“பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்”
இயேசு கிறிஸ்து 19 நூற்றாண்டுகளுக்குமுன் இவ்வார்த்தைகளை சொன்னபோது, கேடு விளைவிக்கும் மத போதனைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக தனது சீஷர்களை எச்சரித்துக் கொண்டிருந்தார். (மத்தேயு 16:6, 12) மாற்கு 8:15-ல் உள்ள விவரப்பதிவு குறிப்பிட்டுச் சொல்வதாவது: “பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.” ஏரோது ஏன் குறிப்பிடப்பட்டான்? ஏனென்றால் சதுசேயர்களில் சிலர் ஏரோதியர்கள் என்ற அரசியல் பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
அத்தகைய விசேஷ எச்சரிப்பு விடுக்கவேண்டியது ஏன் அவசியமாக இருந்தது? பரிசேயர்களும் சதுசேயர்களும் இயேசுவை நேருக்குநேர் எதிர்க்கவில்லையா? (மத்தேயு 16:21; யோவான் 11:45-50) ஆம், அவர்கள் எதிர்த்தார்கள்தான். எனினும், அவர்களில் சிலர் பிற்காலத்தில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு, பின்னர் தங்களுடைய சொந்த கருத்துக்களை கிறிஸ்தவ சபைக்குள் திணிக்கப் பார்ப்பார்கள்.—அப்போஸ்தலர் 15:5.
அதுமட்டுமல்லாமல், சீஷர்களும்தாமே அந்த மதத் தலைவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றும் அபாயமும் இருந்தது. ஏனென்றால் அவர்கள் இந்த மதத் தலைவர்களின் செல்வாக்கின்கீழ்தான் வளர்க்கப்பட்டிருந்தார்கள். சிலசமயங்களில், அப்படிப்பட்ட மதப் பின்னணியில் இருந்து வந்ததுதானே இயேசுவின் போதனைகளுடைய உட்கருத்தை உணர்ந்துகொள்ள அவர்களுக்குத் தடையாக இருந்தது.
பரிசேயத்துவத்தையும் சதுசேயத்துவத்தையும் அவ்வளவு அபாயகரமாக்கியது எது? இயேசுவின் நாளில் இருந்த மத நிலவரங்களை ஒரு நோட்டம் விடுவது நாம் புரிந்துகொள்ள உதவியளிக்கும்.
மதப் பிரிவினை
பொ.ச. முதல் நூற்றாண்டில் இருந்த யூத சமுதாயத்தைப்பற்றி வரலாற்று ஆசிரியர் மேக்ஸ் ரேடன் எழுதினார்: “யூத சபைகள் ஒன்றையொன்று சாராதிருப்பது அவ்வளவு மெய்யானதாக இருந்தது. அந்தத் தன்னுரிமை வற்புறுத்தவும்பட்டது. . . . பெரும்பாலும் ஆலயத்திற்கும் பரிசுத்த நகரத்திற்குமான பயபக்தி ஒரேடியாக வலியுறுத்தப்பட்டால், தாய்நாட்டில் அந்தச் சமயத்தில் யார் அதிகாரத்தில் இருக்கின்றனரோ அவர்கள் மகாமோசமாக அவமதிக்கப்படலாம்.”
உண்மையிலேயே வருந்தத்தக்க ஆவிக்குரிய நிலைமைதான்! அதற்கு வழிகோலிய சில காரணங்கள் யாவை? யூதர்கள் அனைவருமே பலெஸ்தீனாவில் வாழ்ந்தவர்கள் அல்லர். கிரேக்க பண்பாட்டில் ஆசாரியர்கள் சமுதாய தலைவர்களாக கருதப்படுவதில்லை. யெகோவாவின் ஏற்பாடாகிய ஆசாரியத்துவத்திற்கான மதிப்பைக் குறைப்பதில் இந்தப் பண்பாடு தன்னுடைய பங்கை வகித்திருந்தது. (யாத்திராகமம் 28:29; 40:12-15) அசட்டை செய்யப்படக்கூடாதவர்கள் படிப்பறிவுள்ள பொதுநிலை மக்களும் வேதபாரகர்களுமாகும்.
பரிசேயர்கள்
பரிசேயர்கள் அல்லது பெருஷிம் என்ற பெயரானது, “பிரித்தெடுக்கப்பட்டவர்கள்” என்ற அர்த்தத்தைக் கொடுத்திருக்கலாம். பரிசேயர்கள் தங்களை மோசேயைப் பின்பற்றுகிறவர்கள் என கருதிவந்தனர். அவர்கள் தங்களுக்கென்று சகோதரத்துவத்தை அல்லது தோழமைக் குழுக்களை (எபிரெயுவில், செவுரா) ஏற்படுத்தியிருந்தனர். அதில் ஒருவர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமானால், அவர் மூன்று அங்கத்தினர்களின் முன்னிலையில் உறுதிமொழி அளிக்க வேண்டும், லேவியர்களுக்குரிய பரிசுத்தத் தன்மையைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும், (படிப்பறிவில்லா பாமர ஜனக்கூட்டமாகிய) அம்ஹாரெட்ஸோடு நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும், மற்றும் தசமபாகத்தைக் கொஞ்சமும் நெறி தவறாமல் செலுத்தவேண்டும். மாற்கு 2:16 (NW), “பரிசேயர்களின் வேதபாரகர்க”ளைப் பற்றி பேசுகிறது. இந்தப் பரிசேயர்களில் சிலர் தங்களுடைய வாழ்க்கைப் பணியில் வேதபாரகர்களாகவும் ஆசிரியர்களாகவும் மற்றவர்கள் பாமரர்களாகவும் இருந்தனர்.—மத்தேயு 23:1-7.
பரிசேயர்கள் எங்கும் வியாபித்திருக்கும் ஒரு கடவுளில் நம்பிக்கை வைத்திருந்தனர். “கடவுள் எங்கும் வியாபித்திருந்ததனால், அவரை தேவாலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும், எங்குவேண்டுமானாலும் வணங்கலாம், பலிகளின் மூலம்தான் வேண்டிக்கொள்ளவேண்டும் என்பதல்ல” என்று காரணம் காட்டினர். “ஆகவே அவர்கள் ஜெப ஆலயத்தை வழிபாடு, படிப்பு, ஜெபம் போன்ற காரியங்களுக்கான இடமாக பேணி காத்துவந்தனர். மேலும் இதை மக்களின் வாழ்க்கையில் மையமாகவும் முக்கிய இடமாகவும் உயர்த்தி, தேவாலயத்திற்குச் சமமானதாக ஆக்கினர்.”—என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா.
பரிசேயர்கள் யெகோவாவின் தேவாலயத்திற்குப் போற்றுதல் காண்பிக்காதிருந்தனர். இயேசு பின்வருமாறு கூறிய வார்த்தைகளில் இருந்து இது தெளிவாகிறது: “குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? மேலும், எவனாகிலும் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.”—மத்தேயு 23:16-20.
பரிசேயர்களால் எப்படி இவ்வளவு கோணல்மாணலாக சிந்திக்கமுடிந்தது? அவர்கள் எதை அசட்டை செய்தனர்? அடுத்ததாக இயேசு என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள். “தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம் பண்ணுகிறான்.” (மத்தேயு 23:21) இந்த வசனத்தைப்பற்றி, அறிஞர் இ. பி. சேன்டர்ஸ் குறிப்பிட்டதாவது: “பரிசுத்த கடவுள் அதில் வணங்கப்பட்டார் என்பதனால் மட்டும் அந்தத் தேவாலயம் பரிசுத்தமானதாக இல்லை, அவர் அதில் வாசமாயிருந்தார் என்ற காரணத்தினாலும் அது பரிசுத்தமாக இருந்தது.” (ஜூடேய்ஸம்: பழக்கவழக்கமும் நம்பிக்கையும், பொசமு 63—பொச 66 [ஆங்கிலம்]) ஆயினும், யெகோவா எங்கும் வியாபித்திருக்கிறார் என்று எண்ணியிருந்தவர்களுக்கு, அவரது விசேஷ பிரசன்னம் ஒரு பொருட்டாகவே இருக்காது.
முன்விதிக்கப்படுதல், சுயாதீனம் ஆகிய இரண்டும் கலந்த ஒரு விசுவாசத்தை பரிசேயர்கள் கொண்டிருந்தனர். அதாவது, “எல்லாமே முன்விதிக்கப்பட்டிருக்கிறது, இருந்தாலும் விருப்பப்படி தெரிந்துகொள்வதற்கான சுயாதீனம் கொடுக்கப்பட்டிருக்கிறது.” இருந்தபோதிலும், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்யும்படி முன்விதிக்கப்பட்டார்கள் என்றும், விரலில் ஏற்படும் ஒரு சிறிய காயம்கூட முன்விதிக்கப்பட்டதுதான் என்றும் அவர்கள் நம்பினர்.
கோபுரம் இடிந்துவிழுந்து 18 பேர் மரிக்க நேரிட்ட விபத்தைப்பற்றி இயேசு பேசியபோது, அத்தகைய தவறான கருத்துக்களை கவனத்தில் கொண்டிருந்திருக்கலாம். அவர் கேட்டார்: “எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் [பலியான] அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?” (லூக்கா 13:4) பெரும்பாலான விபத்துக்களைப் போலவே இதுவும், “காலத்தின் மற்றும் எதிர்பாரா சம்பவத்தின்” விளைவாக ஏற்பட்டதே தவிர பரிசேயர்கள் போதித்ததுபோல விதியினால் அல்ல. (பிரசங்கி 9:11, NW) அறிவு படைத்தவர்களைப் போல தோன்றிய அத்தகையவர்கள் வேதப்பூர்வ கட்டளைகளை எவ்வாறு கையாளுவார்கள்?
அவர்கள் மதக் கண்டுபிடிப்பாளர்களாக இருந்தனர்
வேதப்பூர்வ கட்டளைகள், ஒவ்வொரு சந்ததியின் ரபீக்களால், அவ்வப்போது நிலவும் புதிய கருத்துக்களுக்கு இசைய விளக்கப்படவேண்டும் என்று அடித்துக்கூறினர். இதனால், அவர்களுக்கு “தங்களுடைய புதிய கருத்துக்களோடு டோராவின் போதனைகளை இசைந்துபோகச் செய்வது அல்லது தங்களுடைய கருத்துக்கள் டோராவின் வசனங்களில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவோ மறைமுகமாக சொல்லப்பட்டிருப்பதாகவோ காண்பது அவ்வளவு கடினமானதாக இல்லை,” என்று என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா சொல்லுகிறது.
வருடாந்தர பாவநிவர்த்தி நாளைப் பொறுத்தவரையில், பாவங்களுக்கான பாவநிவாரண வல்லமையை பிரதான ஆசாரியனிடமிருந்து அந்த நாளுக்கே மாற்றிவிட்டனர். (லேவியராகமம் 16:30, 33) பஸ்கா பண்டிகையின்போது, திராட்ச ரசத்திலும் புளிப்பில்லா அப்பத்திலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கையில், பஸ்காவின் ஆட்டுக்குட்டியைவிட யாத்திராகம பதிவுகளில் உள்ள பாடங்களைத் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
காலப்போக்கில், பரிசேயர்கள் தேவாலயத்தில் நல்ல செல்வாக்குப் படைத்தவர்களாக மாறினர். பின்னர் அவர்கள் சேர்ப்புக்கால பண்டிகையின்போது சீலோவாம் குளத்திலிருந்து தண்ணீரை சுமந்து செல்லுதலையும் அதைப் பலியாக ஊற்றுதலையும் உட்படுத்திய ஒரு ஊர்வலம், பண்டிகையின் இறுதியில் உவில்லோ மரக்கிளைகளைப் பலிபீடத்தின்மேல் அடித்தல், நியாயப்பிரமாணத்தில் யாதொரு ஆதாரமும் இல்லாத ஜெபங்களை அனுதினமும் தவறாது செய்தல் போன்றவற்றை ஏற்படுத்தினர்.
“ஓய்வுநாள் சம்பந்தமாக பரிசேயர்கள் கண்டுபிடித்தவை முக்கியமாக குறிப்பிடத்தக்கவையாய்,” இருந்தன என்று தி ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. மனைவியானவள் ஓய்வுநாளை விளக்கேற்றி வைத்து வரவேற்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாள். நியாயப்பிரமாண சட்டத்திற்கு விரோதமான வேலைக்கு வழிநடத்தக்கூடியதாக தோன்றிய எந்தவொரு நடவடிக்கையையும் பரிசேயர்கள் தடைசெய்தனர். மருத்துவ சிகிச்சையை கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கும்கூட போனார்கள். மேலும் ஓய்வுநாளில் இயேசு அற்புதமாக சுகமளித்ததைக் குறித்து அவர்கள் எரிச்சலடைந்தனர். (மத்தேயு 12:9-14; யோவான் 5:1-16) இருப்பினும், இந்த மதக் கண்டுபிடிப்பாளர்கள் வேதப்பூர்வ நியாயப்பிரமாணங்களைக் கட்டிக் காப்பதற்காக வரம்போ வேலியோ போடும் முயற்சியில் புதிய நியமங்களை ஏற்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை.
ரத்து செய்தல்
வேதப்பூர்வமான நியாயப்பிரமாணங்களைத் தற்காலிகமாக நீக்கவோ அல்லது ரத்து செய்யவோ தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று பரிசேயர்கள் உரிமைபாராட்டிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய நியாயவிவாதம் டால்முடின் ஒழுக்கவிதி ஒன்றில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது: “முழு டோராவுமே புறக்கணிக்கப்படுவதைக் காட்டிலும், ஒரேவொரு தனிப்பட்ட நியாயப்பிரமாணத்தை ரத்து செய்வது நலமாக இருக்கும்.” இதற்கு ஒரு உதாரணம், யூபிலிகாலம் நெருங்கி வருகையில், தனக்கு உரித்தானவற்றை இழக்க வேண்டிவருமோ என்ற பயத்தில் ஏழைகளுக்கு யாரும் கடன்கொடுக்க மாட்டார்கள் என்ற காரணத்துக்காக யூபிலி ஆசரிப்பை நிறுத்திவிட்டதாகும்.—லேவியராகமம், அதிகாரம் 25.
விபசாரம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட பெண் விசாரணைக்குட்படுத்தப்படுவது ரத்து செய்யப்பட்டது, நிரூபிக்கப்படாத கொலை வழக்கில், பிராயச்சித்தம் செய்யும் முறையைத் தற்காலிகமாக விலக்கிவைத்தது போன்றவை மற்ற உதாரணங்களாகும். (எண்ணாகமம் 5:11-31; உபாகமம் 21:1-9) தேவையிலிருக்கும் பெற்றோர்களை ஒருவர் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற வேதப்பூர்வமான தேவையையும் சிறிது காலத்துக்குப்பின் அவர்கள் ரத்து செய்திருந்திருப்பார்கள்.—யாத்திராகமம் 20:12; மத்தேயு 15:3-6.
“நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்,” என்று இயேசு எச்சரித்தார். (லூக்கா 12:1) தேவராஜ்ய நோக்குநிலையற்ற பரிசேயத்துவம், கிறிஸ்தவ சபைக்குள் கொண்டுவரப்படக் கூடாத—மாய்மாலத்தைத் தவிர வேறு எதுவுமாக இருக்கமுடியாது. இருந்தாலும்கூட யூத பதிவுகள் பரிசேயர்களை சதுசேயர்களைவிட மிகவும் மேன்மையானவர்களாகத்தான் விவரிக்கின்றன. இப்பொழுது நாம் இந்த மிகப் பழமைவாத குழுவைப்பற்றி சிந்திக்கலாம்.
சதுசேயர்கள்
இந்தப் பெயர் அநேகமாக சாலொமோனின் நாட்களில் பிரதான ஆசாரியனாக இருந்த சாதோக் என்ற பெயரிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். (1 இராஜாக்கள் 2:35, NW, அடிக்குறிப்பு) தேவாலயத்திற்கும் ஆசாரியத்துவத்திற்குமான தங்களுடைய அக்கறைகளைப் பிரதிநிதித்துவம் செய்த ஒரு பழமைவாத குழுவை ஏற்படுத்தினர். தங்களுடைய கற்றறிதல், பக்தி ஆகியவற்றின் காரணமாக தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று உரிமைகொண்டாடிய பரிசேயர்களைப் போலல்லாமல், இவர்களோ தங்களுடைய வம்சவரலாறு மற்றும் அந்தஸ்து ஆகியவற்றின் காரணமாக தங்களுக்கு அதிகாரம் உண்டு என்பதாக உரிமைகொண்டாடினர். பொ.ச. 70-ல் தேவாலயம் அழிந்துபோனதுவரை பரிசேயர்கள் கண்டுபிடிக்கும் புதிய கருத்துக்களுக்கு இவர்கள் எதிராக இருந்துவந்தனர்.
முன்விதிக்கப்படுதல் கோட்பாட்டை புறக்கணிப்பதோடுகூட, சதுசேயர்கள் பைபிளின் முதல் ஐந்து ஆகமங்களில் விவரமாக குறிப்பிடப்படாத எந்தப் போதகத்தையும், கடவுளுடைய வார்த்தையில் வேறு எங்கு சொல்லப்பட்டிருந்தாலும்கூட ஏற்க மறுத்தனர். மெய்யாகவே, இந்தக் காரியங்களைக் குறித்தெல்லாம் “சர்ச்சை செய்வதை ஒரு நற்பண்பாக கருதிவந்தனர்.” (தி ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா) உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் இயேசுவிடம் கேள்விகேட்ட அந்தச் சந்தர்ப்பத்தை இது நினைவுக்குக் கொண்டுவருகிறது.
ஏழு கணவன்மார்களுடைய விதவையின் உதாரணத்தை வைத்துக்கொண்டு, சதுசேயர்கள் கேட்டார்கள்: “உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்?” சதுசேயர்களால் கற்பனை செய்துகொள்ளப்பட்ட அந்த விதவை ஒருவேளை 14 அல்லது 21 கணவன்மார்களைக் கொண்டிருக்கலாம். இயேசு இவ்வாறு விளக்கினார்: “உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை.”—மத்தேயு 22:23-30.
மோசேயைத் தவிர ஏவப்பட்ட மற்ற எந்த எழுத்தாளர்களையும் சதுசேயர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை அறிந்தவராக, இயேசு பைபிளின் முதல் ஐந்து ஆகமங்களில் இருந்து மேற்கோள்காட்டி தன்னுடைய கருத்தை நிரூபித்தார். அவர் சொன்னார்: “மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா? அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்.”—மாற்கு 12:26, 27.
இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் சித்திரவதை செய்தவர்கள்
மற்ற தேசங்களோடு செயல்தொடர்பு கொள்கையில் சதுசேயர்கள், மேசியாவுக்காக காத்திருப்பதைவிட—அப்படியே மேசியாவின் வருகையில் விசுவாசம் வைத்திருந்தார்களேயானால்—ராஜதந்திரங்களை உபயோகிப்பதில் நம்பிக்கை வைத்திருந்தனர். ரோம தேசத்தோடு செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, சதுசேயர்கள் தேவாலயத்தை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே எந்த மேசியாவும் திடீரென்று தோன்றி காரியங்களைக் குலைப்பது அவர்களுக்கு இஷ்டம் இல்லாதிருந்தது. இயேசுவை தங்களுடைய ஸ்தானத்திற்கு அபாயமாகக் கருதி, பரிசேயர்களோடு சேர்ந்து அவரைக் கொல்லுவதற்காக சதித்திட்டம் தீட்டினர்.—மத்தேயு 26:59-66; யோவான் 11:45-50.
அரசியல் நாட்டமுள்ளவர்களாக இருந்ததன் காரணமாக, எதிர்பார்க்கக்கூடிய வகையிலே, ரோம ஆட்சிக்கான உண்மைப்பற்றுறுதியை ஒரு பெரிய பிரச்சினையாக்கி, “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை,” என்று கத்தினார்கள். (யோவான் 19:6, 12-15) இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர், கிறிஸ்தவம் பரவுவதைத் தடுக்க முன்னணியில் நின்று முயற்சித்தது சதுசேயர்களாகவே இருந்தனர். (அப்போஸ்தலர் 4:1-23; 5:17-42; 9:14) பொ.ச. 70-ல் தேவாலயம் அழிந்த பின்னர் இந்தக் குழு இல்லாமல் போயிற்று.
எச்சரிப்பாக இருப்பதற்கான தேவை
இயேசுவின் எச்சரிக்கை என்னே பொருத்தமானதாக இருந்திருக்கிறது! ஆம், “பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிரு”க்க வேண்டியது நமக்கு அவசியமாக இருக்கிறது. ஒருவர் இன்று யூத மதத்திலும் கிறிஸ்தவ மண்டலத்திலும் இருக்கும் அதன் கெட்ட கனிகளைக் கவனித்தாலே போதும்.
எனினும், அதற்கு நேர்மாறாக, உலக முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய 75,500-க்கும் அதிகமான சபைகளில் உள்ள தகுதிபெற்ற கிறிஸ்தவ மூப்பர்கள், ‘தங்களைக்குறித்தும் தங்களுடைய உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிருக்கிறார்கள்.’ (1 தீமோத்தேயு 4:16) முழு பைபிளையுமே கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்ட ஒன்றாக ஏற்றுக்கொள்கின்றனர். (2 தீமோத்தேயு 3:16) புதிதுபுதிதாகக் கருத்துக்களைக் கண்டுபிடித்து தங்களுடைய சொந்த மத ஆசார முறைமைகளை பரப்புவதைவிட பைபிளை ஆதாரமாகக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பின் வழிநடத்துதலின்கீழ் ஐக்கியப்பட்டு வேலைசெய்கின்றனர். அந்த அமைப்பு போதிப்பதற்கான முதன்மைக் கருவியாக இந்தப் பத்திரிகையைப் பயன்படுத்தி வருகிறது.—மத்தேயு 24:45-47.
அதன் விளைவு? உலக முழுவதிலும் லட்சக்கணக்கானோர் பைபிளைப் புரிந்துகொண்டு, தங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகித்து, மற்றவர்களுக்கும் போதித்து வரும்போது ஆவிக்குரிய வகையில் உயர்த்தப்படுகின்றனர். இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பார்க்க, உங்களுக்கு மிக அருகாமையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்கு நீங்கள் ஏன் போய் பார்க்கக்கூடாது அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்போருக்கு ஏன் எழுதக்கூடாது?
[பக்கம் 26-ன் பெட்டி]
இயேசு தாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களைக் கருத்தில் கொண்டிருந்தார்
இயேசு கிறிஸ்து தாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களின் கருத்துக்களை மனதில் கொண்டு, தெள்ளத்தெளிவாக போதித்தார். எடுத்துக்காட்டாக, மீண்டும் ‘பிறப்பதை’ பற்றி பரிசேயனாகிய நிக்கொதேமுவிடம் பேசியபோது அவர் அவ்வாறுதான் செய்தார். நிக்கொதேமு கேட்டான்: “ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ.” (யோவான் 3:1-5) யூத மதத்திற்கு மாறுகிறவர்களுக்கு மறுபிறப்பு அவசியமாக இருக்கிறது என்று பரிசேயர்கள் நம்பினார்கள். மேலும் ரபீக்களின் பழமொழி ஒன்று, மதம் மாறிய ஒருவரை “புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையோடு” ஒப்பிட்டது. ஆகவே நிக்கொதேமு அந்தளவுக்குக் குழம்பிப்போக வேண்டிய அவசியம் என்ன?
ஜான் லைட்ஃபூட் என்பவரால் எழுதப்பட்ட, எ கமென்ட்ரி ஆன் தி நியூ டெஸ்டமென்ட் ஃப்ரம் தி டால்முட் அண்ட் ஹெப்ராய்க்கா, பின்வரும் உட்பார்வையை அளிக்கிறது: “இஸ்ரவேலன் ஒருவனின் தகுதியைப் பற்றிய யூதர்களுடைய பொதுவான கருத்து . . . இந்தப் பரிசேயனின் மனதில் இன்னும் ஆழமாக பதிந்திருக்கிறது. அவன் தொடக்கத்தில் கொண்டிருந்த தப்பெண்ணத்தை அவ்வளவு சுலபமாக மாற்றிக்கொள்ள” முடியவில்லை . . . : “‘இஸ்ரவேலர்கள் . . . மேசியானிய ராஜ்யத்தில் அனுமதிக்கப்படுவதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றனர். ஆதலால் நீர் இப்படி சொல்வதன் மூலம், எவனொருவனும் புதிய இஸ்ரவேலனாக மாறும்படியாக இரண்டாம் முறை தன்னுடைய தாயின் கர்ப்பத்திற்குள் நுழையவேண்டிய அவசியம் இருக்கிறது என்று அர்த்தப்படுத்துகிறீரோ?’”—மத்தேயு 3:9-ஐ ஒப்பிடுக.
மதம் மாறுகிறவர்களுக்கு ஏற்படும் ஒரு புதிய பிறப்பை ஒப்புக்கொண்டாலும், பிறப்பின்படி யூதர்களாக இருப்பவர்களுக்கு—தாயின் கர்ப்பத்திற்குள் மீண்டும் நுழைவதைப்போல உள்ள—அத்தகைய காரியத்தை முடியாத ஒன்றாக நிக்கொதேமு கருதுவான்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘தமது மாம்சத்தைப் புசித்து தமது இரத்தத்தைப் பானம்பண்ணுவதை’ பற்றி இயேசு பேசினபோது பலருக்கு அது அருவருப்பாக இருந்தது. (யோவான் 6:48-55) எனினும், “யூதர்களின் பள்ளிகளில் உருவக நடையில் ‘புசித்து பானம்பண்ணுதல்’ என்ற வார்த்தைகளை சொல்வது மிகவும் பொதுவானதே” என்று லைட்ஃபூட் குறிப்பிடுகிறார். “மேசியாவைப் புசித்தல்” என்பதாக டால்முட் குறிப்பிட்டது என்றும்கூட அவர் குறிப்பிட்டார்.
ஆகவே முதல் நூற்றாண்டு யூதர்களின் யோசனையில் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் நோக்குநிலைகள் பெரும் பாதிப்பைக் கொண்டிருந்தன. எனினும், பொருத்தமாகவே, கேட்டுக் கொண்டிருந்தவர்களின் அறிவையும் அனுபவத்தையும் இயேசு எப்போதுமே கருத்தில் கொண்டவராக இருந்தார். அவரை பெரிய போதகராக்கிய பல அம்சங்களில் இது ஒன்றாக இருந்தது.