எஸ்மோனியர்களும் அவர்கள் விட்டுச்சென்ற சொத்தும்
இயேசு பூமியில் வாழ்ந்தபோது யூதமதம் பல தொகுதிகளாகப் பிரிவுற்றிருந்தது; எல்லா தொகுதிகளுமே மக்கள்மீது ஆதிக்கம் செலுத்த போட்டிப்போட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பின்னணியிலேயே சுவிசேஷங்களிலும் முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸின் புத்தகங்களிலும் உள்ள காட்சிகள் அரங்கேறுகின்றன.
முக்கிய கதாபாத்திரங்களான பரிசேயர்களும் சதுசேயர்களும், பொதுமக்களை கைப்பாவைகளாக நடத்தும் அளவுக்கு—இயேசுவே மேசியா என்பதற்கு ஆட்சேபணை தெரிவிக்கும் அளவுக்குக்கூட—செல்வாக்கு பெற்றிருந்தனர். (மத்தேயு 15:1, 2; 16:1; யோவான் 11:47, 48; 12:42, 43) ஆனாலும் செல்வாக்குமிக்க இந்த இரு வகுப்பாரைப் பற்றி எபிரெய வேதாகமத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டைப் பற்றிய விவரிப்பில் ஜொஸிஃபஸ் முதன்முதலாக சதுசேயர்களையும் பரிசேயர்களையும் குறிப்பிடுகிறார். இந்தக் காலப்பகுதியில் யூதர்கள் கிரேக்க பண்பாட்டிலும் தத்துவத்திலும் மூழ்கிக்கொண்டிருந்தனர். செலூக்கிய ஆட்சியாளர்கள் எருசலேம் ஆலயத்தை ஜியஸ் கடவுளுக்கென பிரதிஷ்டை செய்து அசுத்தப்படுத்தியபோது கிரேக்க சமயத்திற்கும் யூத சமயத்திற்கும் இடையேயிருந்த இறுக்கம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. எஸ்மோனியர்கள் என அறியப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அதிக வலிமை படைத்த யூதா மக்கபே என்ற யூத தலைவர், ஒரு படைக்கு தலைமைதாங்கி கிரேக்கர்களுக்கு விரோதமாக சென்று ஆலயத்தை கிரேக்கரிடமிருந்து மீட்டார்.a
மக்கபேயர்களின் கிளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பின்னான வருடங்களில், தத்துவங்களின் அடிப்படையில் மத உட்பிரிவுகளை உருவாக்கும் நிலை காணப்பட்டது. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் யூத சமுதாயத்தின்மீது இன்னும் பரந்த ஆதிக்கம் செலுத்த போட்டாபோட்டியிட்டன. ஆனால் இந்நிலை ஏன் உருவானது? யூத மதம் ஏன் இந்தளவுக்கு பிரிவுற்றது? இதற்கு விடைகாண எஸ்மோனியர்களின் சரித்திரத்தை நாம் சற்று ஆராயலாம்.
சுயேச்சையும் ஒற்றுமையின்மையும் அதிகரித்தல்
யெகோவாவின் ஆலயத்தில் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டும் இலட்சியத்தை அடைந்தபின், யூதா மக்கபே அரசியல் பக்கம் சாய்ந்துவிட்டார். அதன் விளைவாக அநேக யூதர்கள் அவரை விட்டு பிரிந்துபோயினர். இருந்தாலும், செலூக்கிய ஆட்சியாளர்களிடம் அவர் தொடர்ந்து போரிட்டு, ரோமிடம் ஒப்பந்தம் செய்து, சுயேச்சையான யூத மாகாணத்தை ஸ்தாபிக்க முயன்றார். இறுதியில் அவர் போரில் மரித்தார். அதன்பின், அவருடைய சகோதரர்களான யோனத்தானும் சீமோனும் தொடர்ந்து போரிட்டனர். மக்கபேயர்களை செலூக்கிய அரசர்கள் முதலில் மிகத் தீவிரமாக எதிர்த்தனர். ஆனால் காலப்போக்கில், அந்த ஆட்சியாளர்கள் அரசியல் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டு எஸ்மோனிய சகோதரர்களுக்கு ஓரளவு சுயேச்சையை வழங்கினார்கள்.
எஸ்மோனியர்கள் ஆசாரிய சந்ததியினராக இருந்தபோதிலும், அவர்களில் ஒருவரும் பிரதான ஆசாரியராக சேவை செய்ததில்லை. ஏனெனில், பிரதான ஆசாரியனாக சாலொமோன் நியமித்திருந்த சாதோக்கின் வழிவந்தவர்களே ஆசாரியர்களாக சேவிக்க வேண்டுமென யூதர்கள் பலரும் நினைத்தார்கள். (1 இராஜாக்கள் 2:35; எசேக்கியேல் 43:19) செலூக்கியர்களை இணங்க வைத்து பிரதான ஆசாரியன் பதவியைப் பெறுவதற்காக யோனத்தான் தன்னுடைய போர் நடவடிக்கையையும் அரசியல் தந்திரத்தையும் பயன்படுத்தினார். ஆனால் யோனத்தானுடைய இறப்புக்குப்பின் அவருடைய அண்ணன் சீமோன் அவரைவிட அதிகத்தைச் சாதித்தார். செப்டம்பர், பொ.ச.மு. 140-ல் ஒரு முக்கியமான ஆணை எருசலேமில் பிறப்பிக்கப்பட்டது; இது வெண்கல தகடுகளில் கிரேக்க பாணியில் பொறிக்கப்பட்டது: ‘தெமெத்திரியுஸ் மன்னன் [கிரேக்க செலூக்கிய ஆட்சியாளர்] அவரைத் [சீமோனை] தலைமைக் குருவாக [பிரதான ஆசாரியனாக] நியமித்தான். அதே சமயத்தில் அவரைத் தன் நண்பனாகவும் கொண்டு, அவரை மிக்க மகிமை, பெருமைகளால் விளங்கச் செய்தான். . . . உண்மையான இறைவாக்கினர் [தீர்க்கதரிசி] ஒருவர் உதிக்கும் வரையில், யூதர்களும் அவர்கள் குருக்களும் காலமெல்லாம் அவரே தங்கள் தலைவரும் தலைமைக் குருவுமாய் இருக்க இசைந்தார்கள்.’—1 மக்கபேயர் 14:38-41 (தள்ளுபடி ஆகமத்தில் காணப்படும் ஒரு சரித்திர புத்தகம்).
பிரதான ஆசாரியனாகவும், ஆட்சியாளனாகவும் இருக்கும்படி சீமோனுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும் கொடுக்கப்பட்ட பதவியை செலூக்கிய அரசாங்கம் மட்டுமல்ல அவருடைய ஜனங்களின் “பேரவையும்” ஏற்றுக்கொண்டது. இது ஒரு முக்கிய திருப்புக்கட்டமாய் அமைந்தது. சரித்திராசிரியர் ஏமீல் ஷூரர் குறிப்பிடுகிறபடி, எஸ்மோனியர்கள் தங்கள் ஆட்சியை ஸ்தாபித்தவுடன், “அவர்களுடைய முக்கிய நோக்கம் டோராவை [யூத சட்டம்] நிறைவேற்றுவதாக இருக்கவில்லை, மாறாக தங்களுடைய அரசியல் அதிகாரத்தை காத்துக்கொள்வதும் அதை விரிவுபடுத்துவதுமாக இருந்தது.” இருந்தாலும், யூதர்களை புண்படுத்தாதபடி பார்த்துக்கொள்வதற்காக சீமோன், “அரசர்” என்ற பெயருக்குப் பதிலாக “எத்நார்ச்” அல்லது “மக்கள் தலைவர்” என்ற பட்ட பெயரை பயன்படுத்தினார்.
எஸ்மோனியர் மதத்திலும் அரசியலிலும் அதிகாரத்தை பறித்துக்கொண்டதை யாருமே விரும்பவில்லை. சரித்திராசிரியர்கள் பலரின் கருத்துப்படி, இந்தக் காலப்பகுதியில்தான் கும்ரான் சமுதாயம் உருவானது. சாதோக்கின் வழிவந்த ஒரு ஆசாரியர் எருசலேமை விட்டு சவக்கடல் அருகிலிருந்த யூதேயா வனாந்தரத்திற்கு ஒரு எதிர் கட்சியை வழிநடத்திச் சென்றார்; கும்ரானின் எழுத்துக்களில் இவரே “நீதியான போதகர்” என குறிப்பிடப்படுவதாக நம்பப்படுகிறது. சவக்கடல் சுருள்களில் ஒன்றான ஆபகூக் புத்தகத்தின் விளக்கவுரை இவ்வாறு கண்டனம் செய்கிறது: “ஆரம்பத்தில் சத்தியவான் என அழைக்கப்பட்ட பொல்லாத ஆசாரியனின் இருதயம் இஸ்ரவேலை ஆட்சி செய்ய ஆரம்பித்ததும் இறுமாப்படைந்தது.” இந்தப் “பொல்லாத ஆசாரியனின்” ஆட்சியைப் பற்றிய விவரிப்பு யோனத்தானுக்கு அல்லது சீமோனுக்கு பொருந்தும் என அறிஞர்கள் பலரும் நம்புகிறார்கள்.
சீமோன் தன் கட்டுப்பாட்டின் கீழிருந்த பிராந்திய எல்லையை விஸ்தரிப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்தார். இருந்தாலும் எரிகோவுக்கு அருகே விருந்துண்கையில் அவருடைய மருமகன் தாலமி, அவரையும் அவருடைய இரண்டு மகன்களையும் கொலை செய்ததோடு அவருடைய ஆட்சி திடீரென முடிவுக்கு வந்தது. ஆனால் பதவியைக் கைப்பற்ற தாலமி எடுத்த முயற்சி தோல்வியுற்றது. ஏனெனில், சீமோனுக்கு மீதமிருந்த ஒரே மகன் ஜான் ஹிர்கேனஸ் தன்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதை அறிந்து உஷாராகி, சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்தார். பிறகு தகப்பன் ஸ்தானத்தை ஏற்று தலைவராகவும் பிரதான ஆசாரியராகவும் ஆனார்.
மேலுமான விஸ்தரிப்பும் ஒடுக்குதலும்
துவக்கத்தில் ஜான் ஹிர்கேனஸ் சீரிய படையினரின் பயங்கரமான அச்சுறுத்தலை எதிர்ப்பட்டார். அதற்குப்பின் பொ.ச.மு. 129-ல் பார்த்தியரோடு கடுமையாக போரிட்டபோது செலூக்கிய வம்சம் படுதோல்வி அடைந்தது. இந்தப் போரினால் செலூக்கியருக்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறித்து மென்னஹம் ஸ்டர்ன் என்ற யூத சரித்திராசிரியர் இவ்வாறு எழுதினார்: “அந்த ராஜ்யத்தின் முழு அமைப்பு முறையுமே ஏறக்குறைய தகர்ந்து விட்டது.” ஆகவே, ஹிர்கேனஸுக்கு இப்போது “யூதேயா முழுவதையும் ஆளும் சுதந்திரம் கிடைத்தது; பல்வேறு முறைகளில் ராஜ்யத்தை விஸ்தரிக்க ஆரம்பித்தார்.” ஆம், நினைத்தபடியே அவர் ராஜ்யத்தை விஸ்தரித்தார்.
இப்போது சீரியர்களின் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாததால், ஹிர்கேனஸ் யூதேயாவுக்கு வெளியேயுள்ள நாடுகளைக் கைப்பற்றுவதற்காக அவற்றின்மீது படையெடுக்க ஆரம்பித்தார். அந்நாட்டவர் யூத மதத்திற்கு மாற வேண்டும், இல்லையெனில் அவர்களுடைய பட்டணங்களெல்லாம் தரைமட்டமாக்கப்படும் என்ற நிலை. இதுமேயருக்கு (ஏதோமியர்களுக்கு) விரோதமாக எடுக்கப்பட்ட இப்படிப்பட்ட போர் நடவடிக்கையைக் குறித்து ஸ்டர்ன் இவ்வாறு குறிப்பிட்டார்: “மத மாற்றத்தின் பட்டியலில் முதல் இடம் பெறுவது இதுமேயர்களே. ஏனெனில் ஒருசிலர் மட்டுமல்ல முழு குலமே மதம் மாற்றப்பட்டது.” ஹிர்கேனஸ் வென்ற மற்ற இடங்களில் ஒன்று சமாரியா. அவர் அதைக் கைப்பற்றியபோது, கெரிசீம் மலையிலுள்ள சமாரியரின் ஆலயத்தை தரைமட்டமாக்கினார். வற்புறுத்தி மதமாற்றம் செய்யும் எஸ்மோனிய வம்சத்தின் இந்த முரண்பாடான கொள்கையைப் பற்றி சரித்திராசிரியர் சாலொமோன் க்ரேஸல் இவ்வாறு எழுதினார்: “மத்தத்தியாவின் [யூதா மக்கபேயின் தந்தை] பேரன் இவர். ஆனால் முந்தைய சந்ததி உயர்வாக காத்து வந்திருந்த கொள்கையையே—மத சுதந்திரத்தையே—மீறினார்.”
பரிசேயர், சதுசேயரின் தோற்றம்
ஹிர்கேனஸின் ஆட்சியைப் பற்றி எழுதும்போதுதான் ஜொஸிஃபஸ் முதன்முறையாக பரிசேயர், சதுசேயரின் அதிகரித்துவரும் செல்வாக்கைப் பற்றி குறிப்பிடுகிறார். (யோனத்தானின் ஆட்சியின்போது பரிசேயர்கள் வாழ்ந்ததாக ஜொஸிஃபஸ் குறிப்பிட்டிருந்தார்.) அவர்களுடைய பூர்வீகத்தைப் பற்றி அவர் குறிப்பிடுகிறதில்லை. இவர்கள் ஹசிடிம் என்ற தொகுதியிலிருந்து வந்த தீவிரவாத பிரிவினர் என்றும் யூதா மக்கபேயின் மத சம்பந்தமான நோக்கங்களுக்கு ஆதரவாக இருந்து பிற்பாடு அவர் அரசியல் பக்கம் சாய்ந்தபோது அவரை விட்டு விலகியவர்கள் என்றும் சரித்திராசிரியர்கள் சிலர் கருதுகிறார்கள்.
பரிசேயர்கள் என்ற பெயர் “விளக்கம் தருபவர்கள்” என்ற வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருப்பதாக சிலர் கருதினாலும், அது பொதுவாக “பிரிந்திருப்பவர்கள்” என்ற எபிரெய மூல வார்த்தையோடு இணைக்கப்படுகிறது. பரிசேயர்கள் எந்த விசேஷ வம்சத்திலிருந்தும் வந்தவர்கள் அல்ல, சாதாரண மக்களே. ஆனால் புலமை பெற்றவர்கள். இவர்கள் சடங்காச்சார அசுத்தத்திலிருந்து தங்களை பிரித்துக் கொண்டனர். அதாவது விசேஷ பக்தி என்ற தத்துவத்தின் பெயரில், ஆசாரிய பரிசுத்தத்தன்மையைப் பற்றிய ஆலய சட்டங்களை அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருத்தினார்கள். பரிசேயர்கள் வேத எழுத்துக்களுக்கு விளக்கம் கொடுப்பதில் புதிய முறையை உருவாக்கினர். அதுவே பின்னால் வாய்மொழிச் சட்டம் என அறியப்பட்டது. சீமோனுடைய ஆட்சியின்போது அவர்கள் அதிக செல்வாக்கு பெற்றனர். அப்போது சிலர் யெரோசீயாவின் (மூப்பர்களின் ஆலோசனை சபை) அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்டனர். அதுவே பிற்பாடு நியாய சங்கம் என அழைக்கப்பட்டது.
ஜான் ஹிர்கேனஸ் துவக்கத்தில் பரிசேயர்களிடம் பயின்று அவர்களை ஆதரித்ததாக ஜொஸிஃபஸ் விளக்குகிறார். ஆனால் ஒரு சமயத்தில், அவர் பிரதான ஆசாரியர் பதவியிலிருந்து விலகாததால் பரிசேயர்கள் அவரை கண்டித்தனர். இது ஒரு திடீர் பிரிவினைக்கு வழிநடத்தியது. ஹிர்கேனஸ் பரிசேயரின் மதச் சட்டங்களுக்கு தடை விதித்தார். அதோடு, பரிசேயரின் மத விரோதிகளான சதுசேயர்களின் பக்கம் அவர் சாய்ந்தார்.
சதுசேயர்கள் என்ற பெயர் பிரதான ஆசாரியன் சாதோக்கின் பெயரோடு சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவருடைய சந்ததியினர் சாலொமோனின் காலத்திலிருந்தே ஆசாரியர்களாக சேவை செய்து வந்தனர். இருந்தாலும், எல்லா சதுசேயர்களும் சாதோக்கின் சந்ததியார் அல்ல. ஜொஸிஃபஸின் கருத்துப்படி இந்த சதுசேயர்கள் சமுதாயத்திலுள்ள உயர்குடி மக்கள், செல்வச்செழிப்பு மிக்கவர்கள், மக்களின் ஆதரவு பெறாதவர்கள். பைபிள் சரித்திர பேராசிரியர் ஷிஃப்மன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இவர்களில் பலரும் . . . ஆசாரியர்கள் அல்லது பிரதான ஆசாரிய குடும்பத்தாரோடு கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்.” இவ்வாறாக இவர்கள் வெகு காலமாகவே உயர்பதவியில் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். ஆகவே, பொதுமக்களின் வாழ்க்கையில் பரிசேயர்களின் செல்வாக்கு அதிகரித்தது; ஆசாரியர்களுக்குரிய புனிதத்தன்மையை எல்லா மக்களும் பெறுவது சம்பந்தமான அவர்களின் கொள்கையும் பரவியது; இவை சதுசேயர்களின் இயல்பான அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டன. ஆனால் இப்போதோ ஹிர்கேனஸுடைய ஆட்சியின் கடைசி வருடங்களின்போது சதுசேயர்கள் தங்கள் செல்வாக்கை மீண்டும் பெற்றனர்.
அரசியல் தழைக்கிறது, பக்தி குறைகிறது
ஹிர்கேனஸின் மூத்த மகன் அரிஸ்டப்யூலஸ், ஒரு வருடம் மட்டுமே ஆட்சிபுரிந்து மரித்தார். அவரும் பலவந்தமாக மதம் மாற்றும் அதே கொள்கையைப் பின்பற்றி இத்தூரியர்களை மதம் மாற்றி, மேல் கலிலேயாவை எஸ்மோனியர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தினார். ஆனால், பொ.ச.மு. 103 முதல் பொ.ச.மு. 76 வரை ஆண்ட அவரது சகோதரன் அலெக்ஸாண்டர் ஜனேயஸின் ஆட்சியின்கீழ்தான், எஸ்மோனிய வம்சத்தின் அதிகாரம் உச்சக்கட்டத்தை எட்டியது.
அலெக்ஸாண்டர் ஜனேயஸ் முந்தின கொள்கையை உடைத்தெறிந்து தன்னை பிரதான ஆசாரியராகவும் அரசராகவும் வெளிப்படையாக அறிவித்தார். எஸ்மோனியர்களுக்கும் பரிசேயர்களுக்கும் இடையிலான சண்டை தீவிரமாகி, உள்நாட்டு போருக்கு வழிநடத்தியது. அப்போரில் 50,000 யூதர்கள் மாண்டனர். இந்த கலகம் தணிந்தபின், புறமத அரசர்களின் வழக்கத்தின்படி கலகம் செய்த 800 பேரை ஜனேயஸ் கழுமரத்தில் ஏற்றினார். அவர்களுடைய மரணத் தறுவாயில், அவர்கள் கண்களுக்கு எதிராகவே அவர்களுடைய மனைவி, பிள்ளைகள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் ஜனேயஸோ தன்னுடைய மறுமனையாட்டிகளுடன் அனைவர் முன்பாக விருந்துண்டார்.b
பரிசேயர்களிடம் ஜனேயஸுக்கு பகை இருந்தபோதிலும், அவர் ஒரு விவரமான அரசியல்வாதியாகவே இருந்தார். பரிசேயர்களுக்கு பொது மக்களின் ஆதரவு அதிகமாக இருந்ததை அவர் அறிந்தார். ஆகவே தன் மரணப் படுக்கையின்போது தன் மனைவி சலோமே அலெக்ஸாண்ட்ராவிடம், பரிசேயர்களோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளும்படி அறிவுரை கூறினார். ஜனேயஸ் தன் குமாரர்களை அல்ல தன் மனைவியையே தனக்குப் பின் ராஜ்யத்தை ஆளும்படி தேர்ந்தெடுத்தார். அவள் திறம்பட்ட முறையில் ஆட்சி செய்தாள். ஆகவே எஸ்மோனிய ஆட்சியில் அவள் ஆண்ட காலப்பகுதியின்போது (பொ.ச.மு. 76-67) தேசத்தில் சமாதானம் தழைத்தோங்கியது. பரிசேயர்கள் தங்களுடைய ஸ்தானத்தை மீண்டும் பெற்றனர், அவர்களுடைய மதக் கொள்கைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
சலோமேயின் மரணத்தின்போது, அவளுடைய மகன்களான இரண்டாம் அரிஸ்டப்யூலஸும், அப்போது பிரதான ஆசாரியனாக சேவித்துவந்த இரண்டாம் ஹிர்கேனஸும் பதவிக்காக போட்டி போட ஆரம்பித்தனர். அரசியலிலும், இராணுவத்திலும் தங்களுடைய முன்னோர்களுக்கு இருந்த ராஜதந்திரம் இவர்களுக்கு இல்லை, அதோடு செலூக்கிய ராஜ்யம் முற்றிலுமாக அழிந்தபின் அப்பகுதியில் ரோமர்களின் செல்வாக்கு அதிகரிப்பதன் அபாயத்தையும் அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என தோன்றுகிறது. பொ.ச.மு. 63-ல் இந்த இரண்டு சகோதரர்களும் தங்களுடைய சண்டையை தீர்த்து வைக்கும்படி தமஸ்குவில் இருந்த ரோம ஆட்சியாளரான பாம்ப்பேயை வேண்டினர். அதே ஆண்டில் பாம்ப்பேயும் அவருடைய படைகளும் எருசலேமுக்கு அணிவகுத்து அதைக் கைப்பற்றினர். இதுவே எஸ்மோனிய ராஜ்யத்தின் முடிவுக்கு ஆரம்பமாக இருந்தது. பொ.ச.மு. 37-ல் இதுமேய அரசர் மகா கோரேசு எருசலேமை கைப்பற்றினார். அவரை ரோம ஆலோசனை சபை “யூதேயாவின் அரசராகவும்” “ரோமர்களின் ஆதரவாளராகவும் நண்பராகவும்” அங்கீகரித்திருந்தது. இவ்வாறு எஸ்மோனிய ராஜ்யம் அழிந்தது.
எஸ்மோனியர்கள் விட்டுச்சென்ற சொத்து
யூதா மக்கபே தொடங்கி இரண்டாம் அரிஸ்டப்யூலஸ் வரை தொடர்ந்த எஸ்மோனியர்களின் காலப்பகுதியே இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் இருந்த மதப் பிரிவினைகளின் பின்னணிக்கு அடிப்படையாகும். எஸ்மோனியர்கள் ஆரம்பத்தில் கடவுள் பக்தியில் வைராக்கியம் காண்பித்தனர். அந்த வைராக்கியம் படிப்படியாக சீரழிந்து தன்னல அக்கறையில் முடிவுற்றது. கடவுளுடைய சட்டங்களைக் கைக்கொள்வதில் மக்களை ஒன்றுபட வைப்பதற்கு பதிலாக அந்த ஆசாரியர்கள் அரசியல் மோதலெனும் பாதாளத்திற்கு அவர்களை வழிநடத்தினர். இச்சூழ்நிலையில் வித்தியாசப்பட்ட மதக் கருத்துக்கள் தழைத்தோங்கின. எஸ்மோனியர்கள் மறைந்து விட்டனர். ஆனால் அவர்கள் நடத்திவந்த மத ஆதிக்கத்திற்கான போராட்டம் இப்போது ரோம் மற்றும் ஏரோதின் ஆட்சியிலிருக்கும் தேசத்தில் சதுசேயர்களுக்கும் பரிசேயர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே தொடர்ந்து நடக்கவிருந்தது.
[அடிக்குறிப்புகள்]
a நவம்பர் 15, 1998 காவற்கோபுரம் பத்திரிகையிலுள்ள “மக்கபேயர் யார்?” என்ற கட்டுரையைக் காண்க.
b “நாகூமின் குறிப்புரை” என்ற சவக்கடல் சுருள், “மனிதரை உயிருடன் கழுமரத்தில் ஏற்றிய,” ‘சீற்றங்கொண்ட சிங்கத்தை’ பற்றி குறிப்பிடுகிறது. இது மேற்குறிப்பிடப்பட்ட சம்பவத்தைக் குறிக்கலாம்.
[பக்கம் 30-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
எஸ்மோனிய வம்சம்
யூதா மக்கபே யோனத்தான் மக்கபே சீமோன் மக்கபே
↓
ஜான் ஹிர்கேனஸ்
↓ ↓
சலோமே அலெக்ஸாண்ட்ரா—கணவர்—அலெக்ஸாண்டர் ஜனேயஸ் அரிஸ்டப்யூலஸ்
↓ ↓
இரண்டாம் ஹிர்கேனஸ் இரண்டாம் அரிஸ்டப்யூலஸ்
[பக்கம் 27-ன் படம்]
யூதா மக்கபே யூத சுயேச்சையை நாடினார்
[படத்திற்கான நன்றி]
The Doré Bible Illustrations/Dover Publications, Inc.
[பக்கம் 29-ன் படம்]
யூதரல்லாதவர்களின் பட்டணங்களைக் கைப்பற்றவும் எஸ்மோனியர்கள் போரிட்டனர்
[படத்திற்கான நன்றி]
The Doré Bible Illustrations/Dover Publications, Inc.