கடவுளுடைய தீர்க்கதரிசிகளை மாதிரியாக வைத்துக்கொள்ளுங்கள்
“சகோதரரே, யெகோவாவின் பெயரில் பேசின தீர்க்கதரிசிகளைத் தீமை அனுபவிப்பதற்கும் பொறுமையைக் காட்டுவதற்குமுரிய மாதிரியாக வைத்துக்கொள்ளுங்கள்.”—யாக்கோபு 5:10, NW.
1. தாங்கள் துன்புறுத்தப்படுகையிலும்கூட மகிழ்ச்சியாயிருக்க எது யெகோவாவின் ஊழியர்களுக்கு உதவிசெய்கிறது?
யெகோவாவின் ஊழியர்கள், இந்தக் கடைசி நாட்களில் உலகமெங்கும் நிலவியுள்ள மனச்சோர்வு நிலையின் மத்தியிலும் மகிழ்ச்சி பரவும்படி செய்கின்றனர். தாங்கள் கடவுளைப் பிரியப்படுத்துகிறார்களென்று அவர்கள் அறிந்திருப்பதே இதன் காரணமாகும். தங்களுடைய வெளிப்படையான ஊழியத்தில் துன்புறுத்தலையும் எதிர்ப்பையும் அவர்கள் அனுபவிக்கையிலும் யெகோவாவின் சாட்சிகள் சகித்துக்கொள்கின்றனர், ஏனெனில் நீதியினிமித்தமாகவே தாங்கள் துன்பப்படுகிறார்களென்று அவர்கள் உணருகின்றனர். இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றினோரிடம்: “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” என்று கூறினார். (மத்தேயு 5:10-12) நிச்சயமாகவே, கடவுளுடைய ஊழியர்கள் விசுவாச பரீட்சைகளை எதிர்ப்படும்போதெல்லாம் இவற்றை மகிழ்ச்சியாகக் கருதுகின்றனர்.—யாக்கோபு 1:2, 3.
2. யாக்கோபு 5:10-ன்படி பொறுமையைக் காட்டுவதற்கு எது நமக்கு உதவிசெய்யக்கூடும்?
2 சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “சகோதரரே, யெகோவாவின் பெயரில் பேசின தீர்க்கதரிசிகளைத் தீமை அனுபவிப்பதற்கும் பொறுமையைக் காட்டுவதற்குமுரிய மாதிரியாக வைத்துக்கொள்ளுங்கள்.” (யாக்கோபு 5:10, NW) W. F. ஆர்ன்ட் மற்றும் F. W. கிங்க்ரிச் என்பவர்கள் “மாதிரி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல்லை (ஹைப்போடீக்மா) “முன்மாதிரி, முற்படிவம், மாதிரி” என்று விளக்கம் கூறுகிறார்கள். “அதைப் பின்பற்றும்படி ஒருவரைத் தூண்டுகிற அல்லது தூண்டவேண்டிய நல்ல கருத்தில்” அவ்வாறு செய்கின்றனர். யோவான் 13:15-ல் காட்டப்பட்டுள்ளபடி, “இது முன்மாதிரியைப்பார்க்கிலும் அதிகப்பட்டது. இது திட்டவட்டமான மூலமுன்மாதிரியாகும்.” (தியாலஜிக்கல் டிக்ஷனரி ஆஃப் தி நியூ டெஸ்டமென்ட்) அவ்வாறெனில், யெகோவாவின் தற்கால ஊழியர்கள், அவருடைய உண்மையுள்ள தீர்க்கதரிசிகளை ‘தீமை அனுபவிப்பதையும்,’ ‘பொறுமையைக் காட்டுவதையும்’ குறித்ததில் மாதிரியாக வைத்துக்கொள்ளலாம். அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றி நாம் படிக்கையில் வேறு எவற்றையும் நாம் கூர்ந்தறியலாம்? இது எவ்வாறு நம்முடைய பிரசங்க ஊழிய நடவடிக்கையில் நமக்கு உதவிசெய்யக்கூடும்?
அவர்கள் தீமை அனுபவித்தார்கள்
3, 4. அமத்சியாவிடமிருந்து வந்த எதிர்ப்புக்கு தீர்க்கதரிசி ஆமோஸ் எவ்வாறு பிரதிபலித்தார்?
3 யெகோவாவின் தீர்க்கதரிசிகள் அடிக்கடி தீமையை அல்லது கொடுமையை அனுபவித்தனர். உதாரணமாக, பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டில், கன்றுக்குட்டி வணக்கத்தானான ஆசாரியன் அமத்சியா, தீர்க்கதரிசியாகிய ஆமோஸை பொல்லாத முறையில் எதிர்த்தான். அரசன் பட்டயத்தால் சாவான் என்றும் இஸ்ரவேலர் சிறைப்பட்டு நாடுகடத்தப்படுவார்களென்றும் ஆமோஸ் தீர்க்கதரிசனமுரைத்ததன்மூலம் இரண்டாம் யெரொபெயாமுக்கு எதிராகச் சதிசெய்தாரென அமத்சியா பொய்யாக விவாதித்தான். இறுமாப்புடன், அமத்சியா ஆமோஸை நோக்கி பின்வருமாறு கூறினான்: “தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது.” வாய்முறையான இந்தக் கடுந்தாக்கலால் தடுக்கப்படாதவராய், ஆமோஸ் இவ்வாறு பதிலளித்தார்: “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசன சிஷ்யனுமல்ல; நான் ஆடு மேய்க்கிறவன், அத்திமரத்தோப்பு பார்க்கிறவன். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல் என்று யெகோவா உரைத்தார்.”—ஆமோஸ் 7:10-15, தி.மொ.
4 தைரியத்துடன் தீர்க்கதரிசனமுரைக்கும்படி யெகோவாவின் ஆவி ஆமோஸைப் பலப்படுத்தினது. ஆமோஸ் பின்வருமாறு சொன்னபோது அமத்சியாவின் பிரதிபலிப்பு எவ்வாறிருந்திருக்குமென்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்: “யெகோவாவின் வார்த்தையைக் கேள். இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வீட்டாருக்கு விரோதமாக வசனத்தைப் பொழியாதே என்று சொல்லுகிறாயே. ஆதலால் யெகோவா இப்படிச் சொல்லுகிறார்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள், உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயலை அளவுநூல் போட்டு பங்கிட்டுக்கொள்வார்கள், நீயோ அசுத்தமான தேசத்திலே மாண்டுபோவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைப்பட்டே போய்விடும்.” இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. (ஆமோஸ் 7:16, 17, தி.மொ.) விசுவாசத்துரோகியான அமத்சியா எவ்வளவாய்த் திடுக்கிட்டிருந்திருப்பான்!
5. யெகோவாவின் தற்கால ஊழியர்களின் சூழ்நிலைமைக்கும் தீர்க்கதரிசியாகிய ஆமோஸினுடையதற்கும் என்ன ஒப்புமையைக் காணலாம்?
5 இன்று யெகோவாவின் ஜனங்களின் சூழ்நிலைமை இதைப்போன்றதாயுள்ளது. கடவுளுடைய செய்திகளை அறிவிப்போராக நாம் தீங்கை அனுபவிக்கிறோம், நம்முடைய பிரசங்க நடவடிக்கையைப் பற்றி பலர் அவமதிப்பாய்ப் பேசுகின்றனர். பிரசங்கிப்பதற்காக நமக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் ஒரு இறையியல் கல்லூரியிலிருந்து வருகிறதில்லை என்பது உண்மையே. மாறாக, யெகோவாவின் பரிசுத்த ஆவியே, ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தியை அறிவிப்பதற்கு, நம்மைத் தூண்டியியக்குகிறது. கடவுளுடைய செய்தியை நாம் மாற்றுவதுமில்லை வலிமைகுறைத்துக் கூறுவதுமில்லை. அதற்குப் பதிலாக, ஆமோஸைப்போல், நம்முடைய செய்தியைக் கேட்போரின் பிரதிபலிப்பு என்னவாயினும், நாம் கீழ்ப்படிதலுடன் அதை அறிவிக்கிறோம்.—2 கொரிந்தியர் 2:15-17.
அவர்கள் பொறுமையைக் காட்டினார்கள்
6, 7. (அ) ஏசாயா தீர்க்கதரிசனமுரைத்ததன் தனித்தன்மை என்ன? (ஆ) யெகோவாவின் தற்கால ஊழியர்கள் எவ்வாறு ஏசாயாவைப்போல் செயல்படுகின்றனர்?
6 கடவுளுடைய தீர்க்கதரிசிகள் பொறுமையைக் காட்டினார்கள். உதாரணமாக, பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டில் யெகோவாவின் தீர்க்கதரிசியாகச் சேவித்த ஏசாயா பொறுமையைக் காட்டினார். கடவுள் அவரிடம் சொன்னார்: “நீ போய், இந்த ஜனத்தோடு பேசி: நீங்கள் காதாரக் [மறுபடியும் மறுபடியுமாக, NW] கேட்டும் உணராதிருங்கள்; கண்ணாரக் [மறுபடியும் மறுபடியுமாக, NW] கண்டும் அறியாதிருங்கள் என்று சொல். நீ இந்த ஜனத்தின் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அதின் காதுகளை மந்தப்படுத்தி, அதின் கண்களை மூடிப்போடு. அவர்கள் தங்கள் கண்களினால் காணாமலும் தங்கள் காதுகளினால் கேளாமலும் தங்கள் இருதயத்தினால் உணர்ந்து திரும்பிக் குணமடையாமலுமிருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.” (ஏசாயா 6:9, 10, தி.மொ.) அந்த ஜனங்கள் நிச்சயமாக அவ்வாறே பிரதிபலித்தனர். ஆனால் இது ஏசாயாவைத் தன் பொறுப்பை விட்டுவிலகும்படி செய்ததா? இல்லை. மாறாக, அவர் பொறுமையுடனும் ஆர்வத்துடனும் யெகோவாவின் எச்சரிக்கை செய்திகளை அறிவித்தார். இப்போது மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்ட கடவுளுடைய வார்த்தைகளின் எபிரெய அமைப்பு, அந்தத் தீர்க்கதரிசியின் அறிவிப்புகள் “நீடித்துத் தொடர்ந்த” எண்ணத்தை ஆதரிக்கிறது. அதை ஜனங்கள் “மறுபடியும் மறுபடியுமாக” கேட்டார்கள்.—ஜெஸீனியஸின் எபிரெய இலக்கணம் (Gesenius’ Hebrew Grammar).
7 ஏசாயா பேசின யெகோவாவின் வார்த்தைகளுக்கு ஜனங்கள் பிரதிபலித்ததுபோலவே இன்றும் பலர், நற்செய்திக்குப் பிரதிபலிக்கின்றனர். எனினும் அந்த உண்மையுள்ள தீர்க்கதரிசியைப் போலவே, ராஜ்ய செய்தியை நாம் “மறுபடியும் மறுபடியுமாக” அறிவிக்கிறோம். ஆர்வத்துடனும் பொறுமையோடுகூடிய விடாமுயற்சியுடனும் அவ்வாறு செய்கிறோம், ஏனெனில் இதுவே யெகோவாவின் சித்தமாக இருக்கிறது.
“தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்”
8, 9. என்ன வழிகளில் யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய மோசே சிறந்த முன்மாதிரியாயிருக்கிறார்?
8 தீர்க்கதரிசியாகிய மோசே பொறுமையிலும் கீழ்ப்படிதலிலும் முன்மாதிரியாக இருந்தார். அடிமைப்படுத்தப்பட்ட இஸ்ரவேலருடன் தன் நிலைநிற்கையை ஏற்பதையே தெரிந்துகொண்டார். ஆனால் அவர்களுடைய விடுதலையின் காலத்திற்காக அவர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருந்தது. இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வழிநடத்தும்படி கடவுள் அவரைப் பயன்படுத்தும் வரையாக மீதியானில் 40 ஆண்டுகள் வாழ்ந்தார். மோசேயும் அவருடைய சகோதரன் ஆரோனும் எகிப்தின் அரசனுக்கு முன்பாக இருந்தபோது, கடவுள் கட்டளையிட்டதை அவர்கள் கீழ்ப்படிதலுடன் சொன்னார்கள் மற்றும் செய்தார்கள். உண்மையில், “தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.”—யாத்திராகமம் 7:1-6; எபிரெயர் 11:24-29.
9 இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருந்த 40 கடுமையான ஆண்டுகளையும் மோசே பொறுமையுடன் சகித்தார். இஸ்ரவேலின் ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டுவதிலும் யெகோவாவின் வணக்கத்தில் பயன்படுத்தப்பட்ட மற்ற பொருட்களைச் செய்வதிலும் கடவுள் கொடுத்த வழிநடத்துதலை அவர் கீழ்ப்படிதலுடன் பின்பற்றினார். கடவுளுடைய விவரக் கட்டளைகளை இந்தத் தீர்க்கதரிசி அவ்வளவு நுட்பமாகக் கடைப்பிடித்ததால்: “மோசே அப்படியே செய்தான். யெகோவா தனக்குக் கட்டளையிட்ட யாவற்றின்படியேயும் செய்தான்” என்று நாம் வாசிக்கிறோம். (யாத்திராகமம் 40:16, தி.மொ.) யெகோவாவின் அமைப்போடிணைந்த நம் ஊழியத்தை நிறைவேற்றுவதில், மோசேயின் கீழ்ப்படிதலை நாம் நினைவுபடுத்திக்கொண்டு, ‘உங்களை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்’ என்ற அப்போஸ்தலன் பவுலின் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவோமாக.—எபிரெயர் 13:17, தி.மொ.
உடன்பாடான மனப்பான்மையுடையோராக இருந்தார்கள்
10, 11. (அ) தீர்க்கதரிசியாகிய ஓசியா உடன்பாடான ஒரு மனநிலையைக் கொண்டிருந்தாரென எது காட்டுகிறது? (ஆ) நம்முடைய பிராந்தியங்களில் ஜனங்களை நாம் சந்திக்கையில் உடன்பாடான மனப்பான்மையை நாம் எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?
10 தீர்க்கதரிசிகள் நியாயத்தீர்ப்பு செய்திகளையும் அவற்றோடுகூட இஸ்ரவேலில் சிதறியிருந்த உண்மையுள்ளோருக்கான கடவுளுடைய அன்புள்ள அக்கறையை வெளிப்படுத்தின தீர்க்கதரிசனங்களையும் கூறினபோது, உடன்பாடான மனப்பான்மையுடையோராக அவர்கள் இருக்க வேண்டியிருந்தது. ஓசியா இவ்வாறு இருந்தார், இவர் 59-க்குக் குறையாத ஆண்டுகள் தீர்க்கதரிசியாக இருந்தார். உடன்பாடான முறையில் இவர் யெகோவாவின் செய்திகளைத் தொடர்ந்து அறிவித்துவந்து, தன் தீர்க்கதரிசன புத்தகத்தைப் பின்வரும் வார்த்தைகளில் முடித்தார்: “விவேகமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணருவான்; புத்தியுள்ளவன் யார்? அவனே இவற்றை அறிவான்; யெகோவாவின் வழிகள் நேரானவை, நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; துரோகிகளோ அவைகளில் இடறிவிழுவார்கள்.” (ஓசியா 14:9, தி.மொ.) சாட்சி கொடுக்கும்படி யெகோவா நம்மை அனுமதிக்கும் வரையிலும் நாம் உடன்பாடான மனப்பான்மையுடையோராக இருந்து, கடவுளுடைய தகுதியற்ற தயவை ஞானமாய் ஏற்போருக்காகத் தொடர்ந்து தேடுவோமாக.
11 ‘பாத்திரமானவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு’ நாம் விடாமுயற்சியுடன் தொடரவும் காரியங்களை உடன்பாடான முறையில் கருதவும் வேண்டும். (மத்தேயு 10:11) உதாரணமாக, நம்முடைய சாவிகளைத் தவறாக எங்கேயாவது வைத்துவிட்டோமென்றால், திரும்பிச்சென்று நாம் நடமாடின பல்வேறு இடங்களில் தேடிப்பார்ப்போம். நாம் திரும்பத்திரும்ப இவ்வாறு தேடினபின்பே ஒருவேளை அவற்றைக் கண்டுபிடிக்கக்கூடும். இவ்வாறே செம்மறியாட்டைப்போன்றவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க விடாமுயற்சி எடுப்போமாக. அடிக்கடி ஊழியம் செய்யப்பட்ட பிராந்தியத்தில் அவர்கள் நற்செய்தியை ஏற்பார்களானால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியுண்டாகிறது! முன்னாளில் கட்டுப்பாடுகள் நம்முடைய யாவரறிந்த ஊழியத்தை மட்டுப்படுத்தின நாடுகளில் நம்முடைய ஊழியத்தைக் கடவுள் ஆசீர்வதிக்கிறார் என்பதில் நாம் எவ்வளவாய்க் களிகூருகிறோம்!—கலாத்தியர் 6:10.
ஊக்கமூட்டும் ஊற்றுமூலங்கள்
12. யோவேலின் எந்தத் தீர்க்கதரிசனம் 20-ம் நூற்றாண்டில் ஒரு நிறைவேற்றத்தை உடையதாயிருக்கிறது, எவ்வாறு?
12 யெகோவாவின் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் நம்முடைய ஊழியத்தில் நமக்குப் பெரும் ஊக்கமூட்டுதலாக இருக்கக்கூடும். உதாரணமாக, யோவேலின் தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள். அது பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் விசுவாசத்துரோக இஸ்ரவேலுக்கும் மற்றவர்களுக்கும் கூறப்பட்ட நியாயத்தீர்ப்பு செய்திகள் அடங்கியுள்ளது. எனினும், யோவேல் பின்வருமாறு தீர்க்கதரிசனம் உரைக்கும்படியும் தேவாவியால் ஏவப்பட்டார்: “நான் [யெகோவா] மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.” (யோவேல் 2:28, 29) இயேசுவைப் பின்பற்றினோரின் காரியத்தில் பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே முதற்கொண்டு இது உண்மையாய் நிறைவேறிற்று. இந்த 20-ம் நூற்றாண்டில் இந்தத் தீர்க்கதரிசனத்தின் எத்தகைய மகத்தான நிறைவேற்றத்தை நாம் காண்கிறோம்! இன்று ‘தீர்க்கதரிசனமுரைப்போர்’ அல்லது யெகோவாவின் செய்தியை அறிவிப்போர் லட்சக்கணக்கில் நமக்கு இருக்கின்றனர்—இவர்களுக்குள் 6,00,000-க்கு மேற்பட்டவர்கள் முழுநேர ஊழியராக இருக்கின்றனர்.
13, 14. வெளி ஊழியத்தில் மகிழ்ச்சியைக் கண்டடைய இளம் கிறிஸ்தவர்களுக்கு எது உதவிசெய்யக்கூடும்?
13 இராஜ்ய பிரஸ்தாபிகள் பலர் இளைஞராக உள்ளனர். முதியோரிடம் பைபிளைப்பற்றி பேசுவது அவர்களுக்கு எப்பொழுதும் எளிதாக இருப்பதில்லை. ‘பிரசங்கித்துக்கொண்டு உன் நேரத்தை நீ வீணாக்குகிறாய்,’ ‘வேறு எதையாவது நீ செய்துகொண்டிருக்க வேண்டும்’ என்று இளைஞராயுள்ள யெகோவாவின் ஊழியர்களிடம் சிலசமயங்களில் சொல்லப்படுகிறது. அந்த நபர் அவ்வாறு உணருவதைப்பற்றி தாங்கள் வருந்துவதாக யெகோவாவின் இளம் சாட்சிகள் சாதுரியமாய் பதிலளிக்கலாம். நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஓர் இளைஞன் பின்வருமாறு மேலும் சொல்வது உதவியாயிருப்பதாகக் காண்கிறான்: “உங்களைப்போன்ற முதிய ஆட்களிடம் பேசுவதிலிருந்து நான் உண்மையில் பயனடைவதாக உணருகிறேன், நான் அதில் மகிழ்ச்சியடைகிறேன்.” நிச்சயமாகவே, நற்செய்தியைப் பிரசங்கிப்பது நேரத்தை வீணாக்குவதாக இல்லை. உயிர்கள் ஆபத்திலுள்ளன. ‘யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற ஒவ்வொருவனும் பத்திரமாய்த் தப்புவான்’ என்று யோவேலின் மூலம் கடவுள் மேலும் அறிவித்தார்.—யோவேல் 2:32, NW.
14 இராஜ்ய பிரசங்க ஊழியத்தில் தங்கள் பெற்றோருடன் செல்லும் பிள்ளைகள் தனிப்பட்ட இலக்குகளை வைப்பதில் பெற்றோரின் உதவியை ஆவலோடு ஏற்கின்றனர். இத்தகைய இளைஞர் வேதவசனம் ஒன்றை வாசிப்பதிலிருந்து, பைபிளில் ஆதாரங்கொண்ட தங்கள் நம்பிக்கையை விளக்கிக்கூறி அக்கறை காட்டும் ஆட்களுக்குப் பொருத்தமான பிரசுரத்தை அளிப்பது வரையாகப் படிப்படியாய் முன்னேறுகின்றனர். தங்கள் சொந்த முன்னேற்றத்தையும் யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் தாங்கள் காண்கையில், இளம் ராஜ்ய பிரஸ்தாபிகள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டடைகின்றனர்.—சங்கீதம் 110:3; 148:12, 13.
ஆர்வமும் காத்திருக்கும் மனப்பான்மையும்
15. எசேக்கியேலின் முன்மாதிரி எவ்வாறு ராஜ்ய பிரசங்க ஊழியத்தில் நம்முடைய ஆர்வத்தைத் திரும்பத்தூண்டி ஊக்குவிக்க உதவிசெய்யும்?
15 ஆர்வத்தையும் காத்திருக்கும் மனப்பான்மையையும் காட்டுவதிலும் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் முன்மாதிரியாக இருந்தனர்—இவை இன்று நம் ஊழியத்தில் நமக்குத் தேவையான தனிப்பண்புகள். நாம் கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியத்தை முதல் கற்றபோது, தைரியமாய்ப் பேசும்படி நம்மைச் செய்வித்த ஆர்வத்தால் பெரும்பாலும் தூண்டப்பட்டிருந்திருப்போம். ஆனால் அப்போதிருந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன, மேலும் நம்முடைய சாட்சிகொடுக்கும் பிராந்தியத்தில் பலதடவைகள் முழுமையாக ஊழியம் செய்து முடித்திருக்கலாம். இப்போது மிகக் குறைவான ஆட்களே ராஜ்ய செய்தியை ஏற்போராக இருக்கலாம். இது நம்முடைய ஆர்வத்தைக் குன்றச் செய்திருக்கிறதா? அவ்வாறெனில், தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலைக் கவனியுங்கள், இவருடைய பெயர் “கடவுள் பலப்படுத்துகிறார்” எனப் பொருள்படுகிறது. எசேக்கியேல், பூர்வ இஸ்ரவேலில் கடின இருதயமுள்ளோராயிருந்த ஜனங்களை எதிர்ப்பட்டபோதிலும், கடவுள் அவரைப் பலப்படுத்தி அவருடைய நெற்றியை குறிப்பாய் வச்சிரக்கல்லைப்பார்க்கிலும் கடினமாக்கினார். இவ்வாறு, அந்த ஜனங்கள் கேட்டாலும் கேளாவிடினும், எசேக்கியேல் தன் ஊழியத்தை மிகப் பல ஆண்டுகள் நிறைவேற்றக்கூடியவராக இருந்தார். நாமும் அவ்வாறு செய்யக்கூடுமென்று அவருடைய முன்மாதிரி காட்டுகிறது, மேலும் பிரசங்க ஊழியத்துக்கான நம்முடைய ஆர்வத்தைத் திரும்பத்தூண்டி ஊக்குவிக்கவும் இது உதவிசெய்யும்.—எசேக்கியேல் 3:8, 9; 2 தீமோத்தேயு 4:5.
16. மீகாவின் என்ன மனப்பான்மையை நாம் வளர்க்க வேண்டும்?
16 பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் தீர்க்கதரிசனமுரைத்த மீகா கவனிக்கத்தக்க பொறுமையுடையவராக இருந்தார். “நானோ யெகோவாவை நோக்கியவண்ணமாய் என் ரட்சிப்பின் கடவுளுக்குக் காத்திருப்பேன், என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருளுவார்,” என்று அவர் எழுதினார். (மீகா 7:7, தி.மொ.) மீகாவின் நம்பிக்கை அவருடைய உறுதியான விசுவாசத்தில் திடமாக நிலைகொண்டிருந்தது. யெகோவா நோக்கங்கொண்டதை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவாரென்று தீர்க்கதரிசியாகிய ஏசாயாவைப்போல் மீகாவும் அறிந்திருந்தார். நாமுங்கூட இதை அறிந்திருக்கிறோம். (ஏசாயா 55:11) ஆகையால் கடவுளுடைய வாக்குகளின் நிறைவேற்றத்தை நோக்கி காத்திருக்கும் மனப்பான்மையை நாம் வளர்த்துவருவோமாக. மேலும் ராஜ்ய செய்தியில் ஜனங்கள் அக்கறை காட்டாத இடங்களிலும் நற்செய்தியை நாம் ஆர்வத்துடன் பிரசங்கிப்போமாக.—தீத்து 2:14; யாக்கோபு 5:7-10.
இன்று பொறுமை காட்டுதல்
17, 18. பூர்வ மற்றும் தற்கால என்ன முன்மாதிரிகள் பொறுமையைக் காட்டும்படி நமக்கு உதவிசெய்யக்கூடும்?
17 யெகோவாவின் தீர்க்கதரிசிகளில் சிலர் பல ஆண்டுகளாகத் தங்கள் ஊழிய நியமிப்புகளில் விடாது தொடர்ந்திருந்தனர், எனினும் தங்கள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் காணவில்லை. ஆயினும், அடிக்கடி துன்புறுத்தலை அனுபவிக்கையிலுங்கூட அவர்கள் விடாது பொறுமையோடு தொடர்ந்ததானது, நாமும் நம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற முடியுமென்று உணர நமக்கு உதவிசெய்கிறது. மேலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்க பத்தாண்டுகளில் இருந்த உண்மையுள்ளவர்களான அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களின் முன்மாதிரியிலிருந்தும் நாம் பயனடையலாம். அவர்களுடைய பரலோக நம்பிக்கைகள் அவர்கள் எதிர்பார்த்தபடி அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறவில்லை. என்றபோதிலும், தாமதமாகக் காணப்பட்ட ஒன்றின்பேரில் உண்டான ஏமாற்றம், கடவுள் அவர்களுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்த அவருடைய சித்தத்தைச் செய்வதற்கான தங்கள் ஆர்வம் குன்றுவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை.
18 இந்தக் கிறிஸ்தவர்களில் பலர், பல ஆண்டுகளாக (ஆங்கில) காவற்கோபுரத்தையும் அதன் கூட்டுப்பத்திரிகையாகிய (முன்பு தி கோல்டன் ஏஜ் என்றும் பிற்பாடு கான்சலேஷன் என்றும் பெயரிடப்பட்ட) விழித்தெழு!-வையும் தவறாது ஒழுங்காய் விநியோகித்து வந்தனர். வீதிகளிலும், பத்திரிகை மார்க்கங்கள் என இன்று அழைக்கப்படும் முறையில் ஜனங்களுடைய வீடுகளிலும் இந்த மதிப்புவாய்ந்த பத்திரிகைகள் அவர்களுக்குக் கிடைக்கக்கூடும்படி செய்து அவர்கள் ஆர்வத்தோடு உழைத்தனர். தன் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்துவிட்ட முதிர்வயதான ஒரு சகோதரி, வீதியில் சாட்சிகொடுப்பதைக் காண்பதில் பழக்கப்பட்டிருந்த பாதசாரிகள் அவள் இல்லாததை விரைவில் உணர்ந்தனர். அவளுடைய யாவரறிந்த ஊழியத்தைக் கவனித்திருந்தவர்கள் கூறிய மதித்துணர்வான கூற்றுகள் காட்டினபடி தன் உண்மையுள்ள ஊழியத்தின் பல ஆண்டுகளின்போது அவள் எத்தகைய மகத்தான சாட்சி கொடுத்திருந்தாள்! இராஜ்ய அறிவிப்பாளராக நீங்கள், உங்கள் ஊழியத்தில் சந்திப்போரின் கைகளில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளைத் தவறாமல் அளித்து வருகிறீர்களா?
19. எபிரெயர் 6:10-12 என்ன ஊக்கமூட்டுதலை நமக்கு அளிக்கிறது?
19 மேலும், யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக சேவிக்கும் சகோதரர்களின் பொறுமையையும் உண்மையுள்ள சேவையையும்கூட கவனியுங்கள். அவர்களில் பலர் இப்பொழுது தங்கள் வாழ்க்கையின் தொண்ணூறு அல்லது நூறு வயதில் இருக்கின்றனர், எனினும் அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட கடமைகளை ஆர்வத்தோடு நிறைவேற்றிவரும் ராஜ்ய அறிவிப்பாளராக இன்னும் இருக்கின்றனர். (எபிரெயர் 13:7) மேலும் பரலோக நம்பிக்கையையுடைய மற்ற முதியோரையும் மற்றும் ‘மற்ற செம்மறியாடுகளிலும்கூட’ முதிர்வயதாகிக்கொண்டிருக்கும் சிலரையும் பற்றியதென்ன? (யோவான் 10:16) அவர்களுடைய ஊழியத்தையும் தம்முடைய பெயருக்கு அவர்கள் காட்டின அன்பையும் மறந்துவிட கடவுள் அநீதியுள்ளவரல்லவென்று அவர்கள் நிச்சயமாயிருக்கலாம். இளைஞரான உடன்விசுவாசிகளோடுகூட யெகோவாவின் முதிர்வயதான சாட்சிகள், கடவுளுடைய ஊழியத்தில் தங்களால் கூடியதைச் செய்வதிலும், விசுவாசமும் பொறுமையும் காட்டுவதிலும் விடாமுயற்சியுடன் முன்னேறுவார்களாக. (எபிரெயர் 6:10-12) அப்போது, பூர்வ தீர்க்கதரிசிகளைப்போல் உயிர்த்தெழுப்பப்படுவதால் அல்லது வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தினூடே’ தப்பிப்பிழைப்பதால் நித்திய ஜீவனின் நிறைவான பலனைப் பெறுவார்கள்.—மத்தேயு 24:21.
20. (அ) தீர்க்கதரிசிகளின் “மாதிரி”யிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? (ஆ) தீர்க்கதரிசிகளுக்கு இருந்ததைப்போன்ற பொறுமை நமக்கு எவ்வாறு உதவிசெய்யக்கூடும்?
20 எத்தகைய சிறந்த மாதிரியைக் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் நமக்கு விட்டுச்சென்றிருக்கின்றனர்! அவர்கள் துன்பத்தைச் சகித்துநிலைத்திருந்ததாலும், பொறுமையைக் காட்டினதாலும் தேவபக்திக்குரிய மற்ற பண்புகளைக் காட்டினதாலும், யெகோவாவின் பெயரில் பேசுவதற்குச் சிலாக்கியமளிக்கப்பட்டனர். அவருடைய தற்கால சாட்சிகளாக, நாமும் அவர்களைப்போலும், பின்வருமாறு சொன்ன தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கைப்போல் மனவுறுதியுடனும் இருப்போமாக: “நான் என் காவலிலே தரித்து, காவற்கோபுரத்திலே நிலைகொண்டிருப்பேன், அவர் என்னைக்கொண்டு [கடவுள்] என்ன சொல்லுவாரென்றும் . . . கண்டறியும்படி நோக்கிப் பார்ப்பேன்.” (ஆபகூக் 2:1, தி.மொ.) நாம் பொறுமையைக் காட்டி நம்முடைய மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவாவின் மேன்மையான பெயரை யாவரறிய அறிவிப்பதில் மகிழ்ச்சியுடன் தொடருகையில் அதைப்போன்ற தீர்மானத்தையுடையோராய் நாமும் இருப்போமாக!—நெகேமியா 8:10; ரோமர் 10:10.
இந்தக் குறிப்புகளைப் புரிந்துகொண்டீர்களா?
◻ தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் என்ன தைரியமான முன்மாதிரியை வைத்தார்?
◻ என்ன வழிகளில் தீர்க்கதரிசியாகிய மோசே முன்மாதிரியாயிருந்தார்?
◻ எவ்வாறு யெகோவாவின் தற்கால சாட்சிகள் ஆமோஸைப்போலும் ஏசாயாவைப்போலும் செயல்படலாம்?
◻ ஓசியா மற்றும் யோவேலின் நடத்தையிலிருந்து கிறிஸ்தவ ஊழியர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ எசேக்கியேலின் மற்றும் மீகாவின் முன்மாதிரிகளிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
[பக்கம் 16-ன் படம்]
அமத்சியாவின் முரட்டுத்தனமான எதிர்ப்பின் மத்தியிலும் தைரியமாய்த் தீர்க்கதரிசனமுரைப்பதற்கு யெகோவாவின் ஆவி ஆமோஸை பலப்படுத்தினது
[பக்கம் 18-ன் படம்]
அபிஷேகஞ்செய்யப்பட்ட உண்மையுள்ளவர்கள் யெகோவாவின் ஊழியத்தில் பொறுமையைக் காட்டுவதன்மூலம் சிறந்த முன்மாதிரியை வைத்தார்கள்