எருசலேம் முற்றிக்கை போடப்படும் என்பதை எசேக்கியேல் நடித்துக் காட்டினார்
தீர்க்கதரிசிகளைப் போல் நடந்துகொள்ளுங்கள்
தீர்க்கதரிசிகளுக்கும் உங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா? 2013-ல் வெளியிடப்பட்ட ஆங்கில பைபிளிலிருக்கும் “சொல் பட்டியல்,” தீர்க்கதரிசி என்ற வார்த்தையை இப்படி விளக்குகிறது: “தீர்க்கதரிசிகள் கடவுளுடைய நோக்கங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள். அவர்கள் கடவுளின் சார்பாக பேசுவார்கள். எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களைச் சொல்வதோடு யெகோவாவுடைய போதனைகள், கட்டளைகள், நியாயத்தீர்ப்பு செய்திகளையும் சொல்வார்கள்.” இன்று நீங்கள் தீர்க்கதரிசனங்களை சொல்லாவிட்டாலும் கடவுள் சார்பாக மற்றவர்களுக்கு நற்செய்தியைச் சொல்வதால் நீங்களும் தீர்க்கதரிசிகளைப் போல் இருக்கிறீர்கள்.—மத். 24:14.
யெகோவாவைப் பற்றியும் மனிதர்களுக்காக அவர் செய்யப்போகிற விஷயங்களைப் பற்றியும் மற்றவர்களுக்கு சொல்வது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ‘நடுவானத்தில் பறக்கும் தேவதூதரோடு’ சேர்ந்து நாம் இந்த ஊழிய வேலையைச் செய்கிறோம். (வெளி. 14:6) இருந்தாலும், இந்த வேலையைச் செய்வதால் நமக்கு சில சவால்கள் வரலாம். அதனால் இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்பதை நாம் மறந்துவிடலாம். என்ன சவால்கள் நமக்கு வரலாம்? ஒருவேளை உடலளவில் நாம் சோர்ந்துவிடலாம், உற்சாகம் இழந்துவிடலாம் அல்லது இந்த வேலையைச் செய்ய தகுதி இல்லை என்றும் நினைக்கலாம். அன்று வாழ்ந்த தீர்க்கதரிசிகளும் இதேபோல்தான் உணர்ந்தார்கள். இருந்தாலும், அவர்கள் அந்த வேலையை நிறுத்தவில்லை. அந்த வேலையைச் செய்து முடிக்க யெகோவா அவர்களுக்கு உதவி செய்தார். இப்போது நாம் சில தீர்க்கதரிசிகளுடைய உதாரணங்களைப் பார்க்கலாம். நாம் எப்படி அவர்களைப் போலவே நடக்கலாம் என்றும் பார்க்கலாம்.
சுறுசுறுப்பாக சேவை செய்தார்கள்
தினம் தினம் நாம் நிறைய வேலைகளைச் செய்வதால் சிலசமயம் நாம் ரொம்ப களைப்பாக உணரலாம்; அதனால் ஊழியத்துக்கு போக வேண்டாம் என்றுகூட நினைக்கலாம். இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் ஓய்வு தேவைப்பட்ட மாதிரி நமக்கும் ஓய்வு தேவைப்படலாம். (மாற். 6:31) ஆனால், பாபிலோனில் இருந்த எசேக்கியேல் தீர்க்கதரிசியை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பாபிலோனுக்கு கைதிகளாக வந்த இஸ்ரவேலர்களிடம் அவர் முக்கியமான செய்தியைச் சொன்னார். ஒருமுறை யெகோவா எசேக்கியேலிடம், ‘மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து, அதற்கு விரோதமாக முற்றிக்கைபோடு’ என்றார். அதோடு, 390 நாட்கள் இடதுபக்கமாகவும் 40 நாட்கள் வலதுபக்கமாகவும் அவரை படுக்க சொன்னார். “இதோ, நீ அதை முற்றிக்கைப் போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக்கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்” என்றும் சொன்னார். (எசே. 4:1-8) எசேக்கியேல் இப்படி செய்ததை கைதிகளாக இருந்த இஸ்ரவேலர்கள் நிச்சயம் கவனித்திருப்பார்கள். ஒரு வருஷத்துக்கும் அதிகமாக எசேக்கியேல் இப்படி ஒரு பக்கமாகவே படுக்க வேண்டியிருந்தது. அது அவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! இருந்தாலும் யெகோவா கொடுத்த வேலையை அவர் செய்து முடித்தார். எப்படி?
எசேக்கியேலை அனுப்பும்போது யெகோவா அவரிடம், “[இஸ்ரவேலர்கள்] கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்” என்று சொல்லியிருந்தார். (எசே. 2:5) யெகோவா அவருக்கு ஏன் அந்த வேலையைக் கொடுத்தார் என்பதை அவர் நன்றாக தெரிந்துவைத்திருந்தார். அதனால் யெகோவா சொன்னதை அப்படியே செய்தார். யெகோவாவுக்கு உண்மையுள்ள ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். எருசலேம் “நகரம் அழிக்கப்பட்ட” செய்தியை அவரும் மற்ற கைதிகளும் கேள்விப்பட்டார்கள். அப்போது, அவர்கள் நடுவில் ஒரு தீர்க்கதரிசி இருந்தார் என்பதை இஸ்ரவேலர்கள் புரிந்துகொண்டார்கள்.—எசே. 33:21, 33.
சாத்தானுடைய உலகம் முழுமையாக அழியப்போகிறது என்று நாம் மக்களை எச்சரிக்கிறோம். உடலளவில் நாம் சோர்வாக இருந்தாலும் பிரசங்கிப்பதற்கு, மறுசந்திப்புகள் செய்வதற்கு, பைபிள் படிப்புகள் நடத்துவதற்கு கடினமாக முயற்சி செய்கிறோம். உலக முடிவுக்கான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்போது ‘கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி சொன்னவர்களில்’ நாமும் ஒருவராக இருந்தோம் என்ற சந்தோஷம் நமக்கு இருக்கும்.
சோர்வை சமாளித்தார்கள்
யெகோவாவுடைய சக்தியின் உதவியால்தான் நாம் அவருக்கு சுறுசுறுப்பாக சேவை செய்கிறோம். இருந்தாலும் நாம் சொல்லும் செய்தியை மக்கள் கேட்காமல் போகும்போது நாம் உற்சாகத்தை இழக்கலாம். அந்த மாதிரி நேரத்தில் நாம் எரேமியா தீர்க்கதரிசியின் உதாரணத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் இஸ்ரவேல் மக்களிடம் கடவுளுடைய செய்தியைச் சொன்னபோது அவர்கள் அவரை கேலி செய்து, அவமானப்படுத்தினார்கள். ஒருசமயம் எரேமியா, “நான் அவரைப் பிரஸ்தாபம் பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன்” என்று சொன்னார். நம்மைப் போலவே அவரும் சோர்ந்துபோனார். இருந்தாலும் அவர் கடவுளுடைய செய்தியைத் தொடர்ந்து சொன்னார். ஏனென்றால், “[கடவுளுடைய] வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப் போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று” என்று அவரே சொன்னார்.—எரே. 20:7-9.
அதேபோல் இன்றும் மக்கள் நாம் சொல்லும் செய்தியைக் கேட்கவில்லை என்றால் நாம் சோர்ந்து போக வேண்டியதில்லை. அதற்கு பதிலாக நாம் எப்படிப்பட்ட செய்தியைச் சொல்கிறோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது அந்த செய்தி நம் “எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல்” இருக்கும். தினமும் நாம் பைபிளை வாசித்தால் நற்செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு இன்னும் அதிகமாகும்.
தயக்கத்தை சமாளித்தார்கள்
ஒரு நியமிப்பை எப்படி செய்வது என்று தெரியாதபோது, அல்லது அந்த நியமிப்பை யெகோவா ஏன் கொடுத்தார் என்று புரியாதபோது, சில கிறிஸ்தவர்கள் அதை செய்ய தயங்கலாம். ஓசியா தீர்க்கதரிசியும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் இருந்தார். “விபச்சாரம் செய்யப்போகிற ஒரு பெண்ணை நீ கல்யாணம் செய்து, விபச்சாரத்தால் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தகப்பனாக இரு” என்று யெகோவா அவருக்கு கட்டளை கொடுத்தார். (ஓசி. 1:2, NW) உங்களுக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கல்யாணம் செய்யப்போகும் பெண் ஒரு விபச்சாரியாக மாறிவிடுவாள் என்று யெகோவா சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்! ஆனால் ஓசியா, யெகோவா சொன்னதை அப்படியே செய்தார். அவர் கோமேர் என்ற பெண்ணை கல்யாணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. பிறகு கோமேர் ஒரு மகளையும் மகனையும் பெற்றெடுத்தாள். ஆனால் இந்த இரண்டு பிள்ளைகளும் கோமேர் விபச்சாரம் செய்ததால் பிறந்த பிள்ளைகள். ஓசியா கல்யாணம் செய்யப்போகும் பெண் “காதலர்களின் பின்னால் ஓடுவாள்” (NW) என்று யெகோவா அவரிடம் சொல்லியிருந்தார். ‘காதலர்கள்’ என்ற வார்த்தை ஒன்றுக்கும் அதிகமான ஆட்களை குறிக்கிறது. ‘காதலர்கள்’ பின்னால் போனாலும் அவள் மறுபடியும் ஓசியாவிடம் திரும்பி வர முயற்சி செய்வாள் என்று யெகோவா சொன்னார். ஒருவேளை நீங்கள் ஓசியாவின் இடத்தில் இருந்திருந்தால் உங்கள் மனைவி திரும்பி வரும்போது அவளை ஏற்றுக்கொண்டிருப்பீர்களா? அதைத்தான் யெகோவா ஓசியாவிடம் செய்ய சொன்னார். அதுமட்டுமல்ல, ஓசியா தன்னுடைய மனைவியை ஒரு குறிப்பிட்ட விலையைக் கொடுத்து வாங்கினார்.—ஓசி. 2:7; 3:1-5.
யெகோவா சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் செய்வதால் என்ன நன்மை என்று ஒருவேளை ஓசியா நினைத்திருக்கலாம். இருந்தாலும் அவர் யெகோவா சொன்னதை அப்படியே செய்தார். அதனால்தான், இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு துரோகம் செய்தபோது அவர் எந்தளவு வேதனைப்பட்டிருப்பார் என்பதை ஓசியாவின் உதாரணத்தில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்குப் பின் ஒருசில இஸ்ரவேலர்கள் மனந்திரும்பி யெகோவாவிடம் திரும்பி வந்தார்கள்.
“விபச்சாரம் செய்யப்போகிற ஒரு பெண்ணை நீ கல்யாணம் செய்” என்று யெகோவா யாரிடமும் இன்று சொல்வதில்லை. இருந்தாலும், யெகோவா சொன்னதை செய்ய தயாராக இருந்த ஓசியாவிடம் இருந்து நாம் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். “பொது இடங்களிலும் வீடு வீடாகவும்” நற்செய்தியைச் சொல்வது நமக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை நாம் ஆர்வமாக செய்கிறோமா? (அப். 20:20) வித்தியாசமான முறைகளில் ஊழியம் செய்வது நமக்கு கஷ்டமாக இருக்கலாம். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்த நிறையப் பேர், ‘பைபிளை படிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா உங்கள மாதிரி வீட்டுக்கு வீடு ஊழியம் எல்லாம் என்னால செய்ய முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அப்படிச் சொன்ன நிறையப் பேர் பிறகு ஆர்வமாக ஊழியம் செய்திருக்கிறார்கள். இதிலிருந்து நாம் ஒரு நல்ல பாடத்தைத் தெரிந்துகொள்கிறோம், இல்லையா?
யெகோவா சொன்ன கஷ்டமான வேலையை அப்படியே செய்த ஓசியாவிடம் இருந்து நாம் இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம். யெகோவா சொன்னதைச் செய்யாமல் இருப்பதற்கு அவர் நிறைய காரணங்களைச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. ஓசியா மட்டும் இந்த பதிவை எழுதவில்லை என்றால் அவருக்கு கிடைத்த இந்த முக்கியமான வேலையைப் பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது. ஒருவேளை நமக்கும் அதேபோல் ஒரு சூழ்நிலை வரலாம். உதாரணத்துக்கு, யெகோவாவைப் பற்றி சொல்வதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அந்த வாய்ப்பைப் பற்றி வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். அமெரிக்காவில் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஹானா என்ற சகோதரி இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்ப்பட்டாள். அவளுடைய டீச்சர், வகுப்பில் இருந்த எல்லாரையும் தங்களுக்கு பிடித்த ஒரு தலைப்பில் கட்டுரை எழுத சொன்னார். அவர்கள் எழுதிய கட்டுரையை வகுப்பில் இருக்கிற மற்ற மாணவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி பேசவும் சொன்னார். சாட்சி கொடுப்பதற்கு இந்த வாய்ப்பை ஹானா பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், யெகோவாதான் தனக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததாக ஹானா நினைத்தாள். இந்த சவாலான நியமிப்பை நல்ல விதத்தில் செய்வதற்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தாள். “பரிணாமத்தை நம்பலாமா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினாள்.
இன்று இருக்கும் இளம் பிள்ளைகள் அன்று வாழ்ந்த தீர்க்கதரிசிகளைப் போல் நடந்துகொள்கிறார்கள். யெகோவாதான் படைப்பாளர் என்று தைரியமாக சொல்கிறார்கள்
இந்த கட்டுரையை வகுப்பில் இருக்கிற எல்லாருக்கும் முன்பாக வாசித்துக் காட்டினாள். பரிணாமத்தை நம்பும் ஒரு பெண் ஹானாவிடம் சரமாரியாக கேள்விகளைக் கேட்டாள். அவள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஹானா சாமர்த்தியமாக பதில் சொன்னாள். ஹானா பேசிய விதத்தைப் பார்த்து டீச்சர் அசந்துபோனார். அவளுடைய கட்டுரைதான் வகுப்பில் இருந்த எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்ததாக சொல்லி ஹானாவுக்கு பரிசு கொடுத்தார். பரிணாமத்தை நம்பிய அந்த பெண்ணிடம் ஹானா படைப்பை பற்றி நிறைய தடவை பேசினாள். யெகோவா கொடுத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதால் ஹானா இப்படி சொல்கிறாள்: “இப்பெல்லாம் நான் பயப்படுறது இல்ல, தைரியமா நற்செய்தியை சொல்றேன்.”
தீர்க்கதரிசிகள் செய்த எல்லா வேலைகளையும் நாம் செய்வதில்லைதான். இருந்தாலும் எசேக்கியேல், எரேமியா, ஓசியா தீர்க்கதரிசிகளைப் போல் நாமும் சுயநலமில்லாமல் நடந்தால் யெகோவா விரும்புவதைச் செய்வோம். குடும்ப வழிபாடு செய்யும்போது அல்லது பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கும்போது மற்ற தீர்க்கதரிசிகளைப் பற்றி படித்து பாருங்கள். அவர்களைப் போல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம் என்றும் ஆழமாக யோசித்துப் பாருங்கள்.