கடன் சுமையைத் தங்கள் மீது ஏற்றிக்கொண்டிருக்கின்றனர்.
மக்கள்தொகை வளர்ச்சி
உலகின் பல தேசங்களில், வேகமான மக்கள்தொகை வளர்ச்சி வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. வீட்டு வசதி, வேலைகள், பள்ளிகள் மற்றும் உணவு உற்பத்தியும்கூட எப்போதும் அதிகரித்துவரும் தேவைக்கு ஈடுகொடுக்க இயலவில்லை. உதாரணமாக மெக்ஸிக்கோவில் மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருவதன் காரணமாக, வேலையில்லா நிலை வீதம் அதிகரிக்காது வைத்துக் கொள்ள ஆண்டுதோறும் பத்து இலட்சம் வேலைகளை உருவாக்குவது அவசியமாகும். அநேக ஆப்பிரிக்க தேசங்களில் வேகமாக வளர்ந்துவரும் மக்கள்தொகை—நகரங்களுக்கு இடம்பெயர்ந்து செல்வதால் இன்னும் அதிமோசமாக்கப்படும் நிலை—உணவு இறக்குமதியை மூன்று மடங்கு அதிகரிப்பதற்கும் கடந்த பத்தாண்டுகளின் போது வாழ்க்கைத்தரத்தின் சரிவுக்கும் வழிநடத்தியிருக்கிறது. நம்பிக்கையிழந்த சில தகப்பன்மார்கள், வேலையைத் தேடி தங்கள் பெரிய குடும்பங்களைப் பராமரிக்க இயலாமல் வெறுமென அவர்களைக் கைவிட்டுவிட்டிருக்கிறார்கள் அல்லது தற்கொலையும்கூட செய்து கொண்டிருக்கிறார்கள்.
பொருளாதார அமைப்பிலுள்ள இயல்பான பலவீனங்கள்
முன்னுரைக்க இயலாத சந்தை சக்திகள். பொருளாதார முன்னறிவிப்பு, சரிநுட்பமற்ற விஞ்ஞானமாக இருப்பதற்கு பெயர் பெற்றிருக்கிறது. பிரச்னையானது, முன்னேறிய பொருளாதாரங்களிலும்கூட, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நுட்பமாக அறிந்து கொள்ள வல்லுநர்களுக்குக் கடினமாக இருக்கையில், திட்டவட்டமான செய்திக்குறிப்புகள் கிடைக்கப்பெறாத பின்தங்கிய தேசங்களின் பொருளாதாரத்தில் இது நடைமுறையில் சாத்தியமற்றதாகும். பொருளியலர்கள் பிரச்னையின் சரியான இயல்பைக்குறித்து கருத்தில் ஒத்துப்போனாலும்கூட அவர்கள் தங்களுடைய சொந்த அரசியல் அல்லது சமுதாய நோக்குநிலைகளின்படி வித்தியாசமான பரிகாரங்களை எடுத்துரைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. முடிவான தீர்மானங்களைச் செய்யும் அரசியல்வாதிகள், அவர்களுக்குப் பிடித்தமானதாயிருக்கும் பொருளாதார ஆலோசனைக்கு மாத்திரமே செவிசாய்க்கும் மனச்சாய்வுடையவர்களாயிருப்பது காரியங்களை இன்னும் சிக்கலானதாக்கிவிடுகிறது.
ஐக்கியமாகாணங்களைக் குறித்து, முன்னாள் ஐ.மா. வர்த்தகச் செயலர் பீட்டர் பீட்டர்ஸன் விளக்கியதாவது: “அடிமட்டத்தில் நம்முடைய பிரச்னைகள் பொருளாதாரம் சார்ந்தவை அல்ல. மாறாக நாம் நம்முடைய அரசியல் கருத்து ஒருமைப்பாட்டுக் குறைவினால் செயலில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம். நம்முடைய பொருளாதாரப் பிரச்னையின் இயல்பைக் குறித்ததிலும்கூட நம்மிடம் கருத்து ஒற்றுமை இல்லை.”
தெரிவிக்கப்படாத சுயநலம். ஒவ்வொரு தேசமும் மற்ற தேசங்களின் மீது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பைப் பற்றி கவலைப்படாமல், தன் சொந்த அரசு அக்கறைகளையே நாடும் மனசாய்வைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தன்னுடைய குடிமக்களுக்கு உணவளிக்கவும்கூட முடியாத ஒரு தேசத்துக்கு அனுப்பப்படும் பொருளாதார உதவி நுணுக்கம் வாய்ந்த இராணுவ கருவியின் வடிவிலிருக்கலாம். தானம் செய்யும் தேசத்தின் உள்ளெண்ணம், மனிதாபிமானம் சார்ந்ததாக இல்லாமல், பொருளாதார அல்லது அரசியல் சார்ந்ததாக உள்ளது. தங்கள் சொந்த உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க தொழில் வளர்ச்சியடைந்த பணக்கார தேசங்கள் போடும் காப்புவரித் தடைகள், அடிப்படை சரக்குகளைக்கூட விற்பனை செய்வதற்கு ஏழ்மையிலுள்ள தேசங்கள் எடுக்கும் முயற்சிக்கு இடையூறாக உள்ளது.
காலந்தவறாது வட்டி செலுத்துவது குறித்துதானே அக்கறையுடையதாக இருப்பதற்காக சர்வதேசீய வங்கி அமைப்புகளை வளர்ச்சியடையாத தேசங்கள் கடுமையாக விமர்சிக்கின்றன. ஒருசில திட்டங்கள், கடன் கொடுப்பவருக்கு உடனடி ஆதாயம் கொடுக்காது என்ற காரணத்துக்காகவே, நிதியுதவியில்லாமல் கைவிடப்பட்டிருக்கின்றன. கடன் வாங்கியிருக்கும் இந்தத் தேசங்கள் இப்பொழுது செலுத்தவேண்டிய உயர்வட்டி வீதங்களுக்குக் காரணம் அவைகளைவிட அதிக செல்வமுடையதாயிருக்கும் மற்ற தேசங்களின் ஊதாரித்தனமான செலவுகளே ஆகும். ஐந்தாண்டுகளில் லத்தீன் அமெரிக்கா, இரண்டு மார்ஷல் திட்டங்களுக்கு ஈடான நிதியுதவியை ஐக்கிய மாகாணங்களுக்கும் ஐரோப்பாவுக்கும் அனுப்பியிருப்பதாக ஆர்ஜென்டீனாவின் ஜனாதிபதி அல்போன்சின் குறிப்பிட்டார்.a ஆனால் இப்பகுதி இன்னும் அதிகமாகக் கடனில் மூழ்கியிருக்கிறது.
ஊழலும் பேரசையும். சில ஆப்பிரிக்க மற்றும் ஆசிய தேசங்களின் தலைவர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கையாடல் செய்திருப்பதாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறார்கள். லத்தீன் அமெரிக்காவில் காவல் துறை அதிகாரிகளும் முக்கிய வியாபார புள்ளிகளுங்கூட பல கோடி ரூபாய் மோசடியில் உடந்தையாயிருந்திருக்கிறார்கள். இந்தப் பெருந்தொகையான பணம், பொதுமக்களின் நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்குரியவையாகும். குறிப்பிட்ட இடத்தில் எல்லா மட்டத்திலுமிருக்கும் இலஞ்ச ஊழல் எண்ணற்ற தேசங்களின் பொருளாதாரங்களை கவலைக்குரியவிதத்தில் அழித்து, அதற்கு ஆதரவு கொடுக்க கட்டாயப்படுத்தப்படும் வறுமையிலுள்ள பெரும்பாலானோர் மீது கூடுதலான பணச்சுமையை ஏற்படுத்துகிறது.
நன்மையில் நம்பிக்கையற்ற வர்த்தகப் பேரரசும்கூட வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு காரணமாயுள்ளது. உதாரணமாக பல தேச புகையிலை கம்பெனிகளின் துணிச்சலான விற்பனை உத்திகள், வறுமையில் வாடும் இலட்சக்கணக்கானோரை, அவர்களிடமுள்ள சிறு தொகயையும் சிகரெட்டுகளுக்காக செலவழிக்கும்படிச் செய்வதில் வெற்றிக்கண்டிருக்கின்றன. வளர்ந்துவரும் சில தேசங்களில், உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தான டார் மிகுந்த சிகரெட்டுகள் பரவலாக விநியோகம் செய்யப்படுகின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதனால் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் ஆபத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். இன்றியமையாத அந்நியச் செலாவணியின் கவர்ச்சி காரணமாக மதிப்புள்ள வேளாண்மை நிலம் புகையிலைப் பயிரிடும் நிலமாக மாறிக் கொண்டுவருகிறது. அநேகமாக இது கைகூடிவருவதில்லை. இதற்கிடையில் புகையிலையோடு சம்பந்தப்பட்ட நோய்கள் வாழ்க்கைச் செலவு உயர்வோடு சரிசமமாக அதிகரித்துவருகின்றது.
வாழ்க்கைச் செலவுக்குப் பின்னாலுள்ள காரணங்களைப் பற்றிய இந்தச் சுருக்கமான விமர்சனம், தங்கள் குடிமக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் அரசாங்கங்கள் எதிர்ப்படும் சோர்வடையச் செய்யும் சவாலைக் காண்பிக்க போதுமானதாக இருக்கிறது. பொருளாதார கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில் ஃபிரான்சு நாட்டின் ஜனாதிபதி மிட்டரான்ட், “சமுக்காளத்தை எப்போதும் உங்கள் கால்களுக்குக் கீழேத் தள்ளி, அதை வெளியே இழுத்து உங்களை தடுக்கிவிழச் செய்வதாக பயமுறுத்தும் ஓர் உலகைப்” பற்றி குறைபட்டுக் கொண்டார். பின்தங்கிய தேசங்களின் அரசியல் மேதைகளும் பொருளியலர்களும் அவர் சரியாக எதை அர்த்தப்படுத்துகிறார் என்பதைக் கசப்பான அனுபவத்திலிருந்து அறிந்திருக்கின்றனர்.
பொருளாதார மீட்புக்காக எந்த நம்பிக்கையுமில்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? உலகப் பொருளாதாரம் அனைத்து மனிதவர்க்கத்துக்கும் கண்ணியமான வாழ்க்கையை அளிக்க திறமையற்றதாக இருக்கிறதா? பின்வரும் கட்டுரை இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும். (g89 5/8)
[அடிக்குறிப்புகள்]
a மார்ஷல் திட்டம் என்பது போரினால் சின்னாபின்னமான ஐரோப்பாவின் பொருளாதார மீட்புக்கு உதவிசெய்வதற்கு திட்டமிடப்பட்ட ஐ.மா. ஆதரவு பெற்ற திட்டமாகும். 1948-லிருந்து 1952 வரையாக 19,200 கோடி ரூபாய் பெறுமான உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
[பக்கம் 8-ன் பெட்டி]
கடன் பிரச்னை
தேசீய கடன்
அநேக தேசங்களில் அரசாங்கத்தின் செலவு அதன் வருமானத்தை வெகுவாக மிஞ்சிவிடுகிறது. இந்தக் கொள்கைத் தேவைப்படுத்தும் மிகுதியான கடன் வாங்குதல் வருடங்களினூடாக பேரளவான பட்ஜெட் பற்றாக்குறை குவிந்துவிடுவதற்கு வழிநடத்த, இது சில சமயங்களில் தேசீய கடன் என்றழைக்கப்படுகிறது. வட்டியோடுகூட இந்தக் கடனைச் செலுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்து கடன்வாங்கிக் கொண்டிருக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட, இது வட்டிவீதத்தையும் எரிபொருள் பணவீக்கத்தையும் மேலுமாக உயர்த்திவிடுகிறது. மேலுமாக, டைம் பத்திரிகை விளக்கியவிதமாகவே, அரசாங்கங்கள் செலவுகளைக் குறைக்க விருப்பமில்லாதவையாக இருக்கின்றன. ஏனென்றால் “வாக்காளர்கள், மனிதர்களாக இருப்பதால் அதிகமான சலுகைகளையும் குறைவான வரிகளையும் விரும்புகிறார்கள். அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளாக இருப்பதால் [வாக்காளர்களின் விருப்பங்களுக்கு] இசைந்துவிடுகிறார்கள்.” இதன் காரணமாக கணக்குத்தீர்ப்புநாள் தள்ளிப்போடப்படுகிறது, இதற்கிடையில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துகொண்டிருக்கிறது.
சர்வ தேசீய கடன்
பல்வேறு காரணங்களுக்காக, சில தேசங்கள் அவர்கள் ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் அதிகமானப் பண்டங்களையும் பணிகளையும் இறக்குமதி செய்ய, இது வணிகப் பற்றாக்குறை சமநிலையில் விளைவடைகிறது. விழுகின்ற துண்டு, மற்ற தேசங்கள் ஏற்றுக்கொள்ளும் நடப்பு நாணயத்தில் பொதுவாக டாலர்கள் அல்லது மற்ற தேய்வுறாத நாணயத்தில் செலுத்தப்பட வேண்டும். இந்தப் பணம் வைப்பிலிருந்து எடுக்கப்பட அல்லது மற்ற தேசங்களிடமிருந்து கடனாக வாங்கப்பட வேண்டும். நாட்டின் வைப்புத் தொக ஆபத்துக்குரிய வகையில் குறைந்து, கடனுதவித் தொக வரவில்லையென்றால், இறக்குமதி மீது கட்டுப்பாடுகள் போடப்படவோ அல்லது நாணயத்தின் மதிப்பு குறைக்கப்படவோ வேண்டியிருக்கலாம். இந்த இரண்டு நடவடிக்கைகளுமே இறக்குமதி பண்டங்களின் விலை ஏற்றத்தை உண்டுபண்ணக்கூடும். இவைகளில் பல, தொழிற்சாலைக்கும் நுகர்வோருக்கும் இன்றியமையாததாக இருக்கக்கூடும்.
பின்தங்கிய நாடுகள் குறிப்பாக இந்த வணிக சமநிலைப் பிரச்னைகளைக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் ஏற்றுமதி செய்யும் பண்டங்களின் பெறுமானம் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துவிட்டிருக்கிறது. உதாரணமாக 1960-ல் ஒரு டன் காப்பியைக்கொண்டு 37 டன்கள் உரத்தை வாங்கமுடிந்தது. 1982-ல் அதைக்கொண்டு 16 டன்கள் மாத்திரமே வாங்க முடிந்தது. குறைந்த அளவே வளர்ச்சியடைந்துள்ள தேசங்களின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக இருக்கும் கெக்கேயொ, தேயிலை, பஞ்சு, காப்பர், டின் இன்னும் மற்ற அடிப்படை பொருட்களுக்கும் இதேவிதமான எண்களைத் தரமுடியும். பெரும்பாலும் வளர்ந்துவரும் தேசங்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வணிகத்திலுள்ள இந்தப் பிரதிகூலமான நிபந்தனைகளின் விளைவாக 1987-க்குள் இத்தேசங்கள் 1,60,000 கோடி ரூபாய் கடனில் இருந்தன. அவர்களுடைய கழுத்தைச் சுற்றிய இந்த ஏந்திரக்கல், பொருளாதார மீட்புக்கு மிகமோசமான தடையாக இருந்து ஒரு சில அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையையும்கூட பயமுறுத்திவிடுவதாக இருக்கிறது.
தி நியு யார்க் டைம்ஸ் சமீபத்தில் குறிப்பிட்டதாவது: “லத்தீன் அமெரிக்காவை ஒன்றாகச் சேர்த்து இணைக்கும் ஒரே பிரச்னை கடனாகும். . . . அரசாங்கங்களிடமாக பொதுமக்களின் அபிமானம் நொறுங்கிவருவதற்கு இந்தப் பிரச்னையே காரணமாக உள்ளது. இதுவே முக்கியமாக அவர்களுடைய உடனடியான எதிர்காலத்தை பாதிக்கின்ற, அரசியலில் மாறி அடிக்கும் காற்றாக இருக்கிறது.”
[பக்கம் 7-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உலக பணவீக்க விகிதங்கள் 1980–85
(பொருளியலர் வெளியிட்ட எல் முன்டோ என் சிஃப்ராஸ் என்ற வெளியீட்டின் அடிப்படையில்)
0–15%
30–100%
எண் இலக்கம் கிடைக்கவில்லை
15–30%
100% மேல்