வாழ்க்கை சரிதை
யெகோவாவை தெய்வமாகக் கொண்டவர் சந்தோஷமுள்ளவர்
டாம் டிடர் சொன்னபடி
கம்யூனிட்டி ஹால் ஏற்கெனவே வாடகைக்கு எடுத்தாகி விட்டது. கனடாவில், சஸ்காட்செவனிலுள்ள பார்குபைன் ப்ளேனில் ஏற்பாடு செய்யப்பட்ட அசெம்பிளிக்கு சுமார் 300 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதன் கிழமையே பனி பெய்ய ஆரம்பித்து விட்டது. வெள்ளிக் கிழமைக்குள்ளாக கண்ணே தெரியாதளவுக்கு பயங்கர பனிப்புயல். வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே 40°C-ஆக குறைந்து விட்டது. பிள்ளைகள் சிலரைச் சேர்த்து மொத்தம் இருபத்தெட்டு பேரே அங்கு ஆஜராகி இருந்தனர். ஒரு புது வட்டார கண்காணியாக அதுதான் என்னுடைய முதல் அசெம்பிளி என்பதால் மிகவும் பயந்து நடுங்கினேன். அப்போது எனக்கு 25 வயது. அந்த அசெம்பிளியில் என்ன நடந்தது என்பதை சொல்வதற்கு முன்பாக இந்த விசேஷித்த ஊழிய சிலாக்கியம் எனக்கு எப்படி கிடைத்தது என்பதை சொல்கிறேன்.
எட்டு பிள்ளைகளில் நான் ஏழாவது, எல்லாருமே பையன்கள். பில், மெட்ரோ, ஜான், ஃப்ரெட், மைக், அலெக்ஸ்—இவர்கள் எல்லாரும் என் அண்ணன்மார்கள். நான் 1925-ல் பிறந்தேன். என் தம்பியின் பெயர் வாலி. அப்பாவின் பெயர் மைக்கல் டிடர், அம்மாவின் பெயர் அன்னா டிடர். மானிடோபா மாகாணத்திலுள்ள ஊக்ரேனா என்ற டவுனுக்கு அருகில் எங்கள் பெற்றோருக்கு ஒரு சிறிய பண்ணை இருந்தது; அங்கே நாங்கள் வாழ்ந்து வந்தோம். அப்பா ரயில்வேயில் செக்ஷன் மேனாக வேலை பார்த்து வந்தார். ரயில்வே செக்ஷன் மேனுக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் கொடுக்கப்பட்ட தங்குமிடம் (bunkhouse) எங்களுடைய பெரிய குடும்பத்திற்கு போதாததால், நாங்கள் பண்ணையிலேயே குடியிருந்தோம். அப்பா பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை, அதனால் எங்களை எல்லாம் வளர்க்க வேண்டிய பொறுப்பு அம்மாவுக்குதான். இடையிடையே ஒரு வாரத்திற்கோ அல்லது அதற்கும் அதிகமான நாட்களுக்கோ அப்பாவைப் பார்த்துவர அம்மா செல்வார்கள். ஆனால் சமைப்பதற்கும் ரொட்டி தயாரிப்பதற்கும் வீட்டு வேலைகளை செய்வதற்கும் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டுதான் செல்வார்கள். நாங்கள் கிரேக்க கத்தோலிக்க சர்ச்சின் அங்கத்தினர்களாக இருந்ததால், ஜெபங்களை மனப்பாடம் செய்வதற்கும் சர்ச்சின் பிற சடங்காச்சாரங்களில் ஈடுபடுவதற்கும் ஆரம்பத்தில் அம்மா எங்களை பழக்கினார்கள்.
பைபிள் சத்தியத்தைக் கண்டடைதல்
பைபிளைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்ற என் ஆசை சின்ன வயதிலேயே தூண்டிவிடப்பட்டது. அருகில் வசித்த யெகோவாவின் சாட்சி ஒருவர் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து, கடவுளுடைய ராஜ்யம், அர்மகெதோன், புதிய உலகின் ஆசீர்வாதங்கள் ஆகியவற்றைப் பற்றி குறிப்பிடும் பைபிள் பகுதிகளை வாசித்துக் காட்டுவார். அவர் சொன்ன விஷயங்களுக்கு அம்மா துளியும் அக்கறை காட்டவில்லை, ஆனால் மைக்கும் அலெக்ஸும் அந்த செய்தியை விரும்பிக் கேட்டார்கள். சொல்லப்போனால், இரண்டாம் உலகப் போரின் போது மத காரணங்களுக்காக ராணுவ சேவையில் ஈடுபட மறுப்பதற்கு அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களே அவர்களைத் தூண்டின. இதன் விளைவாக, மைக்குக்கு ஒரு குறுகிய காலத்திற்கு சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் அலெக்ஸோ, ஒன்டாரியோவிலுள்ள கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். கடைசியில் ஃப்ரெட்டும் வாலியும்கூட சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், என்னுடைய முதல் மூன்று அண்ணன்மார்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. பல வருஷங்களாக சத்தியத்திற்கு எதிர்ப்பு காட்டி வந்த அம்மாவும்கூட கடைசியில் யெகோவாவின் சார்பாக நிலைநிற்கை எடுத்தார்கள். அது எங்கள் எல்லாரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அம்மா 83 வயதில் முழுக்காட்டுதல் பெற்றார்கள். 96-ஆம் வயதில் இறந்துவிட்டார்கள். அப்பாவும்கூட மரிப்பதற்கு முன்பாக சத்தியத்திற்கு ஆதரவு காட்டினார்கள்.
என்னுடைய 17-ஆம் வயதில், வேலை தேடுவதற்காகவும் பைபிளை படிக்க உதவி செய்கிறவர்களோடு கூட்டுறவு கொள்வதற்காகவும் வின்னிபெக் என்ற நகருக்கு சென்றேன். அந்த சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடை செய்யப்பட்டிருந்தது, ஆனால் கூட்டங்கள் மட்டும் தவறாமல் நடைபெற்றன. நான் முதன்முதலாக கலந்துகொண்ட அந்தக் கூட்டம் ஒருவருடைய வீட்டில்தான் நடைபெற்றது. நான் கிரேக்க கத்தோலிக்க மதப் பின்னணியில் வளர்க்கப்பட்டதால், ஆரம்பத்தில் நான் கேட்ட காரியங்கள் எல்லாமே விநோதமாக தொனித்தது. இருந்தாலும், குருமார்-பாமரர் என்ற வகுப்பு பாகுபாடு ஏன் வேதப்பூர்வமற்றது, போர் முயற்சிகளுக்கு குருக்கள் தங்கள் ஆசியை தெரிவிப்பதை கடவுள் ஏன் அங்கீகரிப்பதில்லை போன்ற காரியங்களை நான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டேன். (ஏசாயா 2:4; மத்தேயு 23:8-10; ரோமர் 12:17, 18) நித்தியத்திற்குமாக எங்கோ ஒரு தூர இடத்திற்கு செல்வதற்கு பதிலாக இந்த பூமியில் பரதீஸான நிலைமையில் வாழ்வது நடைமுறைக்கு நன்கு ஒத்துவருவதாகவும் நியாயமானதாகவும் எனக்கு பட்டது.
இதுதான் சத்தியம் என்பது உறுதியானதும், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து 1942-ல் வின்னிபெக்கில் நான் முழுக்காட்டுதல் பெற்றேன். 1943-ல் கனடாவில் யெகோவாவின் சாட்சிகள் மீது போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது, அதனால் பிரசங்க வேலை சூடுபிடித்தது. பைபிள் சத்தியம் என் இதயத்தில் ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சபை ஊழியராக சேவை செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றேன். அதோடு பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் கலந்துகொள்வது, நியமிக்கப்படாத பிராந்தியங்களில் வேலை செய்வது போன்ற சிலாக்கியங்களையும் பெற்றேன். ஐக்கிய மாகாணங்களில் நடைபெற்ற பெரிய மாநாடுகளில் கலந்துகொண்டது என் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எந்தளவுக்கு பங்களித்தது என சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.
யெகோவாவுக்கு செய்யும் சேவையை அதிகரித்தல்
1950-ல் பயனியர் சேவை செய்பவர்கள் அணியில் நானும் சேர்ந்துகொண்டேன். அந்த வருஷம் டிசம்பர் மாதத்தில் வட்டார கண்காணியாக சேவை செய்வதற்கு நான் அழைக்கப்பட்டேன். வட்டார கண்காணிகளுக்கு முறைப்படி கொடுக்கப்படும் பயிற்சியை பெறும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. டோரான்டோவுக்கு அருகேயுள்ள வட்டாரத்தில், சார்லி ஹெப்வர்த் என்ற சகோதரரே எனக்கு பயிற்சி அளித்தார்; அவர் அனுபவமிக்க, உண்மையுள்ள சகோதரர். என்னுடைய பயிற்சி காலத்தின் இறுதி வாரத்தை என் அண்ணன் அலெக்ஸோடு செலவழித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. வின்னிபெக்கில் அவர் ஏற்கெனவே வட்டார கண்காணியாக சேவை செய்துகொண்டிருந்தார்.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட என்னுடைய முதல் வட்டார மாநாட்டை என்னால் மறக்கவே முடியாது. அந்த மாநாடு எப்படி நடக்கும் என நான் கவலைப்பட்டது உண்மைதான். இருந்தாலும் மாவட்ட கண்காணியாக இருந்த சகோதரர் ஜாக் நேதன் நாங்கள் சுறுசுறுப்பாக காரியங்களை செய்யும்படியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருக்கும்படியும் பார்த்துக்கொண்டார். அங்கு கூடிவந்திருந்தவர்களுக்கு மாநாட்டின் நிகழ்ச்சிநிரலை நாங்கள் சுருக்கமாக விவரித்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி எங்கள் அனுபவங்களை சொன்னோம், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பயன்படுத்தும் பிரசங்கங்களை பேசிப் பழகினோம், மறுசந்திப்புகளை எப்படி நடத்துவது என்பதை சொன்னோம், பைபிள் படிப்புகளை எப்படி நடத்துவது என்பதை நடித்துக் காட்டினோம். நாங்கள் ராஜ்ய பாடல்களைப் பாடினோம். ஏகப்பட்ட சாப்பாடு இருந்தது. இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை நாங்கள் பைகள் (pie) சாப்பிட்டு காபி குடித்தோம். சிலர் பெஞ்சுகளிலும் பிளாட்பாரத்திலும் உறங்கினார்கள், மற்றவர்களோ தரையில் படுத்துக்கொண்டார்கள். ஞாயிற்றுக்கிழமைக்குள் பனிப்புயல் சற்று குறைந்தது, அதனால் பொதுப் பேச்சைக் கேட்க 96 பேர் வந்திருந்தார்கள். கஷ்டமான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்பதை அந்த அனுபவம் எனக்கு கற்றுக்கொடுத்தது.
அடுத்ததாக வடக்கு ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நள்ளிரவிலும் சூரியன் தென்படும் இடமாகிய யுகான் பிராந்தியம் ஆகிய இடங்களுக்கு வட்டார கண்காணியாக நியமிக்கப்பட்டேன். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள டாஸன் க்ரீக்கிலிருந்து யுகானிலுள்ள ஒயிட் ஹார்ஸுக்கு (1,477 கிலோமீட்டர் தூரம்) அலாஸ்காவின் கரடுமுரடான நெடுஞ்சாலை வழியாக பயணிக்கவும் அதே சமயத்தில் வழிநெடுக சாட்சி கொடுத்துக்கொண்டே செல்லவும் வேண்டுமென்றால் அதற்கு பொறுமையும் முன்னெச்சரிக்கையும் வேண்டும். பனிச்சறுக்குகள், வழுக்கலான மலைச் சரிவுகள், பனிக்காற்று அடித்துக்கொண்டிருப்பதால் பாதை தெரியாமல் போதல் இவை எல்லாம் உண்மையில் ஒரு சவாலாகவே இருந்தது.
உலகின் வடகோடிக்கும் சத்தியம் ஊடுருவிச் சென்றிருப்பதைப் பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமயம் வால்டர் லூக்காவிட்ஸும் நானும் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள லோவர் போஸ்ட் கிராமத்திற்கு அருகேயிருந்த அடக்கமான ஒரு சிறிய வீட்டை நெருங்கினோம். அந்த வீடு யுகான் பிராந்தியத்தின் எல்லை அருகே அலாஸ்கா நெடுஞ்சாலை ஓரமாக அமைந்திருந்தது. அந்த வீட்டில் யாரோ குடியிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரிந்தது. ஏனெனில் அதன் சிறிய ஜன்னல் வழியாக மங்கலான வெளிச்சம் தெரிந்தது. இரவு சுமார் ஒன்பது மணி, நாங்கள் கதவைத் தட்டினோம். உள்ளே வரச் சொல்லி ஓர் ஆளின் குரல் கேட்டது, நாங்களும் உள்ளே சென்றோம். என்ன ஆச்சரியம்! வயதான ஒருவர் தன் படுக்கையில் படுத்தவாறே காவற்கோபுர பத்திரிகையை வாசித்துக் கொண்டிருக்கிறார். சொல்லப்போனால், எங்களிடம் இருந்ததைவிட அவர் கையில் இருந்தது அதிக சமீபத்திய பத்திரிகையாகும். ஏர்மெயிலில் இந்த பத்திரிகை கிடைத்ததாக அவர் சொன்னார். இதற்குள் நாங்கள் சபையை விட்டு வந்து எட்டு நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டதால், எங்களிடம் சமீபத்திய பத்திரிகைகள் இருக்கவில்லை. அவர் தன்னுடைய பெயர் ஃப்ரெட் பர்க் என அறிமுகப்படுத்தினார். பல வருடங்களாகவே அவர் இந்தப் பத்திரிகையின் சந்தாதாரராக இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகள் அவரை சந்தித்தது இதுதான் முதல்முறை. இரவு அங்கேயே தங்கும்படி அவர் எங்களிடம் சொன்னார். அதனால், அநேக பைபிள் சத்தியங்களை அவரோடு பகிர்ந்துகொள்ள முடிந்தது. அந்த வழியாக எப்போதும் செல்லும் மற்ற யெகோவாவின் சாட்சிகள் அவரை சென்று சந்திக்கும்படியும் ஏற்பாடு செய்தோம்.
பல ஆண்டுகளாக மூன்று சிறிய வட்டாரங்களில் சேவை செய்தேன். அவை கிழக்கே ஆல்பர்ட்டாவிலுள்ள க்ரான்டி ப்ரெய்ரீ நகரிலிருந்து மேற்கே அலாஸ்காவிலுள்ள கோடியாக் வரை, அதாவது 3,500 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் விரிந்து பரந்திருந்தது.
மற்ற இடங்களைப் போலவே தொலைதூர இடங்களிலும் உள்ள எல்லா மக்களுக்கும் யெகோவா தம் தகுதியற்ற தயவை காட்டுகிறார் என்பதை அருமையான விதத்தில் கற்றுக்கொண்டேன். அதோடு, நித்திய ஜீவனிடமாக சரியான மனச்சாய்வு உடையவர்களின் மனங்களையும் இதயங்களையும் கடவுளுடைய ஆவி தூண்டுகிறது என்பதையும் புரிந்துகொண்டேன். அத்தகைய மனச்சாய்வு உடையவர்தான், யுகானில் இப்போது டாஸன் என அழைக்கப்படும் டாஸன் சிட்டியைச் சேர்ந்த ஹென்றி லபைன். ஹென்றி, ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் வாழ்ந்து வந்தார். சொல்லப்போனால், 60 ஆண்டுகளுக்கு மேலாக அந்தத் தங்கச் சுரங்கப் பகுதியை விட்டு அவர் எங்கும் சென்றதில்லை. என்றாலும் 84 வயதான இந்த முதியவர் ஆங்கரேஜ் என்ற இடத்தில் நடந்த வட்டார மாநாட்டிற்கு செல்வதற்கு மட்டுமே 1,600 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்திருக்கிறார். இதற்கு யெகோவாவின் ஆவியே அவரை உந்துவித்தது. இத்தனைக்கும் அவர் அதற்கு முன்பு சபை கூட்டங்களுக்கு வந்ததேயில்லை. அந்த நிகழ்ச்சி நிரலில் அவர் தன் மனதை பறிகொடுத்தார். அதுமட்டுமல்ல, அங்கிருந்தவர்களோடு அனுபவித்த கூட்டுறவின் சந்தோஷத்தால் அவருக்கு தலைகால் புரியவில்லை. அங்கிருந்து டாஸன் சிட்டிக்கு திரும்பிய சமயம் முதற்கொண்டு மரிக்கும் வரையில் ஹென்றி உண்மையோடு நிலைத்திருந்தார். அவருக்குப் பழக்கமானவர்கள் எல்லாரும், இவ்வளவு தூரம் பயணிப்பதற்கு இந்த முதியவரை எது தூண்டியிருக்கும் என ஆச்சரியப்பட்டார்கள். இந்த ஆர்வக்கனலால் இன்னும் சில முதியவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். இப்படியாக ஒரு வகையில் ஹென்றியால் சிறந்த சாட்சி கொடுக்க முடிந்தது.
யெகோவாவின் தகுதியற்ற தயவை பெறுதல்
1955-ல் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 26-ம் வகுப்புக்கு நான் அழைக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். அந்தப் பயிற்சி என்னுடைய விசுவாசத்தை பலப்படுத்தியது, யெகோவாவிடம் நெருங்கி செல்வதற்கும் உதவியது. பயிற்சி முடிந்ததும் கனடாவில் என்னுடைய வட்டார வேலையை தொடருவதற்கு நியமிக்கப்பட்டேன்.
கிட்டத்தட்ட ஒரு வருஷத்திற்கு, ஒன்டாரியோ மாகாணத்தில் சேவை செய்தேன். அப்புறம் மறுபடியுமாக, அழகு சிந்தும் அலாஸ்காவுக்கு நியமிக்கப்பட்டேன். இயற்கையின் எழிலுக்கு நடுவே நெடுஞ்சாலைகளும், சுத்தமான, பளிங்கு போன்ற ஏரிகளும், வெண் மகுடங்களை சூடிய மலைத்தொடர்களும் இப்போதும் என் கண்முன் நிற்கின்றன. கோடையில் பள்ளத்தாக்குகளும் புல்வெளிகளும் காட்டுப் பூக்களின் வண்ணக்கோலம் பூண்டு நம்மை பிரமிப்பில் திக்குமுக்காட வைக்கின்றன. சுத்தமான காற்று வீசுகிறது, தெளிந்த நீர் ஓடுகிறது. கரடி, ஓநாய், மூஸ், கரிபூ, இன்னும் பல காட்டு விலங்குகள் அதன் இயற்கை வாழிடத்தில் இஷ்டம்போல் சுற்றித்திரிகின்றன.
இருந்தாலும், அலாஸ்காவில் சேவை செய்வதில் நிறைய கஷ்டங்கள் உள்ளன. சீதோஷணநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும், அதுபோக எனக்கு நியமிக்கப்பட்ட வட்டாரம் பரந்த இடமாக இருந்தது. கிழக்கிலிருந்து மேற்கு வரை 3,200 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிந்து பரந்திருந்த இடம் அது. அப்போதெல்லாம் வட்டார கண்காணிகள் செல்வதற்கு காரை அளிக்கும் ஏற்பாடு இல்லை. உள்ளூர் சகோதரர்கள் அவர்களுடைய கார்களில் ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு என்னை ஏற்றிச் செல்வார்கள். இருந்தாலும் சில சமயங்களில் ட்ரக்கிலும் டூரிஸ்ட் வாகனங்களிலும் இலவச பயணம் செய்ய வேண்டியிருந்தது.
ஒருசமயம், அலாஸ்காவிலுள்ள டோக் ஜங்ஷனுக்கும் 1202-ஆம் மைல் அல்லது ஸ்காட்டி க்ரீக் என்ற இடத்திற்கும் இடைப்பட்ட அலாஸ்கா நெடுஞ்சாலையில், இதுபோல ஏதாவது வண்டியில் ஏறிச் செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தேன். இந்த இரு இடங்களுக்குமுரிய சுங்க அலுவலகங்கள் சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் இருந்தன. டோக் ஜங்ஷனில் உள்ள ஐக்கிய மாகாண சுங்க அலுவலகத்தை கடந்த பின்பு சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு எனக்கு சவாரி கிடைத்தது. அதற்குப்பின் எந்தக் காரும் அந்த வழியாக வரவில்லை, அதனால் ஏறக்குறைய பத்து மணிநேரம் கால்நடையாகவே 40 கிலோமீட்டர் தூரம் சென்றேன். நான் சுங்க அலுவலகத்தை கடந்து கொஞ்ச தூரம் சென்ற பிறகு இந்த நெடுஞ்சாலை வழியாக வரும் எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டனவாம். ஏனென்றால் அந்த அலுவலகத்திலிருந்து சிறிது தூரம் தள்ளியிருக்கும் வழியில் பனிச்சறுக்கல் ஏற்பட்டதன் காரணமாக வாகனங்கள் மேற்கொண்டு வரமுடியவில்லை என்பதை பின்னர்தான் அறிய வந்தேன். நடுராத்திரிக்குள்ளாக வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே சுமார் 23°C-ஆக குறைந்துவிட்டது. தங்குவதற்கு பக்கத்தில் ஏதாவது இடம் வேண்டுமானால் நான் இன்னும் சுமார் 80 கிலோமீட்டர் செல்ல வேண்டும். எங்கே சாயலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.
நான் தளர்ந்து தள்ளாடி சென்றுகொண்டிருக்கும்போது, ரோட்டில் ஒரு கார் அநாதை போல நிற்பது கண்ணில் தட்டுப்பட்டது. அதையும் பனி கொஞ்சம் போர்த்தியிருந்தது. அதைத் திறந்து உள்ளே நுழைய முடிந்தால் குஷனில் படுத்து இந்த இரவு குளிரின் பிடியிலிருந்து தப்பிக்கலாம் என நினைத்தேன். அதன் கதவை திறக்குமளவுக்கு அதில் உறைந்திருந்த பனிக்கட்டிகளை கஷ்டப்பட்டு அப்புறப்படுத்தினேன். திறந்து பார்த்தால், உள்ளே குஷனும் இல்லை, ஒன்றும் இல்லை இரும்புச் சட்டம் மட்டும்தான் இருந்தது. ஆனால் கொஞ்ச தூரம் போன போது ஒரு காலி வீடு தென்பட்டதும் சந்தோஷப்பட்டேன். முதலில் அதற்கு உள்ளே சென்று லைட்டை பொருத்துவதே பெரும் பாடாக இருந்தது. ஆனால் சில மணிநேரத்திற்கு அங்கே ரெஸ்ட் எடுக்க முடிந்தது. காலையில் அங்கிருந்து அருகிலிருக்கும் லாட்ஜுக்கு சென்று தங்குவதற்கு எப்படியோ ஒரு சவாரி கிடைத்தது. அங்கு எனக்கு போதுமான அளவுக்கு சாப்பாடு கிடைத்தது, வெட்டுப்பட்டிருந்த என் விரல்களுக்கு மருந்து போடவும் முடிந்தது.
வடகோடியில் சத்தியத்தை யெகோவா வளரச்செய்கிறார்
வடகோடியில் நான் முதன் முதலாக விஜயம் செய்த இடம் ஃபேர்பாங்க்ஸ். அந்த விஜயம் மிக அருமையாக இருந்தது. அங்கு நாங்கள் ஊழியம் செய்ததில் நல்ல வெற்றி கண்டோம். அதனால் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பொதுப் பேச்சுக்கு 50 பேர் வந்தார்கள். வெர்னர் டேவிஸ் லரேன் டேவிஸ் தம்பதியினர் வசித்து வந்த சிறிய மிஷனரி இல்லத்தில்தான் நாங்கள் கூடிவந்தோம். கிச்சனிலும், பெட்ரூமிலும் ஹாலிலும் உட்கார்ந்திருந்த மக்கள் எல்லாரும் அங்கிருந்து தங்கள் தலைகளை நீட்டியவாறே பேச்சைக் கேட்டார்கள். பேச்சைக் கேட்க அநேகர் வந்ததால் ஒரு ராஜ்ய மன்றம் தேவை என்பதை அறிந்தோம். அப்போதுதான் ஃபேர்பாங்க்ஸில் ஊழியத்தை தொடர்ந்து செய்ய முடியும். யெகோவாவின் உதவியால், நகர்த்தி கொண்டு செல்ல முடிகிற ஒரு பெரிய மர கட்டடத்தை வாங்கினோம். அது முன்பு ஒரு நாட்டிய மன்றமாக இருந்தது. அதை நாங்கள் பொருத்தமான ஓர் இடத்திற்கு மாற்றினோம். அங்கு ஒரு கிணறு தோண்டப்பட்டது, பாத்ரூம்களும் கட்டப்பட்டன. அறையை கதகதப்பாக வைக்கும் சாதனங்களும் பொருத்தப்பட்டன. ஒரு வருடத்திற்குள்ளாக ஃபேர்பாங்க்ஸ் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன. அந்த கட்டடத்தில் ஒரு கிச்சனையும் கட்டிய பின்பு, 1958-ல் மாவட்ட மாநாடு ஒன்று அந்த மன்றத்தில் நடைபெற்றது. அதற்கு 330 பேர் வந்திருந்தார்கள்.
1960 கோடையில் ரிஃப்ரெஷர் கோர்ஸ் ஒன்றில் கலந்து கொள்வதற்காக நியுயார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்துக்கு காரில் நீண்ட தூரம் பயணம் செய்தேன். ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் உள்ள அனைத்து பிரயாண கண்காணிகளுக்காக அந்த கோர்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அங்கு சென்றிருந்தபோது, அலாஸ்காவில் கிளை அலுவலகம் ஒன்றை திறப்பதைக் குறித்து சகோதரர் நேதன் நாரும், பொறுப்பிலுள்ள சகோதரர்கள் சிலரும் என்னிடம் பேசினார்கள். சில மாதங்கள் கழித்து, செப்டம்பர் 1, 1961 முதல் அலாஸ்காவில் ஒரு கிளை அலுவலகம் செயல்பட ஆரம்பிக்கும் என்ற அறிவிப்பைக் கேட்டு நாங்கள் சந்தோஷப்பட்டோம். கிளை அலுவலகத்தை கவனிக்கும் பொறுப்பு ஆன்ட்ரூ கே. வாக்னர் என்ற சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அவருடைய மனைவி விராவும் புரூக்ளினில் 20 ஆண்டுகள் சேவை செய்தவர்கள், பிரயாண கண்காணியாக சேவை செய்த அனுபவமும் அவருக்கு உண்டு. அலாஸ்காவில் கிளை அலுவலகம் கட்டப்பட்டது வரவேற்கத்தக்க ஓர் ஏற்பாடாக இருந்தது. ஏனெனில், இது வட்டார கண்காணியின் பயணத்தை குறைத்து, சபை மற்றும் ஒதுக்குப்புற பிராந்தியங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு அதிக கவனம் செலுத்த உதவியது.
1962 கோடையில், அலாஸ்காவில் மகிழ்ச்சிக்குரிய ஒரு சம்பவம் நடைபெற்றது. அதுதான் அலாஸ்கா கிளை அலுவலகத்தின் பிரதிஷ்டை. அலாஸ்காவிலுள்ள ஜுனோவில் மாவட்ட மாநாடு ஒன்றும் நடத்தப்பட்டது. ஜுனோவிலும் யுகானிலுள்ள ஒயிட்ஹார்ஸிலும் ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன. அநேக தனித் தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.
கனடாவுக்குத் திரும்புதல்
ரொம்ப வருஷமாகவே கனடாவைச் சேர்ந்த மார்கரீட்டா பெட்ரஸ் என்ற சகோதரியோடு கடிதத் தொடர்பு வைத்திருந்தேன். ரீட்டா என்றுதான் அவளை பொதுவாக எல்லாரும் கூப்பிடுவார்கள். அவள் 1947-ல் பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தவள்; 1955-ல் கிலியட் பயிற்சி பெற்று கிழக்கு கனடாவில் பயனியர் சேவை செய்துகொண்டிருந்தாள். அவளை நான் மணம் செய்து கொள்ள விரும்புவதாக சொன்ன போது அவளும் சம்மதம் தெரிவித்தாள். 1963 பிப்ரவரி மாதத்தில் ஒயிட்ஹார்ஸில் எங்கள் திருமணம் இனிதே நடைபெற்றது. அந்த வருஷம் இலையுதிர் காலத்தில் மேற்கு கனடாவில் வட்டார கண்காணியாக நியமிக்கப்பட்டேன். 25 ஆண்டுகள் அங்கு நாங்கள் சந்தோஷமாக சேவை செய்தோம்.
சில உடல்நிலை பிரச்சினைகளின் காரணமாக, 1988-ல் மானிடோபாவிலுள்ள வின்னிபெக்கில் விசேஷித்த பயனியராக சேவை செய்யும்படி நியமிக்கப்பட்டோம். அதோடு, ஓர் மாநாட்டு மன்றத்தை சுமார் ஐந்து வருஷத்திற்கு கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் சேர்ந்திருந்தது. சீஷராக்கும் மகிழ்ச்சியான வேலையில் இன்று வரையாக எங்களால் முடிந்த மட்டும் பங்கு பெற்று வருகிறோம். வட்டார ஊழியத்தில் இருக்கும்போது நிறைய பைபிள் படிப்புகளை நாங்கள் ஆரம்பித்து மட்டுமே வைத்தோம்; மற்ற சகோதர சகோதரிகள் அவற்றை தொடர்ந்து நடத்தினார்கள். இப்போதோ, யெகோவாவின் தகுதியற்ற தயவினால் நாங்களே பைபிள் படிப்புகளை நடத்தி அவர்கள் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும் அளவுக்கு முன்னேறியிருப்பதைப் பார்க்கும் போது எங்களுடைய சந்தோஷம் இன்னும் அதிகமாகிறது.
மிகச் சிறந்த வாழ்க்கைப் போக்கு என்றால் அது யெகோவாவை சேவிப்பதுதான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அது வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் திருப்தியையும் அளிக்கிறது. அதோடு யெகோவாவின் மீதுள்ள நம் அன்பை ஒவ்வொரு நாளும் அதிகப்படுத்துகிறது. இதுதான் நிஜமான சந்தோஷத்தை அளிக்கிறது. கடவுளுடைய தேவராஜ்ய ஏற்பாட்டில் நாம் எத்தகைய நியமிப்பை பெற்றிருந்தாலும் அல்லது பூமியில் எங்கு வாழ்ந்தாலும், “யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் சந்தோஷமுள்ளது” என சங்கீதக்காரன் சொன்னதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்.—சங்கீதம் 144:15, NW.
[பக்கம் 24, 25-ன் படம்]
வட்டார ஊழியத்தில்
[பக்கம் 25-ன் படம்]
டாஸன் சிட்டியில் ஹென்றி லபைனை சந்தித்த போது. இடது பக்கத்தில் நான்
[பக்கம் 26-ன் படம்]
ஆங்கரேஜில் முதல் ராஜ்ய மன்றம்
[பக்கம் 26-ன் படம்]
1998-ல் ரீட்டாவும் நானும்