வறண்ட ஒரு தேசம் வளமுள்ளதாகிறது
ஆர்த்தர் மெல்லன் சொன்னபடி
அன்று 1930-ல் வசந்த காலத்தின் ஓர் அமைதியான நாளாக இருந்தது. பிரிட்டிஷ் கொலம்பியா, பிரின்ஸ் ரூபர்ட்டில் ஒரு செயற்கைத் துறைமுகத்தின்மீது நான் நின்றுகொண்டிருந்தேன். கடலின் அடிப்பரப்பின்மீது அசையாது நிற்கும் படகைப் பார்த்து, ‘தண்ணீரெல்லாம் எங்கே போய்விட்டது?’ என்று யோசித்தேன். ஆறே மணிநேரங்களில் ஏழு மீட்டர் வரையாக கடல் மட்டம் குறைந்துவிடுகிற பசிபிக் மேற்கு கரையின் அலைகளைப் பார்ப்பது இதுவே என்னுடைய முதல் அனுபவமாக இருந்தது. ஆனால் பரந்த புல் வெளிகளுள்ள பண்ணையில் வளர்ந்துவந்த பையன் பசிபிக் சமுத்திரத்தின் கடலோரத்துக்கு வந்தது எப்படி?
நான் ஷார்மேயன் படகோட்டிகளின் தொகுதியைச் சேர்ந்துகொள்வதன் மூலம் யெகோவாவுக்கு என்னுடைய முழு நேர சேவையின் சிலாக்கியத்தை விரிவுபடுத்திக்கொள்ள அழைக்கப்பட்டிருந்தேன். வான்கூவர் முதல் அலாஸ்கா வரையாக மிகத் தொலைவிலுள்ள மேற்கு கரையில் பிரசங்க வேலையில் பங்குகொள்வதே எங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையாக இருந்தது. பல மைல்தூரம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெரும்பகுதியான கரையோரத்தைக் கொண்டிருந்த இந்தப் பகுதி யெகோவாவை சுறுசுறுப்பாக துதிப்பவர்கள் இல்லாமல் வறண்டு கிடந்தது. பிரின்ஸ் ரூபர்ட் நகரிலிருந்த ராஜ்ய பிரஸ்தாபிகளின் ஒரு சிறிய தொகுதி மாத்திரமே விதிவிலக்காக இருந்தது.
பிரசங்க வேலையை ஆரம்பிக்க நான் ஆவலாயிருந்தேன், ஆகவே ரயிலை விட்டு இறங்கிய உடனே, ஷார்மேயன் படகைக் காணவும் அதன் படகோட்டிகளின் தொகுதியிலிருந்த, ஆர்னி மற்றும் கிறிஸ்டீனா பார்ஸ்டெட்டைச் சந்திக்கவும் செயற்கைத் துறைமுகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். படகில் எவரும் இல்லாததால் நான் புறப்பட்டுவிட்டேன். அந்நாளில் பின்னால் திரும்பி வந்தபோது நான் அதிர்ச்சி அடைந்தேன். சமுத்திரம் வறண்டுபோய்க் கொண்டிருப்பது போல இருந்தது!
ஆனால் சுவாரசியமான இந்த நியமனத்துக்கு வழிவகுத்தது எது?
ஆவிக்குரிய ஒரு பரம்பரைச் சொத்து
ஆவிக்குரிய காரியங்களுக்கான என்னுடைய போற்றுதல் கனடாவில், ஆல்பர்ட்டாவின் சமவெளியிலிருந்த வீட்டில் ஆரம்பமானது. ஜயன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸையிட்டியைச் சேர்ந்த சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவரால் எழுதப்பட்ட ஒரு துண்டுப்பிரதி என் அப்பாவுக்கு கிடைத்தது, இது அவருடைய வாழ்க்கையை வெகுவாக மாற்றிவிட்டது. ஆல்பர்ட்டா, கால்மாரில் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளும் பண்ணைவேலையின் மத்தியிலும் அப்பா தன்னுடைய அயலகத்தாருக்குப் பிரசங்கிக்க ஆரம்பித்தார். அது 1890-களின் ஆரம்ப காலத்தில், நூறு ஆண்டு காலத்துக்கு முன்பாகும்.
கடவுள் பயமுள்ள இந்தக் குடும்பத்தில்தான் நான் எட்டாவது பிள்ளையாக 1905, பிப்ரவரி 20-ம் தேதி பிறந்தேன், கடைசியாக நாங்கள் பத்து சகோதர சகோதரிகளாக ஆனோம். அப்பாவும், ஸ்வீடன் நாட்டவரில் இன்னும் மற்றவர்களும் சர்வதேச பைபிள் மாணாக்கர்களோடு கூட்டுறவுக் கொள்ள ஆரம்பித்தார்கள். காலப்போக்கில், பின்னால் இராஜ்ய மன்றம் என்றழைக்கப்பட்ட கூடுமிடம் ஒன்றையும் அவர்கள் கட்டினார்கள். கனடாவில் அதுவே முதலாவதாகும்.
பண்ணை வேலை கிறிஸ்தவ கூட்டங்களுக்கு நாங்கள் செல்வதற்கு ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. இந்தக் கூட்டங்கள் சிலவற்றில் உவாட்ச் டவர் சொஸையிட்டியால் அனுப்பப்பட்ட பேச்சாளர்களின் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இந்தப் பேச்சுக்கள், பிரசங்க வேலையில் பங்குகொள்வதற்கு ஊக்கமான ஓர் ஆசையை எங்களில் வளர்த்தன. இதன் விளைவாக, ஏறக்குறைய எங்களுடைய குடும்பத்திலுள்ள அனைவருமே பைபிள் சத்தியத்தின் வெளிச்சத்தில் உறுதியாக நடந்துவந்திருக்கிறோம்.
பிரசங்க வேலையில் பங்குகொள்வது
நான் 1920-களின் ஆரம்பத்தில் என்னுடைய முதல் சாட்சிகொடுக்கும் நியமனத்தைப் பெற்றேன். எட்மன்டன் நகரில் வீட்டுக்கு வீடு சென்று பொதுப்பேச்சுக்கான அழைப்பிதழ்களை நான் விநியோகிக்க வேண்டும். அன்று, தனிமையில் நான் நின்றுகொண்டிருந்தபோது, விலைமதிப்புள்ள ஒரு பாடத்தை நான் கற்றுக்கொண்டேன்: யெகோவாவில் நம்பிக்கையாயிரு. (நீதிமொழிகள் 3:5, 6) யெகோவாவின் உதவியோடு அந்த முதல் நியமிப்பை நிறைவேற்றுவதற்கு நான் எத்தனை மகிழ்ச்சியுள்ளவனாய் இருந்தேன்!
சத்திய வார்த்தையின் பேரில் அதிகமான புரிந்துகொள்ளுதல் அளிக்கப்பட்டபோது, யெகோவாவின் காணக்கூடிய அமைப்பிலும் அவருடைய உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பிலும் எனக்கிருந்த நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்தது. கிறிஸ்மஸ் மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற கிறிஸ்தவமண்டலத்தின் அநேக பழக்க வழக்கங்கள் கைவிடப்பட்டன. தனிப்பட்ட இரட்சிப்பு இனிமேலும் அதிக அக்கறைக்குரியதாக இருக்கவில்லை; மாறாக, ராஜ்ய பிரசங்கிப்புக்கு சரியான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் என்னுடைய வாழ்க்கையின் மீது ஆழமான பாதிப்புடையதாயிருந்தன. ஆகவே, 1923 ஏப்ரல் 23-ல் யெகோவாவுக்கு என்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த உடனேயே, முழு நேர ஊழியத்தை என்னுடைய இலக்காக ஆக்கிக்கொண்டேன்.
பரந்த புல் வெளியில் குளிர்காலங்களில் பூஜ்யத்துக்கும் குறைவான வெப்பத்தின் போது, நாங்கள் கிராமப்புறங்களில், குதிரை வண்டிகளில் சென்று சாட்சிகொடுத்தோம். ஒரு சமயம் மோட்டார் வண்டி வீடு என்றழைக்கப்படும் ஒன்றில் ஒரு தொகுதியோடு நான் இரண்டு வாரங்களைக் கழித்தேன். கனடாவிலுள்ள திறந்த வெளிகளில் பரந்தகன்ற அடைப்பில்லாத இடங்களில் சாட்சிகொடுப்பதற்கு இந்த விசேஷித்த கார்கள் நடைமுறையில் பயனுள்ளவையாக இருந்தன. பணப் பிரச்சினைகள், கடுமையான சீதோஷ்ண நிலைகள், பயணப்படுவதற்கு தொலைத் தூரங்கள் ஆகியவற்றின் மத்தியிலும் சுமார் மூன்று ஆண்டுகள் வரையாக ஆல்பர்ட்டாவில் அவ்வப்போது பயனியர் ஊழியத்தில் விடாமுயற்சியுடன் சமாளித்தேன். 1930-ல் மறக்க முடியாத அந்த நாளில் பசிபிக் மேற்கு கரையில் சேவை செய்வதற்கு நான் அழைக்கப்பட்ட சமயம் வரையாக அவ்விதமாகச் செய்தேன். சமுத்திரத்தையோ படகுகளையோ பற்றி எனக்கு ஒன்றும் தெரியாமல் இருந்ததால் அந்த அழைப்பு எனக்கு மலைப்பாக இருந்தது.
ஆம், பிரின்ஸ் ரூபர்ட்டில் நான் வந்திறங்கியதற்கு பின் விரைவிலேயே, படகில் என்னுடைய புதிய உடன் வேலையாட்களோடு நான் செளகரியமாக உணர்ந்தேன். அநேக வருடங்கள் மீன்பிடிக்கும் வியாபாரத்தில் இருந்த சகோதரர் பார்ஸ்டட் ஒரு பக்குவப்பட்ட மாலுமியாக இருந்தார். அடுத்து வந்த ஆறு வருடங்கள் வான்கூவர் முதல் அலாஸ்கா வரையாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் கரையோர தண்ணீர்களில் போய் வந்துகொண்டு தீவிரமாக பிரசங்கித்த ஒரு காலப்பகுதியாக இருந்தது. கற்றுக்கொண்ட மற்றொரு பாடம்: யெகோவாவிடமிருந்து வரும் ஒரு வேலை நியமனத்தை எப்பொழுதும் ஏற்றுக்கொள், ஒருபோதும் தயங்காதே.
சமுத்திரத்தின் பக்கத்தில் விதை விதைத்தல்
அந்த 1930-ன் வசந்த காலத்தில் நாங்கள் சந்தித்த முதல் துறைமுகம் அலாஸ்காவிலுள்ள கெட்சிக்கனாகும். அங்கே 60 அட்டைப் பெட்டிகள் பைபிள் இலக்கியங்களைக் கப்பலில் ஏற்றினோம். பல வாரங்களாக, கெட்சிக்கன், ராநெல், பீட்டர்ஸ்பர்க், ஜூனோ, ஸ்காக்வா, ஹேன்ஸ், சிட்காவிலுள்ள எல்லா வீடுகளையும் அங்குமிங்குமாக இருந்த குடியிருப்புகளையும் சந்தித்தோம். அடுத்து, கோடைக்காலத்தின் முடிவுக்கு முன்பாகவே, முழு பிரிட்டிஷ் கொலம்பியா கரையிலுள்ள மக்களுக்குப் பிரசங்கித்து முடித்துவிட்டோம். ஒதுக்கமாயிருந்த மரக்கட்டைகளை வெட்டும் வேலைசெய்பவர்கள் குடியிருக்கும் இடம், மீன் பதனிடுவோர் தங்குமிடம், இந்திய கிராமங்கள், சிறிய பட்டணங்கள், ஒதுக்கமான இடங்களில் குடியேறியவர்கள் மற்றும் வலைவாணர்களும்கூட சந்திக்கப்பட்டனர். சிலசமயங்களில், எவருடனாவது பேசிக்கொண்டிருப்பதை விரும்பி வரவேற்கும் தனிமையில் வாழும் கலங்கரை விளக்க காவலரிடமிருந்து புறப்பட்டு வருவது கடினமாக இருந்தது.
கடைசியில், சங்கம் எங்களுக்கு கையடக்கமான ஒலிக்கருவிகளையும் பதிவுசெய்யப்பட்ட பைபிள் சொற்பொழிவுகளையும் கொடுத்து உதவியது. புத்தகங்கள், பைபிள்கள் மற்றும் பத்திரிகைகளோடுகூட இவற்றை எங்களோடு எடுத்துச்சென்றோம். அடிக்கடி கடற்கரையோர பாறைகள் மீது நாங்கள் தட்டித் தடவி ஏறிச்செல்கையில் இவற்றை எங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியதாக இருந்தது. உச்ச உயர் அளவில் கடல் அலை பின்வாங்கும்போது, ஆட்டங்கொடுக்கும் ஏணிகளின்மீது கஷ்டப்பட்டு ஏற்றி உயரமான சரக்கேற்றி இறக்கும் மேடையில் இறக்க வேண்டும். திறந்தவெளி பண்ணை வீட்டில் வேலைசெய்யும்போது நான் இளமையில் பெற்றுக்கொண்ட உடல் பயிற்சிக்காக சந்தோஷமுள்ளவனாக இருந்தேன்.
எங்களுடைய படகில் இருந்த ஒலிபெருக்கி அமைப்பு, ராஜ்ய செய்தியை பரப்புவதில் சக்திவாய்ந்த ஒரு கருவியாக இருந்தது. ஒலி அலைகள் தண்ணீரில் எதிரொலித்த காரணத்தால், பதிவுசெய்யப்பட்ட சொற்பொழிவுகள் அநேகமாக பல மைல் தொலைவுவரையாக கேட்டன. வான்கூவர் தீவில் தனித்திருந்த ஒரு வளைவிடத்தில் நங்கூரமிட்டு கப்பலை நிறுத்தி வைத்திருந்தபோது, இந்தப் பைபிள் சொற்பொழிவுகளில் ஒன்றை நாங்கள் போட்டோம். அடுத்த நாள் உள்நாட்டில் வசித்துவந்த மக்கள் கிளர்ச்சியடைந்தவர்களாக எங்களிடம் இவ்வாறு சொன்னார்கள்: “நேற்று நேரடியாக பரலோகத்திலிருந்தே ஒரு பிரசங்கத்தை நாங்கள் கேட்டோம்!”
மற்றொரு சந்தர்ப்பத்தில் வயதான ஒரு தம்பதி, தங்கள் புகைப்போக்கி வழியாக இசை கீழிறங்கி வருவதைக் கேட்டதாகவும், ஆனால் வெளியே வந்தபோது, அவர்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை என்றும் சொன்னார்கள். உள்ளே திரும்பிவந்தபோது, அவர்களுக்கு ஒரு குரல் கேட்டது. ஏன் அப்படி? ஆம், அவர்கள் வெளியே இருந்த சமயத்தில் நாங்கள் இசைத்தட்டை மாற்றிக்கொண்டிருந்தோம். முதலில் மக்களுடைய கவனத்தைக் கவருவதற்காக நாங்கள் இசையை போட்டு பின்னர் பைபிள் சொற்பொழிவை போடுவோம்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், இந்திய கிராமத்தைக் கொண்ட ஒரு தீவில் நாங்கள் நங்கூரமிட்டு நின்றுகொண்டிருந்தபோது, குரல்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் காண்பதற்கு படகில் இரண்டு உள்ளூர் பையன்கள் வந்தனர். தீவில் இருந்த சிலர், மரித்துவிட்டிருந்த தங்களுடையவர்கள் உயிர்பெற்று பேசுவதாக எண்ணினர்!
ஒதுக்கமாயுள்ள மீன் பதனிடும் தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்களிடம் நாளொன்றுக்கு நூறு புத்தகங்களை அளிப்பது வழக்கத்துக்கு மாறாக இருக்கவில்லை. கவனத்தைச் சிதறடிப்பதற்கு எதுவும் இல்லாததால், ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரமிருந்தது. கடைசியில் ஒதுக்கமாக இருந்த இவர்களில் அநேகர் சாட்சிகளானார்கள். அதைத் தொடர்ந்துவந்த பயணங்களில், ‘உற்சாகப் பரிமாற்றத்துக்காக’ அவர்களைச் சந்திப்பதை எதிர்நோக்கியிருந்தோம்.—ரோமர் 1:12.
ஒரு துணையோடு சேவையைத் தொடர்ந்தேன்
1931-ல் கிறிஸ்டீனா பார்ஸ்டெட்டின் தங்கை ஆனாவை நான் திருமணம் செய்துகொண்டேன். அதற்குப் பின்பு நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து படகில் பயனியர் ஊழியம் செய்து, ஆண்டுகளினூடே அநேக பலன்தரும் அனுபவங்களை அனுபவித்து மகிழ்ந்தோம். தேவதாரு, ஊசி இலை மரம் மற்றும் கட்டட வேலைக்குப் பயன்படும் உயரமான இலையுதிர்க்கா இராட்சத மரங்களையுடைய காடுகளைக் கொண்ட கம்பீரமான மலைகள், ஒதுங்கிய கடற்கூம்புகள், மற்றும் பாதுகாப்பான அமைதியான விரிகுடாக்களின் பின்னணியில் திமிங்கலங்களும் மென்மயிருடைய கடல்நாய்களும், கடல்பன்றிகளும் மான்களும் கரடிகளும் எங்கள் தோழர்களாக இருந்தனர். பிறவிலங்குகளைக் கொன்றுதின்பவைகளிடமிருந்து தப்பிக்க, வேமாகச் செல்லும் கடற்கால்வாயின் குறுக்காக நீந்த முயற்சித்து களைப்படைந்துவிடும் மான்களுக்கும் அவற்றின் குட்டிகளுக்கும் நாங்கள் பலமுறை உதவியிருக்கிறோம்.
ஒரு நாள் பிற்பகலில் கழுகு ஒன்று தண்ணீருக்கு குறுக்கே தாழ்வாகப் பறந்துகொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம், அதன் கூர்மையான நகம், ஒரு பெரிய வஞ்சிரமீனை உறுதியாக பற்றிக்கொண்டிருந்தது. தண்ணீரிலிருந்து முழுவதுமாக மேலே தூக்குவதற்கு அந்த மீன் மிகப் பெரியதாக இருந்த காரணத்தால், கழுகு வஞ்சிரமீனை இழுத்துக்கொண்டே கரைநோக்கி வந்துகொண்டிருந்தது. படகோட்டிகளின் தொகுதியிலுள்ள ஒருவரான ஃபிராங்க் ஃபிரான்சிகி, சாத்தியத்தை உணர்ந்தவராக களைப்பாக வந்துகொண்டிருந்த கழுகைச் சந்திக்க கரையோரமாக ஓடி அதன் பிடிப்பைக் கைவிடுமாறு அதை சம்மதிக்க வைத்தார். அன்று மாலை எங்களுடைய பயனியர் படகோட்டிகளின் தொகுதி, சுவையான வஞ்சிரமீன் சாப்பாட்டை அனுபவித்தது, தயக்கத்தோடிருந்த போதிலும் கழுகு பகிர்ந்து சாப்பிட கற்றுக்கொண்டது.
வான்கூவர் தீவின் வடக்கு முனையிலுள்ள ஒரு சிறு தீவில், தியோட் என்ற பெயருடைய ஒரு தம்பதி பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். கணவன் படிப்பறிவில்லாதவராக, ஊக்கமான விருப்பமுடையவராக, சுயேச்சையாக வாழ்பவராக இருந்தார். அவர் 90-களின் மத்தியிலும் அவருடைய மனைவி 80-களின் மத்தியிலும் இருந்தனர். என்றபோதிலும், சத்தியத்தில் அவர் அவ்வளவு அக்கறையுடையவராக இருந்தபடியால், தன்னைத்தானே தாழ்த்தி தனக்கு வாசிக்க கற்றுக்கொடுப்பதற்கு தன் மனைவியை அனுமதித்தார். விரைவில் அவரால் பைபிளையும் சங்கத்தின் பிரசுரங்களையும் படிக்க முடிந்தது. மூன்றுக்கும் குறைவான ஆண்டுகளுக்குப் பின்னர், என்னுடைய துடுப்புப் படகை ஒரு முழுக்காட்டுதல் தொட்டியாக பயன்படுத்தி அவர்கள் இருவருக்கும் ஒதுக்கமாயிருந்த அவர்களுடைய சொந்த தீவில் அவர்களை முழுக்காட்டும் சந்தோஷத்தை நான் பெற்றேன்!
பெளவெல் ரிவரிலுள்ள சாலிஸ் குடும்பத்தாரும் ராஜ்ய செய்திக்குப் பிரதிபலிப்பதைக் காணும் சந்தோஷத்தையும் நாங்கள் பெற்றோம். வால்டர், யுத்தமா சமாதானமா—எது? (War or Peace—Which?) என்ற சிறுபுத்தகத்தை வாசித்து, அதில் அடங்கியிருந்தது சத்தியம் என்பதை உடனடியாக உணர்ந்துகொண்டார். விரைவில் வான்கூவரில் முழு குடும்பத்தினரும் வால்டரோடு பயனியர் அணியைச் சேர்ந்துகொண்டனர். அங்கே குளிர்காலத்தில் ஷார்மேயன்-ஐ நாங்கள் நங்கூரமிட்டு நிறுத்திவிடுவோம். அவர் மிகவும் வைராக்கியமுள்ளவராக நிரூபித்து, ஆண்டுகளினூடே வான்கூவர் பகுதியிலுள்ள சகோதரர்களின் முழு கூட்டுறவோடும் மிகவும் பிரியமாயிருந்தார். அவர் தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை 1976-ல் முடித்து, சாட்சிகளடங்கிய ஒரு பெரிய குடும்பத்தை விட்டுச் சென்றார்.
எதிர்ப்பை மேற்கொள்ளுதல்
இந்திய கிராமங்களிலிருந்த மதகுருமார் எங்களுடைய வேலையினால் அடிக்கடி ஆத்திரமடைந்து எங்களை அவர்களுடைய ஆவிக்குரிய அதிகார எல்லையில் கள்ளவேட்டைக்காரர்களாக கருதினார்கள். போர்ட் சிம்ப்ஸனில், உள்ளூர் மதகுரு, நாங்கள் வீடுகளுக்குச் செல்வதைத் தடைசெய்யும்படி கிராமத் தலைவரைக் கேட்டுக்கொண்டார். நாங்கள் தலைவரோடு தொடர்புகொண்டு அவருடைய மக்கள் தங்கள் சொந்தத் தீர்மானங்களைச் செய்யமுடியாதபடி அத்தனை அறியாமையுள்ளவர்களாக மதகுரு அவர்களை வகைப்படுத்தியது சரியா என்பதாக கேட்போம். கடவுளுடைய வார்த்தையின் கலந்துரையாடலைக் கேட்டு அவர்கள் நம்ப விரும்புவதை அவர்கள்தாமே தீர்மானிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவேண்டும் என்று நாங்கள் ஆலோசனை கூறினோம். விளைவு: கிராமத்தில் தொடர்ந்து பிரசங்கிக்க அவர் அனுமதி அளித்தார்.
மற்றொரு கிராமத் தலைவர், சாட்சிகள் மக்களோடு தொடர்புகொள்வதைத் தடைசெய்வதற்கு மன்ற உறுப்பினர் குழுவும் மத தொகுதிகளும் செய்த எல்லா முயற்சிகளையும் பல பத்தாண்டுகளாக முறியடித்துவந்திருக்கிறார். “நான் தலைவராக இருக்கும்வரை, யெகோவாவின் சாட்சிகள் இங்கே வரவேற்கப்படுவார்கள்,” என்பதாக அவர் சொன்னார். உண்மைதான், நாங்கள் எப்பொழுதும், எல்லா இடங்களிலும் வரவேற்கப்படவில்லை, ஆனால், எதிர்ப்பின் மத்தியிலும் நாங்கள் ஒரு பகுதியைவிட்டு செல்லும்படியாக ஒருபோதும் கட்டாயப்படுத்தப்பட்டதில்லை. ஆகவே நாங்கள் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்திய ஒவ்வொரு சமயமும் எங்களுடைய ஊழியத்தை எங்களால் நிறைவேற்ற முடிந்தது.
சமுத்திரத்தில் இடர்ப்பாடுகளைச் சகித்தல்
ஆண்டுகளினூடாக, புயல் காற்றுகள், கொந்தளிப்புகள், நன்கு அறியப்படாத பாறைகள், சில சமயங்களில் இயந்திர கோளாறுகளினால் நாங்கள் கஷ்டங்களை எதிர்ப்பட்டிருக்கிறோம். ஒருசமயம் வான்கூவருக்கு வடக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவு லாஸ்கெட்டித் தீவுக்கு வெகு அருகாமைக்கு காற்றில் இழுத்துச் செல்லப்பட்டதால், அங்கே கடல் நீரடிப்பாறையின் மீது நீரோட்டத்தால் கொண்டுசெல்லப்பட்டு வானிலையின் தயவுக்காக காத்திருந்தோம். வானிலை மோசமாகியிருந்தால், படகு பாறையின்மீது துண்டு துண்டாக உடைந்து நொறுங்கிப் போய் இருக்கும். நாங்கள் பாறையின்மீது தொற்றிக்கொண்டு மோசமான சூழ்நிலையில் எங்களால் இயன்ற மிகச் சிறந்ததைச் செய்தோம். நாங்கள் மதிய உணவு அருந்தி, படிப்பதில் கொஞ்சம் நேரத்தை செலவழித்து அலையின் எழுச்சிக்காக காத்திருந்தோம்.
அநேக ஆபத்துக்கள் மற்றும் அசெளகரியங்களின் மத்தியிலும், அது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருந்தது. எங்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தபோது அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நாங்கள் தொடர்ந்து படகில் வாழ்ந்து வந்தோம், ஆனால் வடக்கே நெடுந்தொலைவில் யூனா நதிவரையாக நாங்கள் கடற்பயணம் செய்தபோது, ஆனாவும் பையன்களும் அவளுடைய பெற்றோருடன் தங்கினார்கள், மீதமுள்ள நாங்கள் வடக்கே அலாஸ்காவுக்கு மிகத்தொலைவில் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். பின்னர், தெற்கே நாங்கள் திரும்பி வந்தபோது, ஆனாவும் பிள்ளைகளும் எங்களைச் சேர்ந்துகொண்டார்கள்.
பிள்ளைகள் ஒருபோதும் குறைகூறினதோ வியாதிப்பட்டதோ எனக்கு நினைவில்லை. அவர்கள் எப்போதும் மிதவைக் கச்சையை அணிந்துகொண்டிருந்தார்கள், சில சமயங்களில் நாங்கள் அவர்களைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டிவிடுவதும் உண்டு. ஆம், சில பதற்றமான நேரங்கள் இருந்திருக்கின்றன.
கூடுதலான சரிப்படுத்தல்கள்
நாங்கள் 1936-ல் ஷார்மேயன்-ஐ விட்டுவிட வேண்டியதாயிற்று, நான் உலகப்பிரகாரமான ஒரு வேலையில் சேர்ந்தேன். பின்னால் எங்களுக்கு மூன்றாவது மகன் பிறந்தான். காலப்போக்கில், நான் மீன்பிடிக்கும் படகு ஒன்றை வாங்கினேன், இது பிழைப்புக்காக மாத்திரமல்லாமல் கரையோரமாக பிரசங்கவேலையைத் தொடர்ந்து செய்யவும் எங்களை அனுமதித்தது.
பிரின்ஸ் ரூபர்ட்டிலிருந்து வளைகுடாவுக்கு குறுக்கே டிக்பைத் தீவில் நாங்கள் ஒரு வீட்டை அமைத்துக்கொண்டோம், சீக்கிரத்தில் அங்கு சிறிய ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், கனடாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டிருந்தபோது, நாங்கள் நள்ளிரவுக்குப் பின் படகை பிரின்ஸ் ரூபர்ட்டுக்கு கொண்டுசென்று ஒவ்வொரு வீட்டிலும் இலக்கியத்தை விட்டுவிட்டு பிராந்தியத்தைத் ‘தாக்குவோம்.’ நள்ளிரவில் நாங்கள் கடந்துசென்றதையும் தடைசெய்யப்பட்ட இலக்கிய விநியோகத்தையும் எவரும் ஒருபோதும் சம்பந்தப்படுத்திப் பார்க்கவில்லை!
அந்தத் தேசம் வளமுள்ளதாயிற்று
படிப்படியாக அதிகமதிகமாக ஆட்கள் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுக்கொள்ள ஆரம்பித்தனர், 1948-ல் பிரின்ஸ் ரூபர்ட்டில் ஒரு ராஜ்ய மன்றம் தேவை என்பது தெளிவாக இருந்தது. துறைமுகத்துக்கு குறுக்கே அமைந்திருந்த இராணுவ கட்டடத்தை வாங்கிய பின்னர், நாங்கள் அதை பிரித்து, குறுக்கே மிதவை அமைத்து, அதை கட்டட இடத்துக்கு கட்டை வண்டியில் எடுத்துச் சென்றோம். யெகோவா எங்களுடைய கடினமான வேலையை ஆசீர்வதித்தார், நாங்கள் எங்களுடைய சொந்த ராஜ்ய மன்றத்தைக் கொண்டிருந்தோம்.
நான் 1956-ல் பயனியர் அணியை மீண்டும் சேர்ந்துகொண்டேன், 1964-ல் ஆனா என்னைச் சேர்ந்துகொண்டாள். நாங்கள் மறுபடியுமாக பசிபிக் கரையோரமாக படகில் ஊழியம் செய்துவந்தோம். கொஞ்சக் காலம் நாங்கள் வட்டார வேலையிலும்கூட பங்குகொண்டோம், கிழக்கே க்வீன் சார்லெட் தீவுகளில் ஆரம்பித்து மலைகளின் குறுக்கே ஃபரேஸர் ஆறு வரையாகவும் பின்னர் பிரின்ஸ் ஜார்ஜ் மற்றும் மெக்கென்ஸி வரையாகவும் நாங்கள் சபைகளைச் சந்தித்தோம். ஆண்டுகளினூடாக, காரிலும் படகிலும் விமானத்திலும் பசிபிக் வடமேற்கு முழுவதிலுமாக ஆயிரக்கணக்கான மைல்கள் நாங்கள் பயணம் செய்திருக்கிறோம்.
பிரின்ஸ் ரூபர்ட்டில் நாங்கள் தொடர்ந்து ஊழியத்தில் நேர்த்தியான அனுபவங்களை மகிழ்ந்து அனுபவித்து வந்திருக்கிறோம். ஆனாவிடமும் என்னிடமும் பைபிள் படித்த ஆட்கள் பின்னர் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளிக்குச் சென்று பின்னர் அந்நிய நாடுகளில் மிஷனரிகளாக சேவை செய்திருக்கிறார்கள். நம்முடைய ஆவிக்குரிய பிள்ளைகள் விலைமதிப்புள்ள ராஜ்ய செய்தியைத் தூர தேசங்களுக்கு எடுத்துச்செல்வதைக் காண்பது என்னே ஒரு சந்தோஷம்!
இப்பொழுது நாங்கள் இருவருமே 80 வயதைக் கடந்துவிட்டவர்களாக, மோசமாகிவரும் உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளித்து வருகிறோம், ஆனாலும் யெகோவாவின் சேவையில் இன்னும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். அலாஸ்காவிலும் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் நாங்கள் பார்த்திருக்கும் இயற்கை அழகு அருமையான பழைய நினைவுகளை மனதுக்குக் கொண்டுவருகிறது. என்றாலும் ஒரு சமயம் ஆவிக்குரிய பாலைவனமாக இருந்த இந்த மிகப் பெரிய பிராந்தியம் இப்பொழுது யெகோவாவைத் துதிப்பவர்களைக் கொண்ட அநேக சபைகளால் பூத்திருப்பதைக் காண்பது இன்னும் அதிகமான சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது.
விசேஷமாக எங்கள் சொந்த பிள்ளைகளும் ஆவிக்குரிய பிள்ளைகளும் வளர்ந்து யெகோவாவை ஸ்தோத்திரிப்பதைக் காண்பது எங்களை மகிழ்ச்சியாக உணரச்செய்திருக்கிறது. பூமியின் இந்தப் பகுதியின் ஆவிக்குரிய வளர்ச்சியில் ஒரு சிறிய பங்கைக் கொண்டிருந்தமைக்காக நாங்கள் களிகூருகிறோம். உதாரணமாக, அலாஸ்கா இப்பொழுது 25-க்கும் மேற்பட்ட சபைகளின் வேலையை ஒத்திசைவிக்கும் தன்னுடைய சொந்த கிளைக்காரியாலயத்தைக் கொண்டிருக்கிறது.
இங்கே பிரின்ஸ் ரூபர்ட்டில் 1988-ல் நகரத்தின் மையப் பகுதியில் அழகான ஓர் இராஜ்ய மன்றத்தை பிரதிஷ்டைச் செய்யும் சிலாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. ஆம், ஏசாயாவைப் போலவே நாங்கள் களிகூருகிறோம்: “கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தீர்.”—ஏசாயா 26:15.
[பக்கம் 21-ன் படம்]
1964-67-ல் வட்டார வேலையில் ஊழியம் செய்தல்
[பக்கம் 24-ன் படம்]
கடற்கரையோரமாக ஊழியம்செய்ய பயன்படுத்திய படகு