‘நான் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்’
புரூனெல்லா இன்கான்டீடியின் நண்பர்கள் சொன்னபடி
“சனிக்கிழமை ஒரு மந்தமான தனிமையான நாளாயிருந்தது. மனமுடைந்துபோய், நான் தன்னந்தனிமையாக அறையில் இருந்தேன். ஹாலுக்கு செல்லும் வழியாக நடக்கவேண்டும்போல இருந்தது. எல்லாம் சுமூகமாக போய்கொண்டிருந்தது, திடீரென்று எதிர்பாராமல் ஒருவர் என் முகத்திற்கு முன்பாக கதவை பலமாக அடைத்தார். வெளியே போக கடுமையாக முயற்சி செய்தாலும், என்னால் முடியவேயில்லை.”
கடுமையான மனமுறிவானது புரூனெல்லா இன்கான்டீடி என்ற 15 வயது பெண்ணின் மனதை அழுத்தியது. அவளுடைய இளம் வாழ்க்கையில் அதிமுக்கியமான தினமானது முடிவடைந்து கொண்டிருந்தது. அந்த ஆண்டிற்கு முன்பாகத்தான் யெகோவாவிடமாகவும் பைபிளிடமாகவும் வளர்ந்துவந்த அவளுடைய அன்பு, அவருக்குத் தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க அவளைத் தூண்டியது. ஜூலை 1990-ல் கனடாவிலுள்ள மான்ட்ரீலில் நடக்கவிருந்த “சுத்தமான பாஷை” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டப்பட இருந்தாள். மாறாக, புரூனெல்லா எஞ்சியிருக்கிற தன் வாழ்நாள் பூராவும் நீடித்திருக்கக்கூடிய விசுவாசப் பரீட்சையை எதிர்ப்படும் தறுவாயில் இருந்தாள்.
தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலமாக தன்னுடைய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்த எதிர்பார்த்திருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பாக புரூனெல்லா வெள்ளணுப் புற்றுநோய் இருப்பதை அறியலானாள். உள்ளூர் குழந்தைகள் மருத்துவமனையிலிருக்கும் டாக்டர்கள் உடனே சிகிச்சையளிக்க விரும்பினர். ஆகையால் புரூனெல்லா மருத்துவமனையிலேயே இருந்துவிட்டாள்.
அவள் சொன்ன வார்த்தைகளே டாக்டர்களுடைய உள்ளத்தைக் கனிவிக்கிறது
இரத்தம் யெகோவா தேவனுக்குப் பரிசுத்தமுள்ளது என்பதைப் புரூனெல்லா அறிந்திருந்தாள். (லேவியராகமம் 17:11) அவளுடைய பெற்றோராகிய ஏட்மோண்டோ, நிக்காலெட்டா, தங்களுடைய மகளுக்குச் சிகிச்சைக் கொடுக்கையில் இரத்தம் ஏற்றக்கூடாது என்ற நிபந்தனையைக் கூறியிருந்தனர். “புரூனெல்லா சட்டப்பூர்வமாக வயதுவந்தவளாக இல்லாவிட்டாலும், அதைப்பற்றி தான் சொல்வதையுங்கூட டாக்டர்கள் கேட்கவேண்டும் என்றிருந்தாள். ‘இரத்தத்துக்கு விலகியிருக்க’ வேண்டுமென்ற பைபிள் கட்டளையை மீறக்கூடிய சிகிச்சை தனக்கு வேண்டாமென்று உறுதியாக அவர்களிடம் சொன்னாள்” என அவளுடைய தகப்பன் நினைவுபடுத்தி சொல்கிறார்.—அப்போஸ்தலர் 15:20.
ஜூலை 10, 1990 அன்று புரூனெல்லாவின் பெற்றோரோடும் யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களோடும் மூன்று டாக்டர்களும் சமூக சேவகியும் சந்தித்துப் பேசினர். புரூனெல்லாவுக்கு கடும் நிணநீர் வெள்ளணுப் புற்றுநோய் (lymphoblastic leukemia) இருந்ததாக சோதனைகள் உறுதிப்படுத்தின. டாக்டர்கள் அந்த நோயை எதிர்த்துத் தாக்குவதற்கு தங்களுக்கிருந்த திட்டத்தை விளக்கிக் காட்டினர். சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் என்பதை அவர்கள் சாதுரியமான விதத்தில் எடுத்துச்சொன்னார்கள். “புரூனெல்லாவின் நடத்தையும் கடவுளுக்கு கீழ்ப்படியவேண்டுமென்ற மனவுறுதியும் அந்த டாக்டர்களையும் சமூக சேவகியையும் தொட்டது. அவளுடைய பெற்றோர் காட்டும் அன்பையும் கிறிஸ்தவ சபையிலிருந்துவந்த நண்பர்கள் தந்த ஆதரவையும் கண்டு அவர்கள் கவர்ந்திழுக்கப்பட்டனர். அவர்களுடைய நிலையை நாம் விளங்கிக்கொண்டு மதிப்புத்தருவதைக் குறித்து அவர்கள் பாராட்டினர்” என்று சபையின் மூப்பரில் ஒருவர் ஞாபகப்படுத்தி சொல்கிறார்.
டாக்டர்கள் இரத்தமேற்றுதலைத் தவிர்க்கும்படி உத்தேசித்தனர். புரூனெல்லா நீண்டநேர வேதியியல் சிகிச்சையைப் பெறுவாள். ஆனால் இது எப்பொழுதும்போல மிகக் கடுமையாக இருக்காது. சிகிச்சையின் காரணமாக அவளுடைய இரத்த அணுக்களுக்குண்டாகும் சேதத்தை இது குறைத்துவிடும். “புரூனெல்லாவின் சரீரப்பிரகாரமான, உணர்ச்சிப்பிரகாரமான, ஆவிக்குரிய பிரகாரமான தேவைகளை டாக்டர்கள் சீர்தூக்கிப் பார்த்தனர். பிள்ளைப்பருவ வெள்ளணுப்புற்றுநோய்க்கு இரத்தமேற்றாமல் சிகிச்சையளிப்பதில் அனுபவமிக்க நிபுணரை விசாரிக்கும்படி நாங்கள் கேட்டபோது அவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டனர்,” என்று நிக்காலெட்டா விவரிக்கிறார். புரூனெல்லாவுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இடையே பாசம்கலந்த அன்பான பிணைப்பு உருவானது.
ஆவிக்குரிய இலக்குகள்
ஆரம்ப சிகிச்சை சில சிறந்த விளைவுகளை உண்டுபண்ணியபோதிலும், புரூனெல்லாவுக்கு சோதனைகளின் ஆரம்பமாகவே இருந்தது. நவம்பர் 1990-ற்குள்ளாக அவள் அதிக நோய்வாய்ப்பட்டில்லை. ஆகையால் உடனடியாக அவள் முழுக்காட்டுதல் பெற்றாள். கடந்த சில மாதங்களை சிந்தித்துப்பார்த்து, புரூனெல்லா ஒத்துக்கொண்டாள்: “அது சுலபமாகவே இல்லை. உங்களுக்கு அதிக பலம் தேவை, நீங்கள் சாதகமாக யோசிக்கவேண்டியது அவசியம். . . . என்னுடைய விசுவாசம் பரீட்சைக்குள்ளானது. நானோ உறுதியாய் நிலைத்திருந்தேன், இப்பொழுதுங்கூட ஒழுங்கான பயனியர் சேவையை [முழுநேர ஊழியத்தை] வாழ்க்கை தொழிலாக்கத் திட்டமிடுகிறேன்.”
1991-ன் ஆரம்பத்தில், புரூனெல்லாவை மீண்டும் அந்த நோயானது பாதித்தது. வேதியியல் சிகிச்சையிலிருக்கையில் அவள் இறக்கும் தறுவாயிலிருந்தாள். ஆனால் எல்லாருக்கும் ஆச்சரியம் தரும் வகையிலும் சந்தோஷம் உண்டாகும் விதத்திலும் அவள் திரும்பவும் சுகமடைந்தாள். ஆகஸ்ட்டிற்குள்ளாக, அம்மாதம் ஒரு துணைப் பயனியராக பொது ஊழியத்தில் ஈடுபடுமளவுக்கு அவள் நலமாக ஆனாள். திரும்பவும் அவளுடைய உடல்நிலை மோசமானது, நவம்பர் 1991-ற்குள்ளாக புற்றுநோயானது அவளுடைய உடலின் பல்வேறு பாகங்களை பாதித்தது. வேறொரு மருத்துவமனையில், இன்னொரு டாக்டர் குழு அவளுக்குக் கதிர்வீச்சு சிகிச்சையளிக்க தொடங்கினார்கள்.
அப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலைமைகளிலும் புரூனெல்லா உறுதியாக நிலைத்திருந்து தனக்கான ஆவிக்குரிய இலக்குகளை வைத்தாள். வெள்ளணுப்புற்றுநோயை பற்றி முதலில் கேள்விப்பட்டவுடன், அவள் ஆறு மாதங்களே வாழ்வாள் என்று அவளுக்கு சொல்லப்பட்டது. இப்போது, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு, புரூனெல்லா இன்னும் எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். “அவளுடைய இலக்குகளை அடைய நேரத்தை வீணாக்கவேயில்லை. கஷ்ட காலத்தின்போது கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட பரதீஸின்பேரிலுள்ள புரூனெல்லாவின் விசுவாசம் அவளைக் காத்தது. இளம் வயதிலிருந்தபோதிலும், கிறிஸ்தவ முதிர்ச்சியை அடைந்தாள். அவளுடைய நடத்தையும் மனநிலையும் சபையை உற்சாகப்படுத்தி, மருத்துவமனைப் பணியாட்கள் உட்பட தன்னைத் தெரிந்தவர்களுடைய மனங்களைக் கவருபவளாயும் இருந்தாள்,” என்று சபை மூப்பர் ஒருவர் சொன்னார். அவளுடைய தாய் நினைவுபடுத்தி சொல்கிறார்: “அவள் குறைசொல்லவேயில்லை. யாராவது அவளுடைய சுகநலத்தைப் பற்றி விசாரித்தபோது, அவர்களிடம், ‘நல்லாயிருக்கிறேன்’ அல்லது, ‘பரவாயில்லை, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்றுதான் அவள் பதிலளிப்பாள்.”
நிச்சயிக்கப்பட்ட எதிர்காலம்
ஜூலை 1992-ல் நடைபெறவிருந்த “ஒளி கொண்டுசெல்வோர்” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராக புரூனெல்லா திட்டமிட்டாள். ஆனால், மாநாடு நடக்கும் சமயத்திற்குள்ளாக, புரூனெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். அவளுடைய உயிர் அவளைவிட்டு நீங்கிக்கொண்டிருந்தது. அவ்வாறிருந்தும், யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தல் என்ற நாடகத்தை கண்டுகளிக்க ஆசைப்பட்டு, சக்கரநாற்காலியில் மாநாட்டிற்கு ஆஜரானாள்.
அவள், தன்னுடைய வாழ்நாளின் ஒருசில இறுதி நாட்களைக் குடும்பத்தோடு கழிக்க வீடு திரும்பினாள். “கடைசிபரியந்தம், தன்னைக் காட்டிலும் பிறர்மீதே அக்கறையுடையவளாக இருந்தாள். ‘நாம் பரதீஸில் ஒன்றுசேர்ந்து இருப்போம்’ என்று சொல்லி பிறரை பைபிள் படிக்கும்படி உற்சாகப்படுத்துவாள்,” என்று நிக்காலெட்டா சொல்கிறார்.
புரூனெல்லா ஜூலை 27, 1992-ல் இறந்தாள். பூமியில் பரதீஸில் ஜீவனோடே உயிர்த்தெழக்கூடிய தன் நம்பிக்கையில் உறுதியாயிருந்தாள். தன்னுடைய இலக்குகளை அடைய அவள் ஆரம்பிக்கவே தொடங்கினாள். ஆனால் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு தன்னுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கையைத் தொடர திட்டமிட்டிருந்தாள். இறப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பே, புரூனெல்லா பின்வரும் கடிதத்தை எழுதினாள், இது அவளுடைய சவ அடக்க நிகழ்ச்சியின்போது வாசித்துக் காட்டப்பட்டது.
“அன்புள்ள நண்பர்களே:
“நீங்கள் வந்துபார்த்ததற்கு நன்றி. நீங்கள் வந்திருந்தது என்னுடைய குடும்பத்திற்கு அதிக ஆறுதலாய் இருந்தது.
“என்னோடு எப்போதும் கூடவிருந்த ஆட்களுக்கு—நாம் அதிகமாக பாடுபட்டிருக்கிறோம். அதிக கஷ்டமான சமயங்கள் இருந்திருக்கின்றன, சில சந்தோஷமான சமயங்களும் இருந்திருக்கின்றன. இது ஒரு கடினமான, பெரும் போராட்டமாக இருந்தது, என்றாலும் தோல்வியடைந்ததுபோல நான் உணரவில்லை. வேதவசனங்களில் சொல்லியிருப்பதுபோல, ‘நான் நல்ல போராட்டத்தைப் போராடினேன், நான் ஓட்டத்தை முடித்தேன், நான் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.’—2 தீமோத்தேயு 4:7.
“நான் அநேக காரியங்களைக் கற்றும், அதிக முன்னேற்றம் செய்துமிருக்கிறேன். என்னுடைய நண்பர்களும் என்னைச் சுற்றியிருந்தவர்களும் மாற்றத்தைக் கண்டனர். எனக்கு உதவிபுரிந்த எல்லாருக்கும் நான் நன்றிசெலுத்த விரும்புகிறேன்.
“யோவான் 5:28, 29 சொல்வதுபோல புதிய ஒழுங்குமுறையிலும் யெகோவாவிலும் நம்பிக்கை வைக்கக்கூடிய உங்களுக்கு உயிர்த்தெழுதல் உண்டென்று தெரியும். ஆகையால் சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருங்கள், நாம் ஒருவரையொருவர் மீண்டும் பார்ப்போம்.
“நான் பட்ட கஷ்டத்தை அறிந்திருக்கிற ஆட்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் இறுகத் தழுவி முத்தம் தருகிறேன். நான் உங்கள் எல்லாரையும் நேசிக்கிறேன்.”
புரூனெல்லா தன்னுடைய இளம் வயதோ நோயோ யெகோவாவுக்கான தன்னுடைய ஒப்புக்கொடுத்தலை தள்ளிப்போட விடவில்லை. விசுவாசத்தில் அவளுடைய முன்மாதிரியும் உறுதியும் வாலிபர், முதியோர் ஆகிய இருசாராரையும் ஜீவனுக்கான ஓட்டத்தை ஓடுவதிலிருந்து தடைசெய்யும் எதையும் களைந்துபோட உற்சாகமளிப்பதாக இருக்கிறது.—எபிரெயர் 12:1.