நாங்கள் முதலாவதாக ராஜ்யத்தைத் தேடியிருக்கிறோம்
ஆலிவ் ஸ்பிரிங்கேட் சொன்னபடி
அம்மா எங்கள் ஜெபங்களைக் கேட்டபின், மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு அப்போதுதான் அறையைவிட்டுச் சென்றிருந்தார்கள். என் தம்பி உடனடியாக என்னிடம் கேட்டான்: “ஆலிவ், செங்கற்சுவர்களின் வழியாய் கடவுளால் எப்படி நம்மைப் பார்க்கவும்
நாம் சொல்வதைக் கேட்கவும் முடியும்?”
“அவர் எதன்வழியாகவும், நம்முடைய இருதயங்களுக்குள்கூட பார்க்க முடியும் என்று அம்மா சொல்கிறார்கள்,” என்று நான் பதிலளித்தேன். அம்மா ஒரு தேவபயமுள்ள பெண்ணாகவும் பேரார்வத்துடன் பைபிள் வாசிப்பவராகவும் இருந்தார்கள்; பிள்ளைகளாகிய எங்களில் கடவுளுக்கும் பைபிள் நியமங்களுக்கும் ஓர் ஆழ்ந்த மதிப்பைப் புகட்டி வைத்திருந்தார்கள்.
எங்கள் பெற்றோர், இங்கிலாந்தின் கெளன்டியி மாவட்டத்திலுள்ள சாட்டம் என்ற ஒரு சிறிய பட்டணத்திலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச் அங்கத்தினர்களாக இருந்தனர். அம்மா ஒழுங்காக சர்ச்சுக்குச் செல்பவர்களாக இருந்தாலும், ஒரு கிறிஸ்தவராக இருப்பது வாரத்தில் ஒருமுறை சர்ச்சுக்குச் சென்று பெயருக்கு உட்கார்ந்துவிட்டு வருவதைவிட அதிகத்தைக் குறித்தது என்று நம்பினார்கள். கடவுள் ஒரேவொரு உண்மையான சர்ச்சையே கொண்டிருக்கவேண்டும் என்றும் அவர்கள் நிச்சயமாய் இருந்தார்கள்.
பைபிள் சத்தியத்திற்குப் போற்றுதல்
1918-ல், நான் ஐந்து வயதுள்ளவளாய் இருந்தபோது, உவர்ட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியின் முதல் தலைவரான சார்ல்ஸ் T. ரஸலால் எழுதப்பட்ட வேதாகமங்களில் ஆய்வுகள் (Studies in the Scriptures) என்ற தலைப்பை உடைய தொகுப்புகளை அம்மா பெற்றுக்கொண்டார்கள். சில வருடங்கள் கழித்து, உவிக்மார் என்றழைக்கப்பட்ட ஒரு சிறிய இடத்தில் நாங்கள் வசித்தபோது, யெகோவாவின் சாட்சிகள், அப்போது அறியப்பட்டிருந்தபடி பைபிள் மாணாக்கர்கள் என்பவர்களில் ஒருவர் அம்மாவைச் சந்தித்தார்கள். பைபிள் படிப்பு உதவியான கடவுளின் சுரமண்டலம் (The Harp of God) என்பதை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து தன்னுடைய பைபிள் கேள்விகள் பலவற்றிற்கு பதில்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு அதிகாரத்தின்பேரிலும் அச்சடிக்கப்பட்ட கேள்விகளை உடைய ஓர் இளம் சிவப்பு அட்டை தபாலில் வந்தது. அந்தப் புத்தகத்தில் பதில்கள் எங்கே கண்டுபிடிக்கப்படலாம் என்பதையும் அந்த அட்டை காண்பித்தது.
1926-ல் என் பெற்றோரும் என் தங்கை பெரலும் நானும், ஆங்கிலிக்கன் சர்ச்சை விட்டுவிலகினோம்; ஏனென்றால், அரசியலில் சர்ச்சின் ஈடுபாடு, அத்துடன் அதன் பல நியாயமற்ற போதகங்கள் ஆகியவற்றால் நாங்கள் வெறுப்படைந்தோம். கடவுள் ஓர் எரி நரகத்தில் மக்களை நித்திய காலத்திற்கு வாதிப்பார் என்பது ஒரு முக்கியமான போதனையாகும். உண்மையில் பைபிள் சத்தியத்திற்காகத் தேடிக்கொண்டிருந்த என் அம்மா, ஆங்கிலிக்கன் சர்ச் உண்மையானது அல்ல என்று உறுதியாக நம்பினார்கள்.
சற்று பின்னர், அம்மாவின் ஆர்வமுள்ள ஜெபங்களுக்குப் பதிலாக, திருமதி ஜாக்ஸன் என்ற ஒரு பைபிள் மாணாக்கர் எங்களைச் சந்தித்தார். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்களுக்கு, எங்களுடைய கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதிலளித்துக்கொண்டு அவர்கள் என்னுடனும் அம்மாவுடனும் பேசினார்கள். மற்ற காரியங்களோடுகூட, எங்களுடைய ஜெபங்கள், ஒரு விளங்காப்புதிரான திரித்துவத்திடம் அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவின் பிதாவான யெகோவா தேவனை நோக்கி செய்யப்படுபவையாக இருக்கவேண்டும் என்று கற்றுக்கொள்வதில் நாங்கள் அகமகிழ்ந்தோம். (சங்கீதம் 83:17; யோவான் 20:17) ஆனால் எனக்கு, அம்மா கேட்ட மிக மறக்க முடியாத கேள்வி இதுதான்: “முதலாவது ராஜ்யத்தைத் தேடுவது எதை அர்த்தப்படுத்துகிறது?”—மத்தேயு 6:33.
பைபிள் அடிப்படையிலான பதில் எங்களுடைய வாழ்க்கையை ஆழமாகப் பாதித்தது. அந்த வாரத்திலிருந்தே, நாங்கள் பைபிள் மாணாக்கர்களின் கூட்டங்களுக்குச் செல்லவும், கற்றுக்கொண்ட காரியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் தொடங்கினோம். நாங்கள் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று உறுதியாக நம்பினோம். சில மாதங்கள் கழித்து, 1927-ல், யெகோவாவைச் சேவிப்பதற்கான தன் ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக அம்மா முழுக்காட்டப்பட்டார்கள்; 1930-ல் நானும் முழுக்காட்டப்பட்டேன்.
பயனியர் சேவையினுள் செல்லுதல்
எங்கள் குடும்பம், சுமார் 25 ஆட்களாலான கில்லிங்காம் சபைக்குச் சென்றது. அவர்களில் பலர் பயனியர்கள் என்று அழைக்கப்பட்ட முழுநேர ஊழியர்களாக இருந்தனர்; எல்லாரும் பரலோக நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். (பிலிப்பியர் 3:14, 20) அவர்களுடைய கிறிஸ்தவ வைராக்கியம் தொற்றுவதாய் இருந்தது. இன்னும் பருவவயதுடைய ஒருத்தியாய் இருக்கையிலே, நான் 1930-களின் தொடக்கத்தில் சிறிது காலத்திற்கு பெல்ஜியத்தில் பயனியர் சேவை செய்தேன். மேலுமான ராஜ்ய சேவைக்கான என் ஆசையை இது தூண்டுவித்தது. அந்தச் சமயத்தில், இராஜ்யம், உலகின் நம்பிக்கை (The Kingdom, the Hope of the World) என்ற சிறு புத்தகத்தின் ஒரு பிரதியை ஒவ்வொரு மதகுருவிற்கும் விநியோகிப்பதில் பங்கெடுத்தோம்.
காலப்போக்கில், எங்களுடைய கிறிஸ்தவ நடவடிக்கைக்கு என் அப்பா மிகவும் எதிர்ப்புடையவர் ஆனார்; ஓரளவிற்கு இந்தக் காரணத்தால், 1932-ல் கல்லூரிக்குச் செல்லும்படி நான் லண்டனுக்குக் குடிபெயர்ந்தேன். பின்னர், நான்கு வருடங்களுக்கு நான் பள்ளியில் கற்பித்தேன்; அந்தச் சமயத்தில் நான் பிளாக்ஹீத் சபையுடன் தொடர்பு கொண்டேன்; அப்போது அது லண்டனில் இருந்த நான்கே சபைகளில் ஒன்றாக இருந்தது. ஹிட்லரின் போர் முயற்சிகளை ஆதரிக்க மறுத்ததால், ஹிட்லரின் ஜெர்மனியில் நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் சிறைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் பற்றிய அறிக்கைகளை அப்போதுதான் நாங்கள் கேள்விப்பட ஆரம்பித்தோம்.
1938-ல், நான் பெற்றிருந்த புத்தகங்களுக்குரிய கடனை அடைத்து முடித்த அதே மாதத்தில், ஒரு பயனியர் ஆவதற்கான என் ஆசையை நிறைவேற்றும்படி என்னுடைய வேலையை விட்டுவிட்டேன். அதேசமயத்தில், என் சகோதரி பெரல் லண்டனில் பயனியர் செய்ய தொடங்கினாள்; ஆனால் அவள் வேறு ஒரு பயனியர் வீட்டில் குடியிருந்தாள். என்னுடைய முதல் பயனியர் துணை மில்ட்ரெட் உவில்லெட்; இப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாகக் குழுவின் ஓர் அங்கத்தினராக இருக்கும் ஜான் பாரை அவர்கள் பின்னர் திருமணம் செய்துகொண்டார்கள். எங்கள் தொகுதியில் இருந்த மற்றவர்களுடன், நாங்கள் பிராந்தியத்திற்கு சைக்கிளில் செல்வோம்; பெரும்பாலும் மழை இருந்தாலும், நாள் முழுவதும் அங்கு இருப்போம்.
ஏற்கெனவே ஐரோப்பாவின்மேல் போர் மேகங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. நச்சுப் புகை தடுக்கும் முகமூடி பயிற்சிகள் குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டன; போர் நடந்தால் பிள்ளைகளை ஆங்கிலேய நாட்டுப்புறங்களுக்கு அல்லது சிறிய பட்டணங்களுக்கு வெளியேற்றும்படி தயாரிப்புகள் தொடங்கி இருந்தன. ஒரு ஜோடி ஷூ வாங்குவதற்கு போதிய பணத்தை மட்டுமே நான் கொண்டிருந்தேன்; என் பெற்றோரிடமிருந்து நிதி உதவி பெறுவதற்கும் எந்தச் சாத்தியமும் இருக்கவில்லை. ஆனால், ‘ராஜ்யத்தை முதலாவதாகத் தேடினால், இந்த மற்ற எல்லா காரியங்களும் கூடுதலாகக் கொடுக்கப்படும்’ என்று இயேசு சொல்லியிருக்கவில்லையா? (மத்தேயு 6:33) யெகோவா என்னுடைய எல்லா தேவைகளையும் அளிப்பார் என்று எனக்கு முழுமையான விசுவாசம் இருந்தது; மேலும் இந்த எல்லா வருடங்களிலும் அவர் அவ்வாறு ஏராளமாகச் செய்திருக்கிறார். போர் காலத்தின்போது, சரக்கேற்றப்பட்ட டிரக்குகள் கடந்துசென்றபின், சாலையிலிருந்து பொறுக்கி எடுத்த காய்கறிகளால் சில நேரங்களில் என் குறைந்தளவு உணவுபங்கை நிரப்பிக்கொண்டேன். பைபிள் பிரசுரங்களுக்குப் பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பரிமாற்றம் செய்வதன்மூலம் அடிக்கடி உணவைப் பெற்றேன்.
என் தங்கை சான்யா 1928-ல் பிறந்தாள். அவள் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தபோது ஏழு வயதுள்ளவளாகவே இருந்தாள். அந்த இளம் வயதிலேயேகூட, பயனியர் சேவை அவளுடைய இலக்காகி இருந்தது என்று சான்யா சொல்கிறாள். 1941-ல், தன்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதலின்மூலமாக அடையாளப்படுத்தியவுடன், அவளும் அம்மாவும் தெற்கு உவேல்ஸிலுள்ள கார்ஃபிலிக்கு பயனியர்களாக நியமிக்கப்பட்டபோது அவள் அந்த இலக்கை அடைந்தாள்.
போர் வருடங்களின்போது எங்கள் ஊழியம்
செப்டம்பர் 1939-ல், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது; பிரிட்டனிலுள்ள நம் சகோதர சகோதரிகளும், நாசி ஜெர்மனியிலுள்ள தங்களுடைய உடன் விசுவாசிகள் சிறையிலடைக்கப்பட்ட அதே காரணத்திற்காக—போரில் பங்கெடுப்பதைக் குறித்ததில் அவர்களுடைய நடுநிலைவகிப்பிற்காக—சிறையிலடைக்கப்பட்டனர். இங்கிலாந்தில் குண்டுவீச்சுகள் மத்திப 1940-ல் தொடங்கின. இரவுதோறும், அந்த மின்னல்போர் காதைப்பிளப்பதாக இருந்தது; ஆனால் யெகோவாவின் உதவியுடன் ஓரளவு தூக்கத்தைப் பெற்று மறுநாள் காலையில் பிரசங்க வேலைக்காக எங்களால் புத்துணர்வைப் பெற முடிந்தது.
சில நேரங்களில், எங்களுடைய பிரசங்க பிராந்தியத்திற்குச் சென்று, பெரும்பாலான வீடுகள் சிதைவுற்றிருப்பதையே காணவேண்டியிருக்கும். நவம்பரில், எங்களில் அநேகர் குடியிருந்த வீட்டிற்கு வெறும் ஒருசில கெஜங்களுக்கு அப்பால் ஒரு வெடிகுண்டு ஜன்னல்களைக் சுக்குநூறாக தகர்த்துக்கொண்டு விழுந்தது. பலமான முன் கதவு நொறுங்கி விழுந்தது; புகைப்போக்கி இடிந்து விழுந்தது. மீதி இரவை ஒரு விமானத் தாக்குதல் பாதுகாப்பறையில் கழித்தபின், நாங்கள் பிரிந்து வெவ்வேறு சாட்சிகளுடைய வீடுகளில் குடியிருக்கும்படி சென்றோம்.
அதன்பின் சீக்கிரத்தில், கிரேட்டர் லண்டனிலுள்ள கிராய்டனுக்கு ஒரு நியமிப்பைப் பெற்றேன். என்னுடைய பயனியர் துணை ஆன் பார்க்கன்; அவர்களுடைய தம்பி ரான் பார்க்கன் பின்னர் பியூர்டோ ரிகோ கிளை அலுவலக ஆலோசனைக் குழுவின் ஒத்திசைவாளரானார். பின்னர் நான் தெற்கு உவேல்ஸிலுள்ள பிரிஜென்டுக்குக் குடிபெயர்ந்தேன்; அங்கு நான் ஆறு மாதங்களுக்கு ஒரு குதிரை வண்டியில் வாழ்ந்துகொண்டு பயனியர் சேவையைத் தொடர்ந்தேன். அருகாமையிலிருந்த பெரிய சபைக்கு, நாங்கள் சைக்கிளில் ஆறு கிலோமீட்டர் செல்வோம்; அது போர்ட் டால்பெட்டில் இருந்தது.
இந்தச் சமயத்திற்குள், பொது மக்கள் எங்களை மனசாட்சிவாதிகள் (மனச்சாட்சியினிமித்தம் படைத்துறைப் பணியை மறுப்பவர்கள்) என்று அழைத்துக்கொண்டு எங்களிடம் அதிக எதிர்ப்புணர்ச்சி உடையோரானார்கள். இது எங்களுக்குத் தங்குமிடத்தைக் கண்டுபிடிப்பதைக் கடினமாக்கியது; ஆனால் வாக்களித்தவிதமாகவே யெகோவா எங்களைக் கவனித்துக் கொண்டார்.
பின்னர், தெற்கு உவேல்ஸிலுள்ள ஸ்வான்ஸீ என்ற ஒரு துறைமுக பட்டணத்தில், எங்களில் எட்டு பேர் விசேஷித்த பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். போர் தீவிரமானவிதமாகவே எங்களுக்கு எதிராக இருந்த தப்பெண்ணங்களும் வளர்ந்தன. எங்கள் பயனியர் வீட்டுச் சுவரில் “எலிகள்,” “கோழைகள்” என்ற வார்த்தைகள் தீட்டப்பட்டிருந்தன. எங்களுடைய நடுநிலைவகிப்பிற்காக எங்களைக் கண்டம் செய்யும் செய்தித்தாள் அறிக்கைகளால் இந்த எதிர்ப்பு பெருமளவில் தூண்டப்பட்டது. முடிவில், ஒவ்வொருவராக எங்களில் ஏழு பேர் சிறைக்கு அனுப்பப்பட்டோம். 1942-ல் நான் கார்டிஃப் சிறையில் ஒரு மாதத்தைச் செலவிட்டேன்; பின்னர் என் சகோதரி பெரலும் அங்கு சில காலத்தைச் செலவிட்டாள். பொருள் சம்பந்தமாக நாங்கள் குறைவானதைக் கொண்டிருந்து, கேலியையும் அவதூறையும் அனுபவித்தபோதும், நாங்கள் ஆவிக்குரியவிதத்தில் செழுமையானவர்களாக இருந்தோம்.
அதேசமயத்தில், அம்மாவும் சான்யாவும் கார்ஃபிலியில் பயனியர் சேவை செய்துகொண்டு, அதேவிதமான அனுபவங்களைக் கொண்டிருந்தனர். சான்யா நடத்திய முதல் பைபிள் படிப்பு, ஒரு வெள்ளிக்கிழமை மாலை சந்திக்கும்படி அவள் ஏற்பாடு செய்திருந்த ஒரு பெண்மணியிடமாக இருந்தது. அம்மா தன்னுடன்கூட வருவார்கள் என்று சான்யா நம்பிக்கையாக இருந்தாள்; ஆனால் அம்மா கூறினார்கள்: “எனக்கு வேறு வேலை இருக்கிறது. நீ இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறாய், ஆகையால் நீ தனியாகவே செல்லவேண்டும்.” சான்யா 13 வயதுடையவளாகவே இருந்தபோதிலும், அவள் தானாகச் சென்றாள்; அந்தப் பெண்மணி நல்ல ஆவிக்குரிய முன்னேற்றம் அடைந்து, பின்னர் ஓர் ஒப்புக்கொடுக்கப்பட்ட சாட்சி ஆனாள்.
போருக்குப் பின்னான நடவடிக்கை—பின்னர் கிலியட்
இரண்டாம் உலகப் போர், 1945-ல் முடிவடைந்தபோது, டெர்பிஷைரிலுள்ள வேலி பிரிட்ஜ் என்ற ஒரு தனிப் பிராந்தியத்தில் நான் வேலை செய்துகொண்டிருந்தேன். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட காலையில், போரினால்—அதன் அனாதைகள், விதவைகள், முடமாக்கப்பட்ட உடல்கள் ஆகியவற்றால்—அப்போதெல்லாம் முழுமையாக சலித்துப்போயிருந்த மக்களைச் சந்தித்து ஆறுதலளித்தோம்.
சில மாதங்களுக்குப்பின், மரகதத் தீவாகிய அயர்லாந்தில் பிரசங்கிக்க விருப்பார்வ ஊழியர்களுக்காக சொஸையிட்டி அழைப்புவிடுத்தது. அந்தச் சமயத்தில், யெகோவாவின் சாட்சிகளில் சுமார் 140 பேர் மட்டுமே அந்தத் தீவில் இருந்தனர்; ஆகையால் அது மிஷனரி பிராந்தியமாகக் கருதப்பட்டது. ஒருசில மாதங்களுக்குள், சுமார் 40 விசேஷித்த பயனியர்கள் அங்கு நியமிக்கப்பட்டனர்; நான் அவர்களில் ஒருத்தியாக இருந்தேன்.
வடக்கில், கோல்ரேன் மற்றும் குக்ஸ் டெளனில் சில காலம் வேலைசெய்தபின், இன்னும் மூவருடன் கிழக்குக் கரையோரத்தில் இருக்கும் டிராய்டாவிற்கு நியமிக்கப்பட்டேன். அயர்லாந்து நாட்டினர், இயல்பாக மிக கனிவும், உபசரிக்கும் தன்மையும் உள்ளவர்களாக இருந்தாலும், மதசார்பான தப்பெண்ணம் அதிகமாக இருந்தது. இவ்வாறு, ஒரு முழு வருடத்தில், எங்களால் ஒருசில பைபிள் படிப்பு உதவிகளை மட்டுமே (உண்மையில் ஒரே ஒரு புத்தகத்தையும் சில சிறு புத்தகங்களையும் மட்டுமே) பொது மக்களிடம் விநியோகிக்க முடிந்தது.
நாங்கள் டிராய்டாவில் இருந்தபோது, நான் ஒரு பண்ணையிலிருந்து மற்றொன்றிற்கு சைக்கிளில் சென்றபோது, ஓர் இளம் பண்ணை வேலையாள் திடீரென்று புதர்வேலியின் வழியாய் சாலைக்கு வந்தார். அவர் சாலையில் மேலும் கீழும் பார்த்துவிட்டு, பின்னர், தாழ்ந்த குரலில் கேட்டார்: “நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரா?” நான் ஆம் என பதிலளித்தபோது அவர் தொடர்ந்தார்: “சென்ற இரவு, பெண்களாகிய உங்களைப்பற்றி நான் மணம் செய்யப்போகும் பெண்ணுடன் ஒரு பயங்கரமான தர்க்கத்தைக் கொண்டிருந்தேன், இதனால் எங்கள் நிச்சயம் முறிவடைந்தது. கத்தோலிக்க மதகுருக்களும் செய்தித்தாள்களும் சொல்வதுபோல் நீங்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்று அவள் விடாப்பிடியாக சொன்னாள்; ஆனால் நீங்கள் வெளிப்படையாக வீட்டுக்கு வீடு செல்வதால் அது உண்மையாக இருப்பது சாத்தியமல்ல என்று நான் வாதாடினேன்.”
நான் அவர் வாசிக்கும்படி ஒரு சிறு புத்தகத்தைக் கொடுத்தேன்; அவர் அதை தன் பாக்கெட்டில் மறைத்து வைத்தார்; “நான் உங்களிடம் பேசுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், நான் என்னுடைய வேலையை இழந்துவிடுவேன்,” என்று அவர் சொன்னதால், இருட்டினபின் சந்தித்து, அதிகம் பேசும்படி நாங்கள் ஏற்பாடு செய்தோம். அந்த இரவு எங்களில் இருவர் அவரைச் சந்தித்து, அவருடைய பல கேள்விகளுக்குப் பதிலளித்தோம். இதுதான் சத்தியம் என்று அவர் நம்பவைக்கப்பட்டவராய் தோன்றினார்; மேலும் அதிகத்தைக் கற்றுக்கொள்வதற்காக இன்னொரு இரவு எங்கள் வீட்டிற்கு வருவதாக வாக்குக்கொடுத்தார். அவர் வரவே இல்லை; அந்த முதல் நாள் இரவு சைக்கிளில் கடந்து சென்ற சிலரால் அவர் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, ஒருவேளை அவருடைய வேலையை இழந்திருப்பார் என்று நாங்கள் நினைத்தோம். அவர் எப்போதாவது ஒரு சாட்சியாகி இருப்பாரா என்று நாங்கள் அடிக்கடி யோசிப்பதுண்டு.
1949-ல் இங்கிலாந்தின் தெற்குக் கரையோரத்திலுள்ள பிரைட்டனில் மாவட்ட மாநாட்டிற்கு ஆஜரானபின், எங்களில் அநேகர், நியூ யார்க் மாகாணத்திலுள்ள உவாட்ச் டவர் ஸ்கூல் ஆஃப் கிலியடிற்கு அழைப்புகளைப் பெற்றோம். யாங்க்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின்போது, ஜூலை 30, 1950-ல் பட்டம்பெற்ற 15-ம் வகுப்பில், பிரிட்டனிலிருந்து மொத்தம் 26 பேர் இருந்தனர்.
பிரேஸிலில் எங்கள் ஊழியம்
அதற்கடுத்த வருடம், உலகில் அதிவிரைவாக வளர்ச்சியடையும் நகரங்களில் ஒன்றான பிரேஸிலிலுள்ள சாவோ பாலோவிற்குச் செல்லும் நியமிப்பை நான் பெற்றேன். அந்தச் சமயத்தில், யெகோவாவின் சாட்சிகளின் ஐந்து சபைகளை மட்டுமே அது கொண்டிருந்தது, ஆனால் இப்போது அங்கே கிட்டத்தட்ட 600 சபைகள் இருக்கின்றன! அயர்லாந்தில் வேலை செய்வதிலிருந்து என்னே ஒரு வித்தியாசமாக அது இருந்தது! சாவோ பாலோவில் எங்கள் பிராந்தியத்தில் அநேக வீடுகள் மாளிகைகளாக, கலை வேலைப்பாடமைந்த மெல்லிரும்பு வாயிற் கதவுகளை உடைய உயரமான இரும்பு வேலிகளால் சூழப்பட்டவையாக இருந்தன. நாங்கள் எங்கள் கைகளைத் தட்டி வீட்டுக்காரரை அல்லது வேலைக்காரியை அழைப்போம்.
வருடங்கள் கடந்தபோது, புதிய நியமிப்புகள் இருந்தன. சாவோ பாலோ மாகாணத்தின் உட்புறத்தில், 1955-ல் ஸூன்டியயீயில் ஒன்றும் 1958-ல் பிரஸகாப்பாவில் மற்றொன்றும் உட்பட பல்வேறு இடங்களில் புதிய சபைகளை உருவாக்க உதவும் சிலாக்கியத்தை நான் பெற்றிருந்தேன். பின்னர், 1960-ல், என் சகோதரி சான்யா என்னுடைய மிஷனரி துணையானாள்; நாங்கள் ரியோ கிராண்டி டோ சுல் மாகாணத்தின் தலைநகரான போர்டோ ஆலெக்ரிக்குச் செல்லும்படி நியமிக்கப்பட்டோம். நீங்கள் யோசிக்கலாம், அவள் பிரேஸிலுக்கு எப்படி வந்தாள்?
இரண்டாம் உலகப் போருக்குப்பின் சான்யாவும் அம்மாவும் தொடர்ந்து ஒன்றுசேர்ந்து இங்கிலாந்தில் பயனியர் செய்துகொண்டிருந்தனர். ஆனால், 1950-களின் தொடக்கத்தில், அம்மா புற்றுநோய்க்கான அறுவைசிகிச்சையைப் பெற்றார்கள்; அவர்களால் பைபிள் படிப்புகளை நடத்தவும் கடிதங்களை எழுதவும் முடிந்தாலும், வீட்டுக்கு வீடு செல்வதற்கு அது அவர்களை அதிக பலவீனமுள்ளவர்களாக ஆக்கியது. சான்யா பயனியர் வேலையில் தொடர்ந்திருந்து, அதேசமயத்தில் அம்மாவைக் கவனிப்பதிலும் உதவினாள். 1959-ல், கிலியடின் 33-ம் வகுப்பிற்குச் செல்லும் சிலாக்கியத்தை சான்யா பெற்று, பிரேஸிலுக்கு நியமிப்பைப் பெற்றாள். இதற்கிடையில், பெரல் அம்மாவை 1962-ல் அவர்களுடைய மரணம் வரையாகக் கவனித்துக்கொண்டாள். அச்சமயத்தில் பெரல் திருமணமாகி இருந்தாள்; அவளும் அவள் குடும்பமும் யெகோவாவை உண்மையாகச் சேவிக்கின்றனர்.
பிரேஸிலில் சான்யாவும் நானும் அநேக மக்களுக்கு ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் உதவினோம். என்றாலும், பல பிரேஸிலியர்களுக்கு இருந்த பிரச்னைகளில் ஒன்று என்னவென்றால் அவர்களுடைய திருமணத்தைச் சட்டப்பூர்வமானதாக ஆக்குவதாகும். பிரேஸிலில் விவாகரத்தைப் பெறுவது கடினமாக இருப்பதன் காரணமாக, தம்பதிகள் திருமணத்தின் பயனின்றி வெறுமனே சேர்ந்து வாழ்வது அசாதாரணமானதாக இருக்கவில்லை. துணைகளில் ஒருவர் முந்தைய சட்டப்பூர்வமான திருமண துணையிடமிருந்து பிரிந்திருந்தபோது இது குறிப்பாக இவ்வாறு இருந்தது.
ஈவா என்ற ஒரு பெண், நான் அவளைச் சந்தித்தபோது, அந்த நிலைமையில் இருந்தாள். அவளுடைய சட்டப்பூர்வமான துணை விட்டுச்சென்றிருந்தார்; ஆகவே அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக வானொலியில் ஓர் அறிவிப்பு செய்தோம். அவளுடைய கணவன் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவள் தான் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த திருமணமாகாத மனிதனோடு இணைப்பைச் சட்டப்பூர்வமாக்கும்படி அவள் விடுதலையாயிருக்க, பத்திரத்தில் அவருடைய கையொப்பத்தை வாங்கும்படியாக நான் மற்றொரு நகரத்திற்கு அவளுடன் சென்றேன். நீதிபதியின் முன் விசாரணையில், அவளுடைய திருமண நிலையைச் சரிசெய்ய விரும்பியதன் காரணத்தை விளக்கும்படி ஈவாவையும் என்னையும் அவர் கேட்டார். இது அவருக்கு விளக்கப்பட்டபோது, அவர் ஆச்சரியத்தையும், திருப்தியையும்கூட வெளிக்காட்டினார்.
மற்றொரு முறை, என்னுடைய பைபிள் மாணாக்கர் ஒருவருடன், அவளுடைய வழக்கைக் கையாளுவதற்கு ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்யும்படி சென்றேன். திரும்பவும், திருமணத்தையும் கடவுளுடைய ஒழுக்க தராதரங்களையும்பற்றி ஒரு நல்ல சாட்சி கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில், விவாகரத்திற்கான விலை, அதற்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக இரு துணைவர்களும் வேலை செய்யவேண்டிய அளவிற்கு அதிகமாக இருந்தது. ஆனால் இந்தப் புதிய பைபிள் மாணக்கர்களுக்கு, அந்த முயற்சி தகுந்த பலனுடையதாய் இருந்தது. சான்யாவும் நானும் அவர்களுடைய திருமணத்திற்குச் சாட்சிகளாக இருக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்தோம்; அதற்குப்பின், அவர்களுடைய பருவவயது பிள்ளைகள் மூவருடன், அவர்களுடைய வீட்டில் நாங்கள் ஒரு சிறிய பைபிள் பேச்சைக் கவனித்துக் கேட்டோம்.
ஒரு செழுமையான, பலனளிக்கும் வாழ்க்கை
சான்யாவும் நானும் எங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, பயனியர்கள் ஆனபோது, கூடுமானால், முழுநேர ஊழியம் எங்கள் வாழ்க்கைத் தொழிலாக இருக்கவேண்டுமென்று எண்ணினோம். எங்களுடைய பின்னான வருடங்களில் அல்லது நோய்வாய்ப்பட்டால் அல்லது நிதி சம்பந்தமான கஷ்டங்கள் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பவற்றிற்கு நாங்கள் அதிக சிந்தனை செலுத்தவில்லை. இருந்தாலும், யெகோவா வாக்களித்தவிதமாகவே, நாங்கள் ஒருபோதும் கைவிடப்படவில்லை.—எபிரெயர் 13:6.
ஆம், நிச்சயமாக, பணக் குறைவு சிலவேளைகளில் ஒரு பிரச்னையாக இருந்திருக்கிறது. ஒரு சமயம், ஒரு முழு வருடத்திற்கு என் துணையும் நானும் மதிய உணவிற்கு பார்சிலி சான்ட்விச்களைச் சாப்பிட்டோம்; ஆனால் நாங்கள் ஒருபோதும் பட்டினியாய் இருக்கவுமில்லை, அடிப்படை தேவைகளின்றி இருக்கவுமில்லை.
வருடங்கள் கடந்து சென்றிருக்கையில், எங்களுடைய சக்திகளும் அதற்கேற்றாற்போல் குறைந்திருக்கின்றன. மத்திப 1980-களில், நாங்கள் இருவருமே கடுமையான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தோம்; அது எங்களுக்குக் கடுமையான சோதனையில் விளைவடைந்தது, ஏனென்றால் எங்களுடைய பிரசங்க நடவடிக்கைகள் பெரிதும் குறைக்கப்பட்டன. ஜனவரி 1987-ல், பிரேஸிலில் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தின் அங்கத்தினர்களாக இருக்கும்படி நாங்கள் அழைக்கப்பட்டோம்.
ஓராயிரம் ஊழியர்களுக்கு மேலானோரை உடைய எங்கள் பெரிய குடும்பம் சாவோ பாலோவிற்கு சுமார் 140 கிலோமீட்டர் அப்புறத்தில் ஓர் அழகிய கட்டட தொகுதியில் இருக்கிறது; அங்கு நாங்கள் பிரேஸிலுக்கும் தென் அமெரிக்காவின் மற்ற பகுதிகளுக்கும் பைபிள் பிரசுரங்களை அச்சிடுகிறோம். இங்கு நாங்கள் கடவுளின் பற்றுறுதியுள்ள ஊழியர்களிடமிருந்து அன்பான கவனிப்பைப் பெறுகிறோம். நான் முதலில் பிரேஸிலுக்கு 1951-ல் வந்தபோது, சுமார் 4,000 ராஜ்ய செய்தி பிரசங்கிப்பாளர்கள் இருந்தனர், ஆனால் இப்போது 3,66,000-ற்கும் மேலானோர் இருக்கின்றனர்! நம் பரிவிரக்கமுள்ள பரலோக தந்தை, அவருடைய ராஜ்யத்தை நாங்கள் முதலில் தேடியதால், உண்மையிலேயே ‘மற்ற எல்லா காரியங்களையும்’ சேர்த்து கொடுத்திருக்கிறார்.—மத்தேயு 6:33.
[பக்கம் 22-ன் படம்]
Cஒரு தகவல் வண்டிக்கு அருகில் மில்ட்ரெட் உவில்லெட்டுடன் ஆலிவ், 1939
[பக்கம் 25-ன் படம்]
ஆலிவ் மற்றும் சான்யா ஸ்பிரிங்கேட்