வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பைபிள் அடிக்கடி “தந்தையற்ற ஆண்பிள்ளை” பற்றிக் குறிப்பிடுவதால், பெண்பிள்ளைகள் பற்றி குறைந்த அக்கறையை இது குறிக்கிறதா?
நிச்சயமாக இல்லை.
பெற்றோர் ஒருவரைக் கொண்டிராத பிள்ளைகளுக்கான கடவுளுடைய அக்கறையை வெளிக்காட்டக்கூடிய பல வசனங்களில் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு “தந்தையற்ற ஆண்பிள்ளை” என்ற பதத்தைப் பயன்படுத்துகிறது. கடவுள் இஸ்ரவேலுக்குக் கொடுத்த சட்டங்களில் இந்த அக்கறையைத் தெளிவாக விளங்கச் செய்தார்.
உதாரணமாக, கடவுள் குறிப்பிட்டார்: “விதவையையும் [தந்தையற்ற ஆண், NW] பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் [மகன்கள் தந்தையற்ற ஆண், NW] பிள்ளைகளுமாவார்கள்.” (யாத்திராகமம் 22:22-24) “உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. அவர் [தந்தையற்ற ஆண்பிள்ளைக்கும், NW] விதவைக்கும் நியாயஞ்செய்கிற[வருமாய்] . . . இருக்கிறார்.”—உபாகமம் 10:17, 18; 14:29, NW; 24:17, NW; 27:19, NW.
அநேக பைபிள் மொழிபெயர்ப்புகள் “தந்தையற்ற பிள்ளை” அல்லது “அனாதை” என்று இந்த வசனங்களில் வாசித்து, ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் உட்படுத்துகின்றன. இருந்தாலும், அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகள், ஆண்பாலில் இருக்கும் அடிப்படை எபிரெய வார்த்தையில் (யாதோம், [ya·thohmʹ]) காணப்படுகிற தனிச்சுவை ஒன்றை விட்டுவிடுகின்றன. பதிலாக, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு சரியான மொழிபெயர்ப்பாகிய “தந்தையற்ற ஆண் பிள்ளை(கள்),” என்பதை சங்கீதம் 68:5-ல் இருப்பதுபோல் பயன்படுத்துகிறது; அது வாசிக்கிறது: “தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற கடவுள், தந்தையற்ற ஆண்பிள்ளைகளுக்குத் தந்தையும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாய் இருக்கிறார்.” அடிப்படை எபிரெயுவுக்கான அதே சுவையுணர்வின் அடிப்படையில், சங்கீதம் 68:11-லுள்ள ஒரு வினைச்சொல்லின் பெண்பால் இவ்விதமாக வாசிக்கிறது: “நற்செய்தியை அறிவிக்கும் பெண்கள் ஒரு பெரிய படையாக இருக்கின்றனர்.”a
“தந்தையற்ற ஆண்பிள்ளை” என்பது யாதோம் என்பதன் முக்கிய மொழிபெயர்ப்பாக இருக்கிறபோதிலும், இது பெற்றோர் ஒருவரைக் கொண்டிராத பெண்பிள்ளைகளுக்கு அக்கறை இல்லாமையைக் குறிப்பதாக எடுத்துவிடக் கூடாது. மேற்கோள் காட்டப்பட்ட பகுதிகளும் மற்றவையும், கடவுளுடைய மக்கள் பெண்களுக்கு, விதவைகளுக்கு அக்கறை செலுத்தும்படி ஊக்குவிக்கப்பட்டனர் என்று காண்பிக்கின்றன. (சங்கீதம் 146:9; ஏசாயா 1:17; எரேமியா 22:3; சகரியா 7:9, 10; மல்கியா 3:5) நியாயப்பிரமாண சட்டத்தில், தந்தையற்ற செலோப்பியாத்தின் மகள்களுக்கு ஒரு சுதந்தரிப்பை உறுதியளித்த நியாய விசாரணைக்குரிய தீர்மானத்தைப்பற்றிய பதிவையும் கடவுள் உள்ளடக்கினார். அந்தத் தீர்ப்பு, அதேபோன்ற நிலைமைகளைக் கையாளுவதற்கு ஒரு சட்டமாக ஆனது; இவ்வாறு தந்தையற்ற பெண்பிள்ளைகளின் உரிமைகளை ஆதரித்தது.—எண்ணாகமம் 27:1-8.
பிள்ளைகளுக்கு தயவைக் காண்பிப்பதில் இயேசு, ஆண், பெண் என்று பால்பாகுபாடு வைக்கவில்லை. மாறாக, நாம் வாசிக்கிறோம்: “சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக்கொண்டு, . . . அவர்களை ஆசீர்வதித்தார்.”—மாற்கு 10:13-16.
‘சிறு பிள்ளைகள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, ஆண், பெண் என்று பால்வேறுபாடு காட்டாத சொல்லாக இருக்கிறது. இந்த வார்த்தை “ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது” என பெயர்பெற்ற கிரேக்க அகராதி ஒன்று சொல்கிறது. எல்லா பிள்ளைகளுக்கும், ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு, யெகோவா கொண்டிருந்ததை ஒத்த அக்கறையை இயேசு பிரதிபலித்துக்கொண்டிருந்தார். (எபிரெயர் 1:3; ஒப்பிடவும்: உபாகமம் 16:14; மாற்கு 5:35, 38-42.) இவ்வாறாக, “தந்தையற்ற ஆண்பிள்ளை”களில் அக்கறை கொண்டிருப்பது பற்றி எபிரெய வேத எழுத்துக்களிலிருக்கும் ஆலோசனை, பெற்றோர் ஒருவரை அல்லது பெற்றோர் இருவரையுமே கொண்டிராத எல்லா பிள்ளைகளைக் குறித்தும் நாம் எப்படி அக்கறையுள்ளவர்களாய் இருப்பதற்கு ஈடான புத்திமதியாக இருக்கிறது என்று உணரப்படவேண்டும்.
[அடிக்குறிப்புகள்]
a யூத டனக் வாசிக்கிறது: “கர்த்தர் ஒரு கட்டளை கொடுக்கிறார்; செய்தியைக் கொண்டுவரும் பெண்கள் ஒரு பெரிய கூட்டமாக இருக்கிறார்கள்.”