கிறிஸ்மஸ்—உண்மையில் கிறிஸ்தவ பண்டிகையா?
திஉவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்லுகிறபடி, “கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளைக் கொண்டாடும் தினமே கிறிஸ்மஸ் ஆகும்.” என்றபோதிலும் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறும் கூறுகிறது: “பூர்வக் கிறிஸ்தவர்கள் [இயேசுவின்] பிறப்பைக் கொண்டாடவில்லை. ஏனென்றால் எவருடைய பிறப்பையும் கொண்டாடுவதை ஒரு புறமதப் பழக்கமாகக் கருதினர்.”
கோல்பி மற்றும் பர்டூவால் எழுதப்பட்ட நவீனபாணி கிறிஸ்மஸை உருவாக்குதல் (ஆங்கிலம்) ஒப்புக்கொள்ளுகிறதுபோல: “பூர்வக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடவில்லை. பிறந்தநாட்கள்தானே புறமதப் பழக்கங்களோடு தொடர்புப்படுத்தப்பட்டன; கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய சரியான தேதியைப்பற்றி சுவிசேஷங்கள் ஒன்றுமே சொல்கிறதில்லை.”
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கிறிஸ்தவப் பின்னணியைக் கொண்டில்லாததால், கிறிஸ்துவின் பிறந்தநாள் அத்தகைய பிரபலமான “கிறிஸ்தவ” பண்டிகையாக மாறியது எப்படி?
“கிறிஸ்மஸ்” பண்டிகையின் புறமதத் தோற்றம்
“எல்லாரும் விருந்துண்டு குதூகலித்தனர், வேலையும் வியாபாரமும் ஒரு காலத்திற்கு முழுமையாக நிறுத்தப்பட்டன, வீடுகள் லாரல் மற்றும் எவர்க்ரீன் தாவரங்களைக்கொண்டு அலங்கரிக்கப்பட்டன, நண்பர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டு ஒருவரையொருவர் வந்து சந்தித்தனர், வாடிக்கையாளர்கள் அவர்களுடைய ஆதரவாளர்களுக்குப் பரிசுகளைக் கொடுத்தனர். அந்தக் காலம் முழுவதுமே குதூகலிப்பும் நல்லெண்ணமும் நிறைந்த ஒன்றாக இருந்தது. மேலும் மக்கள் அனைத்துவகை கேளிக்கைகளிலும் ஈடுபட்டனர்.”—J. M. வீலரால் எழுதப்பட்ட கிறிஸ்தவ பண்டிகைகளில் புறமதக் கொள்கை (ஆங்கிலம்).
நீங்கள் அறிந்திருக்கிற கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இந்த விவரிப்பிற்கு ஒத்திருக்கின்றனவா? ஆச்சரியமூட்டும் வகையில் இது கிறிஸ்மஸ் அல்ல! மாறாக, இது சேட்டர்னேலியாவின்—குளிர்கால சூரிய கதிர்த்திருப்பத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு வார-கால ரோம புறமதப் பண்டிகையின்—ஒரு விவரிப்பாகும் (எதிர் பக்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது). வெல்லப்படாத சூரியனின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது. இது ரோமின் மித்ரா மதத்தின் முக்கிய விருந்து தினமாக இருந்தது.
தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்லுகிறபடி, “டிசம்பர் 25 ஈரானின் ஒளிக்கடவுள் மித்ராவின் பிறந்தநாளாகும் . . . இந்த நாள் வெல்லப்படமுடியாத சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினமும், சேட்டர்னேலியாவிற்கு அடுத்த நாளுமாக இருக்கிறது. இந்தப் பண்டிகைகளின் விளைவுகளை எதிர்க்க இந்த நாளைத்தான் கிறிஸ்துவின் பிறப்பாகிய கிறிஸ்மஸாக சர்ச் ஏற்றுக்கொண்டது.” ஆக இந்தப் புறமதப் பிறந்தநாள் பண்டிகை வெறுமனே மித்ரா என்ற பெயரை கிறிஸ்து என்று மாற்றி வைத்துக்கொண்டு தொடர்ந்தது!
என்றபோதிலும், கடவுளுடைய குமாரனாகிய இயேசுவின் பிறந்தநாளென்றால் நினைவுகூரவேண்டிய ஏதோ விசேஷித்த ஒன்றல்லவா என்று நீங்கள் யோசிக்கலாம். இதைப்பற்றி பைபிள் என்ன சொல்லுகிறதென்று பார்ப்பது அதிக அறிவொளியூட்டுவதாக இருக்கும்.
சந்தோஷத்திற்குரிய ஒரு சம்பவம்
லூக்கா சுவிசேஷத்தின் 2-ம் அதிகாரம் இதற்கான பின்னணியை உருவாக்குகிறது. குறிப்பிடத்தக்க இந்தச் சம்பவத்திற்கு பரலோக தேவதூதர்கள், தாழ்மையுள்ள மேய்ப்பர்கள், கடவுளுடைய பக்தியுள்ள ஊழியர்கள் ஆகியோரும் மரியாள்தானேயும் எப்படி பிரதிபலித்தார்கள் என்று லூக்கா நமக்குச் சொல்கிறார்.
“மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்;” அவர்கள் குளிர்காலத்தில் இவ்வாறு வயல்வெளியில் தங்கியிருந்திருக்க மாட்டார்கள் என்பதை முதலில் கவனியுங்கள். ‘யெகோவாவுடைய தூதன்’ அவர்களுக்குத் தோன்றி, யெகோவாவுடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தபோது, தொடக்கத்தில் அந்த மேய்ப்பர்கள் பயந்தார்கள். “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்,” என்று அந்தத் தூதன் விளக்கியபோது அவர்களுக்குத் தெம்பு வந்தது. தேவதூதர்களுடைய “பரமசேனையின் திரள்,” திடீரென்று தோன்றியபோது, இந்தப் பிறப்பானது மற்றெல்லாவற்றைக் காட்டிலும் வித்தியாசமானதாக இருந்தது என்று அந்த மேய்ப்பர்களுக்குத் தெரிந்தது. ஆர்வமூட்டும் வகையில், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு அந்தத் தேவதூதர்கள், பரிசுகள் ஒன்றும் கொண்டுவரவில்லை. மாறாக, அந்தத் தேவதூதர்கள், “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக,” என்று சொல்லி யெகோவாவைத் துதித்தார்கள்.—லூக்கா 2:8-14.
எதிர்பார்க்கக்கூடிய வகையில், அந்த மேய்ப்பர்கள் இந்தக் குழந்தையைத் தங்கள் கண்ணார காணவேண்டும் என்று விரும்பினர். ஏனென்றால் அந்தச் சந்தோஷமான சம்பவத்தை அறிவித்தது யெகோவாதாமே. மாட்டுக் கொட்டில் தொட்டியில் கிடந்த குழந்தையை அவர்கள் கண்டபோது, தேவதூதர்கள் சொன்னதை அந்தப் பெற்றோரிடம் சொன்னார்கள். பின்னர் மேய்ப்பர்கள் குழந்தையை அல்ல, ஆனால் “தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு,” திரும்பிப் போனார்கள்.—லூக்கா 2:15-18, 20.
இயேசுவின் தாயாகிய மரியாள், தன்னுடைய முதற்பிள்ளையை வெற்றிகரமாகப் பெற்றெடுத்ததற்காக சந்தோஷப்பட்டார் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அவரும், ‘தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினார்.’ பிறகு தன்னுடைய கணவன் யோசேப்போடு சேர்ந்து, மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து, எருசலேமுக்குப் பயணப்பட்டார். இது ஒரு பிறந்தநாள் கொண்டாட்டமாக இல்லை. அதற்குமாறாக, ‘முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் யெகோவாவுக்குப் பரிசுத்தமானதெனப்படும் என்று யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி’ குழந்தையைக் கடவுளுக்கென்று ஒப்புக்கொடுப்பதற்கான ஒரு சமயமாக இருந்தது.—லூக்கா 2:19, 22-24.
எருசலேமின் தேவாலயத்தில், மரியாளும் யோசேப்பும் சிமியோனைக் கண்டார்கள். லூக்கா இவரை “நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்,” என்று விவரிக்கிறார். ‘யெகோவாவுடைய கிறிஸ்துவை’ காணுமுன்னே அவர் மரணமடையமாட்டார் என்று தேவ ஏவுதலினால் அவர் சொல்லப்பட்டிருந்தார். அடுத்து என்ன நடந்ததோ அதுவும் “[கடவுளுடைய] ஆவியின் ஏவுதலினால்”தான். சிமியோன் குழந்தையைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டார்; அவருக்கு ஒரு பரிசைக் கொடுப்பதற்காக அல்ல, ஆனால் அதைவிட, தேவனை இவ்வாறு ஸ்தோத்தரிக்கவே: “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது.”—லூக்கா 2:25-32.
அடுத்ததாக, அன்னாள் என்ற வயதான தீர்க்கதரிசி அருகே வந்தார். அவரும் “கடவுளை [NW] புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.”—லூக்கா 2:36-38.
மரியாள், சிமியோன், அன்னாள், மேய்ப்பர்கள், பரலோக தேவதூதர்கள், ஆகிய இவர்கள் அனைவரும் இயேசுவின் பிறப்பைக்குறித்து சந்தோஷப்பட்டனர். எனினும், இவர்கள் பிறந்தநாள் களியாட்டத்தில் ஈடுபடவில்லை, பரிசு அளிக்கவுமில்லை என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். மாறாக அவர்கள் தங்களுக்கு இரட்சணியத்தைக் கொடுத்தவரும் பரலோகத்தவருமாகிய யெகோவாவை மகிமைப்படுத்தினர்.
இதற்கெல்லாம் பிறகும், ‘கிறிஸ்மஸ் பரிசு நிச்சயமாகவே தவறாக இருக்கமுடியாது. ஏனென்றால், “மூன்று ஞானிகள்” பரிசுகளைக் கொடுத்து இயேசுவை மகிமைப்படுத்தினார்கள் அல்லவா?’ என்று சிலர் யோசிக்கலாம்.
கிறிஸ்மஸ் பரிசுகள்
மீண்டும் பைபிள் பதிவை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். மத்தேயு சுவிசேஷம் 2-ம் அதிகாரத்தில் அது பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப்பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை, குறிப்பிட்ட எந்தவொரு சமயமும் கொடுக்கப்படவில்லை. ஆயினும் அது கிறிஸ்து பிறந்து சற்றுக்காலம் கழித்து என்பது தெளிவாக இருக்கிறது. 1-ம் வசனத்தில், மத்தேயு இந்தப் பயணிகளை, “கிழக்கிலிருந்து சாஸ்திரிகள், [கிரேக்க மொழியில், மேகாய்]” என்றழைக்கிறார். ஆகவே இவர்கள் யெகோவா தேவனைப் பற்றிய எந்த அறிவும் இல்லாத புறமதத்தினராக இருந்தனர். இவர்கள் பின்பற்றிய நட்சத்திரம் இவர்களை நேரே பெத்லகேமிலுள்ள இயேசுவின் பிறப்பிடத்திற்கல்ல, ஆனால் ஏரோது அரசாண்ட எருசலேமுக்கு வழிநடத்திற்று.
‘யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவரைப்பற்றி,’ இவர்கள் விசாரிக்கிறதை துன்மார்க்கனாயிருந்த இந்த ராஜா கேட்டான். அப்போது, அந்தக் குழந்தையைக் கொல்லும்படியாக, “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று,” திருத்தமாக தெரிந்துகொள்ள ஆசாரியர்களோடு ஆலோசனை நடத்தினான். மேசியாவின் பிறப்பிடம் பெத்லகேம் என்று குறிப்பிட்டிருந்த மீகா தீர்க்கதரிசனத்தை மேற்கோள்காட்டி ஆசாரியர்கள் பதிலளித்தனர். (மீகா 5:2) ஏரோதோ தன்னிடம் வந்த பயணிகளிடம், “நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள்,” என்று அவர்களுக்கு நயவஞ்சகமாக அறிவுறுத்தினான். சாஸ்திரிகள் புறப்பட்டுத் தங்கள் வழியே போனார்கள், அந்த நட்சத்திரம், “பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.” அவர் பச்சிளம் குழந்தை என்றல்ல ஆனால் “பிள்ளை” என்று விவரிக்கப்பட்டிருக்கிறார் என்பதை கவனியுங்கள்.—மத்தேயு 2:1-10.
கிழக்கத்திய பெரும்புள்ளிகள் தகுந்தமுறையில் ஒரு அரசனை வந்து காண்பதைப்போலவே, இந்தப் புறமத சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாய் விழுந்து, “பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் [பிள்ளைக்கு] காணிக்கையாக வைத்தார்கள்.” மத்தேயு மேலும் கூறுகிறார்: “பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.”—மத்தேயு 2:11, 12.
சுருக்கமான இந்த வேதாகமப் பதிவிலிருந்து, தங்களுடைய கிறிஸ்மஸ் பரிசளிப்புப் பழக்கத்திற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிக்க சிலர் முயற்சிக்கலாம். இருந்தபோதிலும், பரிசுகள் அளிக்கும் தற்போதைய பழக்கமானது ரோமர்கள் தங்களுடைய ஏழை அயலகத்தாருக்கு சேட்டர்னேலியா பரிசுகளை வழங்கும் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதாக கிறிஸ்மஸ் பழக்கங்களையும் பாரம்பரியங்களையும் கண்டுபிடித்தல் (ஆங்கிலம்) விவரிக்கிறது. “முற்கால சர்ச் . . . இதன் முக்கியத்துவத்தை சாஸ்திரிகளுடைய பரிசுகளின் ஒரு சடங்காச்சார ஆசரிப்புக்கு விவேகமாக மாற்றிவிட்டது.” இது—தாழ்மையுள்ள அந்த மேய்ப்பர்களைப் போலுள்ள—உண்மை வணக்கத்தார் செய்ததிலிருந்து எவ்வளவு வித்தியாசப்பட்டதாய் இருக்கிறது! அவர்கள் இயேசுவின் பிறப்பிற்காகக் கடவுளையே துதித்தனர்.
கிறிஸ்துவை ராஜாவாக மதியுங்கள்!
இயேசு இன்று குழந்தையாக இல்லை. அவர் வல்லமைவாய்ந்த ஒரு அதிபதியாக, கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக இருக்கிறார். ஆகவே அவருடைய ஸ்தானத்திற்கு ஏற்றவாறே அவர் மதிக்கப்படவேண்டும்.—1 தீமோத்தேயு 6:15, 16.
நீங்கள் இப்போது வளர்ந்து பெரியவராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் குழந்தையாய் இருந்தபோது எடுத்த போட்டோக்களை மக்கள் உங்கள் முன்னிலையில் காண்பித்தபோது நீங்கள் எப்போதாவது தர்மசங்கடமாக உணர்ந்ததுண்டா? அத்தகைய போட்டோக்கள் நீங்கள் பிறந்தபோது உங்களுடைய பெற்றோருக்கு உண்டான சந்தோஷத்தை அவர்களுடைய நினைவுக்குக் கொண்டுவரும் என்பது உண்மைதான். ஆனால் இப்போது உங்களுக்கே சொந்தமான ஒரு தனித்துவம் இருப்பதனால், நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அவ்வாறே மற்றவர்கள் உங்களைக் காணவேண்டும் என்று பொதுவாக விரும்புவதில்லையா? அதேபோலத்தான், தம்முடைய சீஷர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆட்கள் அவரை ராஜாவாக மதிக்கத் தவறுமளவுக்கு, ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸின் புறமதப் பாரம்பரியங்களிலும் ஒரு குழந்தையை மதிப்பதிலுமே மூழ்கியிருப்பது கிறிஸ்து இயேசுவுக்கு எந்தளவுக்கு அவமரியாதையைக் கொண்டுவரும் என்று யோசித்துப் பாருங்கள். ஏன், முதல் நூற்றாண்டிலும்கூட, கிறிஸ்து என்னவாக இருக்கிறாரோ அவ்வாறே—பரலோகத்தில் இருக்கும் ஒரு ராஜாவாகவே—கருதுவதன் பொருத்தத்தின்பேரில் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் நியாயவிவாதம் செய்தார். பவுல் எழுதினார்: “நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்”!—2 கொரிந்தியர் 5:16.
கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக, கிறிஸ்து, வேதனை, துன்பம், நோய், மரணம் போன்றவற்றை ஒழிப்பதற்கான தீர்க்கதரிசன வாக்குறுதியை விரைவில் நிஜமாக்குவார். இந்தப் பூமியில் பரதீசிய நிலைமைகளின்கீழ் அனைவருக்கும் போதுமான வீட்டுவசதிகளும் பலனளிக்கும் வேலையும் கிடைக்கும்படி பார்த்துக்கொள்பவர் அவரே. (ஏசாயா 65:21-23; லூக்கா 23:43; 2 கொரிந்தியர் 1:20; வெளிப்படுத்துதல் 21:3, 4) நிச்சயமாகவே, இயேசுவை அவமரியாதை செய்வதைத் தவிர்ப்பதற்குப் போதுமான காரணங்கள் இவையே!
கிறிஸ்துவின் சொந்த முன்மாதிரியைப் பின்பற்றி, உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய அயலகத்தாருக்கு யாராலும் கொடுக்க முடிந்ததைவிட மிகப் பெரிய பரிசுகளில் ஒன்றைக் கொடுக்க முயற்சிக்கின்றனர். அதுதான் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடிய கடவுளின் நோக்கத்தைப் பற்றிய அறிவாகும். (யோவான் 17:3) “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்,” என்று இயேசு சொன்னதைப்போலவே, இவ்வகையான பரிசளிப்பு அவர்களுக்கு அதிக சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது.—அப்போஸ்தலர் 20:35; லூக்கா 11:27, 28.
ஒருவர்மீது ஒருவர் உண்மையான கரிசனைகொள்ளும் கிறிஸ்தவர்கள், வருடத்தின் எந்தச் சமயத்திலும் தங்களுடைய அன்பைத் தானாகவே வெளிக்காட்டுவதைக் கடினமானதாகக் காண்பதில்லை. (பிலிப்பியர் 2:3, 4) ஒரு சிறிய உதாரணமாக, ஒரு பைபிள் பேச்சைக் கேட்ட பின்பு ஒரு கிறிஸ்தவ இளைஞன் தனது நன்றியுணர்வின் வெளிக்காட்டாக வரைந்த ஒரு படத்தை பெறுவது எவ்வளவு திளைப்பூட்டுவதாக இருக்கும்! ஒரு உறவினரிடத்திலிருந்து அன்பின் அடையாளமாகக் கிடைக்கக்கூடிய ஒரு எதிர்பாராத அன்பளிப்பும் அதேயளவு உற்சாகமூட்டக்கூடியதாக இருக்கிறது. அதைப்போலவே, கிறிஸ்தவ பெற்றோர் வருடம் முழுவதிலும் தகுந்த சர்ந்தர்ப்பங்களைத் தெரிந்தெடுத்துத் தங்களுடைய பிள்ளைகளுக்குப் பரிசுகளை வழங்குவதில் அதிக சந்தோஷமடைகின்றனர். இந்த வகையான கிறிஸ்தவ தாராள மனப்பான்மையானது, கொண்டாட்ட தினங்களில் ஏதாவது கொடுத்தேயாக வேண்டுமே என்ற கற்பனைக் கடமையாலோ புறமதப் பாரம்பரியத்தாலோ களங்கப்படுத்தப்படுவதில்லை.
மேற்கூறியவற்றின் காரணமாக, இன்று எல்லா நாடுகளிலும் இருந்துவரும் 45 லட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸைக் கொண்டாடுவதில்லை. அவர்களே யெகோவாவின் சாட்சிகள். கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப்பற்றி தங்களுடைய அயலகத்தாருக்குச் சாட்சிகொடுப்பதால் கிரமமாக தங்களையே சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றனர். (மத்தேயு 24:14) அவர்கள் உங்கள் வீட்டுக்கு, ஒருவேளை விரைவில், வரும்போது நீங்கள் அவர்களைச் சந்திக்கலாம். அவர்கள் தாங்கிவருவதை நீங்கள் ஆவலோடு ஏற்பது, வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் யெகோவா தேவனைத் துதிப்பது எவ்வாறு என்று கற்றுவருகையில் உங்கள் குடும்பத்தை அதிக சந்தோஷத்திற்கு வழிநடத்துவதாக.—சங்கீதம் 145:1, 2.
[பக்கம் 7-ன் படம்]
கிறிஸ்தவர்கள் தங்களுடைய அயலகத்தாருக்கு மிகப் பெரிய பரிசுகளில் ஒன்றை, நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடிய கடவுளின் நோக்கத்தைப் பற்றிய அறிவைக் கொடுக்கின்றனர்
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Culver Pictures