காலங்கள் மாறியிருக்கின்றன
உண்மையுள்ள அரசனாகிய சாலொமோனின் மகிமையான ஆட்சியின்கீழ் பூர்வ இஸ்ரவேலில் வாழ்வது எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! சமாதானம், செழுமை, மற்றும் மகிழ்ச்சியின் ஒரு சகாப்தமாக அது இருந்தது. உண்மை வணக்கத்தை சாலொமோன் உறுதியாக ஆதரித்துவந்த காலத்தில், யெகோவா அந்தத் தேசத்தைப் பெருமளவில் ஆசீர்வதித்தார். அரசனாகிய சாலொமோனுக்கு, கடவுள் அதிக செல்வத்தை மட்டும் கொடுக்காமல், சாலொமோன் நீதியிலும் அன்பிலும் ஆட்சிசெய்யும்படியாக “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை”யும் கொடுத்தார். (1 இராஜாக்கள் 3:12) பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்குப் பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.”—2 நாளாகமம் 9:23.
மக்களுக்கு யெகோவா பாதுகாப்பையும் சமாதானத்தையும் ஏராளமான நல்ல காரியங்களையும் கொடுத்தார். கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.” சொல்லர்த்தமாகவும் அடையாள அர்த்தமாகவும், மக்கள், “சாலொமோனுடைய நாளெல்லாம் . . . அவரவர் தங்கள்தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள்தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.”—1 இராஜாக்கள் 4:20, 25.
காலங்கள் மாறியிருக்கின்றன. அப்பழங்காலத்தின் மகிழ்ச்சியுள்ள நாட்களிலிருந்து இன்று வாழ்க்கை மிகவும் வித்தியாசப்பட்டதாய் இருக்கிறது. சாலொமோனின் காலத்தில் இருந்ததைப் போலில்லாமல், இன்று வறுமை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. செல்வவளமுள்ள நாடுகளில்கூட வறுமை இருக்கிறது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களிலும் ஐரோப்பிய கூட்டமைப்பிலும், கிட்டத்தட்ட 15 சதவீத மக்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கிறார்கள் என்று ஐக்கிய நாட்டு வளர்ச்சித் திட்டம் குறிப்பிடுகிறது.
உலகளாவிய காட்சியைக் குறித்ததில், உலக மக்கள்தொகையில் ஐந்திலொரு பங்கானோர், முழுவதும் வறுமையால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும், மேலும் உலகிலுள்ள ஏழ்மையான பெரும்பாலோருக்கு வாழ்க்கை “அதிக கடினமானதாகவும் நம்பிக்கையற்றதாகவும் ஆகிவருகிறது” என்றும் உலக குழந்தைகளின் நிலை 1994 என்ற யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி) அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.
சில நாடுகளில், அதிகரிக்கும் பணவீக்கம் ஏழ்மையானோரின் கஷ்டங்களைக் கூட்டுகிறது. ஆப்பிரிக்க தேசம் ஒன்றைச் சேர்ந்த ஒரு பெண் சொன்னாள்: “மார்க்கெட்டில் நீங்கள் ஏதோவொன்றைப் பார்க்கிறீர்கள், ‘சரி, வீட்டுக்குப்போய் அதை வாங்குவதற்கான பணத்தை எடுத்துக்கொண்டு வரலாம்,’ என்கிறீர்கள். ஒரு மணிநேரம் கழித்து நீங்கள் அங்கு வரும்போது, சற்றுமுன்தான் அதன் விலை கூட்டப்பட்டிருப்பதன் காரணமாக உங்களால் வாங்க முடியாது என்று சொல்லப்படுகிறீர்கள். ஒருவர் என்னதான் செய்வார்? இது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.”
அங்கிருக்கும் மற்றொரு பெண் சொன்னாள்: ‘பிழைப்பதற்காக, நாங்கள் மற்ற தேவைகளை மறந்துவிடுகிறோம். உணவை எப்படிப் பெறுவது என்பதே இப்போது மனதில் மேலோங்கிய கவலையாக இருக்கிறது.’
ஐக்கிய நாடுகளின்படி, எதிர்காலம் மங்கிய தோற்றமளிக்கிறது. உதாரணமாக, மக்கள்தொகையில் தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், உலகெங்குமுள்ள ஏழை மக்களின் எண்ணிக்கை “ஒருவருடைய ஆயுள்காலத்திற்குள்” நான்கு மடங்காகிவிடும் என்று யுனிசெஃப் கணக்கிடுகிறது.
எனினும், மோசமாகிக்கொண்டிருக்கிற பொருளாதார மற்றும் சமுதாய நிலைமைகளின் மத்தியிலும், கடவுளுடைய ஊழியர்கள் நம்பிக்கையான மனநிலையுடன் இருக்க காரணத்தைக் கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தை அதிக நம்பிக்கையற்ற விதமாக நோக்குபவர்கள் மத்தியில் அவர்கள் வாழ்கிறபோதிலும், கடவுளுடைய ஊழியர்கள் எதிர்காலத்தை சந்தோஷத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்நோக்கி இருக்கிறார்கள். அதற்கான காரணங்களை அடுத்த கட்டுரை ஆராயும்.