தேவனுக்குப் பயப்படுகிறவர்களோடு கூடிவருதல்
“எல்லா இடங்களிலுமுள்ள ஆட்கள் பயத்திலிருந்து—வன்முறை பற்றிய பயம், வேலை இல்லாத பயம், கவலைக்கிடமான நோயினால் பயம்—விடுதலைக்காக ஏங்குகிறார்கள். நமக்கும் அந்த ஏக்கம் உண்டு. அப்படியானால், பயத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதைப் பற்றி நாம் ஏன் கலந்தாலோசிக்கிறோம்?” ஜூன் 1994-ல் ஆரம்பமான “தேவ பயம்” மாவட்ட மாநாடுகள் ஒவ்வொன்றிலும் முக்கிய பேச்சாளரால் அந்த ஆர்வத்தைத் தூண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.
முதலில் வட அமெரிக்கா, பின்னர் ஐரோப்பா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் சமுத்திரத்தின் தீவுகளில், ஆஜராயிருந்த லட்சக்கணக்கானோர், இப்படிப்பட்ட ஒரு பயத்தைக் கற்றுக்கொண்டு அதை வளர்த்துக்கொள்ள ஆவலாயிருந்தனர். ஏன்? ஏனென்றால் யெகோவா தேவன் அவருடைய மக்களுக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களில் நாம் பங்குபெறுவது, தேவ பயத்தைக் கொண்டிருப்பதன்பேரில் சார்ந்திருக்கிறது. மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் தேவ பயத்தைப் பற்றி கற்றுக்கொள்ளவே ஒன்றாகக் கூடிவந்திருந்தார்கள், மேலும் மூன்று நாள் நிகழ்ச்சியின்போது, இன்றியமையாத இந்தக் கிறிஸ்தவப் பண்பைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொண்டார்கள்.
‘தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்’
பிரசங்கி 12:13-ன் அடிப்படையில் அமைந்த இதுவே மாநாட்டின் முதல் நாளுக்குரிய பொருளாக இருந்தது. தேவனுக்குப் பயப்படுவது என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? நிகழ்ச்சிநிரலின் முதல் பகுதியிலேயே மாநாட்டு அக்கிராசனர், தேவ பயம் என்பது யெகோவாவிடம் மரியாதையோடுகூடிய அச்சம், ஆழ்ந்த பயபக்தி, அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஆரோக்கியமான பயம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்பதாக விளக்கினார். இப்படிப்பட்ட தேவ பயம் ஆரோக்கியம் குன்றிய திகில் அல்ல; அது ஆரோக்கியமுள்ளது, சரியானது.
ஆரோக்கியமுள்ள இந்தப் பயம் நமக்கு எவ்வாறு நன்மைபயக்குகிறது? அதைத் தொடர்ந்து வந்த “களைப்படைந்து விட்டுவிடாதேயுங்கள்” என்ற பேச்சு தேவ பயம் கடவுளுடைய கற்பனைகளைச் சந்தோஷத்தோடு கைக்கொள்ளுவதற்கு நம்மைத் தூண்டுவிக்கும் என்பதை விளக்கியது. தேவனிடமாகவும் அயலானிடமாகவும் அன்போடுகூட, இப்படிப்பட்ட பயம் நமக்குள் ஆவிக்குரிய ஆற்றலைப் புகட்டுவதாக இருக்கும். ஆம், தேவ பயம் நித்திய ஜீவனுக்கான ஓட்டத்தில் வேகம் குன்றிவிடுவதைத் தவிர்ப்பதற்கு நமக்கு உதவக்கூடும்.
நிகழ்ச்சிநிரலில் அடுத்தது, தேவ பயம் நம்மைத் தாங்கக்கூடும் என்பதற்கு உயிருள்ள அத்தாட்சியை அளித்த பேட்டிகள் இடம்பெற்றன. தேவனிடமாக பக்தியோடுகூடிய பயமானது, அக்கறையின்மை ஆர்வமின்மை அல்லது துன்புறுத்தலின் மத்தியிலும் ஊழியத்தில் தொடர்ந்திருக்கும்படியாக செய்து கடினமான தனிப்பட்ட கஷ்டங்கள் மத்தியிலும்கூட சகித்திருக்கும்படியாக எவ்வாறு தங்களுக்கு உதவியது என்பதை பேட்டி காணப்பட்டவர்கள் சொன்னார்கள்.
ஆனால் சிலருக்கு தேவ பயம் இருக்கையில் மற்றவர்களுக்கு அது ஏன் இல்லாமல் இருக்கிறது? “தேவ பயத்தை வளர்ப்பதும் அதிலிருந்து நன்மையடைவதும்,” என்ற பேச்சில் முக்கியப் பேச்சாளர் எரேமியா 32:37-39-ல் யெகோவா தம்முடைய ஜனத்துக்குத் தேவ பயமுள்ள இருதயத்தைக் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறார் என்று விளக்கினார். யெகோவா நம்முடைய இருதயங்களில் தேவ பயத்தை நன்கு பதிய வைக்கிறார். எவ்விதமாக? அவருடைய பரிசுத்த ஆவி மற்றும் அவருடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளின் மூலமாக அதைச் செய்கிறார். என்றபோதிலும், நாம் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் அவர் நமக்கு ஏற்பாடு செய்திருக்கும் ஏராளமான ஆவிக்குரிய காரியங்களை முழுமையாக அனுகூலப்படுத்திக்கொள்வதற்கும் ஊக்கமாக முயற்சிசெய்ய வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. அவருக்குப் பயந்திருக்க நமக்கு கற்றுக்கொடுத்து உதவிசெய்வதில் நம்முடைய மாநாடுகளும் சபை கூட்டங்களும் அடங்கும்.
பிற்பகல் நிகழ்ச்சிநிரல் யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கையாயிருங்கள் என்ற புத்திமதியோடு ஆரம்பமானது. இராஜ்யம், கிறிஸ்தவர்களாக நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கும் அடிப்படை வழிகளின் கலந்தாலோசிப்பு இதைப் பின்தொடர்ந்தது.
அடுத்து மாநாட்டின் மூன்று தொடர்பேச்சுகளில் முதலாவதானது இடம்பெற்றது. “தெய்வீக தேவைகளுக்குக் கீழ்ப்படிய தேவ பயம் நம்மை உந்துவிக்கிறது” என்பது இந்தத் தொடர் பேச்சின் தலைப்பாக இருந்தது. இது குடும்பத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது. அளிக்கப்பட்ட வேதப்பூர்வமான மற்றும் நடைமுறையான ஆலோசனைகளுக்கு ஒரு மாதிரியை இங்கே காணலாம்.
◻ கணவன்மார்களுக்கு: தேவ பயமானது ஒரு மனிதனை தன்னுடைய மனைவியைச் சொந்த சரீரமாக பாவித்து அன்புகூரும்படி செய்விக்க வேண்டும். (எபேசியர் 5:28, 29) ஒரு மனிதன் தன் சொந்த உடலை வேண்டுமென்றே காயப்படுத்திக் கொள்வதில்லை, தன் நண்பர்கள் முன் தன்னை அவமானப்படுத்திக் கொள்வதில்லை அல்லது தன் சொந்த குறைபாடுகளைக் குறித்து வீண்பேச்சு பேசுவதில்லை. அப்படியென்றால், அவன் தனக்கு அளித்துக்கொள்ளும் கண்ணியத்தோடும் மரியாதையோடும் தன்னுடைய மனைவியை நடத்தவேண்டும்.
◻ மனைவிமார்களுக்கு: இயேசுவின் தேவ பயம் ‘எப்போதும் தேவனைப் பிரியப்படுத்துவதற்கு’ அவரைத் தூண்டியது. (யோவான் 8:29) இது தங்கள் கணவன்மார்களோடு செயல்தொடர்பு கொள்ளும்போது மனைவிகள் பின்பற்றக்கூடிய சிறந்த ஒரு மனநிலையாகும்.
◻ பெற்றோருக்கு: கிறிஸ்தவ பெற்றோர் பெற்றோருக்குரிய தங்கள் கடமைகளைப் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொண்டு தங்களுடைய பிள்ளைகளை யெகோவாவிடமிருந்து வரும் சுதந்தரமாக கருதுவதன் மூலம் தேவ பயத்தைக் காண்பிக்கலாம். (சங்கீதம் 127:3) பெற்றோரின் முக்கியமான இலக்கு தங்கள் பிள்ளைகளை உண்மைக் கிறிஸ்தவர்களாக வளர்க்கவேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும்.
◻ பிள்ளைகளுக்கு: ‘பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்ப்படியும்படியாக’ யெகோவா பிள்ளைகளுக்குக் கட்டளையிடுகிறார். (எபேசியர் 6:1) ஆகவே, அவர்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிவது கடவுளுக்குக் கீழ்ப்படிவதாக இருக்கிறது.
அந்நாளின் முடிவான பேச்சு நம்முடைய உணர்ச்சிகளை நெகிழச் செய்வதாக அமைந்திருந்தது, ஏனென்றால் மரணத்தில் நாம் நேசிக்கிற ஒருவரை இழந்துபோகையில் அனைவரும் அனுபவிக்கும் அந்த ஆழமான உணர்ச்சிகளைப் பற்றி அது கலந்தாலோசித்தது. என்றபோதிலும், பேச்சின் பாதியில், ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. பேச்சாளர் நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற புதிய சிற்றேட்டின் வெளியீட்டை அறிவித்து பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த 32 பக்க, முழு வர்ண பிரசுரம் அன்பான ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து தோன்றக்கூடிய நினைவுகளையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளவும் சமாளிக்கவும் துக்கத்திலிருக்கும் ஒருவருக்கு உதவக்கூடிய அதிகத்தைச் சொல்கிறது. துக்கத்திலிருக்கும் ஒரு நபரிடமாக என்ன சொல்வதென்று அறியாமல் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா? துக்கத்திலிருப்பவர்களுக்கு நாம் எவ்விதமாக உதவலாம் என்பதை இந்தச் சிற்றேட்டின் ஒரு பகுதி கலந்தாராய்கிறது. பேச்சாளருக்குச் செவிகொடுத்துக்கொண்டே, பார்வையாளர் பகுதியிலிருந்த அநேகர் இந்தப் புதிய சிற்றேட்டிலிருந்து நன்மையடையக்கூடிய எவரோ ஒருவரைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தனர்.
‘தேவ பயத்தோடும் ஆழ்ந்த மரியாதையுள்ள அச்சத்தோடும் பரிசுத்த சேவை செய்யுங்கள்’
அதுவே எபிரெயர் 12:28-ன் அடிப்படையில் அமைந்த இரண்டாம் நாளின் பொருளாக இருந்தது. காலை நிகழ்ச்சியில் “யெகோவாவுக்கு பயப்படும் பயத்தில் நடக்கும் சபைகள்” என்ற இரண்டாவது தொடர்பேச்சு இடம்பெற்றது. முதல் பகுதி, கூட்டங்களுக்கு ஆஜராவதைப் பற்றியதாக இருந்தது. கூட்டங்களில் நாம் ஆஜராவது கடவுள் பேரிலும் அவருடைய ஆவிக்குரிய ஏற்பாடுகள் பேரிலும் நமக்குள்ள மரியாதையை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. ஆஜராயிருப்பதன் மூலமாக, நாம் அவருடைய பெயருக்குப் பயப்படுவதையும் அவருடைய சித்தத்துக்கு இசைவாக செல்வதற்கு நமக்கு இருக்கும் மனவிருப்பத்தையும் காண்பிக்கிறோம். (எபிரெயர் 10:24, 25) சபை முழுமையுமாக யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் நடப்பதற்கு ஒவ்வொரு தனிநபரும் நல்நடத்தையைக் காத்துக்கொள்வதில் தன்னுடைய பங்கைச் செய்யவேண்டும் என்பதை இரண்டாவது பேச்சாளர் விளக்கினார். கடைசி பேச்சாளர் எல்லா கிறிஸ்தவர்களுக்குமிருக்கும் ஒரு சிலாக்கியத்தையும் கடமையையும் பற்றி பேசினார்—இடைவிடாமல் நற்செய்தியை அறிவிப்பது. நாம் எவ்வளவு காலமாக தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டிருப்போம்? யெகோவா போதும் என்று சொல்லும்வரையாக.—ஏசாயா 6:11.
“யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய அரண்” என்பது அடுத்த பேச்சின் பொருளாக இருந்தது. இந்தப் பத்திரிகையின் படிப்பு கட்டுரைகள் இதைத் தற்போது கலந்தாலோசிக்கிறது. (நெகேமியா 8:10) யெகோவாவின் மக்கள் ஏன் சந்தோஷமுள்ளவர்களாக இருக்கின்றனர்? பேச்சாளர் அநேக காரணங்களைக் குறிப்பிட்டார். கடவுளோடு கொண்டிருக்கும் ஒரு நெருக்கமான உறவு பூமியிலேயே நம்மை அதிக சந்தோஷமுள்ள ஜனமாக ஆக்குகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு காரணமாகும். சற்று சிந்தித்துப் பாருங்கள், யெகோவா இயேசு கிறிஸ்துவினிடமாக இழுத்துக்கொண்டிருக்கும் மக்களின் மத்தியிலிருக்கும் சிலாக்கியம் நமக்கு இருப்பதை மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுக்குப் பேச்சாளர் நினைப்பூட்டினார். (யோவான் 6:44) சந்தோஷத்துக்குப் பலமான ஒரு காரணம்!
ஒவ்வொரு மாநாட்டிலும் முக்கிய அம்சமாயிருப்பது முழுக்காட்டுதலாகும், “தேவ பயம்” மாநாடுகள் இதற்கு விதிவிலக்கல்ல. “யெகோவாவின் பேரிலுள்ள பயத்தோடு செய்யப்படும் ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும்,” என்ற பேச்சில் பேச்சாளர் முழுக்காட்டப்படும் எல்லா ஆட்களின் தனிப்பட்ட கடமைகள் நான்கு பிரிவுகளைக் கொண்டவை என்பதை விளக்கினார்: (1) நாம் கடவுளுடைய வார்த்தையை புரிந்துகொள்ளவும் அதைப் பொருத்தவும் நமக்கு உதவக்கூடிய பிரசுரங்களின் உதவியோடு படிக்கவேண்டும்; (2) நாம் ஜெபம் செய்வது அவசியம்; (3) சபை கூட்டங்களில் நாம் உடன்விசுவாசிகளோடு கூட்டுறவுகொள்ள வேண்டும்; மேலும் (4) யெகோவாவின் பெயருக்கும் ராஜ்யத்துக்கும் நாம் சாட்சிகொடுக்க வேண்டும்.
சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ச்சிநிரல் “யெகோவாவால் கைவிடப்படாத ஜனங்கள்” என்ற நம்பிக்கையூட்டும் பொருளோடு ஆரம்பமானது. முப்பத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாக, இஸ்ரவேல் தேசத்தார் கடினமான காலங்களை எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தபோது, மோசேயின் மூலமாக யெகோவா ‘உங்கள் தேவனாகிய யெகோவா . . . உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை,’ என்பதாகச் சொல்லி ஒரு உத்தரவாதம் அளித்தார். (உபாகமம் 31:6, NW) இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்தபோதும், அதை சுதந்தரமாக எடுத்துக்கொண்டபோதும், அவர்களைப் பாதுகாப்பதன் மூலம் யெகோவா அந்த உத்தரவாதத்துக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். இன்று கடினமான சோதனைகளை நாம் எதிர்ப்படும்போது, நாமும்கூட அவரை நெருக்கமாக பற்றிக்கொண்டு அவருடைய வார்த்தையிலுள்ள ஆலோசனைக்குச் செவிகொடுக்கும் பட்சத்தில் யெகோவா நம்மை கைவிடமாட்டார் என்ற முழு நம்பிக்கையுடனும் இருக்கலாம்.
பைபிளை வாசிப்பதில் நீங்கள் எவ்வாறு இன்பத்தைக் கண்டடையலாம்? “கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினமும் வாசியுங்கள்” என்ற பேச்சில், பேச்சாளர் அறிய ஆவலுள்ள மனதோடும் பின்வருவது போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் வாசிப்பதை ஆலோசனையாகச் சொன்னார்: யெகோவாவின் குணங்கள், வழிகள் ஆகியவற்றைக் குறித்து இந்தப் பதிவு எனக்கு என்ன கற்பிக்கிறது? இந்த அம்சங்களில் நான் எப்படி அதிகமாக யெகோவாவைப் போன்று இருக்கமுடியும்? இவ்விதமாக பைபிளை வாசிப்பது அதிக இன்பம் தருகின்ற மற்றும் பயனுள்ள அனுபவமாக இருக்கிறது.
“யெகோவாவுக்கு பயப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய ஏற்பாடுகள்” என்ற நிகழ்ச்சிநிரலின் மூன்றாவது தொடர்பேச்சின்மீது அடுத்து கவனம் ஒருமுகப்படுத்தப்பட்டது. யெகோவா இன்று அவருடைய ஊழியர்களுக்காக அற்புதங்களை நடப்பிக்காமல் இருந்தாலும், அவருக்குப் பயப்படுகிறவர்களின் உதவிக்கு நிச்சயமாகவே வருகிறார். (2 பேதுரு 2:9) இந்தத் தொடர்பேச்சு இந்தக் கடினமான காலங்களில் நமக்கு உதவிசெய்ய யெகோவாவிடமிருந்து வரும் நான்கு ஏற்பாடுகளைச் சிந்தித்தது: (1) தம்முடைய ஆவியின் மூலம் நம்முடைய சொந்த பலத்தினால் செய்யமுடியாத வேலைகளை நிறைவேற்றுவதற்கு யெகோவா நமக்கு வல்லமை அளிக்கிறார். (2) தம்முடைய வார்த்தையின் மூலம் அவர் புத்திமதியும் வழிநடத்துதலும் அளிக்கிறார். (3) மீட்கும் பொருள் பலியின் மூலம் அவர் நமக்கு ஒரு சுத்தமான மனச்சாட்சியை அருளிச்செய்கிறார். (4) மூப்பர்கள் உட்பட, தம்முடைய அமைப்பின் மூலம் அவர் வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் அளிக்கிறார். (லூக்கா 11:13; எபேசியர் 1:7; 2 தீமோத்தேயு 3:16; எபிரெயர் 13:17) இந்த ஏற்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம், நாம் சகித்திருக்கவும் இதன் மூலமாக யெகோவாவின் அங்கீகாரத்தைச் சம்பாதித்துக்கொள்ளவும் முடியும்.
மல்கியா தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் அமைந்த “யெகோவாவின் பயங்கரமான நாள் அண்மையில் இருக்கிறது” என்பது சனிக்கிழமை பிற்பகலின் கடைசி பேச்சின் தலைப்பாக இருந்தது. பொ.ச. 70-ல் எருசலேமின் மேல் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட்ட சமயத்தை போல கடந்த கால வரலாற்றில் பயங்கரமான நாட்கள் இருந்திருக்கின்றன. ஆனால் எல்லா மனித அனுபவத்திலும் மிகவும் பயங்கரமான நாள் ‘தேவனை அறியாதவர்கள் மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள் மேலும் ஆக்கினையைக் கொண்டுவரும்,’ வரவிருக்கும் யெகோவாவின் நாளாக இருக்கும். (2 தெசலோனிக்கேயர் 1:6-8, NW) அது எவ்வளவு சீக்கிரமாக இருக்கும்? பேச்சாளர் சொன்னார்: “முடிவு சமீபமாயிருக்கிறது! யெகோவா அந்த நாளையும் மணிநேரத்தையும் அறிவார். அவர் தம்முடைய கால அட்டவணையை மாற்றிக்கொள்ள மாட்டார். நாம் பொறுமையுடன் சகித்திருக்கும்படியாக கேட்கப்படுகிறோம்.”
இரண்டு நாட்கள் ஏற்கெனவே கடந்துவிட்டதை நம்புவது கடினமாக இருந்தது. கடைசி நாள் நிகழ்ச்சிநிரல் என்னவாக இருக்கும்?
“தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்”
மூன்றாம் நாளின் பொருள் வெளிப்படுத்துதல் 14:7-ன் அடிப்படையில் அமைந்திருந்தது. காலை நிகழ்ச்சியின்போது, யெகோவாவின் சாட்சிகளை மற்ற எல்லா மத அமைப்புகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டிய ஒருசில கோட்பாடு சம்பந்தப்பட்ட போதகங்களை வரிசையாக கொடுக்கப்பட்ட பேச்சுகள் உயர்த்திக் காண்பித்தன.
“நீதிமான்களுக்கு ஓர் உயிர்த்தெழுதல் உண்டு,” என்ற பேச்சில் பேச்சாளர் அக்கறையூட்டும் ஒரு கேள்வியை எழுப்பினார்: “அந்த ஆயிர வருட நியாயத்தீர்ப்பு நாளின்போது, சாத்தானின் காரிய ஒழுங்குமுறையின் இறுதி ஆண்டுகளில், உண்மையுள்ளவர்களாய் மரித்துப்போனவர்கள் எப்போது உயிர்த்தெழுப்பப்படுவர்?” பதில்? “பைபிள் சொல்வதில்லை,” என்று பேச்சாளர் விளக்கினார். “என்றபோதிலும், நியாயத்தீர்ப்பு நாள் முழுவதும் செய்யப்படவிருக்கிற பிரம்மாண்டமான கல்வி புகட்டும் வேலையில், அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கும் திரள்கூட்டத்தாரோடு பங்குகொள்வதற்கு, நம்முடைய நாளில் மரிப்பவர்கள் துவக்கத்திலேயே உயிர்த்தெழுப்பப்படுவர் என்பது நியாயமாக இல்லையா? ஆம், உண்மையிலேயே!” தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்களா? நிச்சயமாக இருப்பார்கள். இதைக் குறித்து நமக்கு உறுதியளிக்கும் பைபிள் போதகங்களும் உதாரணங்களும் “மிகுந்த உபத்திரவத்தினூடே உயிரோடு பாதுகாக்கப்படுதல்” என்ற அடுத்த பேச்சில் தெளிவாக விளக்கப்பட்டன.
பைபிள் இரண்டு முடிவுகளைப் பற்றி பேசுவதை யெகோவாவின் சாட்சிகள் வெகு காலமாக புரிந்துகொண்டிருக்கின்றனர்—எண்ண முடியாத இலட்சக்கணக்கான ஆட்களுக்குப் பரதீஸான பூமியில் நித்திய ஜீவன் மற்றும் கிறிஸ்துவோடு அவருடைய ராஜ்யத்தில் ஆட்சிசெய்யப்போகும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானவர்களுக்குச் சாவாமையுள்ள பரலோக வாழ்க்கை. பரலோக நம்பிக்கை “பயப்படாதே, சிறு மந்தையே” என்ற பேச்சில் கலந்தாலோசிக்கப்பட்டது. (லூக்கா 12:32) தற்போதைய உலக நிலைமைகளின் காரணமாக, சிறுமந்தை பயப்படாமல் இருக்கவேண்டும்; அவர்களில் ஒவ்வொருவரும் முடிவு வரை சகித்திருக்க வேண்டும். (லூக்கா 21:19) “அவர்கள் பயமின்றி இருப்பது திரள்கூட்டத்தாரை உற்சாகப்படுத்துகிறது. இப்பூமி ஒருபோதும் அறிந்திராத பெருங்கஷ்டமான காலத்தின்போது, விடுதலையை எதிர்பார்த்திருக்கும் அவர்களும்கூட பயமின்றி இருக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்பதாக பேச்சாளர் சொன்னார்.
காலை நிகழ்ச்சிநிரலின் முடிவில், பார்வையாளர்கள் நீங்கள் எதிர்ப்படும் தெரிவுகள் என்ற பைபிள் நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்தார்கள். யோசுவாவின் நாட்களிலும், எலியா தீர்க்கதரிசியின் நாட்களிலும், இஸ்ரவேலர் தீர்மானம் செய்ய வேண்டியவர்களாக இருந்தனர். ஒரு தெரிவு செய்யப்பட வேண்டியதாக இருந்தது. எலியா சொன்னார்: “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்.” (1 இராஜாக்கள் 18:21) இன்றும்கூட, மனிதவர்க்கம் ஒரு தீர்மானத்தைச் செய்யவேண்டிய நிலையில் இருக்கிறது. இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பதற்கு இது காலமல்ல. சரியான தெரிவு என்ன? பண்டைய காலத்தில் யோசுவா செய்த அதே தெரிவுதான். அவர் சொன்னார்: “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே [யெகோவாவையே, NW] சேவிப்போம்.”—யோசுவா 24:15.
திடீரென்று, ஞாயிறு பிற்பகலாகவும் “மெய்க் கடவுளுக்கு ஏன் இப்போது பயப்படவேண்டும்,” என்ற தலைப்பில் பொதுப் பேச்சுக்கு நேரமாகவும் இருந்தது. வெளிப்படுத்துதல் 14:6, 7-ல் மனிதவர்க்கத்தினர் அனைவரும் பின்வருமாறு துரிதப்படுத்தப்படுகின்றனர்: “தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்.” தேவனுக்கு இப்பொழுது பயப்படுவது ஏன் அவசரமாக இருக்கிறது? ஏனென்றால் வேதவசனம் தொடர்ந்து சொல்கிறபடி, “அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளைவந்தது.” கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக இப்பொழுது சிங்காசனத்திலேற்றப்பட்டிருக்கும் அவருடைய குமாரனின் மூலமாக, யெகோவா தற்போதிருக்கும் அசுத்தமான, கலகத்தனமான காரிய ஒழுங்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவார். தேவனுக்குப் பயப்படுகிறவர்களுக்கு விடுதலையைக் கொண்டுவந்து நம்முடைய பூமிக்குரிய வீட்டை காப்பாற்றி அதைப் பாதுகாப்பதற்கு இதுவே ஒரே வழியாக இருப்பதை பேச்சாளர் விளக்கினார். இவை இந்த காரிய ஒழுங்கின் கடைசி நாட்களாக இருப்பதன் காரணமாக, மெய் தேவனுக்கு இப்பொழுதே நாம் பயப்படுவது அவசரமானதாக இருக்கிறது!
அந்த வாரத்துக்குரிய காவற்கோபுர பாடத்தின் சுருக்கத்தைத் தொடர்ந்து கடைசி பேச்சாளர் பேச்சைக் கொடுக்க மேடைக்கு வந்தார். மாநாடு நிகழ்ச்சியின் ஒரு விளைவாக, மாநாட்டுக்கு வந்திருப்பவர்களுக்குத் தேவ பயம் கூடுதலான அர்த்தத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதாக அவர் விளக்கினார். தேவனுக்குப் பயப்படுகிறவர்களுக்கு வரும் அநேக நன்மைகளை அவர் அழுத்திக் காண்பித்தார். பேச்சாளர் தெய்வீக போதனையால் ஒன்றுபட்டிருத்தல் என்ற புதிய வீடியோ வெளியீட்டினை அறிவித்தார். அது 1993-94-ல் நடத்தப்பட்ட “தெய்வீக போதனை” சர்வதேச மாநாடுகளின் தனித்தன்மைவாய்ந்த அம்சங்களை உயர்த்திக்காண்பிக்கிறது. பேச்சு முடிந்துகொண்டிருக்கும் சமயத்தில், அநேகர் ‘அடுத்த ஆண்டு நாம் எதை எதிர்பார்க்கலாம்?’ என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். அநேக இடங்களில் மூன்று நாள் மாவட்ட மாநாடுகளை நாம் எதிர்பார்க்கலாம்.
முடிவாக, பேச்சாளர் மல்கியா 3:16-ஐ குறிப்பிட்டார், அது இவ்விதமாகச் சொல்கிறது: “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார், கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.” மாநாடுக்கு வந்திருந்தவர்கள் யெகோவாவின் பெயரை தியானிக்கவும் தேவ பயத்தோடு அவரைச் சேவிக்கவும் தெளிவாக தீர்மானித்தவர்களாய் புறப்பட்டுச் சென்றனர்.
[பக்கம் 24-ன் படம்]
முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் தொடர்ந்து தேவ பயத்தைக் காட்டுவது அவசியமாகும்
[பக்கம் 25-ன் படம்]
“நீங்கள் எதிர்ப்படும் தெரிவுகள்” நாடகம் யெகோவாவைச் சேவிப்பதைக் குறித்து தீர்மானமாய் இருப்பதன் அவசியத்தை செவிகொடுப்போரின் மனதில் பதியவைத்தது
[பக்கம் 26-ன் படம்]
மாநாட்டுக்கு வந்திருந்தோர் “நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்” என்ற புதிய சிற்றேட்டைப் பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைந்தனர்