உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 8/15 பக். 12-17
  • காரணமின்றி பகைக்கப்படுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • காரணமின்றி பகைக்கப்படுதல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அநியாயமாய் பகைக்கப்படுவதற்கு மூலகாரணம்
  • மக்கள் ‘உங்களை நிந்திக்கும்போது’
  • நிந்திக்கப்படும்போது சகித்திருத்தல்
  • உங்கள் விசுவாசத்தை இப்போதே பலப்படுத்துங்கள்
  • கடவுளுக்குப் பிரியமாக வாழ்தல்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்த்த யோபு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • நீங்கள் ஒரு முக்கிய விவாதத்தில் உட்பட்டவர்களாக இருக்கிறீர்கள்
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • கடவுளுடைய நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 8/15 பக். 12-17

காரணமின்றி பகைக்கப்படுதல்

“முகாந்தரமில்லாமல் [அதாவது, காரணமில்லாமல்] என்னைப் பகைத்தார்கள்.”​—⁠யோவான் 15:25.

1, 2. (அ) கிறிஸ்தவர்கள் அவதூறாக பேசப்படுவதைப் பார்த்து சிலர் ஏன் வியப்படைகிறார்கள், ஆனால் அத்தகைய பேச்சைக் கேட்டு நாம் ஏன் ஆச்சரியப்படுவதில்லை? (ஆ) “பகை” என்ற வார்த்தையின் எந்த அர்த்தத்தை இந்த கட்டுரையில் சிந்திக்க இருக்கிறோம்? (அடிக்குறிப்பை காண்க.)

யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களின்படி வாழ பிரயாசப்படுகிறார்கள். அதன் காரணமாக, அவர்கள் பல நாடுகளில் நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறார்கள். என்றாலும் சில சமயங்களில், அவர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான விஷயங்கள் பரப்பப்படுகின்றன. உதாரணத்திற்கு, ரஷ்யாவிலுள்ள செ. பீட்டர்ஸ்பர்க் நகர அரசாங்க அதிகாரி ஒருவர், “யெகோவாவின் சாட்சிகள் என்போர் தலைமறைவாக செயல்படும் ஏதோ ஒருவித இரகசிய மதப்பிரிவினர் என்றும், தங்கள் பிள்ளைகளையும் கொலை செய்து, தாங்களும் தற்கொலை செய்துகொள்கிறவர்கள் என்றும் அவர்களைப் பற்றி புகார்கள் எங்களுக்கு வந்தன” என்று சொன்னார். ஆனால், சர்வதேச மாநாடு ஒன்றின் சம்பந்தமாய் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து வேலை செய்த பிறகு, “சிரித்த முகத்துடன் இருக்கிற சாதாரண ஜனங்களை இப்போது நான் பார்க்கிறேன். . . . அவர்கள் அமைதலும், சாந்தமுமானவர்கள்; ஒருவரை ஒருவர் அதிகம் நேசிப்பவர்கள், . . . ஜனங்கள் ஏன்தான் அவர்களைப் பற்றி இப்படிப்பட்ட பொய்களை சொல்கிறார்களென்று எனக்கு நிஜமாகவே புரியவில்லை” என அதே அதிகாரி சொன்னார்.​—⁠1 பேதுரு 3:16.

2 பொல்லாதவர்களென தங்களுக்கு பொய்ப் பட்டம் சூட்டப்பட்டிருப்பதை எண்ணி கடவுளுடைய ஊழியர்கள் சந்தோஷப்படுவது கிடையாது; அதேசமயத்தில், தங்களுக்கு விரோதமாக எழும் அவதூறான பேச்சைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்படுவதும் கிடையாது. “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். . . . முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று” என இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுபவர்களை முன்னெச்சரித்திருந்தார்.a (யோவான் 15:18-20, 25; சங்கீதம் 35:19; 69:4) “வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?” என்றும்கூட முன்பு ஒருமுறை தம் சீஷர்களிடம் சொல்லியிருந்தார். (மத்தேயு 10:25) அவ்வாறு நிந்திக்கப்படுகையில் சகித்திருப்பது தாங்கள் இயேசுவின் சீஷர்களானபோது ஏற்றுக்கொண்ட ‘கழுமரத்தின்’ ஓர் அம்சம் என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்.​—⁠மத்தேயு 16:24, NW.

3. மெய் வணக்கத்தார் எந்தளவு துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்?

3 மெய் வணக்கத்தார் துன்புறுத்தப்படுவது இன்று நேற்றல்ல, “நீதிமானாகிய ஆபேலின்” காலத்திலேயே ஆரம்பமான ஒன்றாகும். (மத்தேயு 23:34, 35) அது ஏதோ ஓரிரு முறை மட்டுமே நடந்த சம்பவமும் அல்ல. தம்மை பின்பற்றுபவர்கள் தம்முடைய நாமத்தினிமித்தம் ‘எல்லாராலும் பகைக்கப்படுவார்கள்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 10:22) அதுமட்டுமல்ல, நம் ஒவ்வொருவர் உட்பட கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே துன்புறுத்தலை எதிர்பார்க்க வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:12) அவ்வாறு துன்புறுத்தல் வருவதற்கு காரணம் என்ன?

அநியாயமாய் பகைக்கப்படுவதற்கு மூலகாரணம்

4. அநியாயமாய் பகைக்கப்படுவதற்கு மூலகாரணம் யார் என்பதை பைபிள் எப்படி வெளிப்படுத்துகிறது?

4 கண்ணுக்குப் புலப்படாத ஒருவன்தான் மெய் வணக்கத்தாருக்கு விரோதமான பகையை ஆரம்பத்திலிருந்தே தூண்டிவிட்டு வந்திருக்கிறான் என கடவுளுடைய வார்த்தை வெளிப்படுத்துகிறது. விசுவாசமிக்கவர்களில் முதல் மனிதனாயிருந்த ஆபேல் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டதை சிந்தித்துப் பாருங்கள். அவனுடைய கொலைகார சகோதரனான காயீன் பிசாசாகிய சாத்தான் என்ற ‘பொல்லாங்கனால் உண்டாயிருந்தான்’ என பைபிள் குறிப்பிடுகிறது. (1 யோவான் 3:12) சாத்தானுடைய மனோபாவத்தை காயீன் காண்பித்தான்; ஆகவே சாத்தான் தன்னுடைய பொல்லாத திட்டங்களை நிறைவேற்ற அவனை பயன்படுத்திக் கொண்டான். அதுமட்டுமல்ல, யோபுவின் மீதும் இயேசுவின் மீதும் நடத்தப்பட்ட படுபயங்கர தாக்குதல்களில் சாத்தான் வகித்த பங்கைப் பற்றியும் பைபிள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. (யோபு 1:12; 2:6, 7; யோவான் 8:37, 44; 13:27) இயேசுவின் சீஷர்கள் துன்புறுத்தப்படுவதற்கு யார் மூலகாரணம் என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் தெள்ளத்தெளிவாக காண்பிக்கிறது. அது இவ்வாறு சொல்கிறது: ‘நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்.’ (வெளிப்படுத்துதல் 2:10) ஆம், கடவுளுடைய ஜனங்கள் அநியாயமாய் பகைக்கப்படுவதற்கு மூலகாரணமாக இருப்பது சாத்தானே.

5. மெய் வணக்கத்தாரை சாத்தான் ஏன் பகைக்கிறான்?

5 மெய் வணக்கத்தாரை சாத்தான் பகைப்பதற்கு காரணம் என்ன? ஒரு சதித்திட்டத்தின் மூலம், சாத்தான் ‘நித்தியத்தின் ராஜாவான’ யெகோவா தேவனுக்கு விரோதமாக சவால் விட்டிருக்கிறான்; அத்திட்டம் அவனுக்கு இருக்கும் பேரளவான இறுமாப்பை வெளிப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 1:17; 3:6) கடவுள் தம்முடைய படைப்புகள் மீது ஆட்சி செய்கையில் அவர்களை ஒரேயடியாக கட்டுப்படுத்துகிறார் என அவன் வாதிடுகிறான்; அதுமட்டுமல்ல, யாருமே யெகோவாவை தூய எண்ணத்தோடு சேவிப்பதில்லை என்றும் சுயநலத்திற்காகவே ஜனங்கள் அவரை சேவிக்கிறார்கள் என்றும் வாதிடுகிறான். மனிதர்களை சோதிக்கும்படி தான் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் எல்லாரையுமே கடவுளை சேவிப்பதிலிருந்து தன்னால் விலக்கிவிட முடியுமென்றும் உரிமைபாராட்டுகிறான். (ஆதியாகமம் 3:1-6; யோபு 1:6-12; 2:1-7) கொடுங்கோலர், பொய்யர், தோல்வியுற்றவர் என்றெல்லாம் யெகோவாவை நிந்தித்து, அவருக்கு நிகரான ஒரு சர்வலோக பேரரசர் என்ற ஸ்தானத்துக்கு தன்னை உயர்த்திக்கொள்ள சாத்தான் துடிக்கிறான். எனவே, வணக்கத்தை பெற வேண்டுமென்ற பேராசைதான் கடவுளுடைய ஊழியர்களுக்கு விரோதமாக அவனுடைய கடுங்கோபத்தை கிளறியிருக்கிறது.​—⁠மத்தேயு 4:8, 9.

6. (அ) யெகோவாவின் பேரரசுரிமை பற்றிய விவாதத்தில் நாம் எவ்வாறு தனிப்பட்ட விதத்தில் உட்பட்டுள்ளோம்? (ஆ) இந்த விவாதத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதல், நாம் தொடர்ந்து உத்தமத்தன்மையை காண்பிக்க எப்படி உதவுகிறது? (பக்கம் 16-லுள்ள பெட்டியை காண்க.)

6 இந்த விவாதம் உங்களுடைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறதென உங்களுக்கு புரிகிறதா? கடவுளுடைய சித்தத்தை செய்வதற்கு ஊக்கமாக முயற்சியெடுக்க வேண்டியிருந்தாலும், அப்படிச் செய்யும்போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது யெகோவாவுடைய ஊழியக்காரரில் ஒருவரான உங்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால், உங்கள் வாழ்க்கை சூழ்நிலை காரணமாக யெகோவாவுடைய சட்டதிட்டங்களுக்கும் நியமங்களுக்கும் இசைவாக நடப்பது உங்களுக்கு கடினமாகி விடுகிறதென்றால், ஒருவேளை அவ்வாறு நடப்பது வேதனை அளிப்பதாகவும் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? மேலும், யெகோவாவை சேவிப்பதில் எந்த நன்மையும் இருப்பதாக உங்களுக்கு தெரியவில்லையென்றால் என்ன செய்வீர்கள்? யெகோவாவை இப்படி சேவித்துக் கொண்டே இருப்பதில் இனி எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று முடிவுகட்டி விடுவீர்களா? அல்லது யெகோவாவின் மீதுள்ள அன்பின் காரணமாகவும் அவருடைய மகத்தான குணங்களின் மீதுள்ள ஆழ்ந்த போற்றுதலின் காரணமாகவும் அவருடைய அனைத்து வழிகளிலுமே தொடர்ந்து நடக்க தூண்டப்படுவீர்களா? (உபாகமம் 10:12, 13) நம்மீது ஓரளவு துன்பத்தை வருவிக்க சாத்தானை அனுமதிப்பதன் மூலம், அவனுடைய சவாலுக்கு நாம் ஒவ்வொருவருமே தனிப்பட்ட விதத்தில் பதிலளிப்பதற்கு ஒரு வாய்ப்பை யெகோவா நமக்கு கொடுத்திருக்கிறார்.​—⁠நீதிமொழிகள் 27:11.

மக்கள் ‘உங்களை நிந்திக்கும்போது’

7. யெகோவாவை விட்டு நம்மை விலக்குவதற்கு பிசாசு பயன்படுத்தும் ஓர் உத்தி என்ன?

7 தன்னுடைய விவாதத்தை நிரூபிக்க சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்றை, அதாவது பொய்ப் பழிகளை சுமத்தி நிந்திக்கும் ஓர் உத்தியைப் பற்றி இப்போது நாம் உன்னிப்பாக கவனிக்கலாம். சாத்தானை இயேசு “பொய்க்குப் பிதா” என்று அழைத்தார். (யோவான் 8:44) பிசாசு என்ற காரணப்பெயர் “பழிதூற்றுபவன்” என்ற அர்த்தத்தை கொடுக்கிறது; கடவுளையும், அவருடைய நல்வார்த்தையையும், அவருடைய பரிசுத்த பெயரையும் பழிதூற்றுபவர்களில் முதன்மையானவன் இவன் என்பதை இந்தப் பெயர் அடையாளம் காட்டுகிறது. யெகோவாவின் பேரரசுரிமைக்கு எதிராக பிசாசானவன் மறைமுகமாய் சாடுகிறான், பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறான், அப்பட்டமான பொய்களை பரப்புகிறான்; கடவுளுடைய உத்தம ஊழியர்களை நிந்திப்பதற்கும் அதே உத்திகளைப் பயன்படுத்துகிறான். இப்படி யெகோவாவின் சாட்சிகளான அந்த ஊழியர்கள் மீது நிந்தைகளை குவிப்பதன் மூலம், ஏற்கெனவே அவர்கள் எதிர்ப்பட்டு வரும் ஒரு பயங்கர சோதனையை தாங்கிக் கொள்வதை இன்னும் அவன் கடினமாக்கி விடலாம்.

8. யோபுவின் மீது சாத்தான் எப்படி நிந்தையை சுமத்தினான், இதனால் என்ன நேர்ந்தது?

8 யோபு என்ற பெயர் “பகைமைக்கு இலக்கானவன்” என அர்த்தப்படுத்துகிறது; அந்த யோபுவுக்கு என்ன நேர்ந்தது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். சாத்தான் யோபுவின் பிழைப்பையும், பிள்ளைகளையும், உடல் ஆரோக்கியத்தையும் இழக்கும்படி செய்ததோடு மட்டுமல்லாமல், அவர் கடவுளால் தண்டிக்கப்பட்ட ஒரு பாவி என்பது போல மற்றவர்களுடைய கண்ணில் தெரியும்படியும் செய்தான். மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த அவர், பிற்பாடு இழிவாக கருதப்பட்டார், சொந்தபந்தங்களாலும் உயிர் நண்பர்களாலும்கூட ஏளனமாக கருதப்பட்டார். (யோபு 19:13-19; 29:1, 2, 7-11) அதுமட்டுமல்ல, பொய்த் தேற்றரவாளர்கள் மூலம் யோபுவை ‘வார்த்தைகளால் நொறுக்கிப்போடவும்’ சாத்தான் முயன்றான்; முதலாவது, அவன் ஏதோவொரு வினைமையான பாவத்தை செய்திருக்க வேண்டுமென்று மறைமுகமாக குற்றம்சாட்டினான், பிறகு அவன் ஒரு குற்றவாளியாகத்தான் இருக்க வேண்டுமென நேரடியாகவே கண்டனம் செய்தான். (யோபு 4:6-9; 19:2; 22:5-10) யோபு எந்தளவுக்கு மனங்கசந்து போயிருப்பாரென சற்று யோசித்துப் பாருங்கள்.

9. இயேசு எப்படி ஒரு பாவியைப் போல தோன்றும்படி செய்யப்பட்டார்?

9 யெகோவாவுடைய பேரரசாட்சியின் தலையாய ஆதரவாளரும் கடவுளுடைய குமாரனுமான இயேசு, சாத்தானுடைய பகைமைக்கு முக்கிய குறியானார். அவர் பூமிக்கு வந்தபோது, சாத்தான் அவரை ஆவிக்குரிய விதத்தில் உருக்குலைந்தவராக தோன்றும்படி செய்ய வகை தேடினான்; முன்பு யோபுவுக்கு செய்தது போலவே இயேசுவை ஒரு பாவியைப் போல தோன்றும்படி செய்தான். (ஏசாயா 53:2-4; யோவான் 9:24) ஜனங்கள் அவரை குடிகாரன் என்றும், போஜனப்பிரியன் என்றும், “பிசாசு பிடித்தவன்” என்றும் அழைத்தார்கள். (மத்தேயு 11:18, 19; யோவான் 7:20; 8:48; 10:20) தேவதூஷணம் செய்ததாகவும் அவர் மேல் பொய்க் குற்றம் சுமத்தினார்கள். (மத்தேயு 9:2, 3; 26:63-66; யோவான் 10:33-36) இப்படி குற்றம் சாட்டப்பட்டது, தம் பிதாவின் மீது அநியாயமாக நிந்தையை ஏற்படுத்தியதை அறிந்து இயேசு மனவேதனை அடைந்தார். (லூக்கா 22:41-44) இறுதியில், சபிக்கப்பட்ட ஒரு பாவியாக கழுமரத்தில் அறையப்பட்டார். (மத்தேயு 27:38-44) இயேசு, ‘தமக்கு விரோதமாய்ப் பாவிகள் செய்த விபரீதங்களை,’ அதாவது பாவிகளுடைய விரோதமான பேச்சுகளை சகித்து தமது பரிபூரண உத்தமத்தை காத்துக்கொண்டார்.​—⁠எபிரெயர் 12:2, 3.

10. அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் நவீன காலங்களில் எப்படி சாத்தானின் பகைமைக்கு ஆளாகி இருக்கிறார்கள்?

10 அவரைப் போலவே, நவீன காலங்களில் கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் பிசாசின் பகைமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ‘இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக [கிறிஸ்துவின்] சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன்’ என்று சாத்தான் விவரிக்கப்படுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 10) அவன் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பூமியின் சுற்றுவட்டாரத்தில் தள்ளப்பட்டது முதற்கொண்டு, கிறிஸ்துவின் சகோதரர்களை படுமட்டமானவர்களாக தோன்றும்படி செய்வதற்கான தன்னுடைய முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறான். (1 கொரிந்தியர் 4:13) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே இவர்களும் ஆபத்தான மதப்பிரிவினர் என்று சில நாடுகளில் பழி தூற்றப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 24:5, 14; 28:22) ஆரம்பத்தில் குறிப்பிட்ட விதமாக, இவர்கள் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் இழிவாகப் பேசப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களாகிய இவர்கள் ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்த தங்கள் தோழர்களின் ஆதரவுடன் “கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்” ‘தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்வதற்கும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கொடுப்பதற்கும்’ மனத்தாழ்மையோடு பிரயாசப்பட்டு வந்திருக்கிறார்கள்.​—⁠2 கொரிந்தியர் 6:8; யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 12:17.

11, 12. (அ) கிறிஸ்தவர்கள் என்ன காரணத்திற்காகவும் சில நேரங்களில் நிந்திக்கப்படலாம்? (ஆ) ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய விசுவாசத்திற்காக எந்தெந்த விதங்களில் அநியாயமாய் துன்பப்படலாம்?

11 என்றாலும், கடவுளுக்கு ஊழியம் செய்துவரும் தனிநபர்கள் ‘நீதியினிமித்தமே’ எப்போதும் நிந்திக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. (மத்தேயு 5:10) சில பிரச்சினைகள் நம் சொந்த குறைபாடுகளின் காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். அப்படி நாம் “குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால்” அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. மாறாக, ஒரு கிறிஸ்தவன் “தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் . . . அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே [யெகோவாவின் பார்வையில்] பிரீதியாயிருக்கும்.” (1 பேதுரு 2:19, 20) எந்தெந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கிறிஸ்தவர்கள் இப்படி சகித்திருக்க வேண்டியிருக்கலாம்?

12 சில கிறிஸ்தவர்கள் வேதப்பூர்வமற்ற சவ அடக்க சடங்குகளில் கலந்துகொள்ள மறுத்ததால் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். (உபாகமம் 14:1) யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் இளைஞர்கள் யெகோவாவுடைய ஒழுக்க தராதரங்களை கடைப்பிடிப்பதன் நிமித்தம் தாறுமாறாக பேசப்பட்டிருக்கிறார்கள். (1 பேதுரு 4:4) சில கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரத்தமில்லா சிகிச்சையை அளிக்க முற்பட்டதால், தங்கள் பிள்ளைகளை “அசட்டை செய்கிறவர்கள்” அல்லது “மோசமாக நடத்துகிறவர்கள்” என்று தவறாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 15:28, 29) இன்னும் சில கிறிஸ்தவர்களோ யெகோவாவின் ஊழியர்களாக ஆன ஒரே காரணத்திற்காக தங்கள் உற்றார் உறவினர்களாலும் அக்கம்பக்கத்தாராலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். (மத்தேயு 10:34-37) அத்தகைய கிறிஸ்தவர்கள் எல்லாருமே தீர்க்கதரிசிகளைப் போலவும் இயேசுவைப் போலவும் அநியாயமாய் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.​—⁠மத்தேயு 5:11, 12; யாக்கோபு 5:10; 1 பேதுரு 2:21.

நிந்திக்கப்படும்போது சகித்திருத்தல்

13. கடுமையாக நிந்திக்கப்படும்போது தொடர்ந்து ஆவிக்குரிய சமநிலையோடிருக்க எது நமக்கு உதவும்?

13 விசுவாசத்தின் நிமித்தம் நாம் கடுமையாக நிந்திக்கப்பட்டால் தீர்க்கதரிசியான எரேமியாவைப் போல நாமும் மனச்சோர்வடைந்து விடக்கூடும்; இனியும் கடவுளை தொடர்ந்து சேவிக்க முடியாது என்பது போல உணரக்கூடும். (எரேமியா 20:7-9) அத்தகைய சூழலில் தொடர்ந்து ஆவிக்குரிய சமநிலையோடு இருப்பதற்கு எது நமக்கு உதவும்? அவ்விஷயத்தை யெகோவாவின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க முயலுங்கள். அவர் சோதனையின் மத்தியிலும் உத்தமமாய் இருப்பவர்களை பலியாட்களாக அல்ல, வெற்றி வீரர்களாகவே கருதுகிறார். (ரோமர் 8:37) சாத்தான் அவதூறுக்கு மேல் அவதூறு சுமத்திய போதிலும் யெகோவாவுடைய பேரரசாட்சியை ஆதரித்த ஆண்கள், பெண்களை​—⁠ஆபேல், யோபு, இயேசுவின் தாயான மரியாள் போன்ற ஏராளமான அக்காலத்து விசுவாசிகளையும், நவீன காலத்து சக ஊழியர்களையும்​—⁠உங்கள் மனத்திரைக்கு கொண்டு வர முயலுங்கள். (எபிரெயர் 11:35-37; 12:1) அவர்களுடைய உத்தம போக்கைப் பற்றி தியானியுங்கள். விசுவாசத்தினால் இந்த உலகை ஜெயித்த திரளான மேகக்கூட்டத்தைப் போன்ற அந்த உத்தமர்கள், தங்களோடு சேர்ந்து வெற்றி மேடையில் நிற்கும்படி நம்மையும் அழைக்கிறார்கள்.​—⁠1 யோவான் 5:4.

14. உருக்கமாக ஜெபிப்பது விசுவாசத்தில் நிலைத்திருக்க நம்மை எவ்வாறு பலப்படுத்தும்?

14 “உள்ளத்தில் விசாரங்கள் [அதாவது, கவலைகள்] பெருகுகையில்” நாம் யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்ய வேண்டும், அப்போது அவர் நமக்கு ஆறுதலையும் அளிப்பார், பலத்தையும் தருவார். (சங்கீதம் 50:15; 94:19) சோதனையை சமாளிக்க தேவையான ஞானத்தை நிச்சயம் அவர் நமக்கு அருளுவார், அதோடு, யெகோவாவுடைய பேரரசுரிமை பற்றிய மாபெரும் விவாதத்தை​—⁠தமது ஊழியக்காரர்கள் அநியாயமாய் பகைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கும் அந்த விவாதத்தை​—⁠நாம் மனதில் வைப்பதற்கும் அவர் உதவுவார். (யாக்கோபு 1:5) அதுமட்டுமல்ல, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதான”த்தையும் யெகோவா நமக்கு தந்தருளுவார். (பிலிப்பியர் 4:6, 7) கடுமையான அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும்போது இந்த தெய்வீக சமாதானம் நம்மை அமைதலாகவும் திடமாகவும் இருக்கும்படி செய்யும், சந்தேகத்திற்கோ பயத்திற்கோ அடிபணிய வைத்துவிடாது. யெகோவா நமக்கு எந்தச் சோதனையை அனுமதித்தாலும், தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் நம்மை காப்பார்.​—⁠1 கொரிந்தியர் 10:13.

15. துன்பத்தை அனுபவிக்கும்போது, நம் மனதில் வெறுப்பும் கசப்பும் ஏற்படாமலிருக்க எது உதவும்?

15 காரணமின்றி நம்மை பகைக்கிறவர்கள் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக்கொள்ளாமல் இருக்க எது நமக்கு உதவும்? நம்முடைய முக்கிய எதிரிகள் சாத்தானும் பிசாசுகளுமே என்பதை மனதில் வையுங்கள். (எபேசியர் 6:12) சில ஆட்கள் நன்கு தெரிந்தே, வேண்டுமென்றே நம்மை துன்புறுத்துகிற போதிலும், மற்ற அநேகர் அறியாமையாலேயே அல்லது பிறர் நயவஞ்சகத்தோடு தூண்டிவிட்டதாலேயே அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். (தானியேல் 6:4-16; 1 தீமோத்தேயு 1:12, 13) “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” ஒரு வாய்ப்பை பெற வேண்டுமென யெகோவா விரும்புகிறார். (1 தீமோத்தேயு 2:4) சொல்லப்போனால், அன்று நம்மை எதிர்த்தவர்களில் சிலர் நம்முடைய குற்றமற்ற நடத்தையை உற்று கவனித்ததால் இன்று நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களாக ஆகியிருக்கிறார்கள். (1 பேதுரு 2:12) அதுமட்டுமல்ல, யாக்கோபுவின் மகனான யோசேப்புடைய உதாரணத்திலிருந்தும் நாம் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். தன்னுடைய ஒன்றுவிட்ட உடன்பிறந்தோரால் தனக்கு அத்தனை கஷ்டங்கள் நேர்ந்தபோதிலும், அவர்கள் மீது அவர் வெறுப்பை வளர்த்துக் கொள்ளவில்லை. ஏன்? ஏனெனில், இந்தக் காரியத்திற்கு பின்னால் யெகோவாவின் கரம் இருந்ததை, அதாவது தம்முடைய நோக்கத்திற்கிசைய சம்பவங்கள் நடைபெறுமாறு யெகோவா பார்த்துக்கொண்டார் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். (ஆதியாகமம் 45:4-8) அதேவிதமாக, நாம் அநியாயமாய் அனுபவித்து வரும் ஏதோவொரு துன்பம் கடைசியில் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி யெகோவா செய்துவிடலாம்.​—⁠1 பேதுரு 4:16.

16, 17. பிரசங்க வேலையை தடுத்து நிறுத்துவதற்காக எதிரிகள் எடுக்கும் முயற்சியைக் கண்டு நாம் ஏன் அநாவசியமாய் கவலைப்படக் கூடாது?

16 நம்மை எதிர்ப்பவர்கள் நற்செய்தியை பரப்ப விடாமல் தடுப்பதில் வெற்றி பெறுவது போல் கொஞ்ச காலத்திற்கு தோன்றினால், அதைக் குறித்து நாம் அநாவசியமாய் கவலைப்பட வேண்டியதில்லை. உலகெங்கும் நடைபெற்று வருகிற சாட்சி கொடுக்கும் வேலையின் மூலம் யெகோவா இப்போது ஜாதிகளை அசையப் பண்ணுகிறார்; இதன் காரணமாக விரும்பத்தக்கவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். (ஆகாய் 2:7, NW) நல்ல மேய்ப்பரான கிறிஸ்து இயேசு இவ்வாறு சொன்னார்: ‘என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன் . . . ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.’ (யோவான் 10:27-29) பரிசுத்த தேவதூதர்கள்கூட இந்த மாபெரும் ஆவிக்குரிய அறுவடையில் ஈடுபட்டிருக்கிறார்கள். (மத்தேயு 13:39, 41; வெளிப்படுத்துதல் 14:6, 7) ஆகையால், எதிராளிகளுடைய எந்தவொரு சொல்லும் செயலும் கடவுளுடைய நோக்கத்தை குலைத்துப் போடவே முடியாது.​—⁠ஏசாயா 54:17; அப்போஸ்தலர் 5:38, 39.

17 எதிராளிகளுடைய அத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் அவர்கள் நினைத்ததற்கு மாறாகவே வேலை செய்கின்றன. ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு பிராந்தியத்தில், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அபாண்டமான பொய்கள் ஏராளமாக பரப்பப்பட்டிருந்தன, அவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்ற பொய்யும் பரப்பப்பட்டிருந்தது. இதன் காரணமாக, எப்போதெல்லாம் சாட்சிகள் தன்னை சந்திக்க வந்தார்களோ அப்போதெல்லாம் க்ரேஸ் என்பவள் தன் வீட்டு கொல்லைப்புறத்திற்கு ஓடி அவர்கள் போகும்வரை அங்கேயே ஒளிந்திருப்பாள். ஒருநாள் அவளுடைய சர்ச் பாஸ்டர் சாட்சிகளுடைய பிரசுரம் ஒன்றை அங்கு கூடிவந்திருந்தோருக்கு முன்பாக தூக்கிக் காண்பித்து, அவர்கள் யாருமே அதை வாசிக்கக் கூடாது என்று சொன்னார்; அதை வாசித்தால் அவர்கள் தங்களுடைய விசுவாசத்தை விட்டே வழுவிப்போக நேரிடும் என்ற காரணத்தையும் சொன்னார். அவர் இப்படி சொன்னது க்ரேஸின் ஆர்வத்தை தூண்டியது. அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் அவளை சந்திக்க வந்தபோது, ஓடி ஒளிவதற்கு பதிலாக அவர்களிடம் பேச்சுக்கொடுத்தாள்; பாஸ்டர் காண்பித்த அந்தப் பிரசுரத்தின் ஒரு பிரதியை தனக்கென்று பெற்றுக்கொண்டாள். அவளுடன் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, பிறகு 1996-⁠ல் அவள் முழுக்காட்டப்பட்டாள். தவறான தகவல்களினால் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தப்பபிப்பிராயத்தை வளர்த்திருக்கும் மற்றவர்களுக்கு உண்மையை புரிய வைக்க க்ரேஸ் இப்போது தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறாள்.

உங்கள் விசுவாசத்தை இப்போதே பலப்படுத்துங்கள்

18. கடுமையான சோதனைகள் வரும் முன்பே நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்வது ஏன் அவசியமாக இருக்கிறது, அதை நாம் எவ்வாறு செய்யலாம்?

18 எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாத்தான் அநியாயமான பகைமை உணர்ச்சியுடன் அதிரடி தாக்குதலை நடத்தலாம்; எனவே நம்முடைய விசுவாசத்தை இப்போதே பலப்படுத்துவது அதிமுக்கியமாகும். இதை நாம் எவ்வாறு செய்யலாம்? யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்ட ஒரு நாட்டிலிருந்து வந்த அறிக்கை இவ்வாறு சொன்னது: “ஒன்று மட்டும் தெளிவாக இருக்கிறது: நல்ல ஆவிக்குரிய பழக்கவழக்கங்களை உடையவர்களும் சத்தியத்திற்காக ஆழ்ந்த போற்றுதலை காண்பிக்கிறவர்களும் சோதனைகளின்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் உறுதியோடு இருக்கிறார்கள். ஆனால் ‘சாதகமான காலங்களில்’ கூட்டங்களை தவற விடுபவர்களும், வெளி ஊழியத்தில் ஒழுங்காக பங்கு பெறாதவர்களும், சிறிய விஷயங்களில்கூட இணங்கிப் போகிறவர்களுமே பெரும்பாலும் ஏதோவொரு ‘அக்கினி’ பரீட்சையின்போது வீழ்ந்து விடுகிறார்கள்.” (2 தீமோத்தேயு 4:2, NW) எந்த வழியிலாவது முன்னேற்றம் செய்வதன் அவசியத்தை நீங்கள் காண்கையில், தாமதிக்காமல் உடனே அதற்கான முயற்சியை எடுங்கள்.​—⁠சங்கீதம் 119:60.

19. அநியாயமாய் பகைக்கப்படுவதன் மத்தியிலும் கடவுளுடைய ஊழியர்கள் காட்டும் உத்தமத்தன்மை எதை சாதிக்கிறது?

19 மெய் வணக்கத்தார் சாத்தானின் பகைமையால் துன்பத்தை அனுபவித்து வருகிறபோதிலும், அவர்கள் காட்டிவரும் உத்தமத்தன்மை யெகோவாவுடைய பேரரசாட்சியின் உரிமைக்கும், தகுதிக்கும், நீதிக்கும் உயிருள்ள சான்றாக விளங்குகிறது. அவர்களுடைய உண்மைத்தன்மை கடவுளுடைய இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. அவர்கள் மீது மனிதர்கள் நிந்தனைகளைக் குவிக்கலாம்; ஆனால் பூமிக்கும் வானத்திற்கும் மேலான மகிமையை உடையவர் “அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை.” ஆம், அத்தகைய எல்லா உத்தமர்களையும் பற்றி இவ்வாறு சொல்வது மிக மிகப் பொருத்தமானது: “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.”​—⁠எபிரெயர் 11:16, 38.

[அடிக்குறிப்பு]

a வேத வசனங்களில், “பகை” என்று கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக்கு சற்று வித்தியாசமான அர்த்தங்கள் உள்ளன. சில சூழமைவுகளில், வெறுமனே குறைவாக நேசிப்பதை அது அர்த்தப்படுத்துகிறது; தமிழ் பைபிள் இதை வெறுப்பு என்பதாக கூறுகிறது. (உபாகமம் 21:15, 16) “பகை” என்ற வார்த்தை கடும் வெறுப்பையும் அர்த்தப்படுத்தலாம்; இவ்வித வெறுப்பு, தீங்கிழைக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்காவிட்டாலும், பகைக்கப்படும் பொருளை மிகவும் அருவருப்பதால் அதை தவிர்க்கும் எண்ணம் கொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. அதேசமயத்தில், “பகை” என்ற வார்த்தை பலத்த எதிர்ப்பை, பெரும்பாலும் வன்மத்தோடு கூடிய தீரா குரோதத்தைக்கூட அர்த்தப்படுத்தலாம். இந்த அர்த்தத்திலேயே பகையைப் பற்றி இக்கட்டுரை கலந்தாலோசிக்கிறது.

உங்களால் விளக்க முடியுமா?

• மெய் வணக்கத்தாருக்கு எதிராக காண்பிக்கப்படும் அநியாயமான பகைமைக்கு காரணம் என்ன?

• யோபு மற்றும் இயேசுவின் உத்தமத்தை முறித்துப்போட சாத்தான் நிந்தையை எப்படி பயன்படுத்தினான்?

• சாத்தானிய பகைமைக்கு மத்தியிலும் உறுதியோடிருக்க யெகோவா நம்மை எப்படி பலப்படுத்துகிறார்?

[பக்கம் 16-ன் பெட்டி/படம்]

உண்மையான விவாதத்தை புரிந்துகொண்டார்கள்

ராஜ்ய பிரசங்கிப்பு வேலை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தடை செய்யப்பட்டிருந்த உக்ரைன் நாட்டிலுள்ள ஒரு யெகோவாவின் சாட்சி இவ்வாறு குறிப்பிட்டார்: “மற்றவர்கள் யெகோவாவின் சாட்சிகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதை வைத்து அவர்களுடைய நிலைமையை எடை போட்டு விடக்கூடாது. . . . பெரும்பாலான அதிகாரிகள் வெறுமனே தங்களுடைய கடமையைத்தான் செய்து வந்தார்கள். அரசாங்கம் மாறினபோது, அந்த அதிகாரிகள் கட்சி மாறினார்கள், ஆனால் எங்களுடைய நிலையிலிருந்து நாங்கள் மாறவில்லை. எங்களுடைய தொந்தரவுகளுக்கெல்லாம் ஊற்றுமூலமாக இருப்பவனைப் பற்றி பைபிள் வெளிப்படுத்தியிருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

“கொடூரமான மனிதர்களின் கையில் சிக்கி பலியாகும் அப்பாவி மக்களாக மட்டுமே நாங்கள் எங்களை கருதவில்லை. ஏதேன் தோட்டத்தில் எழுப்பப்பட்ட விவாதத்தை​—⁠கடவுளுடைய ஆட்சியுரிமை பற்றிய விவாதத்தை​—⁠தெளிவாக புரிந்துகொண்டதுதான் சகித்திருக்க எங்களுக்கு உதவியது. . . . மனிதர்களுடைய சொந்த விருப்பங்களோடு மட்டுமல்ல, சர்வலோகப் பேரரசருடைய விருப்பங்களோடு சம்பந்தப்பட்டுள்ள ஒரு விவாதத்திற்காக நாங்கள் நிலைநிற்கை எடுத்தோம். ஆம், உண்மையான விவாதங்களை நாங்கள் மிக நன்றாக, ஆழமாக புரிந்திருந்தோம். இதன் காரணமாக படுபயங்கர சூழ்நிலைகளிலும் எங்களால் உறுதியோடு இருக்க முடிந்தது, அதுமட்டுமல்ல எங்களுடைய உத்தமத்தை காத்துக்கொள்ளவும் முடிந்தது.”

[படம்]

விக்டர் பாப்பாவிச், 1970-⁠ல் கைது செய்யப்பட்டார்

[பக்கம் 13-ன் படம்]

இயேசு நிந்திக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தது யார்?

[பக்கம் 15-ன் படங்கள்]

யோபு, மரியாள் போன்றவர்களும், ஸ்டான்லி ஜோன்ஸ் போன்ற நவீன நாளைய கடவுளுடைய ஊழியர்களும் யெகோவாவுடைய பேரரசாட்சியை ஆதரித்திருக்கிறார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்