ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
லாட்வியா நற்செய்திக்கு செவிமடுக்கிறது
“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டும் என்பதே கடவுளுடைய சித்தம் என்பதை பைபிள் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. (1 தீமோத்தேயு 2:4) பல ஆண்டுகளாக நற்செய்தியை கேட்கும் வாய்ப்பில்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது கேட்கிறார்கள்! உலகில் மற்ற இடங்களில் வாழ்பவர்களைப் போலவே, லாட்வியாவில் உள்ள பலதரப்பட்ட வயதினரும் பின்னணியினரும் நற்செய்திக்கு செவிசாய்க்கிறார்கள் என்பதை பின்வரும் அனுபவங்கள் காட்டுகின்றன.
• கிழக்கு லாட்வியாவில் ரீஸெக்னி என்ற பட்டணத்தில், ஒரு தாயும் அவருடைய டீனேஜ் மகளும் ரோட்டில் போய்க்கொண்டிருந்த பெண்ணிடம் வழி கேட்டார்கள். யெகோவாவின் சாட்சியாக இருக்கும் அந்தப் பெண் அவர்களுக்கு வழிகாட்டி விட்டு, சாட்சிகள் நடத்தும் பைபிள் கூட்டங்களுக்கு வரும்படி அழைத்தாள்.
அந்தத் தாயும் மகளும் மதப்பற்றுள்ளவர்களாக இருந்ததால், கூட்டத்திற்குச் செல்ல தீர்மானித்தார்கள். கூட்டத்திற்கு செல்லும் வழியில் அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்தார்கள். அதாவது அங்கே ஏதாவது தகாத முறையில் இருந்தால் உடனே கிளம்பி வந்துவிட வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். ஆனால், அந்தக் கூட்டங்கள் மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்ததால், அங்கிருந்து கிளம்பும் எண்ணமே அவர்கள் மனதில் எழவில்லை. பைபிள் படிப்பதற்கும் ஒப்புக்கொண்டார்கள், அப்போதிருந்து தவறாமல் கூட்டங்களுக்கும் வந்தார்கள். மூன்றே மாதத்தில், ராஜ்யத்தைப் பிரசங்கிக்கும் வேலையில் பங்குகொள்ள தங்களுக்கு ஆசை இருப்பதை தெரிவித்தார்கள், சீக்கிரத்தில் முழுக்காட்டுதல் பெறவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
• மேற்கு லாட்வியாவிலுள்ள ஒரு நகரத்தில், 85 வயதுடைய அன்னா என்ற பெண்மணியை ஒரு சாட்சி சந்தித்தார்; இந்தப் பெண்மணி அதிக ஆர்வம் காண்பித்தார், அதனால் பைபிள் படிப்பதற்கும் ஒப்புக்கொண்டார். அவருடைய மகளும் குடும்ப அங்கத்தினர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் எதிர்ப்போ வயதோ சுகவீனமோ பைபிளை தொடர்ந்து படிப்பதை தடைசெய்வதற்கு அன்னா அனுமதிக்கவில்லை.
முழுக்காட்டுதல் பெறப் போவதாக தன்னுடைய மகளிடம் அன்னா ஒருநாள் கூறினார். “நீங்க முழுக்காட்டுதல் எடுத்தா, உங்கள முதியோர் இல்லத்திற்கு அனுப்பிடுவேன்” என அன்னாவின் மகள் மிரட்டினாள். ஆனால் இந்த அச்சுறுத்துதல் அன்னாவை தடை செய்யவில்லை. அவர் சுகவீனமாக இருந்ததால், அவருடைய வீட்டிலேயே முழுக்காட்டுதல் பெற்றார்.
இதைக் கண்ட அன்னாவின் மகள் என்ன செய்தாள்? அவளுடைய மனம் மாறியது, முழுக்காட்டுதலுக்குப் பிறகு தன்னுடைய தாய்க்கு விருந்து கொடுத்தாள். “முழுக்காட்டுதலுக்கு அப்புறம் இப்போ நீங்க எப்படி உணர்றீங்க?” என தன்னுடைய அம்மாவிடம் கேட்டாள். அன்னாவின் பதில்: “புதிதாக பிறந்த குழந்தையைப் போல!”
• டிசம்பர் 1998-ல், முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை இரண்டு சாட்சிகள் சந்தித்தனர். படைப்பாளர் மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததால், பைபிளை படிக்க ஒப்புக்கொண்டார், அவருடைய மனைவியும் பிறகு அந்தப் படிப்பில் சேர்ந்துகொண்டார். அவர்கள் வேகமாக முன்னேறி வந்தார்கள், சீக்கிரத்திலேயே முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாகவும் ஆனார்கள். அடுத்துவந்த கோடை காலத்திற்குள், அந்த முன்னாள் அதிகாரி முழுக்காட்டுதல் பெற்றார். ஆவிக்குரிய விஷயங்களுக்கு அவர்கள் காட்டிய அன்பு சபையிலுள்ள அனைவருக்கும் உற்சாகத்தை அளித்திருக்கிறது. அதோடு, ஒரு வீட்டை அழகான ராஜ்ய மன்றமாக மாற்றும் வேலைக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள்.