தெய்வீக ஞானத்தால் உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்தல்
நம் உடலுக்குத் தினம் தினம் ஒரு போராட்டம் உண்டு. அது ஏராளமான கிருமிகளை எதிர்த்துப் போராட வேண்டும். நல்ல வேளையாக, பிறவியிலேயே நாம் பெற்றிருக்கும் தற்காப்பு அமைப்பு கைகொடுக்கிறது. அது கிருமிகளின் தாக்குதலை எதிர்த்துப் போராடுகிறது; பற்பல தொற்று நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
அதேபோல் கிறிஸ்தவர்கள், பைபிளுக்கு முரணான சிந்தனைகளையும், மதிப்பீடுகளையும், ஆன்மீக நலனுக்கு கேடு விளைவிக்கும் பிரச்சினைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். (2 கொரிந்தியர் 11:3) நம் மனமும் இருதயமும் சந்திக்கும் இப்படிப்பட்ட போராட்டங்களில் அனுதினமும் வெற்றிபெற நாம் ஆன்மீக தற்காப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
முக்கியமாக நம் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட தற்காப்பு தேவை; ஏனென்றால் இவ்வுலக ஆவியை எதிர்ப்பதற்கான ஆன்மீக தற்காப்பு அமைப்பை அவர்கள் பிறவியிலேயே பெறுவதில்லை. (எபேசியர் 2:2) ஆகவே அவர்கள் வளருகையில், அவர்களாகவே தற்காப்பு அமைப்பை உருவாக்கிக்கொள்ள பெற்றோர் உதவுவது அவசியம். அந்தத் தற்காப்புகளுக்கு அடிப்படையாக விளங்குவது எது? ‘யெகோவா ஞானத்தைத் தருகிறார்; . . . தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்’ என பைபிள் விளக்குகிறது. (நீதிமொழிகள் 2:6, 8) கடவுள் தரும் ஞானம் இளையவர்களைக் காப்பாற்றும்; அந்த ஞானம் இல்லையேல், கெட்ட தோழர்களின் சகவாசம், ஒத்த வயதினரின் செல்வாக்கு, தீங்கான பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு அவர்கள் அடிபணிந்து விடுவார்கள். பெற்றோர் எவ்வாறு யெகோவாவின் வழிநடத்துதலை ஏற்று அவர் தரும் ஞானத்தைப் பிள்ளைகளுக்குப் புகட்ட முடியும்?
நல்ல தோழர்களைத் தேர்ந்தெடுத்தல்
இளவட்டங்களுக்கு மற்ற இளசுகளின் வட்டங்களில் இருக்கத்தான் பிடிக்கும்; இது இயல்பே. ஆனால் அவர்களைப் போன்றே அனுபவமில்லாதிருக்கும் மற்றவர்களுடன் மட்டுமே பழகுவது எவ்விதத்திலும் தெய்வீக ஞானத்தைப் பெறவும் பயன்படுத்தவும் உதவாது. “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்” என ஒரு நீதிமொழி எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 22:15) பிள்ளைகள் தெய்வீக ஞானத்தோடு தோழர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பெற்றோர் சிலர் எவ்வாறு உதவியிருக்கிறார்கள்?
டான்a என்ற தகப்பன் இவ்வாறு சொன்னார்: “என்னுடைய பையன்கள் மற்ற பையன்களுடன்தான் அதிக நேரம் செலவிட்டார்கள்; ஆனாலும் எங்கள் வீட்டில் எங்கள் கண் முன்பாகவே இருந்தார்கள். இளசுகளுக்காக எங்கள் வீட்டின் கதவு எப்போதும் திறந்திருந்தது; எனவே வீடு நிறைய இளசுகள் கூட்டம்தான். அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தோம், சொந்த வீடு போலவே நினைக்கும் அளவுக்கு நன்கு கவனித்தோம். ஒரே கூச்சலும் கும்மாளமுமாக இருந்தது என்னவோ உண்மைதான்; ஆனால் எங்கள் பிள்ளைகள் பாதுகாப்பான சூழலில் பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக அதையெல்லாம் சந்தோஷமாகப் பொறுத்துக்கொண்டோம்.”
ப்ரையன், மேரி என்ற தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள்; அவர்களை வளர்ப்பது எப்போதுமே சுலபமாக இருக்கவில்லை என இருவரும் தயங்காமல் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் சொன்னதாவது: “டீனேஜ் முடியப்போகும் வயதிலிருந்த எங்களுடைய மகள் ஜேனுக்கு சபையில் அவ்வளவாக நண்பர்கள் இல்லை. ஏனென்றால் அவளுடைய வயதில் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். ஆனாலும் சூஸன் என்ற தோழி இருந்தாள். அவள் எல்லாரோடும் கலகலப்பாக நன்கு பேசிப் பழகுவாள். அவளுடைய பெற்றோர் எங்களைப் போல் கண்டிப்பானவர்கள் அல்ல. ராத்திரி லேட்டாக வருவது, குட்டையான ஸ்கர்ட்டுகள் போட்டுக்கொள்வது, தரம் குறைந்த பாட்டுகளைக் கேட்பது, கேள்விக்கிடமான சினிமாக்களைப் பார்ப்பது என எல்லா விஷயத்திலும் சூஸனுக்கு ஜேனைவிட அதிக சுதந்திரம் இருந்தது. அதனால் ரொம்ப காலத்திற்கு ஜேனால் எங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் ரொம்ப கண்டிப்பானவர்கள் என்றும் சூஸனுடைய பெற்றோர்தான் மகளின் மனசைப் புரிந்து நடந்துகொள்கிறவர்கள் என்றும் அவள் நினைத்தாள். ஆனால் சூஸன் பிரச்சினைகளில் மாட்டிக்கொண்ட போதுதான் ஜேனுக்கு எல்லாம் புரிந்தது. எங்களுடைய கண்டிப்பெல்லாம் அவளுடைய நல்லதுக்குத்தான் என்பதை உணர்ந்தாள். நாங்கள் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருந்தது எவ்வளவு நல்லதாகிவிட்டது. அவளுக்கு எது நல்லதென எங்களுக்குப் பட்டதோ அதையே செய்ததை நினைத்து இப்போது ரொம்ப சந்தோஷப்படுகிறோம்.”
தோழர்கள் விஷயத்தில் பெற்றோர் சொல்வதைக் கேட்பது எவ்வளவு புத்திசாலித்தனம் என்பதை ஜேனைப் போலவே இன்னும் அநேக இளைஞர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். “ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்” என ஒரு நீதிமொழி சொல்கிறது. (நீதிமொழிகள் 15:31) தெய்வீக ஞானம் நல்ல நண்பர்களைத் தேடிச் செல்ல இளைஞர்களுக்கு உதவும்.
ஒத்த வயதினரின் செல்வாக்கைச் சமாளித்தல்
தோழர்களின் கூட்டுறவும் ஒத்த வயதினரின் செல்வாக்கும் நெருங்கிய தொடர்புடையவை. மற்ற பிள்ளைகளைப் போலவே இருக்க வேண்டுமென்ற அழுத்தம் நம் பிள்ளைகளின் தற்காப்பு அமைப்பைச் சதா தாக்கிக்கொண்டு இருக்கிறது. பொதுவாக இளைஞர்கள் பிற இளைஞர்களின் மனதுக்குப் பிடித்தபடி நடந்துகொள்ளவே விரும்புவார்கள்; ஆகவே மற்ற இளைஞர்களின் செல்வாக்கு அவர்களை இவ்வுலகின் அச்சுக்குள் திணித்துவிடும்.—நீதிமொழிகள் 29:25.
‘உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோகிறது’ என பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. (1 யோவான் 2:17) ஆகவே பிள்ளைகள் இவ்வுலக கருத்துக்களால் அளவுக்கதிகமாக பாதிக்கப்படாதபடி பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, கிறிஸ்தவர்களுக்கு ஏற்றபடி சிந்திக்கவும் உதவிசெய்ய வேண்டும்; எப்படி?
ரிச்சர்ட் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “என் மகள் எப்போது பார்த்தாலும் மற்ற பெண்களைப் போல் டிரஸ் பண்ண விரும்பினாள். ஆகவே ஒவ்வொரு முறையும் அவள் எங்களிடம் கேட்டபோது அதன் குறைநிறைகளைப் பொறுமையாக எடுத்துச் சொன்னோம். ஒருசில ஃபாஷன்கள் ஏற்றதாக இருந்தபோதும், சில வருடங்களுக்கு முன்பு கேட்ட இந்த அறிவுரையைப் பின்பற்றினோம்: ‘ஞானமுள்ள நபர் புதிய ஃபாஷனைப் பின்பற்றும் முதல் ஆளாகவும் இருக்க மாட்டார், அதை விட்டுவிடும் கடைசி ஆளாகவும் இருக்க மாட்டார்.’”
பாலின் என்ற தாய் தன் பிள்ளைகளுக்கு வேறொரு விதத்தில் உதவினார். அவர் சொல்வதாவது: “பிள்ளைகளுக்குப் பிடித்தமான விஷயங்களில் நானும் ஆர்வம் காட்டினேன். தவறாமல் அவர்களுடைய ரூமுக்குப் போய் அவர்களிடம் பேசினேன். இவ்வாறு நீண்ட நேரம் அடிக்கடி பேசியது அவர்களுடைய கருத்துக்களைச் சரிப்படுத்த உதவியது; வேறு கோணங்களிலிருந்து விஷயங்களைப் பார்க்க என்னால் அவர்களுக்கு உதவ முடிந்தது.”
ஒத்த வயதினரின் செல்வாக்கு எப்போதுமே இருக்கத்தான் செய்யும். ஆகவே பெற்றோர் ‘உலகின் தர்க்கங்களைத் தகர்த்தெறிய’ தொடர்ந்து போராட வேண்டியிருக்கும்; ‘கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் [எண்ணங்களை] கொண்டுவர’ பிள்ளைகளுக்கு உதவவும் போராட வேண்டியிருக்கும். (2 கொரிந்தியர் 10:5, பொது மொழிபெயர்ப்பு) ஆனால் ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருப்பதன்’ மூலம் பெற்றோரும் சரி பிள்ளைகளும் சரி இந்த முக்கிய போராட்டத்தில் வெற்றி பெறுவதற்குப் பலத்தைப் பெற முடியும்.—ரோமர் 12:12; சங்கீதம் 65:2.
வசீகரிக்கும் பொழுதுபோக்கு
பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோருக்குச் சவாலாக அமையும் மூன்றாவது விஷயம் பொழுதுபோக்காகும். சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு என்றால் கொள்ளை ஆசை. வளர்ந்த பிள்ளைகள்கூட பொழுதுபோக்குகளில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறார்கள். (2 தீமோத்தேயு 2:22) ஆனால் அந்த ஆசையையும் ஆர்வத்தையும் ஞானமில்லாத விதத்தில் திருப்தி செய்வது அவர்களது ஆன்மீக தற்காப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்திவிடலாம். முக்கியமாக இரு வழிகளில் ஆபத்து வருகிறது.
முதலாவதாக, பெரும்பாலான பொழுதுபோக்குகள் இவ்வுலகின் சீர்கெட்ட ஒழுக்கத் தராதரங்களையே ஆதரிக்கின்றன. (எபேசியர் 4:17-19) ஆனாலும் மகிழ்ச்சியூட்டும் விதத்திலும் சுண்டியிழுக்கும் விதத்திலும் தயாரித்து அளிக்கப்படுகின்றன. இவை இளைஞருக்குப் பெரும் ஆபத்தாக இருக்கின்றன; ஏனென்றால் அவற்றில் மறைந்திருக்கும் படுகுழிகளை அவர்களால் இனங்கண்டுகொள்ள முடிவதில்லை.
இரண்டாவதாக, பொழுதுபோக்கிற்காகச் செலவிடப்படும் நேரமே பிரச்சினையாக இருக்கலாம். சிலருக்குச் சிரிப்பும் கும்மாளமும்தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாக ஆகிவிடுகின்றன; அவர்களது நேரத்தையும் சக்தியையும் அளவுக்கதிகமாக உறிஞ்சிவிடுகின்றன. “தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல” என ஒரு நீதிமொழி எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 25:27) அதேபோல் மிகுதியான பொழுதுபோக்கு ஆன்மீக பசியைப் போக்கி மனச் சோம்பலை ஏற்படுத்தும். (நீதிமொழிகள் 21:17; 24:30-34) இவ்வுலகை முழுமையாக அனுபவிப்பது கடவுளுடைய புதிய உலகில் கிடைக்கப்போகும் ‘நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்வதிலிருந்து’ இளைஞர்களைத் தடை செய்யும். (1 தீமோத்தேயு 6:12, 19) இந்தச் சவாலை பெற்றோர் எவ்வாறு சமாளித்திருக்கிறார்கள்?
மாரி கார்மன் என்பவர் மூன்று பெண் பிள்ளைகளுக்குத் தாய். அவர் சொல்வதாவது: “எங்கள் மகள்கள் சந்தோஷமாக, நல்ல விதத்தில் பொழுதைக் கழிக்க வேண்டுமென விரும்பினோம். ஆகவே தவறாமல் குடும்பமாக எங்காவது போய் வந்தோம். சபையிலுள்ள நண்பர்களுடனும் அவர்கள் நேரம் செலவிட்டார்கள். ஆனால் பொழுதுபோக்கை அதற்குரிய இடத்தில் வைத்தோம். உணவுக்குப் பின் சாப்பிடும் இனிப்பு ருசியாக இருந்தாலும் அதையே சாப்பாட்டைப் போல் சாப்பிட முடியாது; பொழுதுபோக்கும் அப்படித்தான் என்பதை உணர்த்தினோம். எங்கள் மகள்கள் வீட்டிலும் பள்ளியிலும் சபையிலும் வேலை செய்ய கற்றுக்கொண்டார்கள்.”
டானும் ரூத்தும்கூட பொழுதுபோக்கிற்குக் கவனம் செலுத்தினார்கள். “சனிக்கிழமைகளைக் ‘குடும்ப நாளாக’ எப்போதும் ஒதுக்கிவிடுவோம். காலையில் வெளி ஊழியத்திற்குப் போவோம், மதியானத்தில் ஸ்விம்மிங் போவோம், சாயங்காலம் ஸ்பெஷல் மீல் சாப்பிடுவோம்” என சொல்கிறார்கள்.
இந்தப் பெற்றோர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, தரமான பொழுதுபோக்கை ஏற்பாடு செய்வதும் அதை கிறிஸ்தவ வாழ்க்கையில் சரியான இடத்தில் வைப்பதும் எவ்வளவு அவசியம் என்பது தெரிகிறது.—பிரசங்கி 3:4; பிலிப்பியர் 4:5, NW.
யெகோவா மீது நம்பிக்கை வையுங்கள்
ஆன்மீக தற்காப்புகளைப் பெறுவதற்கு அநேக வருடங்கள் எடுக்கும். தெய்வீக ஞானத்தை உடனடியாகத் தரும் அற்புத டானிக் எதுவும் இல்லை; பரலோக தகப்பன் மீது நம்பிக்கை வைக்க பிள்ளைகளைத் தூண்டும் அற்புத மாத்திரையும் இல்லை. பெற்றோர்தான் ‘கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்க்க’ வேண்டும். (எபேசியர் 6:4) இங்கே “போதனை” என்பது, காரியங்களைக் கடவுள் பார்க்கும் விதமாகப் பார்க்க பிள்ளைகளுக்கு உதவுவதைக் குறிக்கிறது. பெற்றோர் எவ்வாறு இதைச் செய்யலாம்?
குடும்ப பைபிள் படிப்பைத் தவறாமல் நடத்துவது வெற்றிக்கான முக்கிய வழியாகும். இப்படிப்பு, ‘கடவுளுடைய வேதத்திலுள்ள அதிசயங்களை பார்க்கும்படி பிள்ளைகளின் கண்களைத் திறக்கிறது.’ (சங்கீதம் 119:18) தியேகோ என்பவர் குடும்பப் படிப்பை மிக முக்கியமானதாகக் கருதினார்; அதன் மூலம், யெகோவாவிடம் நெருங்கிவர தன் பிள்ளைகளுக்கு உதவினார். “குடும்பப் படிப்பை நடத்த மிக நன்றாகத் தயாரித்தேன். பைபிள் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்வதன் மூலம் பைபிள் கதாபாத்திரங்களைத் தத்ரூபமாக்கினேன். விசுவாசத்தில் நிலைத்திருந்த அவர்களுடைய வாழ்க்கையையும் தங்கள் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்படி பிள்ளைகளை உற்சாகப்படுத்தினேன். இது, யெகோவாவை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என்பதைப் பிள்ளைகளின் மனதில் நன்கு பதிய வைத்தது.”
பிள்ளைகள் மற்ற நேரங்களிலும் கற்றுக்கொள்கிறார்கள். யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை “வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும்” பெற்றோர் பேச வேண்டுமென மோசே அறிவுறுத்தினார். (உபாகமம் 6:7) ஒரு தகப்பன் இவ்வாறு விளக்கினார்: “என் மகன் எடுத்தவுடன் மனசு திறந்து பேசிட மாட்டான்; கொஞ்ச நேரம் ஆகும். நாங்கள் வாக்கிங் போகும்போது அல்லது எதையாவது சேர்ந்து செய்யும்போதுதான் மெல்ல மெல்ல பேச ஆரம்பிப்பான். இந்த சந்தர்ப்பங்களில் நிறைய விஷயங்களைப் பேசுவோம்; இது இருவருக்குமே பிரயோஜனம் அளிக்கிறது.”
பெற்றோர் செய்யும் ஜெபங்களும் பிள்ளைகள் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். பெற்றோர் மனத்தாழ்மையோடு கடவுளிடம் உதவியும் மன்னிப்பும் கேட்டு செய்யும் ஜெபங்கள் ‘அவர் உண்டென்று விசுவாசிக்க’ பிள்ளைகளைத் தூண்டும். (எபிரெயர் 11:6) பிள்ளைகளை நன்கு வளர்த்த பெற்றோரில் பெரும்பாலோர், குடும்பமாகச் சேர்ந்து ஜெபம் செய்வது ரொம்ப முக்கியம் என்கின்றனர்; அதிலும் ஸ்கூல் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பிள்ளைகளுக்குக் கவலைதரும் மற்ற விஷயங்களையும் சொல்லி ஜெபம் செய்வது முக்கியம் என்கின்றனர். ‘பிள்ளைகள் ஸ்கூலுக்குக் கிளம்புவதற்கு முன்பு அவர்களுடன் சேர்ந்து எப்போதும் என் மனைவி ஜெபம் செய்வாள்’ என்று ஒரு தகப்பன் கூறினார்.—சங்கீதம் 62:8; 112:7.
“நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக”
பொதுவாக, பெற்றோர் அனைவரும் தவறுகள் செய்வதும், சில பிரச்சினைகளை இன்னும் நன்றாக சமாளித்திருக்கலாமே என்று வருந்துவதும் உண்மைதான். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்யும்படியும் ‘நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல்’ இருக்கும்படியும் பைபிள் நமக்கு அறிவுறுத்துகிறது.—கலாத்தியர் 6:9.
இருந்தாலும் சில சமயங்களில், பிள்ளைகளைப் பெற்றோரால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை; அப்போது அவர்கள் சோர்ந்துபோய் முயற்சியைக் கைவிட்டுவிட நினைக்கலாம். இளைய தலைமுறையினர் வித்தியாசமானவர்கள், இவர்களைச் சமாளிப்பது ரொம்ப கஷ்டம் என சுலபமாக முடிவுகட்டிவிடலாம். ஆனால் உண்மையில் இன்றைய பிள்ளைகளுக்கு அன்றைய சந்ததியின் அதே பலவீனங்கள்தான் இருக்கின்றன; அதே கவர்ச்சிகளைத்தான் எதிர்ப்படுகிறார்கள்; ஒரே வித்தியாசம், கீழ்ப்படியாமல் போவதற்கான தூண்டுதல் இன்று அதிகரித்திருக்கலாம். ஆகவே ஒரு தகப்பன் தன் மகனைக் கண்டித்த பிறகு இப்படிச் சாந்தமாக சொன்னார்: “உன் வயசில் இருக்கும்போது நான் செய்ய ஆசைப்பட்டதைத்தான் இப்போது நீயும் ஆசைப்படுகிறாய்.” பெற்றோருக்குக் கம்ப்யூட்டர்களைப் பற்றி அதிகம் தெரியாதிருக்கலாம், ஆனால் அபூரண மனதின் ஆசைகளைப் பற்றி நன்றாகவே தெரியும்.—மத்தேயு 26:41; 2 கொரிந்தியர் 2:11.
சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் அறிவுரைகளை அசட்டை செய்யலாம், அவர்கள் பேச்சைக் கேட்காமல் கலகமும் செய்யலாம். இச்சந்தர்ப்பத்திலும் பெற்றோர் பொறுமையோடு நடந்துகொள்ள வேண்டும். அநேக பிள்ளைகள் ஆரம்பத்தில் அறிவுரைகளை அசட்டை செய்தாலும் எதிர்த்தாலும் இறுதியில் திருந்திவிடுகிறார்கள். (நீதிமொழிகள் 22:6; 23:22-25) மாத்யூ என்பவர் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் இளைஞர். அவர் சொல்வதாவது: “டீனேஜராக இருக்கையில், என் பெற்றோர் என்னை அநியாயமாக கட்டுப்படுத்துவதாக தோன்றியது. என்னுடைய ஃபிரெண்டுகளின் பெற்றோர் சுதந்திரம் தரும்போது ஏன் இவர்கள் மட்டும் தர மாட்டேன் என்கிறார்கள் என நினைத்தேன். சில சமயங்களில் என்னைத் தண்டிப்பதற்காக எனக்குப் பிடித்த படகு சவாரிக்குப் போக விடாமல் செய்தார்கள்; அப்போது எனக்குப் பயங்கர எரிச்சல் வந்தது. ஆனால் அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவர்கள் என்னைக் கண்டித்து வளர்த்தது நல்லதுக்குத்தான், அந்தச் சமயத்திலே அது எனக்கு அவசியமானதும்கூட என்பதைப் புரிந்துகொள்கிறேன். எனக்குத் தேவையான வழிநடத்துதலைத் தகுந்த நேரத்தில் அவர்கள் கொடுத்ததற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.”
ஆன்மீக ரீதியில் தீங்கிழைக்கும் சூழலில் நம் பிள்ளைகள் சிலசமயங்களில் இருக்க நேரிடுகிறது; என்றாலும் அவர்கள் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக வளர முடியும் என்பது நிச்சயம். பைபிள் வாக்குறுதி தருகிற விதமாக, தெய்வீக ஞானம் அவர்களுக்கு ஆன்மீக தற்காப்பாய் அமையும். “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கு . . . தப்புவிக்கப்படுவாய்.”—நீதிமொழிகள் 2:10-12, 15ஆ.
குழந்தையை ஒன்பது மாதம் வயிற்றில் சுமப்பது சாமானிய விஷயமல்ல. அதோடு அடுத்த 20 ஆண்டுகளுக்கு அக்குழந்தையால் துன்பத்தையும் இன்பத்தையும் மாறி மாறி அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால் கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நேசிப்பதால் அவர்களை தெய்வீக ஞானத்தின் உதவியோடு பாதுகாக்க முடிந்தளவு முயற்சி செய்கிறார்கள். முதிர்வயதில் அப்போஸ்தலனாகிய யோவான் தன் ஆன்மீக பிள்ளைகளைப் பற்றி பின்வருமாறு சொன்னார்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.” (3 யோவான் 4) இப்படித்தான் கிறிஸ்தவ பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் பற்றி உணருகிறார்கள்.
[அடிக்குறிப்பு]
a சிலருடைய பெயர்கள் இக்கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 24-ன் படம்]
“இளசுகளுக்காக எங்கள் வீட்டின் கதவு எப்போதும் திறந்திருந்தது; எனவே வீடு நிறைய இளசுகள் கூட்டம்தான்”
[பக்கம் 25-ன் படம்]
பிள்ளைகளுக்குப் பிடித்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள்
[பக்கம் 26-ன் படங்கள்]
“குடும்பப் படிப்பை நடத்துவதற்காக மிக நன்றாக தயாரித்தேன்”