அவளுக்கு யெகோவாவை சேவிக்க முடியாதளவுக்கு வயதாகிவிடவில்லை
முதிர்வயதான ஆட்களில் பெரும்பான்மையர், தங்களுடைய மீதிவாழ்நாட்காலம், சந்தோஷமாயிருப்பதற்கு சொற்ப நம்பிக்கையே அளிப்பதாக நினைக்கிறார்கள். பேர்போன முதுமையடைந்துவரும் நடிகையுங்கூட சொன்னார்: “என் வாழ்க்கையே கந்தரகோளமாக ஆகிவிட்டது. இப்போது அதை மாற்றவேண்டுமானால், ரொம்ப கஷ்டம் . . . நான் தனியாக உலாத்தச் செல்லும்போது, என்னுடைய வாழ்க்கையை உருப்படாமல் போகச்செய்ததை நினைத்து வருந்துகிறேன் . . . எங்குப்போனாலும் எனக்கு நிம்மதியே இல்லை; கவலையில்லாமல் இருக்க என்னால் முடியவில்லை.”
ஏறத்தாழ 2,000 வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வயதான பெண் அத்தகைய பிரச்னையை அனுபவிக்கவில்லை. அவள் 84 வயதுள்ள விதவையாயிருந்தாள்; ஆனாலும், சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும், ஆச்சரியகரமாகக் கடவுளுடைய தயவையும் பெற்றிருந்தாள். அவளுடைய பெயர் அன்னாள். பூரிப்படைவதற்கு விசேஷ காரணம் அவளுக்கு இருந்தது. அது என்ன?
‘தேவாலயத்தை விட்டு நீங்கவே இல்லை’
சுவிசேஷ எழுத்தாளராகிய லூக்கா அன்னாளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இஸ்ரவேலில் “ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்.” ஒரு தீர்க்கதரிசியாக, விசேஷ அர்த்தத்தில், கடவுளுடைய பரிசுத்த ஆவி, அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியின் வரத்தை பெற்றிருந்தாள். அன்னாளுக்கு குறிப்பிடத்தக்க ஒரு சந்தர்ப்பத்தில் தீர்க்கதரிசனம் சொல்ல மகத்தான வாய்ப்பு கிடைத்தது.
லூக்கா சொல்கிறார்: “அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள். ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள . . . விதவை”யாக இருந்தாள். (லூக்கா 2:36, 37) அநேகமாக அன்னாள் இளம் வயதிலேயே விதவையானாள். விதவையான கிறிஸ்தவ பெண்கள், எந்த வயதிலிருந்தாலுஞ்சரி, அன்பார்ந்த கணவனை சாவில் இழப்பது எத்தனை நெஞ்சைப் பிளக்கும் ஒரு சம்பவமாயிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்கள். என்றாலும், நம் நாளில் வாழக்கூடிய அநேக தெய்வ பயமுள்ள பெண்களைப்போல அன்னாளும் கடவுளுக்கு செய்யும் தன்னுடைய சேவையை இந்தச் சோகமான சம்பவம் நிறுத்திப்போட விடவில்லை.
அன்னாள் எருசலேமிலிருந்த ‘தேவாலயத்தை விட்டு நீங்கவே இல்லை’ என்று லூக்கா நமக்கு சொல்கிறார். (லூக்கா 2:37, NW) கடவுளுடைய வீட்டில் சேவை செய்வதிலிருந்து வரும் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையை அவள் ஊக்கத்தோடு போற்றினாள். இஸ்ரவேலின் சங்கீதக்காரனாகவும் அரசனாகவும் இருந்த தாவீதைப்போல, யெகோவாவிடம் ஒரேவொரு காரியத்திற்காக அவள் விண்ணப்பித்திருப்பதாக அவளுடைய செயல்கள் எடுத்துக்காட்டின. அது என்ன? தாவீது பாடினார்: “கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.” (சங்கீதம் 27:4) இந்த விஷயத்திலுங்கூட, யெகோவாவின் வணக்க இடத்திற்கு ஒழுங்காக வருவதன் மூலம் மகிழ்ச்சியைக் காணக்கூடிய இன்றுள்ள கிறிஸ்தவ பெண்களைப்போல அன்னாளிருக்கிறாள்.
அன்னாள் இரவும் பகலும் யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்தாள். இதை அவள் “உபவாசித்து, ஜெபம்பண்”ணுவதன்மூலம் செய்தாள்; துக்கத்தோடும் மிகுந்த ஆவலோடும் செய்தாளென்பதை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது. (லூக்கா 2:37) யூதர்கள் நூற்றாண்டுக்கணக்காக நீடித்த வேறுநாட்டவரின் அதிகாரங்களின்கீழ் அடிமைப்பட்டிருந்ததோடு ஆலயத்தையும் அதன் ஆசாரியத்துவத்தையும் எட்டிய சீரழிந்துவந்த மத நிலைமைகளுந்தானே, அன்னாள் யெகோவா தேவனை உபவாசத்தோடும் ஜெபத்தோடும் வணங்குவதற்கு நல்ல காரணமாயிருந்திருக்கக்கூடும். ஆனால், சந்தோஷமாயிருப்பதற்கும் அவளுக்கு காரணம் இருந்தது; ஏனென்றால் பொ.ச.மு. 2-ம் வருஷத்தில், உண்மையில் அதிவிசேஷமான தினத்தன்று ஏதோவொரு சம்பவம் அசாதாரணமாக நடந்தது.
எதிர்பாரா ஆசீர்வாதம்
இந்த அதிசிறப்பான தினத்தன்று, சிசுவாகிய இயேசுவை அவருடைய தாயாகிய மரியாளும் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பும் எருசலேம் ஆலயத்திற்கு கொண்டுவந்தார்கள். அப்போது, முதுமையான சிமியோன் அந்தக் குழந்தையைப் பார்த்து, தீர்க்கதரிசன வார்த்தைகளைப் பொழிந்தார். (லூக்கா 2:25-35) அன்னாள் எப்போதும்போல ஆலயத்தில் இருந்தாள். ‘அந்நேரத்திலே அவளும் அருகே வந்து நின்றாள்’ என்று லூக்கா அறிவிக்கிறார். (லூக்கா 2:38, NW) இந்தக் கண்மூடும் வயதிலே வருங்கால மேசியாவைப் பார்த்ததில் அன்னாளுக்கு எப்படி ஆனந்தம் பொங்கி வழிந்திருக்கவேண்டும்!
நாற்பது நாட்களுக்கு முன்பு, கடவுளுடைய தூதன், “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்ற வார்த்தைகளைச் சொல்லி பெத்லகேமுக்கு அருகிலிருந்த மேய்ப்பர்களைத் திக்குமுக்காடச் செய்தார். பரமசேனையின் திரள் யெகோவாவைத் துதித்து, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்றும் சொன்னது. (லூக்கா 2:8-14) அதேபோல, மேசியாவாக இருக்கப்போகிறவரைப் பற்றி இப்போது சாட்சிகொடுக்க அன்னாள் தூண்டப்பட்டாள்!
குழந்தையாகிய இயேசுவை பார்த்தவுடன், அன்னாளும் “கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.” (லூக்கா 2:38) முதுமையான சிமியோன், குழந்தையாகிய இயேசுவை ஆலயத்தில் பார்க்க சிலாக்கியம் பெற்றிருந்ததுபோல, சந்தேகமில்லாமல் இவளும் வாக்குப்பண்ணப்பட்ட மீட்பருக்காக ஏங்கிக்கொண்டும் ஜெபித்துக்கொண்டும் காத்துக்கொண்டும் இருந்தாள். இயேசுதான் அந்த நபர் என்ற நற்செய்தியை சொல்வதை அவளால் அடக்கிவைக்க முடியவில்லை.
இயேசுவை வளர்ந்த நபராக காணும் வரை உயிரோடிருக்க அன்னாள் எதிர்பார்க்காதபோதிலும், அவள் என்ன செய்தாள்? வரப்போகிற இந்த மேசியாவின் மூலம் கிடைக்கவிருந்த விடுவிப்பைப் பற்றி அவள் சந்தோஷத்தோடு மற்றவர்களிடம் சாட்சிபகர்ந்தாள்.
அன்னாளின் சிறந்த முன்மாதிரி
உலகில் மதப்பற்றுள்ள ஆட்களில் எத்தனைபேர் அப்படிப்பட்ட சாட்சிபகருவர், அல்லது இந்த 84 வயதில், எத்தனைபேர் இரவும் பகலும் வணங்கிக்கொண்டிருப்பர்? பல வருடங்களுக்கு முன்பு, அவர்கள் ஓய்வூதியத்தை கேட்டிருக்கக்கூடும். அன்னாளும் சிமியோனும் வித்தியாசப்பட்டவர்களாக விளங்கினார்கள். யெகோவாவின் முதிர்வயதான ஊழியர்கள் யாவருக்கும் அவர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். நிச்சயமாகவே, யெகோவாவின் வணக்க இடத்திற்கு அவர்கள் பிரியத்தை காட்டி அவரை முழு இருதயத்தோடும் துதித்தார்கள்.
தெய்வ பயமுள்ள விதவையாயிருப்பதற்கு அன்னாள் ஒரு மெச்சத்தக்க முன்மாதிரி. உண்மையில் பார்த்தால், இந்த மனத்தாழ்மையுள்ள முதிர்வயதான பெண்ணைப்பற்றிய லூக்காவின் விவரிப்பு, 1 தீமோத்தேயு 5:3-16-ல் விவரிக்கப்பட்டிருக்கிற யோக்கியதையுள்ள விதவையின் தகுதிகளோடு மிகவும் ஒத்திசைவாயிருக்கிறது. அப்பேர்ப்பட்ட விதவையானவள், “இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்தி”ருக்கிறாள், “ஒரே புருஷனுக்கு மனைவியாயி”ருக்கிறாள் மேலும் ‘சகலவித நற்கிரியைகளையும் ஊக்கமாய் நடப்பிக்கிறாள்’ என்று அங்குப் அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார். அன்னாள் அப்பேர்ப்பட்ட பெண்ணாகவே இருந்தாள்.
பூமி முழுவதிலுமிருக்கிற யெகோவாவின் சாட்சிகளடங்கிய ஆயிரக்கணக்கான சபைகளில் விசுவாசமுள்ள முதிர்வயதான விதவைகள் இரவும் பகலும் கடவுளுக்குப் பரிசுத்த சேவையை செய்து வருவதை நாம் இன்று பார்க்கிறோம். இப்பேர்ப்பட்ட நவீனகால “அன்னாக்கள்” நம் மத்தியிலிருப்பதை, நாம் எவ்வளவாகப் போற்றுகிறோம்!
ஆண்களும் பெண்களும், வயதான காலத்திலுங்கூட, கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து இதைத் தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்தலாம். யெகோவாவை சேவிக்காமலிருக்கவும் இப்போது பரலோகத்தில் நிறுவப்பட்டு, சீக்கிரத்தில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு நிறைவான ஆசீர்வாதங்களைக் கொண்டுவரக்கூடிய மேசியானிய ராஜ்யத்தைப்பற்றி சாட்சிகொடுக்காமலிருக்கும் அளவுக்கும் அவர்கள் ஒருக்காலும் அவ்வளவு வயதாகிவிடவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அன்னாள் எவ்வாறு விசேஷ ஆசீர்வாதத்தைப் பெற்றாளோ அதேபோல இப்போது கடவுளுக்கு பரிசுத்த சேவையை செய்துவரும் முதுமையான ஆட்களும் தங்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதற்கு சான்றுபகரலாம். யெகோவாவுக்குச் சேவை செய்யாமலிருக்கவும் அவருடைய பரிசுத்த பெயரை துதிக்காமலிருக்கவும் அவளுக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லை; அவ்வாறே அவர்களுக்கும் வயதாகவில்லை.