வயதானோரை குறிவைத்து
ஏமாந்து விடாதீர்கள். மோசடிப்பேர்வழிகள் எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். மோசடி செய்வதற்கு விசேஷமாக வயதானவர்களை விரும்பத்தக்க குறியிலக்காக ஆக்குபவை எவை என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களின் ஜனத்தொகையில் சுமார் 12 சதவீதமானோர் மட்டுமே 65 வயதுக்கு மேற்பட்டோராக இருக்கின்றனர். இருந்தபோதிலும், அவர்களுடைய தனிப்பட்ட வருவாய் ஒட்டுமொத்தமாக 80,000 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இது ஐ.மா.-வில் உள்ள குடும்பங்களின் நிகர சொத்துக்களில் கிட்டத்தட்ட 70 சதவீதமாக இருக்கிறது. மோசடிக்கு பலியான மொத்த எண்ணிக்கையில் சுமார் 30 சதவீதத்தினர் இத்தகைய வயதானவர்கள்தான் என்பது ஆச்சரியத்துக்குரியதல்ல.
எது வயதானவர்களை எளிதில் ஏமாளிகளாக்குகிறது? “அவர்கள் எளிதில் எவரையும் நம்பிவிடும் மனச்சாய்வுள்ளவர்களாகவும், தற்போதைய முதலீட்டு முறைகளைக் குறித்து அறியாதவர்களாகவும் இருக்கக்கூடும்” என்று கன்ஸ்யூமர்ஸ் ரிசர்ச் பத்திரிகை விளக்குகிறது. டெலிமார்க்கெட்டிங் ஏமாற்றுப்பேர்வழிகள், “தனியாகவும், எளிதில் ஏமாறுகிறவர்களாகவும் உள்ள வயதானவர்களைத்தான் முக்கியமாக ஏமாற்றுகின்றனர். அவர்களுக்கு பலியாகுபவர்களில் பெரும்பான்மையர் இப்படிப்பட்டவர்களே. வயதான இத்தகையவர்கள் ஒரு மனிதனின் கைகுலுக்கல் அவன் வார்த்தைக்கு சமம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த காலக்கட்டத்தில் வளர்ந்தவர்கள்” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் புலம்புகிறார். ஓய்வுபெற்றவர்களுக்கான அமெரிக்க சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு சொன்னதாக மேற்கோள் காட்டப்பட்டது: “பேராசை உங்களைத் தொந்தரவுக்குள் வழிநடத்தும் என்று அநேக தடவை சொல்லப்படுகிறது. ஆனால் வயதான ஆட்களைப் பொருத்தவரையில், அது பேராசை அல்ல. தங்களுடைய மரணத்துக்கு முன்பே எல்லா பணத்தையும் செலவழித்துவிடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க விரும்புகிறதில்லை. தங்களைதாங்களே கவனித்துக்கொள்ள கையாலாகாதவர்கள் என்று பிள்ளைகள் நினைத்துவிடுவார்களோ என்று பயந்துதான் [அந்த மோசடியை] புகார் செய்ய அவர்கள் பயப்படுகின்றனர்.”
மோசடிக்கு பலியாகும் வயதானோர் எப்பொழுதுமே எளிதில் ஏமாறுபவர்களாகவோ அல்லது தவறான வழிநடத்துதலுக்கு உட்படுகிறவர்களாகவோ இல்லை. சிலருடைய விஷயங்களில் அவர்கள் தனிமையிலும், ஒருவேளை நட்பை “வாங்க” வேண்டிய தேவையிலும் இருக்கின்றனர். ஒரு சமுதாயத்தில், “தனியாக வாழ்ந்த சில விதவைகள் நயமான பேச்சிலேயே ஏமாற்றப்பட்டு வாழ்நாள் முழுவதற்குமான நடனப் பயிற்சிகளுக்காக 20,000 டாலர் முன்பணம் கட்டினார்கள்” என்று ஒரு செய்தித்தாள் நிருபர் எழுதினார். “அதில் சிலர் நடப்பதற்கும்கூட சக்தியில்லாதவர்கள். அவர்கள் உலகறிவற்றவர்கள் அல்லர், வெறுமனே நம்பிக்கையிழந்தவர்கள்.” ஒரு நடனக் கிளப், புதிய அங்கத்தினர்களுக்கு, பெரும்பாலும் அவர்களது வயதை ஒத்த புதிய நண்பர்களுடன் இருப்பதற்கான வாய்ப்பளிக்கிறது. முகஸ்துதி செய்து, இனிக்கப் பேசும், நவநாகரிக பண்புமிக்க விற்பனையாள், தானே நடன ஆசிரியர் என்று சொல்லும் பட்சத்தில், தட்டிக்கழிப்பது கடினமாகிறது.
ஜப்பானின் மோசடியாளர்களைக் கவனியுங்கள்
சில மோசடியாளர்கள் தனியாக இருக்கும் வயதானவர்களை மற்ற விதங்களில் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கின்றனர். ஜப்பானில், மனசாட்சியற்ற மோசடிப் பேர்வழிகள், அவர்களுக்கு பலியாகும் வயதானவர்களோடு அரட்டை அடிப்பதற்கு நேரம் செலவழித்துக்கொண்டும், அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டும், அவர்கள் மேல் கரிசனை உள்ளவர்களைப்போல நடித்து வந்திருக்கின்றனர். அடிக்கடி வந்து, வயதானவர்களின் முழு நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டபிறகு, மோசடி விற்பனையை ஆரம்பிக்கின்றனர். இத்தகைய மோசடித் திட்டங்களில், போலி தங்க மோசடி எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் ஓய்வூதியம் பெறும் அநேகர் உட்பட சுமார் 30,000 ஆட்கள் ஏமாற்றப்பட்டதாகவும் இவர்களிடம் 20,000 கோடி யென் (150 கோடி டாலர்) மோசடி செய்யப்பட்டதாகவும் அறிக்கை செய்யப்பட்டது. “ஏமாற்றப்பட்டவர்கள் இழந்தவற்றை மீட்பதற்கு எந்த சாத்தியமுமில்லை” என்று ஜப்பானின் ஆசாஹி ஈவ்னிங் நியூஸ் செய்தித்தாளின் தலைப்புச் செய்தி குறிப்பிட்டது.
இந்த விஷயத்தைக் குறித்து டோக்கியோவின் ஆசாஹி ஷிம்பூன் இவ்வாறு அறிக்கை செய்தது: ஒரு நடுத்தரவயது பெண் விற்பனையாளர் இவ்வாறு சொல்லிக்கொண்டு ஒரு வயதானவரை சந்தித்து வந்தாள்: “நீங்க தனியா வாழ்ந்துட்டு இருக்கிறதால, என்னோட வேலையைவிட உங்கமேல எனக்கு ரொம்ப அக்கறையிருக்கு மிஸ்டர் கே.” அவர் சொன்ன அநேக சங்கதிகளை அவள் கவனித்துக் கேட்டாள்; அவரும் அவளுடைய மயக்கும் வித்தையால் ஏமாற்றப்பட்டார். அவள் கிளம்பும்போது, அடுத்த நாளும் வருவதற்கான அனுமதியைக் கேட்டாள். “தாராளமாய் வரலாம்” என்று அவர் பதிலளித்தார்.
அவள் தவறாமல் வரத் தொடங்கினாள்; மாலை உணவை இருவருமாக சேர்ந்து சாப்பிட்டார்கள்; அவள் மிஸ்டர் கே.-வுக்காக உணவையும்கூட எடுத்துக்கொண்டு வந்தாள். “நீங்க சாகறவரைக்கும் நான் உங்களைக் கவனிச்சுக்குவேன்” என்று அவள் உறுதியளித்தாள். பின்பு வியாபாரத்தைச்சுற்றி பேச்சு ஆரம்பமானது: “உங்கள் சொத்துக்களை உங்களுக்காக நான் பார்த்துக்கொள்கிறேன். ஒருவருடைய சொத்துக்களை லாபம்தரக்கூடிய வழியில் பயன்படுத்தும் திட்டத்தை, நான் வேலை செய்யற கம்பெனி சமீபத்திலதான் உருவாக்கியிருக்கு.” அத்திட்டம் அவருடைய வீட்டையும் சொத்துக்களையும் அடமானம் வைப்பதையும், பின்பு அப்பணத்தில் தங்கக்கட்டிகளை வாங்கி, அதை அவளுடைய கம்பெனியில் முதலீடு செய்வதையும் தேவைப்படுத்தியது. பொறி வைக்கப்பட்டாயிற்று. ஏமாற்றப்பட்டவர்களின் நீண்ட வரிசையில் மிஸ்டர் கே.-யும் ஒருவரானார். வியாபார நடவடிக்கைகள் முடிந்தபிறகு, அந்தப் பெண் போனயிடம் தெரியவில்லை.
மிஸ்டர் கே. சொன்னார்: “ஒரு படைவீரனாக, நான் மரணத்தின் விளிம்பில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் சார்ந்திருக்க எந்தச் சொந்தபந்தமும் இல்லாம தனியா வாழற எங்களைப் போன்ற வயதானவங்களோட பலவீனத்தை பயன்படுத்திக்கிட்டு, யாரோ ஒருவர் என்னுடைய சொத்துக்களை மோசடி செய்ததை தாங்கிக்கொள்றதுதான் எனக்கு ரொம்ப கடினமா இருக்கு. ஜனங்க மோசடி செஞ்சாவது பணம் சம்பாதிக்கனுமுன்னு நினைக்கிற அந்த நிலைக்கு இந்த உலகம் வந்துட்டதாக தோனுது.”
இத்தாலியில் வயதானவர்களிடம் மோசடி
வயதானவர்களுடைய மதிப்புமிக்க சேமிப்பை ஏமாற்றி பறிப்பதற்காக, இத்தாலியிலுள்ள மோசடிக்காரர்கள் போட்ட பெரும் சதித்திட்டதைக் குறித்து லிடால்யா கா ட்ரூஃப்பா (மோசடி செய்யும் இத்தாலி) என்ற புத்தகம் அறிக்கை செய்தது. 1993-ல் பாங்க் ஆஃப் இத்தாலியின் முன்னால் ஆளுநரின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டது. அவர் ஆளுநராயிருந்த காலப்பகுதியில் வெளியிடப்பட்டிருந்த பாங்க் நோட்டுகளில் அவருடைய கையெழுத்து (ஐயத்திற்கிடமின்றி இன்றும் செல்லத்தக்கது) காணப்பட்டது. அநேக மோசடிக்காரர்கள், வயதானவர்களின் வீடுகளுக்கு முன்பாக நின்றுகொண்டு, பாங்க் ஆஃப் இத்தாலியின் அதிகாரிகளாக தங்களை காண்பித்துக்கொண்டனர். அதை நிரூபிப்பதற்காக போலி அடையாள அட்டைகளை வைத்திருந்த இவர்கள், தங்களுக்கு பலியான ஒவ்வொருவரிடமும் இவ்வாறு சொன்னார்கள்: “பாங்க் ஆஃப் இத்தாலியின் கவர்னர்தான், காபினட் அமைச்சர்களின் பிரசிடெண்ட் ஆகி இருக்கிறார்னு உங்களுக்கு தெரியும்; அதனால், அவருடைய கையெழுத்துள்ள பாங்க் நோட்டுகளெல்லாம் இனிமேல் செல்லாது. ஒவ்வொரு குடும்பமும் வச்சிருக்கிற பழைய பாங்க் நோட்டுகளைச் சேகரித்து, அதுக்கு பதிலாக அவருக்கு அடுத்து வந்தவருடைய கையெழுத்தையுடைய புதிய பாங்க் நோட்டுகளைக் கொடுக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கு . . . அதற்குரிய ரசீது இது. இந்த ஆவணத்தை எடுத்துக்கொண்டு நாளை மறுநாள் உங்களுடைய பாங்கிற்கு போனீங்கன்னா, இப்ப எங்ககிட்ட நீங்க கொடுத்த இந்த முழு பணமும் உங்களுக்கு கிடைக்கும்.” இந்தத் திட்டத்தின் மூலமாக, இந்த மோசடிக்காரர்கள் ஒரே நாளில் 1.5 கோடி லயரை (சுமார் 9,000 டாலர்) சேகரித்தார்கள்!
சில மோசடிக்காரர்கள், வயதானவர்களும் உட்பட, அஜாக்கிரதையுள்ளவர்களை, வீதிகளில் சந்திக்கின்றனர். விழிப்பாயிராதவர்களை ஒரு சுற்றாய்வில் பங்குகொள்ளுமாறு கேட்கின்றனர்; பிறகு அவர்கள் அந்த சுற்றாய்வில் பங்குகொண்டதை வெறுமனே உறுதிசெய்வதற்காக அவர்களுடைய கையெழுத்து வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, கையெழுத்து போடச் சொல்லி கொஞ்சம் பேப்பர்களைக் கொடுக்கின்றனர். உண்மையில், அவர்கள் ஏதோவொன்றை செய்ய வேண்டியதையோ வாங்கவேண்டியதையோ அவசியப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
பின்பு, சிலகாலம் கழித்து, மோசடி செய்யப்பட்டவர், ஏதோ சில பொருட்கள் அடங்கிய ஒரு பார்ஸலை தபாலில் பெறுகிறார்; இப்பொருட்கள் மறுக்கப்பட்டால், அவர் ஏதோ ஒரு வழியில் தண்டிக்கப்படுவார் என்று தெளிவாக தெரியும் ஒரு எச்சரிக்கை ஒருவேளை அதனுடைய உரையில் ஒட்டப்பட்டிருக்கும். சிலர், அதிலும் குறிப்பாக வயதானவர்கள், பயந்துபோய், கோர்ட்டுக்கு அலைக்கடிக்கப்படுவதோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் சிறிய தொகையை செலுத்தி பிரயோஜனமில்லாத இந்தப் பொருட்களை வைத்துக்கொள்வதே மேலானது என்று நினைக்கின்றனர்.
இத்தாலியில் மோசடி எந்தளவுக்கு விரிவாக உள்ளது? லிடால்யா கா ட்ரூஃப்பா-வின் பிரகாரம், இவ்விதம் புகார் செய்யப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு சுமார் 5,00,000 என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதைப் போன்ற அநேக மோசடிகளில் குறைந்தது மூன்று மடங்காவது புகார் செய்யப்படாமல் போகின்றன. தொலைக்காட்சி நிருபர் ஒருவர் இவ்வாறு குறிப்புரைத்தார்: “மொத்தமாக பார்த்தால், ஒவ்வொரு வருடமும் எல்லா வகையான சிக்கவைக்கும் பொறிகள் சுமார் 20 லட்சம் அல்லது ஒரு நாளிற்கு ஐந்தாயிரத்திலிருந்து ஆறாயிரம் வரைக்குமாக உள்ளது எனச் சொல்லலாம்.”
இவ்விதமாக, இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. மக்களுடைய பணத்தை, அதிலும் அடிக்கடி அவர்களுடைய வாழ்க்கைச் சேமிப்புகளை சுரண்டுவோர், வயதையோ (அல்லது இனம், தேசியம், அல்லது நாகரிகத் தொகுதி என எதுவாயிருந்தாலும்) எதையுமே கருத்தில் கொள்வதில்லை. ஜாக்கிரதை! அது உங்களுக்கும் நேரிடலாம்.
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
மோசடி செய்யப்படுவதை தவிர்ப்பது எப்படி
எல்லாவித டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுமே ஏமாற்றுபவையாக இல்லை. உதாரணமாக, ஓய்வுபெற்றவர்களுக்கான அமெரிக்க சங்கத்தின் (American Association of Retired Persons [AARP]) பிரகாரம், 1994-ல் ஐக்கிய மாகாணங்களில் 1,40,000 நிறுவனங்கள் டெலிமார்க்கெட்டிங் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. அவற்றில் 10 சதவீதம் அல்லது 14,000 நிறுவனங்கள் மோசடி செய்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, எதிர்பார்ப்பை விஞ்சுமளவுக்கு மிக அருமையான ஏதோவொன்று கிடைக்குமென சொல்லப்படுகையில் கவனமாக இருப்பது அவசியம். டெலிமார்க்கெட்டிங் வியாபாரிகளால் மோசடி செய்யப்படுவதை மேற்கொள்வதற்கு உதவியாக உங்களுக்கு இங்கே சில துப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
◆ நீங்கள் ஒரு இலவச பரிசை வென்றிருப்பதாக எவரோ ஒருவர் தொலைபேசியில் உங்களிடம் சொன்னால், நீங்கள் செய்ய வேண்டிய ஞானமான காரியமானது பதிலளிக்காமல் போனை வைத்துவிடுவதே.
◆ இன்றே வாங்கிவிடுங்கள் அல்லது இந்தப் பொருள் மீண்டும் கிடைக்காது என்று ஒரு டெலிமார்க்கெட்டிங் வியாபாரி உங்களை வற்புறுத்தினால், அந்த அளிப்பு மோசடியானது என்பதற்கு பொதுவான ஒரு அறிகுறி.
◆ உங்கள் கிரெடிட் கார்டின் நம்பரை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். நிதி திரட்டுவதற்காக உங்களுக்கு போன் செய்யும் அன்னியர்களுக்கு அதை கொடுக்காதீர்கள்.
◆ நீங்களே அழைப்பை செய்திருந்து, தபால் மூலம் வியாபாரம் செய்யும், நற்பெயருள்ளதாக நீங்கள் அறிந்திருக்கும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்தால் மட்டுமே அல்லாமல் தொலைபேசியின் மூலமாக கொடுக்கல்-வாங்கல் வைத்துக்கொள்ளாதீர்கள்.
சொந்த வீட்டுக்காரர்கள், வீட்டை பழுதுபார்ப்போரின் மோசடிகளைக் குறித்து கவனமாயிருக்கவேண்டும். AARP கன்ஸ்யூமர்ஸ் அஃப்பையர்ஸால் கொடுக்கப்பட்டிருக்கிற சில முன்னெச்சரிப்பு படிகள் இங்கே உள்ளன:
◆ முன்பின் தெரியாத ஒருவரை, அவன் அல்லது அவளைப் பற்றிய குறிப்புகளை முழுவதுமாக ஆராயாமல், வேலைக்கு வைத்துக்கொள்ளாதீர்கள்; அவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த மற்ற வாடிக்கையாளர்களின் பெயர்களையும் தொலைபேசி எண்களையும் கேட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
◆ முழுமையாக சரிபார்க்காமல் எதிலும் கையெழுத்திடாதீர்கள், மேலும் ஒப்பந்தமோ அல்லது அக்ரீமண்ட்டோ எதுவாயினும் அதில் உள்ள எல்லா நிபந்தனைகளையும் நீங்கள் புரிந்துகொண்டும் ஒத்துக்கொண்டும் இருக்கிறீர்களா என்பதைக் குறித்து நிச்சயித்துக்கொள்ளுங்கள்.
◆ ஒரு அக்ரீமண்ட்டை விளக்குவதற்கு நீங்கள் அறிந்திருக்கிற நம்பிக்கைக்குரியவரைத் தவிர வேறு எவர்மீதும் சார்ந்திராதீர்கள். அதிலுள்ள சிறிய எழுத்துக்களை நீங்களாகவே வாசியுங்கள்.
◆ பழுதுபார்ப்பதற்காக முன்கூட்டியே பணத்தைக் கொடுக்காதீர்கள். முழுத்தொகையையும் கொடுப்பதற்கு முன்பு வேலை உங்களுடைய முழு திருப்திக்கு ஏற்ப முடிக்கப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
விழிப்பாயிருங்கள். இயல்பறிவைப் பயன்படுத்துங்கள். வாங்குவதற்கு உங்களுக்கு விருப்பமில்லையென்றால் வேண்டாம் என்று சொல்வதற்கு தயங்காதீர்கள். இதை நினைவில் வையுங்கள்: எதிர்பார்ப்பை விஞ்சுமளவுக்கு மிக அருமையான ஏதோவொன்று கிடைக்குமென சொல்லப்படுகையில் அது பெரும்பாலும் மோசடியாகவே இருக்கும்.
[பக்கம் 7-ன் படங்கள்]
வயதானோரை மோசடி செய்யும் பொருட்டு, மோசடிப்பேர்வழிகள் அவர்களிடம் அக்கறை உள்ளவர்களைப்போல் நடிக்கக்கூடும்