பெற்றோரே—பிள்ளைகளுக்குச் சிறந்த முன்மாதிரியாக இருங்கள்
குழந்தை வளர்ப்பு பற்றிய ஒரு புத்தகத்தை மறுபார்வை செய்து டைம் பத்திரிகை இவ்வாறு கூறியது: “குழந்தை வளர்ப்புக்கான சிறந்த வழி பற்றி நூறு ஆண்டுகளாக செய்துவந்த ஆராய்ச்சியை மனநல மருத்துவர்கள் நிறுத்திவிடலாம்—அதைக் கண்டுபிடித்துவிட்டதால் அல்ல, அப்படியொன்று இல்லாததால்.” பிள்ளைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களுடைய மதிப்பீடுகளைவிட, சகாக்களின் மதிப்பீடுகளையே பெரிதும் வரவேற்கிறார்கள் என அப்புத்தகம் விவாதிக்கிறது.
சகாக்களின் அழுத்தம் சக்திமிகுந்ததுதான், இதை யாருமே மறுக்க முடியாது. (நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33) “ஒரு டீனேஜர் தெய்வம்போல் மதிக்கிற ஏதேனும் ஒன்று இருக்கிறதென்றால், அது மற்றவர்களுடன் ஒத்துப்போவதுதான். . . . அவர்களைப் பொறுத்தவரை, மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதைவிட சாவது எவ்வளவோ மேல்” எனக் குறிப்பிட்டார் பத்திரிகை எழுத்தாளர் வில்லியம் ப்ரெளன். இயந்திரகதியான இன்றைய உலகில், பெற்றோர் தங்களுடைய வீட்டை அன்பும் சந்தோஷமும் குடியிருக்கும் இடமாக மாற்றுவதுமில்லை பிள்ளைகளிடம் போதுமான நேரத்தை செலவிடுவதுமில்லை. இதனால், சகாக்களின் தீய வலையில் தங்கள் பிள்ளைகள் சிக்கிவிடுவதற்கு பெற்றோரே காரணமாகிவிடுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, இந்தக் “கடைசி நாட்களில்” குடும்பங்கள் ஆபத்தில் இருக்கின்றன; பைபிள் முன்னறிவித்தபடி பணம், சுகபோகம், சுயநலம் ஆகியவற்றில் மக்கள் மூழ்கிப்போயிருப்பதே அதற்குக் காரணம். அப்படியானால், பிள்ளைகள் “தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும் [“இயல்பான பாசமில்லாதவர்களாயும்,” NW]” இருப்பதைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டுமா?—2 தீமோத்தேயு 3:1-3.
பைபிளில் ‘இயல்பான பாசம்’ என பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை குடும்பப் பாசத்தைக் குறிக்கிறது. இந்தப் பாசம் ஓர் இயல்பான பந்தமாகும்; இந்தப் பாசம் இருப்பதனாலேயே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைக் கவனிப்பதற்கும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரை உணர்ச்சி ரீதியில் பெருமளவு சார்ந்திருப்பதற்கும் உந்துவிக்கிறது. ஆனால் பெற்றோரிடம் இந்தப் பாசம் கிடைக்காதபோது, அதைப் பெற பிள்ளைகள் வேறு யாரிடமாவது செல்கிறார்கள்—பொதுவாக, தங்கள் சகாக்களிடம் செல்கிறார்கள்; பெரும்பாலும் அவர்களுடைய மதிப்பீடுகளையும் மனப்பான்மைகளையுமே பின்பற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள். பெற்றோர் தங்கள் குடும்பத்தை பைபிள் நியமங்களின்படி வழிநடத்தினால் பெரும்பாலும் இந்நிலையைத் தவிர்க்க முடியும்.—நீதிமொழிகள் 3:5, 6.
குடும்பம்—கடவுளின் ஏற்பாடு
ஆதாம் ஏவாளை, கணவன் மனைவியாகச் சேர்த்து வைத்த பின், அவர்களுக்குக் கடவுள் இந்தக் கட்டளை கொடுத்தார்: ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.’ அதன் பிறகு, அப்பா, அம்மா, பிள்ளைகள் என குடும்பம் உருவாக ஆரம்பித்தது. (ஆதியாகமம் 1:28; 5:3, 4; எபேசியர் 3:14, 15) பிள்ளைகளை வளர்ப்பதற்கு உதவும் சில அடிப்படை உணர்வுகளை கொடுத்து மனிதரை யெகோவா படைத்தார். என்றாலும், மிருகங்களைப் போலின்றி, மனிதருக்கோ கூடுதல் உதவி தேவைப்படுகிறது; ஆகவே எழுத்தில் வடிக்கப்பட்ட சில வழிமுறைகளை அவர்களுக்குக் கொடுத்தார். அதில், ஒழுக்க மற்றும் ஆன்மீக விஷயங்களின் பேரில் பிள்ளைகளுக்குத் தேவையான அறிவுரைகளும், அவர்களை தகுந்த முறையில் சிட்சித்து வளர்ப்பதற்கான அறிவுரைகளும் உள்ளன.—நீதிமொழிகள் 4:1-4.
குறிப்பாக, தகப்பன்மார்களுக்கென கடவுள் இவ்வாறு சொன்னார்: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.” (உபாகமம் 6:6, 7; நீதிமொழிகள் 1:8, 9) முதலாவதாக, கடவுளுடைய பிரமாணத்தைப் பெற்றோர் தங்களுடைய இருதயத்தில் எழுதிவைக்க வேண்டியிருந்ததைக் கவனியுங்கள். இது ஏன் முக்கியமானதாய் இருந்தது? பொதுவாக, உதட்டளவில் கற்றுக்கொடுப்பதல்ல, ஆனால் இருதயப்பூர்வமாக கற்றுக்கொடுப்பதே மற்றவர்களைச் செயல்படத் தூண்டுகிறது. பெற்றோர் அப்படிக் கற்றுக்கொடுத்தால் மட்டுமே, அது பிள்ளைகளுடைய இருதயத்தில் பதியும். அத்தகைய பெற்றோர்களே பிள்ளைகளுக்குச் சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்வார்கள்; பெற்றோருடைய சொல் ஒன்று, செயல் வேறு என இருந்தால், அதைப் பிள்ளைகள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.—ரோமர் 2:21.
பிள்ளைகளுக்கு சிசுப் பருவத்திலிருந்தே “கர்த்தருக்கேற்ற பயிற்சியும் சிட்சையும் அறிவுரையும் புத்திமதியும்” கொடுத்து கற்பிக்கும்படி கிறிஸ்தவ பெற்றோர்களுக்குச் சொல்லப்படுகிறது. (எபேசியர் 6:4, தி ஆம்ப்ளிஃபைட் பைபிள்; 2 தீமோத்தேயு 3:15) என்ன, சிசுப் பருவத்திலிருந்து கற்பிக்க வேண்டுமா? ஆம்! “பெற்றோர்களாகிய நாம் சில சமயங்களில் பிள்ளைகளை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. அவர்களுக்கு எந்தத் திறமையும் இல்லையென நினைத்துவிடுகிறோம். ஆனால், அவர்களுக்குத் திறமை இருக்கிறது, நாம் அதைப் பயன்படுத்த வேண்டும்” என எழுதினார் ஒரு தாய். ஆம், கற்றுக்கொள்வதென்றால் பிள்ளைகளுக்கு கொள்ளைப் பிரியம். தேவ பயமுள்ள பெற்றோர் கற்றுத்தருகையில் மற்றவர்களை நேசிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகள் தங்களுக்கு பெற்றோர் வைக்கும் கட்டுப்பாடுகளைப் பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள். ஆகவே, பிள்ளைகளை நன்கு வளர்க்கத்தெரிந்த பெற்றோர், அன்பான நண்பர்களாயும் நன்கு பேச்சுத்தொடர்பு கொள்கிறவர்களாயும் பொறுமையுடன், அதேசமயத்தில் கண்டிப்புடன் கற்றுக்கொடுக்கிற ஆசிரியர்களாயும் இருக்க முயலுகிறார்கள்; பிள்ளைகள் செழித்தோங்குவதற்கு ஏற்ற நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.a
உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்திடுங்கள்
ஜெர்மனியில், ஒரு தலைமை ஆசிரியர் கரிசனையுடன் பெற்றோர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், இவ்வாறு குறிப்பிட்டார்: “அன்பான பெற்றோர்களே, பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அதில் மிகுந்த அக்கறை காட்டும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். உங்களுக்கே உரிய இந்த [பொறுப்பை] டிவி-யிடமோ தெருப் பிள்ளைகளிடமோ விட்டுவிடாதீர்கள்.”
டிவி-யிடம் அல்லது தெருப் பிள்ளைகளிடம் பிள்ளையை விட்டுவிடுவது, இந்த உலகத்தின் ஆவியால், அதாவது மனப்போக்கினால் பிள்ளை பாதிக்கப்படுவதற்கு நாமே இடங்கொடுப்பதுபோல் இருக்கிறது. (எபேசியர் 2:1, 2) கடவுளுடைய ஆவிக்கு நேரெதிரான இந்த உலகத்தின் ஆவி, பலத்த காற்றைப் போன்றது; அது ‘லெளகிக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமான’ சிந்தை எனும் விதைகளை, பேதைகளும் முட்டாள்களுமானவர்களின் மனதிலும் இருதயத்திலும் எக்கச்சக்கமாகத் தூவி விடுகிறது. (யாக்கோபு 3:15) களைகளைப் போன்ற இந்தச் சிந்தைகள் காலப்போக்கில் இருதயத்தைப் பாழாக்கிவிடுகிறது. இருதயத்தில் விதைக்கப்படும் விதைகளைப் பொறுத்து கிடைக்கும் பலாபலன்களைப் பற்றி இயேசு இவ்வாறு விளக்கினார்: “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக் காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.” (லூக்கா 6:45) ஆகவே, பைபிள் நமக்கு தரும் அறிவுரை இதுதான்: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.”—நீதிமொழிகள் 4:23.
பிள்ளைகள் பொதுவாக பிள்ளைகளாகவே நடந்துகொள்வார்கள், சில பிள்ளைகள் முரண்டுபிடிக்கிறவர்களாக, ஏன் அடங்காதவர்களாகக்கூட இருப்பார்கள். (ஆதியாகமம் 8:21) அப்படியானால், பெற்றோர்கள் என்ன செய்யலாம்? “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:15) ‘பிள்ளையை முரட்டுத்தனமாக அடித்து வளர்த்ததெல்லாம் அந்தக் காலம்’ என சிலர் கருதுகிறார்கள். பார்க்கப்போனால், மனதை நோகடிக்கிற வார்த்தைகளைப் பயன்படுத்துவது, கொடுமைப்படுத்துவது, முரட்டுத்தனமாக நடத்துவது போன்றவற்றை பைபிள் துளிகூட ஆதரிப்பதில்லை. “பிரம்பு” என்ற வார்த்தை சில சமயங்களில் நிஜமாக அடிப்பதை அர்த்தப்படுத்தினாலும், பெற்றோரின் அதிகாரத்தையே அது குறிக்கிறது; அதாவது, பிள்ளையின் நித்திய நன்மை கருதி கண்டிப்புடன், அதே சமயத்தில் அன்புடன் தகுந்த விதத்தில் அதிகாரம் செலுத்துவதைக் குறிக்கிறது.—எபிரெயர் 12:7-11.
பிள்ளைகளோடு பொழுதுபோக்கில் ஈடுபட்டு மகிழுங்கள்
பிள்ளைகளின் வளர்ச்சிக்கு விளையாட்டும் பொழுதுபோக்கும் அவசியம் என்பது யாவரும் அறிந்ததே. ஞானமுள்ள பெற்றோர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் பிள்ளைகளோடு பொழுதுபோக்கில் ஈடுபடுகிறார்கள்; இதன் மூலம் பெற்றோர்-பிள்ளை பந்தத்தை வலுப்படுத்துகிறார்கள். ஆக, சரியான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கத் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் எந்தளவு சந்தோஷப்படுகிறார்கள் என்பதையும் பெற்றோர் காட்டலாம்.
யெகோவாவின் சாட்சியான ஒரு அப்பா, வேலை முடிந்து வந்த பிறகு தன் மகனுடன் பெரும்பாலும் பந்து விளையாடுவதாகக் கூறுகிறார். ‘என் பிள்ளைகளோடு சேர்ந்து செஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடியிருக்கிறேன்’ என ஒரு அம்மா கூறுகிறார். வளர்ந்த ஒரு மகள் இவ்வாறு சொல்கிறாள்: ‘நான் சிறுமியாக இருந்தபோது வீட்டில் எல்லாரும் சேர்ந்து ஜாலியாக சைக்கிள் ஓட்டினோம்.’ இந்தப் பிள்ளைகளெல்லாரும் இப்போது பெரியவர்களாகி விட்டபோதிலும் பெற்றோர் மீதும் யெகோவா மீதும் அவர்களுக்கு இருக்கும் அன்பு மென்மேலும் அதிகரித்து வருகிறது.
உண்மையிலேயே, பிள்ளைகளை நேசிப்பதையும் அவர்களோடு இருக்க சந்தோஷப்படுவதையும் தங்களுடைய சொல்லாலும் செயலாலும் பெற்றோர் காட்டுகையில், அது பிள்ளைகளின் மனதில் அழியா முத்திரையைப் பதித்துவிடுகிறது. உதாரணமாக, உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி ஒன்றில் பயின்ற பட்டதாரிகள் பலர் தாங்கள் முழுநேர ஊழியத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் தங்களுடைய பெற்றோரின் முன்மாதிரியும் ஊக்குவிப்பும்தான் என்று சொன்னார்கள். பிள்ளைகளுக்கு இது எப்பேர்ப்பட்ட ஓர் அருமையான சொத்து, பெற்றோர்களுக்கு இது எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்! பெரியவர்களான பிறகு முழுநேர ஊழியத்தைத் தொடங்குவதற்கு எல்லா பிள்ளைகளுக்குமே சூழ்நிலை ஒத்துவராதுதான்; என்றாலும் தங்களுடைய நெருங்கிய நண்பர்களாகவும் நல்ல முன்னுதாரணங்களாகவும் இருக்கிற, கடவுள் பயமுள்ள பெற்றோர்களிடமிருந்து எல்லா பிள்ளைகளும் நிச்சயம் நன்மை அடைவார்கள், தங்கள் பெற்றோரை மதிப்பார்கள்.—நீதிமொழிகள் 22:6; எபேசியர் 6:2, 3.
ஒற்றைப் பெற்றோரும் வெற்றி காணலாம்
இன்று, அநேக பிள்ளைகள் அம்மாவோ அப்பாவோ இல்லாமல்தான் வளருகிறார்கள். ஒற்றைப் பெற்றோராக ஒரு பிள்ளையை வளர்ப்பது சவாலாக இருந்தாலும், அவர்களும் வெற்றி காணலாம். ஒற்றைப் பெற்றோர்களுக்கு ஊக்கமூட்டும் ஒரு பைபிள் உதாரணம், ஐனிக்கேயாள். இவர் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு யூத கிறிஸ்தவப் பெண்மணி. இவரது கணவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர், அதனால் தன் கணவரிடமிருந்து ஆன்மீக ரீதியில் எந்த ஆதரவும் கிடைத்திருக்காது. இருந்தாலும், தீமோத்தேயுவுக்குக் கற்பிப்பதில் அவர் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தீமோத்தேயுவுக்கு சகாக்கள் சிலரிடமிருந்து சோதனைகள் வந்திருக்கக்கூடும், ஆனால் அவை எதுவும் அவரை பாதிக்காத விதத்தில் அவருடைய தாயும் பாட்டி லோவிசாளும் அவரை சிறுவயதிலிருந்தே மிக அருமையாக வளர்த்திருந்தார்கள்.—அப்போஸ்தலர் 16:1, 2; 2 தீமோத்தேயு 1:5; 3:15.
தகப்பனோ தாயோ வேறு மதத்தவராக இருக்கும் குடும்பத்தில் அல்லது ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் வளர்ந்த இன்றைய இளைஞர் பலர், இளம் தீமோத்தேயுவைப் போலவே சிறந்த குணங்களை வெளிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, 22 வயது ரையனை எடுத்துக்கொள்ளுங்கள்; இவர் ஒரு முழுநேர ஊழியர், தன் அண்ணன் அக்கா உட்பட ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் வளர்ந்தவர். குடிகாரராக இருந்த அப்பா, ரையன் நான்கு வயதிலிருந்தபோதே குடும்பத்தை அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டார். “நாங்கள் எல்லாரும் தொடர்ந்து யெகோவாவைச் சேவிக்க வேண்டும் என்பதுதான் அம்மாவுடைய தீர்மானமாக இருந்தது. அதை மனதில் வைத்தே எங்களை வளர்த்தார்” என ரையன் சொன்னார்.
“உதாரணத்திற்கு, அம்மா, எங்களை நல்ல பிள்ளைகளோடு மட்டுமே சேர அனுமதித்தார். சபைக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, கெட்ட நண்பர்களென பைபிள் குறிப்பிடுகிறவர்ளோடு சேர அனுமதிக்கவே இல்லை. பள்ளிப் படிப்பு பற்றிய சரியான கண்ணோட்டத்தையும் எங்கள் மனதில் பதிய வைத்தார்” என்று ரையன் சொன்னார். ரையனுடைய அம்மா பெரும்பாலும் பிஸியாக இருந்தார், வேலை முடித்து களைப்பாக வீடு திரும்பினாலும், பிள்ளைகளை அன்புடன் விசாரித்து அவர்களைக் கவனிப்பார். “எப்போதும் எங்களோடு உட்கார்ந்து பேச அம்மா ஆசைப்பட்டார். பொறுமையுடன், அதே சமயத்தில் கண்டிப்புடன் கற்றுக்கொடுக்கும் டீச்சராக இருந்தார்; முடிந்த மட்டும் தவறாமல் குடும்ப பைபிள் படிப்பு நடத்தினார். பைபிள் நியமங்களைப் பொறுத்தவரை, ‘விட்டுக்கொடுப்பது’ என்ற விஷயம் அவருடைய அகராதியிலேயே இல்லை” என ரையன் சொன்னார்.
சிறுவனாக இருந்தபோது தன்னுடைய வாழ்க்கையிலும் அண்ணன் அக்காவுடைய வாழ்க்கையிலும் பெருமளவு செல்வாக்கு செலுத்தியது அம்மாதான் என்பதை ரையன் இப்போது நினைத்துப் பார்க்கிறார். அவருடைய அம்மா கடவுளையும் நேசித்தார், பிள்ளைகளையும் நேசித்தார். ஆகையால், கிறிஸ்தவ பெற்றோர்களே—உங்களுடைய துணை விசுவாசியாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, நீங்கள் துணையை இழந்தவராக இருந்தாலும் சரி—உங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கையில் நீங்கள் மனம் தளர்ந்துபோய்விடலாம், அல்லது தற்காலிகமாக ஏதாவது தடங்கல் உங்களுக்கு ஏற்படலாம்; ஆனாலும் முயற்சியைக் கைவிட்டு விடாதீர்கள். சில சமயங்களில், கெட்ட குமாரனைப் போல சில இளைஞர்கள் சத்தியத்தை விட்டு விலகிப்போகலாம். ஆனால், இந்த உலகம் எந்தளவு மட்டமானது, அன்பற்றது என்று தெரிந்தவுடன் திரும்பி வந்துவிடலாம். ஆம், “நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.”—நீதிமொழிகள் 20:7; 23:24, 25; லூக்கா 15:11-24.
[அடிக்குறிப்பு]
a இந்தக் குறிப்புகளின் பேரில் கூடுதலான தகவலுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 55-9-ஐக் காண்க.
[பக்கம் 11-ன் பெட்டி/படங்கள்]
இயேசுவின் பெற்றோர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
யெகோவா தம் மகனை பூமியில் ஒரு மனிதனாக பிறக்க வைப்பதற்கு முன்பு, இயேசுவுக்கு பெற்றோராக இருக்கப்போகிறவர்களை கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆன்மீக சிந்தையுள்ள சாதாரண தம்பதியரை அவர் தேர்ந்தெடுத்தது அக்கறைக்குரிய விஷயம்; அவர்கள் இயேசுவுக்குச் செல்லம்கொடுத்துக் கெடுக்கவில்லை. மாறாக, கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொடுத்தார்கள், கடினமாக உழைப்பதும் உத்தரவாதத்தைச் சுமப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதையும் கற்றுக்கொடுத்தார்கள். (நீதிமொழிகள் 29:21; புலம்பல் 3:27) இயேசுவின் தகப்பனான யோசேப்பு தச்சு வேலையை அவருக்குக் கற்றுக்கொடுத்தார்; ஆகவே, மற்ற பிள்ளைகளை—குறைந்தபட்சம் ஆறு பிள்ளைகளை—கவனிப்பதற்கு யோசேப்பும் மரியாளும் இயேசுவின் உதவியை நிச்சயம் நாடியிருப்பார்கள்.—மாற்கு 6:3.
பஸ்கா ஆசரிப்புக்காக, வருடத்தில் ஒருமுறை குடும்பமாக எருசலேமுக்குச் செல்ல யோசேப்பின் வீட்டார் எப்படி ஒன்றுசேர்ந்து உழைத்திருப்பார்கள் என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் அவர்கள் போகவர 200 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. மொத்தம் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்டோர் இருந்த அந்தக் குடும்பத்தார் அவ்வளவு நீண்ட தூரம் நடந்து செல்வதற்கு முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டியிருந்திருக்கும். (லூக்கா 2:39, 41) கஷ்டத்தின் மத்தியிலும், இப்படிப் பயணித்துச் செல்வதை யோசேப்பும் மரியாளும் முக்கியமானதாய்க் கருதினார்கள் என்பதில் சந்தேகமில்லை; கடந்தகால பைபிள் சம்பவங்களைப் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதற்கு அந்தச் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தியிருப்பார்கள்.
இயேசு வளர்ந்து வருகையில், தம் பெற்றோருக்கு எப்போதுமே “கீழ்ப்படிந்திருந்தார்”; “ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” (லூக்கா 2:51, 52) நிச்சயமாகவே, யோசேப்பும் மரியாளும் யெகோவாவின் நம்பிக்கைக்குப் பாத்திரராக இருந்தார்கள். இன்றைய பெற்றோர்களுக்கு அவர்கள் எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி!—சங்கீதம் 127:4.