வாழ்க்கை சரிதை
‘இவ்வுலகத்திற்குரியதாயிராத’ ஒரு ராஜ்யத்திற்காகக் காத்திருக்கிறோம்
நிக்கலை கட்சூல்யாக் சொன்னபடி
நான் அடைக்கப்பட்டிருந்த சிறையில் கலவரம், அதுவும் இரவு பகலாக 41 நாட்களுக்கு! திடீரென்று ஒருநாள் பீரங்கி முழங்குகிற சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு, தூக்கம் உதறி எழுந்தேன். ராணுவ வீரர்கள் டாங்கிகளுடன் சிறை முகாமிற்குள் புயலென புகுந்து, கைதிகளைச் சரமாரியாகத் தாக்கினார்கள். என் தலை உருளுமா? தப்புமா?
நான் எப்படி இந்தச் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டேன்? சொல்கிறேன் கேளுங்கள். இந்தச் சம்பவம் நடந்தது 1954-ல். அப்போது எனக்கு 30 வயது. சோவியத் அரசாங்கத்தின் கீழிருந்த அநேக யெகோவாவின் சாட்சிகள், அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் நடுநிலை வகித்ததாலும், கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி மற்றவர்களுக்குப் பிரசங்கித்ததாலும் சிறையில் தள்ளப்பட்டார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. சிறைப்பட்ட எங்கள் தொகுதியில் 46 ஆண்களும் 34 பெண்களும் இருந்தோம். மத்திய கஸக்ஸ்தானைச் சேர்ந்த கங்ஜீர் கிராமத்திற்கு அருகே இருந்த கட்டாய உழைப்பு முகாமில் ஆயிரக்கணக்கான மற்ற கைதிகளோடு நாங்களும் அடைக்கப்பட்டோம்.
சோவியத் யூனியனின் தலைவரான ஜோசஃப் ஸ்டாலின் அதற்கு முந்தைய வருடம் காலமாகியிருந்தார். அநேக கைதிகள், சிறைச்சாலையின் அவலநிலை குறித்து தாங்கள் எழுப்பும் அபயக் குரலை மாஸ்கோவின் புதிய அரசாங்கமாவது காதில் போட்டுக்கொள்ளும் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கையில் மண்விழுந்தபோது, கைதிகளின் மனதுக்குள் புகைந்துகொண்டிருந்த அதிருப்தி ஒருநாள் சிறைக் கலவரமாக வெடித்தது. அந்தக் கலவரத்தின்போது, கொதித்துப்போயிருந்த கிளர்ச்சியாளர்களிடமும், ராணுவ காவலர்களிடமும் யெகோவாவின் சாட்சிகளாக எங்கள் நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. அப்படி நடுநிலை வகிப்பதற்குக் கடவுள்மீது எங்களுக்கு விசுவாசம் தேவைப்பட்டது.
வெடித்தது கலவரம்!
மே 16-ஆம் தேதி சிறைக் கலவரம் வெடித்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, முகாமில் கூடுதல் வசதிகளைச் செய்துகொடுக்குமாறு கேட்டும், அரசியல் கைதிகளுக்கு சில சலுகைகளை அளிக்குமாறு கோரியும் 3,200-க்கும் அதிகமான கைதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். விறுவிறுப்பான சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. முதலாவதாக, முகாமில் இருந்த காவலர்களைக் கலகக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். பிறகு, சுற்றியிருந்த தடுப்புச் சுவர்களில் திறப்புகளை ஏற்படுத்தினார்கள். ஆண்கள் பகுதிக்கும் பெண்கள் பகுதிக்கும் இடையிலிருந்த சுவர்களைத் தரைமட்டமாக்கி, குடும்ப குடியிருப்புகளாக அவற்றை மாற்றினார்கள். அதற்குப் பின் வந்த பரபரப்பான நாட்களில், சிறையிலிருந்த பாதிரிகள் முறைப்படி திருமணம் நடத்தி வைக்க, கைதிகள் சிலர் திருமணம்கூட செய்துகொண்டார்கள். மூன்று சிறை முகாம்களில் கலவரம் தலைதூக்கியது. அங்கு அடைபட்டிருந்த 14,000 கைதிகளில் பெரும்பாலோர் அதில் பங்கேற்றார்கள்.
ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, முகாம் குழு ஒன்றைக் கலகக்காரர்கள் ஏற்படுத்தினார்கள். என்றாலும், சீக்கிரத்தில் அந்தக் குழுவினர் மத்தியிலேயே சண்டை சச்சரவுகள் எழுந்தன. கடைசியில், அவர்களில் அதிக மூர்க்கமானவர்கள் முகாமைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். இதனால் பதட்டம் வலுத்தது. “ஒழுங்கை” கட்டிக்காப்பதற்காக, பாதுகாப்பு இலாகாவையும் ராணுவ இலாகாவையும் கொள்கைபரப்பு இலாகாவையும் கலகக்காரர்களின் தலைவர்கள் அமைத்தார்கள். முகாமைச் சுற்றிலும் கம்பங்களில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தி, போராட்டத் தலைவர்கள் அனல் தெறிக்கப் பேசினார்கள். இது விடுதலை வெறியை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. கைதிகள் அங்கிருந்து தப்பிவிடாதபடி கலகக்காரர்கள் பார்த்துக்கொண்டார்கள்; தங்களை எதிர்த்தவர்களைத் தண்டித்தார்கள்; ஒத்துழைக்க மறுத்தவர்களைக் கொல்லத் தயாராக இருப்பதாகவும் மிரட்டினார்கள். ஏற்கெனவே சில கைதிகளை அவர்கள் கொன்றுவிட்டதாகக்கூட வதந்திகள் வலம் வந்தன.
ராணுவத் தாக்குதலைக் கலகக்காரர்கள் எதிர்பார்த்தார்கள். ஆகையால், தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்குக் கவனமாக முன்னேற்பாடுகளைச் செய்தார்கள். முகாமைப் பாதுகாப்பதற்குப் பெரும்பாலான கைதிகள் தயாராக இருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். ஆகவே, ஆயுதங்களைக் கைவசம் வைத்திருக்கும்படி கைதிகளுக்குக் கலகக்காரத் தலைவர்கள் உத்தரவிட்டார்கள். அவர்களுடைய ஆணைக்கு அடிபணிந்த கைதிகள், ஜன்னல் கம்பிகளைப் பெயர்த்தெடுத்து கத்திகளையும் வேறு பல ஆயுதங்களையும் செய்தார்கள். இதென்ன பிரமாதம், துப்பாக்கிகளையும் வெடி மருந்துகளையும்கூட எப்படியோ வாங்கிவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
கலவரத்தில் கலந்துகொள்ள வற்புறுத்தப்படுதல்
அந்தச் சமயத்தில் கலகக்காரர்கள் இருவர் என்னிடம் வந்தார்கள். பளபளவென்று தீட்டப்பட்ட கத்தியை அவர்களில் ஒருவன் என்னிடம் நீட்டினான். “இதை வைத்துக்கொள், உன்னுடைய பாதுகாப்பிற்குத் தேவைப்படும்” என்று உத்தரவிட்டான். பதட்டப்படாமல் இருக்க உதவும்படி யெகோவாவிடம் மனதுக்குள் ஜெபித்தேன். பிறகு, “நான் ஒரு கிறிஸ்தவன், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன். ஜனங்களுக்கு எதிராகச் சண்டை போட்டதற்காக நாங்கள் சிறையில் அடைக்கப்படவில்லை; ஆவி சிருஷ்டிகளுக்கு எதிராகவே நாங்கள் சண்டை போடுகிறோம். விசுவாசமும் கடவுளுடைய ராஜ்யத்தின் மீதிருக்கிற நம்பிக்கையுமே எங்களுடைய போராயுதங்கள்” என்று பதில் சொன்னேன்.—எபேசியர் 6:12.
நான் சொன்னது புரிந்ததென்று அவன் தலையாட்டியதைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சரியம். ஆனால், கூட இருந்தவன் என்னை ஓங்கி அடித்துவிட்டான். பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து போய்விட்டார்கள். கலகக்காரர்கள், ஒவ்வொரு அறைக்கும் சென்று, கலகத்தில் கலந்துகொள்ளும்படி சாட்சிகளை வற்புறுத்தினார்கள். ஆனால், நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஒருவர்கூட அதற்கு ஒத்திணங்கவில்லை.
யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகிப்பதைப்பற்றி கலகக்காரர்கள் தங்கள் கூட்டத்தில் பேசினார்கள். “பெந்தெகொஸ்தே, அட்வென்டிஸ்ட், பாப்டிஸ்ட் என எல்லா மதத்தவரும் கலகத்தில் கலந்துகொள்கிறார்கள். மறுப்பு தெரிவித்தது இந்த யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே” என்று பேசிக்கொண்டார்கள். “இவர்களை என்ன செய்வது?” என்று ஆலோசனை நடத்தினார்கள். சாட்சிகளில் ஒருவரைச் சிறை அடுப்பில் தூக்கிப் போட்டால் மற்றவர்கள் பயப்படுவார்கள் என்று அவர்களில் ஒருவர் கருத்துத் தெரிவித்தார். ஆனால், முன்னாள் ராணுவ அதிகாரியும் மற்றவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான ஒரு கைதி எழுந்து நின்று, “அப்படிச் செய்வது முட்டாள்தனம். அவர்கள் எல்லாரையும் முகாமின் மூலையில், நுழைவாயிலுக்கு அடுத்திருக்கும் அறையில் போட்டுவிட வேண்டும். ஒருவேளை டாங்கிகளோடு வந்து ராணுவம் நம்மைத் தாக்கினால், அவர்களுடைய குண்டுகளுக்கு முதலில் பலியாகப்போவது சாட்சிகள்தான். அதோடு, இவர்களைக் கொன்ற பழியும் நம்மீது விழாது” என்று யோசனை கூறினார். அதை மற்றவர்களும் ஏகமனதாய் ஏற்றுக்கொண்டார்கள்.
தலைக்கு மேல் கத்தி!
அதன் பிறகு, “யெகோவாவின் சாட்சிகளே, வெளியேறுங்கள்!” என்று கோஷமிட்டபடி, கைதிகள் முகாமைச் சுற்றி வந்தார்கள். எங்கள் 80 பேரையும் முகாமின் கோடியிலிருந்த அறைக்குக் கும்பலாகக் கொண்டு போனார்கள். அறையை விசாலமாக்குவதற்காக அங்கிருந்த படுக்கைகளை இழுத்து வெளியே போட்டார்கள். பிறகு, உள்ளே போகும்படி எங்களுக்கு ஆணையிட்டார்கள். இப்படியாக, சிறைக்குள்ளேயே நாங்கள் சிறை வைக்கப்பட்டோம்.
எங்களோடு இருந்த கிறிஸ்தவ சகோதரிகள் போர்வைகளை ஒன்றாக இணைத்துத் தைத்தார்கள். அறையின் குறுக்கே அதைக் கட்டினோம். ஒரு பக்கத்தில் ஆண்களும் மறுபக்கத்தில் பெண்களுமாகத் தங்கிக்கொண்டோம். இது ஓரளவு தனிமையை எங்களுக்கு அளித்தது. (பிற்பாடு, ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு யெகோவாவின் சாட்சி, இந்த அறையைச் சித்திரமாகத் தீட்டினார். அதைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.) அந்த நெரிசலான அறையில் இருந்தபோது, நாங்கள் அடிக்கடி ஒன்றுசேர்ந்து ஜெபித்தோம். எங்களுக்கு ஞானத்தையும் ‘இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியையும்’ தரும்படி யெகோவாவிடம் கெஞ்சினோம்.—2 கொரிந்தியர் 4:7, NW.
ஒருபக்கத்தில் கலகக்காரர்கள், மறுபக்கத்திலோ சோவியத் ராணுவம். இப்படி இருபுறமும் ஆபத்து சூழ்ந்திருக்க, இடையே நாங்கள் மாட்டிக்கொண்டு தவித்தோம். அடுத்து இரு தரப்பினரும் என்ன செய்வார்கள் என தெரியாமல் குழம்பினோம். “அப்படிச் செய்வார்களோ இப்படிச் செய்வார்களோ என்று ஊகித்துக்கொண்டிருக்காதீர்கள். யெகோவா நம்மை கைவிடவே மாட்டார்” என்று வயதான, உண்மையுள்ள சகோதரர் ஒருவர் எங்களுக்குத் தெம்பூட்டினார்.
எங்களுடைய அருமையான கிறிஸ்தவ சகோதரிகளில், இளையோரும் முதியோரும் காட்டிய சகிப்புத்தன்மையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவர்களில் ஒருவருக்கு சுமார் 80 வயது, அதிக உதவி தேவைப்படும் நிலையில் இருந்தார். சிலர் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள், அவர்களுக்குச் சிகிச்சை தேவைப்பட்டது. கலகக்காரர்கள் எங்களைச் சதா கண்காணித்து வந்ததால், அறையை நாங்கள் திறந்தே வைக்கும்படி சொல்லியிருந்தார்கள். இரவு நேரத்தில், ஆயுதமேந்திய கைதிகள் எங்களுடைய அறைக்கு வருவார்கள். “கடவுளுடைய ராஜ்யம் தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று அவர்கள் சில சமயத்தில் கிண்டல் செய்வதைக் கேட்டிருக்கிறோம். பகல் நேரத்தில் சிறையின் சாப்பாட்டு அறைக்குப் போக எங்களை அவர்கள் அனுமதித்தபோதெல்லாம் நாங்கள் அனைவரும் சேர்ந்தே சென்றோம். இந்த வன்முறையாளர்களிடம் இருந்து எங்களைப் பாதுகாக்கும்படி யெகோவாவிடம் உருக்கமாய் வேண்டினோம்.
சிறைக்குள் சிறை வைக்கப்பட்டிருந்தபோது ஒருவரையொருவர் ஆன்மீக ரீதியில் பலப்படுத்திக்கொண்டோம். உதாரணமாக, பெரும்பாலும் ஒரு சகோதரர் பைபிள் பதிவு ஒன்றை விவரிப்பார். எங்கள் எல்லாருக்கும் கேட்கும் அளவுக்கு மட்டுமே பேசுவார். அதன் பிறகு அந்தப் பதிவை எங்களுடைய சூழ்நிலைக்குப் பொருத்தி விளக்குவார். வயதான சகோதரர் ஒருவருக்கு கிதியோனின் படைவீரர்களைப்பற்றி பேசுவதென்றால் கொள்ளை பிரியம். “300 பேர் இசைக் கருவிகளைக் கையில் வைத்துக்கொண்டு, ஆயுதமேந்திய 1,35,000 போர் வீரர்களுக்கு எதிராக யெகோவாவின் பெயரில் போரிட்டார்கள். அந்த 300 பேருமே பத்திரமாக வீடு திரும்பினார்கள்” என்று எங்களுக்கு நினைப்பூட்டுவார். (நியாயாதிபதிகள் 7:16, 22; 8:10) இந்த பைபிள் உதாரணமும் மற்றவையும் ஆன்மீக ரீதியில் எங்களைப் பலப்படுத்தின. நான் முழுக்காட்டுதல் பெற்று கொஞ்ச காலம்தான் ஆகியிருந்தது. ஆனால், அதிக அனுபவம் வாய்ந்த சகோதர சகோதரிகளின் அசைக்க முடியாத விசுவாசம் என்னை வெகுவாகப் பலப்படுத்தியது. யெகோவா உண்மையிலேயே எங்களோடு இருப்பதை உணர்ந்தேன்.
போராட்டம் ஆரம்பம்
வாரங்கள் கடந்தன. முகாமில் பதட்டம் அதிகரித்தது. கலகக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அதிக தீவிரமடைந்தன. தங்களைச் சந்திப்பதற்கு, மாஸ்கோவில் இருந்த மத்திய அரசாங்கம் அதன் பிரதிநிதி ஒருவரை அனுப்ப வேண்டுமென்று கலகக்கூட்டத்தின் தலைவர்கள் வற்புறுத்தினார்கள். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும்படியும், வேலைக்குத் திரும்பும்படியும் கலகக்காரர்களை அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். இரு தரப்பினருமே சமரசத்திற்குத் தயாராய் இல்லை. அதற்குள்ளாக, ராணுவ படைகள் முகாமைச் சுற்றி வளைத்தன. உத்தரவிட்டதும் சுட்டுத்தள்ள வீரர்கள் தயார் நிலையில் இருந்தார்கள். கலகக்காரர்களும் சளைக்கவில்லை. பாதுகாப்பு தடை அரண்களையும், ஆயுதக் குவியலையும் வைத்துக்கொண்டு சண்டைக்குத் தயாரானார்கள். போராட்டத்தின் முடிவுக்காட்சி எந்நேரத்திலும் அரங்கேறலாம் என்று எல்லாரும் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஜூன் 26-ம் தேதி, பீரங்கிகளிலிருந்து குண்டு மழை பொழியும் சத்தத்தைக் கேட்டு கண்விழித்தோம். தடுப்புச் சுவரைத் தகர்த்துக்கொண்டு டாங்கிகள் முகாமிற்குள் நுழைந்தன. அதைத் தொடர்ந்து, இயந்திரத் துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் சரமாரியாகச் சீறிப் பாய ராணுவ துருப்புகள் மடை திறந்த வெள்ளம் போல் குபுகுபுவென உள்ளே புகுந்தன. ஆண் கைதிகளும் பெண் கைதிகளும் “ஹுர்ரே” என்று கத்தியபடி டாங்கிகளை எதிர்கொண்டு ஓடினார்கள். பாறைகளையும் நாட்டு வெடிகுண்டுகளையும் மட்டுமல்ல, கையில் கிடைத்த எல்லாவற்றையும் தூக்கியெறிந்தார்கள். மூர்க்கத்தனமான சண்டை தொடர்ந்தது. இவர்களுக்கிடையே சாட்சிகள் நாங்கள் மாட்டிக்கொண்டு தவியாய் தவித்தோம். யெகோவா எங்கள் மன்றாட்டுக்கு எப்படிப் பதில் அளிப்பார்?
திடீரென்று, எங்கள் அறைக்குள் ராணுவ வீரர்கள் புயலென புகுந்தார்கள். “பரிசுத்தவான்களே, வெளியே வாருங்கள். சீக்கிரம், தடுப்புச் சுவருக்கு வெளியே போங்கள்!” என்று அவசரப்படுத்தினார்கள். எங்களைச் சுடக் கூடாதென்றும், எங்களோடு இருந்து எங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றும் அந்தப் போர் வீரர்களின் அதிகாரி அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். உள்ளே சண்டை நடந்துவருகையில், நாங்கள் முகாமிற்கு வெளியே இருந்த புல்வெளியில் உட்கார்ந்திருந்தோம். நான்கு மணி நேரத்திற்கு வெடிச் சத்தமும், துப்பாக்கி சத்தமும், அலறலும், முணங்கலுமே முகாமிற்குள்ளிருந்து வந்தன. அதன் பிறகு, புயலடித்து ஓய்ந்ததுபோல் ஒரே நிசப்தம். அடுத்து, ரணகளமாயிருந்த முகாமிற்குள்ளிருந்து ராணுவ வீரர்கள் சடலங்களைச் சுமந்து வந்ததை பகல் வெளிச்சத்தில் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். காயமடைந்தவர்கள், காலமானவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம்.
அன்று பின்னொரு சமயம், எனக்குப் பழக்கமான ஓர் அதிகாரி எங்களிடம் வந்தார். “என்ன நிக்கலை, உன்னைக் காப்பாற்றியது யார்? நாங்களா, யெகோவாவா?” என்று பெருமை ததும்ப கேட்டார். எங்கள் உயிரைக் காப்பாற்றியதற்காக அவருக்கு நெஞ்சார நன்றி தெரிவித்தோம். “சர்வவல்லமையுள்ள தேவனாகிய யெகோவா, பைபிள் காலங்களில் தம் ஊழியரைக் காப்பாற்ற மற்றவர்களைத் தூண்டியிருக்கிறார். அதேபோல எங்களைக் காப்பாற்ற இப்போது உங்களைத் தூண்டியிருக்கிறார்” என்றும் கூறினோம்.—எஸ்றா 1:1, 2.
நாங்கள் யார் என்பதும், எங்கிருந்தோம் என்பதும் போர்வீரர்களுக்கு எப்படித் தெரிந்ததென்பதை அந்த அதிகாரியே விளக்கினார். ஒரு சமயம் பேச்சுவார்த்தையின்போது, தங்களை ஆதரிக்காத கைதிகளைக் கலகக்காரர்கள் கொல்வதாக ராணுவத்தார் அவர்கள்மீது குற்றஞ்சாட்டினார்கள். அதற்குப் பதில் அளிக்கையில், யெகோவாவின் சாட்சிகள் கலவரத்தில் கலந்துகொள்ளாதபோதும், அவர்களைத் தாங்கள் கொல்லவில்லை என்றும், தண்டனையாக அவர்கள் எல்லாரையும் ஓர் அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். ராணுவ அதிகாரிகள் இதை மனதில் வைத்திருந்து செயல்பட்டிருந்தார்கள்.
ராஜ்யத்திற்காக உறுதியாக நின்றோம்
பிரபல ரஷ்ய எழுத்தாளரான அலிக்ஸாண்டர் சோல்ஸநிட்சன் என்பவர் த குலாக் ஆர்கிப்பெலகோ என்ற தன் புத்தகத்தில் நாங்கள் எதிர்ப்பட்ட அந்தச் சிறைக் கலவரத்தைப்பற்றி எழுதியிருக்கிறார். கலவரம் வெடித்ததற்கான காரணத்தை அதில் குறிப்பிட்டிருக்கிறார்: “நாங்கள் விடுதலையை விரும்பினோம், . . . ஆனால், அதை யாரால் கொடுக்க முடியும்?” அதே சிறை முகாமில் அடைபட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளான நாங்களும் விடுதலை பெற ஏங்கினோம். ஆனால், நாங்கள் விரும்பியது, கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே அளிக்க முடிகிற விடுதலையை; வெறுமனே சிறையிலிருந்து விடுதலை பெறுவதை அல்ல. கடவுளுடைய ராஜ்யத்தை உறுதியுடன் ஆதரிப்பதற்கு யெகோவா மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும் என்பதைச் சிறையில் இருந்தபோது நாங்கள் அறிந்திருந்தோம். எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா அளித்தார். கத்திகளையோ, கையெறி குண்டுகளையோ பயன்படுத்தாமலே வெற்றிபெற அவர் எங்களுக்கு உதவினார்.—2 கொரிந்தியர் 10:3.
பிலாத்திடம் இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் . . . என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே.” (யோவான் 18:36) ஆகவே, கிறிஸ்துவைப் பின்பற்றியதால் நாங்கள் அரசியல் போராட்டங்களில் பங்குகொள்ளவில்லை. கலவரத்தின்போதும் அதற்குப் பின்பும் நாங்கள் கடவுளுடைய ராஜ்யத்திற்கு உண்மையுள்ளவர்களாக இருந்தது மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. இதை நினைத்து நாங்கள் மகிழ்ந்தோம். நாங்கள் அப்போது நடந்துகொண்டதைப்பற்றி சோல்ஸநிட்சன் பின்வருமாறு எழுதினார்: “யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மத நம்பிக்கைகளுக்குக் கொஞ்சமும் பிசகாமல் நடந்துகொண்டார்கள். தடை அரண்களைக் கட்டவோ, காவலுக்கு நிற்கவோ மறுத்தார்கள்.”
அந்தக் கொந்தளிப்பான சம்பவங்கள் நடந்து முடிந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. ஆனாலும், வாழ்க்கையின் அந்தப் பக்கத்தை நான் அடிக்கடி நன்றியோடு புரட்டிப் பார்ப்பதுண்டு. ஏனெனில், யெகோவாவுக்காகக் காத்திருக்க வேண்டும், அவருடைய வல்லமையான கரத்தை முழுமையாக நம்ப வேண்டும் போன்ற பாடங்களை அப்போது கற்றுக்கொண்டேன். அவை என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டன. ‘இவ்வுலகத்திற்குரியதாயிராத ராஜ்யத்திற்காக’ காத்திருப்போருக்கு யெகோவா விடுதலையையும் பாதுகாப்பையும் மீட்பையும் அளிக்கிறார் என்பதை சோவியத்திலிருந்த அநேக அருமையான சாட்சிகள் அனுபவத்தில் கற்றுக்கொண்டார்கள். நானும்தான்!
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
கஸக்ஸ்தானில், இந்தக் கட்டாய உழைப்பு முகாமில்தான் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம்
[பக்கம் 10-ன் படம்]
சாட்சிகள் சிறை வைக்கப்பட்டிருந்த அறையின் பெண்கள் பகுதி படமாக வரையப்பட்டிருக்கிறது
[பக்கம் 11-ன் படம்]
விடுதலை செய்யப்பட்டபோது, கிறிஸ்தவ சகோதரர்களுடன்