“கட்டுக்கதைகளைத் தள்ளிவிடும்”
பைபிள், மக்களைப் பற்றிய அனுபவங்கள், கதைகள் ஆகியவற்றால் நிறைந்திருக்கிறது. அவற்றைப் படிப்பதை நாம் அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து பயனடைகிறோம். ரோமிலுள்ள கிறிஸ்தவச் சபைக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.”—ரோமர் 15:4.
அனுபவங்களைச் சொல்லுவதில் பவுலும்தானேயும் பங்கெடுத்தார். பவுல் மற்றும் பர்னபா பற்றி, அவர்களின் முதல் மிஷனரி பிரயாணத்தின் முடிவில் பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘அவர்கள் அங்கே [சீரிய அந்தியோகியா] சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும் அறிவித்தனர்.’ (அப்போஸ்தலர் 14:27) இந்த அனுபவங்களால் அந்தச் சகோதரர்கள் பெரிதும் உற்சாகப்படுத்தப்பட்டனர்.
எனினும், எல்லா அனுபவங்களும் கட்டியெழுப்புவதாக இருக்கிறதில்லை. ஆவியால் ஏவப்பட்டவராக பவுல் தீமோத்தேயுவை இவ்வாறு எச்சரித்தார்: “கிழவிகள் பேச்சாயிருக்கும் பரிசுத்தத்தை மீறுகின்ற கட்டுக்கதைகளைத் தள்ளிவிடும்.” (1 தீமோத்தேயு 4:7, NW) மேலும் தீத்துவிற்கு அவர், உண்மைமாறா கிறிஸ்தவர்கள் “யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்” இருக்கவேண்டும் என்று எழுதினார்.—தீத்து 1:13.
இந்தக் கட்டுக்கதைகள் அல்லது பொய்க்கதைகளாய் இருந்தவை யாவை? இந்த இரண்டு சொற்களும் மித்தாஸ் (“கட்டுக்கதை”) என்ற கிரேக்க சொல்லிலிருந்து வருகின்றன. “உண்மையோடு எந்தவிதச் சம்பந்தமும் பெற்றிராத ஒரு (மத) கதையை” இந்த வார்த்தை விவரிக்கிறது என தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது.
பவுலின் நாளிலிருந்த உலகம் இப்படிப்பட்ட கதைகளால் நிறைந்திருந்தது. டோபட்டின் தள்ளுபடியாகமம் ஓர் உதாரணம், பவுலின் காலத்திற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கலாம். இந்தக் கதை, பக்திமிக்க ஒரு யூதராகிய டோபட்டைப் பற்றி சொல்கிறது. ஒரு பறவையின் சாணம் அவருடைய கண்களுக்குள் விழுந்ததால், அவர் குருடராக்கப்பட்டார். பின்னர், அவர் தன்னுடைய குமாரனாகிய டபையஸை ஒரு கடன் வசூலிப்பதற்காக அனுப்புகிறார். வழியில், ஒரு தேவதூதனின் வழிநடத்துதலின்கீழ் ஒரு மீனின் இதயம், ஈரல், பித்தநீர் ஆகியவற்றை பெறுகிறான். அடுத்ததாக, அவன் ஒரு விதவையை எதிர்ப்படுகிறான். அந்த விதவை ஏழு முறை திருமணம் செய்திருந்தபோதிலும், ஒரு கன்னியாக நிலைத்திருக்கிறாள்; ஏனென்றால் திருமணநாள் இரவின்போது ஒவ்வொரு கணவனும் ஒரு பேயால் கொல்லப்படுகிறான். தேவதூதனின் தூண்டுதலினால், டாபையஸ் அவளை மணம்செய்கிறான்; மீனின் அந்த இதயத்தையும் ஈரலையும் எரிப்பதன்மூலம் அந்தப் பேயை வெளியேற்றுகிறான். பிறகு, மீனுடைய பித்தநீரின்மூலம் தன் அப்பாவுடைய பார்வையை மீண்டும் பெறும்படி செய்கிறான்.
இந்தக் கதை தெளிவாகவே உண்மையானதல்ல. அதன் கற்பனைத் தன்மை மற்றும் மூடநம்பிக்கையிடம் அதன் கவர்ச்சி ஆகியவற்றோடு, அது தவறாயும் இருக்கிறது. உதாரணமாக, இஸ்ரவேலரின் வரலாற்றில் 257 வருட இடைவெளிகொண்ட இரண்டு நிகழ்ச்சிகளாகிய வட கோத்திரங்களின் எழுச்சியையும், நினிவேக்கு இஸ்ரவேலர் நாடுகடத்தப்படுவதையும் டோபட் கண்டதாக அந்தப் பதிவு சொல்கிறது. எனினும், டோபட் மரிக்கையில் 112 வயதானவராய் இருந்தார் என்று அந்தக் கதைச் சொல்லுகிறது.—டோபட் 1:4, 11; 14:1, தி ஜெரூசலம் பைபிள்.
அப்படிப்பட்ட பொய்க்கதைகள், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களால் அறிவிக்கப்படும் உண்மைமிக்க “ஆரோக்கியமான வசனங்களின் படிவத்திற்கு” அந்நியமானதாக இருக்கின்றன. (2 தீமோத்தேயு 1:13, NW) அவை கற்பனைப் படைப்புகளாக, வரலாற்று உண்மைக்கு முரண்பாடாக, தேவபக்தியற்ற கிழவிகளால் சொல்லப்படுகிற வகையான காரியங்களாக இருக்கின்றன. இந்தக் கதைகள் கிறிஸ்தவர்களால் தள்ளிவிடப்படவேண்டியதாயிருந்தது.
சத்திய வார்த்தைகளைச் சோதித்தல்
இப்படிப்பட்ட கதைகள் இன்று அநேகமிருக்கின்றன. பவுல் எழுதினார்: “[மக்கள்] ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், . . . சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.” (2 தீமோத்தேயு 4:3, 4) பூமியின் ஒருசில பகுதிகளில், இயற்கைமீறிய கதைகள் பரவலாய் அறியப்பட்டு, பிரபலமாய் இருக்கின்றன. எனவே, மதக் கதைகள் பைபிளோடு ஒத்திருக்கிறதா என்று கிறிஸ்தவர்கள் ஞானமாக அவற்றின் ‘வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறார்கள்.’—யோபு 12:11.
தெளிவாகவே, பல ஒத்திருப்பதில்லை. உதாரணமாக, உலகின் பல பகுதிகளில், மனிதனுடைய ஆத்துமா அழியாதது என்ற கருத்தை ஆதரிக்கும் கதைகளைக் கேள்விப்படுவது சகஜமாய் இருக்கிறது. இந்தக் கதைகள், ஒருவர் மரிக்கையில் எப்படி மரிக்கிறார் என்பதை, மீண்டுமாக ஒரு புதிதாய் பிறந்த குழந்தையின் உடலில், அல்லது ஓர் ஆவியாக, அல்லது ஒரு மிருகமாக, அல்லது மற்றொரு இடத்தில் ஒரு நபராகத் தோன்றுகிறதற்காக மட்டுமே மரிக்கிறார் என்பதாக விவரிக்கின்றன.
இருந்தாலும், கடவுளுடைய வார்த்தை, மனித ஆத்துமாக்கள் அழியக்கூடியவை; ஆத்துமாக்கள் மரிக்கின்றன என்று காண்பிக்கிறது. (எசேக்கியேல் 18:4) மேலுமாக, மரித்தவர்கள் பிரேதக்குழியில் சிந்திக்க, பேச, அல்லது எதையும் செய்ய முடியாதபடி உயிரற்று இருக்கின்றனர் என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:5, 10; ரோமர் 6:23) எனவே, ஆத்துமா அழியாதது என்ற கருத்தை ஆதரிக்கும் கட்டுக்கதைகளால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறவர்கள், பவுல் சொன்னதுபோலவே பைபிளின் ‘ஆரோக்கியமான உபதேசத்திலிருந்து சாய்ந்துபோயிருக்கிறார்கள்.’
இயற்கைமீறிய கதைகள்
மற்ற கதைகள் சூனியக்காரிகள், மாயவித்தைக்காரர்கள் போன்றவர்களின் செயல்களுக்குக் கவனம்செலுத்துகின்றன. உதாரணமாக, ஆப்பிரிக்காவின் பகுதிகளில் இந்தத் தீய பிரதிநிதிகள், தங்களையும் மற்றவர்களையும் ஊர்வனவாக, குரங்குகளாக, பறவைகளாக மாற்றமுடிந்த; தங்களுடைய நோக்கங்களைச் செய்துமுடிப்பதற்கு காற்றில் பறந்துபோக முடிந்த; தோன்றிமறைய முடிந்த; சுவருக்குள் புகுந்து கடந்துபோக முடிந்த; நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள பொருள்களைக் காணமுடிந்த பயங்கரமான வல்லமைகளை உடையவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட கதைகளின் மிகப் பேரளவு, அவற்றின்மீதான பரவலான நம்பிக்கையுடன் சேர்ந்து, கிறிஸ்தவச் சபையிலுள்ள சிலரையும்கூட அவை உண்மையானவை என்று நம்பவைக்கும்படி தூண்டவும் செய்யக்கூடும். சாதாரண மனிதர்கள் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யமுடியாதிருக்கும்போது, பேய்களாகிய ஆவி சிருஷ்டிகளிடமிருந்து மீமானிட வல்லமைகளைப் பெறுவோர் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யமுடியும் என்று அவர்கள் வாதிடக்கூடும். இந்த முடிவிற்கான ஆதாரமாகத் தோன்றுவது 2 தெசலோனிக்கேயர் 2:9, 10. இது இவ்வாறு சொல்கிறது: “அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.”
வல்லமைமிக்க வேலைகளைச் செய்யும் திறமையுடையவனாக சாத்தான் இருக்கிறான் என்று இந்த வசனம் காண்பிப்பது உண்மைதான் என்றாலும், சாத்தான் ‘பொய்யான அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள்’ ஆகியவற்றையும் ‘அநீதியான சகலவித வஞ்சகத்தையும்’ உண்டாக்கினவனாகவும் இருக்கிறான் என்று குறிப்பிடுகிறது. பொருத்தமாகவே, “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற,” பிரதான வஞ்சகனாக சாத்தான் இருக்கிறான் என்று பைபிள் காண்பிக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9) உண்மையில்லாதவற்றை மக்கள் நம்பும்படி செய்வதில் அவன் கைதேர்ந்தவன்.
இதன் காரணமாக, ஆவியுலகத்தொடர்பு அல்லது பில்லிசூனியத்தில் ஈடுபட்டிருப்போரின் சாட்சிக்கொடுத்தலும், பாவ அறிக்கைகளும்கூட பெரும்பாலும் உண்மைக்கு மிக அப்பாற்பட்டதாய் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்கள் வெறுமனே ஏதேதோ காரியங்களைக் கண்டதாக, கேட்டதாக, அல்லது அனுபவித்ததாக நிஜமாகவே நம்பக்கூடும்; எனினும், உண்மையில், அவர்களுக்கு அப்படி ஏதும் நடந்திருக்காது. உதாரணமாக, இறந்தவர்களின் ஆவிகளோடு பேச்சுத்தொடர்புகொண்டதாக நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களோ தப்பெண்ணம் கொண்டிருக்கின்றனர், வஞ்சிக்கப்பட்டு, சாத்தானின் கேலிக்கூத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள். மரித்தோர் ‘மவுனத்தில் இறங்குகிறவர்கள்’ என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 115:17.
பிசாசுடைய வஞ்சகத்தன்மைமிக்க வரலாற்றின் பார்வையில், இயற்கைமீறிய கதைகளின் உண்மைத்தன்மை மிக மிகச் சந்தேகிக்கப்படுவதற்குரியதாக இருக்கிறது. திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டதால் மிகைப்படுத்தப்பட்ட மூடநம்பிக்கையான கற்பனைகளின் போலிப்புனைவுகளாகப் பெரும்பாலானவை இருக்கின்றன.
அப்படிப்பட்ட கதைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுவது, பொய்க்குப் பிதாவாக இருக்கும் பிசாசாகிய சாத்தானுடைய அக்கறைகளைப் பரப்பி ஆதரிப்பதாய் இருக்கும். (யோவான் 8:44) அவை, யெகோவாவுக்கு அருவருப்பாய் இருக்கும் மாயமந்திரம் சார்ந்த பழக்கங்களில் அக்கறையைத் தூண்டுகின்றன. (உபாகமம் 18:10-12) அவை மக்களைப் பயம் மற்றும் மூடநம்பிக்கை என்னும் மாயவலைக்குள் சிக்கவைத்திருக்கின்றன. பவுல் கிறிஸ்தவர்களிடம் “கட்டுக்கதைகளை . . . கவனியாதபடி” இருக்கும்படி புத்திமதிக்கொடுத்தது ஆச்சரியத்திற்குரியதல்ல.—1 தீமோத்தேயு 1:3.
பேய்களின் சாட்சியை ஏற்கமறுத்தல்
எனினும், கதைகள் உண்மையுள்ளவையாகத் தோன்றினால் என்ன செய்வது? ஆவிகள் அல்லது ஆவியுலகத் தொடர்புகொள்வோர், யெகோவாவின் உன்னதத்தன்மையையும் அவருடைய சாட்சிகளின் உண்மைத்தன்மையையும் ஒத்துக்கொள்ளுகிற அனுபவங்கள் சில சமயங்களில் சொல்லப்படுகின்றன. இப்படிப்பட்ட கதைகளைக் கிறிஸ்தவர்கள் திரும்பத் திரும்ப சொல்லவேண்டுமா?
இல்லை. அவர்கள் சொல்லக்கூடாது. இயேசுவே கடவுளுடைய குமாரனென்று அசுத்த ஆவிகள் சத்தமிட்டபோது, அவர் “தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்,” என்று பைபிள் சொல்கிறது. (மாற்கு 3:12) இதைப்போலவே, குறிசொல்ல ஏவுகிற பேய் ஒன்று, பவுலையும் பர்னபாவையும் “உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்” என்றும் “இரட்சிப்பின் வழியை” அறிவிக்கிறவர்கள் என்றும் அடையாளப்படுத்தும்படி ஒரு பெண்ணைத் தூண்டியபோது, பவுல் அந்த ஆவியை அவளைவிட்டு வெளியே துரத்தினார். (அப்போஸ்தலர் 16:16-18) கடவுளுடைய நோக்கத்தை அல்லது அவருடைய தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியர்களைப் பற்றி பேய்கள் சான்றளிப்பதற்கு இயேசுவோ பவுலோ பைபிள் எழுத்தாளர்களில் வேறு எவருமோ அனுமதிக்கவில்லை.
இயேசு கிறிஸ்து பூமிக்கு வருவதற்குமுன், ஆவிப்பிரதேசத்தில் வாழ்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தனிப்பட்ட விதத்தில் சாத்தானை அறிந்திருந்தார். இருந்தபோதிலும், இயேசு சாத்தானின் செயல்களைப் பற்றிய கதைகளால் அவருடைய சீஷர்களைக் குதூகலமடையச் செய்யவும் இல்லை, பிசாசு என்ன செய்யமுடியும் அல்லது என்ன செய்யமுடியாது என்பதைப் பற்றிய விவரங்களையும் அவர் கொடுக்கவில்லை. சாத்தானும் அவனுடைய பேய்களும் இயேசுவின் நண்பர்களாய் இருக்கவில்லை. அவர்கள் துரத்தப்பட்டவர்களாயும் கலகக்காரர்களாயும் பரிசுத்தத்தை வெறுப்பவர்களாயும் கடவுளுடைய எதிரிகளாயும் இருந்தார்கள்.
நாம் என்ன தெரிந்திருக்கவேண்டும் என்பதைப் பைபிள் நமக்குச் சொல்கிறது. அது பேய்கள் யார் என்றும், அவர்கள் மக்களை எப்படித் தவறாக வழிநடத்துகிறார்கள் என்பதையும் நாம் எப்படி அவர்களைத் தவிர்க்கலாம் என்றும் விளக்குகிறது. அது பேய்களைவிட யெகோவாவும் இயேசுவும் அதிக வல்லமையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று காண்பிக்கிறது. மேலும், அது நாம் யெகோவாவை உண்மைமாறாமல் சேவித்தோமென்றால், பொல்லாத ஆவி ஆட்கள் எந்த நிரந்தரமான பாதிப்பையும் நமக்குச் செய்யமுடியாது என்று போதிக்கிறது.—யாக்கோபு 4:7.
எனவே, நல்ல காரணத்தோடுதான், கடவுளை எதிர்ப்பவர்களின் அக்கறைகளைப் பரப்பி ஆதரவளிப்பதில் முடிவடையும் கட்டுக்கதைகளைக் கிறிஸ்தவர்கள் தள்ளிப்போடுகிறார்கள். இயேசு ‘சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்ததுபோல,’ இன்று அவரைப் பின்பற்றுபவர்களும் செய்கிறார்கள். (யோவான் 18:37) பைபிளின் புத்திமதிக்கு அவர்கள் ஞானத்தோடு செவிசாய்க்கிறார்கள்: “உண்மையுள்ளவைகளெவைகளோ . . . அவைகளையே [தொடர்ந்து, NW] சிந்தித்துக்கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8.
[பக்கம் 31-ன் படம்]
மாயமந்திரத்தின் எல்லா வெளிப்பாடுகளும் உண்மைக் கிறிஸ்தவர்களால் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்