பொருளாதார மீட்புக்கு என்ன நம்பிக்கை?
பிரான்சின் பதினாறாம் லூயினுடைய ஆட்சிக் காலத்தின்போது, அவருடைய அரசி மாரி அன்டோநெட் அரண்மனை நிதி அமைச்சரிடம்: “மாண்புமிகு அமைச்சரே, பற்றாக்குறையைக் குறித்து தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று ஒருமுறை கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அவருடைய பதில்: “ஒன்றுமில்லை அம்மையாரே, அது அதிக கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது.”
காலம் மாறிவிட்டபோதிலும் குறிப்பிட்ட இந்தத் தத்துவம் இன்னும் நடைமுறையிலிருப்பதாகத் தோன்றுகிறது. அரசியல் மேதைகளும் பொருளியலர்களும் மாபெரும் சர்வதேசீய கடன், பணக்கார மற்றும் ஏழைநாடுகளிடையேயுள்ள பொருளாதார சமநிலைக்குறைவு, அநேக தேசங்களிலுள்ள மிகமோசமான வறுமைக் குறித்துப் புலம்புகிறார்கள். ஆனால் ஏதாவது செய்யப்படுகிறதென்றால், அது மிகக்குறைவானதாகவே இருக்கிறது—பிரச்னைகள் மிகவும் கவலைக்குரியவையாக இருக்கின்றன. இது பொருளாதாரச் செயலறிவாக இருக்கிறதா?
“பொருளியல்” என்று பொருள்படும் ஆங்கில வார்த்தையாகிய “எக்கனாமிக்ஸ்” (economics) கண்காணியர் அல்லது இல்ல நிர்வாகி என்று பொருள்படும் ஆய்க்கோனாமஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. உலகப் பொருளாதாரம் அடிப்படையில் உலக “இல்லம்” எவ்விதமாக நிர்வகிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய படிப்பாகும். இது எவ்விதமாக நிர்வகிக்கப்பட்டுவருகிறது?
இதை விளக்க பூமியை ஒரு சமுதாயமாகவும் தனிப்பட்ட தேசங்களை அக்கம் பக்கத்திலிருக்கும் அயலகத்தாராகவும் நாம் கற்பனை செய்துகொள்ளலாம். மிகவும் பணக்காரனாக இருக்கும் அயலாரில் ஒருவன் வலுகட்டாயமாகச் செலவு செய்பவனாகவும் ஏறக்குறைய அனைவருக்கும் பணம் கடன்பட்டவனாயுமிருக்கிறான். அவன்தானே அவர்களுடைய மிகச் சிறந்த வாடிக்கையாளனாக இருப்பதால், அவனுக்குக் கடன் கொடுத்தவர்கள், அவன் பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்குமாறு வற்புறுத்த தயங்குகிறார்கள். மிக ஏழ்மையிலுள்ள ஒரு சில குடும்பங்களும்கூட கடனில் மூழ்கியிருப்பதால், தங்கள் கடன் மீது விதிக்கப்பட்ட உயர் வட்டி வீதத்தைச் செலுத்துவதற்காகவே பணம் கடன்வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கிடையில், அவ்விடத்தில் கைவிடப்பட்ட குடும்பத்தின் தகப்பன், தன்னுடைய பல பிள்ளைகள் பட்டினி கிடக்கையில், அவனும் அவனுடைய நண்பர்களும் ஆடம்பரமான ஒரு கொண்டாட்ட விருந்தை அனுபவித்திருக்கிறார்கள்.
பணக்காரக் குடும்பங்கள் நன்றாகச் சாப்பிட்டு ஏராளமான உணவை குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார்கள். ஏழைக் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்கிற பணத்தைக் காட்டிலும் அவர்கள் அதிகமானப் பணத்தை செல்லப்பிராணிகளின் மீது செலவழிக்கிறார்கள். அவ்வப்போது அவ்விடத்துப் பிரச்னைகள் குறித்துப் பேச அவர்கள் சமுதாய கூட்டங்களைக் கூட்டுகிறார்கள். ஆனால் எதுவும் செய்யப்படுவதாகத் தெரியவில்லை. பணக்காரக் குடும்பங்களுக்கும் ஏழைக் குடும்பங்களுக்குமிடையே பதற்ற நிலை வளருகிறது. இந்தச் சமுதாயம் நிர்வகிக்கப்படும் விதத்தில் அடிப்படையில் ஏதோ ஒன்று தவறாக இருப்பது தெளிவாக இருக்கிறது.
அனைத்துலகப் பொருளாதாரத்தை நிர்வகிக்க ஒருவர்
நல்ல நிர்வாகம் நல்லொழுக்கத்தோடு தொடர்பற்றதாக இருக்க முடியாது. நாம் பார்த்தவிதமாகவே, தேசீய, நிறுவன மற்றும் தனிப்பட்ட மட்டத்தில் சுயநலமும் பேராசையும் விசேஷமாக ஏழ்மையிலுள்ள தேசங்களின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குக் காரணமாயிருக்கிறது. பொருளாதார அநீதி என்பது உண்மையில் அநீதியான ஒழுங்குமுறையின் ஒரு பிரதிபலிப்பாகவே இருக்கிறது.
எளியப் பரிகாரங்கள் எதுவுமில்லை என்பது ஒப்புக்கொள்ளப்படத்தக்கதே. ஒரு தேசத்தால் கையாளப்படுவதற்கு பிரச்னை மிகப்பெரியதாக இருக்கிறது. அவைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான அதிகாரம் பெற்ற சர்வதேசீய குழு எதுவும் இல்லை. மேலுமாக அவைகளை இவ்விஷயத்தில் நெருங்கி மோதுவதற்கு உலகத் தலைவர்களுக்கு அரசியல் துணிவு இல்லை என்பதாக கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள்.
என்றபோதிலும், பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டவர்களின் நிலைக் குறித்து விசேஷமாக அக்கறையுடையவராயிருந்த ஓர் அரசனைப் பற்றி சரித்திரம் விவரிக்கிறது. அவர்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் அவர் திட்டவட்டமான சட்டங்களை ஏற்படுத்தினார்.
இந்த அரசன், சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டுவந்து, வனாந்தரத்தில் அவர்களுடைய 40 வருட கால பயணத்தினூடே அவர்களை அற்புதமாக மன்னாவினால் போஷித்தவராவார். காணக்கூடாத இந்த அரசன் ஒவ்வொருவருக்கும் போதுமானது இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்.—யாத்திராகமம் 16:18; 2 கொரிந்தியர் 8:15 ஒப்பிடவும்.
பின்னால், இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வந்தடைந்தபோது, கடவுள் கொடுத்தச் சட்டங்கள் ஏழைகளுக்குப் பாதுகாப்பாக இருந்தது. எதிர்பாராத துன்பக்காலங்களால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டது. எளிமையானவர்கள் நிலங்களிலும் பழத்தோட்டங்களிலும் திராட்சத் தோட்டங்களிலும் எஞ்சியிருப்பதைப் பொறுக்கிக் கொள்ளலாம். உரிமைக்காரர்கள், பொறுக்குகிறவர்களுக்காக கொஞ்சத்தை விட்டுச் செல்லவேண்டும். மேலுமாக கடவுள் செல்வந்தர்களாக இருந்த இஸ்ரவேலருக்குத் ‘தேசத்திலிருக்கும் எளியவனுக்குக் கையைத் தாராளமாகத் திறந்து’ கொடுக்கும்படியாகக் கட்டளையிட்டார்.—உபாகமம் 15:7–11.
கடவுள் முழு தேசமும் செழித்திருக்கும் வகையில், இஸ்ரவேல் வீட்டை நிர்வாகம் செய்தார். அவருடையக் கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்ற நிபந்தனை அங்கு இருந்தது. சாலொமோன் ராஜா போன்ற அவருடைய பிரதிநிதிகள், கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றும்படி எதிர்பார்க்கப்பட்டார்கள். சாலொமோனைக் குறித்து சங்கீதக்காரன் எழுதுகிறதாவது: “ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் பாதுகாத்து, ஏழைகளின் பிள்ளைகளை காப்பாற்றுவார். . . . கூப்பிடுகிற எளியவனையும் உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்குவார். . . . அவர்களுடைய உயிர்கள் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”—சங்கீதம் 72:4, 12–14, தி ஜெருசலேம் பைபிள்.
என்றபோதிலும், கடவுள் பின்னால், மிக மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஏற்படும் என்பதாக முன்னறிவித்தார். கடைசியாக மனிதவர்க்கத்தை தொல்லைப்படுத்தும் கடுமையான பொருளாதார நிஜ நிலையை விவரிப்பதாய் பைபிள் முன்னறிவித்ததாவது: “ஒரு முழு நாள் கூலியும் ஓர் அப்பத்துணிக்கைக்கே.” (வெளிப்படுத்துதல் 6:6, வேமெளத், ஐந்தாவது பதிப்பு) இன்று இதுவே துல்லிபமாக உலகிலுள்ள அநேக ஏழை மக்களின் நிலையாக இருக்கிறது. ஒரு முழு நாள் கூலியைக் கொண்டு ஒருவேளைக்கூட சாப்பிடமுடிவதில்லை.
உண்மையான பொருளாதார மீட்பு அருகாமையிலுள்ளது
வருந்தத்தக்க இந்த நிலைக்கு ஒரே பரிகாரம், நோபல் பரிசு பெற்ற வில்லி ப்ராட்டிட்டால் குறிப்பிடப்பட்டது. அவர் சொன்னார்: “பணக்கார நாடுகளும் ஏழை நாடுகளும் . . . உயிர் பிழைத்திருப்பதிலிருக்கும் அவர்களுடைய பொதுப்படையான அக்கறையினால் ஒன்றாகச் சேர்த்து பிணைக்கப்பட்டிருப்பதை உணருவதினாலும் வருங்காலக் கூர்நோக்குடைய மற்றும் உலகளாவிய அணுகுமுறையினாலும் மாத்திரமே இதற்கு விடைகாண முடியும்.”
இந்த வருங்காலக் கூர்நோக்குடைய மற்றும் உலகளாவிய அணுகுமுறையைத்தானே கடவுள் மனதில் கொண்டிருக்கிறார். மனித அரசர்களைப் போலில்லாமல், உலகளாவிய பொருளாதார மீட்பைக் கொண்டுவர கடவுள் விருப்பத்தையும் வழியையும் கொண்டிருக்கிறார்.
பொருளாதார இன்னல்களைப் பற்றிய அதே தீர்க்கதரிசனத்தில் அவர் நிலைமையை சரிசெய்ய திறமையுள்ளவராயிருக்கும் தாம் நியமித்திருக்கும் அரசனைப் பற்றி குறிப்பிட்டார். அவர் “வெள்ளை குதிரை”யின் மீது அமர்ந்திருப்பதாகவும் ‘ஜெயிப்பவராகப் புறப்பட்டு’ போகிறவராகவும் விவரிக்கப்படுகிறார். இவர், கடவுளுடைய ராஜ்ய ஆட்சியை மனிதவர்க்கத்தின் மீது ஒரே அரசாங்கமாக விரிவுபடுத்தும் பொருட்டு விரைவில் ‘ஜெயிக்கப்போகிறவராகிய’ இயேசு கிறிஸ்துவேயன்றி வேறு எவரும் இல்லை. இயேசு கிறிஸ்துவின் கைகளில் இந்த ராஜ்யமே, மற்ற காரியங்களோடுகூட வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தீர்ப்பதற்குரிய கடவுளுடைய வழியாக இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 6:2; தானியேல் 2:44 ஒப்பிடவும்.
“புதிய வானங்கள்” என்பதாக ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்படும் இந்த ராஜ்ய ஆட்சியின் கீழ் கடவுள் வாக்களிப்பதாவது: “அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை அல்லது துன்பத்துக்காக பிள்ளைகளை வளர்ப்பதுமில்லை.” “என் ஊழியக்காரர் புசிப்பார்கள், . . . ; என் ஊழியக்காரர் குடிப்பார்கள் . . . ; என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள்.”—ஏசாயா 65:13, 14, 17, 23, புதிய ஆங்கில பைபிள்.
விருதாவாக இன்று உழைத்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான ஆட்கள் இந்த வார்த்தையிலிருந்து ஆறுதலடையலாம். கடவுளுடைய புதிய உலகில், அவர்களுடையப் பிள்ளைகளுக்குப் பொருளாதார இன்னல்களின் துரதிஷ்டத்தின் காரணமாக அடிப்படைத் தேவைகள் இல்லாமல் இருக்காது. வாழ்க்கைச் செலவுப் பற்றிய கவலைக்குப் பதிலாக வாழ்வதிலிருக்கும் சந்தோஷத்தின் பெருமகிழ்ச்சி இருக்கும்.
இப்படிப்பட்ட வாக்குறுதிகள் வெறுமென நடைமுறக்கு அப்பாற்பட்ட கனவு என்பதாக நீங்கள் நினைத்தால், யெகோவாவின் சாட்சிகள் அடுத்தமுறை உங்களை வந்து சந்திக்கையில் ஏன் அவர்களோடு பேசக்கூடாது? வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு நாம் ஏன் கடவுளின் பரிகாரத்தை நம்பக்கூடும் என்பதை அவர்கள் வேதாகமத்திலிருந்து உங்களுக்கு எடுத்துக்காட்ட மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்பர். (g89 5/8)
[பக்கம் 10-ன் படம்]
கடவுளுடைய புதிய உலகில் எவருமே பசி பட்டினியிலோ அல்லது ஏழ்மையிலோ இருக்கமாட்டார்கள்