ஏன் இது தீர்மானம் எடுக்கவேண்டிய நேரம்?
கடவுள் இஸ்ரவேலரை பொ.ச.மு. 16-ஆம் நூற்றாண்டில், ‘சகல ஜனங்களிலும் சொந்த சம்பத்தாயும், பரிசுத்த ஜாதியாயும்’ தேர்ந்தெடுத்தார். (யாத்திராகமம் 19:5, 6) அவர்கள் விரைவில் தங்கள் பரிசுத்தத்தன்மையையும், தங்கள் மதசம்பந்தமான தூய்மையையும் இழந்து போயினர், தங்களைச் சுற்றியிருந்த தேசங்களின் விக்கிரக வணக்கம், அசுத்தமான பழக்கவழக்கங்கள் ஆகியவை தங்களைக் கறைபடுத்தும்படி அனுமதித்தனர். இவ்வாறு அவர்கள் தங்களை “வணங்காக் கழுத்துள்ள ஜனமாக” வெளிக்காட்டினர். (உபாகமம் 9:6, 13; 10:16; 1 கொரிந்தியர் 10:7-11) யோசுவா மரித்துப்போன பின்பு பின்தொடர்ந்து வந்த முந்நூறு வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில், மெய் வணக்கத்துக்கு இஸ்ரவேலர்களை மறுபடியும் வழிநடத்தியிருக்க வேண்டிய உண்மையுள்ள வழிகாட்டிகளான நியாயாதிபதிகளை யெகோவா எழுப்பினார். ஆனால் ஜனங்களோ, “தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.”—நியாயாதிபதிகள் 2:17-19.
அதற்குப் பின்பு, மெய் வணக்கத்துக்குத் திரும்பும்படி ஜனங்களைத் தூண்டுவிப்பதற்குக் கடவுள் உண்மையுள்ள ராஜாக்களையும் தீர்க்கதரிசிகளையும் எழுப்பினார். அசரியா தீர்க்கதரிசி யெகோவாவைத் தேடும்படி ஆசா ராஜாவையும் அவருடைய உடனொத்த நாட்டவரையும் உற்சாகப்படுத்தினார்: “நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டு விடுவார்.” யூத ராஜ்யத்தில் ஆசா மத சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். (2 நாளாகமம் 15:1-16) பிறகு, கடவுள் தம் தீர்க்கதரிசியாகிய யோவேல் மூலம் அழைப்பை மீண்டும் கொடுக்க வேண்டியிருந்தது. (யோவேல் 2:12, 13) அதற்கும் பிற்பட்ட காலத்தில், யூதாவில் குடியிருந்தோரை “யெகோவாவைத் தேடு”ம்படி செப்பனியா அறிவுரை கூறினார். விக்கிரக ஆராதனையையும் கறைபடிந்த நிலையையும் நீக்குவதற்கு சீர்திருத்தங்கள் அடங்கிய திட்டத்தின் மூலம் இளம் யோசியா ராஜா அதைச் செய்தார்.—செப்பனியா 2:3, NW; 2 நாளாகமம் 34:3-7.
இப்படிப்பட்ட மனந்திரும்பிய சம்பவங்கள் இருந்தபோதிலும், ஜனங்களின் மதசம்பந்தமான நிலைமை இன்னும் அதிகமதிகமாக நெருக்கடி நிலையை எட்டியது. (எரேமியா 2:13; 44:4, 5) விக்கிரக ஆராதனை சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களினால் கறைபட்டிருந்த மத ஒழுங்குமுறையை எரேமியா வெளிப்படையாகக் கண்டித்து, சீர்திருத்த முடியாது என்று அதை இவ்வாறு விவரித்தார்: “எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.” (எரேமியா 13:23) இந்தக் காரணத்துக்காக யூத தேசத்தின் மேல் கடவுள் மிகவும் கடுமையான தண்டனை கொண்டுவந்தார். பொ.ச.மு. 607-ல் எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்டது, தப்பிப்பிழைத்தவர்கள் அடிமைகளாக பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டனர், அங்கே அவர்கள் 70 ஆண்டுகள் தங்கியிருந்தனர்.
அந்தக் காலப்பகுதி முடிவடைந்தபோது, கடவுள் இரக்கம் காண்பித்தார். இஸ்ரவேலரை விடுவிக்கும்படி அவர் கோரேசு ராஜாவைத் தூண்டினார், அவர்களில் மீதியானோர் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு எருசலேமுக்குத் திரும்பி வந்தனர். இவையனைத்திலிருந்தும் பாடம் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் மறுபடியும் மெய் வணக்கத்தை விட்டு விலகி, யெகோவா தம்முடைய அழைப்பை மீண்டும் கொடுக்கும்படி செய்தனர்: “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்.”—மல்கியா 3:7.
இஸ்ரவேல் ஏன் நிராகரிக்கப்பட்டது
இயேசுவின் காலத்திலிருந்த இஸ்ரவேலர்களின் மத நிலைமை எப்படி இருந்தது? மாய்மாலமான மதத்தலைவர்கள் ‘குருட்டு வழிகாட்டிகளாக’ இருந்து “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து” கொண்டிருந்தனர். ‘அவர்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிக் கொண்டிருந்தார்கள்.’ அந்த ஜனங்கள் கடவுளை “தங்கள் உதடுகளினால்” கனம்பண்ணினார்கள், ஆனால் அவர்களுடைய இருதயம் அவரிடமிருந்து தூரமாய் விலகியிருந்தது. (மத்தேயு 15:3, 4, 8, 9, 14) அவர்கள் ஒரு தேசமாக மனந்திரும்புவதற்கு இன்னும் ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா? இல்லை. இயேசு சொன்னார்: “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.” அவர் மேலுமாக சொன்னார்: “உங்கள் வீடு,” எருசலேமிலிருந்த ஆலயம், “உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.” (மத்தேயு 21:43; 23:38) அவர்களுடைய தவறு மிகப் பெரியதாக இருந்தது. அவர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவரைக் கொலை செய்தனர். கொடுங்கோலனாக இருந்த ரோம இராயனை அவர்கள் தங்கள் ராஜாவாக தேர்ந்தெடுத்தனர்.—மத்தேயு 27:25; யோவான் 19:15.
இயேசு ஊழியம் செய்த காலப்பகுதி நியாயத்தீர்ப்பு செய்யும் நேரமாக இருந்தது என்பதை இஸ்ரவேலர்கள் புரிந்துகொள்ள விரும்பவில்லை. எருசலேமில் குடியிருந்த உண்மையற்றவர்களை நோக்கி இயேசு சொன்னார்: ‘உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனாய்.’—லூக்கா 19:43.
பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளன்று ஒரு புதிய தேசத்தை அல்லது ஜனத்தை கடவுள் ஏற்படுத்தினார். இவர்கள் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகிய ஆவியினால்-அபிஷேகம்செய்யப்பட்டவர்கள், ஒவ்வொரு தேசத்திலிருந்தும் இனத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (அப்போஸ்தலர் 10:34, 35; 15:14) யூத மத ஒழுங்குமுறை இறுதியில் சீர்திருத்தப்படமுடியும் என்ற நம்பிக்கை ஏதாவது இருந்ததா? எருசலேமை பொ.ச. 70-ல் தரைமட்டமாக்கியதன் மூலம் ரோம சேனைகள் அதற்கான பதிலைத் தந்தன. கடவுள் அந்த மத ஒழுங்குமுறையை முழுவதுமாக நிராகரித்தார்.—லூக்கா 21:5, 6.
கிறிஸ்தவமண்டலத்தின் பெரும் விசுவாசத்துரோகம்
ஆவியினால்-அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும்கூட “பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும்” ஆக்கப்பட்டார்கள். (1 பேதுரு 2:9; கலாத்தியர் 6:16) ஆனால் பண்டைக்காலத்திய கிறிஸ்தவ சபைகூட அதன் மதத்தூய்மையை நீண்டகாலமாக காத்துக்கொள்ளவில்லை.
ஒரு பெரும் விசுவாசத்துரோகம் அல்லது மெய் விசுவாசத்திலிருந்து விழுந்து போவதைப் பற்றி வேதாகமம் முன்னறிவித்தது. இயேசுவின் உவமையிலுள்ள அடையாளப்பூர்வமான களைகள், அதாவது போலி கிறிஸ்தவர்கள், அடையாளப்பூர்வமான கோதுமை அல்லது கடவுளுடைய ஆவியினால் அபிஷேகம்செய்யப்பட்ட மெய்க் கிறிஸ்தவர்களை நெரித்துப் போடுவதற்கு முயற்சி செய்வார்கள். கடவுளின் பெரும் பகைவன், பிசாசானவன் முன்னேற்றுவித்திருக்கும் பொய்க் கிறிஸ்தவம் “மனுஷர் நித்திரைபண்ணுகையில்” பரவுவதற்கு ஆரம்பிக்க இருந்தது என்று உவமை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவின் உண்மையான அப்போஸ்தலர் மரித்தப் பிறகு, ஆவிக்குரிய விதத்தில் உறங்கிவழிகின்ற நிலையில் இருந்த காலப்பகுதியின் போது இது நடந்தது. (மத்தேயு 13:24-30, 36-43; 2 தெசலோனிக்கேயர் 2:6-8) அப்போஸ்தலரால் முன்னறிவிக்கப்பட்டபடி, அநேக போலி கிறிஸ்தவர்கள் தவறான முறையில் தந்திரமாக மந்தைக்குள் வந்தனர். (அப்போஸ்தலர் 20:29, 30; 1 தீமோத்தேயு 4:1-3; 2 தீமோத்தேயு 2:16-18; 2 பேதுரு 2:1-3) யோவான் தான் கடைசியாக மரித்துப் போன அப்போஸ்தலன். ‘கடைசிக்காலம்,’ அப்போஸ்தலரின் காலப்பகுதியின் இறுதி பாகம், ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது என்று அவர் சுமார் பொ.ச. 98-ல் எழுதினார்.—1 யோவான் 2:18, 19.
மதத்துக்கும் அரசியல் அதிகாரத்துக்கும் இடையே இருந்த நட்புத்தொடர்பை ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டீன் உறுதிசெய்தது முதற்கொண்டு, கிறிஸ்தவமண்டலத்தின் ஆவிக்குரிய, கோட்பாட்டுக்குரிய, ஒழுக்கத்துக்குரிய நிலைமை மிகவும் மோசமடைந்தது. கிறிஸ்தவ நோக்குநிலையிலிருந்து காண்கையில், “நான்காம் நூற்றாண்டின் போது சர்ச் அடைந்த வெற்றி, ஒரு விபரீத சம்பவம்” என்று அநேக சரித்திர ஆசிரியர்கள் ஒத்துக்கொள்கின்றனர். ‘கிறிஸ்தவமண்டலம் அதன் உயர்ந்த ஒழுக்க நிலையை இழந்தது.’ மேலும் “மரியாள் வழிபாட்டு மரபு,” “புனிதர்கள்” வணக்கம், திரித்துவக் கோட்பாடு போன்ற அநேக பழக்கவழக்கங்களையும் தத்துவங்களையும் புறமதங்களிலிருந்து ஏற்றுக்கொண்டது.
அவளுடைய பொய்யான வெற்றிக்குப்பின், கிறிஸ்தவமண்டலத்தின் நிலைமை சீரழிந்தது. போப்புகள் மற்றும் திருச்சபைக்கூட்டங்கள் கொடுத்த கட்டளைகள், கோட்பாட்டு விளக்கங்கள், கடும் சமய விசாரணையோடுகூட சிலுவைப்போர்கள், கத்தோலிக்கருக்கும் புராட்டஸ்டன்டினருக்கும் இடையே “பரிசுத்த” போர்கள் ஆகியவை சீர்திருத்தப்படமுடியாத மத ஒழுங்கைப் பிறப்பித்தன.
நெருப்பின் மூலம் மட்டுமே ஒளிவீசும் ஓர் உலகம் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் வில்லியம் மான்ச்செஸ்டர் எழுதுகிறார்: “பதினைந்தாம் மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் இருந்த போப்புகள் ரோமப் பேரரசர்களைப் போல் வாழ்ந்தனர். அவர்கள் உலகிலேயே பெரும் செல்வந்தர்களாக இருந்தனர், அவர்களும் அவர்களுடைய கார்டினல்களும் புனித பதவிகளைப் பணத்துக்கு விற்பதன் மூலம் இன்னுமதிக செல்வம் பெருக்கிக்கொண்டனர்.” பெரும் விசுவாசத்துரோகம் ஏற்பட்டபோது, சிறு தொகுதிகள் அல்லது தனிப்பட்ட நபர்கள் அடையாளப்பூர்வமான கோதுமையின் தன்மைகளை வெளிக்காட்டி மெய்க் கிறிஸ்தவத்தை மறுபடியும் கண்டுபிடிக்க முற்பட்டனர். அவர்கள் அதற்காக அடிக்கடி கடும் துன்புறுத்தலை அனுபவித்தனர். அதே புத்தகம் சொல்கிறது: “கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் பிரிவுகளின் உண்மையான புனிதர்கள் இரத்தசாட்சிகளாக எரிக்கப்படுவதன் மூலம் கருநிறமாக்கப்பட்டதைப் போல் அது சில சமயங்களில் தோன்றியது.” மற்றவர்கள், சீர்திருத்தவாதிகள் என்றழைக்கப்பட்ட மார்ட்டின் லூத்தர், ஜான் கால்வின் போன்றவர்கள் கத்தோலிக்க சர்ச்சிலிருந்து பிரிந்துசென்ற, நிலைத்து நிற்கக்கூடிய மத ஒழுங்குமுறைகளை உருவாக்கினர், ஆனால் அவை கத்தோலிக்க சர்ச்சின் அடிப்படை கோட்பாடுகளைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருந்தன. அவர்கள் அரசியல் விவகாரங்களிலும்கூட ஆழமாக ஈடுபட்டிருந்தனர்.
புராட்டஸ்டன்ட் மதத்தில் மத மறு எழுச்சி என்றழைக்கப்பட்டதைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. உதாரணமாக, 18-ஆம் மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளின்போது இந்த முயற்சிகள் அயல்நாட்டு மிஷனரி சேவையில் மும்முரமாக ஈடுபடுவதில் விளைவடைந்தன. என்றபோதிலும், மத மேய்ப்பர்களே ஒப்புக்கொள்கிறபடி, புராட்டஸ்டன்ட் மந்தையின் ஆவிக்குரிய நிலைமை நிச்சயமாகவே உற்சாகமூட்டுவதாய் இல்லை. “சர்ச்சுகளுக்குள்ளேயே விசுவாசத்தைப் பற்றிய நெருக்கடி நிலை உள்ளது,” என்று புராட்டஸ்டன்ட் இறையியல் வல்லுநர் ஆஸ்கர் கல்மன் அண்மையில் ஒப்புக்கொண்டார்.
சீர்திருத்தங்களும் எதிர்ச் சீர்திருத்தங்களும்கூட கத்தோலிக்க சர்ச்சுக்குள்ளேயே முன்னேற்றுவிக்கப்பட்டன. 11-ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாண்டு வரை இருந்த பரவலான ஊழல், குருமார்களின் மிகுதியான செல்வம் போன்றவற்றின் மத்தியிலும், வறுமை உறுதிமொழியைக் கண்டிப்பாக பின்பற்றிய துறவி அமைப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அவர்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டனர், சில கல்விமான்களின்படி, அவர்கள் திருச்சபை ஆட்சியால் அடக்கி வைக்கப்பட்டனர். அதற்குப் பின்பு டிரென்ட் திருச்சபைக் கூட்டத்தால் முன்னேற்றுவிக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டு எதிர்ச் சீர்திருத்த இயக்கம் வந்தது, அது பெரும்பாலும் புராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கு எதிராய் செயலாற்றியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், திருச்சபையை முன்னிலைக்குக் கொண்டுவர முயற்சித்த காலப்பகுதியின்போது, கத்தோலிக்க சர்ச் மாறுதல் விரும்பாத ஆட்சியாதிக்கக் கொள்கையுடைய நிலைநிற்கையை மேற்கொண்டது. மெய்க் கிறிஸ்தவத்தைத் திரும்பவும் நிலைநாட்டுவதற்கு மெய்யான சீர்திருத்தங்கள் எதுவும் செய்யப்பட்டன என்று சொல்ல முடியாது. மாறாக, இவை உலகின் மதம், அரசியல், சமுதாயம் ஆகியவை சம்பந்தப்பட்ட மாற்றத்தை எதிர்ப்படுவதில் குருமார்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட வெறும் முயற்சிகளாகவே இருந்தன.
சமீப காலத்தில், 1960-களில், இரண்டாம் வாடிகனின் திருச்சபை சீரமைப்புக் குழுவோடு மிக ஆழ்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள கத்தோலிக்க சர்ச் விரும்பியதாக தோன்றியது. என்றபோதிலும் சர்ச்சின் முன்னோக்கிச் செல்லும் அங்கத்தினர்களின் ஆர்வத்தைத் தடை செய்வதற்குத் திருச்சபைக் குழுவின் பெயரளவிலான புதுப்பித்தலை திடீரென்று நிறுத்தும்படி தற்போதுள்ள போப் கட்டளை விதித்தார். இக்கட்டத்தை சிலர் வொய்ட்டிவாவின் புதுப்பித்தல் என்றழைக்கின்றனர், “கான்ஸ்டன்டீன் கொள்கையின் புது வடிவம்” என்று ஒரு கத்தோலிக்கத் தொகுதி இதை விவரிக்கிறது. லா சிவில்ட்டா கட்டோலிக்கா என்ற ஜெஸ்யுட் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தபடி, மற்ற மதங்களைப் போல் கத்தோலிக்க சர்ச் “ஒரு அடிப்படையான மற்றும் உலகளாவிய நெருக்கடியை எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கிறது: விசுவாசம், கிறிஸ்தவ வாழ்க்கை ஆகியவற்றின் அடிவேர்களையே உட்படுத்துவதால் அது அடிப்படையானது; கிறிஸ்தவத்தின் எல்லா அம்சங்களையும் உட்படுத்துவதால் அது உலகளாவியது.”
கிறிஸ்தவமண்டலத்தின் மதங்கள் சீர்திருத்த படிமுறைகளை உண்மையில் அனுபவித்ததில்லை, அதை அவர்களால் செய்யவும் முடியாது, ஏனென்றால் மெய்க் கிறிஸ்தவம், ஒரே சுத்தமான சபைக்குள் அடையாளப்பூர்வமான கோதுமை கூட்டிச்சேர்க்கப்படுவதுடன் “அறுவடை” சமயத்தின்போது மட்டும் தான் புதுப்பிக்கப்படும். (மத்தேயு 13:30, 39) கிறிஸ்தவர்கள் என்றோ அல்லது கிறிஸ்தவர்கள் இல்லை என்றோ உரிமைபாராட்டிக்கொண்டு மதத்தின் பெயரில் செய்யப்பட்ட குற்றச்செயல்கள், தவறுகள் ஆகியவை அடங்கிய நீண்ட பட்டியல், கிறிஸ்தவமண்டலத்திலிருந்து மெய்யான சீர்திருத்தத்தை எதிர்பார்ப்பது சரியா என்ற இக்கேள்வியைக் கேட்கும்படி ஒருவரைத் தூண்டுகிறது.
சீர்திருத்தம் முடியாத காரியமா?
“மகா பாபிலோன்” என்ற புரியாத மறைபொருள் பெயரைத் தாங்கிய அடையாளப்பூர்வமான மகா வேசியைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகம் அல்லது திருவெளிப்பாடு பேசுகிறது. (வெளிப்படுத்துதல் 17:1, 5) பல நூற்றாண்டுகளாக பைபிளை வாசிப்பவர்கள் இந்த அடையாளத்தின் இரகசியத்தை விளக்குவதற்கு முயற்சி செய்திருக்கின்றனர். குருமார்களின் செல்வம், ஊழல் ஆகியவற்றைக் குறித்து அநேகர் வெறுப்படைந்தனர். மகா பாபிலோன் குருமார்களின் அமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்ததாக சிலர் எண்ணினர். 1415-ல் உயிரோடு எரிக்கப்பட்ட பொஹிமிய கத்தோலிக்கப் பாதிரி யான் ஹஸ் என்பவரும், 1570-ல் தூக்கிலிடப்பட்டு எரிக்கப்பட்ட இத்தாலிய மனிதப் பண்பாய்வாளர், அயோன்யோ பலாரியோ என்பவரும் அதில் அடங்குவர். கத்தோலிக்க சர்ச் “ஆரம்ப காலத்திலிருந்த கண்ணியத்துக்கு” மறுபடியும் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கையோடு கத்தோலிக்க சர்ச்சை சீர்திருத்த முயன்றும் அவர்கள் இருவரும் வெற்றி பெறவில்லை.
மாறாக, மகா பாபிலோன் எல்லா பொய் மதங்களின் உலகப் பேரரசு என்று வெளிப்படுத்துதல் அதிகாரங்கள் 17 மற்றும் 18 குறிப்பிடுகின்றன.a இந்தக் கூட்டு “மகா வேசி” சீர்திருத்தப்படமுடியாதவளாய் இருக்கிறாள், ஏனென்றால் “அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது.” உண்மையில், இந்த 20-ஆம் நூற்றாண்டில், கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த மதங்கள் மட்டுமல்லாமல் ஏறக்குறைய எல்லா மதங்களுமே பேரளவான இரத்தத்தைத் தொடர்ந்து சிந்திக்கொண்டிருக்கும் போர்களுக்கான உத்தரவாதம், மனிதகுலத்தை அல்லற்படுத்தும் கடும் ஒழுக்க சீர்குலைவு ஆகியவற்றுக்கான உத்தரவாதத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. அதன் காரணமாக, ‘பாபிலோனின்’ அழிவை கடவுள் கட்டளையிட்டிருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 18:5, 8.
‘அவளை விட்டு வெளியேறுவதற்கு’ இதுவே காலம்
இந்தப் பொல்லாத “ஒழுங்குமுறையின் முடிவுக்கு” நம்முடைய நாள் ஒத்திருக்கிறது என்று பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் வெளிப்படுத்துகிறது. (மத்தேயு 24:3, NW) கடவுளை உண்மை மனதோடு வணங்க விரும்பும் எவரும் தன் சொந்த எண்ணங்களையும் விருப்பங்களையும் பின்பற்ற முடியாது. அவர் ‘கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் தேடவேண்டும்,’ ஆம், இப்போதே, ஏனென்றால் இயேசு முன்னறிவித்த “மிகுந்த உபத்திரவம்” சமீபத்தில் இருக்கிறது. (ஏசாயா 55:6; மத்தேயு 24:21) இஸ்ரவேல் ஜனங்களின் விஷயத்தில் உண்மையாயிருந்தது போல, பூர்வகாலம் முதற்கொண்டு இருப்பதன் காரணமாக பெருமையடித்துக்கொள்ளும் ஒரு மதத்தின் கறைபடிந்த நிலையை கடவுள் சகித்துக்கொள்ள மாட்டார். மூழ்கிப்போகுமென்று முன்னமே தீர்வுசெய்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலைப் பழுதுபார்க்க முயலுவதற்கு பதிலாக, கடவுளின் அங்கீகாரத்தையும் இரட்சிப்பையும் பெற விரும்பும் அனைவரும் வெளிப்படுத்துதல் 18:4-ல் உள்ள ஏவப்பட்ட கட்டளைக்குத் தாமதமின்றி கீழ்ப்படிய வேண்டும்: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு [மகா பாபிலோனைவிட்டு] வெளியே வாருங்கள்.”
ஆனால் எங்கே செல்வதற்கு “வெளியே” வரவேண்டும்? வேறு எங்கே இரட்சிப்பைக் கண்டடைய முடியும்? தவறான இடத்தில் புகலிடம் தேடுவது அபாயமானது இல்லையா? கடவுளின் அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் ஒரே மதத்தை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கக்கூடும்? கடவுளுடைய வார்த்தையில் மட்டுமே நம்பத்தகுந்த பதில்களைக் கண்டுபிடிக்க முடியும். (2 தீமோத்தேயு 3:16, 17) யெகோவாவின் சாட்சிகள் பைபிளை அதிக விவரமாக ஆராய்ந்து பார்க்கும்படி உங்களை அழைக்கின்றனர். “தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை” கடவுள் தேர்ந்தெடுத்திருப்பவர்கள் யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். வரவிருக்கிற கடவுளின் கோபாக்கினை நாளின்போது அவர்களை அவர் பாதுகாப்பார்.—அப்போஸ்தலர் 15:14; செப்பனியா 2:3; வெளிப்படுத்துதல் 16:14-16.
[அடிக்குறிப்புகள்]
a அடையாளப்பூர்வமான மகா பாபிலோனை வேதப்பூர்வமான முறையில் சரியாக அடையாளங்கண்டுபிடிக்க, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் 1988-ல் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற ஆங்கிலப் புத்தகத்தில் அதிகாரங்கள் 33 முதல் 37 வரை பார்க்கவும்.
[பக்கம் 7-ன் படம்]
உங்களுடைய மதம் என்ற கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தால், மெய்க் கிறிஸ்தவம் என்ற மீட்புக் கப்பலினிடமாக திரும்புங்கள்