மரித்தோர் நம்மைப் பார்க்க முடியுமா?
ஒரு பெண் தன் கணவனைக் கொலைசெய்துவிடுகிறாள். ஏழு வருடங்களுக்குப் பின்பு, தன்னுடைய கணவனின் கோபத்துக்கு அறிகுறியென அவள் நம்பும் ஒரு கனவினால் திகிலடைகிறாள். அவருடைய “ஆவியை” சாந்தப்படுத்துவதற்காக, அவருடைய கல்லறையின்மீது பான படையல்களை ஊற்றுவதற்கு தன்னுடைய மகளை அனுப்பிவைக்கிறாள்.
படையல் தன்னுடைய அப்பாவைக் கொன்ற அம்மாவிடமிருந்து வருவதால், மகளுக்கு தன்னுடைய அப்பாவின் ஆவியிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. மறைவிடத்திலிருந்து அவளுடைய தம்பி கவனித்துக்கொண்டிருக்கிறான். அவன் முன்னால் வருகிறான், அவனும் அவனுடைய அக்காவும் சேர்ந்து அவருடைய கொலைக்குப் பழிதீர்க்க தங்களுக்கு உதவும்படியாக தங்கள் அப்பாவிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
இது 2,400-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட படையல் கொண்டுசெல்வோர் (The Libation Bearers) என்ற கிரேக்க மொழி நாடகத்தில் வரும் காட்சியாகும். உலகின் சில பகுதிகளில், விசேஷமாக ஆப்பிரிக்காவில், இன்றும்கூட இப்படிப்பட்ட கல்லறைப்புற பலிகள் செலுத்தப்பட்டுவருகின்றன.
உதாரணமாக, நைஜீரியாவில் வாழும் எபியின் அனுபவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். தன்னுடைய மூன்று பிள்ளைகளை மரணத்தில் இழந்துவிட்ட அவர் பாரம்பரிய பில்லிசூனியக்காரரிடம் செல்கிறார். அவருடைய பிள்ளைகளின் மரணத்துக்கு காரணம் இருப்பதாக—எபியின் மறைந்துபோன அப்பா அவருடைய சவ அடக்கம் முறையாக செய்யப்படாத காரணத்தால் கோபமாக இருக்கிறார் என்பதாக—பில்லிசூனியக்காரர் எபியிடம் சொல்கிறார்.
ஊர்க்கார பில்லிசூனியக்காரரின் ஆலோசனைப்படி, எபி வெள்ளாடு ஒன்றை பலிசெலுத்தி தன்னுடைய அப்பாவின் கல்லறையின்மீது ஜின் மற்றும் திராட்ச மது படையலை ஊற்றுகிறார். அவர் தன்னுடைய அப்பாவின் ஆவியைக் கூப்பிட்டு, மன்னிப்புக்காக மன்றாடி, தன் அன்பை ஊர்ஜிதப்படுத்தி, ஆசீர்வதிக்கும்படியாக கேட்கிறார்.
எபிக்கு தன்னுடைய அப்பாவால் தன்னைப் பார்க்கவும் கேட்கவும் முடியும் என்பதைப் பற்றியதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தன்னுடைய அப்பா இறக்கவில்லை, ஆனால் மரணத்தின்போது காணக்கூடிய உலகிலிருந்து காணக்கூடாத உலகத்துக்கு “கடந்துசென்றுவிட்டார்” என்பதாக அவர் நம்புகிறார். தன்னுடைய அப்பா மாம்சமும் இரத்தமுமுள்ள உலகிலிருந்து ஆவிகளின் உலகத்துக்கு, மூதாதையரின் எல்லைக்குச் சென்றுவிட்டார் என்பதாக எபி நம்புகிறார்.
எபி பின்வருமாறு விவாதிக்கிறார்: ‘அப்பா இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும், அவர் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார், என்னுடைய நலனில் அக்கறையுள்ளவராகவும் இருக்கிறார். இப்பொழுது கூடுதலான அதிகாரங்களோடு ஆவியாக அவர் இருப்பதன் காரணமாக, பூமியில் மனிதனாக இருந்ததைக் காட்டிலும் எனக்கு உதவிசெய்ய மேலான ஒரு நிலையில் இருக்கிறார். மேலுமாக கடவுளும்கூட ஓர் ஆவியாக இருப்பதன் காரணமாக அவர் எனக்காக அவரிடம் நேரடியாகச் சென்று பேசமுடியும். இப்பொழுது ஒருவேளை அப்பா கோபமாக இருக்கலாம், ஆனால் அவருக்கு சரியான மரியாதையை நான் காண்பித்தால், அவர் என்னை மன்னித்து என்னை ஆசீர்வதிப்பார்.’
ஆப்பிரிக்காவில் பாரம்பரிய ஆப்பிரிக்க மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் மத்தியில், மரித்தோர் பூமியிலுள்ள மக்களைப் பார்க்கமுடியும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தமுடியும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மத்தியிலும் இது காணப்படுகிறது. உதாரணமாக, சர்ச்சில் திருமணம் முடித்த பெண், சம்பிரதாயப்படி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தன் பெற்றோரின் வீட்டுக்குச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அங்கே மூதாதையர் வழிபடப்பட்டு வரவழைக்கப்படுகிறார்கள், பான படையல் அவர்களுக்காக ஊற்றப்படுகிறது. இதைச் செய்ய தவறும்போது இது திருமணத்தின்மீது பேராபத்தைக் கொண்டுவருகிறது என்பதாக அநேக ஆட்கள் நம்புகிறார்கள்.
மூதாதையர் அல்லது மூதாதையரின் ஆவிகள் பூமியில் வாழும் தங்களுடைய குடும்பங்களின் பாதுகாப்பையும் செழுமையையும் நிச்சயப்படுத்திக்கொள்வதாக நம்பப்படுகிறது. இந்தக் கருத்தின்படி, மூதாதையரின் ஆவிகள் நல்ல அறுவடையைக் கொண்டுவந்து, க்ஷேமத்தை முன்னேற்றுவித்து மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய வல்லமையுள்ளவை. அவை மனிதர்களுக்காகப் பரிந்துபேசுகின்றன. என்றாலும் அலட்சியம் செய்யப்பட்டால் அல்லது புண்படுத்தப்பட்டால் அவை பேராபத்தை—வியாதி, வறுமை, மற்றும் மரணத்தைக்கூட—கொண்டுவருகின்றன. இதன் காரணமாக, பலிகள் மற்றும் சடங்குகள் மூலமாக மக்கள் மரித்தோரோடு நல்ல உறவுகளைக் காத்துக்கொள்ள பாடுபடுகிறார்கள்.
மரித்தோர் உயிருள்ளோரின் வாழ்க்கையில் சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருக்கிறார்கள் என்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? அன்பான ஒருவரின் கல்லறையின் அருகே நின்றுகொண்டு அவர் அல்லது அவள் கேட்கமுடியும் என்ற எண்ணத்தோடு நீங்கள்தாமே பேசிக்கொண்டிருப்பதை கண்டிருக்கிறீர்களா? சரி, மரித்தோர் நம்மைப் பார்க்கவும் கேட்கவும் முடியுமா முடியாதா என்பது மரணத்தின்போது என்ன நடக்கிறது என்பதைச் சார்ந்திருக்கிறது. இந்த முக்கியமான பொருளைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை நாம் ஆராய்வோமாக.