வாலிபரே—நீங்கள் யாருடைய போதனைக்குச் செவிசாய்க்கிறீர்கள்?
‘சிலர் பேய்ப் போதனைகளுக்குச் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.’—1 தீமோத்தேயு 4:1.
1. (அ) வாலிபருக்கு என்ன தெரிவு இருக்கிறது? (ஆ) யெகோவா எவ்வாறு போதித்து வருகிறார்?
வாலிபருக்கு இங்குக் கேட்கப்படுகிற கேள்வியென்னவென்றால், நீங்கள் யாருடைய போதனைக்குச் செவிசாய்க்கிறீர்கள்? வாலிபராகிய உங்களுக்கு ஒரு தெரிவு இருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. தெய்வீக போதனைக்குப் பிரதிபலிப்பதற்கும் பேய்ப் போதனைகளைப் பின்பற்றுவதற்குமிடையே இந்தத் தெரிவானது சார்ந்திருக்கிறது. யெகோவா தம்முடைய வார்த்தையாகிய பைபிளின் மூலமும் பூமியில் தம்முடைய பிரதிநிதிகளாகப் பயன்படுத்தி வரும் ஆட்களுடைய ஊழியத்தின் மூலமும் போதித்து வருகிறார். (ஏசாயா 54:13; அப்போஸ்தலர் 8:26-39; மத்தேயு 24:45-47) ஆனால் பேய்களுங்கூட போதிப்பது உங்களுக்கு அதிசயத்தைத் தருகிறதா?
2. விசேஷமாக இந்தக் காலத்தில், பேய்ப் போதனைகளுக்கு எதிராகக் காத்துக்கொள்வது ஏன் அத்தியாவசியமாயிருக்கிறது?
2 அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “பிற்காலங்களிலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் [பேய்ப் போதனைகளுக்கும், NW] செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.” (1 தீமோத்தேயு 4:1) சாத்தானும் அவனைச்சேர்ந்த பேய்களும் விசேஷமாக விறுவிறுப்புள்ளவர்களாக இருக்கும் “கடைசிநாட்களில்” நாம் வாழ்ந்து வருவதால், நீங்கள் யாருடைய போதனைக்குச் செவிசாய்க்கிறீர்கள் என்ற கேள்வியை நாங்கள் கேட்பதற்கான காரணம் உங்களுக்கு விளங்குகிறதா? (2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 12:7-12) சாத்தானும் அவனைச்சேர்ந்த பேய்களும் வெகு தந்திரமுள்ளவர்களாகவும் தங்களுடைய செயல்பாட்டு முறைகளில் அவ்வளவு வஞ்சிக்கக்கூடியவர்களாகவும் இருப்பதால், இந்தக் கேள்வியை நீங்கள் கவனத்தோடு சீர்தூக்கிப்பார்ப்பது அத்தியாவசியமாயிருக்கிறது.—2 கொரிந்தியர் 11:14, 15.
பேய்களும் அவற்றின் போதனைகளும்
3. பேய்கள் யார், அவற்றின் உத்தேசம் என்ன, அதை எவ்வாறு சாதிக்க நாடுகின்றன?
3 பேய்கள் ஒருகாலத்தில் யெகோவாவின் தூதர்களாக இருந்தன, ஆனால் அவை படைப்பாளருக்கு விரோதமாகக் கலகஞ்செய்து, சாத்தானின் ஆதரவாளிகளாக ஆயின. (மத்தேயு 12:24) மக்களைக் கெடுத்து, கடவுளைச் சேவிப்பதிலிருந்து விலக்கிப்போடுவதே அவற்றின் உத்தேசமாகும். இதைச் சாதிப்பதற்கு, இந்தப் பேய்கள் யெகோவா கண்டனஞ்செய்கிற ஒரு தன்னல, ஒழுக்கக்கேடான வாழ்க்கைப் போக்கை ஊக்குவிக்க மனித குருக்களைப் பயன்படுத்தி வருகின்றன. (2 பேதுரு 2:1, 12-15-ஐ ஒத்துப்பாருங்கள்.) முற்காலத்தில் உண்மையுள்ள தேவதூதர்களாயிருந்த ஆட்கள் எவ்வாறு பேய்களாக மாறின என்பதை மறுபார்வை செய்வது அவற்றின் போதனைகளையும், இந்தப் போதனைகள் ஊக்குவிக்கிற வாழ்க்கைப் போக்கையும் அடையாளங்காண உங்களுக்கு உதவும்.
4. (அ) நோவாவின் நாளில், கீழ்ப்படியாத தேவதூதர்கள் பூமிக்கு ஏன் வந்தனர்? (ஆ) வெள்ளம் வந்தபோது அந்தப் பொல்லாத தேவதூதர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் என்ன ஆனது?
4 நோவாவின் நாட்களில், குறிப்பிட்ட சில தேவதூதர்கள் செளந்தரியமுள்ள மனுஷகுமாரத்திகளைக் கண்டு மயங்கினர். இதனால் இந்த ஆவி சிருஷ்டிகள் பூமிக்கு இறங்கிவர பரலோகத்தில் தங்களுடைய நிலைகளைத் துறந்தனர். பெண்களோடு அவர்கள் கொண்ட உடலுறவு நெப்பிலிம் என்றழைக்கப்பட்ட கலப்பின சந்ததி உருவாகும்படி செய்தது. ஆவி சிருஷ்டிகள் மனிதர்களோடு கூடிவாழ்வது வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், அந்தப் பெண்களோடு இந்தக் கீழ்ப்படியாத தேவதூதர்கள் செய்த காரியமானது, பிற்காலத்தில் சோதோமில் இருந்த ஆண்களும் பையன்களும் ஈடுபட்ட ஒத்தப் பாலினப்புணர்ச்சிகொள்ளும் செயல்களைப்போலவே தவறாக இருந்தது. (ஆதியாகமம் 6:1-4, NW; 19:4-11; யூதா 6, 7) அந்தத் தேவதூதர்களின் துணைகள் வெள்ளத்தில் தங்களுடைய கலப்பின பிள்ளைகளோடு அழிக்கப்பட்டபோதிலும், அந்தப் பொல்லாத தேவதூதர்கள் மாம்ச உருவெடுத்துவந்த தங்களுடைய உடல்களைக் களைந்து பரலோகத்திற்கு சென்று பிசாசாகிய சாத்தானின் பேய்க் கூட்டாளிகளாக ஆனார்கள்.—2 பேதுரு 2:4.
5. பேய்கள் எப்பேர்ப்பட்ட சிருஷ்டிகள், கடவுளுடைய சட்டங்களை எவ்வாறு அவை புரட்ட எத்தனிக்கின்றன?
5 இந்தச் சரித்திரப்பூர்வமான பின்னணியைக் கொண்டு, பேய்கள் உண்மையில் எப்பேர்ப்பட்ட சிருஷ்டிகள் என்பது உங்களுக்கு விளங்குகிறதா? அவை, பாலியல் வெறிப்பிடித்த இந்த உலகில், திரைக்குப் பின்னாலிருக்கும் சூழ்ச்சித்திறமுள்ள முறைதகாப் பாலுணர்ச்சிவாய்ந்த சிருஷ்டிகள். மனிதர்களாகத் திரும்பவும் உருவெடுத்து வருவதிலிருந்து அவற்றிற்கு அனுமதியில்லையென்றாலும், பூமியில் தாங்கள் கெடுக்கக்கூடிய ஆட்கள்கொள்ளும் முறைதவறான உடலுறவுகளிலிருந்து அவை இன்பத்தைப் பெறுகின்றன. (எபேசியர் 6:11, 12) கற்பு சம்பந்தமாகவும் ஒழுக்க சம்பந்தமாகவும் உள்ள யெகோவாவின் சட்டங்கள், அநாவசியமான கட்டுப்பாடாகத் தோன்றச்செய்து, பேய்கள் அவற்றைப் புரட்ட எத்தனிக்கின்றன. இந்தப் பொல்லாத தேவதூதர்கள் பாலுறவு ஒழுக்கக்கேட்டை இயல்பான, இன்பந்தரும் வாழ்க்கை முறையாக ஆதரித்துப் பேசுகின்றன.
பேய்ப் போதனைகளை ஊக்குவிப்பது
6. பேய்கள் நயவஞ்சகமான விதத்தில் அவற்றினுடைய போதனைகளை ஊக்குவிக்கின்றன என்பதைப் பற்றி நாம் ஏன் ஆச்சரியப்படக்கூடாது?
6 பேய்கள் அவற்றின் போதனைகளை நயவஞ்சகமான விதத்தில் ஊக்குவிக்கக்கூடும் என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கக்கூடாது; ஏனென்றால், அவற்றின் தலைவனாகிய பிசாசாகிய சாத்தான் ஏவாளை ஏமாற்றுவதற்கு இந்த முறையைத்தான் கையாண்டான். அவனுக்கு உதவிசெய்ய விருப்பமிருப்பதுபோல அவளிடம் பேச்சுக்கொடுத்தான் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ”? என சாத்தான் கேட்டான். பின்னர், விலக்கப்பட்ட விருட்சத்தை புசிப்பதன் மூலம் ஏவாள் பலனடைவாள் என்று சொல்வதன் மூலம், ஆசை வார்த்தைகளால் கடவுளுடைய போதனையை மட்டம்தட்ட அவன் முயற்சி செய்தான். “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்றும் பிசாசு சத்தியம் பண்ணினான். (ஆதியாகமம் 3:1-5) இவ்வாறு ஏவாளை ஆசைகாட்டி மோசம்போக்கினான். ஆம், மயங்கியதால் அவள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போனாள்.—2 கொரிந்தியர் 11:3; 1 தீமோத்தேயு 2:13, 14.
7. பேய்களின் நயவஞ்சகமான போதனைகளின் விளைவு என்னவாக இருந்திருக்கிறது, இது என்ன எச்சரிப்பை விடுக்கிறது?
7 நவீன காலங்களிலுங்கூட அநேகர் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் பாலியல் ஒழுக்கக்கேட்டை வெறுத்தொதுக்கிய ஆட்களில் அநேகர், அதை ஒத்துக்கொள்ளுமளவுக்கு பேய்கள் அவ்வளவு தந்திரமாக ஊக்குவித்திருக்கின்றன. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் உள்ள பேர்போன பத்தியெழுத்தாளரான ஆலோசகர், கல்யாணமாகாத ஆட்கள் பாலியல் சம்போகங்கள் கொள்வதைக் குறித்து வந்த கடிதத்திற்கு பதிலளிக்கையில் இவ்வாறு எழுதினாள்: “இந்தப் பிரச்னையின்பேரில் எதிர்மாறாகப் பேசுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. ஆனால் கல்யாணத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திக்கும் தம்பதிகள் தங்களுடைய இசைவுப்பொருத்தத்தைச் சோதிப்பதற்கு, ஒருசில வார நாள் பயணங்களை இருவருமாகச் சேர்ந்து மேற்கொள்ளவேண்டும் என்று இப்போது நான் யோசிக்கிறேன்.” பிறகு அவள் தொடர்ந்து சொன்னாள்: “நான் அதை எழுதினேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை!” தான் வேசித்தனத்தை சிபாரிசு செய்தாள் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. ஆனால் அதையே அவள் சிபாரிசு செய்திருந்தாள்! தெளிவாகவே, பேய்ப் போதனைகள், கடவுள் கண்டிப்பாக வேண்டாமென்று சொல்லுகிற பழக்கங்களைப் பற்றிய நம்முடைய கருத்தை பாதிக்காதபடி கவனமாயிருக்கவேண்டும்.—ரோமர் 1:26, 27; எபேசியர் 5:5, 10-12.
8. (அ) “உலகம்” என்ற வார்த்தை பைபிளில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது? (ஆ) உலகை அரசாளுவது யார், இயேசுவின் சீஷர்கள் உலகை எவ்வாறு நோக்கவேண்டும்?
8 சாத்தான் “இந்த உலகத்தின் அதிபதி” என்பதை நாம் மறக்கவே கூடாது. உண்மையில், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” அப்போஸ்தலன் யோவான் சொன்னார். (யோவான் 12:31; 1 யோவான் 5:19) இயேசு சில சமயங்களில் “உலகம்” என்ற வார்த்தையை முழு மனிதவர்க்கத்தைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தினார் என்பது வாஸ்தவந்தான். (மத்தேயு 26:13; யோவான் 3:16; 12:46) ஆனால், அநேக சமயங்களில், உண்மையான கிறிஸ்தவ சபைக்குப் புறம்பாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட எல்லா மனித சமுதாயத்தையும் குறிப்பிடுவதற்காக அவர் “உலகம்” என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். எடுத்துக்காட்டாகப் பார்த்தால், இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் “உலகத்தாராயிரா”மலிருக்கவேண்டும் (அநீதியான மனித சமுதாயம்) என்றும் அவர்கள் உலகத்தாராயிராதபடியினால், உலகம் அவர்களைப் பகைக்கும் என்றும் சொன்னார். (யோவான் 15:19; 17:14-16) சாத்தான் அரசாளும் இந்த உலகின் சிநேகிதராவதை நாம் தவிர்க்கவேண்டும் என்றும் பைபிள் எச்சரித்தது.—யாக்கோபு 4:4.
9, 10. (அ) உலகிலுள்ள என்ன காரியங்கள் தவறான பாலுணர்வு வேட்கையை கிளறிவிடுகின்றன? (ஆ) உலகப்பிரகாரமான பொழுதுபோக்குப் போதனைக்குப் பின் மறைந்திருப்பவனை எவ்வாறு அடையாளங்கண்டுகொள்ள முடியும்?
9 அப்போஸ்தலன் யோவான் கொடுத்த ஊக்குவிப்பானது: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்,” என்பதே. மேலும் அவர், “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல,” என்று சொன்னார். (1 யோவான் 2:15, 16) இதைக் குறித்து சற்று நினைத்துப்பாருங்கள். தவறான வேட்கையை, சொல்லவேண்டுமென்றால், கள்ளக்காதலை உலகில் இன்று எது கிளறிவிடுகிறது? (1 தெசலோனிக்கேயர் 4:3-5) உலகிலுள்ள பெரும்பான்மையான இசையைப் பற்றியென்ன? கலிபோர்னியாவில் போலீஸ் நன்னடத்தைப் பொறுப்பு அதிகாரி ஒருவர் சொன்னார்: “பெற்றோர் பேச்சை நீங்கள் கேட்கக்கூடாது, இஷ்டம்போல வாழுங்கள் என்பதைத்தான் இசை அடிப்படையாகப் போதிக்கிறது.” அப்படிப்பட்ட இசையினால் வரும் போதனையின் மூலத்தை உங்களால் கண்டுணர முடிகிறதா?
10 சாத்தான், உண்மையில், ‘நீ நல்ல வாய்ப்பை நழுவவிடுகிறாய். இஷ்டம்போல வாழப்பார். நல்லது எது கெட்டது எது என்று நீயே தீர்மானி. நீ கடவுள் பேச்சைக் கேட்கவேண்டிய அவசியமில்லை’ என்று ஏவாளிடம் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். (ஆதியாகமம் 3:1-5) அவ்விதமான செய்தியே உலகிலுள்ள இசையில் முக்கால்வாசி நிறைந்திருக்கிறதல்லவா? ஆனால், பேய்கள் இசையை மட்டும் பயன்படுத்தி போதிப்பது கிடையாது. அவை வியாபார துறையின் டெலிவிஷன் நிகழ்ச்சிகள், சினிமாக்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் மூலமும் போதிக்கின்றன. எவ்வாறு? கடவுளுடைய ஒழுக்கப் போதனைகள் மிதமிஞ்சி கட்டுப்படுத்துவதாகத் தோன்றும்படி உலகின் தொடர்பு மூலங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அளிக்கின்றன. அவை வேசித்தனத்தை முக்கியப்படுத்திக் காட்டுவதன் மூலமும் அதை இச்சிக்கத்தக்கதாக காட்டுவதன் மூலமும் அதை ஆதரிக்கின்றன.
11. ஒழுக்கரீதியில், டெலிவிஷன் பெரும்பாலும் எதை போதித்து வருகிறது?
11 ஐ.மா.செய்தியும் உலக அறிக்கையும் (U.S.News & World Report) என்ற பத்திரிகை சொன்னது: “1991-ல், மூன்று [ஐ.மா.] ஒளிபரப்பு நிகழ்ச்சிக் கோவைகள், பலர் பார்க்கும் நேரத்தின்போது 10,000-க்கும் மேலான பாலியல் நிகழ்ச்சிகளைக் காட்டின; ஒவ்வொரு படத்திலும் கல்யாணமான துணைவர்கள் கொள்ளும் சம்போகத்தை சித்தரித்தும் ஒவ்வொரு காட்சிக்கும், இந்த நிகழ்ச்சிக் கோவைகள் கல்யாணத்துக்குப் புறம்பான 14 பாலுறவு காட்சிளைக் காட்டின.” ஒரே வருடத்தில், பலர் பார்க்கும் நேரத்தின்போது 9,000-க்கும் மேலான கள்ளக்காதல் நிகழ்ச்சிகளைக் காட்டுவதன் மூலம், டெலிவிஷன் எதை போதித்து வருகிறது என்று நீங்கள் சொல்வீர்கள்? “பலர் பார்க்கும் நேரத்தின்போது டெலிவிஷனில் பாலியல்: 1979-க்கு எதிராக 1989” என்ற அறிக்கையின் துணை ஆசிரியராகிய பேரி S. சபோல்ஸ்கி சொல்கிறார்: “வளரிளமைப்பருவ நபர் ஒருவர் டிவியில் வருடக்கணக்காக, மக்கள் ஈடுபடும் காதல் விளையாட்டையோ வெளிப்படையான நடத்தையையோ பார்த்தாரேயானால், வருடக்கணக்காகப் பார்த்துப்பதிந்த இந்த ஆயிரக்கணக்கான காட்சிகள் பாலுறவு எந்தக் கெட்ட விளைவுகளையும் உண்டுபண்ணாமல், ரம்மியமானதுதான் என்பதைப் போதிக்கும்.” இதைக் குறித்து எந்தவித சந்தேகமுமில்லை: உலகப் பொழுதுபோக்கானது, எந்தவொரு சட்டமும் கிடையாது என்றும், வேசித்தனத்தில் ஈடுபடுவது ஏற்கத்தக்கது என்றும் கடவுள் வேண்டாமென்று சொல்கிற முறையில் வாழ்வதால் எந்தக் கெட்ட விளைவுகளும் ஏற்படாது என்றும் வாலிபருக்குப் போதித்து வருகிறது.—1 கொரிந்தியர் 6:18; எபேசியர் 5:3-5.
12. உலகின் பொழுதுபோக்கு விசேஷமாகக் கிறிஸ்தவ வாலிபருக்கு ஏன் அச்சுறுத்தலாக அமைகிறது?
12 உலகின் இசை, சினிமாக்கள், வீடியோக்கள், டெலிவிஷன் ஆகியவை வாலிபரை வசீகரிக்கவே திட்டமிடப்பட்டிருக்கின்றன. அவை இழிவான பேய்ப் போதனைகளைத்தான் பிரஸ்தாபிக்கின்றன! ஆனால் இது ஆச்சரியமூட்ட வேண்டுமா? இதைக் குறித்து யோசித்துப்பாருங்கள். பொய் மதமும் அரசியலும் சாத்தானுடைய உலகின் பாகமாயிருந்தால்—அவை அதன் பாகமாகவே தெளிவாக இருக்கின்றன—உலகம் ஊக்குவிக்கும் பொழுதுபோக்கு, பேய்களின் செல்வாக்கில்லாமல் இருக்கிறது என்று நம்புவது புத்திசாலித்தனமான காரியமாக இருக்கிறதா? “உலகம் அதன் தனி வார்ப்புக்குள் உங்களை உருப்படுத்தி திணிக்”காதபடி வாலிபராகிய நீங்கள் விசேஷமாகக் கவனமாயிருக்கவேண்டும்.—ரோமர் 12:2, நவீன ஆங்கிலத்தில் புதிய ஏற்பாடு (The New Testament in Modern English), J. B. ஃபிலிப்ஸ் எழுதியது.
சுய பரிசோதனை செய்யுங்கள்
13. என்ன சுய பரிசோதனையை செய்யவேண்டும்?
13 யாருடைய போதனைகளுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்பது உங்களுடைய பேச்சினால் மட்டுமல்லாமல் உங்களுடைய செய்கைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. (ரோமர் 6:16) ஆகவே, ‘உலகின் பிரச்சார மூலங்களிலிருந்து கற்றுவரும் காரியங்களால், என்னுடைய மனநிலையும் வாழ்க்கைப் போக்கும் தவறான விதத்தில் பாதிக்கப்படுகின்றனவா? பேய்ப் போதனைகள் என்னுடைய வாழ்க்கையை ஆக்கிரமிக்கிறதா?’ என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். இம்மாதிரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க, பைபிளைப் படிப்பதற்கும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவதற்கும், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிறரிடத்தில் சொல்வதற்கும் செலவிடுகிற மொத்த மணிநேரத்தையும் முயற்சியையும், டிவி பார்ப்பதற்கும் பாட்டுக் கேட்பதற்கும் பிடித்தமான விளையாட்டில் பங்கெடுப்பதற்கும் அல்லது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடும் ஏன் ஒத்துப்பார்க்கக்கூடாது? இவ்வளவும், உண்மையில் சொன்னால், உங்களுடைய உயிர்தாமே ஊசலாடுவதால் நேர்மையான சுய பரிசோதனையை செய்துபாருங்கள்.—2 கொரிந்தியர் 13:5.
14. நம்முடைய ஆவிக்குரிய நலனை எது பாதிக்கும், என்ன வெளிப்படையான கருத்தை மனதில் கொள்ளவேண்டும்?
14 நீங்கள் உண்ணும் மாம்சப்பிரகாரமான உணவு உங்களுடைய உடல் நலனைப் பாதிக்கும் என்பதை நீங்கள் நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறீர்கள். அதேபோல, உங்களுடைய மனதையும் உள்ளத்தையும் போஷிப்பதைப் பொருத்து, உங்களுடைய ஆவிக்குரிய நலன் பாதிக்கப்படுகிறது. (1 பேதுரு 2:2, 3) உங்களுடைய நாட்டங்களைக் குறித்து நீங்களே உங்களை ஏமாற்றிக்கொண்டாலும், நம்முடைய நியாயாதிபதியாகிய இயேசு கிறிஸ்துவை உங்களால் ஏமாற்ற முடியாது. (யோவான் 5:30) ஆகவே, ‘இயேசு பூமியிலிருந்திருந்தால், வீட்டிற்குள் வந்து நான் கேட்கிற பாட்டையும் பார்க்கிற காட்சியையும் கண்டாரேயானால், நான் சங்கடப்படுவேனா?’ என்று உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். வெளிப்படையான உண்மையென்னவென்றால், இயேசு பார்த்துக் கொண்டிருக்கிறார்; நம்முடைய செயல்களையும் அவர் அறிந்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 3:15.
பேய்ப் போதனைகளை எதிர்த்துநில்லுங்கள்
15. பேய்ப் போதனைகளை எதிர்த்துநிற்க கிறிஸ்தவர்கள் ஏன் கடினமாகப் போராடவேண்டும்?
15 பேய்கள் அவற்றின் போதனைகளுக்குச் செவிகொடுக்க வாலிபர்மீது செலுத்தும் அழுத்தம் பயங்கரமாக இருக்கிறது. இந்தப் பொல்லாத ஆவிகள், உடனடியான மகிழ்வூட்டும் வாழ்க்கையை அளிப்பதாக தோன்றுகிறது. அது குதூகலமான, இன்பமான ஒரு வாழ்க்கையாகத் தெரிகிறது. பூர்வ மோசே, பார்வோனின் வீட்டில் பிரசித்திப்பெற்ற அங்கத்தினராக, கடவுளை பிரியப்படுத்த விரும்பி, “அநித்தியமான பாவசந்தோஷங்களை” ஒதுக்கித் தள்ளினார். (எபிரெயர் 11:24-27) பேய்கள் அளிப்பதை எளிதில் வேண்டாமென்று விட்டுவிட முடியாது. ஆகையால், சரியானதைச் செய்ய கடினமாகப் போராடவேண்டும். நாம் பாவத்தை சுதந்தரித்திருப்பதினித்தமும் நம்முடைய உள்ளங்கள் அடிக்கடி கெட்டதைச் செய்ய ஆசைப்படுவதனிமித்தமும் இது விசேஷமாக உண்மையாயிருக்கிறது. (ஆதியாகமம் 8:21; ரோமர் 5:12) பாவ மனச்சாய்வுகளின் காரணமாக, பவுல் அப்போஸ்தலனுங்கூட தன்னைத்தானே நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, மாம்ச இச்சைகள் தன்னை ஆட்கொள்ளாதபடி பார்த்துக்கொண்டார்.—1 கொரிந்தியர் 9:27; ரோமர் 7:21-23.
16. ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபடும்படியான அழுத்தங்களை வாலிபர் எவ்வாறு எதிர்த்துநிற்கலாம்?
16 “தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்”றுவதற்கு தூண்டப்பட்டாலுங்கூட, கெட்ட வழியைப் பின்பற்றும்படி உங்கள் சகாக்களிடமிருந்து வரும் அழுத்தத்தை எதிர்த்துநிற்க கடவுள் உங்களுக்கு உதவிசெய்வார். (யாத்திராகமம் 23:2; 1 கொரிந்தியர் 10:13) ஆனால், கடவுள் கொடுக்கும் அறிவுரைகளுக்கு நீங்கள் செவிகொடுத்து, அவருடைய வார்த்தைகளை உங்களுடைய உள்ளத்திலே பொக்கிஷப்படுத்திக் கொள்ளவேண்டும். (சங்கீதம் 119:9, 11) வாலிபர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டால், மோகமானது வளர்ந்து கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்யும் என்பதை நீங்கள் உணரவேண்டியது அவசியம். “நான் என் காதலனோடு தனியாக இருக்கையில், என் உடம்பு ஒன்று செய்ய ஆசைப்படுகிறது, என் மூளை வேறொன்றை செய்ய சொல்கிறது,” என்று ஒரு பருவவயது பெண் ஒத்துக்கொண்டாள். ஆகவே, உங்களுடைய வரையறைகளைத் தெரிந்து செயல்படுங்கள்; உங்கள் இருதயம் திருக்குள்ளது என்பதையும் உணரத்தவறாதீர்கள். (எரேமியா 17:9) தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். (நீதிமொழிகள் 18:1) பாச உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் எல்லைகளை வையுங்கள். மேலும் அதிமுக்கியமானது என்னவென்றால், யெகோவாவை நேசித்து, அவருடைய சட்டங்களுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுபவர்களோடு மட்டுமே நெருங்கிய தோழமையை வைத்திருங்கள்.—சங்கீதம் 119:63; நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33.
17. பேய்ப் போதனைகளை எதிர்த்துநிற்பதற்கான பலத்தைப் பெற கிறிஸ்தவ வாலிபருக்கு எது உதவியாயிருக்கும்?
17 உங்களை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்துவதற்காகத் திட்டமைக்கப்பட்டிருக்கிற கிறிஸ்தவ பிரசுரங்களை கவனமாகப் படிப்பது உதவியாயிருக்கும். எடுத்துக்காட்டாக, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தையும், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தில் “சரியானதைச் செய்வதற்குப் போராடுதல்” என்ற அதிகாரத்தையும் குறித்து எண்ணிப்பாருங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பூர்வ அறிவுரையானது உங்களுடைய மனதிலும் உள்ளத்திலும் ஆழப் பதியும்போது, அது உங்களைப் பலப்படுத்தும். பேய் ஆதிக்கம்கொண்ட இந்த உலகிலே, சரியானதைச் செய்வது எளிதானதல்ல என்ற உண்மையை மறக்கவே வேண்டாம். ஆகவே கடினமாகப் போராடுங்கள். (லூக்கா 13:24) உங்களுடைய ஆவிக்குரிய பலத்தை அபிவிருத்திசெய்யுங்கள். திரளான பேர்களுக்குப் பின்செல்கிற பலவீனமான, பயங்காளிகளைப் பின்பற்றாதீர்கள்.
தெய்வீக போதனையிலிருந்து பயனடையுங்கள்
18. தெய்வீக போதனைக்குச் செவிசாய்ப்பதால் வரும் பயன்கள் யாவை?
18 யெகோவாவின் போதனைக்கு செவிகொடுப்பதன் மூலம் பிரயோஜனமான எதையுமே நீங்கள் ஒருக்காலும் இழந்துவிடமாட்டீர்கள் என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். அவர் உங்களை நேசிப்பதினிமித்தமே ‘பிரயோஜனமாயிருக்கிறதை உங்களுக்குப் போதிக்கிறார்.’ (ஏசாயா 48:17) ஆகவே யெகோவாவின் போதனைக்குச் செவிகொடுத்து, கேடுண்ட மனசாட்சி, தன்மான இழப்பு, வேண்டாத கருத்தரிப்புகள், பாலுறவு கடத்தும் நோய்கள், அல்லது இதுபோன்ற சோக சம்பவங்களால் வருத்தும் இருதய வேதனையைத் தவிர்த்திடுங்கள். மனிதர்கள் சோதனையின்கீழ் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள் என்ற சாத்தானின் சவாலுக்கு யெகோவாவின் ஊழியர்கள் பதில் கொடுப்பார்களென்றால், யெகோவா சந்தோஷப்படுகிறார். (யோபு 1:6-12) யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாயிருந்து, அவருடைய உள்ளத்தைச் சந்தோஷப்படுத்துவீர்களென்றால், இந்த உலகிற்கு எதிராக அவர் பாதகமான நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில், நீங்கள் உயிரோடே காக்கப்படுவீர்கள்; ஆனால், அவருடைய சட்டங்களை ஏளனம் செய்பவர்கள் யாவரும் நாசமடைவார்கள்.—நீதிமொழிகள் 27:11; 1 கொரிந்தியர் 6:9, 10; 1 யோவான் 2:17.
19. யெகோவாவுடைய போதனையின் நன்மைகளைப் போற்றக்கூடிய ஆட்களோடு தோழமைகொள்வதன் மதிப்பு என்ன?
19 யெகோவா தங்களுக்குச் செய்திருப்பவற்றைப் போற்றக்கூடியவர்களோடு நீங்கள் நெருங்கிய தோழமைக் கொண்டால், அவர்களுடைய அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, ஒழுக்கக்கேடான வாழ்க்கையை நடத்திவந்த ஒரு நபர் விவரிக்கிறார்: “நான் யெகோவா சொல்வதைக் கேட்டில்லையென்றால், செத்துப்போயிருப்பேன். நான் கல்யாணம் பண்ணவேண்டியிருந்த ஆள் எய்ட்ஸினால் செத்துவிட்டார். முன்பு என்னுடைய நெருக்கமான உலகப்பிரகாரமான நண்பர்களாயிருந்த யாவரும் எய்ட்ஸினால் செத்துவிட்டார்கள் அல்லது சாகும் தறுவாயிலிருக்கிறார்கள். அவர்களை நான் அடிக்கடி தெருக்களில் பார்ப்பதுண்டு. யெகோவாவுடைய மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கும் அவருடைய சட்டங்களுக்காக, அவற்றின்படி நடந்தால் மட்டுமே நம்மை தொடர்ந்து பரிசுத்தமாக வைக்கும் அந்தச் சட்டங்களுக்காக தினந்தோறும் நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய வாழ்க்கையிலேயே நான் இவ்வளவு சந்தோஷமாகவோ நிம்மதியாகவோ பாதுகாப்பாகவோ இருந்ததே கிடையாது.” நிச்சயமாகவே யெகோவாவின் போதனைக்குச் செவிகொடுப்பதானது எப்போதும் நமக்கு பிரயோஜனம்தான்!
சரியான தெரிவை செய்யுங்கள்
20, 21. (அ) வாலிபருக்கு என்ன இரண்டு தெரிவுகள் உள்ளன? (ஆ) தெய்வீக போதனைக்குச் செவிகொடுப்பதன் பலனாகக் கிடைக்கும் நீடித்த நன்மை என்ன?
20 வாலிபரே, யெகோவாவை சேவிக்கும் சரியான தெரிவை செய்யுமாறு உங்களை நாங்கள் உற்சாகமூட்டுகிறோம். பிறகு, எடுத்த தீர்மானத்தில் மனமாறாமலிருக்க நெஞ்சுரத்தோடிருங்கள். (யோசுவா 24:15) உண்மையில் சொல்லவேண்டுமென்றால், இரண்டு தெரிவுகளில் ஒன்றையே உங்களால் செய்யமுடியும். இயேசு, விரிவும் விசாலமுமான பாதை இருப்பதைப்பற்றி சொன்னார்; ஒருவர் தன் இஷ்டம்போல செய்யக்கூடிய சுலபமான பாதையாக அது இருக்கிறது. அந்தப் பாதை அழிவுக்குப் போகும் முட்டுச்சந்தாயிருக்கிறது. அடுத்த பாதை நெருக்கமானதாயிருக்கிறது. இந்த ஒழுக்கக்கேடான, பேய்கள் ஆட்டிப்படைக்கிற உலகில் செல்வதற்கு அது கடினமான பாதையாயிருக்கிறது. அந்தப் பாதையோ முடிவில் அதில் செல்பவர்களைக் கடவுளுடைய அதிசயமான புதிய உலகிற்கு வழிநடத்தும். (மத்தேயு 7:13, 14) நீங்கள் எந்தப் பாதை வழியாய் செல்வீர்கள்? யாருடைய போதனைக்கு நீங்கள் செவிகொடுப்பீர்கள்?
21 நீங்களே தெரிவுசெய்யுமாறு யெகோவா உங்களிடம் விட்டுவிடுகிறார். அவரை சேவித்தே ஆகவேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்துவது கிடையாது. “நான் ஜீவனையும் மரணத்தையும், . . . உனக்குமுன் வைத்தேன்” என்று கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மோசே சொன்னபின்பு, ‘நீ ஜீவனைத் தெரிந்துகொள்’ என்று உந்துவிக்கிறார். “உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்”வதன் மூலம் இந்தத் தெரிவு செய்யப்படுகிறது. (உபாகமம் 29:2; 30:19, 20) நீங்கள் ஞானமாக தெய்வீக போதனைக்குச் செவிகொடுப்பதைத் தெரிந்துகொண்டு, கடவுளுடைய மகிமையான புதிய உலகிலே முடிவில்லாத வாழ்க்கையை அனுபவிப்பீர்களாக.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பேய்கள் யார், அவை எதைப் போதிக்கின்றன?
◻ பேய்கள் இன்று அவற்றின் போதனைகளை எவ்வாறு ஊக்குவிக்கின்றன?
◻ பேய்ப் போதனைகளை எவ்வாறு எதிர்த்துநிற்க முடியும்?
◻ யெகோவாவின் போதனைக்கு செவிசாய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் யாவை?
[பக்கம் 16-ன் படம்]
ஜலப்பிரளயத்துக்கு முன்பாக, கீழ்ப்படியாத தேவதூதர்களும் அவர்களுடைய சந்ததியாரும் வன்முறையையும் மிதமீறிய சிற்றின்பத்தையும் ஊக்குவித்தனர்
[பக்கம் 18-ன் படம்]
உங்களுக்குப் பிடித்த பாட்டை இயேசு கேட்டால், நீங்கள் சங்கடப்படுவீர்களா?