கருத்துவேறுபாட்டுக் குழுக்கள்—அவை யாவை?
பிப்ரவரி 28, 1993—சட்டங்களை செயல்படுத்தும் நூற்றுக்கு அதிகமான பிரதிநிதிகள், கட்டடங்களின் ஒரு வளாகத்தில் திடீர்ச்சோதனை நடத்தினர். அக்கட்டடங்களில் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் டஜன்கணக்கில் தங்கியிருந்தனர். அதன் நோக்கம் சட்டவிரோதமான ஆயுதங்களைத் தேடுவதும் சந்தேகிக்கப்பட்ட ஒரு குற்றவாளியைக் கைதுசெய்வதுமேயாகும். எனினும், கட்டடங்களின் உள்ளிருந்து துப்பாக்கிக் குண்டுகளின் மழை தங்கள்மேல் பொழிந்தபோது அந்தப் பிரதிநிதிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அவர்கள் எதிர்த்துச் சுட்டனர்.
இந்த நேருக்குநேர் தாக்குதல் பத்துப்பேரைக் கொன்று அநேகரைக் காயப்படுத்திற்று. அதைத் தொடர்ந்துவந்த 50 நாட்களின்போது, நூற்றுக்கணக்கான அரசாங்கப் பிரதிநிதிகள் ஒரு சிறிய போர் நடத்தப் போதுமான துப்பாக்கிகளுடன் அந்த வளாகத்தை முற்றுகையிட்டனர். இந்த முட்டுநிலை 86 பேரைக் கொன்று, பலத்தை வெளிக்காட்டுதலோடு முடிவடைந்தது. இதில் குறைந்தபட்சம் 17 பிள்ளைகளாவது உட்பட்டிருந்தனர்.
ஆனால் எதிரி யார்? போதைமருந்து வியாபாரம்செய்யும் கும்பல்களின் ஒரு படையா? ஒரு கொரில்லா பிரிவினரா? இல்லை. உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கிறபடி, அந்த “எதிரி” சமய பக்தர்களின் ஒரு கூட்டமாக, ஒரு கருத்துவேறுபாட்டுக் குழுவின் அங்கத்தினர்களாக இருந்தனர். அவர்களின் துயரம் அ.ஐ.மா.-வில் மத்திய டெக்ஸஸின் சமவெளிகளில் உள்ள மிகச் சிறிய ஒரு சமுதாயத்தை சர்வதேசிய கவனத்தின் மையமாக்கிவிட்டது. செய்தித்தொடர்பு துறை வானலைகளையும் அச்சடித்தப் பக்கத்தையும் சமயவெறிப்பிடித்த கருத்துவேறுபாட்டுக் குழுக்களின் ஆபத்தைப் பற்றிய சரமாரியான அறிக்கைகள், ஆய்வுக்கட்டுரைகள், குறிப்புகள் போன்றவற்றால் நிரப்பியது.
கருத்துவேறுபாட்டுக் குழு அங்கத்தினர்கள் தங்கள் தலைவர்களால் மரணத்திற்கு வழிநடத்தப்பட்ட முந்திய சம்பவங்களைப்பற்றி பொதுமக்கள் நினைவுபடுத்தப்பட்டனர்: கலிபோர்னியாவில் 1969-ல் நடந்த மேன்ஸன் கொலைகள்; கயானாவின் ஜோன்ஸ்டவுனில் 1978-ல் நடந்த கருத்துவேறுபாட்டுக் குழு அங்கத்தினர்களின் மொத்த தற்கொலை; 32 அங்கத்தினர்களின் மரணத்தில் விளைவடைந்த, கொரியாவின் கருத்துவேறுபாட்டுக் குழு தலைவி பாக் சுன்-ஜாவால் திட்டமிடப்பட்ட 1987-ல் செய்த கொலை-தற்கொலை ஒப்பந்தம். குறிப்பிடத்தக்க வகையில், இந்த மக்களில் பெரும்பாலானோர் தங்களைக் கிறிஸ்தவர்களாகவும், பைபிளில் விசுவாசம் வைப்பவர்களாகவும் உரிமைபாராட்டினர்.
புரிந்துகொள்ளும் விதமாகவே, இந்தக் கருத்துவேறுபாட்டுக் குழுக்களால் வேதவசனங்கள் வெட்கமின்றி தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு பைபிளை கடவுளுடைய வார்த்தை என்று மதிக்கும் அநேகர் திகைத்துப் போகின்றனர். அதன் விளைவாக, கருத்துவேறுபாட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்தி அவற்றின் அபாயகரமான பழக்கங்களை அம்பலப்படுத்தும் நோக்கோடு, பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான அமைப்புகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் ஒரு புதிய ஆயிரவருடம் வருவதானது கருத்துவேறுபாட்டுக் குழுக்கள் விரைவில் பெருகுவதைத் தூண்டிவிடும் என்பதாக கருத்துவேறுபாட்டுக் குழுக்களின் போக்குமுறையை ஆராயும் நிபுணர்கள் முன்னுரைக்கின்றனர். கருத்துவேறுபாட்டுக் குழுவுக்கெதிரான தொகுதிகளின்படி ஆயிரக்கணக்கான கருத்துவேறுபாட்டுக் குழுக்கள், “உங்களுடைய உடலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, மனதைக் கட்டுப்படுத்த, உங்களுடைய ஆத்துமாவை கெடுக்கத் தயாராக காத்துக்கொண்டிருக்கின்றன. . . . சில ஆயுதம் ஏந்தியிருக்கின்றன, ஆனால் பெரும்பாலானவை அபாயகரமானவையாகக் கருதப்படுகின்றன. அவை உங்களை ஏமாற்றி, உங்களைக் கொள்ளையடித்து, மணந்து, உங்களைப் புதைத்தும் விடும்” என்று ஒரு செய்திப் பத்திரிகை குறிப்பிட்டது.
கருத்துவேறுபாட்டுக் குழு என்றால் என்ன?
“கருத்துவேறுபாட்டுக் குழு” என்ற பதம், அதன் பண்புத் திரளை ஒருவேளை முழுவதும் அறியாதிருக்கும் அநேகரால் தாராளமாக உபயோகிக்கப்படுகிறது. குழப்பத்தைத் தவிர்க்க, சில இறையியலாளர்கள் அந்தப் பதத்தை உபயோகிப்பதை உண்மையிலேயே தவிர்க்கின்றனர்.
“பாரம்பரியமாக, கருத்துவேறுபாட்டுக் குழு என்ற பதம் எந்தவித வணக்க முறையையோ சடங்குமுறையையோ குறித்துக் காட்டிற்று,” என்று தி உவார்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா விவரிக்கிறது. அந்த அடிப்படையில், எல்லா மத அமைப்புகளுமே கருத்துவேறுபாட்டுக் குழுக்களாக வகைப்படுத்தப்படலாம். இருப்பினும், இன்றைய பொதுவான உபயோகத்தில், “கருத்துவேறுபாட்டுக் குழு” என்ற அந்தச் சொற்றொடர் வித்தியாசமான ஓர் அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. “1900-களின் மத்திபத்திலிருந்து, கருத்துவேறுபாட்டுக் குழுக்களைப் பற்றிய விளம்பரம் அந்தப் பதத்தின் அர்த்தத்தை மாற்றிவிட்டிருக்கிறது. இன்று, அந்தப் பதம் புதிய மற்றும் வைதீகத்திற்கு மாறான கோட்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் முன்னேற்றுவிக்கும் ஓர் உயிருள்ள தலைவனைப் பின்பற்றும் தொகுதிகளுக்குப் பொருத்தப்படுகிறது,” என்று அதே என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது.
கருத்துவேறுபாட்டுக் குழுக்கள் “சாதாரணமாக சிறியனவாக, தீவிரவாதக் கொள்கை தொகுதிகளாக இருக்கின்றன. அதன் அங்கத்தினர்கள் அசாதாரண சக்தியுள்ள ஒரு தனிப்பட்ட நபரிடத்திலிருந்து தங்களுடைய அடையாளத்தையும் குறிக்கோளையும் பெறுகின்றனர்” என்பதாக அந்தப் பதத்தின் பொதுவான உபயோகத்தை ஆதரிக்கும் வகையில், நியூஸ்வீக் பத்திரிகை விவரிக்கிறது. அதைப்போலவே, “[கருத்துவேறுபாட்டுக் குழு] என்ற பதம்தானே தெளிவற்றதாய் இருக்கிறது. ஆனால் அது வழக்கமாக அசாதாரண சக்தியுள்ள ஒரு தலைவனைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஒரு புது மதக் கோட்பாட்டு தொகுதியைக் குறிப்பிடுகிறது. அவன் அடிக்கடி தன்னையே கடவுளின் உருவாக உரிமைபாராட்டிக்கொள்கிறான்” என்றெல்லாம் ஏசியாவீக் பத்திரிகை குறிப்பிடுகிறது.
அ.ஐ.மா., மேரிலேண்ட் மாகாணத்தின் 100-வது பேராண்மைக் கழகத்தின் கூட்டுத் தீர்மானத்தில் உபயோகிக்கப்பட்ட மொழிநடை, கருத்துவேறுபாட்டுக் குழு என்ற பதத்தின் இழிவான பண்புத் திரளை தெரிவிக்கிறது. “கருத்துவேறுபாட்டுக் குழு என்பது ஓர் ஆளுக்கோ கருத்துக்கோ மட்டுக்குமீறிய பக்தியை வெளிக்காட்டும் ஒரு தொகுதி அல்லது இயக்கம். இது தன்னுடைய தலைவர்களின் குறிக்கோள்களை முன்னேற்றுவிக்க, நயமாக நம்பவைக்கும் மற்றும் கட்டுப்படுத்துதலின் சூழ்ச்சித்திற தந்திரங்களை நெறிகெட்ட முறைகளில் பிரயோகிக்கிறது,” என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.
தெளிவாகவே, கருத்துவேறுபாட்டுக் குழுக்கள் பொதுவாக இன்று இயல்பான சமூக நடத்தை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு மோதும் தீவிரவாத நோக்குநிலைகளையும் பழக்கங்களையும் கொண்ட மதத் தொகுதிகள் என்று புரிந்துகொள்ளப்படுகின்றன. வழக்கமாக அவை தங்களுடைய மத செயல்நடவடிக்கைகளை ரகசியமாக நடத்துகின்றன. இந்தக் கருத்துவேறுபாட்டுக் குழுத் தொகுதிகளில் பல தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு தங்கள் கூட்டத்தோடு மட்டும் வாழ்கின்றன. தன்னைத்தானே தலைவனாக பறைசாற்றிக்கொள்ளும் மனித தலைவனுக்கான அவற்றின் பக்தி நிபந்தனையற்ற மற்றும் தனிப்பட்ட பக்தியாக இருக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் இந்தத் தலைவர்கள் தாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அல்லது தாங்கள் தெய்வீகத் தன்மையைக் கொண்டிருப்பதாக பெருமையடித்துக்கொள்கின்றனர்.
அவ்வப்போது, கருத்துவேறுபாட்டுக் குழுவுக்கெதிரான அமைப்புகளும் செய்தித்தொடர்புத் துறையும் யெகோவாவின் சாட்சிகளை ஒரு கருத்துவேறுபாட்டுக் குழுவினர் என்று குறிப்பிட்டிருக்கின்றன. அநேக சமீபகாலத்திய செய்தித்தாள் கட்டுரைகள் சாட்சிகளை கேள்விக்குரிய பழக்கவழக்கங்களுக்காக அறியப்பட்ட மத தொகுதிகளில் உட்படுத்துகின்றன. ஆனால் யெகோவாவின் சாட்சிகளை ஒரு சிறிய தீவிரவாதக் கொள்கை மதத் தொகுதி என்று குறிப்பிடுவது உண்மைக்கு இசைவாக இருக்குமா? கருத்துவேறுபாட்டுக் குழு அங்கத்தினர்கள் பெரும்பாலும் நண்பர்களிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும், ஏன், பொதுவாக சமுதாயத்திலிருந்தும்கூட தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்தில் அப்படித்தான் இருக்கிறதா? சாட்சிகள் அங்கத்தினர்களை சேர்த்துக்கொள்வதற்காக ஏமாற்றும், நெறிகெட்ட தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனரா?
கருத்துவேறுபாட்டுக் குழு தலைவர்கள் தங்களுடைய சீஷர்களின் மனங்களைக் கட்டுப்படுத்த சூழ்ச்சி முறைகளை பயன்படுத்துவதற்கு அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் இதைச் செய்கிறார்கள் என்பதற்கு ஏதேனும் அத்தாட்சி இருக்கிறதா? அவர்களுடைய வணக்கம் ரகசியத்தின் போர்வையில் மறைக்கப்பட்டிருக்கிறதா? அவர்கள் ஒரு மனித தலைவனைப் பின்பற்றி வணங்கிவருகின்றனரா? குறிப்பாக, யெகோவாவின் சாட்சிகள் ஒரு கருத்துவேறுபாட்டுக் குழுவினரா?