சாட்சிகள் ஏன் தொடர்ந்து சந்திக்கிறார்கள்?
‘மறுபடியும் அவர்கள் வந்துவிட்டார்கள்! ஆனால் ஒருசில வாரங்களுக்கு முன்னர்தான் அவர்கள் இங்கு வந்திருந்தார்கள்!’ யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்களைச் சந்திக்க வருகையில் உங்கள் மனதில் இதுபோன்ற சிந்தனை ஓட்டங்கள் இருக்கின்றனவா? இன்று லட்சக்கணக்கானோர், யெகோவாவின் சாட்சிகளால் ஒழுங்காகச் சந்திக்கப்படுகிறார்கள். அநேக மக்கள் தங்கள் சொந்த மதத்தைக் கொண்டிருக்கிறார்கள் அல்லது அக்கறையற்றவர்களாய் இருக்கிறார்கள் என்றறிந்தபோதும், அவர்கள் ஏன் தொடர்ந்து சந்திக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கக்கூடும். அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது அவசியமானதே.
கடவுளுக்கு முன்பாக உத்தரவாதம்
முதல் உலகப் போர் தொடங்கிய வருடமாகிய 1914-லிருந்து, தற்போதைய உலக ஒழுங்குமுறையின் முடிவு, இந்தப் பூமியின்மீது வரப்போகும் கடவுளுடைய ராஜ்யத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்களை உலக சம்பவங்கள் நிறைவேற்றி வந்திருக்கின்றன என்று யெகோவாவின் சாட்சிகள் வேத வசனங்களிலிருந்து கற்றறிந்திருக்கிறார்கள். வன்முறை, இரத்தம் சிந்துதல், பகை ஆகியவற்றாலான கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு, மனிதகுலத்தை தங்கள் பிரச்சினைகளுக்காக ஒரு அரசியல் தீர்வைக் காண்பதிலிருந்து ஒருபோதும் இல்லாத அளவுக்கு மிகவும் விலகிச்செல்ல வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. மனித ஆட்சி, மக்களுடைய இருதயங்களையும், மனங்களையும், மனநிலைகளையும் மாற்றத் தவறியிருக்கிறது என்பதற்கு மனித குடும்பத்தை இன்னும் பாதிக்கும் போர்களும் பயங்கரவாதமும் அத்தாட்சிகளாக இருக்கின்றன. கடந்தகால வரலாற்றில் ஏற்பட்ட சம்பவங்களின்மீது ஆழமாக ஊன்றப்பட்ட பகைமை உணர்ச்சி, இனம், குலம், மற்றும் மத தொகுதிகளுக்கு இடையிலான உறவுகளை இன்னும் பாதிக்கின்றன. ஆப்கானிஸ்தானம், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, முன்னாள் யுகோஸ்லாவியா, வட அயர்லாந்து ஆகியவற்றைப்போன்ற வெகு தொலைவுகளில் இருக்கும் பகுதிகளைக் குறித்ததிலும் இது உண்மையாக இருக்கிறது. அப்படியானால், நிலைத்திருக்கக்கூடிய ஒரே தீர்வுதான் என்ன?
சாட்சிகளைத் தூண்டுவது எது?
கடவுளுடைய தீர்வு—கிறிஸ்து இயேசுவால் ஆளப்படும் அவருடைய வாக்குப்பண்ணப்பட்ட ராஜ்ய ஆட்சி—மட்டுமே செயல்படுத்தக்கூடிய பதிலாக இருக்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். இயேசு, தம்முடைய பிரபலமான மாதிரி ஜெபத்தில், அந்த ராஜ்ய ஆட்சிக்கான ஒரு விண்ணப்பத்தையும்கூட உட்படுத்தினார்: “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” மனிதகுலத்தின் விவகாரங்களில் கடவுள் தலையிட வேண்டும் என்று இந்த ஜெபம் உண்மையிலேயே கேட்பதாக சாட்சிகள் நம்புகிறார்கள்.—மத்தேயு 6:9, 10.
ஆக, யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து வீடுவீடாகச் சென்று அந்தச் செய்தியை அளிக்க முயற்சிசெய்வதற்கான அவசியத்தை ஏன் உணருகின்றனர்? இயேசு சிறப்பித்துக்காட்டிய இரண்டு கட்டளைகளின் காரணமாகவே: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.”—மத்தேயு 22:37-39.
சாட்சிகள், கடவுளுடைய ஆசீர்வாதங்களைத் தாங்கள் பெறவேண்டுமென்று விரும்புகிறார்கள்; மேலும் தங்கள் அயலாரை நேசிப்பதால், அவர்களுக்கும் அதே ஆசீர்வாதம் கிடைக்கும்படி விரும்புகிறார்கள். இவ்வாறு, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, தங்கள் அயலாரைச் சந்திப்பதற்குத் தன்னலமற்ற அன்பால் உந்தப்பட்டவர்களாக உணருகிறார்கள். கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு, ஒரு சுத்திகரிக்கப்பட்ட பூமியில் ‘நித்தியானந்த தேவன்’ என்ன வாக்களித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பையாவது அவர்களுக்கு அளிக்கவேண்டுமென்று விரும்புகின்றனர்.—1 தீமோத்தேயு 1:11; 2 பேதுரு 3:13.
கிறிஸ்தவ மிஷனரியான பவுல் கடவுளுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தார்; அதனால் அவரால் இவ்வாறு எழுத முடிந்தது: “தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், . . . எழுதுகிறதாவது: பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி [செய்தார்].” ஆம், “பொய்யுரையாத” கடவுள், மனத்தாழ்மையுடன் தம்மை அறிந்து, சேவிக்க நாடுபவர்களுக்கு நித்திய ஜீவனை “வாக்குத்தத்தம்பண்ணி”னார்.—தீத்து 1:1, 3; செப்பனியா 2:3.
சாட்சிகள் ஊதியம் அளிக்கப்படுகிறார்களா?
சாட்சிகள் தங்களுடைய ஊழியத்திற்காக ஊதியம் அளிக்கப்படுகிறார்கள் என்பதாக அவ்வப்போது சிலர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். இது நிச்சயமாகவே ஒரு தவறான கருத்து! கொரிந்து சபைக்குப் பவுல் எழுதிய வார்த்தைகளுக்கு அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்: “கடவுளின் சொல்லை விலைகூறித்திரிபவர் பலரைப்போல் நாங்கள் செய்யாமல், கள்ளமற்ற உள்ளத்தோடு கடவுளால் ஏவப்பட்டு, கிறிஸ்துவுக்குள், கடவுளின் முன்னிலையில் பேசுகிறோம்.”—2 கொரிந்தியர் 2:17, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
சில மதத் தலைவர்கள் பணத்திற்காகப் பிரசங்கிக்கிறார்கள்; அந்தப் பணம் மதச் சேவைகளுக்காக இருந்தாலும் சரி அல்லது தங்களுடைய டிவி ஊழியங்களில் வியாபார நிறுவனங்களை முன்னேற்றுவிப்பதற்காக இருந்தாலும் சரி, அதைப் பெறுகிறார்கள். பெரும்பாலான மதங்கள், ஊதியத்திற்கு அமர்த்தப்பட்ட குருத்தொகுதியைக் கொண்டிருக்கின்றன.
இதற்கு மாறாக, ஊதியத்திற்கு அமர்த்தப்பட்ட எந்தக் குருத்தொகுதியையும் சாட்சிகள் கொண்டில்லை; மேலும் அவர்களுடைய பைபிள் பிரசுரங்கள் உண்மையாய் சத்தியத்தைத் தேடுபவர்களுக்குப் பெரும்பாலும் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன; என்றாலும், இவர்களில் அநேகர் மனமுவந்து நன்கொடைகளை அளிக்கும்படி தூண்டப்படுகின்றனர். இவை இந்த உலகளாவிய பிரசங்க வேலைக்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்கு இசைவாக, கடவுளுடைய சேவையில் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மணிநேரங்கள் ஈடுபடுவதன்மூலம், சாட்சிகள், நேரம் மற்றும் சக்தி உட்பட தங்களுடைய வளங்களை இலவசமாகச் செலவிடுகின்றனர். இவ்வாறாக, அவர்கள் வீடுவீடாகச் சென்றும், வீட்டு பைபிள் படிப்புகள் மூலமாகவும் அக்கறையுள்ள ஆட்களுக்குக் கற்பிக்கிறார்கள்.—மத்தேயு 10:8; 28:19, 20; அப்போஸ்தலர் 20:19, 20.
யெகோவாவின் சாட்சிகளாக தனிப்பட்டவர்களுக்கோ, அவர்களுடைய உள்ளூர் சபைகளுக்கோ, உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கோ பணம்சார்ந்த எந்த உள்நோக்கமும் இல்லை என்று உண்மைகள் நிரூபிக்கின்றன. வீட்டுக்கு வீடு செல்வதற்காக எவரும் எந்தவித ஊதியத்தையும் பெறுவதில்லை. அப்படியானால் அந்த வேலைக்கு பொருளுதவி எப்படி கிடைக்கிறது? உலகமெங்குமுள்ள போற்றுதல் மனப்பான்மையுள்ள மக்களின் மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளாலேயே. ஒருபோதும் பணத் திரட்டுதல்கள் செய்யப்படுகிறதில்லை.
அவர்களுடைய சாட்சிகொடுத்தலின் செயல்விளைவு
வீட்டுக்கு வீடு ஊழியமும் சாட்சிகளுடைய சந்தர்ப்ப சாட்சிகொடுத்தலும், பொதுமக்களின் உணர்வு நிலையின்மேல் ஏதாவது செயல்விளைவைக் கொண்டிருக்கிறதா? தகவல் தொடர்பு சாதனங்களிலுள்ள அத்தாட்சி அந்தக் கேள்விக்குத் திட்டவட்டமான ஆம் என்ற பதிலைக் கொடுக்கிறது. டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் யாராவது ஒருவர் கதவைத் தட்டுவதாகக் காண்பிக்கையில் யெகோவாவின் சாட்சிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். கார்ட்டூன் தொகுப்புப் பகுதிகள் சாட்சிகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கின்றன. அவர்களுடைய வைராக்கியமான நடவடிக்கை அவ்வளவு நன்கு அறியப்பட்டதாக இருப்பதால், உலகமெங்குமுள்ள கார்ட்டூன் தயாரிப்பாளர்கள், யெகோவாவின் சாட்சிகளைப்பற்றிய குறிப்புகளை உள்ளடக்கி இருக்கின்றனர். அவை கேலிக்குரியவையாகத் தோன்றலாம்; ஆனால் விடாமல் செய்யும் வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பிற்கு சாட்சிகள் அறியப்பட்டவர்கள் என்ற ஒரு உடன்பாடான அடிப்படை உண்மையைச் சார்ந்து அவை பொதுவாக அமைகின்றன.—அப்போஸ்தலர் 20:20.
சமீபத்திய கார்ட்டூன் ஒன்று, ஒரு “குரு”விடம் ஆலோசனை கேட்பதற்கு ஒரு மலையை ஏறிக்கொண்டிருக்கும் மனிதனைக் காண்பித்தது. அவன் சொன்னான்: “வரப்போகும் மகத்தான காரியங்களைப்பற்றி எனக்குச் சொல்லும்!” அந்தக் “குரு” எப்படிப் பதிலளித்தார்? “நாம் பார்க்கலாம் . . . பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் உண்டாகும். சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.” விசாரிக்கச்சென்றவன் கேட்டான்: “நல்ல செய்தி எது?” அதற்கு அந்தக் “குரு” பதிலளித்தார்: “கடவுள் எல்லா கண்ணீரையும் துடைப்பார் . . . இனிமேல் மரணமுமில்லை, துக்கமுமில்லை, நோவுமில்லை!” சந்திக்க வந்தவன் கேட்டான்: “இப்படிப்பட்ட காரியங்கள் உமக்கு எப்படித் தெரியும்?” பதில்? “யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து எவரும் தப்புவதில்லை!” அந்தக் கார்ட்டூன் கலைஞரைப் பொருத்தமட்டிலும்கூட அதுவே உண்மையாக இருந்திருக்கவேண்டும்!
இந்தத் தொகுப்பிலும் அதைப்போன்ற மற்றவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பு என்னவென்றால், சாட்சிகளின் ஒழுங்கான சந்திப்புகள் மட்டுமல்ல, ஆனால் அவர்களுடைய செய்தி ஒத்திசைவானதாகவும் இருப்பதாகும். ஒருசில வார்த்தைகளில் மட்டும் அந்தக் கலைஞர், அவர்களுடைய வீட்டுக்கு வீடு சாட்சியின் முக்கிய பாகத்தைக் குறிப்பிட்டு வசனங்களையும் மேற்கோள் காட்டினார்.—ஒப்பிடவும் மத்தேயு 24:7, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4.
அநேக மக்கள் அவர்களுடைய செய்தியை நிராகரிக்கிறார்கள் என்ற உண்மை, சாட்சிகளைச் சோர்வடையச் செய்வதோ அவர்களுடைய வைராக்கியத்தைக் குறைப்பதோ இல்லை. அப்போஸ்தலன் பேதுரு எச்சரித்தார்: “கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.” இந்த எதிர்ப்பின் மத்தியிலும், அன்பால் தூண்டப்பட்டவர்களாக, சாட்சிகள் தொடர்ந்து தங்கள் அயலாரைச் சந்திக்கிறார்கள்; ஊழல்மிக்க இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையைக் கடவுள் முடிவுக்குக் கொண்டுவரும் வரையாக அவ்வாறு செய்வார்கள்.—2 பேதுரு 3:3, 4.
கடைசி நாட்களில் நற்செய்தி முதலாவது பிரசங்கிக்கப்படவேண்டும் என்று இயேசு சொன்னார். ஏன் மற்றும் எப்படி என்ற கூடுதலான ஆய்வுக்கு, பின்வரும் இரண்டு கட்டுரைகளைப் பாருங்கள்.—மாற்கு 13:10.
[பக்கம் 9-ன் படங்கள்]
ஊதியமளிக்கப்பட்ட குருத்தொகுதியை யெகோவாவின் சாட்சிகள் கொண்டில்லை—எல்லாரும் மனமுவந்து வேலை செய்யும் ஊழியர்கள்