நீங்கள் கற்றவற்றை பழக்கமாக கடைப்பிடியுங்கள்
“நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.”—பிலிப்பியர் 4:9.
1, 2. பொதுவாக, தங்களை மதப்பற்றுள்ளவர்களாக கருதும் மக்களின் வாழ்வில் பைபிள் செல்வாக்கு செலுத்துகிறதா? விளக்குக.
“மதத்தின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது, ஆனால் ஒழுக்கத்தின் செல்வாக்கு குறைந்துவருகிறது.” எமர்ஜிங் ட்ரென்ட்ஸ் என்ற செய்திமடலில் வந்த இந்தத் தலைப்புச் செய்தி, ஐக்கிய மாகாணமெங்கும் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை சுருக்கமாக குறிப்பிட்டது. அந்நாட்டில் சர்ச்சுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் மதம் தங்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதாக சொல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிகிறது. இருந்தாலும் அந்த அறிக்கை இப்படி சொல்கிறது: “இந்த எண்ணிக்கைகள் மலைக்க வைத்தாலும், மதம் தனிப்பட்ட வாழ்விலும் சமுதாயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதில் அநேக அமெரிக்கர்களுக்கு சந்தேகம்தான்.”
2 இந்த நிலைமை ஒரே நாட்டில் மட்டுமே அல்ல. உலகெங்கும், பைபிளை ஏற்றுக்கொள்வதாகவும் மதப்பற்றுடன் இருப்பதாகவும் சொல்லிக்கொள்ளும் அநேகர், வேதவசனங்கள் தங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்த எவ்விதத்திலும் அனுமதிப்பதில்லை. (2 தீமோத்தேயு 3:5) “நாங்கள் இன்னமும் பைபிளை மிக உயர்வாக மதிக்கிறோம், ஆனால் அதை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் நேரம் செலவிடுவதுதான் இல்லை, அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது” என்றார் ஓர் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர்.
3. (அ) உண்மை கிறிஸ்தவர்களாக மாறுபவர்கள் மீது பைபிள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது? (ஆ) பிலிப்பியர் 4:9-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பவுலின் அறிவுரையை இயேசுவின் சீஷர்கள் எவ்வாறு கடைப்பிடிக்கின்றனர்?
3 என்றாலும் மெய் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை நிலைமை வேறு. கடவுளுடைய வார்த்தையிலுள்ள அறிவுரைகளை பின்பற்றுவதால் அவர்களது சிந்தையிலும் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்களது புதிய ஆள்தன்மை மற்றவர்களுக்கு பளிச்சென தெரிகிறது. (கொலோசெயர் 3:5-10) இயேசுவைப் பின்பற்றுகிறவர்களைப் பொறுத்தமட்டில், அலமாரியில் தூசி படிந்து கிடக்கும் புத்தகமல்ல பைபிள். மறுபட்சத்தில், பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்களிடம் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: ‘நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.’ (பிலிப்பியர் 4:9) கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை வெறுமனே ஏற்றுக்கொள்வதில்லை. கற்றதை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்; குடும்பத்திலும் வேலை செய்யுமிடத்திலும் சபையிலும் வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களிலும் தொடர்ந்து பைபிள் அறிவுரையை பின்பற்றுகிறார்கள்.
4. கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடிப்பது ஏன் சவாலாக உள்ளது?
4 கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் கடைப்பிடிப்பது எளிதல்ல. பிசாசாகிய சாத்தானின் கட்டுப்பாட்டிலுள்ள ஓர் உலகத்தில் நாம் வாழ்கிறோம்; அவனை ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ என பைபிள் அழைக்கிறது. (2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19) ஆகவே யெகோவா தேவனுக்கு உத்தமமாக இருப்பதிலிருந்து நம்மை தடைசெய்யும் எந்தக் காரியத்தைக் குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். நாம் எவ்வாறு உத்தமத்தைக் காத்துக்கொள்ளலாம்?
‘ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரியைப்’ பற்றிக்கொள்ளுங்கள்
5. ‘அநுதினமும் என்னைப் பின்பற்றக்கடவன்’ என்ற இயேசுவின் வார்த்தைகள் எதை சுட்டிக்காட்டுகின்றன?
5 நாம் கற்றிருப்பவற்றை கடைப்பிடிக்கும் விஷயத்தில், அவிசுவாசிகளின் எதிர்ப்பின் மத்தியிலும் மெய் வணக்கத்தை உண்மையோடு ஆதரிப்பதும் அடங்கும். சகிப்புத்தன்மைக்கு முயற்சி தேவை. “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.” என இயேசு சொன்னார். (லூக்கா 9:23) ஒரு வாரத்திற்கோ ஒரு மாதத்திற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ மட்டும் தம்மை பின்பற்ற வேண்டுமென இயேசு சொல்லவில்லை. மாறாக, ‘அநுதினமும் என்னைப் பின்பற்றக்கடவன்’ என அவர் சொன்னார். ஆகவே, வாழ்க்கையின் ஒரு காலப்பகுதியில் மட்டுமே நாம் அவரது சீஷர்களாக இருக்க முடியாது என அவரது வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன; ஏதோ கொஞ்ச காலத்திற்கு மட்டும் பக்தி செலுத்துவதையும் அது குறிக்காது. மெய் வணக்கத்தை உண்மையோடு ஆதரிப்பதென்பது, என்ன நடந்தாலும் சரி நாம் தேர்ந்தெடுத்திருக்கும் வழியில் விசுவாசத்தோடு சகித்திருப்பதைக் குறிக்கிறது. இதை நாம் எப்படி செய்யலாம்?
6. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பவுலிடமிருந்து கற்றுக்கொண்ட ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரி என்ன?
6 உடன் ஊழியரான தீமோத்தேயுவை பவுல் இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: “என்னிடம் நீ கேட்டிருக்கிற ஆரோக்கியகரமான வார்த்தைகளின் மாதிரியைக் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் வைத்துக்கொள் [“பற்றிக்கொள்,” NW].” (2 தீமோத்தேயு 1:13, தி.மொ.) பவுல் எதை அர்த்தப்படுத்தினார்? “மாதிரி” என இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை சொல்லர்த்தமாக ஒரு ஓவியர் வரையும் அவுட்லைனை குறிக்கிறது. அதில் எல்லா விவரங்களும் இல்லாவிட்டாலும் தெளிவான கோடுகள் இருக்கும்; ஆகவே விவேகமுள்ள பார்வையாளரால் அந்த முழு படமும் என்னவென்று புரிந்துகொள்ள முடியும். அதேவிதமாகத்தான் தீமோத்தேயுவுக்கும் மற்றவர்களுக்கும் பவுல் கற்பித்த சத்தியத்தின் மாதிரி, சாத்தியமான எல்லாவித கேள்விகளுக்கும் நேரடியாக பதிலளிக்கும் விதத்தில் இல்லை. இருந்தாலும் அந்தப் போதனையின் தொகுப்பு போதிய வழிநடத்துதலை—அடையாள அர்த்தத்தில் ஒரு அவுட்லைனை—கொடுக்கிறது; இதனால், யெகோவா தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறாரென நேர்மை இருதயமுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் கடவுளைப் பிரியப்படுத்த, கற்றவற்றை கடைப்பிடிப்பதன் வாயிலாக அந்தச் சத்தியத்தின் மாதிரியை அவர்கள் தொடர்ந்து பற்றியிருப்பது அவசியம்.
7. ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரியை கிறிஸ்தவர்கள் எவ்வாறு பற்றிக்கொள்ளலாம்?
7 முதல் நூற்றாண்டில் இமெனே, அலெக்சந்தர், பிலேத்து போன்றவர்கள் ‘ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரிக்கு’ பொருந்தாத கருத்துக்களை பரப்பிவந்தனர். (1 தீமோத்தேயு 1:18-20; 2 தீமோத்தேயு 2:16, 17) ஆரம்பகால கிறிஸ்தவர்கள், விசுவாசதுரோகிகளின் சொல் கேட்டு வழிதவறிப் போவதை எவ்வாறு தவிர்க்க முடிந்தது? ஏவப்பட்ட எழுத்துக்களை கவனமாக படித்ததன் மூலமும் வாழ்க்கையில் கடைப்பிடித்ததன் மூலமும் ஆகும். பவுலையும் மற்ற உண்மையுள்ளவர்களையும் பார்த்துப் பின்பற்றியவர்கள், தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட சத்தியத்தின் மாதிரிக்கு பொருந்தாத எதையும் அடையாளம் கண்டுகொண்டு புறக்கணித்தனர். (பிலிப்பியர் 3:17; எபிரெயர் 5:14) ‘விவாதங்களிலும் சொற்போர்களிலும் பைத்தியம் கொண்டவர்களாக’ இல்லாமல், தேவபக்தியின் சரியான பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்றார்கள். (1 தீமோத்தேயு 6:3-6, பொ.மொ.) கற்றுக்கொண்ட சத்தியங்களை கடைப்பிடிக்கையில் நாமும் அதையே செய்கிறோம். பூமியெங்கும் யெகோவாவை சேவிக்கும் லட்சக்கணக்கானோர், தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட பைபிள் சத்தியத்தின் மாதிரியை தொடர்ந்து உறுதியாக பற்றிக்கொண்டிருப்பதைப் பார்ப்பது நம் விசுவாசத்தை எவ்வளவாய் பலப்படுத்துகிறது!—1 தெசலோனிக்கேயர் 1:2-5.
‘கட்டுக்கதைகளை’ புறக்கணியுங்கள்
8. (அ) சாத்தான் இன்று நம் விசுவாசத்தைக் குலைக்க எவ்வாறு முயலுகிறான்? (ஆ) 2 தீமோத்தேயு 4:3, 4-ல் பவுல் என்ன எச்சரிப்பை அளித்தார்?
8 கற்பிக்கப்பட்ட காரியங்களின் பேரில் சந்தேகங்களை நம் மனதில் விதைப்பதன் மூலம் சாத்தான் நம் உத்தமத்தன்மையை முறிக்க முயலுகிறான். முதல் நூற்றாண்டில் நடந்தது போலவே இன்றும் விசுவாசதுரோகிகளும் மற்றவர்களும் உண்மையுள்ளவர்களின் விசுவாசத்தை குலைக்க வழிதேடுகிறார்கள். (கலாத்தியர் 2:4; 5:7, 8) சிலசமயங்களில் யெகோவாவின் மக்களுடைய செயல்களையும் உள்நோக்கங்களையும் பற்றி தவறான தகவல்களை அல்லது அப்பட்டமான பொய்களையும்கூட பரப்புவதற்கு அவர்கள் மீடியாவை பயன்படுத்துகிறார்கள். சிலர் விசுவாசத்தை விட்டு விலகிவிடுவார்கள் என பவுல் எச்சரித்தார். “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்” என்று அவர் எழுதினார்.—2 தீமோத்தேயு 4:3, 4.
9. ‘கட்டுக்கதைகளைப்’ பற்றி குறிப்பிடுகையில் பவுல் எதை மனதில் வைத்திருக்கலாம்?
9 ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரியை பற்றியிருப்பதற்கு பதிலாக சிலர் ‘கட்டுக்கதைகளை’ அறிய ஆர்வம் கொண்டனர். இந்தக் கட்டுக்கதைகள் என்ன? ஒருவேளை தோபித்து என்ற தள்ளுபடியாகம புத்தகத்தில் காணப்படுவதைப் போன்ற கற்பனையான புராணக்கதைகளை பவுல் மனதில் வைத்திருக்கலாம்.a பரபரப்பூட்டும் கற்பனையான வதந்திகளும் கட்டுக்கதைகளில் அடங்கியிருக்கலாம். இன்னும் சிலர் ‘தங்கள் சுய இச்சைகளுக்கேற்றபடியே,’ கடவுளுடைய தராதரங்களின் கண்டிப்பை தளர்த்தியவர்களால் அல்லது சபையில் தலைமை தாங்கி நடத்தியவர்களை குறைகூறியவர்களால் அறிவுப்பூர்வமாக வஞ்சிக்கப்பட்டிருக்கலாம். (3 யோவான் 9, 10; யூதா 4) அவர்கள் எவ்விதமான காரணங்களால் இடறியிருந்தாலும், கடவுளுடைய வார்த்தையின் சத்தியங்களைவிட பொய்களையே விரும்பியதாக தெரிகிறது. விரைவில், தாங்கள் கற்றுக்கொண்டவற்றை கடைப்பிடிப்பதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள், இது அவர்களுக்குத்தான் ஆன்மீகக் கேட்டை விளைவித்தது.—2 பேதுரு 3:15, 16.
10. தற்கால கட்டுக்கதைகளில் சில யாவை, எச்சரிக்கையாக இருக்க வேண்டியதை யோவான் எவ்வாறு வலியுறுத்தினார்?
10 இன்று நாம் எதைக் கேட்கிறோம், எதை வாசிக்கிறோம் என்பதையெல்லாம் மிகக் கவனமாக ஆராய்ந்து தேர்ந்தெடுப்பதன் மூலம் கட்டுக்கதைகளிடம் கவர்ந்திழுக்கப்படுவதை தவிர்க்கலாம். உதாரணத்திற்கு, ஒழுக்கயீனத்தை மீடியா பெரும்பாலும் முன்னேற்றுவிக்கிறது. அநேகர் அறியொணாமைக் கொள்கையை அல்லது ஒரேயடியாக நாத்திகத்தை ஊக்குவிக்கிறார்கள். பைபிள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டதென அதில் குறிப்பிடப்பட்டிருப்பதை திறனாய்வாளர்கள் குறைகூறுகின்றனர். கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை கவிழ்ப்பதற்காக நவீனகால விசுவாச துரோகிகள் சந்தேகத்தின் விதைகளை விதைக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். முதல் நூற்றாண்டு பொய் தீர்க்கதரிசிகளால் உண்டான அதேபோன்ற ஆபத்தைக் குறித்து அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எச்சரித்தார்: “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.” (1 யோவான் 4:1) ஆகவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
11. நாம் விசுவாசத்தில் இருக்கிறோமா என்பதை சோதித்தறிய ஒரு வழியென்ன?
11 இது சம்பந்தமாக, “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” என்று பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 13:5) நாம் கிறிஸ்தவ நம்பிக்கைகள் அனைத்தையும் பின்பற்றுகிறோமா என தீர்மானிக்க நம்மை நாமே தொடர்ந்து சோதித்தறிய வேண்டுமென அந்த அப்போஸ்தலன் ஊக்கப்படுத்தினார். முறுமுறுப்பவர்களுக்கு நாம் காதுகொடுக்கிறோம் என்றால், ஜெப சிந்தையோடு நம்மை நாமே சோதித்தறிவது அவசியம். (சங்கீதம் 139:23, 24) யெகோவாவின் மக்களிடம் குறைகாண நாம் நாடுகிறோமா? அப்படியென்றால் ஏன்? ஒருவருடைய சொற்களினால் அல்லது செயல்களினால் நாம் புண்படுத்தப்பட்டிருக்கிறோமா? அப்படியென்றால் காரியங்களை சரியான கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோமா? இந்த உலகில் நாம் எதிர்ப்படும் எவ்வித உபத்திரவமும் தற்காலிகமானதே. (2 கொரிந்தியர் 4:17) சபையில் ஏதாவது சோதனையை நாம் சந்தித்தாலும் ஏன் கடவுளை சேவிப்பதை விட்டுவிட வேண்டும்? ஏதாவது ஒரு விஷயத்தால் நம் மனம் புண்பட்டிருந்தாலும், பிரச்சினையை தீர்க்க நம்மால் முடிந்ததை செய்துவிட்டு பின்பு எல்லாவற்றையும் யெகோவாவின் கைகளில் விட்டுவிடுவது மிக மேலானது அல்லவா?—சங்கீதம் 4:4; நீதிமொழிகள் 3:5, 6; எபேசியர் 4:26.
12. பெரோயா பட்டணத்தினர் எவ்வாறு நமக்கு சிறந்த முன்மாதிரி வைத்தனர்?
12 குறைகூறுபவர்களாக இருப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட படிப்பின் மூலமும் சபைக் கூட்டங்களின் மூலமும் நாம் பெறும் தகவல்களை சிறந்த ஆன்மீக கண்ணோட்டத்தில் எப்போதும் பார்ப்போமாக. (1 கொரிந்தியர் 2:14, 15) கடவுளுடைய வார்த்தையை சந்தேகிப்பதற்குப் பதிலாக, வேதவசனங்களை கூர்ந்து ஆராய்ந்த முதல் நூற்றாண்டு பெரோயா பட்டணத்தினரின் மனப்பான்மையைப் பெற்றிருப்பது எவ்வளவு ஞானமானது! (அப்போஸ்தலர் 17:10, 11) ஆகவே நாம் கற்றுக்கொள்வதற்கு ஏற்ப நடப்போமாக; கட்டுக்கதைகளை புறக்கணித்து சத்தியத்தை பற்றிக்கொள்வோமாக.
13. நாம் எப்படி அறியாமலே கட்டுக்கதைகளை பரப்பலாம்?
13 நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இன்னொரு வித கட்டுக்கதையும் உண்டு. பரபரப்பூட்டும் செய்திகள் அடிக்கடி ஈ-மெயில் மூலம் எக்கச்சக்கமாக பரப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட செய்திகளைக் குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது, அதுவும் அது யாரிடமிருந்து வந்திருக்கிறது என தெரியாதபோது. நல்ல பெயரெடுத்திருக்கும் ஒரு கிறிஸ்தவரிடமிருந்து ஓர் அனுபவமோ கதையோ வந்தால்கூட, அந்நபர் உண்மைகளை நேரடியாக அறிந்திருக்க மாட்டார். ஆகவே ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்புவதைக் குறித்து கவனமாக இருப்பது முக்கியம். ‘தெய்வீகமற்ற கற்பனைக் கதைகளை’ அல்லது ‘பரிசுத்தமானதைக் கெடுக்கும் கட்டுக்கதைகளை’ பரப்ப நிச்சயம் நாம் விரும்ப மாட்டோம். (1 தீமோத்தேயு 4:7, NW; நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) மேலும் நாம் ஒருவருக்கொருவர் உண்மையையே பேச கடமைப்பட்டிருக்கிறோம் என்பதால், அறியாமல்கூட பொய்களை பரப்ப காரணமாகிவிடும் எதையும் தவிர்ப்பதன் மூலம் ஞானமாக நடந்துகொள்வோமாக.—எபேசியர் 4:25.
சத்தியத்தைக் கடைப்பிடிப்பதன் நன்மைகள்
14. கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் கற்றிருப்பவற்றை கடைப்பிடிப்பதால் என்ன நன்மைகள் உண்டாகின்றன?
14 தனிப்பட்ட பைபிள் படிப்பின் மூலமும் கிறிஸ்தவ கூட்டங்களின் மூலமும் கற்றுக்கொள்பவற்றை கடைப்பிடித்தால் அநேக நன்மைகள் கிடைக்கும். உதாரணத்திற்கு, நம் விசுவாச குடும்பத்தாரோடு உள்ள உறவு மேம்படுவதை நாம் காணலாம். (கலாத்தியர் 6:10) பைபிள் நியமங்களை கடைப்பிடிக்கையில் நம் சொந்த மனப்பான்மையில் முன்னேற்றம் ஏற்படும். (சங்கீதம் 19:8) மேலும், கற்றுக்கொண்டிருப்பதை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் ‘தேவனுடைய உபதேசத்தை அலங்கரிப்போம்,’ அதோடு மற்றவர்களையும் உண்மை வணக்கத்திடம் கவர்ந்திழுப்போம்.—தீத்து 2:6-10.
15. (அ) ஒரு சிறுமி பள்ளியில் சாட்சிகொடுக்க எப்படி தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள்? (ஆ) இந்த அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
15 பைபிளையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் தனிப்பட்ட விதமாக படிப்பதன் மூலமும் சபைக் கூட்டங்களுக்கு தவறாமல் செல்வதன் மூலமும் கற்றுக்கொள்ளும் விஷயங்களை கடைப்பிடிக்கும் அநேக இளைஞர்கள் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இருக்கின்றனர். அவர்களது நல்நடத்தை ஆசிரியர்களுக்கும் பள்ளியிலுள்ள மற்ற மாணவர்களுக்கும் சிறந்த சாட்சியளிக்கிறது. (1 பேதுரு 2:12) ஐக்கிய மாகாணங்களில் வசிக்கும் 13 வயது சிறுமி லெஸ்லியை எடுத்துக்கொள்ளுங்கள். தன் நம்பிக்கைகளைப் பற்றி பள்ளியிலுள்ள மாணவர்களிடம் பேசுவது அவளுக்கு எப்போதுமே கடினமாக இருந்திருப்பதாக அவள் ஒப்புக்கொள்கிறாள். ஆனால் ஒருநாள் நிலைமை மாறிவிட்டது. “ஜனங்க எப்படி காசுக்காக நம்ம தலையில் எதையாவது கட்ட நினைக்கிறாங்க என க்ளாஸில் பேச ஆரம்பிச்சாங்க. ஒரு பொண்ணு கையைத் தூக்கி, யெகோவாவின் சாட்சிகளும் அப்படித்தான்னு சொன்னா.” ஒரு சாட்சியாக லெஸ்லி என்ன செய்தாள்? “நான் என் மதத்தின் சார்பா பேச ஆரம்பிச்சேன். அது கண்டிப்பா எல்லாருக்கும் ஆச்சரியமா இருந்திருக்கும், ஏன்னா பொதுவா நான் ஸ்கூல்ல வாயே திறக்கமாட்டேன்” என்கிறாள். லெஸ்லியின் தைரியத்திற்கு கிடைத்த பரிசு? “ஒரு பொண்ணுக்கு ஒரு புரோஷரையும் ட்ராக்ட்டையும் கொடுக்க முடிஞ்சுது, ஏன்னா அவள் நிறைய கேள்விகள் கேட்டாள்” என்கிறாள் லெஸ்லி. கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்கும் இளைஞர்கள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பள்ளியில் சாட்சி கொடுக்கும்போது யெகோவா எவ்வளவாய் சந்தோஷப்படுவார்!—நீதிமொழிகள் 27:11; எபிரெயர் 6:10.
16. தேவராஜ்ய ஊழியப் பள்ளி ஓர் இளம் சாட்சிக்கு எவ்வாறு பயனளித்திருக்கிறது?
16 மற்றொரு உதாரணம் எலிசபெத்தை பற்றியது. ஏழு வயது முதல் ஆரம்பப் பள்ளி ஆண்டுகள் முழுவதும் இந்த சிறுமி தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் தனக்கு பேச்சு இருக்கும் போதெல்லாம் தன் ஆசிரியர்களை ராஜ்ய மன்றத்திற்கு அழைத்தாள். ஒரு ஆசிரியரால் வர முடியாதபோது, எலிசபெத் பள்ளி நேரத்திற்கு பிறகு அந்த ஆசிரியருக்கு முன் பேச்சைக் கொடுப்பாள். மேல்நிலைப் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டில், தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் நன்மைகளைப் பற்றி பத்து பக்க ரிப்போர்ட்டை எழுதி, நான்கு ஆசிரியர்கள் அடங்கிய குழுவிற்கு முன் பேசிக் காண்பித்தாள். மாடலுக்கு தேவராஜ்ய பள்ளிப் பேச்சை கொடுக்கும்படியும் அவள் கேட்டுக்கொள்ளப்பட்டாள்; “கடவுள் ஏன் துன்மார்க்கத்தை அனுமதிக்கிறார்?” என்ற தலைப்பில் அவள் பேசினாள். யெகோவாவின் சாட்சிகளுடைய தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் கல்வித் திட்டத்திலிருந்து எலிசபெத் பயனடைந்திருக்கிறாள். யெகோவாவின் வார்த்தையிலிருந்து கற்றுக்கொண்டவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் அவருக்கு துதிசெலுத்தும் இளம் கிறிஸ்தவர்கள் அநேகரில் அவளும் ஒருத்தி.
17, 18. (அ) நேர்மையைக் குறித்து பைபிள் என்ன ஆலோசனை தருகிறது? (ஆ) யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரது நேர்மையான நடத்தையால் ஒருவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார்?
17 எல்லாவற்றிலும் நேர்மையாக நடந்துகொள்ளும்படி கிறிஸ்தவர்களுக்கு பைபிள் அறிவுறுத்துகிறது. (எபிரெயர் 13:18, NW) நேர்மையற்ற நடத்தை, மற்றவர்களுடன் உள்ள நம் உறவை முறித்துவிடலாம், அதைக்காட்டிலும் முக்கியமாக யெகோவாவுடன் உள்ள உறவை அறுத்துவிடலாம். (நீதிமொழிகள் 12:22) கற்றுக்கொண்ட விஷயங்களை கடைப்பிடிக்கிறோம் என்பதற்கு நம்முடைய நம்பகமான நடத்தை அத்தாட்சி அளிக்கிறது; யெகோவாவின் சாட்சிகளுக்கு அதிக மதிப்பு மரியாதை காட்ட அநேகரை தூண்டியிருக்கிறது.
18 ராணுவத்தில் பணிபுரியும் ஃபிலிப் என்பவரின் அனுபவத்தை கேளுங்கள். தொகையை குறிப்பிடாமல் கையெழுத்து மட்டும் போடப்பட்டிருந்த ஒரு செக்கை அவர் எங்கேயோ தொலைத்துவிட்டார்; ஆனால் போஸ்டில் தன்னிடம் வந்து சேர்ந்த போதுதான் அதன் நினைவே அவருக்கு வந்தது. அந்தச் செக் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது; அந்தச் சாட்சி, தன் மத நம்பிக்கைகளின் காரணமாக செக்கை திரும்ப அனுப்புவதாக ஒரு சீட்டில் எழுதி அத்துடன் இணைத்து அனுப்பியிருந்தார். ஃபிலிப் அப்படியே அசந்துபோனார். “அவங்க நினைச்சிருந்தா என்னோட 4,32,000 ரூபாய சுளையா அமுக்கியிருக்கலாமே!” என்றார். ஒருசமயம் சர்ச்சில் தன்னுடைய தொப்பியை யாரோ திருடிவிட்டதைக் குறித்து வருத்தப்பட்டாராம். அவருக்கு தெரிந்த ஒருவர்தான் அதை எடுத்திருந்திருக்க வேண்டுமென புரிந்தது, ஆனால் இப்போது முன்பின் தெரியாத ஒருவர் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செக்கை திருப்பி அனுப்பியிருந்தார்! உண்மையில், நேர்மையான கிறிஸ்தவர்கள் யெகோவா தேவனுக்கு மகிமை சேர்க்கிறார்கள்!
நீங்கள் கற்றுக்கொண்டவற்றை பழக்கமாக கடைப்பிடியுங்கள்
19, 20. நாம் கற்றுக்கொள்ளும் வேதப்பூர்வமான விஷயங்களை கடைப்பிடிப்பதால் எவ்வாறு நன்மை பெறுவோம்?
19 கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொண்டவற்றை கடைப்பிடிப்போர் எண்ணிலடங்கா நன்மைகளை அனுபவிக்கிறார்கள். சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.” (யாக்கோபு 1:25) ஆம், நாம் கற்றுக்கொள்ளும் வேதப்பூர்வமான காரியங்களுக்கு ஏற்ப நடந்துகொள்கையில் உண்மையான சந்தோஷத்தை அனுபவிப்போம்; வாழ்க்கைப் பிரச்சினைகளை இன்னும் திறம்பட சமாளிப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் நித்திய ஜீவனென்ற எதிர்பார்ப்பையும் பெற்றிருப்போம்!—நீதிமொழிகள் 10:22; 1 தீமோத்தேயு 6:6.
20 ஆகவே, கடவுளுடைய வார்த்தையை எப்படியும் படிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். யெகோவாவின் வணக்கத்தாருடன் தவறாமல் ஒன்றுகூடுங்கள்; கிறிஸ்தவ கூட்டங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு கவனம் செலுத்துங்கள். நீங்கள் கற்றுக்கொள்பவற்றை கடைப்பிடியுங்கள், தொடர்ந்து கடைப்பிடித்துக்கொண்டே இருங்கள், அப்போது “சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.”—பிலிப்பியர் 4:9.
[அடிக்குறிப்பு]
a தோபித்து ஒருவேளை பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்; டொபாயஸ் என்ற யூதனைப் பற்றிய மூடநம்பிக்கைகள் நிறைந்த கதை அதில் உண்டு. அவன் ஒரு இராட்சத மீனின் இருதயத்தையும், பித்த நீரையும், கல்லீரலையும் பயன்படுத்தி, குணப்படுத்தும் சக்தியையும் பிசாசுகளைத் துரத்தும் சக்தியையும் பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ‘ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரி’ என்பது என்ன, நாம் எவ்வாறு அதைப் பற்றிக்கொண்டிருக்கலாம்?
• எப்படிப்பட்ட ‘கட்டுக்கதைகளை’ நாம் புறக்கணிக்க வேண்டும்?
• கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொண்டவற்றை கடைப்பிடிப்போருக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன?
[பக்கம் 17-ன் படம்]
விசுவாசதுரோகிகளின் சொல் கேட்டு வழிதவறிப் போவதை ஆரம்பகால கிறிஸ்தவர்களால் எவ்வாறு தவிர்க்க முடிந்தது?
[பக்கம் 18-ன் படங்கள்]
மீடியாவும் இன்டர்நெட்டும் நவீனகால விசுவாசதுரோகிகளும் சந்தேக விதைகளை விதைக்கலாம்
[பக்கம் 19-ன் படம்]
ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகளை பரப்புவது ஞானமற்ற செயல்
[பக்கம் 20-ன் படங்கள்]
கடவுளுடைய வார்த்தையில் வாசிப்பவற்றை யெகோவாவின் சாட்சிகள் வேலை செய்யுமிடத்திலும் பள்ளியிலும் மற்ற இடங்களிலும் கடைப்பிடிக்கின்றனர்