ஜாக்கிரதை! மோசடிக்காரர்கள் தீவிரம்
இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். புயல் அடித்து ஓய்ந்து விட்டிருக்கிறது. அழித்து நாசப்படுத்திக்கொண்டிருந்த சூறாவளி அதன் தீவிரத் தாக்குதலை முடித்துவிட்டிருக்கிறது; பாய்ந்துவரும் வெள்ளப்பெருக்கின் பயமுறுத்தலும் இனி இல்லை. தப்பிப்பிழைத்தவர்கள், மிரண்டு போனவர்களாய் தங்களுடைய புகலிடங்களை விட்டு வெளியே வருகின்றனர்; அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தோர் புயலால் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிடுவதற்காக கலக்கத்துடனும் பயத்துடனும் வெகு தூரத்திலிருந்து வருகின்றனர். வீடுகளின் கூரைகள் பிய்த்துக்கொண்டுப் போய்விட்டிருக்கின்றன. கூரையில்லாத வீடுகள் மழைநீரில் மூழ்கியிருக்க, அவற்றின்மீது மரங்கள் வேரோடு சாய்ந்து கிளைபரப்பிக்கொண்டு விழுந்துகிடக்கின்றன. மின் கம்பிகள் அறுந்துகிடப்பதால், அவசர அழைப்புகளையும் செய்திகளையும் அனுப்புவதற்கும்கூட வழியில்லை. முன்னர் மகிழ்ச்சியான குடும்பங்களின் புகலிடங்களாக இருந்த சில வீடுகள் இப்போது சரிசெய்ய முடியாதளவிற்கு பாழாகிவிட்டிருக்கின்றன. ஒரு சமயம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருந்த சமுதாயம் இப்போது சீரழிந்தும் நம்பிக்கை இழந்தும் காட்சியளிக்கிறது.
அச்சமுதாயம் இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க முன்வருகிறது—சீரமைக்கவேண்டும் என்ற முழுமூச்சுடன். அயலகத்தார் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்கின்றனர்; அவர்களில் சிலர் அக்கம்பக்கத்திலிருந்தவர்களின் பெயரையும்கூட இதுவரையில் அறியாமல் இருந்திருக்கின்றனர். ஆண்கள் தங்களுடைய கருவிகளையும், தொழில்திறமைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். வேலை செய்பவர்களுக்காக பெண்கள் சமைக்கையில், மூத்தபிள்ளைகள் சிறுபிள்ளைகளைக் கவனித்துக் கொள்கின்றனர். அச்சமுதாயத்தைத் தாண்டி வேறு இடங்களில் இருந்து—கூரை வேய்பவர்கள், விழுந்துகிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துபவர்கள், தச்சர்கள், பெயின்ட் அடிப்பவர்கள் ஆகியோர்—உதவும்நோக்கோடு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இருந்தபோதிலும், இவர்களோடுகூட, தப்பிப்பிழைத்தவர்களை சுரண்டுவதற்கு ஆயத்தமாக மோசடிக்காரர்களும் வருகின்றனர்.
பழுதுபார்ப்பதற்கு முன்பணமாக முதல் தவணையிலேயே பெரும்தொகை கேட்கப்படுகிறது. நம்பிக்கை இழந்த நிலையிலிருக்கும் வீட்டுச் சொந்தக்காரர்கள் வேறுவழியின்றி தங்களுடைய பணத்தை கொடுக்கின்றனர். ஆனால், வேலையாட்கள் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்கள் என்று பின்புதான் அவர்களுக்கு தெரிய வருகிறது. தங்களுடைய வேலைக்கு முழு “உத்தரவாதமளிக்கும்” கூரை வேய்பவர்கள், ஓட்டைவிழுந்த கூரைகளை மேலோட்டமாக பழுதுபார்க்கின்றனர். இவை அடுத்து வரும் மழைக்கே தொரதொரவென்று ஒழுகுகின்றன. மரங்களை அப்புறப்படுத்துபவர்கள், அடுத்தநாள் வேலைக்காக மிகப்பெரிய கருவிகளை வாடகைக்கு எடுப்பதாக பாவனை செய்து, மக்களிடமிருந்து முன்பணமாக வாங்கிய ஆயிரக்கணக்கான டாலரை மோசடி செய்கின்றனர். அந்த அடுத்தநாளோ வருவதேயில்லை.
அழிவும் இழப்பும் ஏற்படுத்தியிருக்கும் வேதனையோடுகூட, பெருந்தொகையை பிரிமியமாக வசூலித்திருக்கும் நொடிந்த அல்லது போலி இன்சூரன்ஸ் கம்பெனிகள், ஏற்பட்டுள்ள சேதத்திற்கான நஷ்டஈட்டுத்தொகையைச் செலுத்த மறுப்பதால், அல்லது அதன் நடத்துனர்கள், அலுவலகத்தை அம்போ என விட்டுவிட்டு தலைமறைவாகிவிடுவதால் வீட்டுச் சொந்தக்காரர்கள் மனமுடைந்து போகின்றனர். இழப்பை சரிசெய்வதற்காக, இன்சூரன்ஸ் செக்கைப் பெறும் பாக்கியம் பெற்றவர்களும், ஒருசில திறமையான ஆட்களால் எல்லா வேலையையும் செய்ய முடியாதிருக்கையில், மனசாட்சியும் திறமையுமில்லாத கான்ட்ராக்டர்களே அதிகமாக கிடைப்பதை அறிய வருகின்றனர். இதன் விளைவாக, ஏற்கெனவே நொந்து போயிருக்கும் வீட்டுக்காரர்களின் வேதனையை அதிகப்படுத்தும் விதமாக, மோசமான வேலையே செய்யப்படுகிறது.
பேரழிவில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும்மீண்டுமாக சுரண்டப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் பொதுவாக அனைவருடைய நலனையும் கருத்தில்கொண்டு ஒற்றுமையாக வேலைசெய்யத் தொடங்கியது, முடிவில் சிலருக்கு கடுந்துயரளிக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
சூறாவளிக்குப் பிறகு, ஒரு சமுதாயத்தில் கேண்டி பார் சாக்லேட்களின் விலை 4 டாலர் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்தது; மேலும் குழந்தைகளுக்கான பால்பவுடர் டின்னுக்காக தாய்மார்கள் 6 டாலர் கொடுக்கவேண்டியிருந்தது. ஒரு கடையில், டிவி அல்லது ரேடியோ வாங்காமல் பேட்டரிகள் கிடைக்கவில்லை. கட்டடப்பொருள் விற்பனையாளர்கள் சரக்குகளை அநியாய விலையில் விற்பதன்மூலம் தங்களுடைய கல்லாப்பெட்டிகளை விளிம்புவரையாக நிரப்பினார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில், நடமாடும் வீட்டை வைத்திருந்தவர்கள், வெள்ளப்பெருக்கின்போது தங்களுடைய வீடுகளை மேடான பகுதிகளுக்கு இழுத்துச்செல்லுவதற்கான கூலி 600-சதவீதம் அதிகரித்திருந்ததை கண்டார்கள். 84 வயதான ஒரு அம்மாவுடைய வீடு பூமியதிர்ச்சியினால் சேதமடைந்தபோது அரசு ஊழியனைப்போல் நடித்த ஒருவன் அவரை சந்தித்தான். தான் பின்னர் கையெழுத்திட்ட ஆவணங்கள் அரசாங்க உதவிக்காகவும் உணவுக் கூப்பன்களுக்குமான விண்ணப்பங்கள் என்று அந்த அம்மா நினைத்தார். உண்மையில், அவை பழுதுபார்க்கும் வேலைக்காக அவருடைய வீட்டை 18,000 டாலருக்கு அடமானம் வைத்ததற்கான ஆவணங்கள். ஆனால் பழுதுபார்ப்பதற்கு வெறுமனே 5,000 டாலர் மட்டும்தான் தேவைப்பட்டது.
டெலிமார்க்கெட்டிங் ஏமாற்றுவேலை
‘மிஸஸ். எஸ்——. வாழ்த்துக்கள்!, இன்று உங்களுக்கு ராசியான நாள்.’ இவை ஆச்சரியமூட்டும் ஒரு தொலைபேசி அழைப்பின் ஆரம்ப வார்த்தைகளாக இருக்கலாம். ‘நீங்கதான் எங்களுடைய பெருமைக்குரிய அதிர்ஷ்டசாலி. . .’ “வெற்றிபெற்றுவிட்டீர்கள்” என்றும் பரிசுகள் “நிச்சயம்” என்றும் சொல்லப்படும் அழைப்புகள் அநேகருக்கு வந்திருக்கின்றன. வெற்றிக்குரிய “பரிசு,” ஒரு புதிய காராக, வீட்டுப் பொழுதுபோக்கு சாதனங்கள் அடங்கிய பெட்டியாக, அல்லது ஒருவேளை ஒரு வைர மோதிரமாக இருக்கலாம்.
ஒரு இலவச பரிசை நீங்கள் பெறுவீர்கள் என்பதாக அறிவிக்கும் இதுபோன்ற ஒரு அழைப்பு உங்களுக்கு எப்போதாவது வந்திருக்கிறதா? உங்களுடைய மனம் மகிழ்ச்சியால் துள்ளியதா? நம்புவதற்கு கடினமானதாக தோன்றியதா? இத்தகைய அழைப்புக்கு நீங்கள் பதிலளித்திருந்தால், உங்களுடைய பரிசை என்றாவது பெற்றுக்கொண்டீர்களா? அல்லது டெலிமார்க்கெட்டிங் மோசடியில் நீங்கள் ஏமாளியாகிவிட்டீர்களா? அப்படியென்றால், ஏமாளியானது நீங்கள் மட்டுமல்ல. கன்ஸ்யூமர்ஸ் ரிசர்ச் என்ற பத்திரிகையின் பிரகாரம், ஐக்கிய மாகாணங்களில் மட்டும், டெலிமார்க்கெட்டிங் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒவ்வொரு நிமிடமும் பத்து ஆட்களை ஏமாற்றுகிறார்கள். மனசாட்சியற்ற ஏமாற்றுப்பேர்வழிகள், வாடிக்கையாளர்களிடம் 1,000 கோடி டாலரிலிருந்து 4,000 கோடி டாலர் வரையாக ஒவ்வொரு ஆண்டும் மோசடி செய்கிறார்கள்; அதாவது ஒவ்வொரு நிமிடத்துக்கும் சுமார் 7,500 டாலராகும்.
ரீடர்ஸ் டைஜஸ்ட் இவ்வாறு குறிப்பிட்டது: “ ‘வெற்றிபெற்றிருப்பதாக’ அல்லது ஒரு மகத்தான பரிசுக்காக ‘தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக’ கூறும் டெலிமார்க்கெட்டிங் ஏமாற்றுப்பேர்வழிகளின் அழைப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கனடா முழுவதுமாக, 1,50,000-க்கும் மேலான ஆட்கள் பதிலளிக்கிறார்கள். தங்களுடைய பரிசைப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் சராசரியாக 2,000 டாலர் செலவழிப்பதன்மூலம் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கனடா நாட்டவர்கள் இத்தகைய அழைப்புகளால் ஏமாற்றப்படுகிறார்கள்.” ஒன்டாரியோவின் மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அறிவித்தார்: “கனடா நாட்டவர்களின் சரித்திரத்திலே மிகப்பெரிய ஏமாற்றுவேலையில் இந்த டெலிபோன் மோசடியும் ஒன்று.” அவர் தொடர்ந்து சொன்னார்: “இதனால் கனடா நாட்டவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான டாலர் இழப்பு ஏற்படுவது தெரிந்ததே.” காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டதை வைத்தே இந்தத் தொகை முக்கியமாக குறிப்பிடப்படுகிறது. இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதவீதமானோர் மட்டுமே தங்களுடைய இழப்பை புகார்செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளதால், இந்தப் பிரச்சினையின் முழு அளவையும் துல்லியமாக கணிப்பது முடியாத காரியம்.
மோசடி செய்வதில் கைதேர்ந்த ஒருவர் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “மக்கள்கிட்ட நீங்க வெற்றிபெற்றிருக்கீங்கன்னு நாங்க சொல்றோம். அப்போ அவங்க தெளிவா சிந்திக்கிறதையே நிறுத்திடறாங்க.” அவர் தொடர்ந்து சொன்னார்: “அப்புறம் பணத்தை அனுப்பச் சொல்லி நாங்க அவங்கள கட்டாயப்படுத்துவோம், முடியாதுன்னு சொன்னாலும் நாங்க விடாப்பிடியா இருப்போம்.” ஒருவர் ஒருசமயம் ஏமாற்றுப்பேர்வழிகளிடம் ஏமாந்துவிட்டாரென்றால், அவருடைய அல்லது அவளுடைய பெயர் மற்ற டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விற்கப்படுவதோடு “ஏமாளி” என்ற பட்டியலிலும் வைக்கப்படலாம். அவ்வாறு மற்றவர்களுக்கு அவர்களுடைய பெயர்கள் விற்கப்படுகையில், அவர்களும் இவர்களைத் திரும்பத்திரும்ப அழைப்பார்கள். டோரன்டோ டெலிமார்க்கெட்டிங்கின் முன்னாள் ஆப்பரேட்டர் சொன்னார்: “ஏமாளிங்க பட்டியலை வெச்சு நாங்க வேலைசெய்யும்போது, அவங்கள்ல கிட்டத்தட்ட 75 சதவீதமான ஆட்களை முதல் அழைப்பிலேயே வாங்க வெச்சுடுவோம். அந்தப் பட்டியல்ல இருக்கிறவங்கள மூனாவது தடவையா நாங்க அழைக்கும்போது, அது கிட்டத்தட்ட 50 சதவீதமாக குறைஞ்சுடும். ஆனா சில ஆட்கள் ஒருதடவை இதுல ஈடுபட்டுட்டா அப்புறம் அத விடமுடியாம ஆயிடறாங்க; அவங்களோட பணத்தப்பத்தி மனக்கோட்டை கட்டவும் தொடங்கிடறாங்க.”
ஏமாற்றப்பட்டவர்கள், ஒரு அருமையான பரிசை வெல்லுவதைப் பற்றிய தங்களுடைய கனவை நனவாக்க டெலிமார்க்கெட்டிங் மோசடிக்காரர்களுக்கு பணம் அனுப்புவதில் எந்த அளவுக்கு செல்கிறார்கள்? “ஓய்வுபெற்ற சில வயதானவர்கள் தங்களுடைய பணம் முழுவதையும் இழந்துவிடாதபடிக்கு, அவர்களுடைய சொத்துக்களை முடக்குமாறு நாங்கள் வங்கிகளுடன் செயல்படவேண்டியிருந்திருக்கிறது” என்று துப்பறியும் காவலர் ஒருவர் சொன்னார். சமீபத்தில் ஒரு விதவை, 16 வித்தியாசப்பட்ட டெலிமார்க்கெட்டிங் வியாபாரிகளுக்கு 36 தடவை பணத்தை அனுப்பியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது; மொத்த தொகை 85,000 டாலருக்கும் மேலாக சென்றது. அதற்கு பதிலாக, “பிரயோஜனமில்லாத சாமான்களை பாதி அறை நிரம்புமளவிற்கு” பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அறிவாளிகளுக்கு தந்திரமான மோசடிகள்
என்றபோதிலும், இத்தகைய மோசடியைப் பழக்கமாகச் செய்பவர்களுக்கு பாகுபாடெல்லாம் கிடையாது. அவர்களுக்கு பலியாவோர் சமுதாயத்தின் அனைத்து பொருளாதார நிலையையும் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். மெத்தப்படித்த மேதாவிகள் எனப்படுவோரும்கூட அவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஏமாற்றுவேலைகளின் அமைப்பு அவ்வளவு சூழ்ச்சிநிறைந்ததாக இருப்பதால், மிக விழிப்புள்ள வாடிக்கையாளர்களும்கூட ஏமாற்றப்படக்கூடும். அறிவாளிகளான வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பெரும் தொகையை உட்படுத்தும் மோசடிகள் தொலைக்காட்சியிலோ அல்லது தபாலில் அனுப்பப்படும் கலர் புரோஷர்களிலோ விளம்பரம் செய்யப்படக்கூடும். அவற்றில் அதிக லாபம் ஈட்டிக்கொடுப்பதாக உறுதியளிக்கும் முதலீடுகள்—திரைப்பட ஸ்டுடியோக்கள், தங்கம் மற்றும் தங்கச்சுரங்கங்கள், எண்ணெய் கிணறுகள் ஆகியவற்றில் செய்யும் முதலீடுகள்—உள்ளடங்குகின்றன. இதைக் குறித்த பட்டியலுக்கு முடிவேயில்லை. எவ்வாறாயினும், விளைவு ஒன்றே—ஒட்டுமொத்தமான நஷ்டம்.
இவர்களால் வஞ்சிக்கப்பட்ட படித்த பெண் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “நம்பமுடியாதளவுக்கு அவங்களோட ஏமாற்றுவேலை இருக்கு. ஒரு பள்ளி ஆசிரியையாக, நான் புத்திசாலியாக என்னை நினைச்சிட்டிருந்தேன். . . . வாக்குறுதிக்குமேல் வாக்குறுதியா அடுக்கிட்டே போனாங்க.” அப்பெண் ஒரு திரைப்பட கம்பெனி மோசடியில் 20,000 டாலரை இழந்தார்.
டெலிமார்க்கெட்டிங் மோசடி ஒரு உலகளாவிய பிரச்சினை. “இந்தப் பத்து ஆண்டுகளில் அது இன்னும் மோசமாக ஆகும்” என்று ஆராய்ச்சியாளர்கள் முன்னறிவிக்கின்றனர். ஆனால், ஜாக்கிரதை! மற்ற வகையான மோசடிகளும் உள்ளன; மேலும், கைதேர்ந்த சில மோசடிக்காரர்கள் விரும்பி குறிவைப்பது வயதான ஆட்களையே.
[பக்கம் 4-ன் படங்கள்]
புயலுக்குப் பிறகு வரும் மோசடிக்காரர்களைக் குறித்து ஜாக்கிரதை!
[பக்கம் 5-ன் படங்கள்]
“நீங்கள் ஒரு இலவச பரிசை வென்றுவிட்டீர்கள்!”—உண்மையிலேயா?