ஜொஸீஃபஸின் கவரக்கூடிய விவரப்பதிவு தொகுப்புகள்
வரலாற்று மாணாக்கர்கள் நெடுங்காலமாக ஜொஸீஃபஸின் எழுத்துக்களை ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றனர். கிறிஸ்துவின் மரணத்திற்கு நான்கே வருடங்களுக்குப்பின் பிறந்த அவர், முதல் நூற்றாண்டு யூத தேசத்தைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்துடைய விறைக்கச் செய்யும் நிறைவேற்றத்திற்கு ஒரு கண்கண்ட சாட்சியாக இருந்தார். ஜொஸீஃபஸ் ஓர் இராணுவ படைத்தலைவராக, ஒரு ஸ்தானாதிபதியாக, ஒரு பரிசேயராக, ஓர் அறிஞராக இருந்தார்.
ஜொஸீஃபஸின் எழுத்துக்கள் கவரக்கூடிய விவரங்களால் நிரம்பி இருக்கின்றன. அவை பலஸ்தீனாவின் இட அமைவு மற்றும் புவியியலுக்கு ஓர் இலக்கிய வழிகாட்டுதலை அளிப்பதோடு, பைபிளின் ஆதாரப்பூர்வமான தொகுப்பிற்கு மெருகூட்டுகின்றன. அநேகர் அவருடைய படைப்புகளை தங்களுடைய நூலகத்தில் ஒரு மதிப்புள்ள சேர்க்கையாகக் கருதுவதில் எவ்வித ஆச்சரியமுமில்லை!
அவருடைய ஆரம்ப வாழ்க்கை
ரோம பேரரசரான காலிகலாவுடைய ஆட்சியின் முதலாம் வருடம், பொ.ச. 37-ல் ஜோஸஃப் பென் மத்தையாஸ், அல்லது ஜொஸீஃபஸ் பிறந்தார். ஜொஸீஃபஸின் தந்தை ஓர் ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாய், ஹாஸ்மோனேயிய பிரதான ஆசாரியர் ஜோனத்தானின் வழியில் வந்தவர்களாக உரிமைபாராட்டினார்கள்.
தன்னுடைய பருவ வயதுகளில் இருந்தபோது, ஜொஸீஃபஸ் மோசேயுடைய நியாயப்பிரமாணத்தின் ஓர் ஆர்வமுள்ள மாணாக்கராக இருந்தார். அவர் யூதேய மதத்தின் மூன்று உட்பிரிவுகளை—பரிசேயர், சதுசேயர், எசனேயர்—கவனமாக ஆராய்ந்தார். பின்கூறப்பட்டவர்களின் சாதகமாக, பெரும்பாலும் ஓர் எசனேயராக இருந்த பான்னஸ் என்ற பெயருடைய பாலைவனத் துறவி ஒருவருடன் மூன்று வருடங்கள் தங்குவதற்கு அவர் தீர்மானித்தார். 19 வயதில் இதைக் கைவிட்டு, ஜொஸீஃபஸ் எருசலேமுக்குத் திரும்பி, பரிசேயர்களைச் சேர்ந்துகொண்டார்.
ரோமுக்குச் செல்லுதலும் திரும்புதலும்
யூதேய தேசாதிபதியாகிய ஃபீலிக்ஸ், விசாரணைக்காக பேரரசராகிய நீரோவிடம் அனுப்பியிருந்த யூத ஆசாரியர்களின் சார்பாக பரிந்துபேசும்படி ஜொஸீஃபஸ் பொ.ச. 64-ல் ரோமுக்குப் பயணப்பட்டார். போகும்வழியில் கப்பற்சேதத்தை அனுபவித்து, ஜொஸீஃபஸ் மயிரிழையில் உயிர் தப்பினார். கப்பலிலிருந்த 600 பயணிகளில் 80 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர்.
ஜொஸீஃபஸ் ரோமிற்குச் சென்றிருந்தபோது, ஒரு யூத நடிகர் அவரை நீரோவின் மனைவியாகிய பேரரசி பாப்பீயாவிடம் அறிமுகப்படுத்தினார். அவருடைய அந்த வேலை திட்டத்தின் வெற்றிக்கு அவர்கள் முக்கிய பாகம் வகித்தார்கள். அந்த நகரின் சிறப்பு ஜொஸீஃபஸின்மீது ஒரு நிரந்தரமான எண்ணப்பதிவை ஏற்படுத்தியது.
ஜொஸீஃபஸ் யூதேயாவிற்குத் திரும்பியபோது, ரோமிற்கு எதிராகக் கலகம் செய்வது யூதர்களின் மனதில் ஆணித்தரமாக பதிந்து இருந்தது. ரோமிற்கு எதிராக போரிடுவதன் பயனற்றத்தன்மையை தன் நாட்டவரின் மனதில் பதியச்செய்ய அவர் முயன்றார். அவர்களை அடக்க முடியாதவராகவும், ஒருவேளை தான் ஒரு துரோகியாக எண்ணப்படுவார் என்ற பயத்தோடும், அவர் கலிலேயாவில் யூத துருப்புகளின் படைத்தலைவராக நியமிப்பை ஏற்றுக்கொண்டார். ஜொஸீஃபஸ் அணியைத் திரட்டி, தன் ஆட்களைப் பயிற்றுவித்து, உணவுப்பொருட்கள் முதலியவற்றைச் சேகரித்து, ரோம படைகளுக்கு எதிரான யுத்தத்திற்காக தயார் செய்தார்—ஆனால் எல்லா முயற்சியும் வீண்போயிற்று. கலிலேயா வெஸ்பேஸியனின் படையால் வீழ்த்தப்பட்டது. 47-நாள் முற்றுகைக்குப்பிறகு, ஜோட்டாப்பட்டாவிலுள்ள ஜொஸீஃபஸின் கோட்டை கைப்பற்றப்பட்டது.
அவர் சரணடைந்தபோது, ஜொஸீஃபஸ் அறிவு நுட்பமுடையவராக, விரைவில் வெஸ்பேஸியன் பேரரசராவார் என்று முன்னுரைத்தார். சிறைப்பட்டிருந்தாலும், இந்த முன்னுரைப்பின் காரணமாக தண்டனைக்கு விலக்கப்பட்டிருந்த ஜொஸீஃபஸ், அது உண்மையாக நடந்தேறியபோது விடுவிக்கப்பட்டார். அவருடைய வாழ்க்கையில் அது ஒரு திருப்புமுனையாக இருந்தது. யுத்தத்தின் மீதி சமயத்தில், அவர் ரோமர்களுக்கு மொழிபெயர்த்துரைப்பவராகவும் மத்தியஸ்தராகவும் செயல்பட்டார். வெஸ்பேஸியன் மற்றும் அவருடைய மகன்களாகிய டைட்டஸ், டாமிஷியன் ஆகியோரின் ஆதரவை வெளிக்காட்டுகிறவராய், அவர்களுடைய குடும்ப பெயரான ஃப்ளேவியஸ் என்பதை தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார்.
ஃப்ளேவியஸ் ஜொஸீஃபஸின் படைப்புகள்
ஜொஸீஃபஸின் மிகப் பழமையான எழுத்துக்கள் யூத போர் (The Jewish War) என்ற தலைப்பை உடையது. வருங்கால கலகங்களை ஏற்படுத்துவதற்குத் தயங்கும்படியாகவும், ரோமின் மேம்பட்ட பலத்தைப்பற்றிய ஓர் உரைச்சித்திரத்தை யூதர்களுக்கு அளிக்கும்படியாகவும் இந்த ஏழு தொகுப்புகளை உடைய பதிவை அவர் தயாரித்தார் என்பதாக நம்பப்படுகிறது. இந்த எழுத்துக்கள், அன்டியோக்கஸ் எஃபிஃபேனஸால் (பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில்) எருசலேம் கைப்பற்றப்பட்டதுமுதல் கொந்தளிக்கும் சச்சரவுகளாலான பொ.ச. 67 வரையிலான யூத வரலாற்றை ஆராய்கின்றன. ஒரு கண்கண்ட சாட்சியாக, ஜொஸீஃபஸ் பின்னர் பொ.ச. 73-ல் உச்சக்கட்டத்தை அடைகிற யுத்தத்தைக் கலந்தாராய்கிறார்.
ஜொஸீஃபஸின் படைப்புகளில் மற்றொன்று தி ஜூயிஷ் அன்டிகுவிட்டீஸ்; இது யூதரைப்பற்றிய 20 தொகுப்புகளை உடைய வரலாறாகும். ஆதியாகமத்திலும் சிருஷ்டிப்பிலும் தொடங்கி, ரோமில் யுத்தத்தின் திடீர் தொடக்கம் வரையாக அது தொடர்கிறது. ஜொஸீஃபஸ் பைபிளின் நிகழ்ச்சி தொடரை நெருங்கப் பின்பற்றி, பாரம்பரிய விளக்கங்களையும் புறம்பான கவனிப்புக்குறிப்புகளையும் சேர்க்கிறார்.
ஜொஸீஃபஸ் வெறுமனே வாழ்க்கை (Life) என்ற தலைப்பை உடைய ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சித் தொடரை எழுதினார். அதில் அவர் யுத்தத்தின்போது தான் எடுத்த நிலைநிற்கையை நியாயப்படுத்தவும், டிபேரியஸின் ஜஸ்டஸால் தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளின் வலுவைக் குறைக்கவும் முயற்சிகள் எடுக்கிறார். நான்காவது படைப்பு—இரு தொகுப்புகளடங்கிய அகென்ஸ்ட் ஏப்பியான் என்ற தலைப்பை உடைய வாத விளக்க ஆதாரம்—யூதர்கள் தவறாக எடுத்துக்கூறப்பட்டதற்கு எதிராக வாத விளக்கம் செய்கிறார்.
கடவுளுடைய வார்த்தைக்குள் உட்பார்வை
ஜொஸீஃபஸின் வரலாற்றில் பெரும்பகுதி துல்லியமானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அகென்ஸ்ட் ஏப்பியான் என்ற தன் படைப்பில், யூதர்கள் ஒருபோதும் தள்ளுபடி ஆகமங்களை ஏவப்பட்டு எழுதப்பட்ட வேத எழுத்துக்களுடன் உட்படுத்தவில்லை என்பதைக் காண்பிக்கிறார். தெய்வீக எழுத்துக்களின் திருத்தமான தன்மை மற்றும் உள்ளான இசைவுக்கு அவர் சான்றளிக்கிறார். ஜொஸீஃபஸ் சொல்கிறார்: “ஒன்றோடொன்று ஒத்துப்போகாத முரணான, எண்ணற்ற திரளான புத்தகங்களை நாங்கள் எங்களிடம் கொண்டில்லை, . . . ஆனால் வெறும் இருபத்திரண்டே [வேத எழுத்துக்களின் நவீன பிரிவின்படி 39 புத்தகங்களுக்கு சமானமானவை]; அவை எல்லா கடந்த காலத்தைப்பற்றிய பதிவுகளைக் கொண்டிருக்கின்றன; அவை நியாயமாகவே தெய்வீகமானவை என்று நம்பப்படுகின்றன.”
தி ஜூயிஷ் அன்டிகுவிட்டீஸ் என்பதில், பைபிள்பூர்வ பதிவுடன் ஓர் அக்கறைக்குரிய விவரத்தை ஜொஸீஃபஸ் சேர்க்கிறார். பலிக்காக ஆபிரகாம் ஈசாக்கின் கையையும் காலையும் கட்டியபோது “ஈசாக்குக்கு இருபத்தைந்து வயது” என்று அவர் சொல்லுகிறார். ஜொஸீஃபஸின்படி, பலிபீடத்தைக் கட்டுவதில் உதவி செய்த பின்னர், ஈசாக்கு “‘தான் கடவுளுடைய மற்றும் தன் தந்தையினுடைய தீர்மானத்தை மறுத்தால், முதலாவதாக தான் பிறந்திருப்பதற்கே தகுதியற்றவர்’” என்று சொன்னார்; “. . . ஆகவே அவர் உடனடியாக பலிசெலுத்தப்படும்படி பலிபீடத்திற்குச் சென்றார்.”
பண்டைய எகிப்திலிருந்து இஸ்ரவேலின் வெளியேறுதலைப்பற்றிய வேதப்பூர்வ பதிவிற்கு, ஜொஸீஃபஸ் இந்த விவரங்களைச் சேர்க்கிறார்: “அவர்களைப் பின்தொடர்ந்த எண்ணிக்கை, ஐம்பதாயிரம் குதிரைவீரர்களை உடைய அறுநூறு ரதங்கள், மற்றும் இரண்டு லட்சம் காலாட்கள், எல்லாரும் போர்க்கருவிகளுடன்.” “சாமுவேல் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தார்; ஒருமுறை நன்றாக தூங்கிக்கொண்டிருந்தபோது, கடவுள் அவருடைய பெயரைச் சொல்லி அவரை அழைத்தார்,” என்றும் ஜொஸீஃபஸ் சொல்லுகிறார்.—1 சாமுவேல் 3:2-21-ஐ ஒப்பிடவும்.
வரிகள், சட்டங்கள், மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த ஜொஸீஃபஸின் மற்ற எழுத்துக்கள் உட்பார்வையை அளிக்கின்றன. ஏரோதின் விருந்தில் நடனமாடி முழுக்காட்டுபவரான யோவானின் தலையைக் கேட்ட அந்தப் பெண்ணின் பெயர் சலோமி என்று அவர் கூறுகிறார். (மாற்கு 6:17-26) ஏரோதுகளைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கிறவற்றில் பெரும்பாலானவை ஜொஸீஃபஸால் பதிவு செய்யப்பட்டவை. “தன்னுடைய அதிகமான வயதை மூடி மறைப்பதற்காக [ஏரோது] தன் முடிக்கு கறுப்பு நிறம் தீட்டினார்” என்றும்கூட அவர் சொல்லுகிறார்.
அந்தப் பெரிய ரோம எதிர்ப்புக் கலகம்
எருசலேம் மற்றும் அதன் ஆலயத்தைக் குறித்து இயேசு தீர்க்கதரிசனமுரைத்து 33 வருடங்களிலேயே, அது படிப்படியாக நிறைவேறத் தொடங்கியது. எருசலேமிலிருந்த யூத தீவிரவாத கும்பல்கள் ரோம நுகத்தடியைக் கவிழ்ப்பதிலேயே குறியாக இருந்தன. பொ.ச. 66-ல், இதைப்பற்றிய செய்தி, சீரிய ஆட்சித் தலைவரான செஸ்டியஸ் காலஸின்கீழ் ரோம படைகள் திரட்டப்பட்டு, அனுப்பப்படுவதைத் தூண்டியது. கலகத்தை அடக்கி, எதிர்ப்பவர்களைத் தண்டிப்பதே அவர்களுடைய வேலையாக இருந்தது. எருசலேமின் சுற்றுப்புறங்களில் அழிவுகளை ஏற்படுத்தியபின், செஸ்டியஸின் மனிதர் மதிலெழுப்பப்பட்ட நகரைச் சுற்றி பாளயமிறங்கினர். ஆமைத்தோடு மறைப்பு (testudo) என்ற முறையைப் பயன்படுத்தி, பகைவனிடமிருந்து பாதுகாப்பிற்காக ரோமர்கள் வெற்றிகரமாகத் தங்களுடைய கேடயங்களைச் சேர்த்து ஓர் ஆமையின் பின்புறத்தைப்போல வைத்தனர். இந்த முறையின் வெற்றிக்கு உறுதிச்சான்றை அளிப்பவராய் ஜொஸீஃபஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எறியப்பட்ட ஈட்டிகள் விழுந்து, அவர்களுக்கு எந்தக் கேடும் விளைவிக்காமல் நழுவிச் சென்றன; ஆகவே படைவீரர்கள் தாங்கள் காயமடையாமல், மதிலின் அடிப்பாகத்தை அரித்துவீழ்த்தி, ஆலயத்தின் வாசலுக்கு நெருப்புமூட்டுவதற்கு எல்லா காரியங்களையும் தயாரித்து வைத்தனர்.”
“அப்போது, செஸ்டியஸ் . . . தன் படைவீரர்களை அவ்விடத்திலிருந்து திரும்ப அழைத்தார் . . . அவர் அந்த நகரத்திலிருந்து எவ்வித காரணமுமின்றி பின்வாங்கிச் சென்றார்,” என்று ஜொஸீஃபஸ் கூறுகிறார். நாம் காண்கிறபடி, கடவுளுடைய குமாரனை மகிமைப்படுத்தும் நோக்கமின்றி, எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் காத்திருந்த அதே காரியத்தை ஜொஸீஃபஸ் பதிவு செய்தார். அது இயேசு கிறிஸ்துவுடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருந்தது! வருடங்களுக்கு முன், கடவுளுடைய குமாரன் எச்சரித்திருந்தார்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும்கடவர்கள். எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.” (லூக்கா 21:20-22) இயேசு கட்டளையிட்டிருந்தபடி, அவரை உண்மையுடன் பின்பற்றியவர்கள் சீக்கிரமாக நகரத்தைவிட்டு வெளியேறி, தொலைவிலேயே இருந்து, பின்னர் நேரிட்ட வேதனையிலிருந்து காக்கப்பட்டனர்.
ரோம படைகள் பொ.ச. 70-ல் திரும்பிவந்தபோது ஏற்பட்ட விளைவுகள், விவர சித்தரிப்பாக ஜொஸீஃபஸால் பதிவுசெய்யப்பட்டன. வெஸ்பேஸியனின் மூத்த மகனான, தளபதி டைட்டஸ், எருசலேமை அதன் மகத்துவமான ஆலயத்துடன் கைப்பற்ற வந்தார். நகரத்திற்குள், போரிடும் கும்பல்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றன. அவர்கள் மட்டுமீறிய படிகளை மேற்கொண்டனர்; அதிக இரத்தம் சிந்தப்பட்டது. சிலர் “ரோமர்கள் கைப்பற்றுவதையே விரும்பும் அளவிற்கு, தங்களுடைய அன்றாடக கவலைகளிலிருந்து விடுவிப்பை” எதிர்பார்த்து, “உள்நாட்டு கலவரங்களால் வேதனையுடன் இருந்தனர்,” என்று ஜொஸீஃபஸ் சொல்கிறார். அந்த உள்நாட்டு கலகக்காரர்களை “திருடர்கள்” என்று அவர் அழைக்கிறார்; அவர்கள் செல்வந்தரின் சொத்துக்களை அழிப்பதிலும், முக்கியத்துவம் வாய்ந்த மனிதரை—ரோமர்களுடன் இணங்கிவிடுவார்கள் என்பதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களை—கொலை செய்வதிலும் ஈடுபட்டனர்.
உள்நாட்டுக் கலகத்தின் மத்தியில், எருசலேமில் வாழும் நிலைமைகள் கற்பனை செய்யமுடியாத அளவுக்குச் சென்றன; இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படாமல் கிடந்தனர். கலகக்காரர் தங்களுக்குள் “ஒருவர் மற்றவருக்கு எதிராக போரிட்டனர்; அப்போது ஒன்றன்மேல் ஒன்றாக குவிந்து கிடந்த செத்த உடல்கள்மேல் மிதித்தனர்.” அவர்கள் பொதுமக்களைக் கொள்ளையடித்து, உணவிற்காகவும் செல்வத்திற்காகவும் கொலை செய்தனர். பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரல் தொடர்ந்து இருந்தது.
நகரத்தை ஒப்படைத்து, அவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படி டைட்டஸ் யூதர்களிடம் கூறினார். அவர் “அவர்களிடம் தங்களுடைய சொந்த மொழியில் பேசும்படி ஜொஸீஃபஸை அனுப்பினார்; ஏனென்றால் தங்கள் சொந்த நாட்டவர் ஒருவரின் தூண்டுதலுக்கு அவர்கள் இணங்குவார்கள் என அவர் நினைத்தார்.” ஆனால் அவர்கள் ஜொஸீஃபஸை பழித்துரைத்தனர். டைட்டஸ் அடுத்ததாக அந்த முழு நகரைச் சுற்றிலும் கூர்மையான மரங்களாலான மதிலைக் கட்டினார். (லூக்கா 19:43) தப்பியோடுவதற்கான எல்லா நம்பிக்கையும் இழக்கப்பட்ட, நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நிலைமையில், பஞ்சம் “மக்களை முழு வீடுகளாகவும் குடும்பங்களாகவும் ஆட்கொண்டது.” தொடர்ந்திருந்த போர் இன்னுமதிக உயிர்களைக் கொள்ளைகொண்டது. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் என்று அறியாமலேயே, டைட்டஸ் எருசலேமை கைப்பற்றினார். பின்னர், அதன் பெரிய மதில்களையும் அரணிக்கப்பட்ட கோட்டைகளையும் கவனித்து, “இந்த அரணிப்புகளிலிருந்து யூதர்களை வெளியேற்றியது கடவுளைத் தவிர வேறு எவரும் இல்லை,” என்று அவர் வியந்து கூறினார். பத்து லட்சத்திற்கும் மேலான யூதர்கள் அழிந்துபோனார்கள்.—லூக்கா 21:5, 6, 23, 24.
போருக்குப் பின்னர்
போருக்குப் பின்னர் ஜொஸீஃபஸ் ரோமுக்குச் சென்றார். ஃப்ளேவியர்களுடைய ஆதரவை அனுபவித்துக்கொண்டு, ஒரு ரோம குடிமகனாக, வெஸ்பேஸியனின் முன்னாள் மாளிகையில் வாழ்ந்தார்; டைட்டஸிடமிருந்து வெகுமதிகளுடன் ஒரு சிறந்த ஓய்வு ஊதியத்தையும் பெற்றார். பின்னர் ஜொஸீஃபஸ் இலக்கியம் சார்ந்த ஒரு தொழிலைத் தொடர்ந்தார்.
“தேவாட்சி” என்ற பதத்தை ஜொஸீஃபஸே உருவாக்கினார் என்பதைக் கவனிப்பது அக்கறைக்குரியதாகும். யூத தேசத்தைக் குறித்து அவர் எழுதினார்: “எங்களுடைய அரசாங்கம் . . . கடவுளுக்கு அதிகாரத்தையும் வல்லமையையும் கொடுப்பதன்மூலம் ஒரு தேவாட்சி என்பதாகச் சொல்லப்படக்கூடும்.”
ஜொஸீஃபஸ் ஒரு கிறிஸ்தவர் என்பதாக ஒருபோதும் உரிமைபாராட்டவில்லை. அவர் கடவுளுடைய ஏவுதலின் மூலமாக எழுதவில்லை. இருந்தாலும், ஜொஸீஃபஸின் கவரக்கூடிய விவரப்பதிவு தொகுப்புகளில் அறிவொளியூட்டும் வரலாற்றுப்பூர்வ மதிப்பு இருக்கிறது.
[பக்கம் 31-ன் படம்]
எருசலேமின் மதில்களுக்கருகில் ஜொஸீஃபஸ்