கடவுளுக்குப் பிடிக்காத சம்பிரதாயங்கள்—உஷார்!
ஒரு சிறிய முற்றம். உச்சி வெயில் நேரம். சவப்பெட்டி ஒன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. துக்கம் கொண்டாடுவோர் சவப்பெட்டிக்கு அருகே வரிசையாக ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். வரிசையிலிருந்த ஒரு கிழவர் சவப்பெட்டிக்குப் பக்கத்தில் வந்ததும் சற்று நிற்கிறார். கண்களில் சோகமயம். குனிந்து சடலத்தை நோக்கி: “நீ போறேன்னு ஏன் எங்கிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லலை? என்னை ஏன் இப்படித் தவிக்க விட்டுட்டுப் போயிட்டே? நீ சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்துட்ட, முன்ன மாதிரியே இப்பவும் எனக்கு ஒத்தாசையா இருப்பியா?” என்று கேட்கிறார்.
ஆப்பிரிக்காவில் மற்றொரு இடம். ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அதைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. சில நாட்களுக்குப் பின்னர்தான் அது எல்லோர் கண்ணிலும் காட்டப்படுகிறது, அச்சமயத்தில் சடங்காச்சார முறைப்படி அதற்குப் பெயர் சூட்டு விழா நடைபெறுகிறது.
பிணத்திடம் பேசுவது, பிறந்த குழந்தையை மற்றவர்கள் கண்ணில் காட்டாதிருப்பது போன்ற இப்படிப்பட்ட பழக்கங்கள் சிலருக்கு விசித்திரமாக தோன்றலாம். ஆனால், சில கலாச்சாரங்களிலும் சமுதாயங்களிலும் பிறப்பு, இறப்பு பற்றிய மக்களின் கருத்துகள் மீதும் அவர்களுடைய நடத்தையின் மீதும் வலிமைமிக்க ஒரு நம்பிக்கை செல்வாக்கு செலுத்துகிறது. செத்தவர்கள் உண்மையில் சாகவில்லை, அவர்கள் உயிரோடும் சுய உணர்வோடும்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையே அது.
கிட்டத்தட்ட வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்குகிற சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் இந்த நம்பிக்கை பின்னிப்பிணைந்திருக்கிறது, அது அந்தளவுக்கு பலமாக வேரூன்றியிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒருவருடைய வாழ்க்கையின் முக்கிய கட்டங்களான பிறப்பு, பூப்பு, விவாகம், குழந்தைப்பேறு, இறப்பு ஆகியவை மூதாதையரின் ஆவி உலகிற்கு அழைத்துச் செல்கிற ‘படிக்கட்டுகளாய்’ இருப்பதாக லட்சக்கணக்கானோர் நம்புகிறார்கள். ஒரு நபர் இறந்து ஆவி உலகிற்குச் சென்ற பிறகு, தான் விட்டுப் பிரிந்து வந்திருந்த நபர்களின் வாழ்க்கையில் அவர் தொடர்ந்து மும்முரமாகத் தலையிடுவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்ல, அந்த நபர் மறுபிறவி எடுத்து மீண்டும் வாழ்க்கைச் சக்கரத்தில் சுழல ஆரம்பிக்கிறார் எனவும் நம்புகிறார்கள்.
வாழ்க்கைச் சக்கரம் தங்கு தடங்கலின்றி அந்தக் கட்டங்களையெல்லாம் கடந்து செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கணக்குவழக்கில்லா சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இந்த எல்லாச் சம்பிரதாயங்களும், நமக்குள் இருக்கும் ஏதோவொன்று மரணத்துக்குப் பின் தொடர்ந்து உயிர் வாழ்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துச் சம்பிரதாயங்களையும் மெய்க் கிறிஸ்தவர்கள் தவிர்க்கிறார்கள். ஏன்?
இறந்தோரின் நிலை என்ன?
இறந்தவர்களின் நிலையைக் குறித்து பைபிள் வெகு தெளிவாக விளக்கமளிக்கிறது. “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள். . . . அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று. . . . நீ போகிற பாதாளத்திலே [மனிதரின் பிரேதக்குழி] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே” என அது சொல்கிறது. (பிரசங்கி 9:5, 6, 10) அடிப்படையான இந்த பைபிள் சத்தியத்தை மெய் வணக்கத்தார் வெகு காலமாகவே மனதார ஏற்றிருக்கிறார்கள். ஆத்துமா என்பது சாவாமையுடையதல்ல, அது சாகக்கூடியது, அதை அழிக்க முடியும் என்றெல்லாம் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (எசேக்கியேல் 18:4) அதுமட்டுமல்ல, இறந்தவர்களின் ஆவி என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (சங்கீதம் 146:4) இது சம்பந்தமாக யெகோவா முற்காலங்களில் தம்முடைய ஜனங்களுக்குக் கறாரான ஒரு கட்டளையைக் கொடுத்திருந்தார், அதாவது இறந்தவர்கள் சுயநினைவோடு இருந்து, உயிரோடுள்ளவர்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்ட எந்தச் சம்பிரதாயத்திலும் சடங்கிலும் அவர்கள் ஈடுபடக் கூடாதென்று கட்டளையிட்டிருந்தார்.—உபாகமம் 14:1; 18:9-13; ஏசாயா 8:19, 20.
அந்த ஜனங்களைப் போலவே, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் பொய் மதப் போதனையுடன் சம்பந்தப்பட்ட எல்லாப் பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் சடங்காச்சாரங்களையும் தவிர்த்தார்கள். (2 கொரிந்தியர் 6:15-17) இன்றும்கூட, யெகோவாவின் சாட்சிகள் எத்தகைய இனம், குலம், அல்லது வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், மனிதனுக்குள் இருக்கிற ஏதோவொன்று மரணத்துக்குப் பின்னும் உயிர் வாழ்கிறதென்ற பொய்ப் போதனையோடு தொடர்புடைய எல்லா விதப் பாரம்பரிய பழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.
அப்படியானால், குறிப்பிட்ட ஒரு பழக்கத்தைக் கடைப்பிடிப்பதா வேண்டாமா என தீர்மானிக்க கிறிஸ்தவர்களான நமக்கு எது உதவும்? வேதப்பூர்வமற்ற போதனைகளோடு, அதாவது உயிரோடு இருப்பவர்களின் வாழ்க்கையில் இறந்தவர்களின் ஆவிகள் செல்வாக்கு செலுத்துகின்றன போன்ற பொய்ப் போதனைகளோடு அந்தப் பழக்கம் சம்பந்தப்பட்டிருக்குமா என நாம் கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதோடு, அப்படிப்பட்ட பழக்கத்திலோ ஆசாரத்திலோ ஈடுபடுவது யெகோவாவின் சாட்சிகளான நம்முடைய நம்பிக்கையையும் போதனையையும் அறிந்திருக்கிற ஒருவரை இடறலடையச் செய்யுமா என்பதைக் குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்விஷயங்களை மனதில் வைத்து பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டு அம்சங்களை இப்போது நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
பிறப்பு மற்றும் பெயர் சூட்டு சடங்குகள்
பிறப்போடு சம்பந்தப்பட்ட நிறைய பழக்கங்கள் சரியானவையே. என்றாலும், மூதாதையரின் ஆவி உலகத்திலிருந்து மனித உலகிற்கு இடம்பெயர்ந்து வருவதுதான் பிறப்பு என்ற கருத்து நிலவுகிற இடங்களில், மெய்க் கிறிஸ்தவர்கள் கவனமாகவே நடந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஆப்பிரிக்காவின் சில பாகங்களில், பிறந்த பச்சைக் குழந்தையை யாருக்கும் காட்டாமல் கொஞ்ச நாட்கள் வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பார்கள், அப்போது அதற்குப் பெயர்கூட வைக்க மாட்டார்கள். அப்படி எத்தனை நாட்களுக்கு வைத்திருப்பார்கள் என்பது ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகிறது; கடைசியில், பெயர் வைக்கும் சடங்கிற்காக அந்தக் குழந்தை வெளியே கொண்டு வரப்பட்டு, சொந்தபந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் முறைப்படி காட்டப்படுகிறது. அப்போது கூடிவந்திருப்போர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதற்குப் பெயர் சூட்டப்படுகிறது.
கானா நாட்டு மக்களையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ளுதல் என்ற ஆங்கில புத்தகம் இந்தச் சம்பிரதாயத்தின் உள் அர்த்தத்தை விளக்குகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “ஒரு குழந்தை முதல் ஏழு நாட்களுக்கு ஒரு ‘சுற்றுலாப் பயணியாக’ ஆவி உலகிலிருந்து பூமிக்கு வந்திருக்கிறது என்றும், அந்த இடமாற்றத்தை அச்சமயத்தில் அது அனுபவித்து வருகிறது என்றும் கருதப்படுகிறது. . . . அந்தக் குழந்தை பொதுவாக வீட்டிற்குள்ளேயே வைக்கப்படுகிறது, குடும்பத்தாரல்லாத வெளி ஆட்கள் அதைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.”
சடங்காச்சார முறைப்படி அதற்குப் பெயர் வைக்கும்வரை ஏன் சில நாட்களுக்கு அவர்கள் காத்திருக்கிறார்கள்? கானாவின் மலரும் நினைவுகள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “எட்டாவது நாளுக்கு முன்பாக அந்தக் குழந்தை ஒரு மனிதப் பிறவியாகவே கருதப்படுவதில்லை. அது ஆவி உலகிலிருந்து வந்திருப்பதால் இன்னும் அந்த உலகோடு ஓரளவு தொடர்பு வைத்திருக்கிறது. . . . பெயர் சூட்டப்படும்போதுதான் அது ஒரு மனித ஜீவனாகிறது, எனவே அது மரித்துவிடுமென்ற ஒரு சூழல் ஏற்பட்டால் பெயர் வைக்கும் சடங்கையே அதனுடைய பெற்றோர் ஒத்திப்போட்டு விடுகிறார்கள்; அது உயிர்பிழைத்து விடுமென்று எப்போது ஊர்ஜிதமாகிறதோ அப்போதுதான் அதற்குப் பெயர் சூட்டுகிறார்கள். . . . இந்தச் சடங்கு குழந்தையை வெளியரங்கமாக்குதல் என சிலசமயம் அழைக்கப்படுகிறது; இது குழந்தையின் மீதும் அதன் பெற்றோர் மீதும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. பெயர் சூட்டும் சடங்குதான் அதை மனிதர்களோடு இணைத்து வைக்கிறது.”
பெயர் சூட்டும் அந்தச் சடங்கை பொதுவாக வீட்டுப் பெரியவர் ஒருவர் நடத்தி வைப்பார். அந்தச் சமயத்தில் என்னவெல்லாம் செய்யப்படும் என்பது இடத்துக்கு இடம் வேறுபடுகிறது, ஆனால் சாதாரணமாக அப்போது பானம் வார்க்கப்படுகிறது, குழந்தை பத்திரமாக வந்து சேர்ந்ததற்காக மூதாதையரின் ஆவிகளுக்கு நன்றி சொல்லி பிரார்த்தனை செய்யப்படுகிறது, அதோடு வேறுபல சடங்குகளும் நடத்தப்படுகின்றன.
குழந்தையின் பெயர் அறிவிக்கப்படுவதுதான் அச்சடங்கின் சிறப்பம்சம். பெயர் வைப்பது பெற்றோரின் பொறுப்பாக இருந்தாலும், அப்பெயரைத் தேர்ந்தெடுப்பதில் பெரும்பாலும் சொந்தக்காரர்களின் குரலே ஓங்கியிருக்கிறது. அந்தந்த ஊர் பாஷையில் அடையாள அர்த்தமுடைய சில பெயர்கள் இருக்கின்றன, உதாரணத்திற்கு “போய் வந்தவன்/ள்,” “அம்மா மறுபிரவேசம் செய்திருக்கிறார்,” “அப்பா திரும்ப வந்திருக்கிறார்” போன்ற அர்த்தத்தைக் கொடுக்கும் பெயர்கள் உள்ளன. அதுமட்டுமல்ல, மூதாதையர்கள் மீண்டும் அக்குழந்தையை ஆவி உலகிற்கு எடுத்துச் செல்வதைத் தடை செய்யும் அர்த்தத்தைத் தருகிற வேறு பல பெயர்களும் உள்ளன.
ஒரு குழந்தை பிறந்திருப்பதைக் குறித்து சந்தோஷமடைவதில் எந்தத் தவறும் இல்லைதான். அதேபோல, ஒருவருடைய நினைவாக அவரது பெயரைக் குழந்தைக்கு வைப்பதும், அது பிறந்த சூழ்நிலைக்கேற்ப ஒரு பெயரை வைப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்க பழக்கங்களே; அவ்வாறே, அதற்கு எப்போது பெயர் வைப்பதென்று தீர்மானிப்பதும் அவரவரின் சொந்த விருப்பம். ஆனால், கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிற கிறிஸ்தவர்கள் ஒரு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; அதாவது, பிறந்த குழந்தை மூதாதையரின் ஆவி உலகிலிருந்து மனித உலகிற்கு வந்துள்ள ஒரு “சுற்றுலாப் பயணி” என்ற கருத்தை ஆமோதிக்கிற எந்தச் சம்பிரதாயத்திலும் சடங்கிலும் ஈடுபடாதபடி அவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, பெயர் சூட்டு விழா என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்லும்போது செய்யப்படுகிற முக்கிய சடங்கு என்றே அநேகர் கருதுகிறார்கள், எனவே, மற்றவர்களுடைய மனசாட்சியை மனதில் வைத்து கிறிஸ்தவர்கள் நடந்துகொள்ள வேண்டும்; அதோடு அவிசுவாசிகள் என்ன நினைப்பார்கள் என்பதற்கும்கூட கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, குழந்தைக்குப் பெயர் வைக்கும்வரை ஒரு கிறிஸ்தவ குடும்பம் அதை மற்றவர்களுடைய கண்ணில் காட்டாது வைத்திருந்தால் சிலர் என்ன முடிவுக்கு வருவார்கள்? பைபிள் சத்தியங்களைப் போதிக்கிறவர்கள் அவற்றிற்கு முரணான அர்த்தம் தரும் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?
ஆகையால், தங்கள் குழந்தைகளுக்கு எப்படி, எப்போது பெயர் வைப்பது என்பதைத் தீர்மானிக்கும்போது கிறிஸ்தவர்கள் ‘எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யவே’ பிரயாசப்படுகிறார்கள், மற்றவர்களை இடறச் செய்யாதிருக்கத்தான் அவ்வாறு அவர்கள் பிரயாசப்படுகிறார்கள். (1 கொரிந்தியர் 10:31-33) இறந்தவர்களை வணங்குவதற்கென்றே ஆரம்பிக்கப்பட்ட ‘பாரம்பரியங்களைக் கைக்கொள்ள’ வேண்டுமென்பதற்காகத் ‘தேவனுடைய கட்டளைகளை’ அவர்கள் ஒருபோதும் ‘புறக்கணிப்பதில்லை.’ மாறாக, உயிருள்ள தேவனான யெகோவாவுக்குக் கனத்தையும் மகிமையையும் சேர்க்கிறார்கள்.—மாற்கு 7:9, 13; பொது மொழிபெயர்ப்பு.
சாவைவிட்டு வாழ்வுக்கு
பிறப்பைப் போல, ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதுதான் மரணம் என அநேகர் கருதுகிறார்கள்; அதாவது காணக்கூடிய உலகிலிருந்து காணக்கூடாத ஆவி உலகிற்குச் செல்வதுதான் மரணம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு நபரின் மரணத்தின்போது ஒருசில சம்பிரதாயங்களையும் ஈமச்சடங்குகளையும் செய்யாவிட்டால் மூதாதையரின் ஆவிகளுக்குக் கோபம் வந்துவிடுமென அவர்கள் நம்புகிறார்கள்; அந்த ஆவிகள் உயிரோடுள்ளவர்களைத் தண்டிக்கவோ ஆசீர்வதிக்கவோ முடியுமெனவும் அவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஈமச்சடங்கு நடத்தப்படுகிற விதத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.
இறந்தவர்களைச் சாந்தப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் நடத்தப்படும் ஈமச்சடங்குகளில் பெரும்பாலும் சடலத்திற்கு முன் பைத்தியம் பிடித்தது போல ஓலமிட்டு அழுவது முதல் சவ அடக்கத்திற்குப் பிறகு ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாட்டம் நடத்துவது வரை பல்வேறு உணர்ச்சிகள் வெளிக்காட்டப்படுகின்றன. இத்தகைய ஈமச்சடங்குகளில் பெரும்பாலும் வயிறுபுடைக்க சாப்பிடுவதும், குடித்து வெறிப்பதும், காதைப் பிளக்கிற இசைக்கு கூத்தாடுவதும்தான் சகஜமாக நடைபெறுகிறது. பரம ஏழைகள்கூட, “தக்க மரியாதையுடன்” சவ அடக்கத்தை நடத்த வேண்டுமென்பதற்காக வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி எப்படியோ பணத்தைப் புரட்டுகிறார்கள், அதற்காக கஷ்டமோ நஷ்டமோ பட வேண்டியிருந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை, அந்தளவு அந்திம காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பல வருடங்களாக, யெகோவாவின் சாட்சிகள் வேதப்பூர்வமற்ற சவ அடக்க சம்பிரதாயங்களைப் பற்றிய உண்மைகளை விலாவாரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.a அத்தகைய சம்பிரதாயங்களில், சடலத்தைக் காவல் காக்க ஆட்களை நியமிப்பது, பானம் வார்ப்பது, பிணத்திடம் பேசுவது, வேண்டுவது, வருடாவருடம் திதி கொண்டாடுவது ஆகியவை உட்பட்டுள்ளன; அதுமட்டுமல்ல, ஒரு நபருக்குள் இருக்கும் ஏதோவொன்று மரணத்துக்குப் பின் உயிர் வாழ்கிறதென்ற நம்பிக்கையின் அடிப்படையிலுள்ள மற்ற சடங்குகள்கூட அதில் உட்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சம்பிரதாயங்கள் கடவுளை அவமதிக்கின்றன; அவை அவருடைய சத்திய வார்த்தையின் அடிப்படையில் அல்ல, ஆனால் ‘மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தின்’ அடிப்படையில் உருவான “அசுத்தமான,” “மாயமான” சம்பிரதாயங்களாக இருக்கின்றன.—ஏசாயா 52:11; கொலோசெயர் 2:8.
இணங்கிப்போக வைத்துவிடும் சூழ்நிலைகள்
பாரம்பரிய சம்பிரதாயங்களைத் தவிர்ப்பது சிலருக்கு ரொம்பவே கடினமாக இருந்திருக்கிறது; குறிப்பாக, இறந்தவர்களை வணங்குவதற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிற நாடுகளில் அவ்வாறு இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட சம்பிரதாயங்களை யெகோவாவின் சாட்சிகள் கடைப்பிடிக்காததால், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள் அல்லது சமூக விரோதிகளென்றும் இறந்தவர்களை அவமதிக்கிறவர்களென்றும் குற்றம்சாட்டுகிறார்கள். கடும் விமர்சனத்திற்கும் கட்டாயத்திற்கும் ஆளாவதனால் பைபிள் சத்தியத்தைச் சரியாக புரிந்துகொண்டிருந்தாலும், சிலர் தங்களை வித்தியாசமானவர்களாகக் காட்டிக்கொள்ள பயப்படுகிறார்கள். (1 பேதுரு 3:14) மற்றவர்களோ, இத்தகைய சம்பிரதாயங்களெல்லாம் தங்கள் கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்டதெனவும் அதனால் அவற்றை அடியோடு தவிர்க்க முடியாதெனவும் நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ, இத்தகைய சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க மறுத்தால் கடவுளுடைய மக்களான நம்மீது ஜனங்களுக்குத் தப்பபிப்பிராயம் ஏற்பட்டு விடலாமென நியாயப்படுத்திப் பேசுகிறார்கள்.
யாரையுமே அநாவசியமாக புண்படுத்த நாம் விரும்புவதில்லை. இருந்தாலும், சத்தியத்திற்காக உறுதியான நிலைநிற்கை எடுக்கும்போது கடவுளிடமிருந்து விலகியிருக்கும் இவ்வுலகின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடுமென பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (யோவான் 15:18, 19; 2 தீமோத்தேயு 3:12; 1 யோவான் 5:19) ஆன்மீக இருளில் கிடப்பவர்களிடமிருந்து நாம் வித்தியாசமானவர்களாய் இருக்க வேண்டுமென்று அறிந்திருப்பதால் அப்படிப்பட்ட நிலைநிற்கையை மனமுவந்து ஏற்கிறோம். (மல்கியா 3:18; கலாத்தியர் 6:12) கடவுளைக் கோபப்படுத்துகிற ஒன்றைச் செய்யும்படி சாத்தான் இயேசுவைச் சோதித்தபோது, அதைச் செய்யாதிருக்க அவர் எப்படிக் கவனமாக இருந்தாரோ அதேபோல, கடவுளைக் கோபப்படுத்துகிற ஏதோவொன்றைச் செய்ய மற்றவர்கள் நம்மை வற்புறுத்தும்போது அதைச் செய்யாதிருக்க நாமும் கவனமாக இருக்கிறோம். (மத்தேயு 4:3-7) மெய்க் கிறிஸ்தவர்கள் மனுஷரைக் கண்டு பயப்படுவதில்லை, மாறாக அவர்களுடைய முதல் அக்கறை யெகோவா தேவனைப் பிரியப்படுத்த வேண்டுமென்பதும், சத்தியத்தின் தேவனான அவரைக் கனப்படுத்த வேண்டுமென்பதும்தான். மற்றவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காக தூய வணக்கம் பற்றிய பைபிள் தராதரங்களை விட்டுக்கொடுக்காததன் மூலம் அவ்வாறு அவர்கள் யெகோவா தேவனைப் பிரியப்படுத்துகிறார்கள், கனப்படுத்துகிறார்கள்.—நீதிமொழிகள் 29:25; அப்போஸ்தலர் 5:29.
இறந்தவர்களைக் கருதும் விதம்—யெகோவாவைக் கனப்படுத்துகிறது
பிரியமான ஒருவர் மரிக்கும்போது நாம் மனவேதனையில் துடியாய்த் துடிப்பதும் துக்கித்து அழுவதும் இயல்புதான். (யோவான் 11:33, 35) மரித்த நபர் மீது நமக்குள்ள அன்பினால் அவருடைய நினைவுகளை நெஞ்சிலே சுமப்பதும் தக்க மரியாதையுடன் அவரை அடக்கம் செய்வதும் பொருத்தமானதே. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் கடவுளுக்குப் பிடிக்காத எந்தவொரு பாரம்பரிய பழக்கத்திலும் ஈடுபடாமல் மரணத்தின் வலியைச் சகிக்கிறார்கள். மரித்தவர்களைக் குறித்த பயம் ஆட்டிப்படைக்கிற சமுதாயத்தில் வளர்க்கப்பட்டவர்களுக்கு அப்படி நடப்பது அவ்வளவு சுலபமல்ல. பிரியமான ஒருவர் இறந்த மனவேதனையில் நாம் தத்தளிக்கும்போது சமநிலையோடு நடந்துகொள்வது சவாலாகவே இருக்கலாம். என்றாலும், விசுவாசமிக்க கிறிஸ்தவர்கள் ‘ஆறுதலின் தேவனான’ யெகோவாவினால் பலப்படுத்தப்படுகிறார்கள், அதோடு சக விசுவாசிகளின் அன்பான ஆதரவிலிருந்தும் நன்மையடைகிறார்கள். (2 கொரிந்தியர் 1:3, 4) கடவுளின் நினைவிலுள்ள மரித்தவர்கள் ஒருநாள் மீண்டும் உயிருடன் வருவார்கள் என்ற நம்பிக்கையில் மெய்க் கிறிஸ்தவர்கள் உறுதியான விசுவாசம் வைத்திருக்கிறார்கள். உயிர்த்தெழுதல் நம்பிக்கையை மறுதலிக்கிற கிறிஸ்தவமற்ற இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து அவர்கள் அறவே விலகியிருப்பதற்குக் காரணம் அதுதான்.
யெகோவா நம்மை “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு” வரவழைத்திருப்பதை எண்ணி நாம் மெய்சிலிர்த்துப் போகிறோமல்லவா? (1 பேதுரு 2:9) அப்படியானால், ஒருவர் பிறப்பதைக் குறித்து சந்தோஷப்படும்போதும், ஒருவர் மரிக்கையில் துக்கப்பட்டு சகித்திருக்கும்போதும் தொடர்ந்து ‘வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்வோமாக.’ சரியானதைச் செய்ய வேண்டுமென்ற பலமான ஆசையும் யெகோவா தேவன் மீதுள்ள ஆழமான அன்பும் அவ்வாறு நடந்துகொள்ள நம்மைத் தூண்டுவதாக. எனவே, கடவுளுக்குப் பிடிக்காத, கிறிஸ்தவமற்ற சம்பிரதாயங்களினால் ஆன்மீக ரீதியில் ஒருபோதும் நம்மைக் கறைப்படுத்திக் கொள்ளாதிருப்போமாக.—எபேசியர் 5:8.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டையும் நித்திய ஜீவனுக்குச் செல்லும் பாதை—அதைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டையும் தயவுசெய்து காண்க.