உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 9/22 பக். 9-10
  • மதத்தின் போர்வையில் மோசடி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதத்தின் போர்வையில் மோசடி
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மதசம்பந்தமான மோசடியின் பல்வேறு அம்சங்கள்
  • வயதானோரை குறிவைத்து
    விழித்தெழு!—1997
  • மோசடிக்கு ஆளாகாமல் இருப்பது எப்படி
    விழித்தெழு!—2004
  • ஜாக்கிரதை! மோசடிக்காரர்கள் தீவிரம்
    விழித்தெழு!—1997
  • கருத்துவேறுபாட்டுக் குழுக்கள்—அவை யாவை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 9/22 பக். 9-10

மதத்தின் போர்வையில் மோசடி

இதுவரையிலுமாக குறிப்பிடப்பட்ட மோசடிகளால் அதிர்ச்சியும் வருத்தமுமடைந்தீர்களானால், நீங்கள் ஒருவர் மட்டுமே அவ்விதமாக உணருபவர் அல்ல. ஆனால் இதைவிட அதிகம் கண்டனம் செய்யப்படவேண்டிய வகையான மோசடிகளும் உள்ளன—மதத்தின் பெயரில் மோசடி. இதில் மிகவும் பரவலாக இருக்கும் ஒன்று மரணத்திற்கு பின்பு ஆத்துமா தொடர்ந்து வாழ்கிறது, உயிரோடிருப்பவர்கள் மரித்தவர்களுக்கு நன்மைசெய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்புடையதாக உள்ளது. உலகமுழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான நேர்மையுள்ள மக்கள் பெருந்தொகையான பணத்தைச் செலுத்துவதன் மூலமாக, தங்களுடைய மரித்த அன்பானவர்களுக்கு உதவிசெய்யவோ அவர்களை சாந்தப்படுத்தவோ முடியும் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சில நாடுகளில், தொன்றுதொட்டு இருந்து வரும் இந்த மோசடியில் இப்போது ஒரு புதுயுக்தி கையாளப்படுகிறது. உதாரணமாக, ஜப்பானில் சமீபத்தில், ஆன்மீக வல்லமை இருப்பதாக உரிமைபாராட்டிய புத்த துறவிகளும் பெண்துறவிகளும் கோயில்பக்தர்களிடமிருந்து கோடிக்கணக்கான யென் மோசடி செய்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள் சுகப்படுத்துவதாகவும் மக்களின் நலனுக்காக ஆலோசனைக் கூறுவதாகவும் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். நம்பி வந்தவர்களில், மரித்துப்போன தங்களுடைய பிள்ளைகளின் ஆவிகள் தொல்லைபடுத்துவதாக சொல்லப்பட்ட நான்கு குடும்பத்தலைவிகளும் அடங்குவர். “பின்பு அந்தப் பெண்கள் இறந்தவர்களுக்கான சடங்குகளுக்காக மொத்தமாக ஒரு கோடி யென் [80,000 ஐ.மா. டாலர்] செலுத்தும்படி கேட்கப்பட்டனர்” என்று மைனிச்சி டெய்லி நியூஸ் அறிக்கை செய்தது. 64 வயதான பெண்மணி ஒருவர் 66.5 லட்சம் யென்னுக்கும் (சுமார் 53,000 டாலர்) மேலாக கொடுத்திருந்தார். தன்னுடைய பிள்ளையின் உடல்நிலையைக் குறித்து துறவிகளிடம் அந்தப் பெண்மணி ஆலோசனைக் கேட்டிருக்கிறார். “தன்னுடைய முன்னோர்களின் ஆத்துமாக்களை நினைவுகூருவதற்கும் பேய்களை துரத்திவிடுவதற்கும் ஒரு விசேஷித்த சடங்கை நடத்தாவிட்டால், அவள் துரதிர்ஷ்டத்தால் துன்பப்படுவாள் என்பதாக அந்தப் பெண்ணிடம் அவர்கள் அடித்துக் கூறினார்கள்” என்று த டெய்லி யோமியூரி குறிப்பிட்டது.

பைபிளிலுள்ள திருத்தமான அறிவு, எதையும் சந்தேகிக்காத இந்த மக்கள் மோசடி செய்யப்படுவதிலிருந்து அவர்களைத் தடுத்திருக்கும். ஆத்துமா அழியாமை உடையதல்ல என்று அது தெளிவாக்குகிறது. (எசேக்கியேல் 18:4) மரித்தவர்கள், “ஒன்றும் அறியார்கள்” என்று பிரசங்கி 9:5 சொல்லுகிறது. எனவே, மரித்தவர்கள் உயிரோடிருப்பவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யமுடியாது. அதைப்போலவே உயிரோடிருப்பவர்களும் மரித்தவர்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.

மதசம்பந்தமான மோசடியின் பல்வேறு அம்சங்கள்

மதசம்பந்தமான ஊழல் பேர்வழிகளுக்கு சிலர் இரையாகிவிடுவதற்கு அவர்களுடைய பேராசையே காரணமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில், பணத்தை ஆசீர்வதித்து அதை பெருகச் செய்வதற்கான ஆற்றலைக்கொண்ட மீமானிட சக்தி இருப்பதாக உரிமைபாராட்டிய ஒரு தம்பதியினரிடம் தன்னிடமிருக்கும் பணம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு மனிதன் 1,00,000 டாலரைக் கொடுத்தான். அந்தப் பணத்தை ஒரு பெட்டியில் போட்டு, “புனிதமாக்கப்படுவதற்காக” அவர்களிடம் கொடுத்துவிடும்படி அவனுக்கு சொல்லப்பட்டது. அவன் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பெட்டியை ஆசீர்வதிப்பதற்காக அத்தம்பதியினர் அதை அடுத்த அறைக்குள் எடுத்துச் சென்றனர். அவர்கள் திரும்பி வந்தபோது, 2000-ம் ஆண்டு வரையிலுமாக எந்தச் சூழ்நிலைமையிலும் அந்தப் பெட்டியை அவன் திறக்கக்கூடாதென்கிற எச்சரிக்கையுடன் அவனிடம் அதை திரும்பக் கொடுத்தனர். அதையும் மீறி அவன் செய்தால்? அவனிடம் “அந்த மாயமந்திரம் அழிந்துவிடும், நீ குருடனாகிவிடுவாய், உன்னுடைய முடி உதிர்ந்துவிடும், உனக்கு புற்றுநோய் வரும், மேலும் ஸ்ட்ரோக் வந்து செத்துவிடுவாய்” என்றெல்லாம் சொல்லப்பட்டது. இருந்தபோதிலும், இரண்டு வாரங்கள் கழித்து, அந்த மனிதனுக்கு சந்தேகமேற்பட்டதால், அந்தப் பெட்டியைத் திறந்துவிட்டான். ஐயோ! அது கிழிந்த துண்டுப் பேப்பர்களால் நிறைந்திருந்தது. அவன் தன்னைத்தானே குற்றம்சாட்டிக்கொள்கிறான்; இந்தச் சம்பவத்தை அறிவித்த செய்தித்தாள் சொன்னபடி, எதேச்சையாக, “அவனுக்கு வழுக்கை விழ ஆரம்பித்திருக்கிறது.”

இத்தாலியில் மதசம்பந்தமான மோசடி ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது: பக்தியுள்ள கத்தோலிக்கராக தங்களைக் காட்டிக்கொண்ட ஊழல் பேர்வழிகளால் சில குருமார்கள் மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள். இறந்துவிட்டவரின் ஆன்மா சாந்தியடைவதற்காக ஏறெடுக்கப்படும் பூசைகளுக்கு பணம் வசூலிக்கும் கத்தோலிக்க பாரம்பரியத்தை இந்த ஊழல்பேர்வழிகள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் இதை எவ்வாறு செய்கின்றனர்? கத்தோலிக்க பத்திரிகையான ஃபாமில்யா க்ரிஸ்டியானா விளக்குகிறபடி, இறந்தோருக்காக செய்யப்படும் ஒரு டஜன் பூசைகளுக்குரிய முன்பணமாக, சாதாரணமாக கேட்கப்படுவதைவிட பெருமடங்கு தொகை குறிப்பிடப்பட்ட ஒரு போலி காசோலையை இந்தச் சூழ்ச்சியாளர்கள் கொடுப்பதற்கு முன்வருகின்றனர். மிச்சப்பணத்தை ஏமாளியான பாதிரியிடமிருந்து ரொக்கமாக பெற்றுக்கொள்வதன் மூலம் அவரை ஏமாற்றுகின்றனர். இவ்விதமாக, ஊழல்பேர்வழிகள் ரொக்க பணத்தைப் பெறுகின்றனர், ஆனால் பாதிரி செல்லாத காசோலையைப் பெறுகிறார்!

ஐக்கிய மாகாணங்களில், புதிய அங்கத்தினர்களைக்கொண்டு தங்களுடைய உண்டியல்களை நன்கொடைகளால் நிரப்புவதற்காக எதிர்நோக்கியிருக்கும் மதப்பிரிவுகளால் வயதானவர்கள் எல்லா பக்கத்திலிருந்தும் விடாமல் துளைத்தெடுக்கப்படுகின்றனர். மாடர்ன் மெச்சூரிட்டி பத்திரிகை இவ்வாறு எழுதியது: “தேசியளவில், பொய் வாக்குறுதிகளால் மோசடி செய்யும்படியான முக்கியமான இக்கட்டளைக்கு மதப்பிரிவுகள் கீழ்ப்படிகின்றன: பணம் வைத்திருப்பவர்களைப் பின்தொடருங்கள்; அதற்கு கைம்மாறாக, அவர்கள் உடல்நலத்திலிருந்து அரசியல் மாற்றம் வரையாகவும் பரலோக ராஜ்யம் வரையாகவும் எல்லாவற்றையும் குறித்து வாக்களிக்கிறார்கள்.” மதப்பிரிவுகளின் சிந்தனையில் ஊறிப்போனவர்களை மாற்றும் ஒருவர் இவ்விதம் சொன்னதாக மேற்கோள் காட்டப்பட்டது: “இந்தப் பிரிவுகள் வயதானவர்களை வைத்துதான் பிழைப்பு நடத்துகின்றன.”

இதில் உட்பட்டிருக்கும் பணம் மிகப்பெரிய தொகையாக இருக்கலாம். அநேக பிரிவுகளின் வழக்குகளைக் கையாண்டிருக்கும் ஒரு நியூ யார்க் வழக்கறிஞர் இவ்வாறு சொன்னார்: “எனக்கு தெரிந்த அநேக வழக்குகளின்படி மக்கள் தங்களைத் தாங்களே ஏழைகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆறு இலக்கத்தில் நன்கொடை செலுத்தும்படியாக வற்புறுத்திக் கேட்கப்பட்டவர்களிலிருந்து தங்களுடைய சமுதாய பாதுகாப்பு காசோலைகளைத் தவிர தருவதற்கு வேறு எதுவுமே இல்லாதவர்கள் வரையாக எல்லா வகுப்பினரையும் உட்படுத்துகிறது.” அவர் தொடர்ந்து சொன்னார்: “இது தனிப்பட்டவர்களாக அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் சீரழிவை ஏற்படுத்துகிறது.”

எனவே ஜாக்கிரதை! மோசடிக்காரர்கள் தீவிரமாய் செயல்படுகிறார்கள். வீட்டைப் பழுதுபார்ப்பதில் மோசடி, டெலிமார்க்கெட்டிங் ஏமாற்றுவேலை, மதசம்பந்தமான ஊழல் ஆகிய இவையெல்லாம் அவர்கள் எவ்விதம் வேலை செய்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்களே. அவர்கள் எப்போதும் புது யுக்திகளுடன் செயல்படுவதனால், அவர்களுடைய தந்திர முறைகள் எல்லாவற்றையுமே குறிப்பிடுவது சாத்தியமற்றதாக உள்ளது. ஆனால் இங்கு அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் ஜாக்கிரதையாக செயல்படுவதற்கு உங்களை விழிப்புடனிருக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை; மேலும் அவ்வாறு செயல்படுவதே உங்களுக்கு சிறந்த தற்காப்பளிக்கும். (பக்கம் 8-ல் உள்ள “மோசடி செய்யப்படுவதை தவிர்ப்பது எப்படி” என்ற பெட்டியைக் காண்க.) பூர்வீக பைபிள் நீதிமொழியின் எச்சரிக்கை மிகப் பொருத்தமானதாக உள்ளது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.

[பக்கம் 10-ன் படங்கள்]

பணத்தைக் கொடுப்பதன் மூலம் தங்களுடைய மரித்த அன்பானவர்களுக்கு உதவவோ அல்லது அவர்களை சாந்தப்படுத்தவோ முடியும் என்று கோடிக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்