வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
‘நான் பரிசேயன்’ என நியாய சங்கத்தில் அப்போஸ்தலன் பவுல் சொன்னபோது தனது கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுக்கொடுத்து விட்டாரா?
அப்போஸ்தலர் 23:6-ல் உள்ள பவுலின் குறிப்பைப் புரிந்துகொள்வதற்கு அதன் சூழமைவை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எருசலேமிலிருந்த யூதர்களின் கலகக் கும்பல் பவுலைத் தாக்கிய பிறகு அவர் அந்த ஜனங்களிடம் பேசினார். எருசலேம் ‘நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டேன்’ என்று அப்போது அவர் கூறினார். அவர் தன்னுடைய சார்பாக நியாயத்தை எடுத்துரைத்ததைக் கொஞ்ச நேரம் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்த போதிலும், கடைசியில் கோபத்தில் கொதித்தெழுந்தார்கள்; அப்போது அவருக்குப் பாதுகாவலாக இருந்த சேனாபதி அவரைக் கோட்டைக்குள் கொண்டு சென்றார். வாரினால் அடிக்கப்படுவதற்குச் சற்று முன்பு அவர், “ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா” என்று கேட்டார்.—அப்போஸ்தலர் 21:27-22:29.
மறுநாள் அந்தச் சேனாபதி, யூதர்களின் உயர்நீதி மன்றமாகிய நியாய சங்கத்துக்குப் பவுலைக் கொண்டு சென்றார். அங்குள்ளவர்களை பவுல் உற்றுப் பார்க்கையில் பரிசேயரும் சதுசேயரும் இருப்பதைக் கவனித்தார். பிறகு, “சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப் பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன்” என்று கூறினார். இதனால் பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது; ஏனென்றால் “சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.” பரிசேயரைச் சேர்ந்த சிலர் “இந்த மனுஷனிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்” என சொல்லி கோபத்தில் பொங்கியெழுந்தார்கள்.—அப்போஸ்தலர் 23:6-10.
வைராக்கியமிக்க கிறிஸ்தவரென பெயரெடுத்திருந்த பவுல், தான் ஒரு பரிசேயனாய் வாழ்வதாக அந்த நியாய சங்கத்தாரை நம்ப வைத்திருந்திருக்க முடியாது. அங்கிருந்த பரிசேயரும் தங்களுடைய போதனைகள் அனைத்தையும் நம்பாத ஒருவரை பரிசேயனாய் ஏற்றிருக்க மாட்டார்கள். எனவே, தன்னை பரிசேயன் என பவுல் சொன்னபோது சூழலுக்குப் பொருத்தமான குறிப்பிட்ட அர்த்தத்திலேயே சொல்லியிருக்க வேண்டும்; அங்கிருந்த பரிசேயரும் அந்த அர்த்தத்திலேயே அவர் சொன்னதைப் புரிந்திருக்க வேண்டும்.
மரித்தோரின் உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையைக் குறித்து அவர் நியாயம் விசாரிக்கப்படுவதாகச் சொன்னபோது, இந்த விதத்தில் அவர் பரிசேயர்களைப் போல் இருந்ததாகவே அர்த்தப்படுத்தினார். உயிர்த்தெழுதல் விஷயத்தில் எந்தவொரு எதிர்வாதம் எழுந்திருந்தாலும், உயிர்த்தெழுதலை நம்பாத சதுசேயருடன் அல்ல ஆனால் பரிசேயருடன்தான் அவரைச் சம்பந்தப்படுத்தியிருப்பார்கள்.
உயிர்த்தெழுதல், தேவதூதர்கள் போன்ற விஷயங்களையும், நியாயப்பிரமாணத்திலுள்ள சில குறிப்புகளையும் பரிசேயர் நம்பினார்கள்; ஒரு கிறிஸ்தவராக பவுலும் அவற்றை நம்பினார்; அதில் கருத்து வேறுபாடு இருக்கவில்லை. (பிலிப்பியர் 3:5) எனவே, குறிப்பிட்ட இந்த அர்த்தத்திலேயே அவர் தன்னை பரிசேயன் என சொல்லியிருக்க வேண்டும், இந்தக் குறிப்பிட்ட அர்த்தத்திலேயே நியாய சங்கத்தில் இருந்தவர்கள் அவர் சொன்னதைப் புரிந்திருக்க வேண்டும். ஆகையால், யூத உயர் நீதிமன்றத்திலிருந்த தப்பெண்ணமுடைய ஆட்களைச் சமாளிப்பதற்கு மட்டுமே அவர் தனது பின்னணியைப் பயன்படுத்தினார்.
என்றாலும், அவர் தனது விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்பதற்கு மிகவும் பலமான அத்தாட்சி இருக்கிறது; யெகோவாவின் அங்கீகாரம் அவருக்கு தொடர்ந்து இருந்ததே அந்த அத்தாட்சியாகும். கேள்விக்குரிய அந்த வாக்கியத்தை பவுல் சொன்னதற்கு மறுநாள் இரவில் இயேசு அவரிடம், “திடன்கொள்; நீ என்னைக் குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்தது போல ரோமாவிலும் சாட்சி கொடுக்க வேண்டும்” என்று சொன்னார். கடவுளின் அங்கீகாரத்தை பவுல் பெற்றிருந்ததால் அவர் தனது கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.—அப்போஸ்தலர் 23:11.