பகிரங்கமான நிந்தனைக்குக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்
எவராவது உங்களை நிந்திக்கும்போதோ உங்களைப்பற்றி பொய்களைப் பரப்பும்போதோ நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? இயல்பாகவே நீங்கள் ஆழமாகப் புண்படுத்தப்படுகிறீர்கள். யெகோவாவின் சாட்சிகளும், எப்பொழுதெல்லாம் செய்தித் துறையால் தவறான அல்லது திரித்துக் கூறப்பட்ட தகவலுக்கு இலக்காகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவ்வண்ணமே உணருகிறார்கள். ஆனால், மத்தேயு 5:11, 12-ல் இயேசு சொன்னபடி, அவர்கள் மகிழ்ச்சியாயிருக்க இன்னும் காரணத்தை உடையவர்களாய் இருக்கிறார்கள்.
உதாரணமாக, ஜெர்மனியில் ஒரு கத்தோலிக்க பிரசுரம், “ஒவ்வொரு சாட்சியும், தன் வருமானத்தில் 17-லிருந்து 28 சதவீதத்திற்கு இடைப்பட்ட ஒரு தொகையைத் தன் மத உட்பிரிவின் தலைமை காரியாலயங்களுக்குக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்,” என்று வாதிட்டது. எவ்வாறு இருப்பினும் யெகோவாவின் சாட்சிகள் ஒரு மத உட்பிரிவினர் அல்லர். அவர்கள் வேலைக்கு முழுக்க முழுக்க மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளால் பண உதவியளிக்கப்படுகிறது. இந்தப் பொய்யான செய்தியால், அநேக வாசகர்கள் தவறான எண்ணத்தைக் கொண்டனர், இதை யெகோவாவின் சாட்சிகள் வருந்தத்தக்கதாகக் காண்கின்றனர். ஆனால், செய்தித் துறை வாயிலாக வரும் நிந்தனைக்கு உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
கிறிஸ்தவர்கள் பின்பற்றத்தக்க ஓர் உதாரணம்
இயேசு தன்னுடைய மத எதிரிகளை, அவர்களுடைய மாய்மாலத்திற்காகவும் வஞ்சனைக்காகவும் எவ்வாறு வன்மையாகக் கண்டனம் செய்தார் என்று மத்தேயு 23-ம் அதிகாரம் தெளிவாக விவரிக்கிறது. இது இன்றைய கிறிஸ்தவர்கள், குற்றம்சாட்டுபவர்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதற்கு ஒரு மாதிரியை வகிக்கிறதா? அவ்விதம் அல்ல. கடவுளுடைய குமாரன், தான் கொண்டிருந்த பிரத்தியேக அதிகாரம் மற்றும் உட்பார்வையின் காரணத்தால், தன்னுடைய மத எதிர்ப்பாளர்களைக் கண்டனம் செய்தார். அவ்வாறு செய்ததானது கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தாரின் நன்மையைக் கருதியே.
யூத பாரம்பரியத்தை அவருடைய சீஷர்கள் மீறியதாக, இயேசு குற்றம்சாட்டப்பட்டார் என்று மத்தேயு 15:1-11 விவரிக்கிறது. இயேசு எவ்வாறு பிரதிபலித்தார்? அவர் விட்டுக் கொடுக்கவில்லை. சில சமயங்களில் இயேசு, அவரைக் குற்றம் காண்பவர்களின் தவறான கருத்துக்களை மறுத்து வெளிப்படையாக அவர்களோடு வாதிட்டார். பொதுவாக, இன்று கிறிஸ்தவர்கள் அவர்களுடைய ஊழியத்தை அல்லது போதனைகளைப் பற்றி திரித்துக்கூறப்பட்டவற்றை சரிப்படுத்த முயற்சிப்பதும் நிலைமையை உள்ளதை உள்ளவாறும் அறிவுக்கு உகந்தவாறும் தெளிவுப்படுத்த முனைவதும் தவறல்ல. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய குற்றச்சாட்டுகள் சட்டத்துக்குப் புறம்பானவை மற்றும் அவதூறானவை என்பதை நல்லெண்ணம் கொண்ட ஆட்கள் அடையாளம் கண்டுகொள்ள உதவுவதற்காக இதை அவர்கள் செய்கிறார்கள்.
ஆனால், சிறிது நேரம் கழித்து: “பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா” என்று சீஷர்கள் சுட்டிக் காண்பித்தப்போது, இயேசு எவ்வாறு பிரதிபலித்தார் என்பதைக் கவனியுங்கள். இந்தப் பரிசேயர்கள் “இடறலடைந்தார்கள்”—அவர்கள் வெறுமனே நிலைகுலையவில்லை, ஆனால் திருத்தவே முடியாத எதிராளிகளாக மாறினார்கள், அவர்களை இயேசு நிராகரித்துவிட்டார். எனவேதான் இவ்விதம் பதிலளித்தார்: “அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்.” அத்தகைய பகைமையுணர்வு கொண்ட எதிரிகளோடு மேற்கொண்டுப் பேசுவதில் பிரயோஜனம் ஏதுமில்லை, ஒருவரும் நன்மையடைய போவதில்லை மற்றும் அது வீண் விவாதத்தில்தான் முடியும். (மத்தேயு 7:6; 15:12-14; ஒப்பிடுக: 27:11-14.) இயேசு கொடுத்த பதில்கள் “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு,” என்பதை காட்டுகின்றன.—பிரசங்கி 3:7.
யெகோவாவின் சாட்சிகள் தங்களைப் பற்றி ஒவ்வொருவரும் சாதகமாகப் பேச வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. “எல்லா மனுஷரும் உங்களைக்குறித்து புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு அப்படியே செய்தார்கள்,” என்று இயேசு சொன்ன வார்த்தைகளை மனதில் கொண்டுள்ளனர். (லூக்கா 6:26) உவாட்ச் டவர் சொஸைட்டியின் முதல் பிரஸிடென்ட் சி. டி. ரஸல், பகிரங்கமாகப் பொய்க்குற்றம் சாட்டுபவர்களுக்கு எதிராக அவர்தாமே ஏன் வாதிடுவதில்லை என்று ஒரு முறை கேட்கப்பட்டார். அப்போது, “உங்களைப் பார்த்து குரைக்கும் ஒவ்வொரு நாயையும் அடிப்பதற்காக நிற்பீர்களானால், நீங்கள் ஒருபோதுமே அதிகத்தூரம் செல்ல முடியாது,” என்று அவர் பதிலளித்தார்.
பிடிவாதமான எதிராளிகளின் குற்றங்கூறுதல்கள், கடவுளுக்கு நாம் செய்யும் சேவையிலிருந்து நம்மை வழிவிலகிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. (சங்கீதம் 119:69) உண்மை கிறிஸ்தவர்களின் வேலையாகிய சுவிசேஷத்தைப் பிரசங்கித்தலுக்குக் கவனத்தை ஒருமுகப்படுத்துவோமாக. அதன் இயல்பான விளைவாகவே, கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் ஒரு நபரின் ஒழுக்கத்தை மேம்படுத்துவது மற்றும் அவருக்குக் கடவுளுடைய வார்த்தையிலிருந்து போதிப்பது போன்ற நம்முடைய வேலையின் தன்மையை விளக்கவும் வாய்ப்புகளைக் கொண்டிருப்போம்.—மத்தேயு 24:14; 28:19, 20.
குற்றச்சாட்டுகளுக்குப் பிரதிபலிக்க வேண்டுமா?
தம்மை பின்பற்றுகிறவர்களைப் பற்றி இயேசு கூறினார்: “நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும் . . . உலகம் உங்களைப் பகைக்கிறது.” (யோவான் 15:19) பத்திரிகை உலகின் அநேக அறிக்கைகள் யெகோவாவின் சாட்சிகள் மீது நிந்தனைகளைக் குவிக்கின்றன, இவை வெறுப்பின் வெளிக்காட்டல்களே, இவற்றை ஒதுக்கித்தள்ள வேண்டும். என்றபோதிலும், சாட்சிகளைப் பற்றிய அரைகுறையான அறிவை உணர்த்தும் செய்தியை அல்லது சில உண்மைகளை மாறாட்டம் செய்தும் திரித்தும் கூறும் செய்தியை சில சமயங்களில் செய்திமூலங்கள் அளிக்கக்கூடும். சில பத்திரிகையாளர்கள் விவரங்களை ஓரவஞ்சனையான மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்கின்றனர். செய்திமூலங்களில் வரும் பொய்த்தகவலை நாம் மறுப்பதும் உண்மைக்காகப் பொருத்தமான மூலங்கள் வாயிலாக எதிர்வழக்காடுவதும் சூழ்நிலைமைகளையும் குற்றச்சாட்டை தூண்டிவிட்டவரையும் அவருடைய நோக்கத்தையும் சார்ந்துள்ளன.
சில சமயங்களில், பத்திரிகை ஆசிரியருக்குச் சரியான விதத்தில் எழுதிய கடிதம் முழுமையாகப் பிரசுரிக்கப்படுமானால், அதன் மூலம் உண்மைகளை சரிசெய்து விடலாம். ஆனால், அந்தக் கடிதம் நினைத்ததற்கு நேர் எதிரிடையான விளைவிலும் முடியக்கூடும். எவ்வாறு? இவ்விதமாக அந்த ஆரம்ப பொய் இன்னும் அதிகமான விளம்பரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது பொய்களையும் அவதூறுகளையும் அச்சிடுவதற்கு, எதிரிகளுக்கு மேலும் அதிகமான வாய்ப்புகளைக் கொடுக்கலாம். அநேக சந்தர்ப்பங்களில், பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் காரியத்தை, சம்பந்தப்பட்ட மூப்பர்களிடத்தில் விட்டுவிடுதலே புத்திசாலித்தனமானதாகும். ஒருவேளை எதிர்மறையான பத்திரிகை செய்தியானது, தப்பெண்ணத்தைக் கிளப்பிவிடுமாயின், உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளையலுவலகம், அந்தத் தேசத்திலுள்ள சபைகளுக்குத் தேவையான விவரங்களை அறிவிக்கலாம். இவ்வாறாக எல்லா பிரஸ்தாபிகளும் விவரம்கோருபவருக்குத் திருப்தியான பதிலைக்கொடுக்க வகைசெய்கிறது.
நீங்கள் தனிப்பட்டவராக, இவ்வாறு புரட்டப்பட்ட குற்றச்சாட்டுகளில் உட்படுத்திக் கொள்ள வேண்டுமா? “அவர்களை விட்டுவிடுங்கள்” என்ற இயேசுவின் அறிவுரை, அவர்களைப் புறக்கணித்தல், இந்தப் பகைவர் கூட்டத்திற்கும் தெளிவாகவே பொருந்துகிறது. விசுவாசத் துரோகிகளையும் அவர்களின் கருத்துக்களையும் உத்தம கிறிஸ்தவர்கள் வெறுத்து தள்ளிவிட வேதப்பூர்வ காரணங்களைக் கொண்டுள்ளனர். (1 கொரிந்தியர் 5:11-13; தீத்து 3:10, 11; 1 யோவான் 2:19; 2 யோவான் 10, 11) யெகோவாவின் சாட்சிகளைப்பற்றிய குற்றச்சாட்டுகள் உண்மையின் மீது ஆதாரம் கொண்டுள்ளதா அல்லது கட்டுக்கதைகளின் மீது ஆதாரம் கொண்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள, உண்மையிலேயே அக்கறையுடைய யாராவது ஒருவருக்குப் பதிலளிக்க, உங்களுடைய சொந்த ஆதாரப்பூர்வ அறிவே வழக்கமாகப் போதுமானது.—ஆங்கில காவற்கோபுரம், மார்ச் 15, 1986, பக்கங்கள் 13 மற்றும் 14-ஐக் காண்க.
பத்திரிகையில் திரித்துக் கூறப்படும் செய்தியை நீங்கள் ஒருவேளை எதிர்ப்படுகையில், “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்,” என்ற நீதிமொழிகள் 14:15-ன் ஆலோசனையை மனதில் ஏற்பீர்களாக. ஸ்விட்ஸர்லாந்தில், மருத்துவ பணியாளர்கள் ஒரு இளம் பெண் சாட்சிக்கு இரத்தம் ஏற்றுதலைச் செயல்படுத்த அவளுடைய உறவினர்கள் மறுத்ததன் காரணமாக அவள் இறந்து விட்டாள் என்ற உள்ளத்தை நெகிழச்செய்யும் பத்திரிகை செய்தியால் அநேக ஆட்கள் கடும்கோபம் கொண்டனர். அவை அனைத்தும் உண்மையானவையா? இல்லை. நோயாளி இரத்தம் ஏற்றுதலைத்தான் மதத்தின் அடிப்படையில் மறுத்தார். ஆனால் அவர் இரத்தமில்லா மாற்று மருத்துவ சிகிச்சையை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவே செய்தார். மேற்கொண்டு எந்தவித அமளியும் இன்றி இது கொடுக்கப்பட்டிருந்தால், அவருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆயினும், சிகிச்சையளிக்க காலம் கடந்துபோகும் வரை மருத்துவமனை வீணாகத் தாமதித்தது. அந்தச் செய்தி அறிக்கை இத்தகைய உண்மைகளைக் குறிப்பிடவில்லை.
இவ்வாறாக, அத்தகைய அறிக்கைகள் எந்தளவுக்கு உண்மையை அடக்கியுள்ளன என்று கவனமாக மதிப்பிடுங்கள். அத்தகைய விவகாரங்களை உள்ளூர் சபை மூப்பர்கள் அன்பான விதத்திலும் வேதாகமங்களின் அடிப்படையிலும் கையாளுகிறார்கள் என்று விவரம் கோருவோருக்கு நாம் விளக்கிக் கூறலாம். பதிலளிக்கும்போது நியமங்களை மனதில் கொண்டிருப்பது, தவறான முடிவுக்கு வருவதிலிருந்து நம்மைத் தடுக்கிறது.—நீதிமொழிகள் 18:13.
நேரடி விவரம் இன்றியமையாதது
முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் நற்பெயரைக் களங்கப்படுத்த, ஜனங்கள் அவரைப்பற்றி பொய்களைப் பரவச் செய்தார்கள். சிலர் அவரை இராஜ துரோகி என்பதாகக்கூட அறிமுகப்படுத்தினார்கள். (லூக்கா 7:34; 23:2; ஒப்பிடுக: மத்தேயு 22:21.) பின்னர் இளம் கிறிஸ்தவ சபை, மதசம்பந்தமான மற்றும் உலகப்பிரகாரமான என இரண்டு கூறுகளிலிருந்தும் மிகப் பரவலான அளவில் எதிர்ப்பை எதிர்ப்பட்டது. “தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்,” என்ற காரணத்தினால், அநேகர் அவருடைய ஊழியர்களை ஏளனமாகப் பார்க்கிறார்கள். (1 கொரிந்தியர் 1:22-29) துன்புறுத்தலின் ஒரு அம்சமாகிய நிந்தையை இன்று உண்மை கிறிஸ்தவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.—யோவான் 15:20.
ஆயினும், தாங்கள் உரையாடிக்கொண்டிருக்கிற அந்த நபர் ஒருதலைப்பட்சம் சாயாதவராய் இருக்கும்போதும் ரோமாபுரியில் பவுலைக் காண வந்தவர்களின் அதே மனப்பான்மையை அந்த நபர் காட்டும்போதும் யெகோவாவின் சாட்சிகள் போற்றுகிறார்கள். அவர்கள் அறிவித்தார்கள்: “எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம்.”—அப்போஸ்தலர் 28:22.
தவறாக அறிவிக்கப்பட்டிருப்போருக்கு விளக்கத்தை அளியுங்கள். சாந்தத்தோடு அவ்வாறு செய்யுங்கள். (ரோமர் 12:14; ஒப்பிடுக: 2 தீமோத்தேயு 2:25.) யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி, நேரடி விவரத்தைப் பெற்றுக்கொள்ள அழைப்புக்கொடுங்கள், அது அவர்களைப் பொய்க் குற்றச்சாட்டுகளால் ஏமாறாமலிருக்க வகைச் செய்யும். உவாட்ச் டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட விளக்கங்களையும் நீங்கள் உபயோகிக்கலாம். அவை அமைப்பையும் அதன் வரலாற்றையும் அதன் போதனைகளையும் பற்றிய விவரங்களை அளிக்கின்றன.a “வந்து பார்,” என்று வெறுமனே அழைப்பதன் மூலம், ஒரு முறை நாத்தான்வேலுக்கு பிலிப்பு பதிலளித்தார். (யோவான் 1:46) நாமும் அவ்விதமே செய்யலாம். உள்ளூர் ராஜ்ய மன்றத்தை விஜயம் செய்ய விரும்பும் எவருக்கும், கனிவான வரவேற்பு காத்திருக்கிறது. அப்பொழுது யெகோவாவின் சாட்சிகள் எத்தகைய ஆட்கள் என்பதையும் அவர்கள் எவற்றை நம்புகிறார்கள் என்பதையும் அவராகவே அடையாங்கண்டு கொள்ள முடியும்.
எதிராளிகளைக் கண்டு பயப்படாதீர்
ஆட்கள் சாட்சிகளாக மாறுவதை நிந்தையானது தடுத்து நிறுத்துவதில்லை என்று அறிந்து கொள்வது எவ்வளவு உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது! ஜெர்மனியில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, விசுவாசத்துரோகிகள் சாட்சிகளைப்பற்றி அநேக பொய்களைக் கட்டிவிட்டார்கள். விசுவாசத்துரோக ஜோடனைகள் கற்பனையே என்பதைப் பார்வையாளர் ஒருவர் உணர்ந்து கொண்டார், சாட்சிகளிடத்தில் மீண்டும் தன் பைபிள் படிப்பைத் தொடர தூண்டப்பட்டார். ஆம், பகிரங்கமான நிந்தை சில சமயங்களில் சாதகமான விளைவுகளில் சென்று முடிகிறது!—ஒப்பிடுக: பிலிப்பியர் 1:12, 13.
சிலர் சத்தியத்தைக் காட்டிலும் “கட்டுக்கதைகளுக்கு,” அதிகமாகச் செவிசாய்ப்பார்கள் என்பதை அப்போஸ்தலன் பவுல் அறிந்திருந்தார். எனவேதான் அவர் எழுதினார்: “மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.” (2 தீமோத்தேயு 4:3-5) ஆகவே, உங்கள் கவனத்தைச் சிதறவிடாதீர்கள், உங்கள் எதிராளிகளால், ‘மருளாதிருங்கள்.’ (பிலிப்பியர் 1:28) அமைதியாகவும் கலங்காமலும் இருங்கள், நற்செய்தியைச் சந்தோஷமாகப் பிரசங்கியுங்கள், நீங்கள் பகிரங்கமான நிந்தையை உறுதியோடு சாமாளிப்பீர்கள். ஆம், “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே,” என்ற இயேசுவின் வாக்குறுதியை நினைவில் கொள்வீர்.—மத்தேயு 5:11, 12.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள், இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள், யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் ஆகிய பிரசுரங்களைக் காண்க.
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
எதிர்ப்பவர்களை எதிர்ப்பட்டபோது, இயேசு தம் சீஷர்களிடத்தில் கூறினார்: “அவர்களை விட்டுவிடுங்கள்.” அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]
“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.”—மத்தேயு 5:11