இருளின் சகாப்தத்தை ஒளி முடிவு செய்கிறது
இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலரும் இருந்த காலத்தின் உலகம், எபிரெய வேதாகம காலங்களின் உலகத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருந்தது. இதை அறியாதிருக்கும் பைபிள் வாசகர்கள், தீர்க்கதரிசியாகிய மல்கியாவிலிருந்து சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு வரையிலான 400 ஆண்டுகளைத் தெளிவற்ற முறையிலேயே உணர்வோராக, அவ்வாண்டுகளில் சமுதாய மற்றும் மதம் ஒன்றுபோல் தொடர்ந்துகொண்டிருந்ததாக எண்ணக்கூடும்.
தற்கால பைபிள்கள் பெரும்பான்மையானவற்றில், எபிரெய வேதாகமங்களின் கடைசி புத்தகமாகிய மல்கியா, இஸ்ரவேலின் மீதிப்பேர், பாபிலோன் சிறையிருப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்பு தங்கள் சொந்த நாட்டில் திரும்பக் குடியேறினதோடு முடிகிறது. (எரேமியா 23:3) இந்த உலகத்திலிருந்து தீமையை நீக்கி, மேசியானிய சகாப்தத்தைக் கொண்டுவருவதற்கு, கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாளுக்காகக் காத்திருக்கும்படி பயபக்தியுள்ள யூதர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். (மல்கியா 4:1, 2) இதற்கிடையில், பெர்சியா ஆட்சி செய்தது. யூதாவில் அமர்த்தப்பட்ட பெர்சிய படைகள், இராணுவ வலிமையால் சமாதானத்தைக் காத்து அரச சட்டங்களைக் கடைப்பிடிக்கும்படி செய்து வந்தது.—எஸ்றா 4:23-ஐ ஒப்பிடுக.
எனினும், பின்தொடர்ந்த நான்கு நூற்றாண்டுகள் முழுவதினூடேயும் பைபிள் நாடுகள் மாறாமல் நிலைத்திருக்கவில்லை. ஆவிக்குரிய இருளும் குழப்பமும் நுழையத் தொடங்கின. அருகில் கிழக்குப் பிரதேசம், வன்முறை, பயங்கரவாதம், கொடுங்கோன்மை, தீவிரவாத மத சிந்தனை, பகுத்தறிவு கோட்பாட்டாராய்ச்சி, சந்தேகவாதம் ஆகியவற்றால் அமளிப்பட்டதாக இருந்தது.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களின் முதல் புத்தகமான மத்தேயு, மாறுபட்ட ஒரு சகாப்தத்தில் எழுதப்பட்டது. ரோமின் இராணுவ படைகள், பாக்ஸ் ரோமானாவை அல்லது ரோம சமாதானத்தை, கட்டாய முறையில் செயல்படுத்தி வந்தன. துன்பங்களையும் கொடுங்கோன்மையையும் வறுமையையும் ஒழிப்பதற்கும், வாழ்க்கை, செழுமை, மற்றும் அமைதியின்பேரில் ஒளிவீசச் செய்வதற்கும், மேசியாவின் வருகைக்காக, பயபக்தியுள்ள ஆட்கள் ஆவலோடு காத்திருந்தனர். (ஒப்பிடுக: லூக்கா 1:67-79; 24:21; 2 தீமோத்தேயு 1:10.) இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்னான நூற்றாண்டுகளில் யூத சமுதாயத்தைத் திரும்பவும் மாற்றியமைத்த ஆற்றல்வாய்ந்த காரியங்களை நாம் கூர்ந்து கவனிக்கலாம்.
பெர்சிய காலங்களில் யூத வாழ்க்கை
பொ.ச.மு. 537-ல் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து யூதர்களை விடுதலை செய்த கோரேசின் கட்டளை விளம்பரத்தைப் பின்தொடர்ந்து, யூதரும் யூதரல்லாத கூட்டாளிகளுமான ஒரு கூட்டம் பாபிலோனிலிருந்து வெளியேறியது. ஆவிக்குரியபடி செயல்பட்ட இந்த மீதிப்பேர், அழிக்கப்பட்ட நகரங்களும் பாழாக்கப்பட்ட தேசமும் அடங்கிய ஒரு பிராந்தியத்துக்குத் திரும்பிவந்தனர். ஒரு காலத்தில் மிகப் பரந்ததாயிருந்த இஸ்ரவேலின் பிராந்தியத்தில், ஏதோமியரும் ஃபொனீஷியரும் சமாரியரும் அரபிய குலமரபினரும் மற்றவர்களும் குடியேறி, குறுகியதாக்கிவிட்டிருந்தனர். யூதாவிலும் பென்யமீனிலும் மீந்திருந்த பிராந்தியமானது, அபார் நஹாரா (நதிக்கு அப்பால்) என்றழைக்கப்பட்ட பெர்சிய ஆட்சிக்குரிய மாநிலத்தில் யூதாவின் மாகாணமாயிற்று.—எஸ்றா 1:1-4; 2:64, 65.
பெர்சிய ஆட்சியின்கீழ் யூதா, “பரவலாகுதலும் ஜனத்தொகை பெருகுதலுமான ஒரு காலப்பகுதியை” அனுபவிக்கத் தொடங்கிற்றென்று கேம்ப்ரிட்ஜ் யூதமத சரித்திரம் (ஆங்கிலம்) சொல்லுகிறது. எருசலேமைக் குறித்து அது மேலும் சொல்வதாவது: “உழவர்களும் யாத்திரிகர்களும் நன்கொடைகளைக் கொண்டுவந்தனர், ஆலயமும் நகரமும் செல்வமுடையதாயின, அவற்றின் செல்வம் அயல்நாட்டு வர்த்தகர்களையும் தொழில்திறமை வாய்ந்தவர்களையும் கவர்ந்திழுத்தது.” உள்நாட்டு அரசாங்கத்தையும் மதத்தையும் குறித்ததில் பெர்சியர் எதிர்ப்புக் காட்டாதிருந்தபோதிலும், வரி விதிப்பு கடுமையாக இருந்தது, விலையுயர்ந்த உலோகத்தில் மாத்திரமே அதைச் செலுத்தக்கூடியதாக இருந்தது.—ஒப்பிடுக: நெகேமியா 5:1-5, 15; 9:36, 37; 13:15, 16, 20.
பெர்சிய பேரரசின் முடிவான ஆண்டுகள், மாநில ஆட்சியாளர்களின் எதிர்ப்புக் கிளர்ச்சிகளால் குறிக்கப்பட்டவையாக, மிகக் குழப்பமான காலங்களாக இருந்தன. மத்தியதரைக் கடலோரப் பகுதியில் எழும்பின கலகத்தில் யூதர்கள் பலர் உட்பட்டு, அவர்கள் வடக்கே தொலைதூரமாகக் காஸ்பியன் கடலருகில் ஹிர்கேனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். எனினும், யூதாவின் பெரும்பாகம் பெர்சியாவின் தண்டனையால் பாதிக்கப்பட்டதாகத் தோன்றுகிறதில்லை.
கிரேக்கக் காலப்பகுதி
பொ.ச.மு. 332-ல் மகா அலெக்ஸாண்டர் மத்தியக் கிழக்கில் சிவிங்கியைப்போல் பாய்ந்தார், ஆனால் கிரேக்கச் சரக்குகள் தருவிப்புக்கான ஆவல் ஏற்கெனவே அவருக்கு முன்னதாக வந்துவிட்டது. (தானியேல் 7:6) கிரேக்க அறிவு வளர்ச்சி அரசியல் மதிப்பு வாய்ந்ததாக இருந்ததை உணர்ந்து, அவர், விரிவாகும் தன் பேரரசை கிரேக்கமயமாக்கும்படி, வேண்டுமென்றே உட்பட்டார். கிரேக்கு சர்வதேச மொழியாயிற்று. அலெக்ஸாண்டரின் சுருக்கமான ஆட்சி, போலிமுறை விவாதங்களுக்கான ஆவலையும், போட்டிப் பந்தயங்களுக்கான ஆர்வத்தையும், கலை அழகுணர்ச்சிக்குரிய மதிப்பையும் ஊட்டிவளர்த்தது. படிப்படியாய் யூத பண்பாடும்கூட கிரேக்க பண்பாட்டுக்கு விட்டுக்கொடுத்தது.
பொ.ச.மு. 323-ல் அலெக்ஸாண்டரின் மரணத்துக்குப் பின், சிரியாவிலும் எகிப்திலும் அவருடைய பதவியில் ஆட்சி செய்தவர்கள், தீர்க்கதரிசியாகிய தானியேல், “வடதிசை ராஜா” என்றும் “தென்றிசை ராஜா” என்றும் அழைத்த பாகங்களை நிரப்புவதில் முதலாவதாக இருந்தனர். (தானியேல் 11:1-19) எகிப்திய ‘தென்றிசை ராஜாவாகிய’ டாலமி II ஃபிலடெல்ஃபஸின் ஆட்சியின்போது (பொ.ச.மு. 285-246), எபிரெய வேதாகமங்கள், கோய்னி பொது கிரேக்கில் மொழிபெயர்க்க தொடங்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு செப்டுவஜின்ட் என்று அழைக்கப்படலாயிற்று. இந்த மொழிபெயர்ப்பிலிருந்து பல வசனங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களில் மேற்கோள்களாக எடுத்துக் குறிப்பிடப்பட்டன. ஆவிக்குரிய முறையில் குழப்பமுற்றும் இருளடைந்தும் இருந்த உலகத்துக்கு அறிவொளியூட்டும் கருத்து விளக்கமளிப்பதற்கு இந்த கிரேக்க மொழி மிகச் சிறந்ததாக நிரூபித்தது.
ஆன்டையாக்கஸ் IV எப்பிஃபேனஸ் சிரியாவின் அரசனும் பலஸ்தீனாவை ஆளுபவனுமான பின்பு (பொ.ச.மு. 175-164), அரசாங்கம் ஆதரவளித்த துன்புறுத்தலால் யூத மதம் ஏறக்குறைய முற்றிலும் ஒழிக்கப்பட்டது. யெகோவா தேவனை விட்டுவிடும்படிக்கும் கிரேக்க தெய்வங்களுக்கு மாத்திரமே பலிசெலுத்தும்படிக்கும், மரண பயமுறுத்தலின்கீழ் யூதர் கட்டாயப்படுத்தப்பட்டனர். பொ.ச.மு. 168-ன் டிசம்பரில், எருசலேம் ஆலயத்திலிருந்த யெகோவாவின் பெரிய பலிபீடத்தின்மீது, புறமத பலிபீடம் ஒன்று கட்டப்பட்டு, அதன்மீது ஒலிம்ப்பிய ஜூயஸுக்கு பலிகள் செலுத்தப்பட்டன. திடுக்குற்ற, ஆனால் தைரியமுள்ளோராயிருந்த நாட்டுப்புற மனிதர், யூதாஸ் மக்கபேயஸின் தலைமைவகிப்பின்கீழ் ஒன்றுசேர்ந்து, எருசலேமைத் தாங்கள் கைப்பற்றும் வரையில் கடுமையாகப் போரிட்டனர். ஆலயம் கடவுளுக்குத் திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயம் தூய்மைக்கேடு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சென்ற பின்னான அதே நாளில், அன்றாட பலிகள் திரும்பவும் தொடங்கப்பட்டன.
மீதியான கிரேக்க காலப்பகுதியில், யூதேய சமுதாயத்தினர், தங்கள் பிராந்தியத்தை அதன் பூர்வ எல்லைகள் வரை விரிவாக்க நாடி வலியத் தாக்கினர். புதிதாகக் கண்டடைந்த தங்கள் இராணுவ வீரத்துணிவானது, பட்டயத்தால் கொல்லும் பயமுறுத்தலைக் கொண்டு தங்கள் புறமத அயலாரை மதம் மாறச் செய்வதற்கு வலுக்கட்டாயப்படுத்த, அவபக்தியான முறையில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், கிரேக்க அரசியல் கோட்பாடு நகரங்களையும் பட்டணங்களையும் தொடர்ந்து ஆட்கொண்டு வந்தது.
இந்தக் காலத்தின்போது, பிரதான ஆசாரியத்துவத்தைப் பெற முயற்சி செய்தவர்கள் பெரும்பாலும் சீர்கெட்டவர்களாக இருந்தனர். சதித் திட்டங்களும் படுகொலைகளும் அரசியல் மறை சூழ்ச்சிகளும் அவர்களுடைய பதவியைக் கறைபடுத்தின. யூதருக்குள்ளிருந்த ஆவி எவ்வளவு கறைபட்டதாகியதோ அவ்வளவு அதிகமாக, கிரேக்க போட்டிப் பந்தயங்களும் பிரபலமாயின. இளம் ஆசாரியர்கள் விளையாட்டுகளில் பங்குகொள்ளும்படி தங்கள் ஊழியக் கடமைகளைக் கவனிக்காமல் விடுவதைக் காண்பது எவ்வளவு திகைப்பூட்டுவதாக இருந்தது! யூத விளையாட்டுப் போட்டியாளர், உடையற்றவர்களாய்ப் புறஜாதியாரோடு போட்டியில் பங்குகொண்டபோது சங்கட உணர்வைத் தவிர்ப்பதற்கு “விருத்தசேதனமில்லாத” நிலைக்குள்ளாகும்படி, வேதனையான அறுவை மருத்துவத்துக்கும் தங்களை உட்படுத்தினர்.—ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 7:18.
மத மாற்றங்கள்
நாடுகடத்தப்பட்டதிலிருந்து விடுதலையானதற்குப் பிற்பட்ட தொடக்க ஆண்டுகளில், உண்மையுள்ள யூதர்கள், எபிரெய வேதாகமங்களில் வெளிப்படுத்தப்பட்ட உண்மையான மதத்துடன் புறமத கருத்துக்களையும் தத்துவஞானங்களையும் இணைத்து ஒன்றாக்குவதை எதிர்த்தனர். பெர்சியாவுடன் 60-க்கு மேற்பட்ட ஆண்டுகள் நெருங்கிய கூட்டுறவில் இருந்த பின்பு எழுதப்பட்ட எஸ்தர் புத்தகம், பார்சி மதத்தின் (Zoroastrianism) சிறிய ஒரு தடமும்கூட அடங்கியதாக இல்லை. மேலும், பெர்சிய காலப்பகுதியின் தொடக்கத்தின்போது (பொ.ச.மு. 537-443) எழுதப்பட்ட பைபிள் புத்தகங்களாகிய எஸ்றா, நெகேமியா, அல்லது மல்கியாவிலும்கூட இந்தப் பெர்சிய மத செல்வாக்கு எதுவும் காணப்படுகிறதில்லை.
எனினும், பெர்சிய காலத்தின் பிற்பட்ட பகுதியின்போது, பெர்சியரின் பிரதான தெய்வமாகிய அஹுரா மஸ்டாவை வணங்கினவர்களுடைய கருத்துக்கள் சிலவற்றை, யூதர்கள் பலர் ஏற்கத் தொடங்கினரெனக் கல்விமான்கள் நம்புகின்றனர். இது எஸ்ஸீன்களின் பொதுமதிப்புள்ள குருட்டுப் பழக்கவழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் வெளிப்படுகிறது. நரிகள், மற்ற வனாந்தர சிருஷ்டிகள், மற்றும் இரவில் நடமாடுகிற பட்சிகள் ஆகியவற்றிற்குரிய பொது எபிரெயச் சொற்கள், யூத மனதில், பாபிலோனிய மற்றும் பெர்சிய பழக்கவழக்கக் கோட்பாட்டு தீய ஆவிகளோடும் இரவின் அரக்கர்களுடனும் சம்பந்தப்படலாயின.
புறமத எண்ணங்களை வேறுபட்ட விளக்கத்தில் யூதர்கள் காணத் தொடங்கினர். பரலோகம், நரகம், ஆத்துமா, அந்த வார்த்தை (லோகாஸ்), ஞானம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துக்கள் யாவும் புதிய அர்த்தங்களை ஏற்றன. அப்போது கற்பிக்கப்பட்டபடி, கடவுள் மனிதரோடு அதற்குமேலும் தொடர்புகொள்ளவில்லை என்றளவுக்கு, அவ்வளவு நெடுந்தொலைவில் இருந்தார் என்றால், அவருக்கு மத்தியஸ்தர்கள் தேவைப்பட்டனர். மத்தியஸ்தம் செய்வோரும் பாதுகாப்பாளருமான இந்த ஆவிகளைக் கிரேக்கர் டேமோன்கள் என்றழைத்தனர். டேமோன்கள் (டீமன்கள்) நல்லவர்களாக அல்லது கெட்டவர்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்றவர்களாக யூதர், எளிதில் பேய்த்தன கட்டுப்பாட்டுக்கு ஆளானார்கள்.
ஆக்கப்பூர்வமான ஒரு மாற்றம் உள்ளூர் வணக்கத்தை உட்படுத்தியது. சூழ்வட்டாரத்திலிருந்த யூதரின் சபைகள் மதக் கல்விக்கும் ஆராதனைகளுக்கும் கூடும் இடங்களாக ஜெபாலயங்கள் விரைவில் எழும்பின. திட்டமாக எப்போது, எங்கே, மற்றும் எவ்வாறு யூத ஜெபாலயங்கள் தொடங்கின என்பது தெரிகிறதில்லை. தூர தேசங்களில் யூதர்கள், வணக்கத்திற்காக ஆலயத்துக்குச் செல்ல முடியாதிருந்தபோது, அவர்களுடைய தேவைகளை அவை நிரப்பினதால், ஜெபாலயங்கள் அவர்கள் நாடுகடத்தப்பட்டிருந்தபோது அல்லது அதற்குப் பின்பான காலங்களில் ஸ்தாபிக்கப்பட்டன என்று பொதுவாக நம்பப்படுகிறது. கவனிக்கத்தக்கதாய், ‘இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியினுள் ஆட்களை வரவழைப்பவரான, கடவுளின் மகத்துவங்களைப் பரவலாக அறிவிக்கும்படி’ இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் அவை சிறந்த பொதுவிடங்களாகச் சேவித்தன.—1 பேதுரு 2:9, NW.
யூதமதம் பல்வேறு எண்ணப் பள்ளிகள் அடங்கியதாயிருந்தது
பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில், பல்வேறு எண்ணப் பள்ளிகள் தோன்ற தொடங்கின. அவை தனித்தனி மத அமைப்புகள் அல்ல. மாறாக, அவை, மக்கள்மீது செல்வாக்கு செலுத்தி, அந்த ஜனத்தை யூதேய மதத்தின் நிழலின்கீழ் அடக்கியாளும்படி நாடின யூத குருமார், தத்துவஞானிகள், மற்றும் அரசியல் உழைப்பாளரின் சிறிய சங்கங்களேயாகும்.
அரசியலில் ஈடுட்ட சதுசேயர் முக்கியமாய்ச் செல்வந்தரான ஆட்சி வகுப்பினராக இருந்தனர். பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டின் மத்திபத்தில் ஹஸ்மோனியன் எழுச்சி முதற்கொண்டே அவர்கள் தங்கள் முன்திறமை வாய்ந்த அரசியல் நிர்வாகத்துக்குப் பெயர்பெற்றவர்களாக இருந்தனர். அவர்களில் சிலர் வணிகரும் நில உரிமையாளருமாக இருந்தபோதிலும், பெரும்பான்மையர் குருக்களாக இருந்தனர். இயேசு பிறந்த சமயத்திற்குள், சதுசேயரில் பெரும்பான்மையர் பலஸ்தீனாவின்மீது ரோம ஆட்சியை ஆதரித்தனர், ஏனெனில், அது அதிகத் திடமானதென்றும் அதுவரை இருந்துவந்த நிலையைக் காத்துவருமென்றும் அவர்கள் எண்ணினர். (யோவான் 11:47, 48-ஐ ஒப்பிடுக.) ஏரோதின் குடும்பத்தால் ஆட்சி செய்யப்படுவது தேசிய ஆர்வ மதிப்புக்கு நன்றாகப் பொருந்துமென ஒரு சிறுபான்மையர் (ஏரோதியர்) நம்பினர். எவ்வாறாயினும், தேசம் யூத மதவெறியரின் கைகளில் அல்லது ஆலயத்தின் ஆதிக்கத்தை உடையோராயிருந்த ஆசாரியர்களைத் தவிர வேறு எவரின் கைகளிலும் இருக்கும்படி சதுசேயர் விரும்பவில்லை. சதுசேயரின் நம்பிக்கைகள் மாறுதல் விரும்பாதவை, மோசேயினுடைய எழுத்துக்களின்பேரிலேயே அவற்றின் பொருள்விளக்கம் முக்கியமாய் ஆதாரம் கொண்டிருந்தன, மற்றும் வல்லமை வாய்ந்த பரிசேயரின் கட்சிக்கு அவர்களுடைய எதிர்ப்பைப் பிரதிபலித்தன. (அப்போஸ்தலர் 23:6-8) எபிரெய வேதாகமங்களின் தீர்க்கதரிசனங்களை சதுசேயர் ஏற்காமல் கற்பனைக் கதைகளென்று தள்ளினர். பைபிளின் சரித்திரப்பூர்வ, செய்யுள்முறையான மற்றும் நீதிமொழி புத்தகங்கள் தேவாவியால் ஏவப்பட்டவையல்ல முக்கியமானவையுமல்ல என்று அவர்கள் கற்பித்தனர்.
கிரேக்க மொழியையும் வழியையும் பின்பற்றின யூதருக்கு எதிர்ப்பான மும்முர இயக்கமாக, கிரேக்கக் காலப்பகுதியின்போது பரிசேயர் தோன்றினர். எனினும், இயேசுவின் நாளுக்குள்ளாக அவர்கள், விறைப்பான, பாரம்பரியங்களால் கட்டுப்பட்ட, சட்டக் கட்டுப்பாடுடைய, அகந்தையும் சுயநீதியுமுள்ள மதமாற்றம் செய்வோரும், ஜெபாலய போதனையின் மூலம் அந்த ஜனத்தை அடக்கியாள நாடின போதகர்களுமாக இருந்தனர். பெரும்பாலும் மத்திப வகுப்பினரிலிருந்து அவர்கள் வந்திருந்தனர், பொதுமக்களை ஏளனமாகக் கருதினர். பரிசேயர் பெரும்பான்மையரை, சுயநலம் நாடுவோராகவும், மாய்மாலம் காட்டின இரக்கமற்ற பணப்பிரியராகவும் இயேசு கருதினார். (மத்தேயு, அதிகாரம் 23) எபிரெய வேதாகமங்கள் முழுவதையும் அவர்கள், தங்கள் சொந்த விளக்கத்தின்படி ஏற்றனர், ஆனால், தங்கள் வாய்மொழியான பாரம்பரியங்களுக்கு சமமான அல்லது அதிகப்பட்ட முக்கியத்துவத்தைக் கொடுத்தனர். தங்கள் பாரம்பரியங்கள் ‘நியாயப்பிரமாணத்தைச் சுற்றியுள்ள வேலியாக’ இருந்தன என்று அவர்கள் கூறினர். எனினும் வேலியாக இருப்பதற்கு மாறாக, அவர்களுடைய பாரம்பரியங்கள் கடவுளுடைய வார்த்தையை அவமாக்கி, பொதுமக்களைக் குழப்பமடையவே செய்தன.—மத்தேயு 23:2-4; மாற்கு 7:1, 9-13.
யூதத் துறவியர் (எஸ்ஸீனியர்) ஒதுக்கமான சமுதாயங்கள் ஒருசிலவற்றில் வாழ்ந்ததாகத் தோன்றும் மறைஞானிகளாக இருந்தனர். அவர்கள், வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவை வரவேற்பதற்கு தூய்மையில் காத்திருக்கும் உண்மையான இஸ்ரவேலின் மீதிப்பேராகத் தங்களைக் கருதினர். இந்தத் துறவியர் பக்தியான மிக்க எளிமை வாய்ந்த ஆன்மீக வாழ்க்கையை நடத்தினர். அவர்களுடைய நம்பிக்கைகள் பல, பெர்சிய மற்றும் கிரேக்க கருத்துக்களை வெளிப்படுத்திக் காட்டின.
மதவெறி தூண்டுதலுடையோரும், தேசாபிமான உணர்ச்சி வெறிகொண்டவர்களுமான பல வகையினர், யூத சுதந்திர நிலையோடு தலையிட்ட எல்லோரையும் சத்துருக்களாகக் கொலைபாதக சிந்தனையில் கருதினர். அவர்கள் ஹஸ்மோனியருக்கு ஒப்பிடப்பட்டிருந்தனர் மற்றும் முக்கியமாய்க் கனவியல் போக்குடையோரும், துணிச்சல் வீரமுடையோருமான இளம் ஆண்களுக்கு கவர்ச்சியூட்டுவோராக இருந்தனர். சட்டமீறும் கொலைபாதகர்களாக அல்லது எதிர்த்துத் தாக்கும் போராட்டக்காரராகக் காணப்பட்டு, சிறு சிறு கும்பல்களில் போரிடும் சூழ்ச்சி முறையை அவர்கள் பயன்படுத்தி, நாட்டுப்புற பாதைகளையும் பொது சதுக்கங்களையும் ஆபத்தானவையாக்கி, நாளின் நெருக்கடி நிலைகளோடு மேலும் கூட்டினர்.
எகிப்தில் அலெக்ஸாண்ட்ரிய யூதர்களுக்குள் கிரேக்க தத்துவஞானம் செழித்தோங்கியது. அங்கிருந்து அது பலஸ்தீனாவுக்கும் டயஸ்போராவில் விரிவாய்ச் சிதறப்பட்டிருந்த யூதருக்கும் பரவினது. தள்ளுபடியாகமத்தையும் பழைய ஏற்பாட்டாசிரியர்கள் எழுதியதாகக் கூறும் எழுத்துச் சுவடிகளையும் எழுதின யூத புனைவியலாளர்கள் மோசேயின் எழுத்துக்களைத் துல்லியமல்லாத, எழுச்சியற்ற உருவகக் கதைகளென விளக்கம் கூறினர்.
ரோம சகாப்தம் வந்ததற்குள், கிரேக்கப் பண்பாடு, பலஸ்தீனாவைச் சமுதாய முறைப்படியும், அரசியல் முறைப்படியும், தத்துவஞான முறைப்படியும் நிலைபேறாக மாற்றிவிட்டிருந்தது. யூதரின் பைபிள்பூர்வ மதத்தின் இடத்தை யூதேய மதம் ஏற்றது. இது, பாபிலோனிய, பெர்சிய, மற்றும் கிரேக்கக் கருத்துக்கள் ஓரளவான வேத சத்தியத்துடன் ஒன்றிணைந்த ஒன்றாகும். எனினும், மொத்தமாக, சதுசேயரும் பரிசேயரும் எஸ்ஸீனியரும் அந்த ஜனத்தில் 7 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தனர். இந்த முரண்பாடான வகுப்புகளின் கடும் சுழற்சியில் அகப்பட்டவர்களாய், அந்த யூத ஜனக்கூட்டங்கள், ‘மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தார்கள்.’—மத்தேயு 9:36.
இருளடைந்த அந்த உலகத்திற்குள் இயேசு கிறிஸ்து வந்தார். திரும்பவும் நம்பிக்கையூட்டுகிற அவருடைய இந்த அழைப்பு ஆறுதலளிப்பதாக இருந்தது: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11:28) “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்,” என்று அவர் சொன்னதைக் கேட்டது எவ்வளவு கிளர்ச்சியூட்டினதாக இருந்தது! (யோவான் 8:12) மேலும், இருதயத்தை மகிழ்வித்த அவருடைய இந்த வாக்கு நிச்சயமாகவே களிப்பூட்டுவதாக இருந்தது: “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்.”—யோவான் 8:12.
[பக்கம் 26-ன் படம்]
யூத மதத்தலைவர்கள் ஆவிக்குரிய இருளில் இருந்தனரென்று இயேசு காட்டினார்
[பக்கம் 28-ன் படம்]
ஆன்ட்டியாக்கஸ் IV (எப்பிஃபேனஸ்) உடைய சாயலைக் கொண்டுள்ள நாணயம்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.