அணு ஆயுத அச்சுறுத்துதல்—கடைசியில் ஓய்ந்துவிட்டதா?
“இரண்டாம் உலகப் போர் முதல் எக்காலத்தையும்விட இப்போது பூமியில் சமாதானம் அதிக சாத்தியமானதாக தோன்றுகிறது.” 1980-களின் முடிவில் ஒரு செய்தியாளர் சொன்ன இந்த நம்பிக்கையான மதிப்பீடு, குறிப்பிடத்தக்க ஆயுதக்குறைப்புக்கான ஒப்பந்தங்களும் எதிர்பாராத அரசியல் எழுச்சிகளும் கடைசியில் பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்திருந்ததன் பேரில் சார்ந்திருந்தது. ஆனால் முந்தைய வல்லரசின் மோதலைப் பெரிதும் அடையாளப்படுத்திக் காட்டிய அணு ஆயுத அச்சுறுத்துதலும் ஓய்ந்துவிட்டதா? நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் விரைவில் அடைய முடிந்ததா?
அதிகரிக்கும் ஆபத்துக்கள்
பனிப்போரின்போது, சமாதானத்தைக் காக்க இராணுவ பலத்தின் சமநிலைமீது சார்ந்து, அந்த வல்லரசுகள் சமாதான இலக்குகளை நாடும் அணு ஆயுத செய்நுட்ப வளர்ச்சியை அனுமதித்தாலும், அணு ஆயுதங்களைத் தயாரிக்கிற நாடுகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த ஒத்துக்கொண்டனர். 1970-ல் அணு ஆயுத அதிகரிப்பின்மை ஒப்பந்தம் அமலுக்கு வந்தது; பின்னர் அதை சுமார் 140 நாடுகள் உறுதிப்படுத்தின. எனினும், அர்ஜன்டினா, இந்தியா, இஸ்ரேல், பிரேஸில் போன்ற அணு ஆயுதங்களை உண்டாக்க வல்ல நாடுகள் இந்நாள்வரை ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்திருக்கின்றன.
என்றாலும், 1985-ல் அணு ஆயுதங்களை உண்டாக்க வல்ல நாடாகிய வட கொரியா கையொப்பமிட்டது. ஆகையால் மார்ச் 12, 1993 அன்று, செய்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்குவதாக அது அறிவித்தபோது, நியாயமாகவே உலகமானது சாதகமாய்ப் பிரதிபலிக்கவில்லை. டேர் ஷ்பீஜெல் என்ற ஜெர்மானிய செய்தியிதழ் குறிப்பிட்டது: “அணு ஆயுத அதிகரிப்பின்மை ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கும் அறிக்கை ஒரு மாதிரியை வைக்கிறது: இப்போது ஆசியாவில் தொடங்கவிருக்கும் அணு ஆயுத போட்டியின் அச்சுறுத்துதல் இருக்கிறது. இது வல்லரசுகளுக்கிடையே நிலவியிருந்த அணுகுண்டு போட்டியைவிட மிகவும் ஆபத்தானதாக ஆகக்கூடும்.”
திகைக்கச் செய்கிற அளவுக்கு புது நாடுகளை தேசாபிமானம் உருவாக்கி வருவதால், அணு ஆயுத நாடுகளின் எண்ணிக்கை பெரும்பாலும் கூடுதலாகும். (பெட்டியைப் பாருங்கள்.) சார்ல்ஸ் கிரவுட்ஹாமர் என்ற இதழாளர் எச்சரிக்கிறார்: “சோவியத் அச்சுறுத்துதலின் முடிவு அணு ஆயுத அபாயத்தின் முடிவை குறிப்பது கிடையாது. நிலவிவரும் உண்மையான ஆபத்து என்னவென்றால் அணு ஆயுத நாடுகளின் அதிகரிப்பு, இந்த அதிகரிப்பு இப்போதுதானே தொடங்கியிருக்கிறது.”
அணுகுண்டுகள் விற்பனைக்கு
அணு ஆயுத நாடுகளாகப் போகிறவை இந்த ஆயுதங்கள் அளிக்கும் கெளரவத்தையும் அதிகாரத்தையும் பெற ஆவலோடிருக்கின்றன. கஸகஸ்தானிலிருந்து இரண்டு அணுகுண்டு வெடிக்கலங்களையாவது வாங்கியிருப்பதாக ஒரு நாட்டைப் பற்றி சொல்லப்படுகிறது. சோவியத் குடியரசாயிருந்த கஸகஸ்தான், இந்த வெடிக்கலங்களை “காணவில்லை” என்று அதிகாரப்பூர்வமாக பட்டியலிடுகிறது.
அக்டோபர் 1992-ல் அநேக மனிதர்கள் ஜெர்மனியிலுள்ள ஃப்ராங்ஃபர்ட்டில் சிறையில் போடப்பட்டனர். இவர்கள் ஒரு முழு நகர தண்ணீர் சப்ளையை விஷமாக்கக்கூடிய அளவுக்கு 200 கிராம் செறிவுமிக்க கதிரியக்க சீசியத்தை வைத்திருந்தனர். ஒரு வாரத்திற்குப் பின், ம்யூனிச்சில் ஏழு கடத்தல்காரர்கள் 2.2 கிலோகிராம் யுரேனியத்துடன் பிடிபட்டனர். இரண்டு வாரங்களில் இரண்டு அணு ஆயுத கடத்தல்கார கும்பல்களைக் கண்டுபிடித்தது அதிகாரிகளைத் துணுக்குறச் செய்தது. ஏனென்றால் கடந்த முழு ஆண்டிலுமே உலகமுழுவதும் அப்படிப்பட்ட வழக்குகளில் ஐந்து மட்டுமே அறிக்கை செய்யப்பட்டிருந்தன.
இந்த நபர்கள் பயங்கரவாத தொகுதிகளுக்கோ தேசிய அரசாங்கங்களுக்கோ விற்கும் நோக்கத்தை உடையவர்களாக இருந்தார்களா என்பது தெரியாது. என்றாலும், அணு ஆயுத பயங்கரவாதத்திற்கான சாத்தியம் அதிகரிக்கிறது. ஐரோப்பிய அதிகரிப்பு தகவல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் லவ்ரி இதன் ஆபத்தை விளக்கிக் காட்டுகிறார்: “அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சோதனைக்காக பெயர்பெற்ற ஒரு நிபுணரிடம் அனுப்புவித்து, இவ்வளவு யுரேனியம் எங்களிடம் இருப்பதற்கான சான்று இதோ இங்கே இருக்கிறது என்பதையே ஒரு பயங்கரவாதி செய்யவேண்டும். கடத்தல்காரன் ஒரு பலியாளின் காதை வெட்டி அனுப்புவதைப் போல் அது இருக்கிறது.”
சமாதான ‘டைம் பாம்களும்’ ‘சாப்பொறிகளும்’
1992 தொடங்கியபோது, 420 அணுக்கரு உலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சமாதான தேடலில் ஈடுபட்டிருந்தன; பின்னும் 76 கட்டமைப்பில் இருந்தன. ஆனால் ஆண்டுகளினூடே உலை விபத்துக்கள் அதிகரிக்கும் நோய்கள், கருச்சிதைந்து வெளியேறுதல்கள் (miscarriage) மேலும் பிறப்பு குறைபாடுகள் போன்ற அறிக்கைகள் வெளிவருவதில் விளைவடைந்திருக்கின்றன. 1967-க்குள்ளாக சோவியத் புளூட்டோனிய தொழிற்சாலையில் நடந்த சம்பவங்கள் செர்னாபல் பேரழிவில் உண்டான கதிரியக்க உமிழ்வைப்போல மூன்று முறை அதிகமான உமிழ்வை உண்டாக்கியது என்று ஓர் அறிக்கை சொல்கிறது.
நிச்சயமாகவே, ஏப்ரல் 1986-ல் உக்ரேனிலுள்ள செர்னாபலில் நடந்த இந்தப் பின் சம்பவம்தானே தலைப்புச் செய்தியாக இருந்தது. 1970-களில் செர்னாபல் தொழிற்சாலையில் துணை தலைமை அணு ஆயுத பொறியாளரான கிரிகாரை மெட்வெடெஃப் என்ன விளக்கம் கொடுக்கிறாரென்றால், வளிச்சூழலில் வீசப்பட்ட “பெரும் நிறையான நீண்டகாலம் நீடித்திருக்கும் கதிரியக்கமானது, நீண்டகால பாதிப்புகளைப் பொருத்தவரை பத்து ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு ஒத்திருக்கிறது.”
செர்னாபல்ஸ்காயா கிரானிக்கா என்ற புத்தகத்தில், சோவியத் யூனியனாயிருந்த நாட்டில் 1980-களின் மத்திபத்தில் 11 வினைமையான அணுக்கரு உலை சம்பவங்களும் ஐக்கிய மாகாணங்களில் இன்னொரு 12 சம்பவங்களும் நடைபெற்றதாக மெட்வெடெஃப் பட்டியலிடுகிறார். பின்கூறிய சம்பவங்களில் திரீ மைல் தீவில் 1979-ல் நடந்த அதிர்ச்சிதரும் விபத்தும் உட்படுத்தப்பட்டிருந்தது. அந்தச் சம்பவத்தைக் குறித்து மெட்வெடெஃப் குறிப்பிடுகிறார்: “அணுமின் ஆற்றலுக்கெதிரான முதல் பேரடியாக அது இருந்தது. எல்லாருடைய மனங்களில் இல்லாவிட்டாலும், பெரும்பான்மையருடைய மனங்களில் அது அணுமின் நிலையங்களின் பாதுகாப்புத் திறனைப் பற்றிய போலிக் கருத்துக்களை நீக்கிப்போட்டது.”
இன்னும் ஏன் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதை இது விளக்கிக் காட்டுகிறது. 1992-ல் அவை ஏறத்தாழ 20 சதவீதம் ரஷ்யாவில் உயர்ந்தது. அவ்வாண்டு மார்ச்சில், ரஷ்யாவில் உள்ள செ. பீட்டர்ஸ்பர்க்கின் சாஸ்நாவி பாரா அணுமின் நிலையத்தில் இத்தகைய ஒரு சம்பவத்திற்கு பின்னர்தான் கதிரியக்க மட்டங்கள் வடகிழக்கு இங்கிலாந்தில் 50 சதவீதமும் எஸ்டோனியாவிலும் தெற்கத்திய பின்லாந்திலும் அதிகபட்ச அனுமதி மட்டத்திற்கு இரட்டிப்பாக உயர்ந்தது. நியூகாஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் அர்கர்ட் இவ்வாறு ஒத்துக்கொள்கிறார்: “அதிகரிப்பை உண்டுபண்ணியது சாஸ்நாவி பாரா தான் என்பதை என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் சாஸ்நாவி பாராவாக இல்லாவிட்டால், அது என்னவாக இருக்கும்?”
செர்னாபல் பாணியான உலைகள் அவற்றின் வடிவமைப்பில் பழுதாகி இருக்கின்றன என்றும் இயக்குவதற்கு சாதாரணமாய் மிகவும் ஆபத்தாக இருக்கின்றன என்றும் சில அதிகாரிகள் வாதாடுகின்றனர். இருந்தபோதிலும், அதிகப்படியான மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு டஜனுக்கும் மேலான உலைகள் இன்னும் பயன்பாட்டில் இருக்கின்றன. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பாதுகாப்பு கட்டுப்பாடு சாதனங்களை (safety override system) அணைத்திருப்பதாகவுங்கூட உலை இயக்குபவர்களில் சிலர் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கின்றனர். இது போன்ற அறிக்கைகள் பிரான்ஸ் போன்ற நாடுகளை பயமுறுத்துகின்றன. பிரான்ஸ் நாடு 70 சதவீதமான அதன் மின்சாரத்தை உற்பத்திசெய்ய அணுமின் நிலையங்களைப் பயன்படுத்துகிறது. “செர்னாபல்” போன்ற இன்னொரு சம்பவம் நிகழ்ந்ததென்றால், பிரான்ஸிலுள்ள நிலையங்கள் பல நிரந்தரமாக மூடும்படியாக கட்டாயப்படுத்தப்படக்கூடும்.
தெளிவாகவே, “பாதுகாப்பான” உலைகளும் நாள்பட பாதுகாப்பற்றவையாக ஆகின்றன. 1993-ன் முற்பகுதியில் முறைப்படியான தணிக்கையின்போது மிகப் பழமையான ஜெர்மானிய உலையாயிருக்கும் புருன்ஸ்பூட்டில் நிலையத்திலுள்ள உலையின் எஃகு குழாயில் நூற்றுக்கும் மேற்பட்ட வெடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரான்ஸிலும் ஸ்விட்ஸர்லாந்திலும் உள்ள உலைகளில் அத்தகைய வெடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு ஜப்பானிய அணுமின் நிலையத்தில் 1991-ல் முதல் பெரிய விபத்து நடந்தது. இதற்கு காலவரையறை காரணியாக இருந்திருக்கலாம். ஐக்கிய மாகாணங்களில் இத்தகைய விபத்துக்கள் நிகழக்கூடும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இங்கு வணிக உலைகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கான உலைகள் பத்தாண்டிற்கும் மேற்பட்டு பழமையானதாயிருக்கிறது.
அணுக்கரு உலை விபத்துக்கள் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் ஏற்படலாம். அதிக உலைகள், அதிக பயம்; உலை எவ்வளவு பழையதோ, அவ்வளவுக்கு ஆபத்தும் அதிகம். ஆதலால்தான் ஒரு செய்தித்தாளானது, அவற்றை செயல்படும் டைம் பாம்கள் என்றும் கதிரியக்க சாப்பொறிகள் என்றும் அடைபெயரிட்டது.
அவர்கள் இந்தக் குப்பையை எங்கே கொட்ட வேண்டும்?
சமீபத்தில், பிரெஞ்சு நாட்டு மலைப்பகுதியின் ஆற்றோரமாக இருக்கும் ஒரு சுற்றுலா மையம் வேலியிடப்பட்டு போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். தி யூரோப்பியன் என்ற செய்தித்தாள் விளக்கினது: “உள்ளூர் பெண் ஒருத்தி பெரிலியம் விஷத்தினால் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த பிறகு முறைப்படியான தணிக்கைகள் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது; சுற்றியுள்ள பகுதியில் உள்ள கதிரியக்க மட்டங்களைப் பார்க்கிலும் 100 மடங்குக்கும் மேலாக அவை சுற்றுலா மையத்தில் இருந்தன என்று இந்தத் தணிக்கைகள் காட்டின.”
பல்வேறு செய்முறைகளால் உண்டுபண்ணப்படும் குறிப்பிடத்தக்க கனமற்ற உலோகமான பெரிலியம் விமான தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறது; அதைக் கதிர்வீச்சுக்குட்படுத்தி, அணுமின் நிலையங்கள் பயன்படுத்துகின்றன. அத்தாட்சிகள்படி, பெரிலியத்தை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையானது ஆபத்துண்டாக்கும் கதிர்வீச்சுக்குட்படுத்துகிற செய்முறையிலிருந்து வருகிற கழிசலை அந்தச் சுற்றுலா மையத்தில் அல்லது அதற்கு அருகாமையில் களைந்துவிட்டிருந்தது. “பெரிலியம் துகள் கதிர்வீச்சுக்குட்படவில்லை என்றாலும், அறியப்பட்ட எந்தவொரு தொழிற்சாலைகழிசல்களிலேயே அதிக விஷம் வாய்ந்த ஒன்று,” என தி யூரோப்பியன் குறிப்பிட்டது.
இதற்கிடையில், கதிரியக்க கழிசல்களடங்கிய சுமார் 17,000 கலங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலமாக நோவயா ஜெம்லியா என்ற கரையோரப்பகுதிக்கு அப்பால் உள்ள தண்ணீர்களில் களையப்பட்டு வந்ததாக அறிக்கை செய்யப்பட்டது; இந்த இடத்தை சோவியத் ஆட்கள் 1950-களின் தொடக்கத்தில் அணுமின் சோதனை இடமாக பயன்படுத்தி வந்தனர். மேலும், அணுமின் நீர்மூழ்கிக் கப்பல்களில் உள்ள கதிரியக்க பகுதிகளும் 12 உலைகளின் பகுதிகளுமாவது வசதியான இந்தக் குப்பைத் தொட்டிக்குள் கொட்டப்பட்டன.
வேண்டுமென்றே செய்தாலும் செய்யவில்லையென்றாலும், அணுமின் மாசு ஆபத்தானது. 1989-ல் நார்வீஜிய கரையில் அமிழ்ந்துபோன நீர்மூழ்கி கப்பலைக் குறித்து டைம் எச்சரித்தது: “ஏற்பட்ட அந்தக் கப்பற்சேதமானது புற்றுநோயை வளரத் தூண்டும் செப்புப்பொருள் ஐசடோப்பாகிய சீசியம்-137 கசியத் தொடங்கிவிட்டிருக்கிறது. இது வரை இந்தக் கசிவு கடல் வாழ்க்கையையோ மனித சுகாதாரத்தையோ பெரிதாக பாதிக்காது என்று கருதப்பட்டிருக்கிறது. ஆனால் காம்சமாலியட்ஸ் என்ற நீர்மூழ்கிக் கப்பலுங்கூட இரண்டு அணுமின் வெடிகுண்டுகளைச் சுமந்து சென்றது; இந்த வெடிகுண்டுகளில் 24,000 ஆண்டுகளடங்கிய அரை ஆயுளும் (half-life) ஒரு சிறு துகள் கொல்லும் அளவுக்கு மிகவும் அதிகமான விஷத்தையுமுடைய 13 கிலோகிராம் [29 பவுன்டுகள்] புளூட்டோனியமும் அடங்கியிருந்தது. புளூட்டோனியம் நீரில் சிந்தி 1994-க்குள்ளேயே பரந்த கடற்பரப்பை மாசுப்படுத்தும் என்று ரஷ்ய வல்லுநர்கள் எச்சரித்தனர்.”
நிச்சயமாகவே, கதிரியக்க கழிசலை களைவது பிரான்ஸுக்கும் ரஷ்யாவுக்கும் மட்டுமே ஒரு பிரச்னையாக இல்லை. ஐக்கிய மாகாணங்கள் “மலைப்போன்ற கதிரியக்க குப்பைக்கூளத்தை” கொண்டிருக்கிறது என்றும் “அதைச் சேமித்துவைக்க நிரந்தரமான இடமே இல்லையென்றும்” டைம் அறிக்கை செய்கிறது. “இழப்பு, திருட்டு, தவறாகக் கையாளப்படுவதால் உண்டாகும் சுற்றுச்சூழல் சார்ந்த கேட்டின் அபாயம்” எப்போதும் இருப்பதாய், சாவுக்கேதுவான பொருட்கள் அடங்கிய லட்சக்கணக்கான பீப்பாய்கள் தற்காலிகமான சேமிப்பில் வைக்கப்படுகின்றன என்று அது சொல்கிறது.
இந்த ஆபத்தை நிரூபிக்க வேண்டுமென்றால், ஏப்ரல் 1993-ல், சைபீரியாவிலுள்ள டாம்ஸ்க் என்ற இடத்திலிருந்த அணு ஆயுதங்களடங்கிய ஒரு நிலையத்திலுள்ள அணுக்கரு கழிசல் தொட்டி ஒன்று வெடித்து, செர்னாபலுக்கு ஒப்பான பயங்கரமான மனக்காட்சிகளை உண்டாக்கியது.
தெளிவாகவே, அணு ஆயுத அச்சுறுத்துதலின் ஊகமான முடிவின் அடிப்படையில் கூறப்படும் சமாதானம், பாதுகாப்பிற்கான எந்தக் கூக்குரலும் நம்பகமானதல்ல. இருந்தாலும், சமாதானமும் பாதுகாப்பும் அருகாமையிலேயே இருக்கின்றன. நமக்கு எப்படித் தெரியும்?
[பக்கம் 4-ன் பெட்டி]
அணு ஆயுத நாடுகள்
12 நாடுகளும் அதிகரித்துவரும் எண்ணிக்கையும்
சொல்லப்பட்டவை அல்லது உண்மையில்: பெலாருஸ், பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், கஸகஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, உக்ரேன், ஐக்கிய மாகாணங்கள்
சாத்தியமானவை: அல்ஜீரியா, அர்ஜன்டினா, பிரேஸில், ஈரான், ஈராக், லிபியா, வட கொரியா, தென் கொரியா, சிரியா, தைவான்
[பக்கம் 5-ன் படம்]
சமாதானத்திற்காக பயன்படும் அணுமின் சக்தியும் ஆபத்தாக இருக்கலாம்
[படத்திற்கான நன்றி]
Background: U.S. National Archives photo
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cover: Stockman/International Stock
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo