உண்மையான உலகளாவிய சகோதரத்துவத்தில் மகிழ்ச்சியாக இருத்தல்
உவில்லி டேவிஸ் சொன்னபடி
1934-ல் பொருளாதாரத்தில் மகா மந்தத்தின் பிடியில் உலகம் இருந்தது; ஐக்கிய மாகாணங்கள் பொருளாதார குழப்பத்தின் வேதனைகளை அனுபவித்தது. ஒஹாயோவிலுள்ள கிளீவ்லாண்டில் வாய்ப்புவள நம்பிக்கையளிக்கும் நிவாரண நிலையத்திற்கு (Prospect Relief Station) வெளியே ஒரு போலீஸ்காரருக்கும் பலரறிந்த கம்யூனிஸ்ட் ஒருவருக்கும் இடையில் ஒரு சண்டை நடந்தது. போலீஸ்காரர் அந்தக் கம்யூனிஸ்டையும் பக்கத்தில் நின்ற என் பாட்டியாகிய வின்னி உவில்லியம்ஸையும் சுட்டுக்கொன்றார்.
கம்யூனிஸ்டுகள் இந்தச் சாவுகளை இனக்கலவர சம்பவமாக மாற்ற முயன்றனர்; ஏனென்றால் என் பாட்டி கறுப்பராகவும் போலீஸ்காரர் வெள்ளையராகவும் இருந்தார். அவர்கள் “இனப் பாகுபாடுள்ள கிளீவ்லாண்ட் போலீஸார்” மற்றும் “இந்தக் கொலைகளுக்குப் பழி தீருங்கள்” என்பதுபோன்ற தலைப்புகளை உடைய செய்திமடல்களை விநியோகித்தனர். என்னுடைய பாட்டியின் சவ அடக்கத்திற்காக கம்யூனிஸ்டுகள் ஏற்பாடு செய்து, கவனித்துக்கொண்டனர். சவப்பெட்டியைச் சுமந்து சென்றவர்களுடைய படம் ஒன்றை நான் வைத்திருக்கிறேன்—அவர்கள் அனைவரும் வெள்ளையராகவும், கட்சி அங்கத்தினர்களாகவும் இருந்தனர். ஒவ்வொருவரும் தன் மூடிய கையை உயர்த்தி, பின்னர் கறுப்பர் அதிகாரத்தின் அடையாளக்குறியாக ஏற்கப்பட்ட அந்த விதத்தில் வைத்திருந்தனர்.
என் பாட்டி மரித்தபோது, அவர்களுடைய மகள் என்னை தன் கருப்பையில் சுமந்துகொண்டிருந்தார்கள்; நான்கு மாதங்களுக்குப்பின் நான் பிறந்தேன். நான் திக்கிப்பேசும் குறையுடன் வளர்ந்துவந்தேன். எனக்கு திக்காமல் பேச முடியவில்லை; ஆகவே என்னுடைய ஆரம்ப பள்ளிப்படிப்பு, பேச்சைக் குணப்படுத்தும் சிகிச்சையையும் உட்படுத்தியது.
எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, என் பெற்றோர் பிரிந்தனர்; நானும் என் அக்காவும் என் அம்மாவால் வளர்க்கப்பட்டோம். குடும்ப செலவுகளில் உதவிசெய்வதற்காக எனக்கு பத்து வயதாக இருந்தபோது, பள்ளி நேரத்திற்குப் பின் மளிகை கடை சாமான்களை கொண்டு கொடுக்கும் வேலையைத் தொடங்கினேன். இரண்டு வருடங்களுக்குப்பின் பள்ளிநேரத்திற்கு முன்பும் பின்பும் வேலை செய்யத் தொடங்கி, குடும்பத்தில் சம்பாதிக்கக்கூடிய முக்கிய நபராக ஆனேன். அம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டபோது, நான் பள்ளியைவிட்டு நின்று, முழு நேரமாக வேலை செய்ய ஆரம்பித்தேன்.
ஒரு சகோதரத்துவத்துக்கு அறிமுகம்
1944-ல், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர், “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (The Truth Shall Make You Free) என்ற புத்தகத்தை என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனின் மனைவியிடம் விட்டுச்சென்றிருந்தார்கள்; அவர்களிடம் தொடங்கப்பட்டிருந்த பைபிள் படிப்பில் நானும் கலந்துகொண்டேன். அதே வருடத்தில் ஈஸ்ட்ஸைட் சபையில் தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கு நான் செல்ல ஆரம்பித்தேன். பள்ளி நடத்துநரான ஆல்பர்ட் க்ரடெக்குக்கும் எனக்கிருந்த அதே பேச்சுக் குறை இருந்தது; ஆனால் அவர் அதைக் கட்டுப்படுத்த கற்றிருந்தார். அவர் எனக்கு எவ்வளவு உற்சாகமளிப்பவராக இருந்தார்!
எங்களுடைய சுற்றுவட்டாரம் பெரும்பாலும் இத்தாலிய, போலிஷ், ஹங்கேரிய மற்றும் யூதராலானது; இவர்களிலிருந்தும் மற்றுமநேக இனத்தொகுதிகளிலிருந்தும் வந்த மக்களால் சபை உருவாக்கப்பட்டிருந்தது. மற்றபடி வெள்ளையரின் சபையாக இருந்த இந்தச் சபையில் கூட்டுறவு கொண்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனின் மனைவியும் நானுமே; ஆனால் சாட்சிகள் எங்களிடம் ஒருபோதும் இன வித்தியாசத்தைக் காட்டவில்லை. உண்மையில், அவர்கள் தங்களுடைய வீடுகளில் விருந்துகளுக்கு என்னைத் தவறாமல் விருந்தாளியாகக் கொண்டிருந்தார்கள்.
1956-ல், ஊழியர்களின் தேவை அதிகமாக இருந்த ஐக்கிய மாகாணங்களின் தெற்கு பகுதிக்கு நான் குடிபெயர்ந்து சென்றேன். ஒரு வேனிற்காலத்தில் மாவட்ட மாநாட்டிற்காக நான் வடக்கிற்குத் திரும்பியபோது, கிளீவ்லாண்டிலுள்ள அநேக சகோதரர்கள் என்னைக் காண வந்து, என்னுடைய நடவடிக்கைகளில் அனலான அக்கறையை வெளிக்காட்டினர். அவர்களுடைய அக்கறையானது, எப்போதும் ‘தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்கவேண்டும்’ என்ற ஒரு முக்கிய பாடத்தை எனக்குக் கற்பித்தது.—பிலிப்பியர் 2:4.
விரிவாக்கப்பட்ட முழுநேர ஊழியம்
ஒரு பயனியராக மூன்று வருடங்கள் முழுநேர ஊழிய சேவை செய்தபின், நவம்பர் 1959-ல், நியூ யார்க்கில், யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகமாகிய புரூக்லின் பெத்தேலுக்குச் சென்று வேலை செய்யும்படி அழைக்கப்பட்டேன். பிரசுரங்கள் அனுப்புதல் இலாக்காவில் வேலைசெய்யும்படி நியமிக்கப்பட்டேன். என்னுடைய இலாக்கா கண்காணி, க்ளாவ்ஸ் ஜென்ஸனும், என் அறை கூட்டாளியான உவில்லியம் ஹானென்னும் எனக்கு ஆவிக்குரிய அப்பாக்களானார்கள்; அவர்கள் இருவரும் வெள்ளையர்கள். நான் வந்த சமயத்திற்குள், அவர்கள் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 40 வருடங்கள் பெத்தேலில் சேவை செய்திருந்தார்கள்.
ஆரம்ப 1960-களில், பெத்தேல் குடும்பத்தில் சுமார் 600 அங்கத்தினர்கள் இருந்தார்கள்; சுமார் 20 பேர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். அப்போதைக்குள், ஐக்கிய மாகாணங்கள் இனச் சச்சரவிற்குள் குமுற ஆரம்பித்துக்கொண்டிருந்தது; இன உறவுகள் முறிந்துகொண்டிருந்தன. இருந்தபோதிலும், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்று பைபிள் கற்பிக்கிறது; நாமும் பட்சபாதமுள்ளவர்களாக இருக்கக்கூடாது. (அப்போஸ்தலர் 10:34, 35) பெத்தேல் மேசையில் நாங்கள் ஒவ்வொரு காலையிலும் கொண்டிருந்த ஆவிக்குரிய கலந்தாலோசிப்புகள், அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து கடவுளுடைய நோக்குநிலையை ஏற்றுக்கொள்வதற்கான எங்களுடைய தீர்மானத்தைப் பலப்படுத்த உதவின.—சங்கீதம் 19:7.
புரூக்லின் பெத்தேலில் சேவை செய்யும்போது, வர்ஜீனியாவிலுள்ள ரிச்மாண்டைச் சேர்ந்த ஒரு பயனியராகிய லோயஸ் ரஃபெனை நான் சந்தித்தேன்; நாங்கள் 1964-ல் திருமணம் செய்தோம். முழுநேர ஊழியத்தில் தொடர்ந்திருப்பதே எங்களுடைய தீர்மானமாக இருந்தது; ஆகவே எங்கள் திருமணத்திற்குப்பின் நாங்கள் ஐக்கிய மாகாணங்களின் தெற்கு பகுதிக்குத் திரும்பினோம். முதலில், நாங்கள் விசேஷித்த பயனியர்களாகச் சேவை செய்தோம்; பின்னர் 1965-ல் வட்டார வேலையைச் செய்யும்படி அழைக்கப்பட்டேன். அடுத்த பத்து வருடங்களுக்கு, நாங்கள் கென்டகி, டெக்ஸஸ், லூயிஸியானா, அலபாமா, ஜார்ஜியா, வட கரோலினா, மிஸ்ஸிஸிபி ஆகிய மாவட்டங்களிலுள்ள சபைகளைச் சந்தித்தோம்.
நம்முடைய சகோதரத்துவத்துக்கு ஒரு சோதனை
அந்த வருடங்கள் பெரிய மாற்றத்தைக் கண்டவை. நாங்கள் தெற்கிற்குக் குடிபெயர்ந்து செல்வதற்குமுன், இனங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. வெள்ளையர்கள் செல்லக்கூடிய அதே பள்ளிக்குச் செல்வதிலிருந்து, அதே உணவகங்களில் சாப்பிடுவதிலிருந்து, அதே ஓட்டல்களில் தூங்குவதிலிருந்து, அதே கடைகளில் சாமான் வாங்குவதிலிருந்து, அல்லது அதே குடிநீர் குழாயிலிருந்து குடிப்பதுகூட சட்டப்படியாக கறுப்பர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1964-ல், ஐக்கிய மாகாணங்களின் காங்கிரஸ் பொது உரிமைகள் சட்டத்தை வழங்கியது; அது பயண ஊர்திகள் உட்பட பொது இடங்களில் பாகுபாடு செய்வதற்குத் தடைவிதித்தது. ஆகவே, இன பிரிவிற்கு எந்தச் சட்ட அடிப்படையும் இனிமேலும் இருக்கவில்லை.
ஆகவே கேள்வி என்னவாக இருந்ததென்றால், எல்லாம்-கறுப்பர், எல்லாம்-வெள்ளையர் என்றிருந்த சபைகளிலுள்ள நம் சகோதர சகோதரிகள் இணைந்து, ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் காண்பிப்பார்களா அல்லது சமூகத்திலிருந்தும் கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்றப்பட்டிருந்த உணர்ச்சிகளிலுமிருந்து வரும் அழுத்தங்கள் அப்படி இணைவதைத் தடுக்கும்படி செய்யுமா? பின்வரும் வேதப்பூர்வ கட்டளைக்கு இசைந்து நடப்பது ஒரு சவாலாக இருந்தது: “சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.”—ரோமர் 12:10.
ஒருவரால் நினைத்துப்பார்க்க முடிந்தவரையில், குறிப்பாக தெற்கில், கறுப்பர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்து பொதுவானதாக இருந்துவந்தது. இந்தக் கருத்து, சர்ச்சுகள் உட்பட நடைமுறையில் சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்ததாக இருந்துவந்தது. ஆகவே கறுப்பர்களைச் சமமானவர்களாகக் கருதுவது சில வெள்ளையர்களுக்கு எளிதானதாக இருக்கவில்லை. உண்மையில், நம்முடைய சகோதரத்துவத்துக்கு—கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும்—அது ஒரு சோதனையின் காலமாக இருந்தது.
மகிழ்ச்சிக்குரியவிதத்தில், நம் சபைகளில் ஒருங்கிணைப்பிற்கு மொத்தத்தில் நல்ல பிரதிபலிப்பு இருந்தது. நூற்றாண்டுகளாக ஆழமாக ஊறிக்கிடந்த இன உயர்வுபற்றிய கருத்துக்கள் விரைவாக நீக்கப்படவில்லை. இருந்தாலும் ஒருங்கிணைப்பு தொடங்கப்பட்டபோது, நம்முடைய சகோதரர்களால் அது நன்கு வரவேற்கப்பட்டது; ஒன்றுசேர்ந்து சந்திக்க முடிவதற்காக அவர்களில் அநேகர் சந்தோஷப்பட்டனர்.
அக்கறைக்குரியவிதத்தில், சாட்சிகள் அல்லாதவர்கள்கூட, நம் சபைகள் ஒருங்கிணைக்கப்பட்டதற்கு ஒத்துழைத்தனர். உதாரணமாக, அலபாமாவிலுள்ள லெனட்டில், ராஜ்ய மன்றத்திற்கு அருகிலுள்ள அயலார், கறுப்பர்கள் கூட்டத்திற்கு வருவதைக் குறித்து ஆட்சேபணையைக் கொண்டிருந்தார்களா என்று கேட்கப்பட்டார்கள். ஒரு வயதான வெள்ளைக்காரப் பெண்மணி ஒரு கறுப்பு சகோதரனின் கையைக் குலுக்கிக்கொண்டு, இவ்வாறு சொன்னாள்: “எங்கள் சுற்றுவட்டாரத்திற்கு நீங்கள் வந்து, உங்கள் கடவுளை உங்கள் விருப்பப்படி வணங்குங்கள்!”
எதியோபியாவிலுள்ள உண்மையுள்ள சகோதரர்கள்
1974-ல், நியூ யார்க் நகரில் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் ஐந்தரை மாதங்களுக்கு மிஷனரி பயிற்றுவிப்பைக் கொண்டிருந்ததில் சந்தோஷப்பட்டோம். பின்னர் ஆப்பிரிக்க நாடாகிய எதியோபியாவிற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். அப்போதுதான் பேரரசராகிய ஹைலி செலாஸி பணியிலிருந்து நீக்கப்பட்டு, வீட்டுக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். எங்கள் பிரசங்கவேலை தடைசெய்யப்பட்டு இருந்ததால், எங்கள் கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் கனிவான நெருக்கவுணர்வை நாங்கள் போற்றினோம்.
உண்மை வணக்கத்தைப் பற்றிக்கொண்டிருந்ததற்காக, பின்னர் கைதுசெய்யப்பட்ட அநேகருடன் நாங்கள் வாழ்ந்து, சேவை செய்தோம். எங்களருமை நண்பர்களில் சிலர் கொல்லவும்பட்டனர். ஆடெரா டெஷோம் என்பவர் என்னுடன் எதியோபியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிலுள்ள ஒரு சபையில் உடன் மூப்பராக இருந்தார்.a மூன்று வருடங்களுக்குச் சிறையிலடைக்கப்பட்டபின் அவர் கொல்லப்பட்டார். இயல்பாகவே, அவருடைய மனைவி ஆழ்ந்த துயரமடைந்தார்கள். பல வருடங்களுக்குப் பின்னர், அவர்கள் ஒரு பயனியராக சேவை செய்கையில் சந்தோஷத்தைப் பிரதிபலிப்பதைக் காண்பது எவ்வளவு சந்தோஷகரமாக இருக்கிறது!
வோர்க்யூ ஆபீபி என்ற இன்னொரு உண்மையுள்ள சகோதரர், எட்டு முறைகள் மரணத் தீர்ப்பளிக்கப்பட்டார்.* ஆனால் அவர் ஒருபோதும் மிரட்டப்படவில்லை! நான் அவரைக் கடைசியாகக் கண்டபோது, சிறைக் காவலாளர்கள் அவருடைய காதுகளைத் துப்பாக்கியின் தடித்த முனைகளை வைத்துக் காயப்படுத்தியிருந்ததைக் காண்பித்தார். அவர் காலை உணவாகவும், மதிய உணவாகவும், இரவு உணவாகவும் துப்பாக்கியின் தடித்த முனைகளைக் கொண்டிருந்ததாகக் கேலியாகச் சொன்னார். அப்போதே அவர் மரித்துவிட்டபோதிலும், அவர் இன்னும் சகோதரர்களால் அன்பாக நினைவுகூரப்படுகிறார்.
நான் பிரியத்துடன் நினைவுகூரக்கூடிய மற்றொரு சகோதரர் ஹைலூ யெமிர்யூ ஆவார்.* அவர் தம்முடைய மனைவிக்கு விசேஷித்தவிதத்தில் அன்பைக் காண்பித்தார். அவள் கைதுசெய்யப்பட்டாள்; ஆனால் அவள் கருத்தரித்திருந்ததால், சீக்கிரத்தில் குழந்தை பிறக்கும் என்பதால், ஹைலூ அவளுக்குப் பதிலாக சிறையிலிருக்கலாமா என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டார். பின்னர், அவர் தன்னுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்காததால் கொலை செய்யப்பட்டார்.—யோவான் 15:12, 13; எபேசியர் 5:28.
எதியோபியாவில் சீர்கெட்டுக்கொண்டிருந்த அரசியல் நிலைமையின் காரணமாக, நாங்கள் 1976-ல் கென்யாவுக்குக் குடிபெயர்ந்து சென்றோம். கென்யா, எதியோபியா, சூடான், ஸேசெல்ஸ், உகாந்தா, டான்ஜானியா ஆகியவை உட்பட கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள பல நாடுகளிலுள்ள சகோதரர்களைச் சந்தித்து, நாங்கள் ஏழு வருடங்களாகப் பயணவேலையில் சேவை செய்தோம். அந்த நாடுகளில் நம்முடைய வேலையைச் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்வதற்கு அதிகாரிகளோடு பேசுவதற்காக அனுப்பப்பட்டதால், பல சந்தர்ப்பங்களில் நான் புருண்டிக்கும் ருவாண்டாவுக்கும் பயணம்செய்தேன்.
நம்முடைய வேலையின்மீதிருந்த தடை நீக்கப்பட்டபின் எதியோபியாவில் நடத்தப்பட்ட முதல் மாவட்ட மாநாட்டிற்காக ஜனவரி 1992-ல் அங்கு திரும்பி வருவது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. அங்கு வந்திருந்த 7,000-க்கும் அதிகமானோர் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை; ஏனென்றால் அதற்கு முன்னர் சகோதரர்கள் சிறிய தொகுதிகளாகவே கூடியிருந்தனர். மாநாட்டின் ஒவ்வொரு நாளும், அநேகர் நிகழ்ச்சிநிரல் தொடங்குவதற்கு இரண்டு மணிநேரங்களுக்கு முன்னும், மாலையில் பிந்திய மணிநேரம் வரையாகவும் இருந்து, அன்பான சகோதரத்துவத்தை அனுபவித்துக்களித்தனர்.
குலமரபு அமைப்புமுறை தோற்கடிக்கப்பட்டது
நூற்றாண்டுகளாக குலமரபு அமைப்புமுறை ஆப்பிரிக்காவில் மேலோங்கி செயல்பட்டுவந்திருக்கிறது. உதாரணமாக, புருண்டியிலும் ருவாண்டாவிலுமுள்ள பெரிய இனத் தொகுதிகளான ஹூட்டூ மற்றும் டூட்ஸி நெடுங்காலமாக ஒருவரையொருவர் விரோதித்திருந்தனர். இந்த நாடுகள் 1962-ல் பெல்ஜியத்திலிருந்து விடுதலை பெற்றபோது, இந்த இரண்டு இனத் தொகுதிகளும் அடிக்கடி ஒருவரையொருவர் ஆயிரக்கணக்கில் கொலைசெய்திருந்தனர். ஆகவே, இந்த இனத் தொகுதிகளின் அங்கத்தினர்கள் யெகோவாவின் சாட்சிகளாகி சமாதானமாக ஒன்றுசேர்ந்து வேலைசெய்வதைக் காண்பதில் என்னே ஓர் ஆனந்தம்! அவர்கள் ஒருவருக்கொருவர் காண்பிக்கும் உண்மையான அன்பு, மற்றுமநேகர் பைபிள் சத்தியங்களுக்குச் செவிகொடுப்பதற்கு உற்சாகப்படுத்தியிருக்கிறது.
அதேவிதமாகவே, கென்யாவிலுள்ள இனத் தொகுதிகள் அவர்களுடைய சொந்த பூசல்களை உடையவர்களாய் இருந்திருக்கின்றனர். கென்யாவில் யெகோவாவின் மக்களாலான கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்குள் என்னே ஓர் வித்தியாசம்! வெவ்வேறு இனத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் ராஜ்ய மன்றங்களில் ஒற்றுமையாக வழிபடுவதை நீங்கள் பார்க்கலாம். இவர்களில் பலர், தங்கள் குலமரபுக்குரிய பகைகளைக் களைந்து, மற்ற இனத் தொகுதிகளைச் சேர்ந்த தங்கள் சகோதர சகோதரிகளுக்கு உண்மையான அன்பைக் காண்பிப்பதைக் காண்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது.
நம்முடைய சகோதரத்துவத்துக்காக மகிழ்ச்சி
கடவுளுடைய அமைப்புடன் கொண்டுள்ள 50-க்கும் அதிகமான வருடங்களின் கூட்டுறவை நினைத்துப் பார்க்கையில், யெகோவாவுக்கும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் என் இருதயத்தில் நன்றியுணர்ச்சி நிரம்புகிறது. அவர்கள் பூமியில் என்ன நடக்கும்படி செய்திருக்கிறார்கள் என்பதைக் காண்பது உண்மையிலேயே வியப்பூட்டுவதாக இருந்திருக்கிறது! கடவுளுடைய மக்களின் மத்தியில், நிலைமைகள் எப்போதும் பரிபூரணமாக இருந்ததில்லை, இப்போதும் அவ்வாறு இருப்பதில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான வருடங்களான சாத்தானிய உலகின் இன வேறுபாட்டுப் போதனைகள் ஓரிரவில் அழிக்கப்பட முடியும் என்று எதிர்பார்க்கப்பட முடியாது. நாம் இன்னும் அபூரணர்களாகத்தானே இருக்கிறோம்.—சங்கீதம் 51:5.
யெகோவாவின் அமைப்பை உலகத்தோடு நான் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நம் உண்மையான, உலகளாவிய சகோதரத்துவத்துக்கான போற்றுதலால் என் இருதயம் நிரம்பிவழிகிறது. என்னைச் சத்தியத்தில் பேணி வளர்த்த, கிளீவ்லாண்டிலுள்ள அந்த வெள்ளை சகோதரர்கள் அனைவரையும் நான் பிரியத்துடன் நினைவுகூருகிறேன். மேலும் தெற்கு ஐக்கிய மாகாணங்களிலுள்ள வெள்ளையரும் கறுப்பருமான நம்முடைய சகோதரர்கள் தங்கள் தப்பெண்ண உணர்ச்சிகளை இருதயப்பூர்வமான சகோதர அன்பால் மாற்றீடு செய்வதைக் கண்டபோது, என் இருதயம் பூரித்தது. பின்னர், ஆப்பிரிக்காவிற்குச் சென்று, யெகோவாவின் வார்த்தை எப்படி குலமரபு பகைகளை நீக்க முடியும் என்பதை நேரடியாகக் கண்டது, நம்முடைய உலகளாவிய சகோதரத்துவத்தை நான் இன்னும் அதிகமாக போற்றும்படி செய்திருக்கிறது.
உண்மையில், பண்டைய அரசனாகிய தாவீது பின்வருமாறு சொன்னபோது அதை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்: “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது”!—சங்கீதம் 133:1.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளுடைய 1992-ன் வருடாந்தர புத்தகம் (1992 Yearbook of Jehovah’s Witnesses) பக்கம் 177-ல் ஆடெரா டெஷோம் மற்றும் ஹைலூ யெமிர்யூவின் படம் காணப்படுகின்றன; வோர்க்யூ ஆபீபியின் அனுபவம் பக்கங்கள் 178-81-ல் சொல்லப்பட்டிருக்கிறது.
[பக்கம் 23-ன் படம்]
என் பாட்டியின் சவ அடக்கம்
[பக்கம் 24-ன் படம்]
டூட்ஸி மற்றும் ஹூட்டூ சாட்சிகள் சமாதானத்துடன் ஒன்றுசேர்ந்து வேலை செய்கின்றனர்
[பக்கம் 25-ன் படம்]
என் மனைவி லோயஸுடன்