“பாதத்துக்கு அல்ல, வாய்க்கு உணவளியுங்கள்”
ஆப்பிரிக்க பாரம்பரிய புதைத்தல் வழக்கங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்
“அவர்கள் தங்கள் மரித்தோரை புதைப்பதில்லை!” மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இப்படி ஒரு கூற்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. எனினும், சாட்சிகள் தங்கள் மரித்தோரை உண்மையில் புதைக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகவே அறியப்பட்டிருக்கிறது.
யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மரித்தோரைப் புதைப்பதில்லை என்று மக்கள் ஏன் சொல்கிறார்கள்? அவர்கள் அவ்வாறு சொல்வதற்குக் காரணம், சாட்சிகள் பிரபலமான உள்ளூர் புதைக்கும் வழக்கங்களில் அநேகத்தை அனுசரிப்பதில்லை.
பாரம்பரிய புதைக்கும் வழக்கங்கள்
ஆலியூ மத்திய நைஜீரியாவிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்கிறார். அவருடைய தாய் இறந்தபோது, அவர் தன்னுடைய உறவினர்களுக்கு அவருடைய இறப்பைத் தெரிவித்து, பின்பு தாயாரின் வீட்டில் ஒரு வேதப்பூர்வமான பேச்சு கொடுக்கப்படும்படி ஏற்பாடு செய்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையின் மூப்பர் ஒருவரால் பேச்சுக்கொடுக்கப்பட்டது. அந்தப் பேச்சு, மரித்தவரின் நிலைமையையும் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கிளர்ச்சியூட்டும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையையும் முக்கியக்கருத்தாய் கொண்டிருந்தது. அந்தப் பேச்சு முடிந்தபிறகு, ஆலியூவின் தாயார் புதைக்கப்பட்டார்.
உறவினர்கள் கடுங்கோபம்கொண்டனர். அவர்களைப் பொருத்தமட்டில், ஒரு நபர் மரித்த இரவில் பழக்கமாக செய்யப்படும் இராக்காவல் விழிப்பு இல்லாமல், எந்தப் புதைத்தலும் முற்றுப்பெறுகிறதில்லை. ஆலியூவின் சமூகத்தில், இராக்காவல் விழிப்பு கொண்டாட்டத்திற்கான ஒரு சமயம், துக்கத்திற்கான ஒன்றல்ல. பிணம் குளிப்பாட்டப்பட்டு, வெள்ளைத் துணிகள் தரிக்கப்பட்டு, ஒரு படுக்கையின்மேல் கிடத்தப்பட்டிருக்கிறது. இழப்புக்காளானவர்கள் இசைக் கலைஞர்களை வரவழைத்து, பெட்டிகணக்காக வாற்கோதுமை கள்ளையும் (பீர்) கூஜாக்கள் நிறைய பனை மதுவையும் வாங்குகின்றனர். ஒரு காளை அல்லது கடாவைப் பலிகொடுக்க ஏற்பாடு செய்கின்றனர். பின்னர், உறவினர்களும் நண்பர்களும் அடுத்த நாள் விடியல்வரை பாடவும் ஆடவும் உண்ணவும் குடிக்கவும் வருகின்றனர்.
இந்தக் கொண்டாட்டங்களின்போது, பிணத்தின் பாதத்தில் உணவு வைக்கப்படுகிறது. மரித்தவரின் முடி, கைவிரல் நகங்கள், கால்விரல் நகங்கள் ஆகியவற்றின் பகுதிகள் சில வெட்டப்பட்டு, ‘இரண்டாம் புதைத்தலுக்காக’ ஒதுக்கிவைக்கப்படுகின்றன. அது நாள்கள், வாரங்கள், அல்லது ஆண்டுகள்கழிந்த பின்பும்கூட நடத்தப்படுகிறது.
இராக்காவல் விழிப்பிற்கு அடுத்த நாளில் பிணம் புதைக்கப்படுகிறது. ஆனால், சவ அடக்க சடங்குகள் ஒரு வாரத்திற்கு அல்லது நீண்ட காலத்திற்குத் தொடர்கின்றன. பின்பு, இரண்டாம் புதைத்தல் நடந்தேறுகிறது. முடி, கைவிரல் நகங்கள், கால்விரல் நகங்கள் ஆகியவற்றின் பகுதிகள் சில ஒரு வெள்ளைத் துணியில் சுற்றப்படுகின்றன; இது ஐந்து அல்லது ஆறு அடி மரப்பலகை ஒன்றில் கட்டப்படுகிறது. பாடலும் ஆடலும் உள்ள ஓர் ஊர்வலத்தில், சுடுகாட்டிற்கு அந்தப் பலகை எடுத்துச்செல்லப்பட்டு, அதற்குச் சொந்தமான நபருக்கு அருகில் புதைக்கப்படுகிறது. மீண்டுமாக, அங்கே இசையும் குடியும் விருந்தும் பெருமளவில் இருக்கிறது. சவ அடக்க சடங்காச்சாரங்கள், துப்பாக்கியால் வான்நோக்கி ஒருமுறை சுடப்படுவதன்மூலம் முடிவிற்குக் கொண்டுவரப்படுகின்றன.
ஆலியூ இந்தக் காரியங்கள் எதையும் அனுமதிக்காததால், அவர் மரித்தவர்களை அல்லது மரித்தவர்களுக்குப் புகழாரம்கொடுக்கும் பாரம்பரியங்களை மதிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டார். ஆனால் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகிய ஆலியூ, பாரம்பரியத்தோடு இணங்கிச்செயல்பட ஏன் மறுத்தார்? ஏனென்றால் இந்தப் பாரம்பரியங்கள் அடிப்படையாகக் கொண்டிருந்த மதக் கருத்துக்களை அவரால் மனமார ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆப்பிரிக்க பாரம்பரிய நம்பிக்கைகள்
எல்லா மனிதர்களும் ஆவி மண்டலத்திலிருந்து வந்தனர் என்றும், அவர்கள் அங்கே திரும்பிப் போவார்கள் என்றும் ஆப்பிரிக்கா முழுவதுமுள்ள மக்கள் நம்புகின்றனர். நைஜீரியாவின் யாரபா மக்கள் சொல்கின்றனர்: “பூமி ஒரு மார்க்கெட், பரலோகமோ வீடு.” மேலும் இக்போ இதைச் சொல்கின்றனர்: “இந்த உலகிற்கு வரும் எவரும் எவ்வளவு காலம் பூமியில் காத்திருக்க வேண்டியதிருந்தாலும், வீட்டிற்குத் திரும்பியாக வேண்டும்.”
முன்பு குறிப்பிடப்பட்ட வழக்கங்களை நினைத்துப்பாருங்கள். இராக்காவல் விழிப்பு கொண்டாடப்படுவதன் நோக்கம் அந்த ஆவிக்கு நல்ல வழியனுப்புதலைக் கொடுப்பதற்காகத்தான். வெள்ளை துணி தரிக்கப்படுதல், ஆவி மண்டலத்திற்குப் பொருத்தமான உடுப்பாகக் கருதப்படுகிறது. பாதத்தில் உணவை வைப்பது, பிணம் கால்கள்மூலம் சாப்பிடுகிறது, மேலும் முன்னோரின் தேசத்திற்குப் பயணஞ்செய்யும்போது பசியடையாமல் இருப்பதற்காக உணவளிக்கப்படவேண்டும் என்ற கருத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.
மேலும், பொதுவாக மக்கள், சரீரத்தைவிட்டு ஆவி பிரியும்போது, அது வாழ்வோரின் அருகில் அலைகிறது, இரண்டாம் புதைத்தல் மூலம் இறுதியில் விடுவிக்கப்படும்வரை அது முன்னோரிடம் திரும்புவதில்லை என்று நம்புகின்றனர். இரண்டாம் புதைத்தல் செய்யப்படவில்லையென்றால், ஆவி கோபமடைந்து, உயிரோடிருப்பவர்களை நோயால் அல்லது மரணத்தால் வாதிக்கும் என்று மக்கள் பயப்படுகிறார்கள். அந்தத் துப்பாக்கிச் சுடுதல் பரலோகத்திற்கு “ஆவியை அனுப்புவதற்காக” செய்யப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் இடத்திற்கு இடம் சவ அடக்க வழக்கங்கள் அதிகமாக வேறுபட்டாலும், பெரும்பாலும் முக்கிய கருத்து என்னவென்றால், உடல் மரிக்கையில் ஆவி தொடர்ந்து வாழ்கிறது என்பதாகும். சடங்காச்சாரங்களின் முக்கிய நோக்கம் “வீட்டழைப்பிற்கு” பிரதிபலிப்பதற்காக ஆவிக்கு உதவிசெய்வதாகும்.
இந்த நம்பிக்கைகளும் பழக்கங்களும் மனித ஆத்துமாவின் அழியாமை பற்றிய கிறிஸ்தவ மண்டலத்தின் கோட்பாடு மற்றும் அவளுடைய “புனிதர்க”ளுடைய வணக்கத்தால் உற்சாகப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுவாஸிலாந்திலுள்ள படை மதகுருவின் குறிப்பு விசேஷித்ததாய் இருக்கிறது. பாரம்பரிய நம்பிக்கைகளை அழிப்பதற்காக இயேசு வரவில்லை, ஆனால் அவற்றை நிறைவேற்ற அல்லது உறுதிப்படுத்த வந்தார் என்று அவர் சொன்னார். புதைத்தல் முறைகளைப் பெரும்பாலும் மதகுருக்கள் தலைமைதாங்கி செயல்படுத்துவதால், பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் அவற்றிலிருந்து ஆரம்பித்த வழக்கங்கள் ஆகிய இரண்டையும் பைபிள் ஆதரவளிக்கிறது என்று பல மக்கள் நினைக்கிறார்கள்.
பைபிள் என்ன சொல்கிறது
பைபிள் இந்த நம்பிக்கைகளை ஆதரிக்கிறதா? மரித்தவர்களின் நிலைமையைப் பற்றி, பிரசங்கி 3:20 சொல்கிறது: “எல்லாம் [மனிதர்களும் விலங்குகளும்] ஒரே இடத்துக்குப் [போகின்றனர்] போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.” வசனங்கள் தொடர்ந்து சொல்கின்றன: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் . . . அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று . . . நீ போகிற பாதாளத்திலே [பிரேதக் குழியிலே] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—பிரசங்கி 9:5, 6, 10.
இவையும் மற்ற வசனங்களும் மரித்தவர்கள் நம்மைக் காணமுடியாது அல்லது நமக்குச் செவிசாய்க்கமுடியாது அல்லது நமக்கு உதவிசெய்யமுடியாது அல்லது நம்மைப் புண்படுத்தமுடியாது என்பதை மிகத் தெளிவாக்குகின்றன. நீங்கள் கண்டிருப்பதற்கு இசைவாக இது இல்லையா? நீங்கள் ஒருவேளை மரித்துப்போன ஒரு பணக்கார, செல்வாக்குமிக்க மனிதரை அறிந்திருக்கலாம். அவருடைய குடும்பம், எல்லா வழக்கமான சவ அடக்க சடங்காச்சாரங்களையும் முழுமையாகச் செய்திருந்தபோதிலும், அதற்குப்பின் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த மனிதர் ஆவிப்பிரதேசத்தில் உயிரோடிருந்தால், அவர் ஏன் அவருடைய குடும்பத்திற்கு உதவிசெய்கிறதில்லை? அவர் அவ்வாறு செய்யமுடியாது. ஏனென்றால், பைபிள் சொல்கிறதே உண்மை—மரித்தவர்கள் உண்மையில் உயிரற்றவர்கள், “மரணத்தில் செயலற்றவர்கள்,” எனவே யாருக்கும் உதவிசெய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்.—ஏசாயா 26:14, NW.
கடவுளின் மகன், இயேசு கிறிஸ்து, இது உண்மையென அறிந்திருக்கிறார். லாசருவின் மரணத்திற்குப் பின் என்ன நடந்தது என்பதைச் சிந்தியுங்கள். பைபிள் சொல்கிறது: “அவர் [இயேசு] . . . அவர்களை [அவருடைய சீஷர்களை] நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்.”—யோவான் 11:11-13.
இயேசு சாவைத் தூக்கத்திற்கு, ஓய்விற்கு ஒப்பிட்டார் என்பதைக் கவனியுங்கள். பெத்தானியாவுக்கு அவர் வந்தபோது, லாசருவின் சகோதரிகள் மரியாளையும் மார்த்தாளையும் ஆறுதல்படுத்தினார். இரக்கவுணர்வினால் தூண்டப்பட்டவராக, இயேசு கண்ணீர் விட்டார். எனினும், லாசரு தன் ஆவியை இன்னும் உயிரோடுதான் கொண்டிருந்தார், மேலும் அவருடைய முன்னோர்களின் தேசத்திற்குப் போக உதவியை விரும்புகிறார் என்று குறிப்பிடும் எதையும் அவர் சொல்லவோ செய்யவோ இல்லை. பதிலாக, இயேசு தாம் செய்யப்போவதாக சொன்னதைச் செய்தார். அவர் லாசருவை உயிர்த்தெழுதலின்மூலம் மரண தூக்கத்திலிருந்து எழுப்பினார். இது ஞாபகார்த்த கல்லறையிலுள்ள எல்லாரையும் உயிர்த்தெழுப்ப கடவுள் இயேசுவை முடிவாகப் பயன்படுத்துவார் என்ற சாட்சியைக் கொடுத்தது.—யோவான் 11:17-44; 5:28, 29.
ஏன் வித்தியாசமானவர்களாக நடந்துகொள்ளவேண்டும்?
வேதப்பூர்வமற்ற நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சவ அடக்க வழக்கங்களோடு ஒத்துப்போவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஆலியூவும் யெகோவாவின் மற்ற லட்சக்கணக்கான சாட்சிகளும் அவ்வாறு இருக்கிறதாக நம்புகிறார்கள். பொய்யான, தவறாக வழிநடத்தும் கோட்பாடுகளில் தெளிவாக ஆதாரம் கொண்டிருக்கும் எந்தப் பழக்கத்தையும் ஆதரிப்பது அவர்களுக்குத் தவறாக—ஏன் மாய்மாலமாகவும்—இருக்கும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இயேசு மத சம்பந்தமான மாய்மாலத்திற்காகக் கண்டனம்செய்த வேதபாரகரும் பரிசேயரும் போல அவர்கள் இருக்க விரும்பவில்லை.—மத்தேயு 23:1-36.
அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய உடன்வேலையாளாகிய தீமோத்தேயுவை இவ்வாறு எச்சரித்தார்: “தேவாவியால் ஏவப்பட்ட வார்த்தை திட்டமாகச் சொல்லுகிறது என்னவென்றால், பிற்காலங்களிலே . . . பொய் பேசுகிற மனிதர்களின் பாசாங்கினால் சிலர் வஞ்சிக்கிற ஏவப்பட்ட வசனிப்புகளுக்கும் பேய்களின் போதகங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.” (1 தீமோத்தேயு 4:1, 2, NW) மனிதகுலத்தின் மரித்தோர் ஆவிப்பிரதேசத்தில் உயிரோடிருக்கிறார்கள் என்ற கருத்து பிசாசுகளின் ஒரு போதகமா?
ஆம், அப்படித்தான். “பொய்க்குப் பிதா,” பிசாசாகிய சாத்தான் ஏவாளிடம், அவள் மரிக்கமாட்டாள் என்று சொன்னான். அவள் மாம்சத்தில் தொடர்ந்து வாழ்வாள் என்பதை இது குறித்தது. (யோவான் 8:44; ஆதியாகமம் 3:3, 4) சரீரம் மரித்தபின்பு ஓர் அழிவில்லாத ஆத்துமா தொடர்ந்து வாழ்கிறது என்று சொல்வதுபோல் அது இருக்கவில்லை. எனினும், மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை தொடர்கிறது என்ற கருத்தை ஆதரிப்பதற்காகச் சாத்தானும் அவனுடைய பேய்களும் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்திலிருந்து மக்களைத் திசைதிருப்ப கடுமுயற்சிசெய்கின்றனர். கடவுள் பைபிளில் என்ன சொல்கிறார் என்பதை யெகோவாவின் சாட்சிகள் நம்புவதால், அவர்கள் சாத்தானின் பொய்களை ஆதரிக்கும் கருத்துக்களிலும் பழக்கங்களிலும் எந்தப் பங்கையும் கொண்டில்லை.—2 கொரிந்தியர் 6:14-18.
வேதப்பூர்வமற்ற புதைத்தல் பழக்கங்களைத் தவிர்ப்பதன்மூலம், யெகோவாவின் ஊழியர்கள் தங்களுடைய கருத்துக்களைச் சேர்ந்துகொள்ளாதவர்கள் சிலரின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். சில சாட்சிகள் பரம்பரைச் சொத்துக்களை இழந்திருக்கின்றனர். மற்றவர்கள் அவர்களின் குடும்பங்களினால் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், உண்மைக் கிறிஸ்தவர்களாக, கடவுளுக்கு உண்மையுள்ள கீழ்ப்படிதல் உலகத்தின் வெறுப்பைக் கொண்டுவருவதாக அவர்கள் உணர்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் பற்றுமாறாத அப்போஸ்தலர்போல, “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் கடவுளையே ஆட்சியாளராகக் கொண்டு கீழ்ப்படிவோம்” என்று அவர்கள் உறுதியாய் இருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 5:29, NW; யோவான் 17:14.
உண்மைக் கிறிஸ்தவர்கள், மரணத்தில் தூங்கிவிட்ட தங்களுடைய அன்பானவர்களைப் பற்றிய நினைவை போற்றிவளர்த்தாலும், உயிரோடிருப்பவர்களுக்கு அன்பைக் காட்ட கடுமுயற்சிசெய்கிறார்கள். உதாரணமாக, ஆலியூ தன் தந்தை இறந்தபின்பு, தாயை தன் வீட்டில் ஏற்றுக்கொண்டிருந்தார். அவளுடைய மீதி வாழ்நாளில் அவளுக்கு உணவளித்து, கவனித்துவந்தார். பிரபலமான வழக்கத்திற்கு ஏற்ப ஆலியூ தன் தாயை புதைக்கவில்லை என்ற காரணத்திற்காக, அவர் தன் தாயைச் சிறிதளவே கவனித்துக்கொண்டார் என்று மற்றவர்கள் சொல்லும்போது அவருடைய மக்களின் மத்தியில் பொதுவாகச் சொல்லப்படும் இந்தச் சொற்றொடரைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்: “என் பாதத்துக்கு உணவளிப்பதற்கு முன்பு, என் வாய்க்கு உணவளியுங்கள்.” வாய்க்கு உணவளித்தல், அல்லது, அவன் அல்லது அவள் இன்னும் உயிரோடிருக்கும்போது கவனித்துக்கொள்வது என்பது, பாதத்திற்கு உணவளிப்பதைவிட, அதாவது அந்த நபர் செத்தபிறகு இராக்காவல் விழிப்பு சம்பந்தமான முன் விளக்கப்பட்ட அந்தப் பழக்கத்தைவிட அதிகமதிகமாக மேலானது. பாதத்திற்கு உணவளிப்பது, உண்மையில் செத்தவருக்கு எந்தப் பலனையும் தருவதில்லை.
ஆலியூ அவரைக் குற்றங்கூறுபவர்களிடம் கேட்கிறார், ‘எதை நீங்கள் விரும்புவீர்கள்—உங்களுடைய முதிர்வயதில் உங்கள் குடும்பத்தினர் உங்களைக் கவனித்துக்கொள்வதையா அல்லது நீங்கள் செத்தபிறகு ஒரு பெரிய கொண்டாட்டத்தை அவர்கள் கொண்டாடுவதையா?’ இன்னும் உயிரோடிருக்கும்போது கவனிக்கப்படுவதையே பலர் விரும்புகின்றனர். மேலும் அவர்கள் சாகும் சமயத்தில், பைபிள் அடிப்படையிலான மதிப்பிற்குரிய மரணநாள் ஆசரிப்பையும் ஒரு மதிப்புமிக்க புதைத்தலையும் பெற்றிருப்பர் என்று அறிந்துகொள்வதையும் அவர்கள் போற்றுகின்றனர்.
அதைத்தான் யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய அன்பானவர்களுக்காகச் செய்ய முயற்சிசெய்கின்றனர். அவர்கள் பாதத்துக்கு அல்ல, வாய்க்கு உணவளிக்கின்றனர்.