’ஜீவனைப்பார்க்கிலும் உம்முடைய அன்புள்ள தயவு மேம்பட்டது’
கால்வன் ஹெச். ஹோம்ஸ் சொன்னபடி
அது 1930-ன் டிசம்பர்; அருகிலிருந்த அயலகத்தாரைச் சென்று பார்த்துவிட்டு அப்பா வீட்டுக்கு வந்தபோது, நான் அப்போதுதான் பசுக்களிலிருந்து பால் கறந்து முடித்திருந்தேன். அவர் தன் பாக்கெட்டிலிருந்து ஊதாநிற புத்தகம் ஒன்றை வெளியிலெடுத்து, “வாசித்தப்பின் தரும்படி இது வைமன் என்னிடம் கொடுத்த புத்தகம்” என்று சொன்னார். அது, விடுதலை (ஆங்கிலம்) என்று தலைப்பிடப்பட்டிருந்தது; உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது. மிக அரிதாகவே எதையும் வாசிப்பவரான அப்பா, இரவு வெகுநேரம் வரை அதை வாசித்துக்கொண்டிருந்தார்.
பிற்பாடு, அதே பிரசுரிப்போரால் பிரசுரிக்கப்பட்ட, ஒளி, ஒப்புரவாகுதல் (ஆங்கிலம்) போன்ற தலைப்புகளை உடைய, வேறு புத்தகங்களையும் அப்பா இரவல் வாங்கி வந்தார். அம்மாவின் பழைய பைபிளை அவர் தேடி எடுத்து, மண்ணெண்ணை விளக்கின் ஒளியில், இரவு வெகுநேரம் வரை விழித்திருந்து படித்தார். அப்பாவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அந்தப் பனிக்காலத்தில், எங்கள் பழைய விறகடுப்பைச் சுற்றி, என் அம்மாவும், என் மூன்று தங்கைகளும், நானும் நெருங்கி உட்கார்ந்திருக்கையில், எங்களிடம் அவர் பல மணிநேரம் பேசினார்.
இந்தப் புத்தகங்களைப் பிரசுரித்தவர்கள் பைபிள் மாணாக்கர் என்று அழைக்கப்பட்டதாகவும், அவர்கள் சொல்வதன்படி நாம் “கடைசிநாட்களில்” வாழ்ந்து வருவதாகவும் அப்பா சொன்னார். (2 தீமோத்தேயு 3:1-5) உலக முடிவின்போது இந்தப் பூமி அழிக்கப்படாது என்றும், ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தில் இது ஒரு பரதீஸாக மாற்றப்படும் என்றும் அவர் விளக்கினார். (2 பேதுரு 3:5-7, 13; வெளிப்படுத்துதல் 21:3, 4) அது உண்மையில் என் ஆர்வத்தைத் தூண்டியது.
நாங்கள் ஒன்றுசேர்ந்து வேலை செய்கையில் அப்பா என்னிடம் பேசத் தொடங்கினார். கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை, நாங்கள் மக்காச்சோளத்திலிருந்து உமியைப் போக்கிக்கொண்டிருக்கையில் அப்பா விளக்கினது எனக்கு நினைவிருக்கிறது. (சங்கீதம் 83:17) இவ்வாறு, 1931-ன் இளவேனிற்காலத்தின்போது, நான் 14 வயதே ஆனவனாக இருக்கையில், யெகோவாவின் சார்பாகவும் அவருடைய ராஜ்யத்தின் சார்பாகவும் நிலைநிற்கை எடுத்தேன். வீட்டுக்குப் பின்னால் இருந்த அந்தப் பழைய, ஆப்பிள் பழத்தோட்டத்தில் நான் யெகோவாவிடம் ஜெபித்து, அவரை என்றென்றுமாக சேவிப்பேன் என பயபக்தியுடன் வாக்குறுதி அளித்தேன். நம்முடைய அதிசயமான கடவுளின் அன்புள்ள தயவால் என் இருதயம் ஏற்கெனவே தூண்டுவிக்கப்பட்டிருந்தது.—சங்கீதம் 63:3, NW.
செயின்ட் ஜோஸஃப், அ.ஐ.மா. மிஸ்ஸௌரியிலிருந்து, ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தூரத்திலும், கான்ஸாஸ் நகரத்திலிருந்து 65-க்கும் குறைந்த கிலோமீட்டர் தூரத்திலும் இருந்த ஒரு பண்ணையில் நாங்கள் வாழ்ந்தோம். அந்தப் பண்ணையில், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், என் பூட்டனார் கட்டியிருந்த, ஒரு சிறு மரவீட்டில் என் அப்பா பிறந்தார்.
ஊழியத்திற்காக பயிற்றுவிப்பு
“ராஜ்யம், உலகத்தின் நம்பிக்கை” என்ற பொதுப் பேச்சை, 1931-ன் கோடை காலத்தில் எங்கள் குடும்பம் கேட்டது. இதை, உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய பிரெஸிடென்ட், ஜோஸஃப் ரதர்ஃபோர்ட், கொலம்பஸ் ஒஹாயோவில் நடந்த ஒரு மாநாட்டில் கொடுத்தார். இது என் இருதயத்தை ஊக்கி தூண்டிற்று; இந்த முக்கியமான பொதுப் பேச்சு அடங்கிய சிறிய புத்தகத்தை எங்களுக்குப் பழக்கமானோரிடம் விநியோகிக்க அப்பாவுடன் சேர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைந்தேன்.
1932-ன் இளவேனிற்காலத்தில், நான் முதல் தடவையாக யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திற்குச் சென்றேன். செயின்ட் ஜோஸஃபில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு பயணக் கண்காணியாகிய ஜோஸஃப் டிரேப்பரால் கொடுக்கப்பட்ட பேச்சைக் கேட்பதற்கு, எங்கள் அயல்வீட்டுக்காரர் அப்பாவையும் என்னையும் அழைத்தார். நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தபோது, பாதிக்கூட்டம் முடிந்துவிட்டது, உருண்டு திரண்ட, அகலமான முதுகுடைய ஜெ. டி. டிரையருக்குப் பின்னால் ஓர் இடத்தை, நான் உட்காருவதற்குக் கண்டுபிடித்தேன். அவர் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய பாகத்தை வகிக்கப்போகிறவராக இருந்தார்.
செப்டம்பர் 1933-ல், கான்ஸாஸ் நகரத்தில் அப்பாவுடன் ஒரு மாநாட்டுக்கு போயிருந்தேன். அங்கு வெளி ஊழியத்தில் முதல் தடவையாகப் பங்குகொண்டேன். அப்பா என்னிடம் மூன்று சிறிய புத்தகங்களைக் கொடுத்து, இவ்வாறு சொல்லும்படி கூறினார்: “நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கிறேன். ரேடியோவில் ஜட்ஜ் ரதர்ஃபோர்ட்டின் பேச்சை நீங்கள் நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள். ஒவ்வொரு வாரமும் 300-க்கு மேற்பட்ட நிலையங்கள் அவருடைய பேச்சுகளை ஒலிபரப்புகின்றன.” பின்பு ஒரு சிறிய புத்தகத்தை நான் அளித்தேன். அந்தச் சாயங்காலம், பண்ணையில் பசுக்களிலிருந்து பால் கறக்கும்போது, என் வாழ்க்கையில் இது மிகவும் நினைவுகூரத்தக்க நாளாக இருந்தது என்று எண்ணினேன்.
சீக்கிரத்தில் குளிர்காலம் தொடங்கிவிட்டது, எங்களால் அதிகமாக பயணம் செய்ய முடியவில்லை. ஆனால், அப்போது சகோதரர் டிரையரும் அவருடைய மனைவியும் எங்களைப் பார்க்க வந்து, சனிக்கிழமை சாயங்காலத்தில் அவர்களுடைய வீட்டுக்கு வந்து, இரவு தங்கியிருக்க எனக்கு விருப்பமாவெனக் கேட்டார்கள். டிரையருடைய வீட்டுக்கு பத்துக் கிலோமீட்டர் நடந்து செல்வது, மிகப் பயனுள்ள முயற்சியாக இருந்தது. ஏனெனில், அடுத்த நாள் நான் அவர்களோடுகூட ஊழியத்திற்கு செல்லவும், செயின்ட் ஜோஸஃபில் உவாட்ச்டவர் படிப்புக்கு ஆஜராயிருக்கவும் முடிந்தது. அப்போதிருந்து, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியத்தில் பங்குகொள்வதை அரிதாகவே தவறவிட்டேன். சகோதரர் டிரையரின் பயிற்றுவிப்பும் அறிவுரையும் மதிப்புமிகுந்தவையாக இருந்தன.
முடிவில், செப்டம்பர் 2, 1935-ல், கான்ஸாஸ் நகரத்தில் நடத்தப்பட்ட ஓர் அஸெம்பிளியில், தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் யெகோவாவுக்கு என் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்த முடிந்தது.
வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஊழியத்தின் தொடக்கம்
1936-ன் தொடக்கத்தில், பயனியராக, அல்லது முழுநேர ஊழியனாக சேவிக்க விண்ணப்பித்தேன்; பயனியர் துணைக்காகக் காத்திருப்போரின் பெயர்ப் பட்டியலில் சேர்க்கப்பட்டேன். அதன்பின் சீக்கிரத்திலேயே, வியோமிங், ஆர்வேடாவிலிருந்த எட்வர்ட் ஸ்டெட் என்பவரிடமிருந்து ஒரு கடிதத்தை நான் பெற்றேன். அவர், சக்கர நாற்காலியில், செயல்பட முடியாத நிலையில் தான் இருப்பதாக விவரித்து, பயனியர் ஊழியம் செய்வதற்கு உதவி தேவையென அதில் விளக்கியிருந்தார். நான் உடனடியாக அவருடைய அழைப்பை ஏற்றேன்; ஏப்ரல் 18, 1936-ல் பயனியராக நியமிக்கப்பட்டேன்.
சகோதரர் ஸ்டெட்டுடன் நான் போய்ச் சேர்ந்துகொள்வதற்கு முன்பாக, என் தாயார் என்னிடம் தனிமையில் பேசினார்கள். “மகனே, நீ செய்ய விரும்புவதைப் பற்றி நிச்சயமாய் இருக்கிறாயா?” என்று அவர்கள் கேட்டார்கள்.
“மற்றபடி, நான் வாழ்ந்து என்ன பயன்” என்று பதிலளித்தேன். யெகோவாவின் அன்புள்ள தயவே, வேறு எதைப் பார்க்கிலும் அதிக முக்கியமானது என்பதை மதித்துணருபவனாக ஆகியிருந்தேன்.
டெட் என்று நாங்கள் அழைத்த, சகோதரர் ஸ்டெட்டுடன் பயனியர் ஊழியம் செய்தது, மிகச் சிறந்த பயிற்றுவிப்பாக இருந்தது. அவர் ஆர்வம் நிரம்பியவராக இருந்தார், ராஜ்ய செய்தியை மிகக் கவர்ச்சியூட்டும் முறையில் எடுத்துரைப்பவராக இருந்தார். எனினும், எழுதுவதும் பேசுவதும் மாத்திரமே டெட் செய்யமுடிந்த எல்லாமாக இருந்தன; அவருடைய எலும்பு முட்டுகள் யாவும் முடக்குவாத மூட்டழற்சியால் அசைவற்று இருந்தன. நான் விடியற்காலமே எழுந்து, அவரைக் குளிப்பாட்டி, சவரஞ்செய்து, காலை உணவைத் தயாரித்து, அவருக்கு உணவு கொடுப்பேன். பின்பு நான் அவருக்கு உடை அணிவித்து, ஊழியத்துக்கு தயாராக்குவேன். அந்தக் கோடை காலத்தில், வியோமிங்கிலும் மொன்டானாவிலும் நாங்கள் பயனியர் ஊழியம் செய்து, இரவெல்லாம் வெளியில் தங்கினோம். டெட், தன் டிரக்கில் கட்டப்பட்டிருந்த தனி அறை போன்ற ஒன்றில் தூங்கினார், நான் தரையில் படுத்துத் தூங்கினேன். அந்த ஆண்டின் பிற்பகுதியில் டென்னெஸீ, அர்கன்ஸாஸ், மிஸ்ஸிஸிப்பி ஆகிய இடங்களில் பயனியர் செய்யும்படி நான் தெற்கே சென்றேன்.
செப்டம்பர் 1937-ல், கொலம்பஸ் ஒஹாயோவில் நடைபெற்ற பெரிய மாநாட்டுக்கு முதல் தடவையாகச் சென்றேன். அங்கே ஒலிப்பதிவுக் கருவியைப் பயன்படுத்தி பிரசங்க ஊழியத்தை முன்னேற்றுவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒலிப்பதிவு கருவியை நாங்கள் பயன்படுத்தின ஒவ்வொரு தடவையையும் ஒரு செட்டப் என்பதாக அழைத்தோம். ஒரு மாதம், 500-க்கு மேற்பட்ட செட்டப்புகளை நான் செய்ய முடிந்தது, 800-க்கு மேற்பட்ட ஆட்கள் செவிகொடுத்துக் கேட்டனர். கிழக்கு டென்னெஸீயிலும், வர்ஜீனியாவிலும், மேற்கு வர்ஜீனியாவிலும் பல நகரங்களில் சாட்சி பகர்ந்த பின்பு, விசேஷ பயனியராக, பயணக் கண்காணிகள் அப்போது அழைக்கப்பட்ட பிரகாரம், மண்டல ஊழியருடன் இணைந்து ஊழியம் செய்யும் புதிய பொறுப்பை ஏற்கும்படி அழைக்கப்பட்டேன்.
மேற்கு வர்ஜீனியாவில், சபைகளையும் ஒதுக்கமாயிருந்த தொகுதிகளையும் சந்தித்து—ஒவ்வொன்றுடனும் இரண்டிலிருந்து நான்கு வாரங்கள் வரையாகச் செலவிட்டு—வெளி ஊழியத்தை முன்நின்று நடத்தினேன். பின்பு, 1941-ன் ஜனவரியில், மண்டல ஊழியனாக நியமிக்கப்பட்டேன். அதற்குள்ளாக, அம்மாவும் என் மூன்று சகோதரிகளான கிளேராவும், லோயிஸும், ரூத்தும் ராஜ்யத்தின் சார்பாக தங்கள் நிலைநிற்கையை ஏற்றிருந்தார்கள். ஆகையால், அந்தக் கோடையில் செயின்ட் லூயிஸில் நடந்த அந்தப் பெரிய மாநாட்டுக்கு எங்கள் முழு குடும்பமும் ஒன்றாக ஆஜராகியது.
அந்த மாநாட்டுக்குச் சற்று பின்பு, நவம்பர் 1941-ன் முடிவில் மண்டல ஊழியம் முடிவடையும் என்று மண்டல ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்த மாதத்தில், ஐக்கிய மாகாணங்கள் இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது. நான் விசேஷ பயனியர் ஊழியம் செய்யும்படி நியமிக்கப்பட்டேன்; இது, ஒவ்வொரு மாதமும் 175 மணிநேரங்கள் ஊழியத்தில் செலவிடும்படி தேவைப்படுத்தியது.
விசேஷ ஊழிய சிலாக்கியங்கள்
வெளிநாட்டில் சேவை செய்ய விருப்பமா என கேட்ட ஒரு கடிதத்தை, நான் ஜூலை 1942-ல் பெற்றேன். விருப்பம் என்று பதிலளித்த பின்பு, நியூ யார்க், புரூக்லினில் உள்ள, யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகமாகிய பெத்தேலுக்கு வரும்படி நான் அழைக்கப்பட்டேன். அதே சமயத்தில், மணமாகாத சுமார் 20 சகோதரர்கள், விசேஷ பயிற்றுவிப்புக்காக அழைக்கப்பட்டிருந்தார்கள்.
பிரசங்க நடவடிக்கை குறைந்துவிட்டது என்றும், சபைகளை ஆவிக்குரிய பிரகாரமாய் பலப்படுத்தும்படி நாங்கள் பயிற்றுவிக்கப்படுவோம் என்றும், உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய பிரெஸிடென்ட், நேதன் ஹெச். நார் விளக்கினார். “சபையில் பிரச்சினைகள் என்ன என்பதை மாத்திரமே நாங்கள் அறிய விரும்புகிறதில்லை” என்று அவர் சொல்லி, “அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையே அறிய விரும்புகிறோம்” என்றார்.
பெத்தேலில் நாங்கள் இருந்தபோது, 1977-ல் சகோதரர் நாருக்குப் பின் பிரெஸிடென்ட்டாக பொறுப்பேற்ற ஃபிரெட் ஃபிரான்ஸ், ஒரு பேச்சைக் கொடுத்தார், அதில் இவ்வாறு சொன்னார்: “இரண்டாவது உலகப் போர் முடிவடையும், ஒரு பெரும் பிரசங்க ஊழியம் தொடங்கும். சந்தேகமில்லாமல் லட்சக்கணக்கானோர் இனிமேலும் யெகோவாவின் அமைப்புக்குள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்!” அந்தப் பேச்சு என் மனப்பான்மையை முற்றிலுமாக மாற்றிற்று. நியமிப்புகள் கிடைத்தபோது, டென்னெஸீ மற்றும் கென்டகி மாகாணங்களிலுள்ள எல்லா சபைகளையும் நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவந்தது. சகோதரருக்கு ஊழியர்கள் என்று நாங்கள் அழைக்கப்பட்டோம்; பின்பு இந்தப் பதம், வட்டாரக் கண்காணி என மாற்றப்பட்டது.
அக்டோபர் 1, 1942-ல் நான் இன்னும் 25 வயதுள்ளவனாக இருக்கையிலேயே சபைகளைச் சேவிக்கத் தொடங்கினேன். அந்தச் சமயத்தில், நடந்து செல்வதே அல்லது குதிரை முதுகில் சவாரி செய்வதே சில சபைகளுக்குப் போய்ச் சேர்வதற்கு ஒரே வழியாக இருந்தது. சில சமயங்களில், எனக்குத் தங்க இடமளித்த குடும்பம் தூங்கும் அதே அறையில் நானும் தூங்கினேன்.
ஜூலை 1943-ல் டென்னெஸீயில் கிரீன்வில் சபையில் நான் சேவிக்கும்போது, உவாட்ச்டவர் பைபிள் பள்ளியாகிய கிலியட்டின் இரண்டாவது வகுப்புக்கு வரும்படியான அழைப்பைப் பெற்றேன். ‘செவிகொடுத்துக் கேட்கும் விஷயங்களுக்கு, வழக்கத்திற்கு மேலாக அதிக கவனம் செலுத்துவதும்,’ எப்பொழுதும் ‘கர்த்தரின் வேலையில் செய்வதற்கு மிகுதியானதை உடையவர்களாய் இருப்பதும்’ உண்மையில் அர்த்தப்படுவது என்ன என்பதை கிலியட்டில் கற்றறிந்தேன். (எபிரெயர் 2:1; 1 கொரிந்தியர் 15:58; NW) அந்த ஐந்து மாத பள்ளி படிப்பு காலம் விரைவாகப் பறந்துவிட்டது; ஜனவரி 31, 1944-ல் பட்டமளிப்பு நாள் வந்தது.
கனடாவுக்கும் பெல்ஜியத்துக்கும் செல்லுதல்
எங்களில் பலர் கனடாவுக்குச் செல்லும்படி நியமிக்கப்பட்டனர்; அங்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கையின்பேரில் போடப்பட்ட ஒரு தடையுத்தரவு சமீபத்தில்தானே நீக்கப்பட்டிருந்தது. நான் பயண ஊழியம் செய்யும்படி நியமிக்கப்பட்டேன். இது, சில சபைகளுக்கிடையே வெகு தூரம் பயணம்செய்வதை தேவைப்படுத்தியது. நான் பயணப்படுகையில், தடையுத்தரவு காலத்தின்போது கனடாவில் பிரசங்க ஊழியம் எவ்வாறு செய்யப்பட்டது என்பதைப்பற்றிய அனுபவங்களைக் கேட்பது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. (அப்போஸ்தலர் 5:29) திடீர்த்தாக்குதல் (blitz) என்று அழைக்கப்பட்டதைப் பற்றி பலர் சொன்னார்கள். அதாவது, ஒரே இரவின்போது, கனடாவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரையாக, பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு புத்தகம் வைக்கப்பட்டது. மே 1945-ல் ஐரோப்பாவில் போர் முடிவடைந்துவிட்டது என்று கேள்விப்பட்டது எத்தகைய நற்செய்தியாக இருந்தது!
அந்தக் கோடையின்போது, சஸ்காட்செவானில், சிறிய பட்டணமாகிய ஓசேஜில் ஒரு சபையைச் சந்திக்கையில், சகோதரர் நாரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றேன், அதில் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது: “பெல்ஜியத்துக்குச் செல்லும் இந்தச் சிலாக்கியத்தை உங்களுக்கு அளிக்கிறேன். . . . அந்த நாட்டில் மிகுதியான ஊழியம் செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. அது போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட நாடாக உள்ளது, நம்முடைய சகோதரர்களுக்கு உதவி தேவை; அவர்களுக்குத் தேவைப்படும் தகுந்த உதவியையும் ஆறுதலையும் அளிப்பதற்கு அமெரிக்காவிலிருந்து ஒருவரை அனுப்புவது தகுந்ததாக இருக்கிறது.” அந்த ஊழிய நியமிப்பை ஏற்று, உடனடியாக பதிலளித்தேன்.
நவம்பர் 1945-ல், நான் புரூக்லின் பெத்தேலில், அல்சேஷ் நாட்டைச் சேர்ந்த வயதான சகோதரனான சார்ல்ஸ் ஐக்கரிடம் ஃபிரெஞ்சு படித்துக்கொண்டிருந்தேன். கிளைக் காரியாலயம் செயல்படும் முறையிலும் குறுகிய கால பயிற்றுவிப்பைச் சிறிது பெற்றேன். ஐரோப்பாவுக்குச் செல்வதற்கு முன்பாக, செயின்ட் ஜோஸஃப் மிஸ்ஸௌரியில் என் குடும்பத்தாரையும் நண்பர்களையும் ஓரிரு நாட்கள் சந்தித்துவிட்டு வந்தேன்.
டிசம்பர் 11-ல், க்வீன் எலிஸபெத் கப்பலில் நியூ யார்க்கை விட்டு பயணப்பட்டு நான்கு நாட்களுக்குப் பின்பு, இங்கிலாந்திலுள்ள சௌதாம்டன் போய்ச் சேர்ந்தேன். பிரிட்டன் கிளை அலுவலகத்தில் ஒரு மாதம் தங்கினேன், அங்கே கூடுதலான பயிற்றுவிப்பைப் பெற்றேன். அதன் பின்பு, ஜனவரி 15, 1946-ல், இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து, பெல்ஜியம் ஆஸ்டன்ட்டில் இறங்கினேன். அங்கிருந்து ரயிலில் ப்ருஸ்ஸெல்ஸுக்குச் சென்றேன். அங்கே பெத்தேல் குடும்பத்தார் அனைவரும் ரயில் நிலையத்தில் என்னைச் சந்தித்தனர்.
போருக்குப் பின்னான துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கை
பெல்ஜியத்தில் ராஜ்ய வேலையைக் கண்காணிப்பதே எனக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு; எனினும், அந்த மொழியை எனக்கு பேசக்கூட தெரியாது. ஏறக்குறைய ஆறு மாதங்களில், அன்றாட பேச்சுத் தொடர்பை சமாளிக்க போதிய பிரெஞ்சு மொழியை அறிந்துகொண்டேன். நாஜி ஆக்கிரமிப்பிலிருந்த ஐந்து ஆண்டுகளின்போது பிரசங்க ஊழியத்தை நிறைவேற்றுவதற்குத் தங்கள் உயிரையும் ஆபத்திற்கு உட்படுத்தியவர்களுடன்கூட ஊழியம் செய்வது ஒரு சிலாக்கியமாக இருந்தது. அவர்களில் சிலர் சமீபத்தில்தானே சித்திரவதை முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
ஊழியத்தை ஒழுங்குபடுத்தி அமைப்பதற்கும், பைபிள் சத்தியத்திற்காக பசியுள்ளோரைப் போஷிப்பதற்கும் சகோதரர்கள் ஆவலாக இருந்தனர். ஆகையால் அசெம்பிளிகள் நடத்துவதற்கும், பயணக் கண்காணிகள் சபைகளைச் சந்திப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், நேதன் நார், மில்டன் ஹென்ஷல், ஃப்ரெட் ஃபிரான்ஸ், கிரான்ட் சூட்டர், ஜான் பூத் ஆகியோரின் ஊக்கமூட்டும் சந்திப்புகளும் இருந்தன; இவர்கள் எல்லாரும் புரூக்லின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த பிரதிநிதிகள். அந்தத் தொடக்க நாட்களில், வட்டாரக் கண்காணியாகவும், மாவட்டக் கண்காணியாகவும், கிளை அலுவலக கண்காணியாகவும் சேவித்தேன். பெல்ஜியத்தில் ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் சேவை செய்த பின்பு, டிசம்பர் 6, 1952-ல், இமிலியா வானோஸ்லாப்சை நான் மணம் செய்துகொண்டேன், அவளும் பெல்ஜிய கிளை அலுவலகத்தில் வேலை செய்தாள்.
சில மாதங்களுக்குப் பின், ஏப்ரல் 11, 1953-ல், அவ்விடத்து போலீஸ் நிலையத்திற்கு வரும்படி அழைக்கப்பட்டு, நான் பெல்ஜியத்தில் இருப்பது, அந்நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருந்ததென்று சொல்லப்பட்டேன். அரசாங்க அவையில் என் வழக்கை மேல் முறையீடு செய்து, பதிலுக்கு காத்திருக்கையில் லக்ஸம்பருக்குச் சென்றேன்.
நான் அங்கு இருந்தது அந்த நாட்டுக்கு ஆபத்தாக இருந்தது என்ற முடிவை, பெல்ஜிய அரசாங்க அவை, பிப்ரவரி 1954-ல் உறுதிப்படுத்தியது. பெல்ஜியத்துக்கு நான் வந்ததிலிருந்து, அந்நாட்டிலிருந்த சாட்சிகளின் எண்ணிக்கை, பெருமளவில்—1946-ல் 804-ல் இருந்து 1953-ல் 3,304 ஆக—அதிகரித்திருந்தது. இதன் விளைவாக பெல்ஜியத்தின் பாதுகாப்பு பயமுறுத்தப்பட்டது, ஏனெனில், இளைஞராயிருந்த சாட்சிகள் பலர், கிறிஸ்தவ நடுநிலை வகிப்புக்காக உறுதியான நிலைநிற்கை ஏற்றார்கள் என்பதே காரணமாகக் காட்டப்பட்டது. ஆகவே, இமிலியாவும் நானும் ஸ்விட்ஸர்லாந்தில் சேவிக்கும்படி நியமிக்கப்பட்டோம். அங்கு, பிரெஞ்சு பேசும் பகுதியில் வட்டார ஊழிய சேவை செய்யத் தொடங்கினோம்.
ராஜ்ய ஊழியப் பள்ளி—கிறிஸ்தவ மூப்பர்களுக்கு, மேம்பட்ட பயிற்றுவிப்பு அளிப்பதற்கான பள்ளி—1959-ல் நியூ யார்க், தென் லான்ஸிங்கில் ஸ்தாபிக்கப்பட்டது. ஐரோப்பாவில் இந்தப் பள்ளியின் வகுப்புகளுக்குக் கற்பிப்பதற்கான பயிற்றுவிப்பைப் பெற அங்கு வரும்படி அழைக்கப்பட்டேன். ஐக்கிய மாகாணங்களில் நான் இருக்கும்போது, மிஸ்ஸௌரி, செயின்ட் ஜோஸஃபில் என் குடும்பத்தாரைப் போய்ப் பார்த்தேன். அங்கே என் அருமை தாயாரைக் கடைசி தடவையாகக் கண்டேன். ஜனவரி 1962-ல் அவர்கள் இறந்தார்கள்; அப்பா ஜூன் 1955-ல் இறந்துவிட்டிருந்தார்.
பிரான்ஸ் பாரிஸில், இந்த ராஜ்ய ஊழியப் பள்ளி, மார்ச் 1961-ல் தொடங்கியது; இமிலியாவும் என்னோடு வந்தாள். பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்விட்ஸர்லாந்திலிருந்து, மாவட்ட கண்காணிகளும், வட்டாரக் கண்காணிகளும், சபை கண்காணிகளும், விசேஷ பயனியர்களும் இந்தப் பள்ளிக்கு வந்தார்கள். ஒவ்வொன்றும் நான்கு வாரங்கள் நீடித்த, 12 வகுப்புகளை, அடுத்த 14 மாதங்களின்போது நடத்தினேன். பின்பு, இமிலியா கர்ப்பந்தரித்திருப்பதை 1962, ஏப்ரலில் நாங்கள் அறிந்தோம்.
சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு அமைத்துக்கொள்ளுதல்
ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவாவுக்கு நாங்கள் திரும்பி வந்தோம். அங்கே நிலையாகத் தங்குவதற்குரிய அனுமதி எங்களுக்கு இருந்தது. எனினும், அங்கே குறைவான வீடுகளே இருந்ததால், வாழ்வதற்கு ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பது எளிதாக இல்லை. வேலை கிடைப்பதும் சுலபமாக இல்லை. கடைசியாக, ஜெனீவாவின் மத்திபத்திலிருந்த ஒரு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோரில் எனக்கு ஒரு வேலை கிடைத்தது.
முழுநேர ஊழியத்தில் 26 ஆண்டுகள் நான் செலவிட்டிருந்தேன், ஆகையால் மாறிய எங்கள் சூழ்நிலைமைகளுக்குத் தக்கவாறு அமைத்துக்கொள்வது பெரும் மாற்றத்தைத் தேவைப்படுத்தியது. அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நான் வேலை செய்து, எங்கள் இரண்டு மகள்களாகிய லோயிஸையும் யூனிஸையும் வளர்க்க உதவிய 22 ஆண்டுகளின்போது எங்கள் குடும்பம், ராஜ்ய அக்கறைகளையே எப்பொழுதும் முதலாவதாக வைத்தது. (மத்தேயு 6:33) உலகப்பிரகாரமான வேலையிலிருந்து 1985-ல் நான் ஓய்வு பெற்ற பின்பு, உதவி வட்டார ஊழியனாகச் சேவிக்கத் தொடங்கினேன்.
இமிலியாவின் உடல்நலம் மிக மோசமாக இருந்துவந்திருக்கிறது, ஆனால், ஊழியத்தில் தன்னால் இயன்றதை அவள் செய்கிறாள். லோயிஸ், ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பயனியராகச் சேவித்தாள். அவளோடு, 1993-ன் கோடையின்போது, மாஸ்கோவில் அதிக வியப்பூட்டிய சர்வதேச மாநாட்டை அனுபவித்து மகிழ்ந்தது எத்தகைய ஆவிக்குரிய விருந்தாக இருந்தது! அதற்குச் சற்று பின்பு, ஆப்பிரிக்காவிலுள்ள செனிகலுக்கு விடுமுறையைச் செலவிட சென்றிருந்தபோது, சமுத்திரத்தில் நீந்துகையில் லோயிஸ் இறந்துவிட்டாள். அடக்கம் செய்ய செனிகலுக்கு நான் பயணப்பட்டபோது, நம் ஆப்பிரிக்க சகோதரர்களும் மிஷனரிகளும் காட்டின அன்பும் தயவும் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. உயிர்த்தெழுதலில் லோயிஸைக் காண நான் எவ்வளவு ஆவலாக இருக்கிறேன்!—யோவான் 5:28, 29.
அன்புள்ள துணைவியின் உண்மைத்தவறாத ஆதரவை, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் அனுபவித்து மகிழ்ந்ததற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நிச்சயமாகவே, எனக்கு இருதய வேதனைகளும் இக்கட்டுகளும் இருந்தபோதிலும், யெகோவாவின் அன்புள்ள தயவு மகிழ்வளிப்பதாக இருந்து, வாழ்க்கையை வாழ்வதற்குத் தகுந்ததாக்கி இருக்கிறது. நம் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி, சங்கீதக்காரனுடைய இந்த வார்த்தைகளில் அறிவிப்பதற்கு என் இருதயம் தூண்டுவிக்கப்படுகிறது: “உம்முடைய அன்புள்ள தயவு ஜீவனைப்பார்க்கிலும் மேம்பட்டதாக இருப்பதால், என் சொந்த உதடுகள்தாமே உம்மைப் போற்றும்.”—சங்கீதம் 63:3.
[பக்கம் 26-ன் படம்]
ஒலிப்பதிவுக் கருவியுடன் பிரசங்க ஊழியத்தை நாங்கள் முன்னேற்றுவித்தோம்
[பக்கம் 26-ன் படம்]
1936-ல் என் பெற்றோர்
[பக்கம் 26-ன் படம்]
1948-ல் பெல்ஜியத்தில் தெரு ஊழியம் செய்தல்