யெகோவாவின் சாட்சிகள் ஒரு கருத்துவேறுபாட்டுக் குழுவினரா?
இயேசு கிறிஸ்து ஒரு மதுபானப்பிரியர், போஜனப்பிரியர், ஓய்வுநாளைக் கைக்கொள்ளாதவர், பொய் சாட்சிக்காரர், தேவதூஷணம் சொல்கிறவர், சாத்தானின் தூதர் என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டார். அவர் ஆட்சியைக் கவிழ்ப்பவர் என்றும் குற்றம்சுமத்தப்பட்டார்.—மத்தேயு 9:34; 11:19; 12:24; 26:65; யோவான் 8:13; 9:16; 19:12.
இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின், அவருடைய சீஷர்கள் அதேபோல கடுமையான குற்றச்சாட்டுகளின் இலக்காக இருந்தனர். ஒரு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ தொகுதியினர், ‘இவர்கள் உலகத்தைக் கலக்குகிறவர்கள்,’ என்று கூக்குரலிட்டு, மக்களால் பட்டணத்து அதிகாரிகளிடம் இழுத்துச் செல்லப்பட்டனர். (அப்போஸ்தலர் 17:6) மற்றொரு சந்தர்ப்பத்தில் அப்போஸ்தலன் பவுலும் அவருடைய கூட்டாளி சீலாவும் அதிகாரிகளிடத்தில் இழுத்துச்செல்லப்பட்டு, பிலிப்புப் பட்டணத்தில் தீவிர கலகம்பண்ணியதாக குற்றம்சாட்டப்பட்டனர்.—அப்போஸ்தலர் 16:20.
பின்னர் பவுல் ஒரு “கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும்,” மேலும் “தேவாலயத்தையும் தீட்டுப்படுத்த” முயற்சி செய்தார் எனவும் குற்றம்சாட்டப்பட்டார். (அப்போஸ்தலர் 24:5, 6) ரோமிலிருந்த யூதரில் பிரதானமானவர்கள், ‘எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்,’ என்று ஒப்புக்கொண்டபோது இயேசுவின் சீஷர்களுடைய நிலைமையை அவர்கள் மிகச் சரியாகவே விவரித்தனர்.—அப்போஸ்தலர் 28:22.
தெளிவாகவே, இயேசு கிறிஸ்துவால் நிறுவப்பட்ட இந்தப் புதிய தொகுதி, இயல்பான சமூக நடத்தை என்று அந்த நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு மோதும் தீவிரவாத நோக்குநிலைகளையும் பழக்கங்களையும் கொண்ட ஒரு மதத் தொகுதி என்று சிலரால் கருதப்பட்டது. சந்தேகமின்றி, இன்றும் அநேகர் கிறிஸ்தவர்களை அழிவு ஏற்படுத்தும் கருத்துவேறுபாட்டுக் குழுவினர் என்று கருதியிருக்கக்கூடும். குற்றம்சாட்டுபவர்கள் அடிக்கடி சமுதாயத்தின் பிரமுகர்களாகவும், மதிக்கப்படும் அங்கத்தினர்களாகவும் இருக்கின்றனர். இது அந்தக் குற்றச்சாட்டுகளை இன்னும் அழுத்திக்காட்டுவதாகத் தோன்றுகிறது. இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை அநேகர் நம்பினர். இருப்பினும், நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கிறபடி, இந்தக் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் பொய்யாக இருந்தன! மக்கள் அவற்றைச் சொன்னார்கள் என்ற உண்மைதானே அவற்றை உண்மையென மெய்ப்பித்துவிடவில்லை.
இன்றைய நாளைப்பற்றி என்ன? இயல்பான சமூக நடத்தை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு மோதும் தீவிரவாத நோக்குநிலைகளையும் பழக்கங்களையும் கொண்ட ஒரு மதத் தொகுதி என்று யெகோவாவின் சாட்சிகளைக் குறிப்பிடுவது உண்மைக்கு இசைவானதாக இருக்குமா? யெகோவாவின் சாட்சிகள் ஒரு கருத்துவேறுபாட்டுக் குழுவினரா?
அத்தாட்சி காண்பிப்பதென்ன?
ரஷ்யாவில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அரசாங்க அதிகாரி ஒருவர் விவரித்தார்: “யெகோவாவின் சாட்சிகள் இருட்டில் அமர்ந்துகொண்டு பிள்ளைகளை வெட்டித்தள்ளி, தங்களையே கொன்றுகுவித்துக்கொள்ளும் ஏதோவொரு தலைமறைவு பிரிவினர் என்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.” இருந்தபோதிலும், ரஷ்ய மக்கள் அண்மையில் சாட்சிகளுடைய உண்மை சுபாவத்தைப்பற்றி நன்கு அறிந்துகொண்டனர். சர்வதேசிய மாநாடு ஒன்றின் சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து வேலைசெய்த பின்னர், அதே அதிகாரி குறிப்பிட்டார்: “நான் இப்போது இயல்பான, புன்னகைக்கும் மக்களை, நான் அறிந்திருக்கும் அநேக மக்களையும்விட நல்ல மக்களைக் காண்கிறேன். அவர்கள் அமைதிநிறைந்தவர்களும் சாந்தமானவர்களும், ஒருவரையொருவர் அதிகம் அன்புகூருகிறவர்களுமாக இருக்கின்றனர்.” அவர் மேலும் கூறினார்: “அவர்களைப்பற்றி மக்கள் ஏன் அப்படிப்பட்ட பொய்களைச் சொல்கின்றனர் என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.”
யெகோவாவின் சாட்சிகள் சடங்காச்சார கூட்டங்களை நடத்துகிறதுமில்லை; அவர்களுடைய வணக்கம் ரகசியத்தின் போர்வையில் மறைக்கப்படுகிறதுமில்லை. சாட்சியல்லாத எழுத்தாசிரியை ஜூலியா மிச்செல் கோர்பட் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “வழக்கமாக வாரத்திற்கு ஒருமுறைக்குமேல், அவர்கள் ராஜ்ய மன்றங்களில் (அவர்களுடைய கூட்டம் நடக்கும் இடங்கள் சர்ச்சுகள் என்றழைக்கப்படுவதில்லை) கூடிவரும்போது, அவர்களுடைய நேரம் பெரும்பாலும் பைபிள் படிப்பிலும் கலந்தாலோசிப்பிலுமே செலவிடப்படுகிறது.” அவர்களுடைய கூட்டம் நடக்கும் இடங்கள் ஓர் அறிவிப்புப் பலகையால் தெளிவாகவே அடையாளமிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன. கூட்டங்கள் எல்லாருக்கும் திறந்ததாக நடத்தப்பட்டு, பொதுமக்கள் ஆஜராகும்படி அழைக்கப்படுகின்றனர். முன்னறிவிப்பில்லாது வரும் விருந்தினர்கள் அதிக உற்சாகத்தோடு வரவேற்கப்படுகின்றனர்.
“சாட்சிகள் நேர்மையானவர்கள், அடக்கமானவர்கள், கடின உழைப்பாளிகள் என்று நற்பெயர் பெற்றிருக்கின்றனர்,” என்று ரிலிஜன் இன் அமெரிக்கா என்ற தனது புத்தகத்தில் மேலும் கூறுகிறார் கோர்பட். யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி ஏறுமாறானதோ விநோதமானதோ ஒன்றுமில்லை என்று சாட்சிகளல்லாத அநேகர் உடனடியாக ஒப்புக்கொள்கின்றனர். அவர்களுடைய நடத்தை இயல்பான சமூக நடத்தை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு மோதுவது கிடையாது. சாட்சிகள் “சொந்த நடத்தையில் ஓர் உயர்ந்த ஒழுக்க விதிமுறையை வற்புறுத்துகின்றனர்,” என்று தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா திருத்தமாக குறிப்பிடுகிறது.
அறுபது நிமிடங்கள் (60 Minutes) என்ற டிவி செய்தி காட்சியில் சாட்சிகளைப்பற்றிய ஒருதலைப்பட்சமான அறிக்கை ஒன்று வந்தது. இதற்குப் பதிலளிப்பவராக ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு தொலைக்காட்சி நிலைய செய்தி மற்றும் விசேஷ திட்டங்களின் இயக்குநர் யெகோவாவின் சாட்சிகளுக்கு எழுதினார். அவர் சொன்னார்: “உங்களுடைய விசுவாசத்தில் உள்ளவர்களைப்போல அதிக மக்கள் வாழ்ந்திருப்பார்களேயானால், இந்த நாடு இப்போது இருக்கும் நிலைமையில் இருந்திருக்காது. உங்களுடைய அமைப்பு சிருஷ்டிகர் மீதான அன்பு, உறுதியான விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டது என்றறிந்த ஒரு நிருபர் நான். எல்லா நிருபர்களும் இதைப்போல ஒருதலைப்பட்சம் காண்பிப்பவர்களாக இல்லை என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படி நான் விரும்புகிறேன்.”
நன்கு அறியப்பட்ட ஒரு மதம்
யெகோவாவின் சாட்சிகள் ஒரு சிறிய, தீவிரவாதக் கொள்கைகளையுடைய மதத் தொகுதி என்று சொல்வது நியாயமானதா? ஒருவகையில், சில மதங்களுடன் ஒப்பிடுகையில் யெகோவாவின் சாட்சிகள் எண்ணிக்கையில் குறைவானவர்களே. இருப்பினும், இயேசு சொன்னதை நினைத்துப் பாருங்கள்: “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”—மத்தேயு 7:13, 14.
எப்படியிருந்தாலும், சாட்சிகள் ஒரு சிறிய, தீவிரவாதக் கொள்கைகளையுடைய கருத்துவேறுபாட்டுக் குழுவினரைவிட மிகவும் வித்தியாசப்பட்டவர்களாய் இருக்கின்றனர். 1993-ன் வசந்தகாலத்தில், 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் அதிக மக்கள் சாட்சிகள் நடத்திய கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு ஆஜராயிருந்தனர். ஆனால் அவர்களுடைய எண்ணிக்கையைவிட மிக முக்கியமானது என்னவென்றால் அவர்களுடைய ஒழுக்கப் பண்பும் எடுத்துக்காட்டான நடத்தையுமேயாகும். அவை உலகமுழுவதிலிருந்தும் அவர்களுக்கு பாராட்டுதலைக் கொண்டுவந்திருக்கின்றன. அறியப்பட்ட, உண்மையான ஒரு மதம் என்று அவர்களுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்த தேசங்களில், சந்தேகமின்றி இதுவே ஒரு காரணியாக இருந்துவந்திருக்கிறது.
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஆணையத்தால் சமீபத்தில் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது. சாட்சிகள் எண்ணம், மனச்சாட்சி, மதம் ஆகியவற்றின் சுதந்திரத்தை அனுபவிக்கவேண்டும்; மேலும் தங்களுடைய விசுவாசத்தைப்பற்றி பேசவும் அதை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் அவர்களுக்கு உரிமையுண்டு என்று அது அறிவித்தது. யெகோவாவின் சாட்சிகள் அங்கத்தினர்களை சேர்த்துக்கொள்வதற்காக ஏமாற்றும், நெறிகெட்ட சூழ்ச்சித் தந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அறியப்பட்டிருந்தாலோ, அல்லது அவர்கள் தங்களுடைய சீஷர்களின் மனங்களைக் கட்டுப்படுத்த நயமாக நம்பவைக்கும் சூழ்ச்சி முறைகளைப் பயன்படுத்தியிருந்தாலோ அது இவ்வாறு அறிவித்திருக்காது.
உலகமுழுவதிலுமுள்ள திரளானோர் யெகோவாவின் சாட்சிகளோடு நன்கு பழகியிருக்கின்றனர். சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருக்கும் அல்லது எப்போதாவது ஒருமுறை படித்திருக்கும் சாட்சிகளல்லாத லட்சக்கணக்கானோரிடம் நாங்கள் கேட்கிறோம், உங்களை மூளைச்சலவைச்செய்ய ஏதாவது முயற்சிகள் இருந்திருக்கின்றனவா? மனதைக் கட்டுப்படுத்தும் தந்திரங்களை சாட்சிகள் உங்களிடத்தில் உபயோகித்தனரா? சந்தேகமின்றி “இல்லை” என்பதே உங்களுடைய ஒளிவுமறைவற்ற பதிலாக இருக்கும். தெளிவாகவே, இந்த முறைகள் உபயோகிக்கப்பட்டிருந்தால், பலியாட்கள் பெரும் எண்ணிக்கையில் யெகோவாவின் சாட்சிகளுக்கு சாதகமான எந்த வாதத்திற்கும் எதிராக எழுந்திருப்பார்களே.
“மனிதநலனில் ஈடுபாடுகொண்டவர்கள்”
கருத்துவேறுபாட்டுக் குழு அங்கத்தினர்கள் அடிக்கடி குடும்பத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும், ஏன், பொதுவாக சமுதாயத்திலிருந்தும்கூட தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்தில் அப்படித்தான் இருக்கிறதா? “நான் யெகோவாவின் சாட்சிகளைச் சேர்ந்தவன் அல்ல,” என்று எழுதினார் செக் குடியரசின் நிருபர் ஒருவர். இருப்பினும், அவர் மேலும் கூறினார்: “அவர்களுக்கு [யெகோவாவின் சாட்சிகளுக்கு] பேரளவு ஒழுக்க பலமிருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. . . . அவர்கள் அரசாங்க அதிகாரங்களை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே மனிதரின் எல்லா பிரச்னைகளையும் தீர்க்கவல்லது என்று நம்புகின்றனர். ஆனால் கவனியுங்கள்—அவர்கள் வெறியர்கள் அல்லர். அவர்கள் மனிதநலனில் ஈடுபாடுகொண்ட மக்கள் ஆவர்.”
அவர்கள் உறவினர்களிடத்திலிருந்தும் மற்றவர்களிடத்திலிருந்தும் தங்களையே தனிமைப்படுத்திக்கொண்டு தங்கள் கூட்டத்தினரோடு மட்டும் வாழ்வதில்லை. தங்களுடைய குடும்பங்களை அன்புகூர்ந்து பராமரிப்பது தங்களுடைய வேதப்பூர்வமான பொறுப்பு என்பதை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் எல்லா இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்களோடும் சேர்ந்து வாழ்ந்து வேலைசெய்கின்றனர். பேரழிவுகள் தாக்கும்போது, நிவாரணப் பொருட்களோடும் மற்ற மனிதாபிமான உதவிகளோடும் அவர்கள் உடனடியாக செயல்படுகின்றனர்.
மிக முக்கியமாக, ஈடிணையற்ற ஒரு கல்விபுகட்டும் திட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். தங்கள் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரையும் சந்திக்க ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட முறையை எத்தனை மதங்கள் கொண்டிருக்கின்றன? யெகோவாவின் சாட்சிகள் 200-க்கும் அதிகமான தேசங்களில் 200-க்கும் அதிகமான பாஷைகளில் இதைச் செய்கின்றனர்! தெளிவாகவே யெகோவாவின் சாட்சிகள் ‘மனிதநலனில் ஈடுபாடுகொண்ட’ மக்களாக இருக்கின்றனர்.
பைபிளைக் கண்டிப்பாக பின்பற்றுதல்
ஒப்புக்கொள்ளக்கூடிய விதத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகள் சர்ச்சுகளால் போதிக்கப்படுகிறவற்றைவிட வித்தியாசமானவை. யெகோவாவின் சாட்சிகள் யெகோவா சர்வவல்லமையுள்ள கடவுளாக இருக்கிறார் என்றும், இயேசு அவருடைய குமாரன், முக்கடவுட்களின் ஒரு பாகமல்ல என்றும் நம்புகின்றனர். கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே அல்லல்படும் மனித இனத்திற்கு விடுதலை கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையில் அவர்களுடைய விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருக்கிறது. இந்தச் சீர்கெட்ட காரிய ஒழுங்குமுறைக்குச் சீக்கிரத்தில் வரவிருக்கும் உடனடி அழிவைப்பற்றி அவர்கள் மக்களை எச்சரிக்கின்றனர். கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கான ஒரு பூமிக்குரிய பரதீஸைப்பற்றிய கடவுளுடைய வாக்குறுதியைப்பற்றி அவர்கள் மக்களுக்குப் பிரசங்கிக்கிறார்கள். அவர்கள் சிலுவையை வணங்குவது கிடையாது. கிறிஸ்மஸ் கொண்டாடுவதும் கிடையாது. ஆத்துமா அழியக்கூடியது என்றும் நரக அக்கினி இல்லை என்றும் அவர்கள் நம்புகின்றனர். அவர்கள் இரத்தம் உட்கொள்வது கிடையாது; இரத்தமேற்றுதல்களை ஏற்றுக்கொள்வதும் கிடையாது. அவர்கள் அரசியலில் ஈடுபடுவதிலிருந்தும் போரில் பங்கெடுப்பதிலிருந்தும் விலகிநிற்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகள் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கின்றன என்று எப்பொழுதாவது நீங்கள் உங்களையே கேட்டுக்கொண்டது உண்டா?
யெகோவாவின் சாட்சிகள் “பைபிளைக் கண்டிப்பாக விளக்குவதானது மற்றவர்கள் தகுதியானதென நினைக்கும் அநேக நடவடிக்கைகளைத் தடைசெய்கிறது . . . , எல்லாம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களையும் பைபிளின் வார்த்தைகளையும் பின்பற்றுவதற்கான முயற்சியில்தான்,” என்று டெய்லி ஹாம்ப்ஷயர் கெஸட் என்ற மசாஸுசெட்ஸ் செய்தித்தாள் ஒன்று விவரிக்கிறது. “அவர்கள் நம்புவதெல்லாம் பைபிளை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் விசுவாசத்தின் ஒவ்வொரு கூற்றுக்குமே அவர்கள் ‘வசன நிரூபனம்’ (அதாவது, ஆதாரமாக பைபிளிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து) காண்பிக்கின்றனர். பாரம்பரியத்தை முழுவதுமாக வேரோடு பிடுங்கி எறியும் பைபிளின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தைச் சந்தேகிப்பதில்லை,” என்று தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் ஒப்புக்கொள்கிறது. ரிலிஜன் இன் அமெரிக்கா என்ற புத்தகம் கூறுகிறது: “இந்தத் தொகுதி பைபிள் படிப்பின் மீதான தனது ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்தை ஒருபோதும் ஊசலாடவிட்டது கிடையாது. அதன் போதனைகள் வேத எழுத்துக்களிலிருந்து சான்றளிக்கும் விரிவான ஒரு முறையால் ஆதரிக்கப்படுகின்றன.”
அவர்களுடைய தலைவர் யார்?
பைபிளைக் கண்டிப்பாக பின்பற்றும் இந்த ஒரே காரணத்துக்காகத்தான், மனித தலைவர்களை வழிபாட்டுப் பொருட்களாக்கி, அவர்களை வணங்குதல் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் காணப்படுகிறதில்லை. இது இன்றைய கருத்துவேறுபாட்டுக் குழுவினரை வெகுவாக தனிப்படுத்திக் காட்டுகிறது. அவர்கள் பாதிரி-பாமரமக்கள் வித்தியாச கொள்கையை ஒதுக்கித் தள்ளுகின்றனர். யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் பொருத்தமாகவே சொல்கிறது: “பாதிரி வர்க்கமும் தனிப்படுத்திக்காட்டும் பட்டப்பெயர்களும் தடைசெய்யப்படுகின்றன.”
அவர்கள் இயேசு கிறிஸ்துவைத் தங்களுடைய தலைவராகவும் கிறிஸ்தவ சபையின் தலையாகவும் பின்பற்றுகின்றனர். “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். [‘தலைவர்கள்,’ NW] என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு [தலைவராயிருக்கிறார், NW],” என்று சொன்னவர் இயேசுவே.—மத்தேயு 23:8-12.
இயேசு ஒரு போஜனப்பிரியராயும் மதுபானப்பிரியராயும் இருப்பதிலிருந்து எவ்வாறு வெகுவாக வித்தியாசப்பட்டிருந்தாரோ அதேபோல யெகோவாவின் சாட்சிகள் கருத்துவேறுபாட்டுக் குழுவினராய் இருப்பதிலிருந்து வெகுவாக வித்தியாசப்படுகின்றனர் என்பது தெட்டத்தெளிவாகிறது. ஏற்றுக்கொள்ளும் விதமாகவே, இயேசுவையும் அவருடைய சீஷர்களையும்பற்றிய பொய் அறிக்கைகளால் செல்வாக்குச் செலுத்தப்பட்ட ஒவ்வொருவரும் அவரைப் பழிதூற்றும் கண்ணியில் விழுந்துவிடவில்லை. சிலர் வெறுமனே தவறாக அறிவிக்கப்பட்டிருக்கலாம். யெகோவாவின் சாட்சிகளையும் அவர்களுடைய நம்பிக்கைகளையும்பற்றி உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், அவர்களைப்பற்றி நீங்கள் ஏன் நன்கு அறிந்துகொள்ளக்கூடாது? சத்தியத்தைத் தேடும் அனைவருக்கும் அவர்களுடைய ராஜ்ய மன்றங்களின் கதவுகள் அகல திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
திருத்தமான பைபிள் அறிவுக்கான அவர்களுடைய கருத்தூன்றிய ஆராய்ச்சியிலிருந்து நீங்களும் பயனடையலாம். “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்,” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இணங்க கடவுளை வணங்குவது எவ்வாறு என்பதைப்பற்றி நீங்களும் கற்றுக்கொள்ளலாம்.—யோவான் 4:23.