துக்கப்பட்டாலும், நாம் நம்பிக்கையற்றவர்களாக இல்லை
“நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.”—1 தெசலோனிக்கேயர் 4:13.
1. வழக்கமான அடிப்படையில் மனிதவர்க்கம் எதை அனுபவித்துக்கொண்டிருக்கிறது?
அ ன்பான ஒருவரை மரணத்தில் நீங்கள் இழந்துவிட்டிருக்கிறீர்களா? என்ன வயதினராய் இருந்தாலும், நம்மில் அநேகர் ஒரு உறவினர் அல்லது ஒரு நண்பரின் இழப்பைக் குறித்து வருந்துகிறோம். ஒருவேளை அது பாட்டி பாட்டனாக, ஒரு பெற்றோராக, விவாகத் துணைவராக அல்லது ஒரு பிள்ளையாக இருக்கலாம். முதிர் வயதும், நோயும், விபத்துக்களும் வழக்கமாக மரணத்தைக் கொண்டுவருகின்றன. குற்றச்செயல், வன்முறை, போர் ஆகியவை வேதனையையும் துக்கத்தையும் அதிகப்படுத்துகின்றன. ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதிலும், சராசரியாக ஐந்து கோடிக்கும் மேலான ஆட்கள் மரிக்கின்றனர். 1993-ல் தினசரி சராசரி 1,40,250-ஆக இருந்தது. உயிர்ச் சேதம் நண்பர்களையும் குடும்பத்தையும் பாதிக்கிறது, இழப்பினால் ஏற்படும் உணர்வு ஆழமாக உள்ளது.
2. பிள்ளைகள் மரிப்பது பற்றி எது இயல்புக்கு மாறானதாக இருக்கிறது போல் தோன்றுகிறது?
2 அ.ஐ.மா., கலிபோர்னியாவில் திடீரென்று ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் கருவுற்றிருந்த ஒரு மகளை இழந்த பெற்றோருக்காக நாம் அனுதாபப்பட மாட்டோமா? எதிர்பாராத ஒரு சம்பவத்தில், அவர்களுடைய ஒரே மகளையும் அவர்களுடைய முதல் பேரப்பிள்ளையாக இருந்திருக்கக்கூடிய குழந்தையையும் அவர்கள் இழந்தனர். பலியாளின் கணவர், மனைவியையும் அவருடைய முதல் மகன் அல்லது மகளையும் இழந்துவிட்டார். இன்னும் இளமையாக இருந்தாலும் சரி அல்லது வயதுவந்தவராக இருந்தாலும் சரி, ஒரு பிள்ளையின் மரணம் பெற்றோருக்கு ஏதோ ஒரு வகையில் இயல்புக்கு மாறானதாக இருக்கிறது. தங்கள் பெற்றோருக்கு முன்பாக பிள்ளைகள் மரித்துவிடுவது இயல்பான ஒன்றல்ல. நாம் அனைவருமே உயிரை நேசிக்கிறோம். ஆகவே, மரணம் உண்மையில் ஒரு சத்துருவாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 15:26.
மரணம் மனித குடும்பத்திற்குள் பிரவேசிக்கிறது
3. ஆபேலின் மரணம் ஆதாமையும் ஏவாளையும் எவ்வாறு பாதித்திருக்கக்கூடும்?
3 நம்முடைய முதல் மனித பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் கலகம் செய்தது முதற்கொண்டு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளாக பாவமும் மரணமும் அரசர்களாக ஆண்டுவந்திருக்கின்றன. (ரோமர் 5:14; 6:12, 23) தங்களுடைய மகன் ஆபேல் அவனுடைய சகோதரன் காயீனால் கொலைசெய்யப்பட்டபோது அவர்கள் எவ்விதமாக பிரதிபலித்தனர் என்பதை பைபிள் நமக்குச் சொல்வதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களுக்காக, அது அவர்களுக்கு பாழ்படுத்தும் ஒரு அனுபவமாக இருந்திருக்கவேண்டும். இங்கே, முதல் முறையாக, தங்களுடைய சொந்த மகனின் முகத்தில் மனித மரணத்தின் உடனடியான மெய்ம்மை பிரதிபலிக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். தங்களுடைய கலகத்தாலும், தெரிவுசெய்யும் அவர்களுடைய சுயாதீனத்தைத் தொடர்ந்து தவறாக பயன்படுத்தியதாலும் கிடைத்த கனிகளை அவர்கள் கண்டார்கள். கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், காயீன் தன் உடன்பிறந்தானை முதலாவது கொலை செய்வதைத் தெரிந்துகொண்டான். ஆபேலின் மரணத்தால் ஏவாள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை நாம் அறிவோம், ஏனென்றால் அவள் சேத்தைப் பெற்றபோது, அவள் சொன்னாள்: “காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார்.”—ஆதியாகமம் 4:3-8, 25.
4. ஆபேலின் மரணத்துக்குப் பின்பு சாவாமையுள்ள ஆத்துமாவைப் பற்றிய கட்டுக்கதை ஏன் எந்த ஆறுதலாகவும் இருந்திருக்காது?
4 நம்முடைய முதல் மனித பெற்றோர் தங்களுக்குக் கடவுள் அளித்திருந்த தீர்ப்பின் மெய்யான இயல்பையும்கூட பார்த்தனர்—அவர்கள் கலகம் செய்து கீழ்ப்படியாமற்போனால், அவர்கள் ‘சாகவே சாவார்கள்.’ சாத்தானின் பொய்யின் மத்தியிலும், சாவாமையுள்ள ஆத்துமாவைப் பற்றிய கட்டுக்கதை இன்னும் தோன்றாதிருந்த காரணத்தால், அதிலிருந்து எந்தப் பொய்யான ஆறுதலையும் பெற முடியாதவர்களாக அவர்கள் இருந்தனர். கடவுள் ஆதாமிடம் பின்வருமாறு சொல்லியிருந்தார்: ‘நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புவாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.’ சாவாமையுள்ள ஒரு ஆத்துமாவாக அவன் பரலோகத்தில், நரகத்தில், நரக சுற்றுப்புற பகுதியில், உத்தரிக்கிற ஸ்தலத்தில், அல்லது வேறு ஏதோ ஓரிடத்தில் எதிர்காலத்தில் வாழ்வதைப் பற்றி அவர் எந்தக் குறிப்பும் சொல்லவில்லை. (ஆதியாகமம் 2:17; 3:4, 5, 19) பாவம் செய்துவிட்ட உயிருள்ள ஆத்துமாக்களாக ஆதாமும் ஏவாளும் கடைசியில் மரித்துப்போய் இல்லாமல் போய்விடுவர். சாலொமோன் அரசன் இவ்வாறு எழுதும்படியாக ஏவப்பட்டார்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.”—பிரசங்கி 9:5, 6.
5. மரித்தோருக்கு உண்மையான நம்பிக்கை என்ன?
5 அந்த வார்த்தைகள் எத்தனை உண்மையாக உள்ளன! உண்மையில், இருநூறு அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த மூதாதையரை யார் நினைவில் வைத்திருக்கிறார்? அநேகமாக அவர்களுடைய கல்லறைகளும்கூட அறியப்படாதவையாக அல்லது நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டவையாக இருக்கின்றன. மரித்த நம்முடைய அன்பானவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை அது அர்த்தப்படுத்துமா? இல்லை, நிச்சயமாகவே இல்லை. மரித்துப்போன தன்னுடைய சகோதரன் லாசருவைப் பற்றி இயேசுவிடம் மார்த்தாள் இவ்விதமாகச் சொன்னாள்: “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்.” (யோவான் 11:24) கடவுள் மரித்தோரை ஒரு எதிர்காலத்தில் உயிர்த்தெழுப்புவார் என்று எபிரெய மக்கள் நம்பியிருந்தனர். என்றபோதிலும், அன்பான ஒருவரின் மரணத்தைக் குறித்து துக்கிப்பதிலிருந்து அது அவர்களைத் தடைசெய்யவில்லை.—யோபு 14:13.
துக்கப்பட்ட உண்மையுள்ளவர்கள்
6, 7. ஆபிரகாமும் யாக்கோபும் மரணத்துக்கு எவ்விதமாக பிரதிபலித்தனர்?
6 சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆபிரகாமின் மனைவி சாராள் மரித்தபோது, “ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.” கடவுளுடைய உண்மையுள்ள அந்த ஊழியர் தனக்கு மிகவும் பிரியமாயும் உண்மையாயும் இருந்த மனைவியின் இழப்பைக் குறித்து ஆழமான உணர்ச்சிகளைக் காண்பித்தார். அவர் தைரியமுள்ள ஒரு மனிதனாக இருந்தபோதிலும், தன்னுடைய துக்கத்தைக் கண்ணீரில் வெளிப்படுத்த அவர் வெட்கப்படவில்லை.—ஆதியாகமம் 14:11-16; 23:1, 2.
7 யாக்கோபின் விஷயமும் இவ்வாறாகவே இருந்தது. காட்டு மிருகம் ஒன்றினால் அவருடைய மகன் யோசேப்பு கொல்லப்பட்டதாக அவர் நம்பும்படி ஏமாற்றப்பட்டபோது, அவர் எவ்வாறு பிரதிபலித்தார்? ஆதியாகமம் 37:34, 35-ல் நாம் வாசிக்கிறோம்: “தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேக நாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.” ஆம், அன்பான ஒருவர் மரிக்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவது மனித சுபாவமாகவும் இயல்பானதாகவும் இருக்கிறது.
8. எபிரெயர்கள் அநேகமாக எவ்விதமாக தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்?
8 நவீன அல்லது உள்ளூர் பழக்கங்களின்படி, யாக்கோபின் பிரதிபலிப்பு மிகைப்படுத்தப்பட்டதாயும் ஆரவாரத்தோடு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாகவும் இருந்ததாக சிலர் யோசிக்கலாம். ஆனால் யாக்கோபு வித்தியாசமான காலப்பகுதியிலும் வித்தியாசமான கலாச்சாரத்திலும் வளர்ந்துவந்தார். அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு துக்கத்தை அவர் வெளிப்படுத்தியதானது, பைபிளில் இந்தப் பழக்கம் முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்றபோதிலும், எபிரெய வேதாகமத்தில் விளக்கப்பட்டிருப்பது போல, துக்கமானது சத்தமிட்டு புலம்புவது, மனங்கசந்து அழுவது மற்றும் சாம்பலில் உட்காருவது ஆகியவற்றின் மூலமாகவும்கூட வெளிப்படுத்தப்பட்டது. எபிரெயர் தங்களுடைய துக்கத்தை உண்மையாக வெளிப்படுத்துவதிலிருந்து தடைசெய்யப்படவில்லை என்பது தெளிவாக இருக்கிறது.a—எசேக்கியேல் 27:30-32; ஆமோஸ் 8:10.
இயேசுவின் காலத்தில் துக்கம்
9, 10. (அ) லாசருவின் மரணத்துக்கு இயேசு எவ்வாறு பிரதிபலித்தார்? (ஆ) இயேசுவின் பிரதிபலிப்பு அவரைப்பற்றி நமக்கு என்ன சொல்கிறது?
9 இயேசுவின் ஆரம்பகால சீஷர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? உதாரணமாக, லாசரு மரித்தபோது, அவனுடைய சகோதரிகள் மார்த்தாளும் மரியாளும் கண்ணீரோடும் புலம்பலோடும் அவனுடைய மரணத்தைக் குறித்து துக்கித்தார்கள். பரிபூரண மனிதனாகிய இயேசு காட்சியில் தோன்றினபோது எவ்வாறு பிரதிபலித்தார்? யோவானின் பதிவு சொல்கிறது: “இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். இயேசு கண்ணீர் விட்டார்.”—யோவான் 11:32-35.
10 “இயேசு கண்ணீர் விட்டார்.” அந்த சில வார்த்தைகள் இயேசுவின் மனித சுபாவத்தைப்பற்றி, அவருடைய இரக்கத்தைப் பற்றி, அவருடைய உணர்ச்சிகளைப்பற்றி அதிகம் பேசுகின்றன. உயிர்த்தெழுதல் நம்பிக்கையைக் குறித்து முழுமையாக அறிந்திருந்த போதிலும், “இயேசு அழுதார்.” (யோவான் 11:35, கிங் ஜேம்ஸ் வர்ஷன்) பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பின்வருமாறு சொன்னதாக பதிவு தொடர்ந்து சொல்கிறது: “இதோ, இவர் அவனை [லாசருவை] எவ்வளவாய்ச் சிநேகித்தார்.” ஒரு நண்பனை இழந்ததுகுறித்து பரிபூரண மனிதராகிய இயேசு அழுதாரென்றால், இன்று ஒரு மனிதனோ மனுஷியோ அழுவது வெட்கப்படுவதற்குரியதல்ல.—யோவான் 11:36.
மரித்தோருக்கு என்ன நம்பிக்கை?
11. (அ) துக்கிப்பதை உட்படுத்தும் பைபிள் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? (ஆ) நம்பிக்கை இல்லாதவர்களைப்போல நாம் ஏன் துக்கிப்பதில்லை?
11 இந்த பைபிள் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? துக்கிப்பது மனித சுபாவமாகவும் இயல்பாகவும் இருக்கிறது, நம்முடைய துக்கத்தை வெளிப்படுத்துவதைக் குறித்து நாம் வெட்கப்படவேண்டியதில்லை. உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் காரணமாக அது குறைவாக இருந்தாலும், அன்பான ஒருவரின் மரணம் இன்னும் ஆழமாக உணரப்படுகிற அதிர்ச்சியைத் தரும் ஒரு இழப்பாகும். வருடக்கணக்காக, ஒருவேளை பல பத்தாண்டுகளாக கொண்டிருந்த நெருக்கமான தோழமையும் பகிர்ந்துகொள்ளுதலும் திடீரென துயரமாக முடிவுக்கு வந்துவிடுகின்றன. நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது பொய்யான நம்பிக்கையுடையவர்களைப் போல நாம் துக்கிப்பதில்லை என்பது உண்மையே. (1 தெசலோனிக்கேயர் 4:13) மேலுமாக, மனிதன் சாவாமையுள்ள ஒரு ஆத்துமாவை உடையவனாயிருக்கிறான் அல்லது அவதாரத்தின் மூலமாக தொடர்ந்து வாழ்கிறான் என்ற எந்த ஒரு கட்டுக்கதையினாலும் நாம் தவறாக வழிநடத்தப்பட்டில்லை. “நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று” யெகோவா வாக்களித்திருப்பதை நாம் அறிவோம். (2 பேதுரு 3:13) “[நம்முடைய] கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
12. பவுல் எவ்விதமாக உயிர்த்தெழுதலில் தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தினார்?
12 மரித்துவிட்டவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?b கிறிஸ்தவ எழுத்தாளர் பவுல் பின்வருமாறு எழுதியபோது நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தரும்படியாக ஏவப்பட்டார்: “பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” (1 கொரிந்தியர் 15:26) தி நியூ இங்லிஷ் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீக்கப்படவிருக்கும் கடைசி சத்துரு மரணம்.” பவுல் எப்படி அவ்வளவு நிச்சயமாக இருக்கமுடியும்? மரித்தோரிலிருந்து எழுந்த இயேசு கிறிஸ்துவால் அவர் மதம் மாற்றப்பட்டு போதிக்கப்பட்டிருந்தார். (அப்போஸ்தலர் 9:3-19) அதன் காரணமாகவே பவுல் இவ்விதமாகவும்கூட எழுதினார்: “மனுஷனால் [ஆதாம்] மரணம் உண்டானபடியால், மனுஷனால் [இயேசு கிறிஸ்து] மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.”—1 கொரிந்தியர் 15:21, 22.
13. லாசருவின் உயிர்த்தெழுதலை நேரில் கண்ட சாட்சிகள் எவ்விதமாக பிரதிபலித்தனர்?
13 இயேசுவின் போதனை அதிகமான ஆறுதலையும் எதிர்காலத்துக்கு நம்பிக்கையையும் நமக்குக் கொடுக்கிறது. உதாரணமாக, லாசருவின் விஷயத்தில் அவர் என்ன செய்தார்? நான்கு நாட்களாக லாசருவின் உடல் வைக்கப்பட்டிருந்த அந்தக் கல்லறைக்கு அவர் சென்றார். அவர் ஒரு ஜெபம் செய்தார், “இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.” மார்த்தாள் மற்றும் மரியாளின் முகங்களில் தோன்றிய ஆச்சரியமும் சந்தோஷமுமான பார்வையை உங்களால் கற்பனைசெய்ய முடிகிறதா? இந்த அற்புதத்தைப் பார்த்தபோது, அயலகத்தார் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருக்கவேண்டும்! பார்த்துக்கொண்டிருந்த அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்ததைக் குறித்து சற்றேனும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்றபோதிலும் அவருடைய மத எதிரிகள் “அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.”—யோவான் 11:41-53.
14. லாசருவின் உயிர்த்தெழுதல் எதற்கு அடையாளமாக இருந்தது?
14 இயேசு, மறக்கமுடியாத அந்த உயிர்த்தெழுதலை நேரில் பார்த்த அநேக சாட்சிகளின் முன்னிலையில் செய்தார். இதற்கு முன்னால் ஒரு சமயம் அவர் முன்னுரைத்திருந்த எதிர்கால உயிர்த்தெழுதலுக்கு அது ஒரு அடையாளமாக இருந்தது. அவர் சொன்னார்: “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29.
15. இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பவுலுக்கும் அனனியாவுக்கும் என்ன அத்தாட்சி இருந்தது?
15 முன்னால் குறிப்பிடப்பட்டபடி, அப்போஸ்தலன் பவுல் உயிர்த்தெழுதலை விசுவாசித்தார். எதன் அடிப்படையில்? முந்தைய நாட்களில் அவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்கு பேர்போன சவுலாக இருந்தார். அவருடைய பெயரும் கீர்த்தியும் விசுவாசிகளின் மத்தியில் பயத்தைப் பரப்பியது. என்ன இருந்தாலும், அவர் கிறிஸ்தவ தியாகியான ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுவதை அங்கீகரித்தவரல்லவா? (அப்போஸ்தலர் 8:1; 9:1, 2, 26) என்றபோதிலும், தமஸ்குவுக்குப் போகிற வழியில், உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்து தற்காலிகமாக அவரை பார்வை இழக்கச் செய்வதன் மூலம் சவுலை அவருடைய உணர்வுகளுக்குக் கொண்டுவந்தார். சவுல், ஒரு குரல் தன்னிடம் பின்வருமாறு சொல்வதைக் கேட்டார்: “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்.” அதற்கு அவர், “ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்றார். உயிர்த்தெழுப்பப்பட்ட அதே கிறிஸ்து தமஸ்குவில் வாழ்ந்துவந்த அனனியாவிடம் சவுல் ஜெபம் செய்துகொண்டிருந்த வீட்டுக்குப் போய் அவரைப் பார்வையடையச் செய்யும்படியாக கட்டளையிட்டார். இவ்விதமாக, தனிப்பட்ட அனுபவத்திலிருந்து உயிர்த்தெழுதலை விசுவாசிப்பதற்கு சவுலுக்கும் அனனியாவுக்கும் போதுமான காரணமிருந்தது.—அப்போஸ்தலர் 9:4, 5, 10-12.
16, 17. (அ) இயற்கையாய் அமையப்பெற்ற சாவாமையுள்ள ஒரு மனித ஆத்துமா பற்றிய கிரேக்க கருத்தை பவுல் நம்பவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) பைபிள் என்ன உறுதியான நம்பிக்கையைத் தருகிறது? (எபிரெயர் 6:17-20)
16 சவுல், அப்போஸ்தலனாகிய பவுல், துன்புறுத்தப்பட்ட ஒரு கிறிஸ்தவராக தேசாதிபதியாகிய பேலிக்ஸுக்கு முன்னால் கொண்டுவரப்பட்டபோது எவ்வாறு பதிலளித்தார் என்பதைக் கவனியுங்கள். அப்போஸ்தலர் 24:15-ல் நாம் வாசிப்பதாவது: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.” இயற்கையாய் அமையப்பெற்ற சாவாமையுள்ள ஒரு மனித ஆத்துமா ஏதோ ஒரு கற்பனையான வரும்பிறப்புக்குள் அல்லது கீழுலகத்துக்குள் கடந்துபோகிறது போல் தோன்றுகிறது என்ற புறமத கிரேக்க கருத்தை பவுல் நம்பவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. அவர் உயிர்த்தெழுதலை நம்பினார், உயிர்த்தெழுதலில் விசுவாசம் வைக்கும்படி போதித்தார். அது சிலருக்கு பரலோகத்தில் கிறிஸ்துவோடுகூட ஆவி சிருஷ்டிகளாக சாவாமையுள்ள வாழ்க்கையின் பரிசையும் பெரும்பாலானவர்களுக்குப் பரிபூரணமான ஒரு பூமியில் உயிர்வாழ திரும்பிவருவதையும் அர்த்தப்படுத்தும்.—லூக்கா 23:43; 1 கொரிந்தியர் 15:20-22, 53, 54; வெளிப்படுத்துதல் 7:4, 9, 17; 14:1, 3.
17 இவ்விதமாக உயிர்த்தெழுதலின் மூலம், அநேகர் தங்களுடைய அன்பானவர்களை பூமியின்மீது மறுபடியுமாக காண்பர், ஆனால் மிகவும் வித்தியாசமான சூழ்நிலைமைகளில் என்பதாக பைபிள் நமக்கு ஒரு தெளிவான வாக்கையும் உறுதியான நம்பிக்கையையும் கொடுக்கிறது.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4.
துக்கப்படுபவர்களுக்கு நடைமுறையான உதவி
18. (அ) “தேவ பயம்” மாநாடுகளில் என்ன பயனுள்ள ஒரு கருவி வெளியிடப்பட்டது? (பெட்டியைப் பார்க்கவும்.) (ஆ) என்ன கேள்விகள் இப்போது பதிலளிக்கப்படுவது அவசியமாகும்?
18 இப்பொழுது நாம் நம்முடைய நினைவுகளையும் நம்முடைய துக்கத்தையும் கொண்டிருக்கிறோம். கஷ்டமான இந்தத் துக்க காலத்தைக் கடந்துவாழ நாம் என்ன செய்யலாம்? துக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய மற்றவர்கள் என்ன செய்யலாம்? மேலுமாக, எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாமல் அதே சமயத்தில் துக்கித்தும் கொண்டிருக்கும், வெளி ஊழியத்தில் நாம் சந்திக்கும் உண்மை மனதுள்ள நபர்களுக்கு உதவிசெய்ய நாம் என்ன செய்யலாம்? மரணத்தில் நித்திரையடைந்திருக்கும் நம்முடைய அன்பானவர்களின் சம்பந்தமாக பைபிளிலிருந்து வேறு என்ன கூடுதலான ஆறுதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும்? பின்வரும் கட்டுரை சில ஆலோசனைகளை அளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் காலங்களில் துக்கங்கொண்டாடுதல்களைப் பற்றிய அதிகமான தகவலுக்கு உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டுள்ள வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகத்தில் இரண்டாவது தொகுதியில் 446-7 பக்கங்களைக் காண்க.
b பைபிளில் காணப்படும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைக் குறித்து கூடுதலான தகவலுக்கு வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை, தொகுதி 2, பக்கங்கள் 783-93-ஐக் காண்க.
உங்களால் பதிலளிக்க முடியுமா?
◻ மரணம் ஒரு சத்துரு என்பதாக ஏன் சொல்லப்படலாம்?
◻ பைபிள் காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் எவ்விதமாக தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்?
◻ மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
◻ உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதற்கு பவுலுக்கு என்ன ஆதாரம் இருந்தது?
[பக்கம் 8, 9-ன் பெட்டி]
துக்கப்படுபவர்களுக்கு நடைமுறையான உதவி
1994-95 “தேவ பயம்” மாநாடுகளின்போது, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற தலைப்புடைய புதிய ஒரு சிற்றேட்டின் வெளியீட்டை உவாட்ச் டவர் சொஸைட்டி அறிவித்தது. உற்சாகத்தை அளிக்கும் இந்தப் பிரசுரம் எல்லா தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த ஆட்களுக்கு ஆறுதலைக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கக்கூடிய விதமாக, அது மரணத்தையும் மரித்தோரின் நிலைமையையும் பற்றிய பைபிளின் எளிய விளக்கத்தை அளிக்கிறது. இன்னும் அதிக முக்கியமாக, கிறிஸ்து இயேசுவின் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட, பரதீஸிய பூமியின்மீது உயிர்த்தெழுப்பப்படுவதைப் பற்றிய கடவுளுடைய வாக்கை உயர்த்திக் காண்பிக்கிறது. துக்கித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது உண்மையாகவே ஆறுதலைக் கொண்டுவருகிறது. ஆகவே, அது கிறிஸ்தவ ஊழியத்தில் பயனுள்ள ஒரு கருவியாக இருந்து, அக்கறையைத் தூண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு இன்னும் அநேக வீட்டு பைபிள் படிப்புகளில் விளைவடைய வேண்டும். துக்கித்துக்கொண்டிருக்கும், உண்மை மனதுடைய எவருடனும் கலந்தாலோசிக்கப்பட்ட குறிப்புகளை எளிதில் மறுபார்வை செய்வதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் முடிவில் பெட்டிகளில் படிப்புக்கான கேள்விகள் கவனமாக கொடுக்கப்பட்டுள்ளன.
[பக்கம் 8-ன் படம்]
லாசரு மரித்தபோது, இயேசு அழுதார்
[பக்கம் 9-ன் படம்]
இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பினார்
[பக்கம் 7-ன் படத்திற்கான நன்றி]
First Mourning, by W. Bouguereau, from original glass plate in Photo-Drama of Creation, 1914