உலகமுழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள் பியூர்டோ ரிகோ
கரிபியன் கடலுக்கும் அட்லான்டிக் பெருங்கடலுக்குமிடையே செழிப்பான வெப்பமண்டல தீவாகிய பியூர்டோ ரிகோ அமைந்துள்ளது. 1493-இல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அதை ஸ்பெய்ன் நாட்டின் பிராந்தியமென உரிமைபாராட்டி, அதற்கு யோவான்ஸ்நானனின் நினைவாக சான் ஜுவான் பாட்டிஸ்டா என்று பெயரிட்டார். நீண்ட காலமாக அதனுடைய மிகப் பெரிய நகரம் பியூர்டோ ரிகோ அல்லது ஆங்கிலத்தில் “ரிச் போர்ட்” என்று அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில், இந்தப் பெயர் முழு தீவுக்கும் வழங்கும் பெயரானது, நகரமோ சான் ஜுவான் என்று அழைக்கப்படலானது.
பியூர்டோ ரிகோ பல அம்சங்களில் பணக்கார துறைமுகமாக நிரூபித்திருக்கிறது. ஸ்பானிய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் அதிகமாக தங்கம் இங்கிருந்து கப்பல் மூலம் அனுப்பப்பட்டது. தீவு இப்பொழுது கரும்பு, காப்பி, வாழைப்பழம் மற்றும் பேரினவகைப் பழங்களை ஏற்றுமதி செய்தபோதிலும் பெரும்பாலும் இன்று பொருளாதாரம் உற்பத்தி மற்றும் சேவை தொழிற்சாலைகளையே சார்ந்திருக்கிறது. என்றபோதிலும், பியூர்டோ ரிகோ அதைவிட இன்னும் அதிக முக்கியமான கருத்தில் பணக்காரத் துறைமுகமாக நிரூபித்திருக்கிறது.
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி இங்கே 1930-களில் பிரசங்கிக்கப்பட ஆரம்பித்தது. இன்று, 25,000-க்கும் மேலான நற்செய்தியின் பிரஸ்தாபிகள் பியூர்டோ ரிகோவில் உள்ளனர். 1993-ல் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் இந்தக் கிளையிலுள்ள பணியாளர் குழு 23-லிருந்து 100-க்கும் அதிகமானதாக உயர்ந்திருக்கிறது. இந்த அதிகரிப்பானது, ஸ்பானிய மொழிக்கு பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்ப்பதைக் கண்காணிக்கவும் உலகம் முழுவதிலும் ஸ்பானிய மொழிபேசும் சுமார் 35,00,00,000 பேருக்கு அதைக் கிடைக்கும்படிச் செய்யவும் இது அவசியமாக இருந்தது.
ஒரு புதிய பிராந்தியம்
கிளை அலுவலகம் மேலுமாக அறிவிப்பதாவது: “செவிடர்களுக்கு ராஜ்ய செய்தியை எடுத்துச்செல்ல நாங்கள் முயற்சிகளை எடுத்துவந்திருப்பதால் பியூர்டோ ரிகோவில் புதிய ஒரு பிராந்தியம் திறக்கப்பட்டிருக்கிறது. ஒரு சகோதரி பின்வரும் அனுபவத்தைக் கூறுகிறார்: “நான் செவிடர்கள் மத்தியில் வேலைசெய்து கொண்டிருந்தபோது, இரண்டு பிள்ளைகளைக் கொண்ட ஒரு பெண்மணியை சந்தித்தேன். நான் ஒரு சாட்சி என்பதை அவள் கண்டுகொண்டபோது, செவிடாக இருந்த அவளுடைய கணவன் யெகோவாவின் சாட்சிகளை விரும்பாத காரணத்தால் உடனடியாக சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டாள்.
“‘சில மாதங்களுக்குப் பின் இதே பெண்மணி சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருந்த ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றாள். பைபிள் படிப்பில் கலந்துகொண்டு அதை மிகவும் அனுபவித்துக் களித்தாள். நான் அந்தப் பெண்மணியை மீண்டும் சந்தித்தேன், அவள் மறுபடியுமாக சாட்சிகளைத் தன்னுடைய கணவன் விரும்புவதில்லை என்பதாக சொன்னாள். என்றபோதிலும், அவள் பைபிளை புரிந்துகொள்ள விரும்பினாள், சர்ச் பைபிளைப் போதிக்காத காரணத்தால் அதைக் குறித்து மிகவும் சலிப்புற்றிருந்தாள். ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி நாங்கள் படிக்க ஆரம்பித்தோம். ஒருநாள் தன்னுடைய கணவன் இருக்கும் ஒரு சமயத்தில், சனிக்கிழமை திரும்ப வரும்படியாக என்னிடம் சொன்னாள். “ஆனால் அவருக்கு எங்களைப் பிடிக்காதில்லையா?” என்று நான் கேட்டேன். அவள் இவ்வாறு பதிலளித்தாள்: “யெகோவாவின் சாட்சிகள் சரியாக என்ன போதிக்கிறார்கள் என்பதை அவர் கண்டுபிடிக்க விரும்புகிறார்.”
“‘அடுத்த நாள் இருவரும் என் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டிருந்தார்கள்! கணவனுக்கு அநேக கேள்விகள் இருந்தபடியால், செவிடருக்கான எங்களுடைய கூட்டங்களுக்கு வரும்படியாக அவர்களை அழைத்தேன். நான் போவதற்கு முன்பே அவர் அங்கிருந்தார், அப்போது முதற்கொண்டு அவர் ஒரு கூட்டத்தையும் தவறவிடவில்லை. அவர் மற்ற செவிடர்களுக்குப் பிரசங்கிக்கிறார், ஒரு அசெம்பிளிக்கு வந்திருந்தார், முழுக்காட்டப்பட அவர் ஆவலாய் எதிர்நோக்கியிருக்கிறார்.’”
கிளை அலுவலகத்தின் அறிக்கை தொடர்கிறது: “இந்த ஆண்டு எங்களுடைய மாவட்ட மாநாட்டில், முழு நிகழ்ச்சிநிரலும் சைகை மொழியில் அளிக்கப்பட்டது, அநேக செவிடர் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். பேச்சாளர் முடிவான பேச்சில் செவிடர் மத்தியில் செய்யப்பட்டுவரும் வேலையைப் பற்றி குறிப்பிட்டு சுமார் 70 பேர் ஆஜராயிருப்பதை எடுத்துச் சொன்னபோது அது மனதை உருக்கும் ஒரு கணமாக இருந்தது. அங்கு மிகுதியான கைதட்டல் இருந்தது, ஆனால் பேச்சாளர் குறிப்பிட்டது போல, செவிடரால் அதைக் கேட்கமுடியவில்லை. ஆகவே செவிடரைப் பார்வையாளர் பக்கமாக பார்க்கும்படியாக கேட்டுக்கொண்டு, பேச்சாளர் ‘செவிடான உங்கள் சகோதரர்களை உங்கள் மத்தியில் கொண்டிருப்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா?’ என்ற கேள்வியை மறுபடியும் கேட்டு—இரு கைகளையும் அசைத்து—கைதட்டும்படியாக பார்வையாளர்களைக் கேட்டுக்கொண்டார். 11,000 சகோதர சகோதரிகள் தங்கள் கைகளை அசைத்து ஆர்ப்பரிப்பதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. செவிடான நம்முடைய சகோதர சகோதரிகள் மிக அதிகமாக சந்தோஷப்பட்டு மாபெரும் சகோதரத்துவத்தின் பாகமாயிருப்பதாக உணர்ந்தார்கள். அநேகர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.”
யெகோவாவின் சாட்சிகள் பியூர்டோ ரிகோவில் அறுவடை வேலையில் பங்குகொள்ளும்போது, அது தொடர்ந்து ஒரு பணக்காரத் துறைமுகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘எல்லா தேசங்களிலுமுள்ள விரும்பத்தக்க காரியங்கள்’ என்பதாக அவர் அழைக்கின்ற கடவுளுடைய “மற்ற செம்மறியாடுகள்” யெகோவாவின் வீட்டை மகிமையால் நிரப்பும்பொருட்டு தொடர்ந்து உள்ளே வந்துகொண்டிருப்பர்.—யோவான் 10:16, NW; ஆகாய் 2:7, NW.
[பக்கம் 9-ன் பெட்டி]
நாட்டு தகவல்கள்
1994 ஊழிய ஆண்டு
சாட்சிகொடுப்பவர்களின் உச்ச எண்ணிக்கை: 25,428
விகிதம்: 1 சாட்சிக்கு 139
நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோர்: 60,252
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 2,329
சராசரி பைபிள் படிப்புகள்: 19,012
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 919
சபைகளின் எண்ணிக்கை: 312
கிளை அலுவலகம்: கைனபோ