‘அவர்கள் ஆலோசனைச் சங்கத்தாரை வரவழைத்தார்கள்’
யூதர்களின் பிரதான ஆசாரியனும் தலைவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த செய்தி பரவாமல் இருக்க அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இயேசுவைக் கொலை செய்வதில் அவர்கள் வெற்றி அடைந்திருந்தார்கள்; ஆனால், இப்போது அவர் உயிர்த்தெழுப்பப்பட்டதாக அவருடைய சீஷர்கள் எருசலேம் எங்கும் பேசி வருகிறார்கள். இவர்களுடைய வாயை எப்படி அடைக்கப்போகிறார்கள்? அதைத் தீர்மானிக்க பிரதான ஆசாரியனும் அவருடைய சகாக்களும் ‘ஆலோசனைச் சங்கத்தாரை வரவழைத்தார்கள்’; இந்த ஆலோசனைச் சங்கம் என்பது யூதர்களின் உச்ச நீதிமன்றமாகும்.—அப்போஸ்தலர் 5:21.
முதல் நூற்றாண்டில் ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவுக்கு இஸ்ரவேலில் எதையும் தீர்மானிக்கும் உச்சமட்ட அதிகாரம் இருந்தது. ஆனால், அவருக்கும் இந்த ஆலோசனைச் சங்கத்தாருக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு நிலவியது? அவர்களுடைய அதிகார வரம்புகள் என்னென்ன? ஆலோசனைச் சங்கத்தின் உறுப்பினர்களாக யார் இருந்தார்கள்? அச்சங்கம் எப்படிச் செயல்பட்டது?
ஆலோசனைச் சங்கம் உருவான கதை
‘ஆலோசனைச் சங்கம்’ என்பதற்குரிய கிரேக்க வார்த்தை, ‘சேர்ந்து உட்காருதல்’ என்ற நேரடி அர்த்தத்தைத் தருகிறது. இது, பேரவைக் கூட்டத்தைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். யூத பாரம்பரியத்தில் பெரும்பாலும் இது மத நீதி விசாரணைக் குழுவை அல்லது நீதிமன்றத்தைக் குறித்தது.
பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்பட்டதற்குப் பின்னான நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்ட டால்மூட்டை எழுதியவர்கள், தொன்றுதொட்டு இருந்து வந்த ஒரு குழுவைப் போல இந்த ஆலோசனைச் சங்கத்தை விவரித்தார்கள். யூதர்களின் நியாயப்பிரமாணத்திலுள்ள குறிப்புகளை விவாதிப்பதற்குக் கூடிவந்த கல்விமான்களே எப்போதும் அந்தக் குழுவில் இருந்ததாக அவர்கள் நினைத்தார்கள்; இஸ்ரவேலரை வழிநடத்திச் செல்ல தனக்கு உதவியாய் இருக்கும்படி மோசே 70 மூப்பர்களை நியமித்ததிலிருந்தே இந்தக் குழு இருந்து வருவதாக நம்பினார்கள். (எண்ணாகமம் 11:16, 17) சரித்திராசிரியர்களோ இக்கருத்தைப் புறக்கணித்தார்கள். இஸ்ரவேல் தேசம் பெர்சியர்களின் ஆதிக்கத்தின் கீழ் வரும்வரை முதல் நூற்றாண்டு ஆலோசனைச் சங்கத்தைப் போன்ற எதுவும் இருக்கவில்லை என அவர்கள் சொல்கிறார்கள். புலமைமிக்க டால்மூட் எழுத்தாளர்களின் குழு பற்றிய விவரிப்பு, இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்த ரபீக்களின் குழுக்களுக்கே பொருந்தும் என்றும் ஆலோசனைச் சங்கத்துக்குப் பொருந்தாது என்றும்கூட அவர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் இந்த ஆலோசனைச் சங்கம் எப்போது உருவானது?
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்கள், பொ.ச.மு. 537-ல் தாயகம் திரும்பினார்கள்; அப்போது, தங்களை வழிநடத்துவதற்குத் தேசிய அளவில் ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள் என பைபிள் காட்டுகிறது. இளவரசர்கள், மூப்பர்கள், பிரபுக்கள், அதிகாரிகள் ஆகியோரைப் பற்றி நெகேமியாவும், எஸ்றாவும் குறிப்பிடுகிறார்கள்; ஒருவேளை இவர்களே பிற்பாடு வந்த ஆலோசனைச் சங்கத்திற்கு அஸ்திவாரமாக இருந்திருக்கலாம்.—எஸ்றா 10:8; நெகேமியா 5:7.
எபிரெய வேதாகமம் எழுதி முடிக்கப்பட்டதற்கும், மத்தேயு சுவிசேஷம் தொகுக்கப்பட்டதற்கும் இடைப்பட்ட காலம் யூதர்களுக்குத் துன்ப காலமாய் இருந்தது. பொ.ச.மு. 332-ல் யூதேயா, மகா அலெக்சாந்தரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர் இறந்த பிறகு இது அவருடைய பேரரசைச் சேர்ந்த இரண்டு கிரேக்க ராஜ்யங்களின் அதிகாரத்தின் கீழ் வந்தது. அதாவது, முதலாவதாக தாலமி வம்சத்தாரின் கீழும், பின்னர் செலூக்கஸ் வம்சத்தாரின் கீழும் வந்தது. பொ.ச.மு. 198-லிருந்து ஆட்சிசெய்ய ஆரம்பித்த செலூக்கஸ் வம்சத்தாரைப் பற்றிய பதிவுகளில் யூத ஆட்சிப் பேரவையைப் பற்றி முதலாவது குறிப்பிடப்படுவதை நாம் பார்க்கிறோம். ஒருவேளை இந்தப் பேரவை ஓரளவு அதிகாரமே பெற்றிருந்திருக்கலாம், ஆனால், பார்ப்பதற்கு இது யூதர்கள் தன்னாட்சி செய்வதைப் போல் தோன்றியது.
பொ.ச.மு. 167-ல் செலூக்கஸ் வம்சத்தில் வந்த ராஜாவான நான்காம் ஆண்டியோகஸ் (எப்பிஃபேனீஸ்), யூதர்கள் மத்தியில் கிரேக்க கலாச்சாரத்தைப் புகுத்த முயன்றார். எருசலேமிலிருந்த ஆலய பலிபீடத்தில் ஜீயஸ் தெய்வத்திற்குப் பன்றியைப் பலிசெலுத்தி, அதன் பரிசுத்த தன்மையைக் குலைத்தார். இது மக்களிடையே கலகத்தைத் தூண்டிவிட்டது. இந்தச் சமயத்தில், செலூக்கஸ் வம்சத்தாரின் ஆட்சிக்கு எதிராக மக்கபேயர்கள் கலகம் செய்து பிரிந்து எஸ்மோனிய வம்சத்தை உருவாக்கினார்கள்.a அதேசமயத்தில், இந்தக் கலகத்திற்கு உடந்தையாய் இருந்த வேதபாரகர்களுக்கும் பரிசேயர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்ததால் அவர்கள் அரசாங்க அதிகாரத்தைப் பெற்றார்கள்; ஆசாரியர்களோ அதிகாரத்தை இழந்தார்கள்.
அப்போதுதான், கிரேக்க வேதாகமத்தில் விவரிக்கப்படும் ஆலோசனைச் சங்கம் உருவாக ஆரம்பித்தது. இது, தேசிய ஆட்சிப் பேரவையாகவும், யூத நியாயப்பிரமாணத்திற்கு விளக்கம் அளிப்பதற்கான உச்ச நீதிமன்றமாகவும் ஆகவிருந்தது.
அதிகாரத்தில் சமநிலை
முதல் நூற்றாண்டில் ரோமர்களின் ஆதிக்கத்தின் கீழ் யூதேயா இருந்தது. எனினும், யூதர்கள் ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்து வந்தார்கள். விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் ஓரளவு உரிமையைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழிருக்கும் பிரஜைகளுக்குக் கொடுப்பது ரோமர்களின் கொள்கையாக இருந்தது. எனவே, உள்ளூர் நியாய சங்கங்களின் கடமைகளில் ரோம அதிகாரிகள் தலையிடாதிருந்தார்கள்; கலாச்சார வேறுபாடு காரணமாக வரக்கூடிய பிரச்சினைகளையும் தவிர்த்தார்கள். தங்கள் அதிகாரத்தின் கீழிருந்தவர்கள் அவர்களுக்கே உரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கவும், அடிப்படையில் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளவும் அனுமதித்ததன் மூலம், மக்கள் சமாதானமாய் வாழவும், ராஜபக்தியைக் காட்டவும் ரோமர்கள் ஊக்குவித்தார்கள். ஆலோசனைச் சங்கத்தில் தலைமை தாங்கிய பிரதான ஆசாரியனை நியமிப்பது, நீக்குவது, வரி விதிப்பது ஆகியவை தவிர தங்கள் நலனுக்கும் ஆட்சிக்கும் அச்சுறுத்தலாய் இல்லாதவரையில் யூதர்களுடைய விவகாரங்களில் ரோமர்கள் தலையிடாதிருந்தார்கள். இயேசுவின் விசாரணையில் கவனிக்கிறபடி, மரண தண்டனை விதிக்கும் அதிகாரத்தை ரோமர்கள் தங்கள் வசமே வைத்திருந்தார்கள் என்பது தெரிகிறது.—யோவான் 18:31.
இவ்வாறு, யூதர்களின் தனிப்பட்ட விவகாரங்களை இந்த ஆலோசனைச் சங்கம் விசாரித்து தீர்ப்பளித்தது. கைதுசெய்வதற்குச் சேவகர்களைத் தன்வசம் வைத்திருந்தது. (யோவான் 7:32) சின்னஞ்சிறிய குற்றச்செயல்களையும் சட்ட ரீதியிலான வழக்குகளையும் ரோமர்களின் தலையீடு இல்லாமலேயே கீழ் நீதிமன்றங்கள் தீர்த்து வைத்தன. ஒரு வழக்கைத் தீர்த்து வைக்க இவற்றால் முடியாதபோது அது ஆலோசனைச் சங்கத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது; இதன் தீர்ப்பே முடிவான தீர்ப்பாக இருந்தது.
ஆலோசனைச் சங்கம், தன் அதிகாரம் பறிபோகாதிருப்பதற்காக, சமாதானம் நிலவும்படியும் பார்த்துக்கொண்டது, ரோமர்களின் ஆட்சியையும் ஆதரித்தது. ஆனால், அரசியல் குற்றங்கள் நிகழ்ந்ததாக ரோமர்கள் சந்தேகித்தபோது தங்களுக்குச் சரியென தோன்றியபடி நடவடிக்கை எடுத்தார்கள். இவ்வாறுதான் ஒருமுறை அப்போஸ்தலன் பவுல் கைதுசெய்யப்பட்டார்.—அப்போஸ்தலர் 21:31-40.
அதன் உறுப்பினர்கள்
பிரதான ஆசாரியனும், தேசத்தின் பிரமுகர்களில் 70 பேரும் சேர்ந்து ஆலோசனைச் சங்கத்தில் மொத்தம் 71 உறுப்பினர்கள் இருந்தார்கள். ரோமர்களது காலத்தில், ஆசாரிய வகுப்பைச் சேர்ந்த பிரபுக்கள் (முக்கியமாக சதுசேயர்கள்), ஆசாரிய வகுப்பைச் சேராத உயர்குடியினர், பரிசேயர்களின் பிரிவைச் சேர்ந்த புலமைமிக்க வேதபாரகர்கள் ஆகியோர் அச்சங்கத்தின் உறுப்பினர்களாய் இருந்தார்கள். ஆசாரிய வகுப்பைச் சேர்ந்த பிரபுக்களும், இவர்களை ஆதரித்த ஆசாரிய வகுப்பைச் சேராத உயர்குடியினரும் இச்சங்கத்தில் அதிக செல்வாக்கு செலுத்தினார்கள்.b சதுசேயர்கள் பாரம்பரியக் கருத்துகளை விடாப்பிடியாய்ப் பின்பற்றி வந்தார்கள்; பரிசேயர்களோ பரந்த மனதுடன், வளைந்துகொடுப்பவர்களாய் இருந்தார்கள்; அதோடு, இவர்களில் பெரும்பாலோர் சாமானியர்களாக இருந்ததால் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தார்கள். சரித்திராசிரியரான ஜொசிஃபஸ் சொல்கிறபடி, பரிசேயர்களின் கோரிக்கைகளை மனமே இல்லாமல் சதுசேயர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆலோசனைச் சங்கத்திற்கு முன் தன் நியாயத்தை எடுத்துப் பேசி பவுல் வாதிட்டபோது, இந்த இரு தொகுதியினருக்கும் இடையே நிலவிய போட்டி மனப்பான்மையையும் நம்பிக்கைகளில் இருந்த வேறுபாடுகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.—அப்போஸ்தலர் 23:6-9.
ஆலோசனைச் சங்கத்தார் முக்கியமாய் உயர்குடியினராக இருந்தார்கள்; எனவே அவர்கள் அதன் நிரந்தர உறுப்பினர்களாக இருந்தார்கள், உறுப்பினர் பதவி காலியானபோது மற்ற உறுப்பினர்கள் வேறொருவரை பதவியில் அமர்த்தினார்கள். மிஷ்னா சட்டத்தொகுப்பு சொல்லுகிறபடி, புதிய உறுப்பினர்களாய் ஆக விரும்பியவர்கள், “ஆசாரியர்களாகவும், லேவியர்களாகவும், ஆசாரியர்களை மணமுடிக்க தகுதிபெற்ற மகள்களை உடைய இஸ்ரவேலராகவும் இருக்க வேண்டும்.” அதாவது, இந்த இஸ்ரவேலர் தங்கள் சந்ததியார் வேறு இனத்தாருடன் கலக்காதவர்கள் என்பதை வம்சாவளிப் பட்டியல் மூலம் நிரூபிக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். நாடு முழுவதிலுமிருந்த கீழ் நீதிமன்றங்களை இந்த ஆலோசனைச் சங்கம் மேற்பார்வை செய்து வந்ததால், கீழ் நீதிமன்றத்தில் நல்ல பெயரெடுத்தவர்களுக்கு இச்சங்கத்தில் சேவை செய்ய பதவி உயர்வு கிடைத்திருக்கலாம்.
ஆட்சி எல்லையும் அதிகாரமும்
ஆலோசனைச் சங்கத்தின் மீது யூதர்கள் பெருமதிப்பு வைத்திருந்தார்கள், கீழ் நீதிமன்றங்களிலிருந்த நியாயாதிபதிகள் அதன் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்தில் இருந்தார்கள்; மறுப்பவர்களுக்கோ மரணம்தான். இந்த ஆலோசனைச் சங்கம் ஆசாரியர்களின் தகுதிகள், எருசலேம், அதன் ஆலயம், ஆலயத்தில் வணக்கமுறை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஆகியவற்றுக்கு முக்கிய கவனம் செலுத்தியது. சொல்லப்போனால், யூதேயா மட்டுமே அதன் ஆட்சிக்குட்பட்ட எல்லையாக இருந்தது. ஆனால், நியாயப்பிரமாணத்திற்கு விளக்கம் அளிப்பதில் ஆலோசனைச் சங்கத்திற்கே முழு அதிகாரம் இருந்ததாய் கருதப்பட்டதால், சரி எது தவறு எது என்ற தராதரத்தை நிர்ணயிப்பதில் உலகெங்குமிருந்த யூத சமுதாயங்களின் மீது அதற்கு அதிகாரம் இருந்தது. உதாரணத்திற்கு, கிறிஸ்துவின் சீஷர்களைக் கைதுசெய்வதில் ஒத்துழைக்கும்படி தமஸ்குவிலிருந்த ஜெப ஆலயத் தலைவர்களுக்கு, பிரதான ஆசாரியனும் அவருடைய சங்கத்தாரும் கட்டளையிட்டார்கள். (அப்போஸ்தலர் 9:1, 2; 22:4, 5; 26:12) அதேவிதமாக, பண்டிகைகளின்போது எருசலேமுக்குச் சென்ற யூதர்கள் ஆலோசனைச் சங்கத்தின் அதிகார அறிவிப்பு சம்பந்தப்பட்ட செய்தியைத் தெரிந்துகொண்டு வீடு திரும்பியிருக்கலாம்.
மிஷ்னா சொல்கிறபடி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்கள், ஆலோசனைச் சங்கத்தின் ஆணைகளை மீறி நடந்த நியாயாதிபதிகளை விசாரித்தல், பொய்த் தீர்க்கதரிசிகளை விசாரித்தல் போன்றவற்றில் தீர்ப்பளிக்க இச்சங்கத்திற்கே முழு அதிகாரம் இருந்தது. இச்சங்கத்தின் முன் நிறுத்தப்பட்டபோது, இயேசுவும் ஸ்தேவானும் தேவதூஷணம் சொன்னதாகவும், பேதுருவும் யோவானும் தேசத்தையே கலக்கியதாகவும், பவுலோ ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.—மாற்கு 14:64; அப்போஸ்தலர் 4:15-17; 6:11; 23:1; 24:6.
இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் அளிக்கப்பட்ட தீர்ப்பு
ஓய்வுநாட்கள், பரிசுத்த நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் ஆலோசனைச் சங்கம் காலை பலி செலுத்தப்படும் நேரம்முதல் அந்திப்பலி செலுத்தப்படும் நேரம்வரை செயல்பட்டது. பகற்பொழுதில் மட்டுமே விசாரணைகள் நடத்தப்பட்டன. மரண தண்டனைத் தீர்ப்புகள் விசாரணைக்கு மறுநாளே அறிவிக்கப்பட்டன; ஆகவே அத்தகைய விசாரணைகள், ஓய்வுநாளுக்கு அல்லது பண்டிகைக்கு முந்தின நாளில் நடத்தப்படவில்லை. பழிபாவம் அறியாதவர்கள் அநியாயமாகக் கொல்லப்படாதபடி கவனமாய் இருக்க வேண்டுமென சாட்சிக்காரர்கள் கடுமையாய் எச்சரிக்கப்பட்டார்கள். இப்படியிருக்க, பண்டிகைக்கு முந்தின நாளில் காய்பாவின் வீட்டிலே இரவுவேளையில் விசாரணை நடத்தி, இயேசுவைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது சட்டவிரோதமான செயலாகும். நியாயாதிபதிகளே பொய்ச் சாட்சிகளைத் தேடிக் கண்டுபிடித்து, இயேசுவுக்குக் கொலை தண்டனைத் தீர்ப்பு வழங்கும்படி பிலாத்துவை இணங்க வைத்தது அதைவிட மிகப் பெரிய குற்றச் செயலாகும்.—மத்தேயு 26:57-59; யோவான் 11:47-53; 19:31.
மரண தண்டனைக்குரிய வழக்குகளைக் கையாண்ட நியாயாதிபதிகள், அத்தாட்சிகளைக் கவனமாக விசாரித்த காலப் பகுதியில் பிரதிவாதியைக் காப்பாற்ற முயற்சி செய்தார்களென டால்மூட் குறிப்பிடுகிறது. இருப்பினும், இயேசுவுக்கும் சரி அவருக்குப் பிறகு ஸ்தேவானுக்கும் சரி, அத்தகைய விசாரணை நடத்தப்படவில்லை. ஆலோசனைச் சங்கத்தின் முன்பாக அவர் நியாயத்தை எடுத்துச் சொன்னதால், கூட்டத்தார் அவரைக் கல்லெறிந்து கொன்றார்கள். ரோமர்கள் தலையிட்டிருக்காவிட்டால் இதுபோன்ற சூழ்நிலைகளில் அப்போஸ்தலன் பவுலும்கூட ஒருவேளை கொல்லப்பட்டிருப்பார். ஆம், ஆலோசனைச் சங்கத்திலிருந்த நியாயாதிபதிகள் அவரைக் கொலைசெய்ய சதித்திட்டம் போட்டிருந்தார்கள்.—அப்போஸ்தலர் 6:12; 7:58; 23:6-15.
அச்சங்கத்தில் நீதிநெறி தவறாதவர்கள் ஒருசிலராவது இருந்ததுபோல் தெரிகிறது. இயேசுவிடம் பேசிய ஒரு வாலிபன் இதன் உறுப்பினராக இருந்திருக்கலாம். அவனிடமிருந்த சொத்து சுகங்கள் அவனுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தபோதிலும், அவன் குணாளனாக இருந்திருக்க வேண்டும்; இது, தம் சீஷனாகும்படி இயேசு அவனை அழைத்ததிலிருந்து தெரிகிறது.—மத்தேயு 19:16-22; லூக்கா 18:18, 22.
“யூதருக்குள்ளே அதிகாரியான” நிக்கொதேமு என்பவர் இரவுநேரத்திலே இயேசுவைச் சந்திக்க வந்தார்; தன் சக நியாயாதிபதிகள் என்ன நினைத்துக்கொள்வார்களோ என்று பயந்து அந்நேரத்தில் அவர் சென்றிருக்கலாம். எனினும், அவர் இயேசுவின் சார்பாகப் பேசுபவராய், ஆலோசனைச் சங்கத்தாரிடம் இவ்வாறு கேட்டார்: ‘ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா?’ பின்னர் அடக்கம் செய்வதற்கு இயேசுவின் உடல் தயார்படுத்தப்பட்டபோது அவர் “வெள்ளைப்போளமும் கரியபோளமும்” கொண்டுவந்து கொடுத்தார்.—யோவான் 3:1, 2; 7:51, 52; 19:39.
இச்சங்கத்தின் மற்றொரு உறுப்பினரான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்துவிடம் இயேசுவின் உடலைத் தைரியமாகக் கேட்டு வாங்கி, தனக்குச் சொந்தமான புதிய கல்லறையில் அடக்கம் பண்ணினார். இவர் ‘தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தார்,’ ஆனால், யூதர்களுக்குப் பயந்ததால் இவர் தன்னை இயேசுவின் சீஷனாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இருப்பினும், இயேசுவைக் கொல்லுவதற்கு ஆலோசனைச் சங்கம் போட்ட திட்டத்திற்கு இவர் ஆதரவு அளிக்காததால் இவரைப் பாராட்ட வேண்டும்.—மாற்கு 15:43-46; மத்தேயு 27:57-60; லூக்கா 23:50-53; யோவான் 19:38.
இச்சங்கத்தின் உறுப்பினரான கமாலியேல் என்பவர் இயேசுவின் சீஷர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடும்படி ஞானமாய் அறிவுரை கூறினார். அப்படி அவர்கள் செய்யாவிட்டால், ‘தேவனோடே போர் செய்கிறவர்களாய்க் காணப்படுவார்கள்’ என்று சொன்னார். (அப்போஸ்தலர் 5:34-39) இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் கடவுளுடைய ஆதரவு இருந்ததைப் புரிந்துகொள்ளாதபடி எது இந்தச் சங்கத்தாரைத் தடுத்தது? இயேசு செய்த அற்புதங்களை அங்கீகரிப்பதற்குப் பதிலாக அவர்கள் இவ்வாறு நியாய விவாதம் செய்தார்கள்: “நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே.” (யோவான் 11:47, 48) அதிகார வெறியே, யூத உயர்நீதி மன்றம் நீதியைப் புரட்டுவதற்குக் காரணமாய் இருந்தது. அதேபோல், இயேசுவின் சீஷர்கள் மக்களைக் குணப்படுத்தியதைப் பார்த்து மதத் தலைவர்கள் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக ‘பொறாமை நிறைந்தவர்களாய்’ ஆனார்கள். (அப்போஸ்தலர் 5:17) நியாயாதிபதிகளாக அவர்கள் கடவுள் பயமுள்ளவர்களாகவும் நீதிநெறி தவறாதவர்களாகவும் இருந்திருக்க வேண்டும், ஆனால், அவர்களில் பெரும்பாலோர் லஞ்சம் வாங்குகிறவர்களாகவும் நேர்மையற்றவர்களாகவும் இருந்தார்கள்.—யாத்திராகமம் 18:21; உபாகமம் 16:18-20.
கடவுளின் நியாயத்தீர்ப்பு
இஸ்ரவேலர் தம்முடைய நியாயப்பிரமாண சட்டங்களுக்குக் கீழ்ப்படியாததாலும் மேசியாவை ஏற்றுக்கொள்ளாததாலும் தாம் தேர்ந்தெடுத்த ஜனமாய் இராதபடிக்கு யெகோவா இறுதியில் அவர்களை நிராகரித்தார். பொ.ச. 70-ல் எருசலேம் நகரத்தையும் அதன் ஆலயத்தையும் ரோமர்கள் அழித்துப் போட்டபோது, ஆலோசனைச் சங்கமும் முடிவுக்கு வந்தது. ஆம், யூத ஒழுங்குமுறையே ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்தது.
யெகோவா நியமித்திருக்கும் நியாயாதிபதியாகிய இயேசு கிறிஸ்துவே, முதல் நூற்றாண்டிலிருந்த ஆலோசனைச் சங்கத்தாரில் யார் உயிர்த்தெழுதலைப் பெறத் தகுதியானவர்கள், யார் பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பாவம் செய்தவர்கள் என்பதைத் தீர்மானிப்பார். (மாற்கு 3:29; யோவான் 5:22) அத்தகைய தீர்மானங்களை எடுக்கையில் இயேசு துளியும் நீதி தவறாதிருப்பார் என நாம் உறுதியாய் இருக்கலாம்.—ஏசாயா 11:3-5.
[அடிக்குறிப்புகள்]
a மக்கபேயர்கள், எஸ்மோனியர்கள் பற்றி அறிய காவற்கோபுரம், நவம்பர் 15, 1998, பக்கங்கள் 21-4-ஐயும், ஜூன் 15, 2001, பக்கங்கள் 27-30-ஐயும் காண்க.
b பைபிளில் ‘பிரதான ஆசாரியர்’ என பன்மையில் குறிப்பிடப்பட்டிருப்பது, அப்போதைய மற்றும் முன்னாளைய பிரதான ஆசாரியர்களையும் அவர்களுடைய குடும்பத்தில் இனி ஆசாரியர்களாக உயர் பதவி வகிக்க தகுதி பெற்றிருந்தவர்களையும் அர்த்தப்படுத்துகிறது.—மத்தேயு 21:23.