உவில்லியம் விஸ்டன்—முரண் கோட்பாட்டாளரா நேர்மையான அறிஞரா?
உங்கள் நம்பிக்கைகளுக்காக உங்களுடைய வாழ்க்கைத்தொழிலை நீங்கள் தியாகம் செய்வீர்களா? உவில்லியம் விஸ்டன் அவ்வாறு செய்தார்.
அவர் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பைபிள் போதனைகளைக் குறித்து சர்ச் ஆஃப் இங்லாண்டுடன் கருத்து வேறுபாடு கொண்டபோது மத விவாதத்திற்குரிய ஒரு நபராக ஆனார். அதன் விளைவாக, முடிவில் ஒரு முரண் கோட்பாட்டாளர் என்று பழிசுமத்தப்பட்டார். இவ்வாறு அவருடைய போக்கு அவருக்கு பழிப்பைக் கொண்டுவந்தது; ஆனால் அவருக்கு மதிப்பையும் தேடித் தந்தது.
உவில்லியம் விஸ்டன் யார்? மேலும் அவர் எதைச் சாதித்தார்?
ஒரு பைபிள் அறிஞர்
உவில்லியம் விஸ்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சர் ஐசக் நியூட்டனின் அறிவுமிக்க ஓர் உடன் உழைப்பாளராக இருந்தார். முதல் நூற்றாண்டின் யூத சரித்திராசிரியரான ஃப்ளேவியஸ் ஜொஸீஃபஸுடைய இலக்கியப் படைப்புகளின் ஆங்கில பதிப்பை நீங்கள் கலந்தாராய்ந்தால், 1736-ல் விஸ்டனால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பை ஒருவேளை வாசித்துக்கொண்டிருப்பீர்கள். மற்ற மொழிபெயர்ப்புகள் இருக்கிறபோதிலும், குறிப்புகள் மற்றும் கட்டுரைகளோடுகூட அவருடைய புலமைவாய்ந்த மொழிபெயர்ப்பு மேம்பட்டதாய் இருந்து, இன்னும் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. அநேகர் இந்தப் படைப்பை விஸ்டனுடைய சாதனைகளின் சிகரமாகக் கருதுகின்றனர்.
எனினும், ப்ரிமிட்டிவ் நியூ டெஸ்டமென்ட் என்ற கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் விஸ்டனுடைய மொழிபெயர்ப்பு கவனிக்கத் தவறக்கூடாததாகும். அது 1745-ல் அவருடைய 78-ம் வயது நடக்கும்போது பிரசுரிக்கப்பட்டது. விஸ்டன் நான்கு சுவிசேஷங்களையும் அப்போஸ்தலருடைய நடபடிகளையும் கோடெக்ஸ் பிஸையிலிருந்தும், பவுலின் கடிதங்களை க்லெர்மான் கோடெக்ஸிலிருந்தும், வெளிப்படுத்துதல் உட்பட மீதி பகுதியை அலெக்ஸான்ட்ரைன் கையெழுத்துப்பிரதியிலிருந்தும் மொழிபெயர்த்தார். அவர் 1 யோவான் 5:7-லுள்ள போலியான பாகத்தைக் கவனமாக விட்டுவிட்டார். விஸ்டன் இந்த மூன்று பூர்வ கிரேக்க மூலங்களையும் அச்சமயத்தில் கிடைக்கக்கூடியதாய் இருந்த மிகச் சிறந்த ஆதாரங்களாகத் தெரிந்தெடுத்தார்.
விஸ்டன் செய்ததற்கு பைபிள் மேலுள்ள பிரியமே தூண்டுதலாக இருந்ததென தோன்றுகிறது. அவருடைய நாளில் இயற்கை மதமே பிரபலமாக இருந்தது; அது கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு பகுத்தறிவு மட்டுமே போதுமான அடிப்படை என்ற போதனையாக இருந்தது. உவில்லியம் விஸ்டன்—நேர்மையான நியூட்டோனியன் (William Whiston—Honest Newtonian) என்ற புத்தகத்தின்படி, “பண்டைய வரலாற்றின் ஒரே பிழையற்ற மூல ஆதாரம் பைபிளே என்ற பாரம்பரிய எண்ணத்தை” அவர் பலமாக ஆதரித்தார். நியூட்டோனியன் என்ற பதம் இங்கு ஐசக் நியூட்டனைக் குறிப்பதாய் இருக்கிறது; இவர் புவிஈர்ப்பு சக்தியின் சட்டத்தை விவரித்த தன்னுடைய பிரின்ஸீபியாவிற்காக நன்கு அறியப்பட்டவர். நியூட்டனுடைய சிந்தனை உவில்வியம் விஸ்டன்மீது மிக ஆழ்ந்த ஒரு பாதிப்பை உடையதாய் இருந்தது. எப்படி?
வேறுபட்ட ஆளுமை உடையவர்கள்
உவில்லியம் விஸ்டன் 1667-ல் பிறந்தார்; இவர் சர்ச் ஆஃப் இங்லாண்டின் மதகுரு ஒருவரின் மகன். 1693-ல் பாதிரியாக நியமிக்கப்பட்டப்பின், கணிதம் படிப்பதற்காகவும், நியூட்டனுக்கு ஓர் உதவியாளாகும்படியும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார். அவர்கள் மத்தியில் ஒரு நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டது. சுமார் மூன்று வருடங்களுக்குப்பின் நியூட்டன் தன்னுடைய லூகேஷன் கணித பேராசிரியர் பதவியை விட்டுவிட்டபோது, விஸ்டன் தன்னுடைய இடத்தில் நியமிக்கப்பட்டதை நிச்சயப்படுத்திக்கொண்டார். தன்னுடைய தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு, விஸ்டன் வான நூல் மற்றும் கணிதத்தில் விரிவுரையாற்றினார்; ஆனால் நியூட்டனின் செல்வாக்கு, அவரை பைபிளின் காலக்கணிப்பு முறை மற்றும் கோட்பாடுகளில் ஆழ்ந்த அக்கறைகொள்ளவும் தூண்டியது.
நியூட்டன் ஒரு மதப்பற்றுள்ள மனிதர். பைபிளில் சொல்லப்பட்ட ஆயிர வருட ஆட்சியின் உறுதியான விசுவாசியாக, அவர் தானியேல் மற்றும் வெளிப்படுத்துதல் தீர்க்கதரிசனங்களின்பேரில் விரிவாக எழுதினார். எனினும், இந்தப் படைப்புகளில் எதுவும் அவருடைய வாழ்நாட்காலத்தில் பிரசுரிக்கப்படவில்லை. அவர் திரித்துவ கோட்பாட்டை ஏற்க மறுத்தார். ஆனால் திரித்துவத்திற்கு எதிரான தன்னுடைய அத்தாட்சியைப் பிரசுரிக்க வேண்டிய நேரத்தில், “திரித்துவத்திற்கு எதிரான தன்னுடைய கருத்துக்கள் அறியப்பட்டாகிவிடும் என நியூட்டன் பயத்தில் பின்வாங்கினார்,” என்று தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. ஐசக் நியூட்டன், ஹிஸ்டாரியன் என்பதில் F. E. மானுயல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நியூட்டன் தொகுதியினர் தங்கள் கருத்துக்களை இரகசியமாக வைத்தனர் அல்லது தங்கள் உணர்ச்சியார்வத்தைக் கட்டுப்படுத்தி வைத்தனர். . . . நியூட்டன் இரகசியத்தன்மை உடையவராய் இருக்கையில், விஸ்டன் வெளிப்படையாகப் பேசியவராய் இருந்தார்.” இவ்வாறு இந்த இரண்டு மனிதரும் வேறுபட்ட ஆளுமை உடையவர்களாய் இருந்தனர்.
ஒதுக்கிவைக்கப்படுதல்
அதனேஷிய பிரமாணத்தில் வழங்கப்பட்டுள்ள சர்ச் ஆஃப் இங்லாண்டின் கோட்பாடான பொய் போதனையாகிய திரித்துவத்தைப்பற்றிய கருத்தைத் திருத்தி அமைக்கும்படி விஸ்டன் கான்டர்பெரியிலும் யார்க்கிலுமுள்ள தலைமை பிஷப்புகளுக்கு ஜூலை 1708-ல் எழுதினார். புரிந்துகொள்ளத்தக்கபடி, அவர் எச்சரிக்கையாய் இருக்கும்படி அறிவுரை கூறப்பட்டார். இருப்பினும் விஸ்டன் விடாப்பிடியாக இருந்தார். “நான் இந்தக் குறிப்புகளை முழுமையாக படித்திருக்கிறேன்; மேலும் கிறிஸ்தவ சர்ச்சானது இவற்றைக் குறித்து நெடுநாளாக, முழுமையாக ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பதைக்குறித்து நான் முற்றிலும் நிச்சயமாய் இருக்கிறேன்; கடவுளுடைய ஆசீர்வாதத்தின்மூலம், என்னுடைய சக்திக்குள் இருந்தால், அது இனிமேலும் ஏமாற்றப்படக்கூடாது,” என்று அவர் சொன்னார்.
நியூட்டன் தன்னுடைய சமூக மற்றும் அறிவுசார்ந்த அந்தஸ்தைக்குறித்து பயந்தார். மறுபட்சத்தில், விஸ்டன் அவ்வாறு இல்லை. திரித்துவத்திற்கு எதிரான தன்னுடைய நம்பிக்கைகளை உருவாக்கியபின், அவர் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்து ஒரு துண்டுப்பிரசுரத்தை எழுதினார். ஆனால் இது வைதீகத்திற்கு மாறானதாகக் கருதப்பட்டதால், ஆகஸ்ட் 1708-ல், இந்தப் பொருளை அச்சிடுவதற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் விஸ்டனுக்கு உரிமையளிக்க மறுத்தது.
1710-ல், சர்ச் ஆஃப் இங்லாண்டின் நம்பிக்கைக்கு மாறான போதனையைக் கற்பிப்பதாக விஸ்டன் குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் குற்றம் உள்ளவராகக் காணப்பட்டு, தன்னுடைய பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கேம்பிரிட்ஜிலிருந்து துரத்தப்பட்டார். எனினும், கிட்டத்தட்ட இன்னும் ஐந்து வருடங்கள், அவருக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்ந்தபோதிலும், விஸ்டன் ஒருபோதும் முரண் கோட்பாடுடையவர் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை.
திரித்துவத்திற்கு எதிரான நியூட்டனின் கருத்துக்கள் விஸ்டனுடையதற்கு ஒத்திருந்தபோதிலும், அவர் தன்னுடைய நண்பரின் சார்பாக பேசவில்லை; முடிவில் அவரை ஒதுக்கி வைத்தார். 1754-ல், திரித்துவத்தை அம்பலப்படுத்தும் நியூட்டனின் பைபிள் புலமை கடைசியாக—அவருடைய மரணத்திற்கு 27 வருடங்களுக்குப்பின்—பிரசுரிக்கப்பட்டது. ஆனால், விஸ்டனுக்கு எவ்வித உதவியாயும் இருப்பதற்கு, அது மிகப் பிந்தியதாய் இருந்தது; அவர் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
செல்வாக்குமிக்க ராயல் சொஸையிட்டியிலிருந்து விஸ்டனைத் தடுத்து நிறுத்துவதற்கும் நியூட்டன் பொறுப்புள்ளவராகக் கருதப்படுகிறார். ஆனால் விஸ்டன் நம்பிக்கை இழக்கவில்லை. அவரும் அவருடைய குடும்பத்தினரும் லண்டனுக்குக் குடிபெயர்ந்து சென்றனர்; அங்கு அவர் ஆரம்ப கிறிஸ்தவத்தை முன்னேற்றுவிப்பதற்காக ஒரு சங்கத்தை நிறுவினார். அந்தச் சமயம் வரையாக அவருடைய மிக முக்கியமான படைப்பாக இருந்ததை எழுதுவதற்கு தன்னுடைய எல்லா சக்திகளையும் பயன்படுத்தினார்; அவையே ஆரம்ப கிறிஸ்தவம் புத்துயிரளிக்கப்பட்டது (Primitive Christianity Revived) என்பதின் நான்கு தொகுப்புகளாக இருந்தன.
கடைசிவரையாக விவாதத்திற்குரியவர்
ஒரு விஞ்ஞானியாக, கப்பலோட்டிகள் கடலில் நிரைகோடைக் கண்டுபிடிப்பதற்கு பல வழிகளில் விஸ்டன் உழைத்தார். அவருடைய கருத்துக்கள் ஏற்கப்படாதபோதிலும், முடிவில் அவருடைய விடாமுயற்சி, கடல்சார்ந்த திட்பக்காலக் கணிப்பளவுக் கருவியை (marine chronometer) உருவாக்குவதற்கு வழிநடத்தியது. பைபிள் தீர்க்கதரிசனத்தின்பேரில் விஸ்டனுடைய கருத்துக்களில் பல, அவருக்கு ஒத்தக் காலத்திலிருந்தவர்களுடையதைப்போல, திருத்தமற்றவையாய் நிரூபித்திருக்கிறபோதிலும், உண்மைக்கான அவருடைய தேடுதலில் அவர் எந்தச் சாத்தியமான வழியையும் விட்டுவைக்கவில்லை. வால்மீன்களின் சுற்றுப் பாதைகளைப்பற்றிய துண்டுப்பிரதிகள் மற்றும் நோவாவின் நாளைய பிரளயத்தின் பாதிப்புகளைப் பற்றிய அவருடைய அடிப்படை கூற்றுகள், அறிவியல் மற்றும் பைபிள்பூர்வ சத்தியத்தைப் பாதுகாக்க, அவர் எழுதிய பலவற்றுள் அடங்குகின்றன. எனினும், அவருடைய எல்லா படைப்புகளிலும் மேம்பட்டு நிற்பது, திரித்துவ கோட்பாட்டை வேதப்பூர்வமற்றது என்று அம்பலப்படுத்தியதாகும்.
விஸ்டனுடைய இயல்புக்கு ஏற்றபடி, அவர் 1747-ல் சர்ச் ஆஃப் இங்கிலாண்டைவிட்டு வெளியேறினார். ஒரு மதகுரு அதனேஷிய பிரமாணத்தை வாசிக்க ஆரம்பித்ததும், அவர் வெளியேறியபோது சொல்லர்த்தத்திலும் அடையாள அர்த்தத்திலும் அவ்வாறு செய்தார். ஒரு மத கலைக்களஞ்சியம் (A Religious Encyclopædia) விஸ்டனைப்பற்றி இவ்வாறு சொல்லுகிறது: “அவருடைய பண்பின் தைரியமான வெளிப்படைத்தன்மையும் உண்மைத்தன்மையும், அவருடைய வாழ்க்கையின் முரண்பாடற்ற தன்மையும், அவருடைய நடத்தையின் ஒளிவுமறைவற்ற தன்மையும் பாராட்டத்தக்கது.”
உவில்லியம் விஸ்டனுக்கு உண்மை விட்டுக்கொடுக்க முடியாத ஒன்று; தனிப்பட்ட உறுதியான நம்பிக்கைகள், மனிதரின் கைத்தட்டல்களையும் பாராட்டுகளையும்விட அதிக மதிப்புள்ளவை. விஸ்டன் விவாதத்திற்குரியவராக இருந்தாலும், பைபிளைக் கடவுளுடைய வார்த்தையென பயமின்றி ஆதரித்த ஒரு நேர்மையான அறிஞராக இருந்தார்.—2 தீமோத்தேயு 3:16, 17.