ஒரு தலைவர் தன் எதிர்காலத்தை சிந்திக்கிறார்
மேற்கு ஆப்பிரிக்கத் தலைவர் ஒருவர் தன் சமூகத்தினரால் அதிகமாக நேசிக்கப்பட்ட, உயர்வாக மதிக்கப்பட்ட தலைவராக இருந்தார். அவருடைய 78-வது பிறந்த நாளின்போது அவரை வாழ்த்துவதற்காக அவருடைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர் நலனில் அக்கறையுடைய மற்றவர்கள் குழுமியிருந்தனர். ஒரு சொற்பொழிவில், அந்தச் சந்தர்ப்பத்திற்குப் பொருந்தாத தலைப்பு ஒன்றை அந்தத் தலைவர் தேர்ந்தெடுத்தார். மரணத்திற்குப்பின்னான வாழ்க்கையைப் பற்றிய தன்னுடைய கருத்துக்களைச் சொன்னார்.
இந்த உலகத்தைத் தாண்டி, “ஏமாற்றுதல், பொறாமை, பேராசை போன்றவையற்ற ஒரு புதிய உலகம் இருக்கிறது,” என்பதாகக் கூறினார். அதை “மர்மங்கள் மூடிய” ஒரு உலகமாகவும் நீதியுள்ளோர்களால் மட்டுமே குடியேற்றப்பட்டதாகவும் அவர்கள் கடவுளோடு செயல்படுவர் என்பதாகவும் விவரித்தார்.
ஆப்பிரிக்கா முழுவதிலும் மக்கள் மத்தியில் இத்தகைய நம்பிக்கைகள் சர்வசாதாரணம். ஆப்பிரிக்கப் பாரம்பரிய மதத்தின்படி, மரணமானது ஜீவனுக்கு ஓர் முடிவன்று, ஆவி உலக வாழ்க்கைக்குச் செல்வதற்கு வெறும் ஒரு மாற்றமே. மரணத்தின்போது ஒருவர், கண்ணுக்குப் புலப்படும் ஓர் உலகைக் கடந்து கண்ணுக்குப் புலப்படாத உலகிற்குச் செல்கிறார். இப்பொழுது அந்த நபர் ஒரு ஆவியாக அவனுடைய அல்லது அவளுடைய மூதாதையர்கள் குடிகொண்டுள்ள அவ்விடத்திற்கு நுழைகிறார்.
மூதாதையர்கள் அல்லது மூதாதைய ஆவிகள் பூமியிலுள்ள தங்களுடைய குடும்பங்களின் நலனைப் பாதுகாப்பதாக, மேற்கு ஆப்பிரிக்கர்களில் அநேகர் நம்புகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்கப் பாரம்பரிய மதம் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது: “இங்கு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தைச் சார்ந்த நபர்களுக்கும் மறுவுலகத்தில் உள்ளவர்களுக்கும் செல்வாக்கில் கண்டிப்பான வித்தியாசம் ஒன்றுமில்லை. இங்கு பூமியில் இருந்தபோது, [மூதாதையர்கள்] தங்கள் குடும்பங்களின் மூத்த நபர்களாய் இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தாலும்கூட ஆவி உலகில் இன்னமும் மூத்தவர்களாகவே இருக்கிறார்கள். தங்கள் குடும்பங்களின் பொது நலனில் அக்கறைகொள்வதை அவர்கள் நிறுத்திவிடுவதில்லை.”
இதன் காரணமாகவே, நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த வயதான தலைவரும், தன்னுடைய மூதாதையர்களுடன் ஆவி உலகில் சேர்ந்து கொள்வதையும் அவர்களுடன் வேலை செய்வதையும் எதிர்பார்த்தார். அவர் சொன்னார்: “மரணத்திற்குப்பின்னான வாழ்க்கையிலும் மரணத்திற்குப் பின்புங்கூட தொடர்ந்து சேவைசெய்வதற்கான வாய்ப்பிலும் உறுதியான நம்பிக்கையை வைத்துள்ளேன்.”
ஆயினும், தலைவர் அடுத்ததாகச் சொன்னதை வைத்து சன்டே டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிட்டது, அவர் மறுவுலக வாழ்க்கையைப்பற்றி “முற்றிலுமாக நம்பியதாகத் தோன்றவில்லை.” குழுமியிருந்த கூட்டத்தினரிடம் மரணத்திற்குப்பின் உள்ள வாழ்க்கையைப்பற்றி ஆய்வுரை செய்கின்ற புத்தகத்தைப்பற்றி தான் கேள்விப்பட்டதாக கூறினார். அந்தத் தலைவர் ஐந்தாண்டுகளாக அந்தப் புத்தகத்திற்காகத் தேடிக்கொண்டிருந்தார். அதைப் படிப்பதற்கு அவ்வளவு ஆர்வமுடையவராய் இருந்ததால், தனக்கு ஒரு பிரதியைக் கொண்டுவரும் எவருக்கும் $1,500 (ஐ.மா.)-க்கு சமமான தொகையைக்கூட கொடுக்கத் தயாராக இருந்தார்.
அந்தத் தலைவர் கிடைப்பதற்கு கடினமே இல்லாத ஒரு புத்தகத்தை எண்ணிப்பார்த்திருந்தால், தன்னை அதிக இடைஞ்சல்களிலிருந்து விடுவித்திருக்கலாம். மனிதனால் அல்ல ஆனால் எல்லா மனிதரையும் படைத்த கடவுளால் உருவாக்கப்பட்ட புத்தகம், எல்லா மனிதருக்கும் எளிதில் கிடைக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 2:13) அந்தப் புத்தகம் பைபிள். மரணத்திற்குப்பின்னான வாழ்க்கையைப் பற்றி அது என்ன சொல்கிறது?