ஆண்டவருடைய பெயரில் இரகசியத்தை மறைத்துவைத்தல்
ஜப்பானில் மார்ச் 1995-ல் டோக்கியோ சுரங்கப்பாதையில் விஷவாயு ஒன்றின் தாக்குதலால் 12 பேர் உயிரிழந்தார்கள், இன்னும் ஆயிரக்கணக்கானோர் நோயுற்றார்கள், அது ஒரு இரகசியம் வெளிப்படவும் உதவியது. ஓம் ஷின்ரெக்கியோ (உன்னதமான சத்தியம்) என்று அறியப்பட்டிருந்த ஒரு மத உட்பிரிவு, இரகசியமாக இருந்த தன் இலட்சியங்களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக மிகவும் நச்சுத்தன்மையுள்ள ஒரு வாயுவை இரகசியமாக சேர்த்து வைத்திருந்தது.
மாதம் கழித்து வெடி குண்டு ஒன்று அ.ஐ.மா., ஓக்லஹாமா நகரிலுள்ள ஒரு மத்திய அரசு கட்டடத்தைத் தகர்த்து 167 பேரைக் கொன்றது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக டெக்ஸஸில் வாக்கோவிலுள்ள பிரான்ஸ் டேவிடியன் மத உட்பிரிவு ஒன்றின் தொடர்பாக, அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் ஒதுங்கி இருந்ததற்கும் இதற்கும் ஓரளவு சம்பந்தம் இருப்பதை அத்தாட்சி சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது. அந்தச் சமயத்தில் உட்பிரிவைச் சேர்ந்த சுமார் 80 உறுப்பினர்கள் மாண்டனர். குண்டு வெடிப்பு பெரும்பாலான ஆட்கள் அறியாமல் இருந்த ஒன்றையும்கூட வெளிப்படுத்தியது: தற்போது ஐக்கிய மாகாணங்களில் வலிமையான படைவலிமையுள்ள அநேக குடிப்படைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன; குறைந்தபட்சம் அவற்றில் சில அரசாங்கத்துக்கு எதிராக இரகசியமாக நடவடிக்கையை திட்டமிட்டுக்கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றன.
பின்னால், 1995-ம் ஆண்டு முடிவடைகையில், பிரான்ஸிலுள்ள க்ரநோபிள் அருகே ஒரு காட்டுப்பகுதியில் 16 ஆட்களின் கருகிப்போன சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சோலார் டெம்ப்பிள் என்ற ஒரு சிறிய மத உட்பிரிவின் உறுப்பினராக அவர்கள் இருந்தனர். அதன் 53 உறுப்பினர்கள் அக்டோபர் 1994-ல் தற்கொலை செய்துகொண்டனர் அல்லது கொல்லப்பட்டனர், அந்தச் சமயத்தில் ஸ்விட்ஸர்லாந்திலும் கனடாவிலும் அவர்களைப் பற்றிய செய்திகள் அதிகமாக வெளியாயின. ஆனால் இந்தச் சோக சம்பவத்துக்குப்பின்னும், இந்த உட்பிரிவு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தது. இன்று வரையாக அதன் உள்நோக்கங்களும் குறிக்கோள்களும் இரகசியமாகவே இருக்கின்றன.
மத சம்பந்தமான இரகசியங்களின் ஆபத்துக்கள்
இப்படிப்பட்ட சம்பவங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது, மத தொகுதிகளை அநேக மக்கள் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது ஆச்சரியமாய் இருக்கிறதா? மத சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தன்னுடைய நம்பிக்கையை தவறாக பயன்படுத்திக்கொண்டு தான் ஒத்துக்கொள்ளாத குறிக்கோள்களை நாடும்படிச் செய்கிற ஒரு இரகசியமான அமைப்பை நிச்சயமாகவே ஒருவரும் ஆதரிக்க விரும்ப மாட்டார்கள். என்றபோதிலும், கேள்விக்குரிய தன்மையுள்ள இரகசியமான சங்கங்களில் ஈடுபாடுகொள்ளும் கண்ணியில் விழாதபடிக்கு மக்கள் என்ன செய்யலாம்?
முதலாவது, இரகசிய சங்கத்தில் உறுப்பினராவதைக் குறித்து சிந்திக்கும் எவரும் அதனுடைய உண்மையான குறிக்கோள்களைக் குறித்து நிச்சயப்படுத்திக்கொள்வது நல்லதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் பழக்கமானவர்களின் வற்புறுத்தலுக்கு எதிராக காத்துக்கொள்ள வேண்டும்; எடுக்கும் தீர்மானங்கள் உண்மைகளை ஆதாரமாக கொண்டிருக்கவேண்டும், உணர்ச்சியை ஆதாரமாக கொண்டல்ல. மற்றவர்கள் அல்ல, அந்த தனிநபர் தானே இதனால் வரக்கூடிய எந்தப் பின்விளைவுகளையும் அனுபவிக்க நேரிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதே நேர்மையான உள்நோக்கமில்லாத தொகுதிகளைத் தவிர்ப்பதற்கு நிச்சயமான வழியாகும். (ஏசாயா 30:21) அரசியலில் நடுநிலைமையைக் காத்துக்கொள்வது, மற்றவர்களுக்கு, விரோதிகளுக்கும்கூட அன்பு காட்டுவது, “மாம்சத்தின் கிரியை”களைத் தவிர்ப்பது, கடவுளுடைய ஆவியின் கனியை வளர்த்துக்கொள்வது ஆகியவற்றை இது உட்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவைப் போல, உண்மை கிறிஸ்தவர்கள் உலகத்தின் பாகமில்லாதவர்களாய் இருக்கவேண்டும்; உலகப்பிரகாரமான இரகசிய சங்கங்களில் ஈடுபடுவதை இந்தப்போக்கு தடைசெய்கிறது.—கலாத்தியர் 5:19-23; யோவான் 17:14,16; 18:36; ரோமர் 12:17-21; யாக்கோபு 4:4.
மேல் சொல்லப்பட்ட ஆபத்தான உட்பிரிவுகளுக்கு நேர் எதிர்மாறாக, யெகோவாவின் சாட்சிகள் பைபிளை ஊக்கமாக படிக்கும் மாணவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய மதத்தை மிக முக்கியமானதாக கருதி வெளிப்படையாகவே அதற்கேற்ப வாழ முயற்சிசெய்கிறார்கள். உலகம் முழுவதிலும் அவர்கள் ‘சமாதானத்தை தேடி அதை நாடும்’ ஒரு மத தொகுதியாக நன்றாக அறியப்பட்டிருக்கிறார்கள். (1 பேதுரு 3:11) யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) என்ற அவர்களுடைய புத்தகம் சரியாகவே பின்வருமாறு சொல்கிறது: “யெகோவாவின் சாட்சிகள் எந்தக் கருத்திலும் இரகசியமான ஒரு சங்கமாக இல்லை. பைபிள் ஆதாரமுள்ள அவர்களுடைய நம்பிக்கைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பிரசுரங்களில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளன. மேலுமாக, கூட்டங்களுக்கு வந்து அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை அவர்களாகவே பார்ப்பதற்காகவும் கேட்பதற்காகவும் பொதுமக்களை அழைப்பதற்கு அவர்கள் விசேஷ முயற்சி எடுக்கிறார்கள்.”
உண்மையான மதம் எந்த வகையிலும் இரகசியத்தை மறைத்துவைக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. உண்மையான கடவுளின் வணக்கத்தார் தங்கள் அடையாளங்களை மறைக்கவோ யெகோவாவின் சாட்சிகளாக அவர்கள் இருப்பதற்குரிய நோக்கத்தை மறைக்கவோ கூடாது என்பதாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இயேசுவின் ஆரம்ப கால சீஷர்கள் எருசலேமை தங்கள் போதகத்தால் நிரப்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கைகள் மற்றும் நடவடிக்கையைக் குறித்து ஒளிவுமறைவற்றவர்களாக இருந்தார்கள். இதுவே இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்திலும் உண்மையாக இருக்கிறது. புரிந்துகொள்ளக்கூடிய விதமாகவே, சர்வாதிகார ஆட்சிமுறைகள் வணக்க சுயாதீனத்தை தவறாக கட்டுப்படுத்தும்போது, கிறிஸ்தவர்கள் “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்கு” கீழ்ப்படிந்து தங்கள் வேலையை கவனத்தோடும் தைரியத்தோடும் தொடர்ந்து செய்ய வேண்டும்; இது, பொதுமக்களுக்கு தைரியமாக சாட்சி கொடுப்பதன் காரணமாக அவர்கள்மீது சுமத்தப்படும் ஒரு நிலையாகும்.—அப்போஸ்தலர் 5:27-29; 8:1; 12:1-14; மத்தேயு 10:16, 26, 27.
யெகோவாவின் சாட்சிகள் இரகசியமான ஒரு உட்பிரிவு அல்லது கருத்து வேறுபாட்டு குழு என்பதாக நீங்கள் எப்போதாவது நினைத்திருந்தால், அதற்கு காரணம் அவர்களைப்பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ளாமலிருப்பதாலே ஆகும். முதல் நூற்றாண்டிலிருந்த அநேகருக்கு இந்தச் சூழ்நிலைமை இருந்திருக்க வேண்டும்.
“யூதரில் பிரதானமானவர்களை” அப்போஸ்தலன் பவுல் ரோமில் சந்தித்ததைப் பற்றி அப்போஸ்தலர் 28-ம் அதிகாரம் சொல்கிறது. அவர்கள் அவரிடம் இவ்வாறு சொன்னார்கள்: “எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம்.” (அப்போஸ்தலர் 28:16-22) பதிலுரைக்கும் வண்ணமாக, பவுல், “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.” “சிலர் விசுவாசித்தார்கள்.” (அப்போஸ்தலர் 28:23, 24) உண்மை கிறிஸ்தவத்தைப் பற்றிய நிஜமான காரியங்களைத் தெரிந்துகொள்வது நிச்சயமாகவே அவர்களுடைய நிரந்தர நன்மைக்கேதுவானதாகவே இருந்தது.
வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சேவைசெய்வதற்காக கடவுளுக்கு யெகோவாவின் சாட்சிகள் ஒப்புக்கொடுத்திருப்பதால், உண்மைகளை அறிவதில் அக்கறையுள்ள எவருக்கும் தங்களுடைய வேலையையும் நம்பிக்கைகளையும் பற்றிய தெளிவான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் சந்தோஷமுள்ளவர்களாக இருப்பார்கள். நீங்களே ஆராய்ந்துபார்த்து, இதன் மூலம் அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்து சரியாக அறிவிக்கப்பட்டவர்களாய் ஏன் இருக்கக்கூடாது?
[பக்கம் 6-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் யார் என்பதையும் தாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்த மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள்