உயரும் விலைவாசி மனிதச் செலவு
ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர்
“நாங்கள் தக்காளிப்பழம் சாப்பிடுவதையே மொத்தமாக நிறுத்திவிட்டோம். ஏனென்றால் அவை அத்தனை விலையாக இருக்கிறது. பழங்களைப் பொறுத்தவரை, நான் கடைசியாக எப்போது கொஞ்சம் பழங்களை வாங்கினேன் என்பது என் நினைவில் இல்லை,” என்பதாக இந்தியாவிலுள்ள ஒரு குடும்பத்தலைவி பெருமூச்சோடு சொன்னாள்.
“எங்களால் காலணிகளை அல்லது துணிமணிகளை வாங்க முடியாது” என்பதாக மெக்ஸிக்கோவில் ஐந்து பேருள்ளக் குடும்பத்தைக் காப்பாற்ற முயன்றுவரும் நெசவுத் தொழிலாளி ஒருவர் புலம்புகிறார். “நான்காண்டுகளுக்கு முன்பாக எங்களிடம் கொஞ்சம் பணமிருந்தது, ஆனால் எல்லாமே மலிவாக இருந்தது. இப்பொழுது பணம் எதற்கும் பிரயோஜனமில்லை.” அவனுடைய தேசத்தில் நான்கு ஷில்லிங்கு மதிப்புள்ள வெள்ளி நாணயத்தின் வாங்கும் சக்தி 1982-க்கும் 1986-க்குமிடையே 35.4 சதவீதம் சரிந்துவிட்டது.
முகமது எல் கானி எகிப்திலுள்ள கெய்ரோவில் இரவு காவற்காரனாக பணிபுரிகிறார். இங்கே அத்தியாவசியமான சிலப் பொருட்களின் விலை ஒரே வருடத்தில் இரண்டு மடங்காகிவிட்டிருக்கிறது. “நாங்கள் அன்றாட பிழைப்பை நடத்துகிறோம். எங்களால் சாப்பிட முடியாத நாட்கள் இருக்கின்றன,” என்று அவன் விவரமாகச் சொல்கிறான்.
ப்ரேஸிலில் ஓர் இரயில் விபத்துக்குப் பலியான துரதிஷ்டசாலி, அவனுடைய நஷ்ட ஈட்டுத் தொக நீதிமன்றத்தால் நிருணயிக்கப்படுவதற்காக 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. கடைசியாக விபத்து நடந்த சமயத்தில் தேசீய குறைந்தப்பட்ச ஊதியமாக இருந்ததில் பாதிக்குச் சமமானத் தொக மாதாந்தர நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. ஆனால், பணவீக்கத்தின் காரணமாக, இந்தத் தொக அதைப் பெற்றுக் கொள்வதற்கு அவன் செல்கிற போது பேருந்து கட்டணத்துக்கும்கூட போதுமானதாக இல்லை.
நைஜீரியாவில், ஏற்கெனவே மூன்றுப் பிள்ளைகளுக்குத் தகப்பனாக இருந்த பாலா, தன்னுடைய மனைவி ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகளை ஈன்றெடுத்த செய்தியைக் கேட்டபோது மூர்ச்சையாகிவிட்டான். அவன் இரண்டு வேலைகளைச் செய்துவந்தபோதிலும், குடும்ப வருமானம் அடிப்படைத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை, உணவுப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துவந்திருக்கிறது. தன் பிள்ளைகளுக்கு அடிப்படை தேவைகளையும்கூட அளிப்பது தன்னால் கூடாதக் காரியம் என்பதை அவன் அறிந்திருந்தான். தத்து எடுத்துக் கொள்வதற்குக் குழந்தைகளைக் கொடுக்க அவன் தயாராக இருந்தான்.
விவரங்கள் மாறுபட்டாலும் உலகம் முழுவதிலும் கதை இப்படித்தான் இருக்கிறது. வாழ்க்கைச் செலவு கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டேபோகிறது. அநேகருக்கு ☞ ரொட்டியும் பாலும் உண்பது ஆடம்பரமாகவும் மூன்றுவேளைச் சாப்பிடுவது அபூர்வமாகவும் மாறிக் கொண்டுவருகிறது. நைஜீரியாவிலிருந்து வரும் அறிக்கை வருமாறு: “இதுவரையாக நைஜீரிய மக்களுக்கு முக்கிய உணவாக இருந்துவந்த ரொட்டியை இப்பொழுது செல்வந்தர்கள் மாத்திரமே சாப்பிடுகிறார்கள். சோறு பண்டிகை காலத்தில் மாத்திரமே சமைக்கப்படுகிறது.”
சிலர் நீண்டநேரம் வேலை செய்வதன் மூலம் பிரச்னையை இலேசாக்கிக்கொள்கையில், மற்றவர்கள் வேலை கடினமாக இருப்பதை அல்லது வேலை கிடைப்பதே சாத்தியமற்றதாக இருப்பதைக் காண்கிறார்கள். ஒவ்வொரு நாளும் முடிவில்லாமலும் அநேகமாகப் பயனில்லாமலும் அவர்கள் உணவைத்தேடிச் செல்ல வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு இது வெறுமென வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கும் ஒரு விஷயமாக இல்லாமல், உயிர்த்தப்பிப்பிழைப்பதற்காகச் செலவைச் சமாளிக்கச் செய்யும் ஒரு போரட்டமாக இருக்கிறது.
பெரும்பாலானவர்களின் காரியத்தில் வில்லன் பணவீக்கமாக அல்லது உயர்ந்துகொண்டிருக்கும் விலைவாசியாகவே இருக்கிறது. ஊதியமும்கூட உயரலாம். ஆனால் விலைவாசி உயர்வோடு அதே ரீதியில் அது செல்வதில்லை. குறிப்பாகப் பாதிக்கப்படுகிறவர்கள் மாறாத நிலைப்பட்ட வருமானத்திலுள்ள ஓய்வு ஊதியம் பெறுவோரும் வேலையில்லாதவர்களுமாக இருக்கிறார்கள். உலகிலுள்ள வளர்ச்சியடையாத அநேக தேசங்களில் அண்மை ஆண்டுகளில் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. முழு உலகளவில், பணக்காரர் இன்னும் பணக்காரராகி வருகையில், ஏழ்மையிலிருப்பவர்கள் நிச்சயமாகவே இன்னும் அதிக ஏழ்மைக்குள்ளாகி வருகிறார்கள் என்று உண்மையாகவே சொல்லப்படலாம். இதுவே உங்கள் தேசத்தின் நிலைமையாகவும் இருக்கிறதா?
பொருளாதார இன்னல்களினால் ஏற்படும் கிளர்ச்சி
அநேகர் எதிர்த்து குரலெழுப்புவது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. உதாரணமாக, சிப்பாஸ் மற்றும் ஆக்ஸியாக்கா மாகாணங்களிலிருந்துவரும் வறுமையிலிருக்கும் ஆசிரிய பெருமக்கள் தங்களுடைய இராவிழிப்பு, பொருளாதார நீதியைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் மெக்ஸிக்கோ நகரின் மையப்பகுதியில் கூடாரமடித்துத் தங்கினர். “மக்கள் ஏமாற்றப்பட்டுவருகிறார்கள்” என்பதாக அவர்களில் ஒருவர் அடித்துச் சொல்கிறார். மற்ற தேசங்களில் விலைவாசி திடீரென்று ஏறுகையில் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
சிலருடைய விளக்கத்தின்படி, பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகள் செய்யும் அமைதியான ஆனால் ஆபத்தான புரட்சியாக இருக்கும் குற்றச்செயலும்கூட திடீரென வளர்ந்துகொண்டிருக்கிறது. காவல்துறையினரின் கருத்தரங்கு ஒன்று சர்வதேசீய தீச்செயல் அலைக்கு, இத்தனை அநேக குடிமக்களின் நம்பிக்கையற்ற பொருளாதார நெருக்கடி நிலையே காரணம் என்பதாகக் காட்டியது. பொருளாதார நெருக்கடி, சில சமயங்களில் ஆபத்தான திருப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. 1987-ல் இரண்டு இந்திய கிராமங்களில், தாங்கள் உயர்ஜாதி மானிய நில சொந்தக்காரர்களால் சுயநலத்திற்காக ஏமாற்றப்படுவதாக உணர்ந்த நூற்றுக்கணக்கான பட்டினிக் கிடந்த விவசாயிகள் 50-க்கும் அதிகமான உயர்-ஜாதி மக்களைக் கொன்றுவிட்டார்கள்.
யாரை குற்றஞ்சாட்டுவது?
20-ம் நூற்றாண்டில், முன்னொருபோதும் இருந்ததற்கும் மேலாக மிக அதிகமான பொருள்வளம் இருக்கின்றது. ஆனால் இந்த நூற்றாண்டு அதன் முடிவை நோக்கி நெருங்கி வருகையில் அதிகரித்துவரும் இலட்சக்கணக்கான ஆட்கள் முடிவில்லாத வறுமையில் மூழ்கிப் போய்க்கொண்டிருப்பது புரியாப் புதிராக இருக்கிறது. மேம்பட்ட ஒரு நாள், பொருளாதாரத்தில் மேல்நோக்கிய ஒரு திருப்பம், அனைவருக்கும் நல்ல ஊதியம் பற்றிய உறுதிமொழிகள் அநேகமாக அரசியல் கனவாகவே இருக்கின்றன.
யாரை அல்லது எதைக் குற்றஞ்சாட்டுவது? அநேகர் தங்கள் அரசாங்கங்களை குற்றஞ்சாட்டுகிறார்கள். அரசாங்கங்கள் தங்கள் பங்கில் மற்ற தேசங்களின் பொருளாதாரக் கொள்கைகளைக் குற்றஞ்சாட்டக்கூடும். உலகப் பொருளாதார அமைப்பும்கூட கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. பிரச்னைகள் சிக்கலாகவும் பரிகாரங்கள் நழுவிச் செல்வதும் தெளிவாக இருக்கிறது. தொடர்ந்து வரும் கட்டுரையில், வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் அடிப்படைக் காரணங்களில் சிலவற்றையும் அவற்றை நிவிர்த்திச் செய்வது ஏன் அத்தனை கடினமாக இருக்கிறது என்பதையும் நாம் கலந்தாராய்வோம். (g89 5/8)