‘திக்கற்ற பிள்ளைகளிடம்’ அன்பான அக்கறை காட்டுங்கள்
1 யெகோவா ‘திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பனாக’ இருக்கிறார். (சங். 68:5) அவர்களுடைய நலனில் அவருக்கு இருக்கும் அக்கறை, பண்டைய இஸ்ரவேலருக்கு அவர் கொடுத்த கட்டளையிலிருந்து தெரிகிறது. அவர் சொன்னதாவது: ‘விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்பேன்.’ (யாத். 22:22, 23) அப்படிப்பட்டவர்களுக்கு பொருளுதவி செய்யும் ஏற்பாடுகளும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் இருந்தது. (உபா. 24:19-21) கிறிஸ்தவ ஏற்பாட்டில், ‘திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்தில் அவர்களை கவனிக்க’ வேண்டுமென உண்மை வணக்கத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டது. (யாக். 1:27) ஒற்றைப் பெற்றோர் குடும்பத்திலோ மத ரீதியாக பிளவுபட்ட குடும்பத்திலோ வளருகிறவர்களுக்கு யெகோவா காட்டும் அன்பான அக்கறையை நாம் எப்படி பின்பற்றலாம்?
2 ஆன்மீக பயிற்சி: நீங்கள் ஒற்றைப் பெற்றோராக இருந்தால் அல்லது உங்களுக்கு விசுவாசத்தில் இல்லாத துணை இருந்தால், உங்கள் பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பை தவறாமல் நடத்துவது கடினமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சமநிலையும் முதிர்ச்சியுமுள்ள பெரியவர்களாக வளர அர்த்தமுள்ள விதத்தில் பைபிள் படிப்பை தவறாமல் நடத்துவது அவசியம். (நீதி. 22:6) தினமும் ஆன்மீக காரியங்களைப் பற்றி அவர்களிடம் பேசுவதும் இன்றியமையாதது. (உபா. 6:6-9) சில சமயங்களில், நீங்கள் சோர்வாக உணரலாம், ஆனால் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளை ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்த்து வருகையில்’ பலத்துக்காகவும் வழிநடத்தலுக்காகவும் யெகோவாவை சார்ந்திருங்கள்.—எபே. 6:4.
3 உங்கள் வேதப்பூர்வ பொறுப்புகளை கவனிப்பதற்கு உதவி தேவைப்பட்டால், மூப்பர்களிடம் உங்கள் தேவைகளைத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் நடைமுறை ஆலோசனைகளை தரலாம் அல்லது உங்கள் குடும்பத்தில் சிறந்த ஆன்மீக ஒழுங்கை ஏற்படுத்த உதவி செய்யலாம்.
4 மற்றவர்கள் எப்படி உதவலாம்: முதல் நூற்றாண்டில், தீமோத்தேயு, மத ரீதியில் பிளவுபட்ட குடும்பத்தில் வளர்ந்தபோதிலும் யெகோவாவுக்கு வைராக்கியமான ஊழியரானார். பரிசுத்த வேத எழுத்துக்களை சிறு வயதுமுதல் அவருக்கு சொல்லிக் கொடுக்க அவரது அம்மாவும் பாட்டியும் எடுத்த ஊக்கமான முயற்சிகள் இதற்கு முக்கிய காரணமாயிருந்ததில் சந்தேகமில்லை. (அப். 16:1, 2; 2 தீ. 1:5; 3:15) ஆனாலும், அப்போஸ்தலன் பவுல் உட்பட மற்ற கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவு கொண்டதாலும் அவர் நன்மை அடைந்தார்; ‘பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரன்’ என்பதாக பவுல் தீமோத்தேயுவைக் குறிப்பிட்டார்.—1 கொ. 4:17.
5 அதே விதமாகவே இன்றும், சபையிலுள்ள திக்கற்ற பிள்ளைகளிடம் ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகள் அன்பான அக்கறை காட்டுவது எவ்வளவு நன்மை செய்கிறது! ஒவ்வொருவருடைய பெயரும் உங்களுக்குத் தெரியுமா? கிறிஸ்தவ கூட்டங்களிலும் மற்ற சமயங்களிலும் அவர்களுடன் பேசுகிறீர்களா? வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள உங்களுடன் வரும்படி அழையுங்கள். அவ்வப்போது அப்படிப்பட்டவர்களை அவர்களுடைய ஒற்றைப் பெற்றோருடன் அல்லது விசுவாசத்திலுள்ள பெற்றோருடன் சேர்ந்து உங்களுடைய குடும்பப் படிப்பிலோ ஆரோக்கியமான பொழுதுபோக்கிலோ கலந்துகொள்ளும்படி அழைக்கலாம். இந்த இளைஞர் உங்களை தங்கள் நண்பராக கருதும்போது, பெரும்பாலும் உங்கள் முன்மாதிரியை பின்பற்றுவார்கள், நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தை ஏற்றுக்கொள்வார்கள்.—பிலி. 2:4.
6 திக்கற்ற பிள்ளைகளிடம் யெகோவா மிகுந்த அக்கறை காட்டுகிறார். அவர்கள் சத்தியத்தை தங்களுடையதாக ஆக்கிக்கொள்வதற்கு நாம் எடுக்கும் அன்பான முயற்சிகளை அவர் ஆசீர்வதிக்கிறார். ஒற்றைப் பெற்றோர் அல்லது பிளவுபட்ட குடும்பங்களில் வளர்ந்த அநேகர் அப்படிப்பட்ட உற்சாகமூட்டுதலைப் பெற்றதால் இன்று பயனியர்களாக, உதவி ஊழியர்களாக, மூப்பர்களாக, பயணக் கண்காணிகளாக, அல்லது பெத்தேல் குடும்பத்தாராக உண்மையுடன் சேவித்து வருகிறார்கள். நம் பரலோகத் தந்தையை பின்பற்றி, திக்கற்ற பிள்ளைகளுக்கு பாசத்தை காட்டுவதில் ‘விரிவடைவதற்கான’ வழிகளை நாம் அனைவரும் தேடுவோமாக.—2 கொ. 6:11-13, NW.