ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
கடவுள் பட்சபாதமுள்ளவரல்லர்
1,900-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக, அப்போஸ்தலன் பேதுரு படைத் தலைவனாகிய கொர்நேலியுவுக்குச் சாட்சி பகர்ந்து பின்வருமாறு கூறினார்: “கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல என்றும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எந்த ஜாதியானாயினும் அவர் அங்கிகாரத்துக்குரியவனென்றும் நிச்சயமாய் அறிந்துகொள்ளுகிறேன்.” (அப்போஸ்தலர் 10:34, 35, தி.மொ.) கொர்நேலியு கடவுள் பயத்தையும் நீதியை நேசிப்பதையும் காட்டினார். பேதுரு கொடுத்த சாட்சியை ஏற்று கிறிஸ்தவரானார்.
இதே நியமம் இன்றும் பொருந்துகிறது—கடவுள் பட்சபாதமுள்ளவரல்லர் என்பதை ஜெர்மனியிலிருந்து வரும் ஓர் அனுபவத்திலிருந்து நாம் கவனிக்கிறோம். அந்த அறிக்கை சொல்வதாவது:
“எங்கள் சபை பிராந்தியத்தில், ஒரு பெரிய ரஷ்ய இராணுவ பட்டாளம் உள்ளது. 1989-ல், பெர்லின் மதில் வீழ்ந்த சிறிது காலத்துக்குப் பின், பிரஸ்தாபிகள் எவருக்காயினும் ரஷ்ய மொழி தெரியுமாவென மூப்பர்கள் கேட்டனர். எங்களில் சிலருக்குத் தெரிந்திருந்தது, நாங்கள் இந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்ய சென்றோம், இது உண்மையான மகிழ்ச்சிக்குரியதாக நிரூபித்தது. பின்வருவது பல அனுபவங்களில் ஒன்றாகும்.
“படைத்தலைவர் ஒருவரிடம் நாங்கள் பேசினபோது. முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஒருவரோடு நான் இருந்தேன் (அவர் இப்பொழுது முழுக்காட்டப்பட்டவராக இருக்கிறார்) நாங்கள் சொல்வதற்கிருந்ததை அந்தப் படைத்தலைவர் செவிகொடுத்துக் கேட்ட பின்பு, தன் போர்வீரர்களிடம் பேசும்படி எங்களுக்கு அழைப்பு கொடுத்தார். அவர்கள் கடவுளைப் பற்றியும் பைபிளைப் பற்றியுங்கூட கேட்கவேண்டுமென்று சொன்னார். ஆகவே திரும்ப வருவதற்கு ஏற்பாடு செய்தோம்.
“ரஷ்ய மொழியை நன்றாய்ப் பேசும் ஒரு சகோதரியை மொழிபெயர்த்துக் கூறுவதற்கு எங்களோடு வரும்படி அழைத்தோம். அந்தப் போர்வீரர் குடியிருப்பின் கூடும் அறையில் ஒரு மேசையில் புத்தகங்களை அடுக்கிவைத்துவிட்டு 68 போர்வீரர்களிடம் பேசி அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடிந்தது. அதன்பின் அவர்கள் 35 புத்தகங்களையும் ஏறக்குறைய 100 பத்திரிகைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றனர். அந்தக் கூடும் அறையைவிட்டு நாங்கள் செல்கையில், சிறிய தொகுதிகள் அந்தப் புத்தகங்களைப் பற்றிக் கலந்துபேசிக்கொண்டிருப்பதைக் கண்டோம்.
“ஜூலை 4, 1992 அன்று திரும்பச் செல்ல ஒரு ஏற்பாடு செய்தோம். காலை 10:50 மணிக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, அந்தப் போர்வீரர் குடியிருப்பு வாசலில் இருந்த காவற்காரன், போர்வீரர்கள் எங்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக எங்களிடம் கூறினான். படை பெரும் தலைவர் ஒருவர் அந்தக் கூடும் அறைக்குள் எங்களை அழைத்துச் சென்றார், அங்கே நூல்நிலையத்திற்காக எங்களிடமிருந்து புத்தகங்களை முன்னால் பெற்றிருந்த ஒரு பெண், அந்தப் போர்வீரர் குடியிருப்பில் விளம்பர அட்டைகளை வைப்பதன் மூலம் எங்கள் வருகையை அறிவித்திருந்ததைக் கண்டோம். நம்முடைய உலகளாவிய ஊழியத்தைப்பற்றி சுருக்கமான பேச்சுக்களை மூன்று சகோதரர்கள் கொடுத்து, நாம் ஏன் பைபிளில் திடநம்பிக்கை வைக்கலாமென்பதைக் காட்டினர். பின்பு கூடிவந்திருந்தோர் கேள்விகளைக் கேட்கும்படி அழைத்து, பைபிளிலிருந்து பதில்கள் அளித்தோம். அந்தக் கேள்விகளில் ஒன்று, இராணுவ சேவையின்பேரில் யெகோவாவின் சாட்சிகளுடைய நிலை என்ன, அவர்களில் எவராவது போர்வீரராக இருக்கின்றனரா என்பதாகும். இது என்னோடு முன்பு வந்த முழுக்காட்டப்படாத அந்தப் பிரஸ்தாபிக்கு, கிழக்கு ஜெர்மனி இராணுவத்தில் தன் 25 ஆண்டு சேவையையும், கடைசி ஆண்டுகளில் விமானப்படைத் தலைவனாக இருந்ததையும் விவரிப்பதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. அவர் எவ்வாறு கடவுளையும் பைபிளையும் பற்றிக் கற்றுக்கொண்டார் என்பதையும், இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகும்படி விரும்புகிறார் என்பதையும் கூறினார். தாங்கள் கேட்டது போர்வீரரின் மனதைக் கவர்ந்தது. ஏழு நிமிடங்களுக்குள் நாங்கள் கொண்டுவந்திருந்த எல்லா புத்தகங்களும் அந்தப் போர்வீரரின் கைகளில் இருந்தன. அவர்களில் பலர் பைபிள்கள் வேண்டுமெனக் கேட்டனர். புத்தகக் கடையில் ஏழு ரஷ்யமொழி பைபிள்களை நாங்கள் வாங்க முடிந்தது, அவற்றைப் பெற்றுக்கொண்டதில் அவர்கள் நன்றியுள்ளோராக இருந்தனர். ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பசியாயிருந்த இவர்களுக்கு, பைபிள் செய்தியைக் கொடுப்பது உண்மையான மகிழ்ச்சியாக இருந்தது, அவர்கள் அதன்பேரில் செயல்படுவார்களென நம்புகிறோம்.”
மெய்யாகவே, கடவுள் பட்சபாதமுள்ளவரல்லர். நேர்மையான இருதயமுள்ள ஆட்கள் யாராயினும் எங்கிருந்தாலும் தம்முடைய வார்த்தையின் மூலம் அவர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார். தம்மையும் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி கற்றுக்கொள்ளும்படி அவர்களை அழைக்கிறார், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள பலர் அதைச் செய்கின்றனர்.—யோவான் 17:3.