அவர் உங்களுக்கு நல்ல உதாரணமா, கெட்ட உதாரணமா?
‘யாக்கோபின் தேவன் . . . தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்.’—ஏசா. 2:3.
1, 2. பைபிள் உதாரணங்களிலிருந்து நீங்கள் எவ்விதங்களில் பிரயோஜனம் அடையலாம்?
பைபிள் பதிவுகள் உங்களுக்குப் பிரயோஜனம் அளிக்குமென நம்புகிறீர்கள், அல்லவா? அவற்றில் விசுவாசமுள்ள ஆண்கள், பெண்களின் உதாரணங்களைப் பார்ப்பீர்கள்; அவர்களுடைய வாழ்க்கையையும் பண்புகளையும் பின்பற்ற விரும்புவீர்கள். (எபி. 11:32-34) அதேசமயத்தில், கெட்ட உதாரணங்களாக விளங்கிய ஆண்கள், பெண்களைப் பற்றியும் பைபிளில் நீங்கள் படித்திருக்கலாம்; அவர்களுடைய செயல்களையும் சிந்தையையும் நீங்கள் தவிர்ப்பது நல்லது.
2 பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சிலர், நாம் பின்பற்ற வேண்டிய நல்ல உதாரணமாகவும் இருக்கிறார்கள், பின்பற்றக் கூடாத கெட்ட உதாரணமாகவும் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, முதலில் ஒரு சாதாரண மேய்ப்பனாகவும், பிறகு அதிகாரம் படைத்த ராஜாவாகவும் இருந்த தாவீதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். சத்தியத்தை நேசிப்பதிலும் யெகோவாவின் மீது நம்பிக்கை வைப்பதிலும் அவர் சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். என்றாலும், அவர் பெரிய பாவங்களையும் செய்தார்; ஆம், பத்சேபாளுடன் தவறான உறவு வைத்துக்கொண்டார், உரியாவைக் கொன்றார், யெகோவாவின் கட்டளையை மீறி மக்கள்தொகையைக் கணக்கெடுத்தார். இப்போது, அவரது மகன் சாலொமோனைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்; அவர்கூட ஒரு ராஜாவாகவும் பைபிள் எழுத்தாளராகவும் இருந்தார். அவர் சிறந்து விளங்கிய இரண்டு அம்சங்களைப் பற்றி முதலில் கவனிக்கலாம்.
‘சாலொமோனின் ஞானம்’
3. சாலொமோன் நமக்கு நல்ல முன்மாதிரியாக விளங்கினார் என ஏன் சொல்லலாம்?
3 சாலொமோன் ராஜா நமக்கு நல்ல முன்மாதிரியாய் விளங்குவதாகப் பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். தம்மீது நம்பிக்கை வைக்காத சில யூதர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்: “நியாயத்தீர்ப்பின்போது தென்தேசத்து ராணி இந்தத் தலைமுறையினரோடு எழுந்து வந்து இவர்களைக் கண்டனம் செய்வாள்; ஏனென்றால், அவள் சாலொமோனின் ஞானத்தைக் கேட்க பூமியின் கடைக்கோடியிலிருந்து வந்தாள்; ஆனால், இதோ! சாலொமோனைவிடப் பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.” (மத். 12:42) ஆம், சாலொமோன் ஞானத்திற்குப் பெயர்போனவராக இருந்தார்; அதைப் பெறும்படி எல்லாரையும் ஊக்குவித்தார்.
4, 5. சாலொமோன் எவ்வாறு ஞானத்தைப் பெற்றார், ஆனால் நாம் எவ்வாறு அதைப் பெற முடியும்?
4 சாலொமோன் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது கடவுள் அவருடைய கனவில் தோன்றி என்ன வேண்டுமெனக் கேட்டார். தனக்கு அனுபவம் போதாது என்பதை உணர்ந்த சாலொமோன் ஞானத்தைத் தரும்படி கேட்டார். (1 இராஜாக்கள் 3:5-9-ஐ வாசியுங்கள்.) அவர் செல்வத்தையும் மகிமையையும் கேட்காமல் ஞானத்தைக் கேட்டதற்காகக் கடவுள் சந்தோஷப்பட்டு, “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை” மட்டுமல்லாமல் செல்வச்செழிப்பையும் தந்தார். (1 இரா. 3:10-14) இயேசு சொன்னபடி, சாலொமோன் ஞானத்தில் ஈடிணையற்று விளங்கியதால் சேபா நாட்டு ராணியே அதைப் பற்றிக் கேள்விப்பட்டு நேரில் பார்க்க வெகு தூரம் பயணப்பட்டு வந்தாள்.—1 இரா. 10:1, 4-9.
5 நமக்கும் கடவுள் அற்புதமாக ஞானம் தருவாரென நாம் எதிர்பார்ப்பதில்லை. “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்” என்று சாலொமோன் எழுதினார்; அதேசமயத்தில், அதைப் பெற நாமும் முயல வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டி, ‘நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணு’ என்றார். ஞானத்தை ‘வா என்று கூப்பிடு,’ ‘நாடு,’ ‘தேடு’ என்றெல்லாம் குறிப்பிட்டார். (நீதி. 2:1-6) ஆகவே, நாம் ஞானத்தைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
6. சாலொமோனின் நல்ல முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
6 ‘தெய்வீக ஞானத்தை உயர்வாய் மதிப்பதில் சாலொமோன் வைத்த முன்மாதிரியை நான் பின்பற்றுகிறேனா?’ என நம்மையே கேட்டுக்கொள்வது நல்லது. பொருளாதார நெருக்கடிகளை மனதில் வைத்து அநேகர் வேலை செய்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; அல்லது, என்ன வகையான படிப்பைப் படிக்க வேண்டும்... எத்தனை காலம் படிக்க வேண்டும்... போன்ற தீர்மானங்கள் எடுக்கிறார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எப்படி? நீங்கள் தெய்வீக ஞானத்தை உயர்வாய் மதித்து அதை நாடுகிறீர்கள் என்பதை உங்கள் தீர்மானங்கள் காட்டுகின்றனவா? இன்னுமதிக ஞானத்தைப் பெற, பணத்தையும் படிப்பையும் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தைச் சற்று மாற்ற வேண்டியிருக்குமா? ஞானத்தைப் பெறுவதும் அதற்கேற்ப நடப்பதும் உங்களுக்கு நீடித்த நன்மை தரும் என்பதில் சந்தேகமே இல்லை. “அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்” என்று சாலொமோன் எழுதினார்.—நீதி. 2:9.
உண்மை வணக்கத்தை உயர்த்தியதால் சமாதானம் பொழிந்தது
7. கடவுளுக்கு எவ்வாறு ஒரு பிரம்மாண்டமான ஆலயம் கட்டப்பட்டது?
7 மோசேயின் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்த ஆசரிப்புக் கூடாரத்திற்குப் பதிலாக ஒரு பிரம்மாண்டமான ஆலயத்தைக் கட்ட சாலொமோன் தன் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் நடவடிக்கைகள் எடுத்தார். (1 இரா. 6:1) அதை நாம் சாலொமோனின் ஆலயம் என்று அழைத்தாலும், தனது சொந்த திட்டத்தின்படி அதை அவர் கட்டவில்லை; தலைசிறந்த கட்டிடக் கலைஞர் என்றோ கொடை வள்ளல் என்றோ பெயரெடுக்கவும் அதை அவர் கட்டவில்லை. சொல்லப்போனால், ஆலயத்தைக் கட்ட விரும்புவதாகத் தாவீதுதான் முதலில் குறிப்பிட்டார்; ஆகவே, ஆலயத்திற்கும் அதன் சாமான்களுக்கும் தேவையான எல்லாத் திட்டங்களையும் தாவீதுக்குக் கடவுள் விலாவாரியாகத் தந்தார். தாவீது கட்டுமானப் பணிக்காக ஏராளமான பணத்தையும் பொருளையும் அள்ளி வழங்கினார். (2 சா. 7:2, 12, 13; 1 நா. 22:14-16) என்றாலும், சாலொமோனே அந்த ஆலயத்தைக் கட்ட வேண்டியதாயிற்று; அதன் கட்டுமானப் பணி ஏழரை ஆண்டுகளுக்கு நீடித்தது.—1 இரா. 6:37, 38; 7:51.
8, 9. (அ) நற்பணியில் ஊக்கந்தளராமல் ஈடுபடுவதில் சாலொமோன் எவ்வாறு சிறந்த முன்மாதிரி வைத்தார்? (ஆ) சாலொமோன் உண்மை வணக்கத்தை உயர்த்தியதால் என்ன விளைந்தது?
8 ஆகவே, ஆலயத்தைக் கட்டும் நற்பணியில் ஊக்கந்தளராமல் ஈடுபடுவதிலும் யெகோவாவின் வழிபாட்டிற்கு முதலிடம் கொடுப்பதிலும் சாலொமோன் சிறந்த முன்மாதிரி வைத்தார். ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு ஒப்பந்தப் பெட்டி அதில் வைக்கப்பட்டபோது, சாலொமோன் மக்களுக்குமுன் ஜெபம் செய்தார். அந்த ஆலயத்தை நோக்கி ஏறெடுக்கப்படும் ஜெபங்களைக் கேட்கும்படி அவர் யெகோவாவிடம் விண்ணப்பம் செய்தார். (1 இரா. 8:6, 29) கடவுளுடைய பெயரின் மகிமைக்காகக் கட்டப்பட்ட அந்த ஆலயத்தை நோக்கி இஸ்ரவேலரும் மற்ற தேசத்தாரும் ஜெபம் செய்ய முடிந்தது.—1 இரா. 8:30, 41-43, 59.
9 சாலொமோன் உண்மை வணக்கத்தை உயர்த்தியதால் என்ன விளைந்தது? மக்கள் ஆலயத்தின் அர்ப்பண விழாவைக் கொண்டாடிய பிறகு, “கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே” சென்றார்கள். (1 இரா. 8:65, 66) சொல்லப்போனால், சாலொமோனின் 40 வருட ஆட்சியில் சமாதானமும் செழிப்பும் கரைபுரண்டு ஓடின. (1 இராஜாக்கள் 4:20, 21, 25-ஐ வாசியுங்கள்.) அதை சங்கீதம் 72 சுட்டிக்காட்டுகிறது; அதோடு, பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆட்சியில் நாம் அனுபவிக்கப் போகும் ஆசீர்வாதங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது.—சங். 72, 6-8, 16.
சாலொமோனின் கெட்ட உதாரணம்
10. சாலொமோன் செய்த என்ன கெட்ட காரியம் உடனடியாக நம் மனதிற்கு வரலாம்?
10 என்றாலும், சாலொமோன் ஒரு கெட்ட உதாரணமாகக்கூட இருந்தார் என ஏன் சொல்லலாம்? அவருக்குப் புறதேசத்தைச் சேர்ந்த மனைவிகளும் வைப்பாட்டிகளும் இருந்ததால்தான் என்று நீங்கள் உடனடியாகச் சொல்லலாம். “சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் . . . தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை” என்று நாம் வாசிக்கிறோம். (1 இரா. 11:1-6) அவரைப் போல் முட்டாள்தனமாக நடந்துகொள்ளாதிருக்க நீங்கள் தீர்மானமாய் இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சாலொமோனின் வாழ்க்கையில் நடந்த வேறு சில காரியங்களை நாம் எளிதில் மறந்துவிடலாம்; என்றாலும், அவையும் நமக்கு எச்சரிக்கையூட்டலாம். ஆகவே, அவை என்னவென்று இப்போது சிந்தித்துப் பார்க்கலாம்.
11. சாலொமோனின் முதல் திருமணத்தைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
11 சாலொமோன் 40 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தார். (2 நா. 9:30) அப்படியென்றால், 1 இராஜாக்கள் 14:21-லிருந்து நீங்கள் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்? (வாசியுங்கள்.) அந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி, சாலொமோன் இறந்தபோது அவரது மகன் ரெகொபெயாம் ஆட்சிக்கு வந்தார்; அப்போது அவருக்கு 41 வயது; அவரது அம்மா ‘அம்மோன் ஜாதியான நாமாள்.’ அப்படியென்றால், ராஜாவாக ஆவதற்கு முன்பே, உருவச் சிலைகளை வணங்கிவந்த எதிரி தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சாலொமோன் கல்யாணம் செய்திருந்தார். (நியா. 10:6; 2 சா. 10:6) அவளும் அவற்றை வணங்கினாளா? ஒரு காலத்தில் அவற்றை வணங்கியிருந்தாலும், கல்யாணத்திற்குப் பிறகு அவற்றை விட்டுவிட்டு, ராகாபையும் ரூத்தையும் போல உண்மை வணக்கத்தாளாக ஆகியிருக்கலாம். (ரூத் 1:16; 4:13-17; மத். 1:5, 6) என்றாலும், யெகோவாவை வணங்காத அம்மோனியர்கள் மனைவி வழி சொந்தக்காரர்களாக சாலொமோனுக்கு ஆகியிருக்கலாம்.
12, 13. சாலொமோன் தன் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் என்ன தவறான தீர்மானத்தை எடுத்தார், அவர் தன் மனதில் என்ன கணக்குப் போட்டிருக்கலாம்?
12 சாலொமோன் ராஜாவாக ஆன பிறகு நிலைமை இன்னும் மோசமானது. அவர் ‘எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, . . . அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தார்.’ (1 இரா. 3:1) அந்த எகிப்தியப் பெண், ரூத்தைப் போல் உண்மை வணக்கத்தை ஏற்றுக்கொண்டாளா? அவள் அப்படி ஏற்றுக்கொண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, அவளுக்காக (ஒருவேளை அவளுடைய எகிப்திய பணிப்பெண்களுக்காகவும்) தாவீதின் நகரத்திற்கு வெளியே ஓர் அரண்மனையைச் சாலொமோன் பின்னர் கட்டினார். ஏன்? பொய் வணக்கத்தாளான அவள் ஒப்பந்தப் பெட்டிக்கு அருகே வசிப்பது பொருத்தமாக இருக்காது என்பதால் அவர் அப்படிச் செய்ததாக வேதவசனம் சொல்கிறது.—2 நா. 8:11.
13 எகிப்து நாட்டு இளவரசியைத் திருமணம் செய்தால் அரசியல் ஆதாயம் கிடைக்குமெனச் சாலொமோன் நினைத்திருக்கலாம், ஆனால் அதை ஒரு சாக்காகச் சொல்ல முடிந்ததா? வெகு காலத்திற்கு முன்பே, புறதேசக் கானானியப் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாதெனக் கடவுள் குறிப்பிட்டிருந்தார்; சில தேசத்தாரின் பெயர்களைக்கூட பட்டியலிட்டிருந்தார். (யாத். 34:11-16) அந்தப் பட்டியலில் எகிப்து குறிப்பிடப்படவில்லையெனச் சாலொமோன் தன் மனதில் கணக்குப் போட்டிருப்பாரா? அப்படிச் செய்திருந்தாலும், அதில் நியாயம் இருந்திருக்குமா? உண்மையில், யெகோவா கொடுத்த தெளிவான எச்சரிக்கையை அவர் அசட்டை செய்தார்; இஸ்ரவேலர் புறதேசத்துப் பெண்களைத் திருமணம் செய்தால் உண்மை வணக்கத்தை விட்டுப் பொய் வணக்கத்தில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார்கள் என யெகோவா எச்சரித்திருந்தார்.—உபாகமம் 7:1-4-ஐ வாசியுங்கள்.
14. சாலொமோனின் கெட்ட உதாரணத்திலிருந்து நாம் எப்படிப் பாடம் கற்றுக்கொள்ளலாம்?
14 சாலொமோனின் கெட்ட உதாரணத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோமா? “நம் எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்ய வேண்டுமென்ற கடவுளுடைய கட்டளைக்கு முரணாக வெளியாள் ஒருவரைக் காதலிப்பதில் எந்தத் தவறும் இல்லையென ஒரு சகோதரி நினைக்கலாம். (1 கொ. 7:39) அதேபோல் சிலர் பள்ளி நேரத்திற்குப் பிறகு நடக்கும் விளையாட்டுகளில் அல்லது ‘கிளப்புகளில்’ பங்குகொள்ளலாம், வருமான வரிக் கணக்கில் தில்லுமுல்லு செய்யலாம், தர்மசங்கடமான விஷயங்களைப் பற்றிக் கேட்கப்படும்போது பொய் சொல்லலாம். சாலொமோன் தன் மனதில் தப்புக்கணக்குப் போட்டுக் கடவுளுடைய கட்டளையை மீறினார், அந்த ஆபத்தில் நாமும் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
15. சாலொமோனின் விஷயத்தில் யெகோவா எப்படி இரக்கம் காட்டினார், ஆனால் நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்?
15 சுவாரஸ்யமான ஒரு விவரம்: சாலொமோன் அந்த எகிப்திய இளவரசியைத் திருமணம் செய்துகொண்ட பிறகுதான் அவரது வேண்டுகோளின்படி கடவுள் ஞானத்தையும் அதோடுகூட செல்வத்தையும் தந்தார் என பைபிள் சொல்கிறது. (1 இரா. 3:10-13) சாலொமோன் யெகோவாவின் கட்டளைகளை மீறியிருந்தார், என்றாலும் யெகோவா உடனடியாக அவரைப் பதவியிலிருந்து நீக்கியதாகவோ கடுமையாகத் தண்டித்ததாகவோ எங்கும் சொல்லப்படவில்லை. நாம் மண்ணினாலான அபூரண மனிதர்கள் என்பதை யெகோவா புரிந்துகொள்கிறார் என்ற உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. (சங். 103:10, 13, 14) என்றாலும், இதை நினைவில் வையுங்கள்: நாம் என்ன செய்தாலும் அதற்குரிய விளைவுகளை இன்றோ நாளையோ சந்திப்போம்.
ஏராளமான மனைவிகள்!
16. ஏராளமான மனைவிகளை வைத்துக்கொண்ட விஷயத்தில் சாலொமோன் எந்தக் கட்டளையை அசட்டை செய்தார்?
16 ஒரு கன்னிப் பெண்ணைப் பார்த்து மயங்கிய ராஜா, தன் 60 மகாராணிகளையும் 80 மறுமனையாட்டிகளையும்விட அவள் அழகானவள் எனப் புகழ்ந்து பாடியதாக உன்னதப் பாட்டு சொல்கிறது. (உன். 6:1, 8-10) அது சாலொமோனைக் குறிப்பிடுகிறது என்றால், அந்தச் சமயத்தில் அவர் அத்தனை பெண்களோடு வாழ்ந்தார். அவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லது அனைவருமே உண்மை வணக்கத்தாராக இருந்திருந்தாலும், மோசேயின் மூலம் கடவுள் கொடுத்த கட்டளைக்கு அது முரணாக இருந்தது; இஸ்ரவேல் ராஜாவின் “இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது” என்ற கட்டளையைக் கடவுள் கொடுத்திருந்தார். (உபா. 17:17, பொது மொழிபெயர்ப்பு) இச்சமயத்திலும் யெகோவா சாலொமோனைவிட்டு விலகவில்லை. சொல்லப்போனால், அவரைத் தொடர்ந்து ஆசீர்வதித்து, பைபிள் புத்தகமாகிய உன்னதப் பாட்டை எழுதும்படி தூண்டினார்.
17. நாம் எந்த உண்மையை மனதில் வைக்க வேண்டும்?
17 சாலொமோன் கடவுளுடைய கட்டளையை மீறியும் உடனடியாகத் தண்டனை பெறாததால் நாமும் அவரைப் போலவே நடந்துகொள்ளலாம் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. மாறாக, கடவுள் மிகவும் பொறுமையானவர் என்பதைத்தான் அர்த்தப்படுத்துகிறது. என்றாலும், கடவுளுடைய மக்களில் ஒருவர் அவரது கட்டளையை மீறுகையில் உடனடியாக விளைவைச் சந்திக்க மாட்டார் என்பதற்காக எப்போதுமே விளைவைச் சந்திக்க மாட்டார் என்று சொல்ல முடியாது. சாலொமோன் எழுதியதைக் கவனியுங்கள்: “துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.” அவர் இவ்வாறும் எழுதினார்: “தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.”—பிர. 8:11, 12.
18. கலாத்தியர் 6:7-ல் உள்ள உண்மையை சாலொமோனின் உதாரணம் எப்படி வலியுறுத்திக் காட்டுகிறது?
18 சாலொமோன் மட்டும் அந்த உண்மையை எப்போதும் மனதில் வைத்து நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! ஆம், அவர் பல நல்ல காரியங்களைச் செய்திருந்தார், பல வருடங்களாகக் கடவுளுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்திருந்தார். ஆனால் காலப்போக்கில், தவறுக்கு மேல் தவறு செய்தார். யெகோவாவின் கட்டளைகளை மீறுவதைப் பழக்கமாக்கிக் கொண்டார். “ஏமாந்துவிடாதீர்கள்; யாராலும் கடவுளை முட்டாளாக்க முடியாது; ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்” என்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு எழுதியது எவ்வளவு உண்மை! (கலா. 6:7) சாலொமோன் கடவுளுடைய கட்டளையை மீறியதால் காலப்போக்கில் மோசமான விளைவுகளைச் சந்தித்தார். “ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்” என்று நாம் வாசிக்கிறோம். (1 இரா. 11:1) ஒருவேளை அந்தப் பெண்களில் அநேகர் பொய்க் கடவுட்களைத் தொடர்ந்து வணங்கியிருப்பார்கள், சாலொமோனையும் அவ்வாறு செய்யத் தூண்டியிருப்பார்கள். அவர் தவறான வழியில் சென்று, பொறுமையின் சிகரமான யெகோவாவின் தயவை இழந்தார்.—1 இராஜாக்கள் 11:4-8-ஐ வாசியுங்கள்.
அவரது நல்ல/கெட்ட உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
19. பைபிளில் அநேக நல்ல உதாரணங்கள் இருக்கின்றன என்று ஏன் நீங்கள் சொல்வீர்கள்?
19 இவ்வாறு எழுதும்படி யெகோவா பவுலைத் தூண்டினார்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோ. 15:4) தலைசிறந்த விசுவாசத்தைக் காட்டிய ஆண்கள் மற்றும் பெண்கள் பலருடைய நல்ல உதாரணங்கள் அதில் அடங்கும். அதனால்தான் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “இன்னும் யாரைப் பற்றிச் சொல்வேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், மற்ற தீர்க்கதரிசிகளையும் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் எனக்கு நேரம் போதாது. விசுவாசத்தினால்தான் இவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நிலைநாட்டினார்கள், வாக்குறுதிகளுக்கு வாரிசானார்கள், . . . பலவீனமான நிலையில் பலம் பெற்றார்கள்.” (எபி. 11:32-34) பைபிளில் உள்ள நல்ல உதாரணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம், கற்றுக்கொள்ளவும் வேண்டும்; அதன்பின் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
20, 21. பைபிளில் உள்ள கெட்ட உதாரணங்களிலிருந்து நீங்கள் ஏன் தொடர்ந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?
20 என்றாலும், பைபிள் சிலருடைய கெட்ட உதாரணங்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அவர்கள் ஒருசமயம் யெகோவாவைச் சேவித்தவர்கள், அவரது அங்கீகாரத்தைப் பெற்றவர்கள். பைபிளை வாசிக்கையில், அவர்கள் எந்த அம்சத்தில்... எப்படி... வழிவிலகிப் போய் கெட்ட உதாரணங்களாக மாறினார்கள் என்பதை நாம் கவனிக்கலாம். சிலர் கெட்ட குணங்களை அல்லது மனப்பான்மைகளைப் படிப்படியாக வளர்த்துக்கொண்டு கடைசியில் சோகமான விளைவுகளைச் சந்தித்ததைப் பற்றி நாம் வாசிக்கலாம். அப்படிப்பட்ட பதிவுகளிலிருந்து நாம் எப்படிப் பாடங்கள் கற்றுக்கொள்ளலாம்? இதுபோன்ற கேள்விகளை நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘அது எப்படி நடந்தது? நானும் அதுபோல் நடக்க வாய்ப்பிருக்கிறதா? அதே தவறை நானும் செய்யாதிருக்க இந்த உதாரணம் எப்படி உதவும்?’
21 இந்த உதாரணங்களுக்கு நாம் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்; ஏன்? பவுல் இவ்வாறு எழுதும்படி கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டார்: “அவர்களுக்கு நிகழ்ந்தவையெல்லாம் மற்றவர்களுக்கு உதாரணங்களாக இருந்தன; இந்த உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்கிற நமக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி எழுதப்பட்டிருக்கின்றன.”—1 கொ. 10:11.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• நல்ல உதாரணங்கள், கெட்ட உதாரணங்கள் என இரண்டுமே ஏன் பைபிளில் இருக்கின்றன?
• சாலொமோன் எவ்வாறு யெகோவாவின் கட்டளைகளை மீறுவதைப் பழக்கமாக்கிக் கொண்டார்?
• சாலொமோனின் கெட்ட உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 9-ன் படம்]
கடவுள் தந்த ஞானத்தை சாலொமோன் பயன்படுத்தினார்
[பக்கம் 12-ன் படம்]
சாலொமோனின் கெட்ட உதாரணத்திலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்கிறீர்களா?